Recent Comments

    இயற்கை – நிலம் – இசை : 18

    T.சௌந்தர்

    இளையராஜாவின்இசையில்நிலமும்இசையும்

    All art constantly aspires towards the condition of music. - Walder Pater

    எல்லாக் கலைகளும் இசையின் தன்மையை அடைய அவாவுகின்றன” - என்பதன் மூலம் இசையின் மேன்மையை அம்மேற்கோள்  நமக்கு உணர்த்துகிறது. 

    ராகம் என்ற கருத்தாக்கத்தின் ஊடே காலத்தையும், நேரத்தையும் ஒலிகளைக்குறியீடாகக் கொண்டு விளக்கலாம் என்பது தமிழ், இந்திய மரபாக உள்ளது. ராகம் என்பது வண்ணம், நிறம், பேருணர்வு என்ற பொருள் தருகிறது. ஒலிகளின் குழைவுகளோடு இணைந்து வரும் இசை அந்தப் பேருணர்வு இசைக்கலையில் முழுமையான சுதந்திரம்  தருவதுடன் உணர்ச்சி வெள்ளத்திலும் நம்மை ஆட்படுத்துகிறது.

    மேலைநாட்டு இசைக்கலைஞர்கள் தாம்  பெற்ற படைப்புச் சுதந்திரம் மூலம் தங்கள் தனித்துவங்களைக் காட்ட முனைந்த முறைகளில் ஒன்றாய் இயற்கையை மிக நுணுகிப்பார்ப்பது, உற்றறிவது என்ற நோக்கில் பழைய மரபுகளை மீறவும் புதிதாக மரபுகளை உருவாக்கி   படைப்புத்தளத்தை விரிவு செய்யவும் காட்சி சார்ந்த  இசைத்தளம் தேவை என்பதை உணர்ந்து இயற்கையை நோக்கிப் பயணம் செய்தனர்.

    " எனக்கு நினைவிருக்கிறது நான் பீத்தோவனின் ஆயர் சிம்பொனியை  [ Pastoral Symphony ] வாங்க முடிந்த நாளில், அதை படித்து பார்ப்பதற்கு பாக்கட்டுக்களில் ரொட்டிகள்  [ Breads  ], வெண்ணெய்கட்டிகள் [ cheese [ போன்றவற்றை திணித்துக் கொண்டு  வயல்வெளிக்குச் சென்றேன். " - என இசையமைப்பாளர் எட்வர்ட் எல்கர் [ Edward Elgar ] தனது நினைவுக்கு குறிப்பில் எழுதினார். அதுமட்டுமல்ல அவர் இயற்கையை எப்படி ரசித்தார் எனபதை பற்றிய குறிப்பொன்றில்  " trying to write down what the reeds were saying " என “ Severn ஆற்றங்கரையில் உள்ள நாணல்கள் என்ன சொல்கின்றன என்பதை கேட்டு எழுத முனைந்தார்” என குறிப்பிடுகிறது. 

    மேற்காணும் கூற்று இயற்கையில் ஒன்றிய இசை குறித்த ஆழ்ந்த தேடல் பற்றியதாகும்!

    மேல்நாட்டு இசைமேதைகள் நாட்டுப்புறங்களில் பலமணி நேரங்கள் செலவிட்டுத் தங்கள் கலையறிவைப்  பெருக்கினர். மிகச் சாதாரண  குடும்பத்தில் பிறந்த ஹைடேன்[Joseph Haiden ] என்ற புகழ்பெற்ற  சிம்பொனி இசைக்கலைஞர் தனது ஆரம்ப நாட்களில், அவரது குடும்பத்தினராலும், சுற்றத்தாராலும் நாட்டுப்புற இசையினால் ஈர்க்கப்பட்டவர். தனது இசைக்கான மூலங்களை நாட்டுப்புற இசையிலிருந்து பெற்ற அவர்,  ஆஸ்திரிய, கோரேசிய நாட்டு மக்களிசையையும், ஜிப்ஸியின மக்களின் இசையையும் இணைத்துக் கொண்டது மட்டுமல்ல, தனது இசையை மெருகேற்ற ஜிப்ஸி இனக்கலைஞர்களையும் தனது இசைக்குழுவில் இணைத்துக் கொண்டார். அது போலவே பீத்தோவன், ஸ்ட்ராவ்ஸ் போன்ற இசைக்கலைஞர்களின் இயற்கை குறித்த ஆர்வம் மிகப் பிரபலமானது. 

