Recent Comments

    Crouching Tiger, Hidden Raj

    இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரத்தினம் அமெரிக்கப் பங்குச் சந்தையில், பொதுவெளியில் வராத பெருநிறுவனங்களின் உள்தகவல்களைப் (Insider Information பெறுவதன் மூலம் அந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை கூடுமா? குறையுமா? என்பதை ஊகித்து, பங்குகளை வாங்கி விற்று பணம் சம்பாதித்தார் என்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறை சென்றிருந்தார்.

    தன்னுடைய நண்பர்கள் மூலமாக இவர் உள்தகவல்கள் பெற்றதையும், அவர்களுக்கு பிரதியுபகாரமாக பெரும் பணம் கொடுத்ததையும், இவருடைய நண்பர்களை மடக்கி, அவர்களிடம் ஒலிப்பதிவுக் கருவிகளைக் கொடுத்து, இவருடன் உரையாட விட்டு, அதைப் பதிவு செய்து அதைச் சாட்சியமாக வைத்து இவருக்கு எதிரான வழக்கு நடத்தப்பட்டது.

    வழமையில் பெருமுதலீட்டாளர்கள் Golf விளையாடும் போதும், ஏனைய உறவாடல்களின் போதும் நண்பர்களான மற்ற முதலீட்டாளர்கள், நிறுவன நிர்வாகிகளிடம் தகவல்களைப் பெற்று பங்குச் சந்தையில் அதற்குத் தகுந்தவாறு முதலிட்டு லாபம் பெறுவது வழமையானது. ஆனால் இது சட்டவிரோதமானது. பொதுவெளியில் எல்லாருக்கும் கிடைக்காத தகவல்களைக் கொண்டு, பங்குச் சந்தையில் லாபம் பெறுவது குற்றம்.

    இவர் வைத்திருந்த Hedge Fund என்பது, சாதாரண முதலீட்டு நிறுவனங்கள் போல், சிறிய, பெரிய என எல்லா வகையான முதலீட்டாளர்களையும் உள்ளடக்கி, முதலீடுகளில் ஈடுபடாமல், பெரும் தொகையான பணத்தைக் கொடுப்போரின் பணத்தை ஊகங்களின் அடிப்படையில் நீண்ட கால முதலீடுகளாக இல்லாமல், அடிக்கடி வாங்கி விற்று முதலீடு செய்வது.

    Oliver Stone இயக்கி, Michael Douglas, Charlie Sheen நடித்த Wall Street படம் இவ்வாறான மோசடிகள் பற்றியது. முன்பு பலதடவைகள் பெரும் புள்ளிகள் இவ்வாறான மோசடிகளில் உள்ளே தள்ளப்பட்டிருந்தனர்.

    எண்பதுகளில் பிணைமுறி (Corporate Bonds) மோசடியில் ஈடுபட்ட Mike Milkenனின் மோசடிகள் பற்றி அந்த நேரத்து ரைம், நியூஸ்வீக் சஞ்சிகைகளில் படித்து எனக்கு அந்த விவகாரங்கள் அத்துபடி. பின்நாளில், Bernie Madoff என்ற பில்லியனர்களின் பணத்தை முதலீடு செய்தவர்கள் செய்த மோசடி இன்னொன்று. வருடாந்தம் பத்து வீத லாபம் காட்டிக் கொண்டே, ஆசை காட்டி மோசம் செய்தவர் அவர். பேராசைப் பட்டவர்கள் எல்லாம் அவரிடம் முதலீடு செய்ய பணத்தைக் கொடுக்க, அவர் சந்தையில் நட்டம் ஏற்பட்ட, கையில் இருந்த பணத்தையே லாபம் என்று காட்டி கொடுத்து, கடைசியில் கையில் காசு இல்லாமல் போக, பில்லியனர்கள் பலர் ஏமாந்தார்கள்.

    இவர்கள் இருவரும் யூதர்கள். சிறை சென்றார்கள்.

