Recent Comments

    இயற்கை – நிலம் – இசை : 15

    T.சௌந்தர்

    சினிமாவில்நிலக்காட்சிகளும்இசையும்:

    சினிமா என்பது திரையில் ஒளிரும் கலை! வேறெந்தக் கலைகளையும் விட எல்லாக்கலைகளும் சங்கமிக்கும் இடமாக இருப்பதால் மனிதர்களுக்கு மிக நெருக்கமான கலையாகவும் இருக்கிறது. ஒளிர்ந்து கொண்டே உண்மை போல அசையும் படிமங்களைக் கொண்ட சினிமா தான் வேறெந்தக் கலைவடிவத்தையும் விட  இயற்கையும், இசையும் நெருக்கமாக இணையக்கூடிய கலையாகவும் இருக்கிறது. சினிமாவில் வரும் காட்சிகளை  நாம் மெய் மறந்து மனம் ஒன்றி அனுபவிக்கின்றோம். 

    நிலம் பற்றிய சிந்தனையை மக்கள் மத்தியில் சினிமாவால் மிக எளிதாகக் கட்டமைக்க முடிந்திருக்கிறது. நிலம் மட்டுமல்ல அது சார்ந்த கால நிலைகளையும் சினிமா நிஜம் என்று நம்பும் வகையில் திரையில் காட்டுகின்றது.திரையில்  மழை பெய்தால் வெளியிலும் உண்மையாகவே மழை பெய்கிறது என்று நம்புமளவு மக்களை முழுமையாக ஒன்றை வைப்பது சினிமா!   

    நிலம் சார்ந்த காட்சிகள் இல்லாமல் எந்தவொரு நல்ல ஐரோப்பிய சினிமாவையும் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நிலம் சார் காட்சிகளுக்கு அவர்கள் எப்போதுமே மிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள். சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே அந்த மரபு அவர்களிடம் இருக்கிறது. அதன் அடிநாதம் " இயற்கைமையவாதம் " [  Naturalism ] என்கிற இயற்கையை ரசித்தல் அல்லது ஆராத்தித்தல் என்கிற ஒரு போக்கிலிருந்து ஆரம்பித்த மரபாகும். இது ஓர் பேரியக்கமாக  மத்தியகாலத்திலிருந்து எழுச்சி பெற்ற இயக்கமாகும். வாழ்நிலையின் எல்லா அம்சங்களிலும் இயற்கையுடனான  ஆழந்த ஊடாட்டத்தை உணர்வது என்பதாகும். அந்த மரபின் தொடர்ச்சியை நாம் அவர்களின் சினிமாவிலும் காண்கிறோம்.

    சினிமா தயாரிப்பில் முன்னணியில் நிற்கும் அமெரிக்காவின் Hollywood  ஸ்டுடியோக்கள், உலகின் எல்லா வகையான நிலப்பரப்புகளை கொண்டதாக விளங்கும் கலிபோர்னியாவில் இருப்பதும் தற்செயலானதல்ல.  

    இயற்கை பற்றிய ஐரோப்பியர்களின் பார்வை அவர்களது வாழ்வியலிலும், கலை. இலக்கியம், ஓவியம் என பலவகையிலும் பிரிக்க முடியாவண்ணம் இணைந்ததாக உள்ளது. சில நூற்றாண்டுகளாக இயற்கை குறித்த அவர்களது மரபு ரசனை திரைக்கலையிலும் தவிர்க்க முடியாதவண்ணம் இணைந்தது என்பது இயல்பானது என்பதால் திரைப்படங்களில் இயற்கையை தொடர்ச்சியாக  ஏதோ ஒரு வகையில் பின்னணியாக வெளிப்படுத்தியே வந்தனர். 

    சினிமாவில் காட்டப்படும் நிலப்பரப்புக் காட்சிகள் மனிதனின் குணங்கள், பண்புகள், சுற்றுச்சூழல் போன்றவற்றின் ஊடாட்டத்துடன் பின்னிப்பிணைந்தவை என்பது ஐரோப்பியரின் பார்வையாக உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் அதனூடிணைந்து, அதற்கு பொருத்தமான இசையையும் அமைக்க வேண்டிய தேவையும் எழுந்தது. 