    தமிழில் இயற்கை என்றாலே நாட்டுப்புறம் அல்லது கிராமம்சார் சூழலே முன்னிலைப்படுத்தப்படுகிறது. தமிழ்த் திரைச் சூழலிலும் இக்கருத்தே இசையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இயற்கையுடனும்,மண்ணுடனும், இசையுடனுமான உறவில்  இளையராஜா ஒருவரையே தமிழ் திரையுலமும், ரசிகர்களும் அடையாளப்படுத்தி வருகின்றனர். முக்கியமாக இசைஞானி இளையராஜாவைத் தவிர வேறு எந்த இசையமைப்பாளரும் அவர்கள் பிறந்த மண்ணோடு ஒப்பிட்டு பேசப்பட்டதில்லை.இந்தப்பெருமை வேறெந்த  இசைக்கலைஞர்களும்  இதுவரை பெறாத ஒன்றாகும்.  

    இளையராஜா அன்னக்கிளி படத்தில் அறிமுகமாகி, அக்கதைக்கு ஏற்ப கிராமிய இசையைக் கொடுத்ததும், அப்பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்து, மக்கள் கொண்டாடியதாலும் அவரை ஒரு கிராமத்தவன் என்றே பலரும் அடையாளப்படுத்தி வந்தனர்.

    இசையமைப்பாளர் என்பவர் தான் பங்களிக்கும் திரைக்கதைக்கு ஏற்ப இசை வழங்குவர். தொடர்ச்சியாக கிராமியக்கதைகளுக்கு இசை வழங்கியதால் அவருக்கு கிராமியம் நிலம், மண்சார்ந்த இசைதான் வரும் என்ற முத்திரையும் குத்தப்பட்டிருந்தார்.

    தமிழ்ச்சினிமா வரலாற்றில் அன்னக்கிளி [ 1976 ].இசையில் பெரு வெற்றியளித்த திரைப்படம். அவ்வெற்றி தமிழ் திரைப்பட இசையின் போக்கையும், கதையமைப்பின் போக்கையும் மாற்றியமைத்தது. கிராமீயக்கதைகள், கிராமியமக்களின் மனோபாவங்கள், வட்டாரவழக்குகள்  பாடுபொருளாகின. அதைத்தொடர்ந்து பலநூறு திரைப்படங்கள் கிராமிய சூழலைக்   கொண்டு வெளியாயின. அன்னக்கிளி படத்தின் பாடல்கள் தமிழ்மண்ணின் வாசத்தை இந்தியா எங்கும் கொண்டு சென்றது. ஏற்கனவே ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பையாநாயுடு ,கே.வி.மகாதேவன். விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்றோர் நாட்டுப்புறம் சார்ந்த பாடல்களை ஆங்காங்கே தந்தாலும் அன்னக்கிளி மண்ணுக்கேயுரிய நிஜமான வாசத்தைக் கொடுத்து மிகப்பெரிய மாறுதலைக் காண்பித்தது.

    தமிழ் மண்ணின் மணம் வீசுகின்ற, மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வில் கேட்டுப் பழகிய இசையை, அதுவரை இல்லாத வகையில் திரையில் மக்கள் கேட்ட போது மிகப் பெரிய அதிர்வலைகளாயின. மக்கள் அந்த இசையைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.      