    ஆனால் மோசடி செய்த மைக் மில்க்கனுக்கு பாவ மன்னிப்பு கடைசியில் வழங்கியது யார்? டொனால்ட் ட்ரம்ப்!

    பங்குச் சந்தை மோசடி தனியே உள்தகவல்கள் பற்றியதும் அல்ல. இலகுவானதுமல்ல. பங்குச் சந்தையில் வாங்கி விற்பது பற்றிய தரவுகளை ஆராய்ந்து இதையெல்லாம் கண்டுபிடிக்க மென்பொருட்கள் எல்லாம் உண்டு. அது பெருங் கதை!

    தற்போது நியூஸ்வீக் சஞ்சிகையில் நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் பத்திரிகையியல் துறைப்பேராசிரியர் சுகேது மேத்தா,  ராஜ் ராஜரத்தினத்தைப் பேட்டி கண்டு கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.

    தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல், பங்குச் சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் யூதர்கள், வெள்ளையர்கள் தனது வெற்றியைக் கண்டு பொறுக்க முடியாமல் தனக்கு எதிராக சதி செய்ததாகவும், இந்திய நண்பர்கள் தனக்குத் துரோகம் செய்ததாகவும் இவர் சொல்கிறார். தான் செய்ததை குற்றம் என இப்போதும் ஒப்புக் கொள்ள மறுக்கும் இவர், தன்னை தனது நண்பர் ஒருவருக்கு எதிராக ஒலிப்பதிவுக் கருவிகளை அணிந்து கொண்டு உதவி செய்தால், தண்டனையைக் குறைக்கலாம் என்ற புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையைத் தான் நிராகரித்ததன் மூலம் தான் ஒரு நேர்மையானவர் என்று காட்ட முயல்கிறார்.

    இந்தக் கதையை எங்கேயே கேட்ட மாதிரி இருக்குமே உங்களுக்கு?

    புனிதப் போராளிகள் 37 நாடுகள் சதி செய்தது என்றும் அசின் தொடக்கம் அகாசி வரை, கருணா முதல் கருணாநிதி வரை துரோகம் செய்தால் தான் தோற்றோம் என்று இன்றைக்கும் தங்கள் தவறை ஒப்புக் கொள்ளாத மாதிரித் தான் இந்தக் கதையும்.

    இது தற்போதைய பரபரப்பு.

    இவரது வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, Vanity Fair சஞ்சிகையில் David Rose, Crouching Tiger, Hidden Raj என்ற கட்டுரையை எழுதியிருந்தார்.

    அந்த தலைப்பு சீனப் படமான Crouching Tiger, Hidden Dragon படத்தின் தலைப்பைத் தழுவியது. புலிகளுக்கும் ராஜரத்தினத்திற்குமான தொடர்பு, புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவினர் செய்த நடவடிக்கைகள் குறித்து அந்தக் கட்டுரையில் விபரிக்கப்பட்டிருந்தது.

    அது வெளிவந்த போதும், அதை தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று, வன்னியில் நடந்ததை ஞானதிருஷ்டியால் அறிந்து ஆங்கிலத்தில் எழுதும் ஊடக ஜாம்பவான்களோ, காளான்கள் மாதிரி முளைத்த அரசியல் புலநாய்வாலர்களோ, இறந்த மிருகங்களில் பெருகும் புழுக்கள் போல பெருகிய ஊளையிடலாளர்களோ நினைத்ததில்லை.

    ஒன்று, அவர்கள் தமிழை விட, வேறெதையும் வாசிப்பதில்லை. வாசித்திருந்தாலும், அதில் வந்த விடயங்கள், 'அண்ணை உலகத்திற்கு தண்ணி காட்டுறார்' என்று இவர்கள் விட்ட கதைக்கு ஆப்பு வைத்து விடும்.

    முன்பு தாயகம் வெளிவந்த போது, இவ்வாறான பல கட்டுரைகளை தாயகத்தில் வெளியிட்டிருந்தேன். இந்தக் கட்டுரை வெளிவந்த போது, தாயகம் இணையத் தளம் பற்றி அக்கறையற்றிருந்ததால், அதை வெளியிட முடியவில்லை.