    சினிமா, மௌனப்படங்களாக வெளிவந்த போதே திரைக்கு அருகிலிருந்து இசை வழங்கும் ஓர் நிலை இருந்ததை நாம் காண முடியும். இசை என்பது மௌனப்படக்காலத்திலேயே சினிமாவுடன் ஒன்றிப் பயணிக்கத் தொடங்கி விட்டது.    

    அமெரிக்காவின் ஆரம்பகாலப் படங்களான The River [1937] ,The Land [1940] போன்றவை நிலக்காட்சிகளுடன் பின்னிப் பிணைந்தவையாக இருந்ததால் அந்தந்த நிலங்களிலேயே படமாக்கப்பட்டன.

    தமது திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு எவ்வளவு முக்கியத்தும் கொடுக்கிறார்களோ அவ்வளவு முக்கியத்துவம் கதை சார்ந்த நிலப்பரப்புக்கும் கொடுப்பார்கள். அது போலவே ஐரோப்பியரின் இசையிலும், ஓவியத்திலும், இலக்கிய எழுத்துக்களிலும் நிலம் சார்ந்த வெளிப்பாடுகளை காண்பித்து அதை ஒரு மரபாக வளர்த்தெடுத்தவர்கள் என்ற ரீதியில் அந்த மரபை திரையிலும்  வெளிப்படுத்தினர். ஐரோப்பாவில் வளர்ச்சி பெற்ற செவ்வியலிசை மரபான சிம்பொனி இசை ஏற்கனவே நிலம்சார் இசைகளை உருவாக்கிய நிலையில், அதன் கூறுகளை  புதிதாக உருவான சினிமாவுக்கு இசைவாக்கும் ஒரு முயற்சியை   ஐரோப்பாவிலிருந்து  சென்ற இசையமைப்பாளர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்!

    1930களின் ஆரம்பத்தில் வேலையில்லாத திண்டாட்டத்தாலும், நாஜிகட் சியின் வருகையினாலும் பாதிக்கப்பட்ட  இசைக்கலைஞர் வளர்ந்து வந்த அமெரிக்க சினிமாவில் தங்களுக்கான புதுவாழ்வையும், வாய்ப்பையும் நாடி அமேரிக்கா சென்றனர்.

    குறிப்பாக ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் செவ்வியல் இசையில் நன்கு தேர்ச்சி பெற்ற இசைக்கலைஞர்கள் பலரும் நாஜிக்களின் கெடுபிடிகளால், தமது சொந்த நாடுகளில் வசிக்க முடியாத நிலையால் அமெரிக்கா படையெடுத்தனர். 

    அவர்களில்  Max Steiner , Erich Wolfgang Korngold ,  Hanns Eisler முக்கியமானவர்கள்.  இவர்களால் அமெரிக்கத்  திரைப்படங்களில் செவ்வியல் இசைசார்ந்த பின்னணி இசை மிகப்பெரும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியது. இன்றுவரை அந்த இசையின் தொடர்ச்சியாக  John Williams, John Barry போன்ற பல  ஹொலிவூட் இசையமைப்பாளர்கள் இருந்து வருகின்றனர். நிலம்சார் காட்சிகளில் அதுசார்ந்து சிம்பொனி வகை இசையை தரும் வழமை இன்றும் தொடர்வதை நாம் காண முடியும். 

    உலக சினிமாக்கள் எல்லாவற்றிலும் அவை சார்ந்த நில அமைப்புகள் நீக்கமற நிறைந்திருப்பதை காணலாம். இதற்கு ஏராளமான உதாரணங்களை கூற முடியும்.

