Recent Comments

    மத்திய காலங்களுக்கு ஒரு யாத்திரை

    A pilgrimage to Middle Ages

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்

    இது ஒரு மூன்று வருடக் கனவு. கோவிட் தொற்றினால் தள்ளிப் போடப்பட வேண்டி வந்ததொரு கனவு. 

    கனடாவில், நான் வாழும் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில், ஆமிஷ் (Amish) இன மக்கள் வாழும் பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற நீண்ட நாள் திட்டம். 

    ஆமிஷ் இனத்தவர்கள் நவீன தொழில்நுட்பங்கள் ஆக்கிரமித்த வாழ்க்கை முறையைத் தவிர்த்து, இயற்கையோடு இணைந்த விவசாயம், தச்சு வேலைகள் போன்ற, உடல் உழைப்புக்கும் பாரம்பரிய வேலைக் கருவிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் தொழில்களைச் செய்து கொண்டு, அமைதி முறையில் சமூகக் கூட்டு வாழ்க்கையை வாழும் கிறிஸ்தவ முறையை கைக்கொள்ளும் ஒரு மதக் குழுவினர்.

    இங்கே ஜேர்மன் குடிவரவாளர்கள் அதிகம் குடியேறியதும், தமிழர்கள் மத்தியில் பிரபலமான விஞ்ஞான, இயந்திரவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைக் கொண்டதுமான Waterloo, Kitchener  மற்றும் உலகப் புகழ் பெற்ற விவசாயப் பல்கலைக்கழகம் உள்ள Guelph பகுதிகளில் மிகவும் அதிகமாக வாழ்கிறார்கள். விவசாய நிலங்களைக் கொண்ட கிராமப்புறப் பகுதியான (Rural area) Milverton, Millbank பகுதிகளில் இவர்களின் தொகை செறிவாக உள்ளது.

    இதை விட ஒன்ராறியோ மாகாணத்தின் வேறு பகுதிகளிலும் சிறுசிறு சமூகக் குழுக்களாக வாழ்வதுடன், கனடாவின் மேற்கு மாகாணமான Manitoba, கிழக்கு மாகாணங்களான New Brunswick, Prince Edward Island பகுதிகளிலும் சமீபத்தில் குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள். ஒன்ராறியோவில் வயல் நிலங்களின் விலை அதிகரித்தது இந்த இடம் பெயர்தலுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. 

    இவர்களின் தோற்றமும் ஆடையணிதலும் கிட்டத்தட்ட யூத வைதீக அடிப்படைவாதிகளைப் (Ultra- Orthodox) போன்றது. வைதீக யூத, இஸ்லாமியர்கள் போன்று மீசை இல்லா தாடியும், தொப்பியும் இவர்களைத் தனித்து அடையாளம் காட்டும். இயந்திர வாகனங்கள் பயன்படுத்தாமல் குதிரை வண்டில்களை இன்றும் பயன்படுத்தும் இவர்களின் வித்தியாசமான கலாசார, பண்பாட்டு வாழ்வு முறை ஒருவகையில் ஆர்வத்தைத் தூண்டுவது.  நுகர்வுக்கலாசாரம் விழுங்கி விட்ட மேற்கத்திய வாழ்வு முறைக்குள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல், பதினாறாம் நூற்றாண்டு மத்திய கால வாழ்க்கை முறையை இன்றும் வாழுகின்ற மக்களை ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு வந்திருந்தது.

    நான் பார்த்த,  இந்தியானா ஜோன்ஸ் புகழ் நடிகர் Harrison Ford  நடித்த Witness படம் அவர்களின் வாழ்வு முறையைக் காட்டியிருந்தது. கொலை ஒன்றுக்கு சாட்சியாக இருந்த ஆமிஷ் சிறுவனைக் காப்பாற்ற முயலும் பொலிஸ் அதிகாரி பொலிஸ் பிரிவில் நடந்த ஊழல் பற்றி விசாரிக்கப் போய், சக பொலிஸ்காரர்களால் கொல்லத் தேடப்படும் போது ஆமிஷ் கிராமத்தில் தஞ்சம் புகுவது பற்றிய கதை அது. 

    எனவே இவர்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது விழாக்களை அண்டி போனால் ஒரே இடத்தில் பல விடயங்களைக் காணலாம் என்ற நினைப்பு இருந்தது. 

    இந்த அமிஷ் பிரிவினர் ஒன்ராறியோ கல்வித் திட்டங்களுடன் இணைந்து பாடசாலைகளை உருவாக்காமல், தாங்களே தங்களுக்கான பாடசாலைகளை உருவாக்கி தங்களுடைய மதம் சார்ந்த கல்வித் திட்டத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அவை பெரும்பாலும் ஒரு அறைப் பாடசாலைகளாகவும், பிள்ளைகளின் கல்வி அடிப்படைக் கல்விக்கு அப்பால் இருக்காததாகவும் இருக்கும். இந்தப் பாடசாலைகளில் ஆங்கிலத்தில் கல்வி கற்றாலும் இவர்கள் வீட்டில் பென்சில்வேனியா டச்சு மொழியையே பேசுவார்கள். 

    அந்தப் பாடசாலைகளுக்கு நிதி சேர்ப்பதற்காக ஒரு ஏல விற்பனை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவார்கள். ஆமிஷ் பெண்கள் தைத்த படுக்கை விரிப்புகள் முதல் ஆமிஷ் தச்சுவேலையாட்கள் செய்த தளபாடங்கள் வரை, பூங்கன்றுகள் முதல் பாரம்பரிய, அபூர்வ புராதனப் பொருட்கள் வரை, கோழிகள் முதல் குதிரைகள் வரை ஏலத்தில் விற்பனையாகும். 

    பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி, அமிஷ் இன விவசாயி ஒருவரின் அறுவடை செய்த பின்னான வயல் ஒன்றுக்குள்ளே நடைபெறும்.