    நீண்ட நாட்களின் பின் அதைத் தேடப் போக, அது வெளிவந்த சஞ்சிகையிலும் இல்லை. சஞ்சிகைக்கும் கட்டுரையாளருக்கும் தொடர்பு கொண்டும் அது பற்றி தகவல் கிடைக்கவில்லை. அதீத தேடுதலின் பின் கண்டுபிடித்து, அப்படியே கிடப்பில் கிடந்தது.

    தற்போதைய நியூஸ்வீக் கட்டுரையின் பின் அதை வெளியிடத் தோன்றியிருக்கிறது.

    இதை நேரடி மொழிபெயர்ப்பாக வெளியிடுவதில் பெரிதாக விருப்பம் இல்லை. கட்டுரை தமிழரல்லாத வெளியாரை மனதில் கொண்டு எழுதப்பட்டது. அதை மொழி பெயர்ப்பது பொருத்தமானதாக படவில்லை.

    எனவே, அந்த கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதலாம் என்ற உத்தேசம். நக்கீரன், ஜுனியர் விகடனின் அதிரடி ரிப்போர்ட் சரவெடி மாதிரி இருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. நடந்த விடயங்கள் அப்படியானவை.

    அடிக்கடி புலனாய்வுப் பிரிவு என்று வரும். அடே, பொட்டம்மான் உயிரோட இருக்கிறாரடா! என்று புதுப் புரளியைக் கிளப்பத் தேவையில்லை. அது அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவு. (Federal Bureau Of Investigation)

    ஆங்கில மூலக் கட்டுரை பின்னர் வெளியாகும்.

    • **

    1994ல் ருத்ரா (அவரது சொந்தப் பெயர் அல்ல) என்பவர் புலிகளின் போதைப் பொருட் கடத்தலில் சம்பந்தப்பட்டு, தனது Staaten Island வீட்டில் இரண்டு கிலோ கிராம் போதைப் பொருளை சூட்கேஸ் ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டு, Buffalo, New York சிறையில் ஐந்து வருடம் சிறைத் தண்டனை கிடைக்கிறது. அவரது சிறைத் தண்டனை 1999ல் முடியும் போது, பயங்கரவாதம் குறித்து விசாரணை செய்யும் அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வு அதிகாரிகள், தண்டனை முடிந்த பின் இலங்கைப் பிரஜையான இவரை நாடு கடத்தவிருப்பதால், அவரை தங்களுக்கு தகவல் தரும் உளவாளியாகப் பயன்படுத்த முனைகிறார்கள். முப்பதுகளில் வயது கொண்ட அவர், இந்தியாவில் படிக்கும் போது புலிகளால் கவரப்பட்டதுடன், பிரபாகரனையும் சந்தித்திருக்கிறார். தான் சிறையில் இருந்த போது, தன் குடும்பத்தைப் புலிகள் கவனிக்கவில்லை என்ற கோபமும் அவருக்கு இருந்ததால் அதை ஒரு பழி வாங்கும் நடவடிக்கையாகவே கருதி புலனாய்வுப் பிரிவுடன் ஒத்துழைக்கிறார்.

    சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவின் உளவாளியாக ருத்ரா உள்வாங்கப்பட்ட பின்னர், புலிச் செயற்பாட்டாளர்களை (அதுதான் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள்!) சந்திப்பதில் சிரமம் இருக்கவில்லை. நியூ யோர்க் தமிழ்ச் சங்கம் போன்ற புலி ஆதரவு அமைப்புகளின் கூட்டங்களில் அவர்கள் சமுகமளிப்பதுண்டு. எனவே ருத்ரா மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்காக புலனாய்வுப் பிரிவு கதை ஒன்றைக் கட்டமைக்கிறது. சிறையில் ருத்ராவுக்கு மாபியாக்களின் உயர்மட்டங்களுடன் தொடர்பு என்றும், அமெரிக்க அரசாங்கத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகளை அணுகக் கூடிய திறன் உடையவர் என்றும் கதை சொல்லப்படுகிறது. இந்த தொடர்புகள் மூலமாக, அமெரிக்காவுக்கு விசா கிடைக்காத தமிழர்களை ஆட்கடத்துதல் போன்ற விடயங்களில், புலிகளுக்கு உதவலாம் என்றும் கதை புனையப்படுகிறது.