    தமிழ் சினிமாவில் மரபிலும், புதுமையிலும் தனக்கென ஓர் தனிச் சிறப்பான இடம் பிடித்து வியக்க வைத்தவ இளையராஜா,  இசையின் பல்வேறு பரிமாணங்களிலும் தனித்தன்மை காட்டியதுடன் வியக்க வைக்கும் தனது படைப்புத்திறனால் இந்திய திரையிசையில் ஒப்புவமையற்ற இசையை படைத்து இசைபற்றிய ஆச்சர்யமான வியப்பை, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து வந்த காலங்களில் இவர் படைத்த இசை, தமிழுக்கு மட்டுமல்ல, இதுவரை வழங்கிவந்த இந்திய திரையிசைக்கே புதியதாக அமைந்தது. இவரின்  வாத்திய இசை என்று அறியப்பட்ட ஒகஸ்ட்ரா [ Orchestra Music ] இசை தமிழுக்கு மிகப்புதுமையான, சிம்பொனி இசையின் கூறுகளைக் கொண்ட இசையாக இருந்தது. அதுவரை மேலைத்தேய இசைவடிவமான சிம்பொனி இசைசார்ந்த அமைப்பைக் கொண்ட முழுமையான  இசை ஒன்று தமிழில் மட்டுமல்ல, வேறு எந்த இந்திய சினிமாவிலும்  தோன்றியிருக்கவில்லை. இளையராஜாவுக்கு முன்பே இந்த வகை இசையில் ஓரளவு பரீட்சாத்தமான முயற்சிகளை செய்தவர் புகழ்பெற்ற இசையமைப்பாளரான சலீல் சௌத்ரி!

    பெரும்பாலும் ஆங்கிலக்கல்வி கற்றவர்களாலும், மேல்வர்க்கத்தினராலும் இசைத்தட்டுகளிலேயே ரசிக்கப்பட்ட இசை என்பதாகவே Symphony இசை இருந்து வந்தது. 1950களில் நடிகை பானுமதி மூலம் அதை கேட்டனுபவித்த சி.ஆர்.சுப்பராமன், எஸ்.ஹனுமந்தராவ் போன்ற சில இசையமைப்பாளர்கள் அதன் சில துளிகளை தங்கள் பாடல்களில் பல்லவியாக வைத்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் மிக, மிக அபூர்வமாக சில படங்களில் பின்னணி இசையாகவும் பயன்படுத்திக் கொண்டனர்.  அப்பொருளில் 1950களின் தமிழ் திரைப்படங்களில் வாத்திய இசையின் சேர்க்கைகளில் புதிய மாறுதல்களை உருவாக்கியவர்கள் இவர்களே !

    மேலைத்தேய இசையில் ஒலிக்குறிப்புகள் எழுதப்படும் முறையை பயின்றதுடன், அந்த இசையை தன்வயப்படுத்தி அதனுடன் தமிழ்ச்செவ்வியலிசையையும், நாட்டார் இசையையும் கலந்து  எழிலும், இனிமையும் மிக்க, அபூர்வ கவித்துவமிக்க இசையைக் கொடுத்ததுடன்  பரந்த உலக இசைப்பார்வையையும் வழங்கினார் இளையராஜா. 

    மேல்நாட்டு செவ்வியலிசைப் புரிதல் மட்டுமல்ல, அது துருத்திக்கொண்டு வெளியே தெரியாத வண்ணம்  இசைரசிகர்களுக்கு புதுவிருந்து படைத்ததுடன், இந்தியசங்கீத விமர்சகர்களை வியக்கவைக்கவும்,  மேட்டிமை வாய்களை அடைக்கவும், சக இசையமைப்பாளர்கள் பலருக்கு இந்த முறை இன்னும்  பிடிபடாமல் நூதனம் காட்டவும், அவர்களை வியக்கவும் வைத்து சாதனை புரிந்துள்ளார்.

    அன்று ஹிந்தித்திரையில் புகழின் உச்சியிலிருந்த ,புகழ் பெற்ற ஆர்.டி.பர்மன் ராஜாவின் இசையை வியந்து கேட்டதுடன், சென்னை வரும் போதெல்லாம் அவரை சந்திப்பதும், அவரது பாடல் ஒலிப்பதிவுகளை நேரில் பார்த்த செய்திகளென்பது விசயமறிந்தவர்களும்  அவரின் இசையின் பால் ஈர்க்கப்பட்டதன் சான்றுகளாகும். அதுமட்டுமல்ல,  செம்மங்குடி, லால்குடி ஜெயராமன், மதுரை சேசகோபாலன் போன்ற தென்னிந்திய வித்துவான்கள் முதல்  ரவி ஷங்கர், ஹரிபிரசாத் சௌராசையா, அஜய் சக்கரவர்த்தி  போன்ற இசைவாணர்களும் அவரை வியந்தது உலகறியும்.  