    நில அமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளும் அதற்கிசைந்த இசைக்கான அவகாசத்தையும், அதை மக்கள்ரசிக்கும்வண்ணம்அவர்களைவளர்த்தெடுத்தமையும் மேலைத்தேய கலைஞர்களின் மிகப்பெரிய பணியாகும். குறிப்பாக அத்திரைப்படங்களின் நிலம்சார் இசைகளை பல்வேறு வடிவங்களிலும் வெளிப்படுத்தியதும் அவர்களின் சாதனைகளாகும். ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு காட்சியிலாவது நிலத்தைக் காட்டாமல் அவர்கள் விட்டதேயில்லை. அவை குறித்து முழுமையாக எழுத இக்கட்டுரை இடம் தராது என்பதால் நான் ரசித்த ஒரு சில படங்களை  உதாரணமாகத்  தருகிறேன்.  

    படம் 1.

    Good Bad  And  The  Ugly [ 1966 ] 

    Music : Enino Moricone

    கதைக்களம் அமெரிக்க நிலத்துடன் பிணைக்கப்பட்டதால் நிலக்காட்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படம். அமெரிக்க சினிமா வரலாற்றில் இந்தப் படத்தின் பின்னணி இசை புதிய சாதனையைப் படைத்தது. மூன்று கதாபாத்திரங்களை சுற்றி புனையப்படட இக்கதையின் தன்மைக்கு ஏற்ப  இசையும் வழமை போலல்லாமல் புதுமையாக அமைக்கப்பட்டது.

    படத்தின் ஆரம்பக் காட்சியில்  எந்தவிதமான இசையல்லாமல் வெறும் காற்றின் ஒலியுடன் படம் ஆரம்பிக்கிறது. முக்கிய மூன்று கதாபாத்திரங்களான Blondie, Angel Eye, Tuca போன்றவர்களுக்கு ஏற்ப மூன்று வாத்தியக்கருவிகளை பொருத்தமாக பயன்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர். 

    Blondie  என்கிற கதாபாத்திரத்திற்கு  Flute,  Angel Eye என்கிற கதாபாத்திரத்திற்கு Ocarina - Tuca என்கிற கதாபாத்திரத்திற்கு  Choir என்பதுடன் கிட்டார், விசில், மிருகங்களின் ஒலிகள் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படத்தின் பிரதான இசை [ Theme Music ] வெவ்வேறு   சூழ்நிலைகளுக்குப்   பொருத்தமாக Music Variations ஆகவும் வரும்.

    படத்தின் கதை அமைந்த பின்னணி நிலப்பரப்பும், கதாபாத்திரங்களின் முகபாவங்களும், அதனோடிணைந்த இசையும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவாறு பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது. படத்தின் நிலப்பரப்பும், அதற்குண்டான இசையும் நெஞ்சில் பதியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதால் நிலப்பரப்பையும் இசையையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

    இன்று செவ்வியல் அரங்குகளிலிலும் வாசிக்கப்படும் அளவுக்கு இந்த இசை, வானொலி, தொலைக்காட்சிகளிலும் தாராளமாக கேட்கக்கூடியதாகவும், வானொலி நிகழ்ச்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு நீண்ட காலம் முதலிடம் வகித்த இசையாகவும் இருந்துள்ளது.சுருக்கமாகச் சொன்னால் இன்று செவ்வியலிசை என்ற அந்தஸ்து பெற்றுள்ளது.

    படம் 2 :

    The Godfather [ 1972]

    Music: Nino Rota & Carmine Coppola

    அமெரிக்க சினிமாவின் மிக முக்கிய படங்களில் ஒன்றான இந்த திரைப்படம் ஒரு காவியம் என்று சொல்லலாம். கதையும் இசையும் குழைந்து மனதில் ஓவியங்களை தீட்டும் வண்ணம்  மிக நுட்பமாக அமைக்கப்பட்ட திரைப்படம். அமெரிக்க வாழ் இத்தாலியினரின் கதையை சொல்லும் இத்திரைப்படம், கதாநாயகனின்  இத்தாலிய [ சிசிலி ]  நினைவுகளையும் மீட்டுவதாக நுனித்த நுட்பத்துடன் இணைக்கப்பட்ட இசையைக் கொண்டது. 