    புலிச் செயற்பாட்டாளரான சந்துரு என்பவர், 2001 பிற்பகுதியில் ஒன்பது பேரை ஆட்கடத்த ஆளுக்கு ஆறாயிரம் டொலர்கள் படி, ருத்ராவுக்கு கொடுக்க, Newark விமானநிலையம் ஊடாக, புலனாய்வுப் பிரிவும், குடிவரவுப் பிரிவும் ஒருங்கிணைந்து அவர்களை உள்ளே வர விடுகிறது.

    2004 சித்திரை மாதத்தில் ஜெகத் கஸ்பார் Newark விமானநிலையத்தில் புலனாய்வுப் பிரிவினரால் தடுக்கப்பட்டு, நாடு கடத்தப்பட இருந்த நிலையில், சந்துரு ருத்ராவைத் தொடர்பு கொள்ள, ருத்ரா தனது தொடர்பாளர்களான புலனாய்வுப் பிரிவு மூலமாக ஜெகத் கஸ்பாரை வெளியே விடுவிக்கிறார்.

    இவ்வாறாக, ருத்ரா மீதான நம்பிக்கை புலிகளுக்கு வளர்கிறது. வழமையில் புலிகள் தங்கள் வெளிநாட்டுக் குழுக்களை ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் இரகசியமாக வைப்பதுண்டு. ஆனால் ருத்ரா மீது கொண்ட நம்பிக்கையினால், அவர் அமெரிக்காவில் உள்ள எல்லாப் புலிக் குழுக்களுடன் தொடர்பு கொண்டவர் ஆகிறார்.

    தன்னால் எல்லாம் செய்ய முடியும் என்று அவர்கள் தன்னை நம்பியதாக ருத்ரா கூறுகிறார். இப்படி நான்கு வித்தியாசமான குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்த ருத்ரா, அந்தக் குழுக்கள் பணம் சேர்ப்பது மட்டும் அன்றி, வான்தாக்குதல் ஏவுகணைகள் உட்பட்ட ஆயுதங்களை பெற முயற்சிப்பது பற்றிய தகவல்களையும் பெறுகிறார்.

    (இப்படியாக அமெரிக்காவில் ஏவுகணை வாங்கப் புறப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் கனடியர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் சம்பந்தப்பட்டிருந்த கனடியப் பல்கலைக்கழக மாணவனை இவர்கள் கைவிட்டதாக முன்பு ஒருவர் கூறியிருந்தார். இது நம் இடைச்செருகல்!)

    ருத்ராவின் வீட்டில் ஆறு இரகசியக் கமெராக்கள் பொருத்தப்பட்டு, அவர் போனில் கதைப்பதும், ஆட்களைச் சந்திப்பதும் பதிவு செய்யப்படுகிறது.

    சில நேரங்களில் மயிரிழையில் தப்பும் மயிர்க் கூச்செறியும் சம்பவங்களும் உண்டு. ஒரு தடவை பதிவு செய்யும் கருவி சந்துருவோடு பேசிக் கொண்டிருக்கும் போது, ருத்ராவின் பொக்கட்டில் இருந்து விழுந்து விடுகிறது. அது வெறும் பேஜர் என்று ருத்ரா சமாளித்து விடுகிறார்.

    இப்படி புலிகளுக்கு நம்பத்தகுந்தவராக வந்த ருத்ரா 2003 ஆகஸ்டில் சமாதான காலத்தில் சந்துருவோடு வன்னிக்கு செல்கிறார். அங்கே புலிகளின் முக்கிய தலைவர்களை எல்லாம் சந்திக்கிறார், ஒலிப்பதிவு செய்யும் உபகரணங்களை அணிந்தபடி.