    இசையில் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ் நாட்டில் இன்றுவரை ஓர் அங்கீகாரம் பெற்ற இசைக்குழு [ State Symphony Orchestra ] என்பது கிடையாது. நாட்டை அரசாள்பவர்களுக்கு அந்த எண்ணமும், அதுபற்றிய விழிப்புணர்வும்  கிடையாது. இசைப்பார்மபரியமான குடும்பத்தில் பிறந்த கலைஞர் கருணாநிதி காலத்தில் கூட ஒரு இசைக்குழு  உருவாக்கப்படவில்லை என்ற நிலையில், அப்படியான ஓர் இசைக்குழு என்பது சினிமாவிலேயே சாத்தியமானது என்பதால் அங்கேயும் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் இசைக்குழு இல்லாத நிலையில், சினிமா இசையமைப்பாளர்கள் தாங்களே, தங்களுக்கான  வாத்தியக்குழுக்களை அமைத்துக் கொண்டு செயற்பட்டனர். 

    இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, ஐரோப்பிய சூழலில் உருவாகி வளர்ந்து உச்சம் பெற்ற வாத்திய இசையின் வளர்ச்சி சிம்போனியாக  இசையில் பூரணம் பெற்றது. அங்கே நடந்த சமூக மாறுதலுக்கான எழுச்சிகளும், புரட்சிகளும்  அதற்கான பின்புலன்களாக இருந்தன. அங்கு ஏற்பட்ட தேசிய எழுச்சிகளின் அடிப்படையாக தேசியம், நிலம் மற்றும்  அதுசார்ந்த இசையின் தேவையையும் உணர்த்தின. நிலத்திற்கான இசை என்ற கருப்பொருள் [ Musical  Concept ] அதன் விளைபொருளாய் உருவானதே! நிலங்கள் சார்ந்த இசைகளும் உருவாகி வளர்ந்தன.

    தமிழ் சூழலில் தமிழ்தேசிய உணர்வு, எழுச்சி  என்பது உருவாக்கிக் கொடுத்திருக்க வேண்டிய நிலம், அது சார்ந்த இசை என்பது தமிழ் செவ்வியல் இசை சார்ந்த “ தமிழிசை “ இயக்கமாக உருவெடுத்திருந்தது.அந்த இயக்கமும் பின்னால் பலவித காரணங்களால்   நீர்த்துப் போனது.  

    இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது,1940 களில் எழுந்த தமிழிசை இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு குறிப்பிட்ட மேல்வர்க்கத்தினரின்  ரசனைக்குரியதாக இருந்த செவ்வியல் இசைசார் “ தமிழிசைஇயக்கம்  “ என்பது பரந்துபட்ட மக்களை இணைக்காத ஓர் இயக்கமாக இருந்த நிலையில்,  முப்பது வருடங்கள் தாண்டி, 1970 களில் இளையராஜாவின் வருகையோடு அது வெகுஜன மக்களின் கொண்டாட்ட இசையாகவும் முழுமையடைந்தது.  

    வெகுமக்களிடம் அதிக செல்வாக்கு செலுத்திய சினிமாவில் இளையராஜா வழங்கிய அந்த இசை, தமிழ்நில உணர்வையும், தமிழ் அடையாளத்தையும், கிராமிய இசையாக கொடுத்த நிலை என்பது வியக்க வைக்கும் ஓர் வரலாற்று [ Historical Phenomenal ] நிகழ்வாகியது! 

    ஐவகை நிலப்பிரிவுகள்,  அதுசார்ந்த காலம்,பொழுதுகளுக்கான இசைகள், வாத்தியக்கருவிகள் என வகைமைப்படுத்தப்பட்ட நீண்ட மரபைக் கொண்ட தமிழ் சூழலில் அந்த மண் சார்ந்த, அதன் மானிடவியல் சார்ந்த இசை என்பதை முதன் முதலில் உணர்த்திய இசையாக இளையராஜாவின் இசை அமைந்தது. 

    பொதுவான தமிழ்நாட்டின் நிலம்சார்ந்த இசையை முன்னிறுத்தியதாக அவரது இசை   அடையாளம் காணப்பட்ட நிலையில்,  தமிழ்நாட்டார் இசை பற்றிய விழிப்புணர்வுகளும் ,  ஏராளமான இசைக்குழுக்களின் உருவாக்கமும் அவரின் வருகைக்குப் பின்னர் பெருகியதிலிருந்து இளையராஜாவின் தாக்கத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். 