    சுமார் 150 கிமீ தொலைவில் நடைபெறும் இந்த நிகழ்வு பற்றி அறிந்து  போகத் திட்டமிட்ட போது, கோவிட் தொல்லை ஆரம்பமாகி விட்டது. இதனால் நிகழ்வு இரண்டு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டு இருந்தது. 

    இந்த வருடம் கோவிட் களேபரங்கள் ஒருவாறாக முடிவுக்கு வந்ததால், இம்முறை போவதாக முடிவு பண்ணி இணையத்தில் தேடினால் எந்த தகவலும் இல்லை. எனவே, பேஸ்புக்கில் மில்வேட்டன் பகுதி வாசிகள் கருத்துப் பரிமாறும் குழு ஒன்றில் சேர்ந்து, இது பற்றி விசாரித்து பதிவு ஒன்றைப் போட்ட சில நிமிடங்களிலேயே இது குறித்த விபரங்களை அவ்வூர்வாழ் நல்லுள்ளங்கள் பகிர்ந்திருந்தன. 

    இதை விட, வாகனத் தரிப்பிடமும் வயலுக்குள்ளேயே என்பதால் சேறும் சகதியுமாக இருக்கும், எனவே றப்பர் சப்பாத்துகளுடன் வந்து சேர் என்ற எச்சரிக்கைகளும் இருந்தன.

    இதுவரை நாளும் என் தொலைபயணங்கள் தனிமையில் எனது றொக் அன்ட் றோல் இசைத்தட்டு துணையுடனேயே நடைபெறும். இம்முறை, அமெரிக்காவில் பணி புரிந்த நண்பர் இங்கே வந்து அதே பணியை தொலைபணியாக செய்து கொண்டிருப்பதால், அவரையும் அழைத்துக் கொண்டு போக உத்தேசமாயிற்று. நான் அவர்களின் சகோதரன் போன்ற குடும்ப நண்பன் ஆதலால் அவரது அக்கா எங்களுக்கு உணவு கூடக் கட்டித் தந்திருந்தார், எங்காவது ஆற்றங்கரையில் மரநிழலில் உட்கார்ந்து சாப்பிட.

    எனது காரில் ஒன்றரை மணி நேரப் பயணம். முன்பின் தெரியாத இடம். GPS துணையுடன் இருவருமாக எங்கள் கமெராப் பொதிகள் சகிதம் வண்டில் கட்டிக் கொண்டு பயணம் போனோம். 

    இரண்டு வாகனங்கள் மட்டுமே போக்கும் வரத்தும் செய்யக் கூடிய பாதை. ஆமிஷ்காரர்கள் மின்சாரம் பாவிப்பதில்லை, எனவே மின்கம்பங்களும் மின்வெளிச்சமும் அபூர்வம் என்பதால் இரவுகளிலோ, பனி கொட்டிய நாட்களிலோ பயணம் செய்து ஆபத்தில் மாட்டிக் கொண்டால், நட்சத்திரங்கள் தவிர வேறு எந்த உதவியும் கிடைக்காத இடம். 

    பனி கொட்டும் காலங்களில் பொழியும் உறைபனி நான் வாழும் பெருநகர Toronto மாதிரி இல்லாமல், கிரமமாக வீதிகளிலிருந்து அகற்றப்படுவதில்லை என்று அறிவிப்புகள் வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தன. 

    பாதை உயர்ந்ததாகவும் வயல்கள் எல்லாம் பள்ளமான பகுதிகளிலும் அமைந்திருந்தன. பனி மூடினால் பாதை எது என்றும் தெரியாது. கார் சறுக்கி பள்ளமான பகுதிக்குள் போனால், வீதியைக் கடப்போர் கண்ணில் படாது.

    எல்லாம் வல்ல இறைவன் கூட அந்நியர்களான எங்களுக்கு அந்தப் பக்கம் அபயம் அளிக்க வர நினைக்க மாட்டார். அவருக்கு ஆமிஷ் பிரிவுகளுக்கு இடையே தன்னைக் காரணமாகக் காட்டி, தனக்கு பிடிக்காது என்று சொல்லி, நடந்த பிரிவுகளை விளங்கிக் கொள்வதில் முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கவே நேரம் போதாமல் இருக்கக் கூடும். 

    ஒவ்வொரு வயலும் மிகப் பெரிய அளவிலானதான, வயலும் வயல் சார்ந்த இடங்களுமாக, தொலைவில் அடைக்கப்பட்ட இடங்களுக்குள் நின்று வால் அசைத்து ஈ கலைத்தபடியே அசை போட்டுக் கொண்டிருந்த குதிரைகள், மாடுகள்.

    காற்றில் கலந்து வந்த குதிரைச்சாணி வாசம். 

    எனக்கு என் ஜேர்மன் கிராம வாழ்க்கை காலத்தை நினைவூட்டிக் கொண்டிருந்தது. 

    குதிரைச் சாணி உக்கும் போது, பெருமளவு வெப்பம் வெளியேறும் என்பதால், அதை நேரடியாகப் பயிர்களுக்குப் போட்டால், அவை வெந்து விடும் என்பதும், கரிபியனுக்குப் போய் அன்னாசிப்பழம் மேல் காதல் கொண்ட பிரிட்டிஷ்காரர்கள், அதை பனிக்குளிர் இங்கிலாந்தில் வளர்ப்பதற்காக, கண்ணாடி அறைக்குள் கிடங்கு வெட்டி அதில் குதிரைச் சாணியைப் போட்டு அதனால் கிடைக்கும் வெப்பத்தில் அன்னாசிப் பழங்கள் வளர்த்ததும் இந்த வீட்டுத் தோட்ட விவசாயி அறிந்து வைத்திருக்கும் சம்பந்தமில்லாத கொசுறுகள். 

    விவசாயிகளின் உபகரணங்களும் மிருகங்களும் இருக்கும் Barns எனப்படும் சேமிப்புக் கட்டங்கள். Grain Siloகள் எனப்படும் தானியங்களை சேமித்து வைக்கும், பெட்ரோல் தாங்கிகள் போன்ற நீண்ட குழல் போன்ற உயரக் கோபுரக் கட்டமைப்புகள். 