    2005ம் ஆண்டளவில் ருத்ரா வழங்கிய உளவுத் தகவல்கள் மூலம் புலிகளின் உலகளாவிய பணச் சேர்ப்புப் பற்றிய முழு விபரங்களும் சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கிது.

    அப்போது ராஜ் ராஜரத்தினம் பற்றிய தகவல்கள் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கிறது. இருப்பினும் ருத்ராவினால் ராஜ் ராஜரத்தினத்தை நெருங்க முடியவில்லை. சந்துரு, ராஜ் ராஜரத்தினத்தை உயர்மட்ட தொழில் வல்லுனர் என்றும் புலிகளுக்கு பணம் வழங்குவதில் முக்கிய பங்குவகித்தவர் என்றும் கூறியிருக்கிறார்.

    2005 செப்டம்பரில், புலிகளை அமெரிக்காவின் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து லஞ்சம் கொடுத்து நீக்க முடியும் என்றும் அதற்கு உதவுவார்கள் என்று ருத்ரா அறிமுகப்படுத்திய இரண்டு அமெரிக்க ஊழல் அதிகாரிகளுக்கு (உண்மையில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்) ஒரு மில்லியன் டொலர் கொடுக்க இரண்டு புலி உறுப்பினர்களை புலனாய்வுப் பிரிவினர் ஏமாற்றுகிறார்கள். அதை நம்பி அந்த புலி உறுப்பினர்கள் அந்தச் சந்திப்பின் பின், அதற்கான பணத்தைப் பெற ராஜ் ராஜரத்தினத்திடம் அந்தப் புலி உறுப்பினர்கள் அங்கிருந்தே நேரடியாகச் செல்கிறார்கள்.

    ராஜ் ராஜரத்தினத்தின் முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்ய புலிகள் பெருந் தொகைப் பணத்தைக் கொடுத்தார்கள் என்று ருத்ரா புலனாய்வுப் பிரிவுக்கு தெரிவித்திருக்கிறார்.

    2001ல் இருந்து, ராஜ் ராஜரத்தினம் உள்தகவல்களை பெற்று முதலீடு செய்கிறார் என்ற விடயம் புலனாய்வுப் பிரிவுக்கு தெரிய வருகிறது. Intel நிறுவன அதிகாரி ஒருவர் ராஜரத்தினத்திற்கு உள்தகவல் வழங்கிய விடயம் தெரிந்ததிலிருந்து, இந்த சட்டவிரோத உள்தகவல் முதலீட்டுக்கும் பயங்கரவாதத்திற்குமான தொடர்பு பற்றி புலனாய்வுப் பிரிவு ஊகிக்கிறது.

    மே 2011ல், ராஜரத்தினம் 14 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பங்குச் சந்தை மோசடிக்காக குற்றவாளியாகக் காணப்பட்டார். தனக்கு உள்தகவல்களைத் தந்தவர்களுக்கு இவர் பணம் கொடுத்த விபரங்கள் அந்த விசாரணையில் தெரிய வந்தது.

    ஆயினும் அந்த நீதிமன்ற விசாரணைகளின் போது, அரச தரப்புச் சட்டத்தரணிகள் இவரது புலித் தொடர்பு பற்றிக் குறிப்பிடப்படவேயில்லை. ஆனால், புலனாய்வுப் பிரிவும் நீதித் திணைக்களமும் இவரை குற்றவாளியாக்க வேண்டும் என்று அக்கறை காட்டியதற்கு அவரது பயங்கரவாதத் தொடர்பு முக்கியமானது என்று ருத்ராவைக் கையாண்ட புலனாய்வு அதிகாரி தெரிவிக்கிறார்.

    ஆனையிறவு முகாம் தகர்க்கப்பட்ட போது ராஜரத்தினம் புலிகளுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் கொடுத்திருக்கிறார்.