    திரைப்பாடல்களில் பாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாட்டையும், அதே பாடல்களிலேயே காட்சித்தன்மை நிறைந்ததாகவும், மனதில் காட்சிகளை தோற்றுவிக்கும்  வகையிலும்   அமைத்து காட்டியது மட்டுமல்ல, தமிழ்திரையின் காட்சிகளுக்கான பின்னணி இசையை வேறுதளத்திற்கு உயர்த்தி இசை அழகியலின்  முழுமையான தரிசனத்தைக் காட்டியவர்  இளையராஜா.

    ஏற்கனவே நன்கு அறியப்பட்டிருந்த வாத்தியங்களில் மறைந்து, புதைந்து கிட்க்கும் ஒலிநயங்களை பின்னிப் பின்னிக் காட்டுவதுடன், குறிப்பிட்டதொரு வாத்தியத்தில் வெளிப்படுத்தக்கூடிய ஒலிக்கான குறிப்புகளை முற்றிலும் புறம்பான வேறு ஒரு வாத்தியத்தில் எழுப்பி மூலம் புதுமையான ஒலிச்சேர்க்கைகளை இழைத்து, இழைத்து ஆழம்மிக்க கவித்துவ காட்சிகள் மனதில் விரியும் வகையில் உந்துதல் மிக்க இசையை வழங்கினார்.   

    இசை என்ற கலை எளிதில் விளக்க முடியாத, இனம் புரியாத வகையில் மனித மனங்களை ஆட்கொள்ளும் அதேவேளையில், அதன் கலைதன்மையால் அது  மற்றக் கலைகளை விட பூடகமானதாக விளங்குகிறது.

    இப்படிப்பட்ட இசை இளையராஜாவாவுக்கு இலகுவாகக் கிடைக்கவில்லை. 

    இயலும், இசையும் போன்ற அருங்கலைகள் வாய்க்கப்பெற்ற ஓர் அண்ணன் [ பாவலர் வரதராஜன் ]  அமைந்த குடும்ப சூழலில் வளர்ந்தவர் இளையராஜா. அவர் மட்டுமல்ல அவரது சகோதரர்களான பாஸ்கர் , கங்கை அமரன் என அவரது சகோதரர்களும் அந்த உரிமையில் பங்கெடுத்து வளர்ந்தவர்கள்.

    இசையைப் பொறுத்தவரையில் அன்றிருந்த கம்யூனிச இயக்கத்தினர் பாவலர் சகோதரர்களின் இசைத்திறனை நன்கு பயன்படுத்திய வேளை, இசைமேடைகளில் அவர்கள் பெற்ற கைதட்டல்களும், பாராட்டுக்களும்  இளையராஜாவுக்கும், சகோதரர்களுக்கும்  இசைத்துறையில் வர வேண்டும் என்ற துணிச்சலையும்  கொடுத்தது. உளமகிழ்ச்சியைத் தரும் வகையில் அவர்கள் இசையை  கண்டதுடன் தாம் வாழ்ந்த சூழலையும் , மனக்கருத்துக்களையும் அவர்களது அண்ணனான பாவலர் வரதராஜன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கவிதைகளை இயற்றி  இசையுடன் பாடும் ஆற்றலையும் கண்டு உந்துதலும், பயிற்சியும் பெற்றனர். அத்தோடு இளையராஜா தனது இளம் பருவத்தில் அனுபவித்த இயற்கை சூழலும், அவருள் தங்கிய இசையும், அனுபவமும் அவரது இசைக்கருவூலங்களின் மூலங்களாயிருந்தன  எனக்கருத்தலாம்!