    விட்னஸ் படத்தில் வில்லனை நாயகன் தந்திரமாக இந்த சைலோவுக்குள் வரவைத்து கொட்டும் சோளத் தானியங்களுக்குள் மூழ்கடித்து மூச்சுத் திணறச் செய்து கொலை செய்திருப்பார்.

    தேன், மேப்பிள் மரத்தில் துளை போட்டு எடுக்கப்படும் சாறைக் காய்ச்சி எடுக்கும் Maple Syrup எனப்படும் தேன் போன்ற பாகு, படுக்கை விரிப்புகள், தளபாடங்கள் கோழிகள், முட்டை, மரக்கறிகள், தயாரித்த உணவுகள் இங்கே விற்பனைக்குண்டு என்ற அறிவிப்புப் பலகைகள். 

    குளிர் காலத்தில் வீட்டுக்குள் தீ மூட்டி குளிர் காய வைக்க, விற்பனைக்காக சாலையோரங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளக்கப்பட்ட விறகுகள். 

    வாசல் கேட்டுகளிற்கு அருகில் உள்ள வித விதமான வடிவங்களில் உள்ள தபால் பெட்டிகள். 

    ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், கொதிக்கும் வெயிலில் கடந்து செல்வோர் தாகசாந்தி செய்ய, 'ஒரு டொலர் விலை' என்ற மட்டைகளில் எழுதிய அறிவிப்புகளோடு, குளிர்ப்பெட்டிகளில் பனிக்கட்டிகளுக்குள் வைத்த கோலா, தண்ணீர் போத்தல்கள், விற்பனைக்கு வைத்த பூங்கொத்துக்கள், முட்டைகள், மரக்கறிகள் என அவற்றுக்கான பணத்தை வைப்பதற்கான உண்டியல்கள் என சக மானிடத்தின் அறத்திலும் நேர்மையிலும் நம்பிக்கை கொண்டு யாரும் காவலுக்கும் இல்லாமலும் கமெராவின் கண்காணிப்பு இல்லாமலும் காத்திருந்தன.

    திறந்த குதிரை வண்டிலில் சென்று கொண்டிருந்த ஒரு அமிஷ்  குடும்பம் முதன் முதலாக கண்ணில் பட்டது. குதிரை வண்டிலின் பின்புறத்தில் இரவுகளில் ஒளி தெறித்து அடையாளம் காட்ட முக்கோண வடிவ குறியீடு (Reflector)  ஒன்று பெரிதாக.

    இறப்பர் டயர்கள் பொருத்திய குதிரை வண்டில்கள் மட்டுமன்றி, சைக்கிள் ஓடுவது கூட அவர்களால் தடை செய்யப்பட்டதாக இருப்பதால், ஒற்றைக்காலில் கெந்திக் கெந்திச் செல்வதற்கான சைக்கிள் போன்ற ஒன்றை தனியே கடும் வெயிலில் ஒரு ஆமிஷ் சிறுமி ஓட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தாள்.

    ***

    ஆமிஷ் இனத்தவர்களின் ஆரம்பம் சுவிட்சலாந்தில் மத்திய காலங்களில் 16ம் நூற்றாண்டில் தொடங்கியது.

    அந்தக் காலம் கத்தோலிக்க மதமும் புரட்டஸ்டான்ட் மதமும் அரசர்களுடன் சேர்ந்து மதத்திற்கு எதிரானவர்களை கட்டையேற்றிய காலம். 

    Mennonites எனப்படும் கிறிஸ்தவப் பிரிவிலிருந்து பிரிந்தவர்கள் தான் இந்த ஆமிஷ் பிரிவினர். எந்த முரண்பாடுகளுக்கும் செல்லாத, கெட்ட வார்த்தைகள் கூடப் பேசாத, கிறிஸ்தவ அமைதிச் சிந்தனை, கிராமப் புறங்களில் எளிமையான உடைகள், உடல் உழைப்பு, தனிநபர்களுக்கு முக்கியத்தும் இல்லாத தன்னிறைவுச் சமூக வாழ்க்கை, நவீன தொழில்நுட்பங்களை தவிர்த்தல் போன்ற கருத்துக்களோடு பிரிந்து கொண்டவர்கள் இவர்கள்.

    மற்ற கிறிஸ்தவ மதங்கள் போல குழந்தைகளுக்கு திருமுழுக்கு எனப்படும் Baptism கொடுக்காமல், இயேசுவைப் போல, வளர்ந்த ஆட்களே திருமுழுக்கு பெற வேண்டும் என்ற கருத்துக் கொண்டிருப்பதால் இவர்கள் அனாபப்டிஸ்டுகள் (Anabaptists) என அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கருத்துக்களாலேயே மத்திய காலங்களில் இவர்களில் பலர் மதநிந்தனைக் குற்றச்சாட்டில் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். 

    மெனனைட்டுகள் போல கோயில்களைக் கொண்டிராமல், இவர்கள் தங்கள் வழிபாடுகளை உறுப்பினர்களின் வீடுகளிலேயே நடத்திக் கொண்டிருந்தவர்கள்.

    மேனனைட் பிரிவினர் தங்கள் விதிமுறைகளை அனுசரிப்பதில் கடும் வைதீக முறையைக் காட்டுவதில்லை, காலத்திற்கேற்ப மாறிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டி இவர்கள் தனியே பிரிந்து சென்றார்கள். ஆனாலும் மேனனைட் பிரிவினரும் ஆமிஷ் பிரிவினரும் கிட்டத்தட்ட ஒரே வாழ்வு முறையையும், ஆடைகள் போன்ற கலாசார முறையையும் கொண்டிருப்பதால், பொதுவெளியில் ஊடகங்கள் இவர்களின் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் அனைவரையுமே ஆமிஷ் என வர்ணிப்பது உண்டு.