    குறிப்பாக அமெரிக்க போலீசால் தேடப்படும் நாயகன் சிசிலி நாட்டில் மறைந்து வாழ நேரிடும் காட்சிகளில் சிசிலி நாட்டின் நிலப்பரப்பின் அழகும் அதற்கு பின்னணியாக வரும் சிசிலி நாட்டு இசையும் பார்ப்பவர்களை மெய்மறக்க செய்பவை.

    இக்கதையில் இடையில் இத்தாலி [ சிசிலி ] நாட்டையும் கதை விவரிப்பதால், புகழ்பெற்ற இத்தாலிய இசையமைப்பாளரான Nino Rota என்பவர் இசையை அமைத்துள்ளார். ஆனாலும் படஇயக்குனர் இத்தாலிய வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது  தந்தையும்  

    [ Carmine Coppola ] ஓர் இசையமைப்பாளர் என்பதாலும் படத்தில் வரும்  இத்தாலிய நாட்டார் தன்மை கொண்ட  நடன  இசையை  இசையமைதுள்ளார். குறிப்பாக படத்தின் ஆரம்பத்தில் வரும் திருமண காட்சியில் வருகின்ற இசை இவர் அமைத்ததேயாகும். 

    "The Godfather Waltz" , "Speak Softly Love" , "Love Theme from The Godfather”, "Sicilian Pastorale", "The Halls of Fear “ போன்ற தலைப்புகளில் கதையின் போக்கில் பல வகையான  நகர்சார்ந்த நிலப்பரப்புகளிலும், காட்சிகளிலும், பாத்திரங்களின் ஆழ்மன உணர்வுகளை செறிவான முறையில் வெளிப்படுத்தும் பல கோணங்களில் இசை ஊடுருவிச் செல்லும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    சிசிலி நாட்டுப்பின்னணியில் வரும் இசை நெஞ்சை அள்ளும் நிலம்சார்  பின்னணி இசை என்று சொல்லலாம்.

    படம் 3. 

    Once Upon A Time In America [1984 ]

    Music: Ennino Morrocone

    மேலை சினிமாக்களில் நிலக்காட்சிகள் என்பது தனியே இயற்கைக் காட்சிகள் மட்டுமல்லாது கட்டிடங்களையும் பின்னணிக்காட்சிகளாக அமைப்பதையும் ஓர் அம்சமாகக் கடைப்பிடிக்கின்றனர்.

    நகர்ப்புறம் சார்ந்த பின்னணிகளை கொண்ட கதையமைப்புகளில் மிக பொருத்தப்பாடும்,

    முக்கியத்துவமும், அதன் இயல்பிலேயே அழகுத தன்மை மிக்க காட்சிகளை திரையில் கொண்டு வந்து, காலத்தின் இயல்பையும், மாறுதல்களையும் அழகோவியங்களாக்கி வியக்க வைத்தவர் இயக்குனர்  Sergio Leone ! [ செர்கியோ  லியோன்]. 

    அவர் இயக்கிய இந்த படத்தின் கதைக்களம்  அமெரிக்கா என்ற போதிலும், அதற்குப் பொருத்தப்பாடாக பெரும்பாலான காட்சிகளை இத்தாலியிலும் அவர் படமாக்கினார். இதன் மூலம் படத்தின் நம்பகத்தன்மையை வலுவாக்க காட்டினார். நிலப்பரப்பையும், கட்டிடங்களையும் அழகுறக் காட்டியதோடல்லாமல் கதாபாத்திரங்களின் வாழ்வு பின்னணியையும் காண்பிக்கிறார்.

    1930 களில் நியூயார்க் தென்பகுதியான மான்ஹாட்டன் நகரின் வீதியில் வாழும்  யூத சிறுவர்கள் போதைவஸ்து கடத்தல், குற்றச் செயல்கள் போன்றவற்றில் ஈடுபட்டு பின் அதையே தொழிலாக கொண்டு வாழ்ந்த  நண்பர் குழுவின் கதை இத்திரைப்படத்தில் சொல்லப்படுகிறது.