    1999 இலிருந்தே புலிகளுக்கு பணம் கொடுப்பவர்களில் முக்கியமானவராக ராஜரத்தினம் அறியப்படுகிறார். அவர் மட்டுமன்றி, அவரது தந்தையார் ஜேசுதாசனும் புலிகளுக்குப் பணம் கொடுத்ததாக ருத்ரா கூறுகிறார். இவர்கள் தங்கள் குடும்ப தர்ம அமைப்பு மூலம் இலங்கையிலும் வேறு இடங்களிலும் பொதுவிடயங்களுக்கு பணம் வழங்கிய போதிலும், அதன் மூலம் இரகசியமாக புலிகளுக்கு பணம் வழங்கியதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. (இது குறித்த பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு அவர்களின் சட்டத்தரணி மறுப்புத் தெரிவித்திருக்கிறார்)

    புலனாய்வுப் பிரிவின் உளவாளியாக ருத்ரா சேர்ந்த பின்னர் சந்தித்தவரான இந்த சந்துரு எனப்படும் விஜயசந்தர் பற்பநாதன் பின்னர் ருத்ரா வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாத அமைப்புக்கு உதவி வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் நியூயோர்க் நீதிமன்றத்தால் சிறையில் தள்ளப்பட்டார்.

    பதினொரு வருடங்கள் புலனாய்வுப் பிரிவின் உளவாளியாக செயற்பட்ட ருத்ரா ஆயிரக்கணக்கான மணிநேரம் கொண்ட ஒலிப்பதிவுகளை செய்து கொடுத்திருக்கிறார். அந்த தகவல்களின் அடிப்படையில் 20 கிரிமினல் விசாரணைகளை புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் வெற்றி கொண்டிருக்கிறது.

    ருத்ரா வழங்கிய தகவல்களின் அடிப்படையில், அமெரிக்காவில் மட்டுமன்றி பிரிட்டன் உட்பட்ட மற்ற நாடுகளில் புலிகளின் பணம் சேர்ப்பு பற்றிய விபரங்களை புலனாய்வுப் பிரிவு கண்டறிந்து கொண்டது. இந்த தகவல்கள் பிரிட்டிஸ் புலனாய்வுப் பிரிவுடன் பகிரப்பட்டதுடன், புலிகளின் பணம் சேர்ப்புக்கு பெரும் முடக்கம் ஏற்பட்டு, அதுவே அவர்களின் யுத்தம் செய்யும் சக்தியை வலுவிலக்கச் செய்தது.

    தமிழ் புனர்வாழ்வு அமைப்பு எனப்படும் TRO 17 நாடுகளில் செயற்பட்டு வந்தது. 2007ல் அதன் சொத்துக்கள் அமெரிக்காவில் முடக்கப்பட்டன. ருத்ராவின் ஒலிப்பதிவுகளிலிருந்து, TRO விலிருந்து எப்படி புலிகளுக்கு பணம் மாற்றப்பட்டது என்பதும் அதில் ராஜரத்தினத்தின் பங்கு என்ன என்பதும் தெரிய வந்தது.

    2007 ஏப்ரலில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக்கடதாசியில், ராஜரத்தினம் 2000 யூலை முதல் செப்டம்பர் வரை, TRO வுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் வழங்கியிருக்கிறார். அந்தப் பணம் TRO வின் லண்டன் வங்கிக் கணக்குக்கு சென்று அங்கு காசாக வங்கியிலிருந்து பெறப்பட்டது. அத்துடன் புலிகளுக்கு பணம் சேர்த்து கைது செய்யப்பட்டு சிறை சென்ற கருணாகரன் கந்தசாமி, ராஜரத்தினத்தின் பிரபாகரனைச் சந்திக்கும் ஆசையை நிறைவேற்றுவது பற்றி எழுதிய கடிதங்களும் உள்ளன.