    இவர்கள் தற்போதைய உக்ரெய்ன் பகுதியாக உள்ள, முன்னாள் தென் ரஷ்யப் பகுதிக்கும் அப்போது ரஷ்யாவை ஆண்ட கத்தரின் மகாராணியின் அழைப்பில் சென்று குடியேறியிருந்தனர். பின்னர் ரஷ்யப் புரட்சியின் பின்னர் அவர்களுக்கு எதிரான வெறுப்புகள் அதிகரிக்கத் தொடங்க அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்திற்கு 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சமூகமாக குடிபெயர்ந்தனர்.

    அமெரிக்காவிலும் பிரெஞ்சுக்காரரை வட அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற நடந்த யுத்தத்திலும், வடக்கு தெற்கு பகுதிகளுக்கு இடையிலான அமெரிக்க சுதந்திர யுத்தத்திலும் இவர்கள் மதக் காரணங்களுக்காக கலந்து கொள்ளாமல், உதவிகளை மட்டும் வழங்கியிருந்ததுடன் அதற்காக விசேட வரிகளையும் செலுத்தியிருந்தனர். இதனால் இவர்கள் மீதான வெறுப்புணர்வு அதிகரித்தால் பலர் கனடாவிற்கு குடிபுகுந்தனர். கனடாவிற்கு வந்தவர்களில் நான் சென்ற பகுதியான மில்வேட்டன் பகுதிக்கு 1820இல் வந்து தங்கள் குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.

    பின்னர் 1953 முதல் 1970 வரை, வியட்னாம் யுத்த காலத்தில் இராணுவத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்பு (Compulsory conscription), அறிமுகப்படுத்தப்பட்ட சமூக உதவித் திட்டங்கள் எனப்படும் Social Insurance திட்டங்களை இவர்கள் எதிர்த்ததால் அங்கிருந்து கனடாவிற்கு வந்து புதிய சமூகக் குழுக்களாக குடியேறினர். பின்னர் கனடாவிலும் இதே போன்ற சமூக உதவித் திட்டங்களும் கனடிய ஓய்வூதியத் திட்டங்களும் வந்தவுடன் அவர்கள் இங்கு வருவதை நிறுத்திக் கொண்டு விட்டார்கள். 

    இதை விட, இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மன் படைகள் தோற்கடிக்கப்பட்டு, ரஷ்யப் புரட்சி வந்த பின்னர் ஸ்டாலின் காலத்தில் இவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பலர் சைபீரியாவுக்கு அனுப்பப்பட, மீதியிருந்த ஆமிஷ் பிரிவினர் கனடாவுக்கு குடிபெயரத் தொடங்கினர்.  மற்றைய மெனனைட்டுகள் கனடாவின் மேற்கு மாகாணமான மனிட்டோபாவுக்கு இடம் பெயர்ந்தனர். அங்குள்ள கால நிலை உக்ரெய்னின் காலநிலை போன்றிருந்ததும் அதற்கான காரணங்களில் ஒன்று. 

    ஆரம்பத்தில் நெதர்லாந்து, ஜேர்மனி, போலந்து என அங்கு குடியிருந்த ஜேர்மன் மொழி பேசுகிறவர்களுக்குள் இந்த மதம் இருந்தாலும், தற்போது ஐரோப்பாவில் உள்ளவர்கள் மெனனைட்டுகளுடன்  திரும்பவும் சமரசமாகி ஆமிஷ் என்னும் பிரிவு அயர்லாந்து தவிர, வேறெங்கும்  இல்லை. அவர்கள் அமெரிக்காவில் பென்சில்வேனியா, Iowa, Ohio போன்ற மாநிலங்களிலும், தென்னமெரிக்காவில் Belize, பொலிவியா, ஆர்ஜென்டைனா ஆகிய நாடுகளில் உள்ளனர்.

    தற்போது ஈழத்தமிழர்கள் செறிந்து வாழ்ந்து, கனடிய சட்டவாக்க மன்றங்களில் ஈழம் எடுப்பதாக கதை விட்டு தேர்தலில் நிற்கும் ரொறன்ரோவை அண்மித்த மார்க்கம் (Markham) பகுதியும் ஒரு காலத்தில் ஆமிஷ் குடியிருப்புகளை கொண்டிருந்தது. அவர்களும் வெளியேறி வாட்டர்லூ பகுதிக்கு சென்று விட்டார்கள். அவர்களின் வயல் நிலங்களில் தற்போது வீடுகள் கட்டப்பட்டு, ஈழத்தமிழர்கள் அங்கே குடியேறி கடைகள் திறந்து கொத்துப் பரோட்டா வெட்ட ஆரம்பித்து விட்டார்கள். 

    ***

    நாங்கள் காலை எட்டு மணிக்குப் போய் சேர்ந்த போது, திருவிழாவைப் போல, பல ஆயிரக்கணக்கானோர் சமூகம் அளிப்பதால் வாசலில் பொலிசார் நின்று போக்குவரத்தை வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள். 

    ஏற்கனவே பல நூற்றுக்கணக்கில் குதிரைகள், குதிரை வண்டில்கள். 

    தனியான இடத்தில் வரிசையாக!

    மறுபுறத்தில் இதை விட ஆயிரக்கணக்கான கார்கள். ஏற்கனவே இருந்த ஏதோ பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட வயலுக்குள் தான் கார் தரிப்பிடம். அதையும் வரிசைக்கிரமமாய் நிறுத்த தொண்டர்கள் வழி காட்டிக் கொண்டிருந்தார்கள். 

    நல்ல காலம், மழை பெய்திருக்கவில்லை. பெய்திருந்தால், நிலைமை நினைத்தே பார்க்க முடிந்திருக்காது. சேறும் சகதியுமாக வாகனங்களை திரும்பவும் எடுத்துச் செல்வது பெரும் சில்லெடுப்பில் முடிந்திருக்கும். 

    இத்தனை கார்களும் மக்களும் மிதித்த இடத்தை திரும்பவும் உழுவதற்கான கலப்பையை இழுக்கும் ஆமிஷ் குதிரைகளின் கதி என்னவாகுமோ? என்ற கவலை எனக்கு. 