    .

    ப்ரூக்ளின் நகரின் பாலம் அதை சுற்றிய இடங்களும் மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன  என்பது மட்டுமல்ல அமெரிக்கா திரைப்படங்களில் மிக, மிக அழகாகப் படமாக்கப்பட்ட காட்சிகளில் ஒன்றாகவும் இன்று அவை பாராட்டப்படுகின்றன.

    கதை, காட்சியமைப்பு , நடிப்பு , இயக்கம் என அனைத்து அம்சங்களிலும் சிறப்பாகப் பேசப்பட்ட இந்த படம் ஒரு இசைக்காவியம் கூட! கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் என தீம் மியூசிக் அமைக்கப்பட்டுள்ளது.

    1. Title Music  2. Deborah 's Theme  3. Poverty  4. Cockeye's Song/Childhood Memories  5.Friendship And  Love 6. Childhood Memories  7. Friends  8. Prohibition Dirge  9. Speakeasy  10. Cokeyes ' s Song

    போன்ற தலைப்புகளில் வரும் பின்னணி இசை நெஞ்சை அள்ளும் சிம்பொனி வடிவமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த இசையில் வரும் Panflute என்ற புல்லாங்குழல் இசையை வாசித்தவர் உலகப்புகழபெற்ற புல்லாங்குழல் கலைஞரான ஜோர்ஜ் ஷாம்பியர் [ Gheorghe Zamfir ].

    படத்தின் நிலக்காட்சிகளும், இசையும் , கதாபாத்திரங்களும் நெஞ்சை விட்டு அகலாதவை. சுருக்கமாகச் சொன்னால் இதுஅமெரிக்கதிரைஇசையின்அதிசிறந்தபடைப்புகளில்ஒன்று.!

    படம் 4 :

    The Mission [ 1986 ]

    Music : Enino Moricone

    ஸ்பானிய காலனியவாதிகளின் தென்னமெரிக்கா மீதான படையெடுப்பும் ,அதன் பின்னணியில் கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்யும் பாதிரி மற்றும் ஸ்பானிய ராணுவவீரன் ஒருவனையும் மையமாக வைத்து பின்னப்பட்ட இத்திரைப்படத்தின் கதை மிக,மிக அழகான இயற்கை சூழல்மிக்க வனப்பிரதேசத்தில் அற்புதமான ஒளிப்பதிவு செய்யப்பட்ட திரைப்படமாகும்.

    Robert de Niro , Jeremy Irons போன்ற மிகத்திறமைவாய்ந்த நடிகர்கள் பிரதானமேற்று நடித்த இந்தத் திரைப்படத்தின் இசையை அமைத்தவர் என்னினோ மோரிகோனி [ Ennio Morricone ]

    இயற்கை எழிலும், நீர்வீழ்ச்சசிகளும் நிறைந்த அழகிய பகுதிகளில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்தப்படத்தின் இசை , நீரின்  இயற்கை ஒலியுடன் இணைந்த மைய இசையும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு இசைவாகவும் , காட்சியில்லாமல் தனியே கேட்கும் போதும்  மனதில் புதிய எழுச்சியையும், எண்ணங்களையும் , புத்துணர்ச்சியையும்  தரக்கூடியவை.  

    இப்படத்தின் இசைத்தட்டு, படத்தின் காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் தொடர்புடையதாகக் கொண்ட தலைப்புகளுடன் வெளிவந்தது.