    இதற்குள் புலிகளால் பாதிக்கப்பட்ட 30 குடும்பத்தவர்கள் சார்பில் அமெரிக்காவில் ராஜரத்தினத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில், 2006 அக்டோபரில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரக அதிகாரி அனுப்பிய கேபிள் ஒன்றில், TRO வுக்கு அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட பணத்தில் பெரும்பகுதி ராஜரத்தினம் குடும்பத்தினரால் கொடுக்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தை 2003 முதல் பங்குனி 2006 வரையில் இலங்கையில் உள்ள TRO அமெரிக்காவிலிருந்து பத்து மில்லியன் டொலர்களைப் பெற்றிருக்கிறது. இதில் 35 வீதம் ராஜரத்தினம் குடும்பத்தினருடையது எனப்படுகிறது.

    2003ல் ராஜரத்தினம் தனது குடும்ப தர்மநிறுவனத்திற்கு 5.05 மில்லியன் கொடுத்திருக்கிறார். அதில் ஐந்து மில்லியன் TRO வுக்கு கொடுக்கப்பட்டது. 2004ல் நேரடியாக ஒரு மில்லியன் கொடுத்திருக்கிறார். சுனாமியின்போது, புது அமைப்பு ஒன்றை உருவாக்கி 7 மில்லியன் வரை பணம் சேர்த்து அதில் பாதி இலங்கை அரசுக்கும் மீது TRO வின் அமெரிக்க, இலங்கைக் கிளைகளுக்கு கொடுக்கப்பட்டது.

    தாங்கள் TRO க்கு பணம் கொடுத்தது உண்மை என்று கூறும் ராஜரத்தினத்தின் தந்தை, TRO புலிகளுக்கு அந்த பணத்தை மாற்றியது குறித்து தங்களுக்கு தெரியாது என்கிறார்.

    புலிகளால் பாதிக்கப்பட்டோர் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, அந்த சட்டத்தரணி இலங்கைக்கு சென்று பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலங்களைப் பெற்றிருக்கிறார். அதில் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்ட குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட உயர்தர வகுப்பு பேஸ்போல் குழு, திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டு, திருமண உடைகளுடன் புதைக்கப்பட்ட ஒரு தம்பதிகள் என பல பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் உள்ளன.

    இதற்கு பதிலாக ராஜரத்தினம் குடும்பத்தினர் சமர்ப்பித்த பதிவில், தாங்கள் கொடுத்த பணத்திற்கும் பாதிக்கப்பட்டவர்கள் அடைந்த பாதிப்பிற்கும் தொடர்பு இல்லை என்றும் வன்முறையை தாங்கள் ஆதரித்ததற்கான எந்த சான்றும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    ஆனால், 2002 நவம்பரில், நியூ ஜேர்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் ராஜரத்தினம் கலந்து கொண்டபோது, ருத்ரா ஒலிப்பதிவுக் கருவிகளுடன் சமுகம் அளித்துள்ளார்.

    அங்கு ராஜரத்தினம் புலிகளுக்கு ஆதரவாக உரையாற்றியதுடன், புலிகளை ஆதரிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

    அமெரிக்க சட்டப்படி, ஒருவர் கொடுக்கும் பணம் குண்டுகளுக்கு செலவிடப்பட்டது என்று நிருபிக்கத் தேவையில்லை. பணத்தைப் பெற்ற குழுவினர் ஒரு பகுதியையேனும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியிருந்தால், அதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.

    • * *

    இதுதான் அந்தக் கட்டுரையின் சாரம்.

    அந்த நியூஸ்வீக் கட்டுரையை வாசித்ததிலிருந்து நமது தூக்கத்தைக் குழப்பிக் கொண்டிருக்கும் கேள்வி...

    நம்ம தேசிக்காய்த் தலையரும் எரித்திரியாவில் இருந்து காண்டம் வாசிச்சு, 'வரலாறு தன்னையும் விடுதலை செய்யும்' என்று நம்பிக் கொண்டிருக்கிறாரோ என்பது தான்!

    Postad



    You must be logged in to post a comment Login