    நாங்கள் நேரத்திற்கே போய் இறங்கியிருந்தாலும், ஏற்கனவே சன வெள்ளம்.

    காரை நிறுத்தி, காருக்குள் இருந்தபடியே அக்கா கட்டித் தந்த ஆடிக் கூழையும் குடித்து வடையையும் ஒரு கை பார்த்து, பார்வையிடலை ஆரம்பிக்க...

    உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. நிழலுக்கு மரங்கள் எதுவும் இல்லை. படங்களை எடுக்கலாம் என்றால், அந்த உச்சி  வெயிலில் கமெராவின் செட்டிங்குகள் எதுவும் தெரியவில்லை.

    ***

    இரண்டு கமெராக்களுடன் நின்ற என்னை ஒரு பெண் ஓடி வந்து 'நீ படம் எடுக்க அனுமதி பெற்றாயா?' என்று கேட்டாள். தான் தொழில்முறைப் படப்பிடிப்பாளராம்.

    'இதுவரை எவரும் எதுவும் சொல்லவில்லை' என்றேன். 

    பொதுவெளிகளில் படம் எடுப்பது பற்றிய சட்டச் சிக்கல்கள் பற்றி நிறைய வாசித்திருக்கிறேன். 

    இருந்தாலும் போவதற்கு முன்னால் நான் வாசித்த எதிலும் அவர்கள் படம் எடுப்பதை விரும்புவதில்லை என்று கண்டதில்லை. ஆனால் பின்னர் இக்கட்டுரைக்கான மேலதிக தகவல்களை தேடிய போது, ஒன்ராறியோவிற்கு மேற்காக முதன் முதலாக மனிட்டோபா மாகாணத்திற்கு குடியேறிய ஆமிஷ் இனத்தவர்களைக் கண்டு செய்தி சேகரிக்கச் சென்ற கனடியத் தொலைக்காட்சி நிறுவனச் செய்தியாளர் (CBC Reporter) 'தங்களின் எளிமை, தன்னடக்கத்திற்கு எதிரான தற்பெருமைக்கான காரணமாக அவை அமையும்' என்பதால் அவர்கள் தங்களைப் படம் பிடிப்பதை அனுமதிப்பதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

    நான் அங்கே பகிரங்கமாகப் படம் பிடித்துக் கொண்டிருந்த போது ஆமிஷ்காரர்கள் யாரும் எதுவும் கேட்கவில்லை என்பதுடன், பலரும் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

    சில நேரங்களில்,  இங்கே தமிழர்களின் பொதுநிகழ்வுகளில் கமெரா சகிதம்  ஆஜராகும் போட்டோ ஊடகவியலாளர்கள் மாதிரி மூஞ்சிக்கு முன்னே கமெராவை 'ஓட்டிப்' படம் எடுக்காமல், சக்தி வாய்ந்த ரெலிபோட்டோ லென்ஸ் ஒன்றை நான் கொண்டிருந்து தொலைவிலிருந்து படம் எடுத்ததும் காரணமாகவும் இருக்கலாம். 

    ***

    அந்த ஊரவர்களுக்கான கிராமசபை சார்பில் தீ அணைப்புப் படையினர் தங்கள் வாகனத்துடன் வந்து, விளக்கங்கள் அளித்துக் கொண்டிருந்தார்கள். நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தாதவர்கள், தீ அணைப்பதில் இயந்திரம் பயன்படுத்தாமல், வாளிகளோடு தண்ணீர் தேடித் திரிவதற்குள் உயிர் சேதம் ஏற்பட்டு விடும் என்பதை புரிய வைப்பதற்காக இருக்கக் கூடும். 

    குழந்தைகள் ஆர்வத்தோடு அந்த வாகனத்தில் ஏறி படையினருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். இயந்திர வாகனங்களில் பயணிக்க மட்டும் தானே தடை, பார்வையிட அல்லவே!?

    ஒரு கோயில் திருவிழாவில் கடை விரித்த பெரும் சந்தை போல பல்வேறு கூடாரங்கள் அமைத்து விற்பனை நடந்து கொண்டிருந்தது. 

    உணவுப் பொருட்கள் முதல் Power tools வரைக்கும். 

    ஆமிஷ்காரருக்கு எதற்கு Power tools? 

    துருவப் பகுதி எஸ்கிமோக்கள் எனப்படும் இன்யூவிட்டுகளுக்கு (Inuits) குளிர்சாதனப் பெட்டி விற்கிற விண்ணர்களாக இருக்கக் கூடும். பொதுவெளியில் நினைப்பது போல, இவர்கள் எல்லாருமே மின்சாரம் பாவிக்காத சிறு கை ஆயுதங்களை மட்டும் பயன்படுத்துகிறவர்கள் இல்லை என்பதெல்லாம் பின்னால். 

    ஆமிஷ்கள் பயன்படுத்தும் கெந்தித் திரியும் சைக்கிள்கள் முதல் சண் கிளாஸ்கள் வரைக்கும், உணவுப் பொருட்கள் முதல் பாவனைப் பொருட்கள் வரை விற்பனையாகிக் கொண்டிருந்தன.

    சண் கிளாஸ் கடையில் ஆமிஷ் பெண்களே, வளைகாப்புக்கடைத் தமிழ்ப் பெண்டிர் போல, அதிகமாக நின்று போட்டு அழகு பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் ஊர் வைரவர் கோவில் கடா வெட்டுத் திருவிழாவில் வண்ண செலோபேன் துண்டு ஒட்டிய காட்போட் மட்டை சண் கிளாஸ் எத்தனை நாள் வெயில்களில் என்னை அழகுபடுத்தியிருந்திருக்கும்!? 

    உள்ளே பல பெண்கள் அந்த சண்கிளாஸ்களோடு குதிரை வண்டில்களையும் பிள்ளைகளைத் தள்ளும் வண்டில்களையும் ஓட்டிக் கொண்டிருந்தார்கள்!

    ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்கு என தனித்துவமான ஒரே வகையான உடைகளை அணிந்திருந்தார்கள். சில நேரங்களில் மொத்த விற்பனையில் மலிவாக வாங்கியிருக்கக் கூடும். அல்லது Pizza கடை போல, ஒன்றை வாங்கி ஒன்றை இலவசமாகவும் பெற்றிருக்கவும் கூடும்.

    ஒரே குடும்பத்தினரை அவர்களின் ஆடைகளை வைத்தே இலகுவில் அடையாளம் கண்டு விட முடியும். வடிவங்கள் போட்ட துணிகள் (Patterned), வெறும் தனி நிறங்களைக் கொண்டவை (Plain colour) என வெவ்வேறு பிரிவுகளுக்கான வெவ்வேறு ஆடை முறைகள் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. தலைக்கான முக்காடுகள் கூட ஒவ்வொரு பிரிவினருக்கும் வேறானதாகவும் அடையாளம் காணக் கூடிய வகையிலும் இருக்கும். 

    கோழிகள், பறவைகள், சிறுபிராணிகள் கூடுகளுக்குள் வைத்தபடி ஒரு புறம் விற்பனையில். Antiques என்ற பெயரில் வீடுகளுக்குள் கிடந்த புராதனப் பொருட்களையும், வீட்டுக்கு வெளியே கிடந்து துருப்பிடித்த கருவிகளையும் ஏலவிற்பனைக்காக கொண்டு வந்து குவித்திருந்தார்கள். பல பொருட்கள் உண்மையிலே இரும்புக்காக மட்டுமே விற்பனை செய்யப்படக் கூடிய அளவுக்கு எந்த வித பயன்பாட்டுக்கும் உதவாதனவாகவும்  இருந்தன. 

    (எனது பார்வையில்! But, one man's trash is another man's treasure!)

    தாங்கள் கைவினையால் செய்த தளபாடங்களின் விற்பனைக்காக பெரிய கூடாரமே இருந்தது. வெயில் தாங்காமல் அவ்வப்போது கொண்டு போன தண்ணீர்ப் போத்தலோடு இந்தக் கூடாரத்துக்குள் தான் தஞ்சம் அடைய வேண்டி இருந்தது. அந்தக் கூடாரத்திற்கு வெளியே அந்த தளபாடங்களை ஏலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். 

    நானோ என்னுடைய அடுத்த வருட மரவேலைப் புரஜக்ட்களுக்கான வடிவமைப்புகளை கபளீகரம் பண்ணுவதற்காக உன்னிப்பாக தளபாடங்களை அவதானித்துக் குறித்துக் கொண்டிருந்தேன். 

    இன்னொரு பெரிய கூடாரத்தில் அமிஷ் பெண்களின் கைவினைப் பொருட்களான Quilts எனப்படும் படுக்கை விரிப்புகளுக்கான ஏலம் நடந்து கொண்டிருந்தது. இந்த ஏல விழாவின் Star attraction என்று சொல்லக்கூடிய அளவுக்கு அதற்கான வரவேற்பு அதிகம் என்பதால், கூட்டம் நிறைந்திருந்தது. அந்த கொட்டகைக்குள் செல்வதற்கே டிக்கட் விற்கப்பட்டு பணம் அறவிடப்பட்டது.

    இப்படியாக  அந்தப் பெரிய வயலில் பல்வேறு இடங்களில் ஏலம் நடத்துவோர் ஒலிபெருக்கிகளுடன் பல்வேறு பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். 

    ஒலிபெருக்கி நவீன தொழில் நுட்பம் என்றாலும், ஆபத்துக்கோ, பணம் சம்பாதிக்கவோ பாவம் இல்லை என்பதால் கடவுளும் அதையிட்டு குறை நினைக்கப் போவதில்லை.

    கடைசிப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. தாங்கள் தங்களை வளர்த்தவர்களை விட்டு புதிய இடங்களுக்குப் போகப் போகிறோம் என்று தெரியாமல் இந்த குதிரைகள் இருக்கின்றன என்று எங்கள் இருவருக்கும் பெரும் கவலை. 

    விற்பனைக்கான தங்கள் குதிரைகளின் திறனை வாங்க வந்திருப்போருக்குக் காட்டவோ என்னவோ, சிலர் குதிரைகளில் சவாரி செய்து கொண்டும், வண்டில்களில் பொருத்தி வலம் வந்து கொண்டும் இருந்தனர்.

    அதில் பெண்களும் அடக்கம். எனக்கோ எந்த பாதுகாப்பும் இல்லாமல் சம தளமில்லாத வயலில் வேகமாக ஓடும் போது தடம் புரளக் கூடுமோ என்ற பயம் இருந்தது. 

    சீட் பெல்ட் போடாமல் காரை அசைக்காத சாரதி ஆக்கும் நான்!

    ***

    ஐரோப்பாவிலிருந்து வந்த பென்சில்வேனியாவில் குடியேறியோருக்குள்ளும் விதிமுறை அனுசரிப்புகள் பற்றிய மோதலால் பழமையான விதிமுறைகளுக்குள் தொடர்ந்தும் இருப்போர் Old Order Amish எனப்படுகிறார்கள். இவர்கள் தான் வட அமெரிக்க ஊடகங்களிலும் பொதுசிந்தனையிலும் காட்சிப்படுத்தப்படுகிறவர்கள். இவர்கள் சிறுபான்மையினர் மட்டுமே. 

    இவர்களுடைய பழமை வாத போக்கு கிட்டத்தட்ட யூத வைதீகப் பழமைவாதிகள், இஸ்லாமியத் தீவிரவாதிகள் போன்றது தான். 

    இஸ்லாமியத் தீவிரவாதிகளின் திருக்கூத்துக்களை பலரும் அறிந்திருந்தாலும் யூதப் பழமைவாதிகள் பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. 