    இளையராஜா வாழ்ந்த மண்ணும் அதன் அழகிய நில அமைப்புகளும், செழித்த இயற்கை சூழல்களும் ஆழ்மனத்தில் சேர்ந்த அனுபவமும், நாட்டார்  இசையும், அவரது இசையை உயிர்ப்புடன் வைத்திருந்ததையும் அவரது திரையிசை வெளிப்படுத்தியுள்ளன. இயற்கை வனப்பிலும் இசை பற்றிப்படர்ந்த வாழ்விலும் பரந்து  விரிந்த இயற்கையின் விந்தை காட்டும் தோட்டங்களிலும், தோப்புகளிலும், ஓடைகளிலும்  தனது மனதை பறிகொடுத்த இளையராஜா இசையில் பேரீடுபாடு கொண்டது மிக இயல்பானதென்றே எனக்  கருதலாம். தனது ஊர் பற்றியும், இளமைக்காலம் பற்றியும் கூறும் போது இந்த அழகிய ஊரில் எனது கால் படாத இடமே கிடையாது என்றே குறிப்பிடுவார். 

    பூத்த குலுங்கும் பூக்கள், பனிப்புகை படிந்து கிடக்கும் மலைகள், கவிந்து நிற்கும் கானகச்  சூழல்கள், நீரோடைகள் போன்றவை நிறைந்த கிழக்கு மலைத்தொடர்ச்சி  மலைகளின் அடிவாரத்தில் அமைந்த பண்ணைப்புரம் என்ற அழகிய கிராமம் அவரது உள்ளுணர்வுத் தூண்டுதல், உத்வேகம் அளித்த மூல வித்தாகும்!  

    அவர் வாழ்ந்த நிலப்பரப்பின் இயற்கை வண்ணங்களும், இயற்கை ஒலிகளும், மலையும், வாரிக் கொட்டும் இதமான காற்றும், வான்முகட்டில் எழில் ஏற்றும் மேகங்களும், இயற்கை வழங்கிய நாடகப் பின்புலமும் , உழைப்பாளி மக்களின் இன்னிசை ஒலிகளும், இயற்கை உணர்த்தும் நுண்ணறிவும், இயற்கையை ஊடுருவிப் பார்க்கும் மனம் விளையும் ஆர்வமேலீடும் அவற்றை  இசையாகப் பதியும் ஆத்மானுபவத்தை அவருக்குக் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

    இளையராஜாவின் வருகைக்கு முன்னிருந்த இசை என்பது நாடகத்தின் நீட்சியாகவும், கவிவரிகளின் ஆளுகைக்கும், அதனைப் பின்பற்றி செல்வதாகவும் இருந்தது. இது குறித்து பேசும் போது மெல்லிசைமன்னர் தனது மெட்டமைப்பைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.  " பாடல் வரிகளுக்கிடையேயே மெட்டு இருக்கிறது, அதை தொடர்ந்தால் மெட்டு பிறந்து விடும் " என்று பாடல் வரிகளில் இருக்கும் ஓசைநயத்தை பிடித்து அதை இசையாக்குவது , அல்லது சந்தத்தை வைத்து விளையாடுவது, அதற்கு ஓசைகளுடன்  ஊடாடுவது என்ற பொருளிலும் அவர் விளக்கினார்.

    இசை என்றாலே, அது பாடல் தான் என்று சாதாரண ரசிகர்கள் முதல் படித்தவர்கள் வரை நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவித பாமரத்தன்மையை இன்றுவரை நாம் காண்கிறோம் . உண்மையில் இசை என்பது பாடல்வரிகளையும்  தாண்டி செல்வது என்பதே உண்மையாகும்.  

    கவிவரிகள்,  பாடகர்களின் குரல், வாத்தியங்கள்  போன்றவை இசை என்ற பெரிய வட்டத்துக்குள் அடங்குபவை. ஆனால் இளையராஜாவுக்கு முன்னிருந்த காலத்தில் கவிஞர்கள், பாடகர்கள் போன்றவர்கள் ஆளுமை செலுத்தியதால் அவர்களுக்கு ஏற்பவும் இசையமைப்பாளர்கள் அடக்கி வாசிக்க வேண்டிய தேவை இருந்தது. இசையமைப்பாளர்கள் தங்கள் துறைக்கு அப்பாலுள்ளவர்களின் தலையீடுகளால் தமது கற்பனைகளின் சிறகுகள் முறிக்கப்படுவதை சகிக்க நேரிட்டது. இளையராஜாவின் இசை வெற்றி அவரது துறையில் யார் தலையீடுமின்றி பயணிக்க உதவியதுடன் பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் இடம் கொடுத்தது.