    1.On Earth as It Is in Heaven -  2.Falls  –  3. Gabriel's Oboe  – 4. Brothers –  5.Carlotta" – 6. Vita Nostra" – 7. Ave Maríank Guaraní -  8. Climb –  9.Remorse – 10. Penance – 11. The Mission – 12. River" – 13. Gabriel's Oboe – 14. Te Deum Guaraní – 15.Refusal – 16. Asunción – 17. Alone– 18. Guaraní – 19. The Sword – 20. Miserere –  21. Ave Maria Guaraní

    மேலைத்தேய திரைப்படங்களில் மட்டுமல்ல கீழைத்தேய திரைப்படங்களிலும் நிலம் பற்றிய சித்தரிப்புகளை இயக்குனர்கள் மிகத் திறம்படக் கையாண்டுள்ளனர். கதாபாத்திரங்களின் தன்மையையும், இயல்பையும், குணாதிசயங்களையும்  நிலக்காட்சிகளின் தன்மையோடு ஒப்பிட்டு  காட்டுவதோடு மட்டுமல்ல இயற்கையின் வலிமையையும், அதன் விரிவையும் காண்பிப்பதில் யப்பானிய இயக்குனரான அகிராகுரசோவா தனித்துவமிக்கவராக விளங்கினார். 

    அவர் இயக்கிய பெரும்பாலான படங்களில் இயற்கையும் ஒரு கதாபாத்திரமாகவும், பார்வையாளர்களை அதில் ஒன்றை வைப்பதுமாக காட்சிகள் அமைந்திருக்கும். காலையின் அடர்த்திமிக்க பனிமூட்டங்களும், கனத்த நீர் சுமந்து வரும் கறுத்த முகில்களும்,தோய வைக்கும் பெருமழையும், உறையவைக்கும் கடுங்குளிர் பனியும், உடலைத் துளைக்கும் குளிர்காற்றும், முகத்தை மூட தூண்டும் புழுதிக்காற்றும்,சேறு, சகதி  என கலை அம்சங்கள் நிறைந்த காட்சிகளில் மனதை ஒன்ற வைப்பதுடன், திகைப்புகளையும் உண்டாக்குவதில் வல்லவர் அகிராகுரசோவா

    Seven Samurai படத்தில் , மழையில் வரும் சண்டைக்காட்சிகள் பலவிதமான கோணங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட கமராக் கோணங்களில்  படமாக்கப்பட்டு பிரமிக்க வைப்பதைக் காணமுடியும்.

    படம் 5 :

    Dersu Uzala [1975] - [ Russia + Japan தயாரிப்பு  ]

    Music: Isaak Shvarts

    அகிரா குரசோவா இயற்கையை அதியற்புதமான முறையில் படம் பிடித்த படங்களில் ஒன்று யப்பான் - ரஷ்ய கூட்டுத்தயாரிப்பான  Dersu Uzala [1975]  என்ற இந்தப் படத்தைக் கூறலாம். நில அளவைக்காக சைபீரிய காடுகளில் தங்கி வாழும் ரஷ்ய குழு ஒன்றின் அதிகாரி மற்றும் அந்த நிலப்பரப்பின்முரட்டுத்தனமான அடர்காடுகளின்  மூலைமுடுக்கெல்லாம் அறிந்த நாடோடியும், பழங்குடியுமான  சீனர் ஒருவர் பற்றிய கதை அது. சைபீரியாவின் வீரியமும், பனிநிலப்பரப்பும், வேகமிக்க ஆறுகளும், கடுங்குளிர்காற்று  போன்றவற்றை  பின்னணியாக அமைந்த பிரேதசத்து கதையை மனித மனோதத்துவ உணர்வுகளோடு பிணைத்துக்காட்டுகிறார் இயக்குனர் குரசோவா.

    படத்தின் ஒவ்வொரு காட்சியும் கண்ணைப் பறிக்கும் வகையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதுடன், படத்தின் அழகிய காட்சிகளுக்கேற்ப வழங்கப்பட்ட ஒலிகளும்,பின்னணி இசையும் காதுக்கு மிக இனிமையாக இருப்பதுடன் பார்ப்பவர்களை அந்தந்த காலநிலைகளுக்கு இழுத்துச் செல்வனவாகவும்  இருக்கின்றன. 

    படத்தில் இயற்கை அழகு தந்த உந்துவிசையினால் அதைப்பற்றி நாயகன் கூறுவதாக அமைந்த வசனங்களும் கவித்துவமாக  இருக்கும். நாயகனின் வசனம் இப்படி இருக்கும். 