    யூத வைதீகப் பழமைவாதிகளின் விதிமுறைகள் சிரிப்பூட்டக் கூடியன. முன்பு 1999 இல் வெளிவந்த, நான் பார்த்த Kadosh என்ற இஸ்ரேலியப் படத்தில் அவர்களின் வாழ்க்கை முறை சிறப்பாகக் காட்டப்பட்டிருந்தது. எப்படித் தேனீர் போடவேண்டும் என்பதற்கும் வைதீக யூத மதத்தில் விதிகள் உண்டு. இந்தப் படம் வந்த போது இஸ்ரேலிலும் யூதர் அதிகம் வாழும் அமெரிக்காவிலும் பெரும் சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்திருந்தன. 

    1991 இல் வெளிவந்த Deadly Currents எனப்படும் பலஸ்தீன யூத மோதல்கள் பற்றிய விவரணத் திரைப்படம் பற்றி முன்பு நான் ஆசிரியராக இருந்த தாயகம் பத்திரிகையில் விமர்சனம் ஒன்றை எழுதியிருந்தேன். அதில் யூத இனச் சிறுவர்களுக்கு இந்த வைதீகப் பழமைவாத யூதர்கள் மீதான வெறுப்பும் காட்டப்பட்டிருந்தது. 

    அதைப்போல ஆமிஷ் மக்களுடைய வாழ்க்கை முறை முழுமையாக தொழில்நுட்பங்கள், நவீன வசதிகளை வெறுக்கிறது.

    ஆண்கள் வைதீக யூதர்கள் போல தாடிகள் வளர்த்து, மிக எளிமையான உடைகளோடு, ஒரே மாதிரி தொப்பி அணிந்து இருப்பார்கள்.  இவர்கள் எல்லோதும் Suspenders எனப்படும் சேட்டுக்கு மேலால் நெஞ்சையும் முதுகையும் கடந்து காற்சட்டைகளை விழுந்து விடாமல் பிடித்து வைக்கும் பெல்ட்களை அணிந்திருப்பார்கள்.

    அதற்கான மர்மத்தை என் நண்பர் மிக அருகில் போய் பார்த்து கண்டுபிடித்தார். அவர்கள் இடுப்பில் பெல்ட் கட்டுவதில்லை. அதுவும் மத விதிகளில் ஒன்று. 

    மின்சாரம், தொலைபேசி, இயந்திரங்கள், இயந்திர வாகனங்கள் எதையும் இவர்கள் பயன்படுத்துவதில்லை. 

    இவர்கள் விமானத்தில் பயணம் செய்வதில்லை. கப்பல் பயணம் மட்டுமே.

    இவர்களுக்கு என மூன்று சஞ்சிகைகளை இவர்களின் ஒரு நிறுவனம் வெளியிடுகிறது. அந்த நிறுவனமும் அச்சுவேலைகளை பழைய முறைப்படி மின்சாரம் பயன்படுத்தாமலேயே செய்கிறது. 

    திருமண மோதிரங்கள், தங்க ஆபரணங்கள் பயன்படுத்தாமை, பெண்களின் முடி வெட்டாமை, குடிவகை, புகையிலை பாவனை, தொலைக்காட்சி, வானொலி பாவனை, ஆண்களும் பெண்களும் வேறுவேறாக இருக்காமல் குடும்பங்களாக ஒன்றாக இருத்தல், கோயில்களில் இசைக்கருவிகள் பயன்படுத்தல், பூந்தோட்டம் வைத்திருத்தல், பொதுத் தேர்தல்களில் வாக்களித்தல், அரசாங்க உதவிப் பணத்தைப் பெறுதல், தனிப்பட்ட மோதல்கள் என இன்னோரன்ன காரணங்களுக்காக,  ஏற்படும் மோதல்களில் பல்வேறு குழுக்களாக இவர்கள் பிரிந்து பிரிந்து புதிய சமூகக் குழுக்களை அமைத்திருக்கிறார்கள். பிரிந்த குழுக்கள் பழமைவாதக் குழுக்களாகவோ, திறந்த மனப்பான்மையுள்ள லிபரல் குழுக்களாகவோ பிரிந்திருக்கிறார்கள். 

    பிரிவதற்கான மோதல்களின் காரணங்களில் தாடி வளர்ப்பதும், குதிரை வண்டிலின் பின்புறத்தில் உள்ள முக்கோண ஒளிதெறிப்பான் பயன்படுத்துவதும், வண்டிச் சில்லுகளுக்கு றப்பர் டயர் பொருத்துவதும் இருந்திருக்கின்றன.

    தற்போது ஆமிஷ் இனத்தவர்களின் பிரிவுகளில் விவசாயத்திற்கு ட்ராக்டர்கள் பயன்படுத்துவோர், வாகனம் வைத்திருந்து சாரதிகளை வேலைக்கு அமர்த்தியிருப்போர், போன் பாவிப்போர், மின்சார உபகரணங்கள் பயன்படுத்துவோர், கம்பியூட்டர் பயன்படுத்துவோர், குதிரை வண்டில்களுக்கு றப்பர் டயர்கள் பயன்படுத்துவோர், தொழிற்சாலைகள் வைத்து கம்பியூட்டர், மென்பொருட்கள் பயன்படுத்தி உற்பத்திகள் செய்வோர், சூரிய ஒளியில் மின்சாரம் பெறுவோர், அரச உதவி பெறுவோர், பூந்தோட்டம் வைத்திருப்போர்,  நோய்வாய்ப்படும் போது அம்புலன்ஸை அழைத்தல் என பல்வேறு வழிகளில் தங்களின் விதிமுறைகளில் உள்ள loopholeகளுக்குள் புகுந்து விளையாடி, கடவுளைப் 'பேய்க்காட்டிக்' கொண்டு இருக்கிறார்கள்.  

    பால் கறக்கப்படும் இடத்திலிருந்து பால் குளிராக்கும் இடத்திற்கு வாளியில் கொண்டு செல்லாமல், பைப் லைன் பயன்படுத்துவதில் கூட பிளவுபட்ட மதப்பிரிவு உண்டு. 

    திருமணத்திற்கு முன்பான பாலுறவு அனுமதிக்கப்படாததுடன், திருமணங்கள் வாழ்நாள் உறவாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும், விவாகரத்து விரும்பப்படாததாகவும் இருக்கிறது. 

    இதில் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்பான courtship எனப்படும் Dating வகையறாவில் மூடப்பட்ட படுக்கையறைக்குள் ஒன்றாக இருக்கலாம், ஆனால் முழுமையான ஆடைகளுடன் இருக்க வேண்டும் என்ற விதியைக் கடைப்பிடிக்க வேண்டும். அங்கே அதையெல்லாம் விளக்குப் பிடித்துப் பார்த்துக் கொள்ளும் குடும்பக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எல்லாம் இருப்பார்களோ, யாருக்குத் தெரியும்? 

    ஒவ்வொரு பிரிவும் பிரிந்து போகும்போது அவர்களுக்கு பிஷப்மார், போதகர்கள், உதவியாளர்கள் என ஒரு புது தலைமைக் கூட்டம் வேறு உருவாக வேண்டும். 

    இந்த விதிமுறைகளையும் வேறுபாடுகளையும் அதனால் ஏற்பட்ட சண்டைகள் பிரிவுகளையும் விளங்கிக் கொள்வது மனிதர்களாகிய எங்களுக்கே கஷ்டமாக இருந்தால், இவர்கள் நம்புகிற கடவுளின் நிலை என்னவாக இருக்கும்? 

    அவருக்கு என்ன? 

    உண்டியலில் பணத்தைப் போட்டால் அருள் பாலிக்காத கடவுளர் எங்காவது உண்டா?

    காசு என்றால் கடவுளே வாய் பிளக்காமலா இருப்பார்?

    ***

    அங்கே பல்வேறு வகையான வேறுபட்ட மத அடையாளங்களுடன் வந்த பல்வேறு பிரிவினரை நாங்கள் கண்டோம்.  பாரம்பரியக் குதிரை வண்டில்கள் முதல் சொந்தக் காரில் வந்தவர்கள் வரை உண்டு. 

    இவ்வாறான தொகை மக்கள் கலந்து கொள்ளும் இடங்களில் மற்ற மதங்கள் என்றால் நிச்சயம் அடிபிடி சண்டைகள் நடந்திருக்கும். ஆனால் ஆமிஷ்கள் தங்கள் வேறுபாடுகள் மீதான வெறுப்புகளை பகிரங்கமாகக் காட்டியதாக் காணவில்லை. அந்நிய மத வெறுப்பினால் அந்நியர்களிடம் பொருட்களை வாங்காத அதிதீவிரவாதிகள் மற்ற மதங்களில் உண்டு/  மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட வேண்டும் அளவுக்கு எல்லாம் கடவுள் பக்தி உண்டு தானே! 

    ஆனால் ஆமிஷ்காரர்கள் தான் உண்மையான அமைதி மார்க்கம் போல இருக்கிறது.  

    ***

    காலை எட்டு மணிக்கு வந்து சேர்ந்த நாங்கள் பன்னிரண்டு மணிக்கு முன்பாக, கொடுவெயிலில் குறைந்தது நான்கு தடவைகள் அந்த ஏரியாவை வலம் வந்து படங்களைச் சுட்டுத் தள்ளி விட்டோம். குதிரைகளுக்கான ஏலம் மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் என்பதால் அதுவரை கொடுவெயிலில் காத்திருக்க விரும்பாமல், நாங்களுக்கும் வண்டிலைக் கட்டிக் கொண்டு கிளம்பி விட்டோம்.

    ***

    அங்கே வந்தவர்களில் எங்களைத் தவிர இரண்டு கரிபியன் இந்திய வம்சாவளி முகங்களையும் ஒரு கறுப்பினத்தவரையும் தவிர வேறு அந்நியர்கள் எவரும் இல்லை. 

    ஆனாலும் எங்களை யாரும் வேற்றுக்கிரக வாசிகள் போல பார்த்தாக காணவில்லை. .

    ***

    என்னுடைய இந்த யாத்திரை நடந்த அதே தினத்தில் தான் ரொறன்ரோவிலிருந்து அதேயளவு 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Midland எனப்படும் சிறுநகர் ஒன்றில் உள்ள கனடிய வேதசாட்சிகளுக்கான கத்தோலிக்க தேவாலயத்தில் தமிழர்களின் திருவிழா நடைபெற்றது. யாத்திரைத் தலமான அங்கு கோடை காலத்தில் பல்வேறு குடியேறி இனங்கள் ஒவ்வொரு வாரமும் தங்கள் மொழி வழிபாடுகளை நடத்துவதுண்டு. 

    வழமை போல, செவ்வாய் கிரகத்திற்கு போனாலும் வேலி போடுகின்ற யாழ்ப்பாணிப் பாரம்பரியப்படி, இலங்கையில் உள்ள மடு தேவாலயத்தின் வடிவமைப்பில் ஒரு பலிப்பீடத்தையும் யாழ்ப்பாணிகள் கட்டி எல்லைக்கல்லு நாட்டியுள்ளார்கள்.

    அன்றைய தினம் இந்துக்கள் உட்பட மத பேதமின்றி சுமார் ஐம்பதாயிரம் ஈழத்தமிழர்கள் அங்கு அள்ளுப்பட்டு யாத்திரை போய் வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தார்கள்;.  

    நான் கனடா வந்து முப்பத்தைந்து வருடங்கள். 

    இந்தக் கோயிலுக்கு ஒரு போதும் சென்றதில்லை.

    கோயிலுக்குப்போன ஐம்பதாயிரம் பேருக்கும் கனடாவில் இவ்வாறானதொரு மதப் பிரிவு இருப்பது பற்றியோ, இவ்வாறான ஒரு நிகழ்வு நடப்பது தெரிந்திருக்குமோ என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

    அதைப் போல உத்தம கத்தோலிக்கனான எனக்கும் மிட்லண்ட் கோவிலில்  திருவிழா நடந்த விசயமும் தெரியாது. 

    தெரிந்திருந்தாலும்...

    எல்லாரும் போனாப் போலே நானும் போவதில்லே சாமி மலை!

    Postad



    You must be logged in to post a comment Login