    "Sometimes the mountains and the forests look pleasant, welcoming; sometimes though, they can be silent and forbidden. This wasn't a personal feeling, every man in the survey group felt the same way." 

    அதுமட்டுமல்ல, ஆற்றங்கரையில் ஓரிடத்தைத் தெரிவு செய்து இரவில் தங்கி, நெருப்பில் குளிர்காய்ந்த வண்ணம் கொழுந்து விட்டெரியும்  நெருப்பின் ஒளியில் சுற்றிவர இருக்கும் மரங்களில் ஒளியின் அசைவுகளை நுனித்து நோக்கும் கதாநாயகன் தனது டையரியில் எழுதும் வசனங்களும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

    " This valley reminded me of a painting of The witches Sabbath. I could almost imagine coming on their broomsticks”.

    இதைப்போலவே அந்தந்தக் காட்சிகளுக்கேற்ப பின்னணி ஒலிகளும், இசையும்  மனதை கொள்ளை கொள்ளும் வண்ணம் பிணைக்கப்பட்டுள்ளது.

    அகிரோவா குரோசோவாவின் படங்களில் பின்னணிக்காட்சிகளில் காற்று , நீர்,நெருப்பு, புகை, பனி போன்றவை அந்தத்தக்க கதைகளுக்குத் தகுந்தமாதிரி அமைக்கப்பட்டிருக்கும். அதிகமாக மழைக்காட்ச்சிகளை பயன்படுத்துவார். மழை என்பது பொதுவாக புலனுணர்ச்சிகளை தூண்டக்கூடியது. அது காட்சிகளுக்கு மேலும் ஒரு ஆழத்தை  கொடுக்கும் யுக்தியாக பயன்படுத்தி, ஒரு காட்சி இன்பசுதந்திரத்தை வழங்குவார்.

    பொதுவாக ஐரோப்பிய - அமெரிக்கா - ரஷ்யத் திரைப்படங்கள் யாவும் கதையின் ஒரு பகுதியாக நிலப்பரப்பையும் , கட்டிடங்களையும் ஒன்று சேர்த்து படமாக்கி மிக முக்கியத்துவம் கொடுப்பர். அது திரைப்படமாக இருந்தாலும், தொலைக்காட்சி நாடகங்களாக இருந்தாலும்  இயற்கை சார்ந்த காட்சிகள் தவிர்க்க முடியாத அம்சமாக  இருப்பதை நாம் காண முடியும். அவர்கள் மட்டுமல்ல சீனா, ஜப்பான் , கொரியா , வியட்நாம் போன்ற நாடுகள் மட்டுமல்ல தென்னமெரிக்கா நாட்டு படங்களிலும் இவற்றை நாம் காணமுடியும். 

    டிஸ்னிபடங்கள்:  

    காட்டூன் படங்களிலும் நமது சுற்றுப்புறம் சார்ந்த இயற்கையை குழந்தைகளின் மனத்துக்கிசைந்த வண்ணம் உயிர்த்தன்மை நிறைந்ததாகக் காட்டுகின்றனர். பழங்காலத்தில் பறவைகள், மிருகங்கள் போன்றவற்றை பயன்படுத்தி அவை மனிதர்களுடன் உரையாடுவது என்ற பழங்காலத்து மரபை நவீன வடிவத்தில் படைத்துக் காண்பிப்பதே அதன் அடிப்படையாக உள்ளதால் அதற்கேற்ற உரைகளும், சிறப்பான பின்னணி இசையும், பாடல்களும் பயன்படும் ஓர் கலையாகும். மிருகங்கள், பறவைகள் மனிதர்கள் போலப் பேசுவதால் அதற்கென தனித்துவமான குரலில்  உரையாடல்களும், வித்தியாசமான இசைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டார் கதைகளும் பாடல்களும் பயன்படுத்தப்படும் இத்துறையில் நவீன ஜாஸ், பாப், மதசார்ந்த பாடல்கள்  மட்டுமல்ல மேலைத்தேய செவ்வியல் இசையின் கூறுகளும் பயன்படுத்தப்படுகின்றன.

    அந்த வகையில் அதற்கென தனியே இசையமைப்பாளர்களை அமர்த்தி இசையமைப்பது வழமையாயினும் ஏற்கனவே புகழபெற்று விளங்கும் சிம்பொனி இசை மேதைகளின் இசைத்துணுக்குகளை காட்சிக்கு ஏற்ப பயன்படுத்தியுமுள்ளனர். 

    குறிப்பாக 1940ல்  டிஸ்னி வெளியிட  Fantasia என்ற காட்டூன் படத்தில் பீத்தோவன் நாட்டுப்புற உணர்வலையை  சிம்பொனியில் வடித்த " The  Pastoral   Symphony " என்ற இசை " With the Pegasus and their Babies " மற்றும் " Swarm of Bates " என்ற காட்சிகளிலும், Stravinsky என்ற புகழபெற்ற சிம்பொனி இசைக்கலைஞர் அமைத்த" Piano Concerto No 2 " என்ற இசைவடிவமும், டென்மார்க் புகழ் எழுத்தாளர் H .C .Anderson எழுதிய " The Steadfast  Tin Soldier " கதைக்கும், " Story of Noah's Ark காட்சிகளின் பின்னணியாக இங்கிலாந்தின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான  Elgar இசையும்  அமைக்கப்பட்டுள்ளன.

    அதைப்போலவே மாயாஜாலங்கள், மந்திர, தந்திரக்காட்சிகள் கொண்ட கற்பனைக்கதைகளிலும் மனதைக் கவரும் அழகிய காட்சிகளில் படமாக்கப்பட்டிருப்பதை ஹாரிபாட்டர் [ Harry Potter  ], லார்ட் ஒப் தி ரிங்ஸ் [ Lords of the Rings ] போன்ற படங்களில் நாம் பார்க்க முடியும். இதற்காகவே சாதாரணமாக நாம் காண முடியாத அரிதான புவியமைப்பைக் கொண்ட காட்சிகளைத் தேர்த்தெடுத்து, அதனுடன் கம்பியூட்டர் கிராபிக்ஸ் கலந்து, மிக நுண்கலையார்வத்துடன் வரையப்பட்ட காட்சிகளையும் இணைத்து மனதின் அதீத கற்பனைகளில் காணக்கூடிய நம்ப முடியாத காட்சிகள் மூலம் தம் கற்பனைக் காவியங்களைத் தீட்டிக் காண்பித்துள்ளனர். இவை போன்ற கற்பனை நிலப்பரப்புகளுக்கேற்ப இசையும் நவீன ஒலித்தரத்துடன் சிம்பொனி பாணி இசையையும் ஆங்காங்கே கலந்துதருவ தையும் நாம் காண முடியும்.இங்ஙனம் உலகெங்கும் உள்ள கலைஞர்கள் நிலம்சார் இசைகளை தங்கள் படைப்புகளில் வடித்துத் தந்ததை காண்கிறோம். 

    உயிரினங்களுக்கும் ஒலிகளுக்கும் இடையேயான உறவுகள் சூழல் குறித்த ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.தனித்துறையாக வளர்ந்து வரும் சூழலியல் ஆராய்ச்சியில் இதை ஒலியியல் சார்ந்த  சூழலியல்துறை வளர்ந்து வரும் முக்கிய துறையாகவே உள்ளது.

    இதே ஆவலை சினிமா வருவதற்கு முன்பே தனது பாடல்களில் வியந்த பாரதி " கானாமிர்தம் படைத்த காட்சி மிக விந்தையடா " என்று காட்சிக்கும் இசைக்குமுள்ள உறவை எளிமையாகப் பாடியதை இந்திய சினிமா உள்வாங்கியதா என்பதையும் பார்ப்போம். 

    [ தொடரும் ]

    Postad



    You must be logged in to post a comment Login