    இளையராஜாவின் வருகையோடு ஏற்பட்ட வாத்திய இசைப்பு முறை  மாற்றம் பெற்று,அதன்  பரிமாணம் முழுமையான "இசை" என்ற நோக்கில் பயணிக்கத் தொடங்கிய போது அதன் வீச்சுக்கு ஈடுகொடுக்க  முடியாமால்  கவிஞர்களின் வரிகள் திக்குமுக்காடின. பொதுவான இசையின் தன்மையை அல்லது அதன் பரிமாணத்தை உணராத கவிஞர்கள் மற்றும் சில அசட்டு விமர்சகர்கள் இளையராஜாவின் இசை இரைச்சலாக இருக்கிறது என்று முனகத் தொடங்கினர். 

    பாடல்வரிகளை அடிப்படையாகக் கொண்ட ஒபேரா இசையிலிருந்து வார்த்தைகள் ஏதுமற்ற சிம்பொனி இசை இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே  ஐரோப்பாவில் வளர்ச்சி பெற்றுவிட்டது. 

    ஒலியின்அழகைமொழியின்துணையின்றிதரிசிக்கவைப்பதுஇசை !” எனடி.டி.கிருஷ்ணமாச்சாரிகூறிய இக்கருத்து, இந்தியச் சூழலில் இளையராஜாவுக்குப் பொருந்துமேயன்றி அவரது சமகாலத்தவர்களுக்கன்று. ஏனெனில் அவரது சமகாலத்து முன்னோடிகளாயிருந்த விஸ்வநாதன், மகாதேவன், இன்ன பிறரும் தங்களளவில் சாதனையாளர்களாகவே இருந்த போதிலும் பாடல் என்ற எல்லைக்குள்ளாகவே நடைபயின்றனர். பாடல்களைத் தாண்டி ஒலியின் அழகால்  அருமையான உள்ளக்காட்சிகளை ஆனந்தம் பொங்கும்  ரசம்மிக்க இசையை ராஜாவால் வழங்க முடிந்தது. 

    மேல்நாட்டில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நாட்டார் இசை மிக முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது. சமூக மாற்றங்கள் விரைவாக நிகழ்ந்த பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் நாட்டுப்புற இசையைத்தாண்டியும் வளர்ந்த, ஆஸ்திரியாவை நிலைக்களனாகக் கொண்ட  செவ்வியலிசை மரபு, தனிமரபாகவும், கலாச்சார மேன்மைமிக்கதாகவும் கருதப்பட்ட நிலையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் இசைவல்லுனர்கள்,  செவ்வியல்சார்ந்த இசை நுணுக்கக் கூறுகளை பற்றுக்கோடாகக் கொண்டு அதனுடன் நாட்டார் இசையையும்   கலந்து புதுமை காண விழைந்தனர்.

    அவர்களில், 20ம் நூற்றாண்டைச் சேர்ந்த  ஹங்கேரிய நாட்டுப்புற இசையில் மிகவும் கைதேர்ந்த Bela Bartok என்பவரின் பங்களிப்பே மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.  இவரது அறிய முயற்சியால் ஹங்கேரிய,பல்கேரிய, ரோமானிய,ஸ்லோவாக்கிய நாட்டுப்புற இசைகள் முறையாகத் தொகுக்கப்பட்டன.    

    நாட்டார் இசை பற்றி ஹங்கேரிய இசை மேதை Béla Bartók என்பவர் பின்வருமாறு கூறுகிறார்.

    " நாட்டார் இசையின் முழுமையான அனுகூலங்களை  பெறுபேறுகளை ஒரு இசையமைப்பாளன் அறுவடை செய்ய சிறந்த வழி எது? நாட்டாரிசையின் மொழிவழக்குகளை முழுமையாக தன்மயமாக்கும் அதேவேளை அவற்றையெல்லாம் முழுமையாக மறந்து ,அல்லது உள்வாங்கி தனது இசைமொழியாக்கி விட வேண்டும் ". - Béla Bartók.

    இந்திய இசை அரங்கில் இந்தக்கருத்து இளையராஜாவுக்கே பொருந்தும். அந்தவகையில்  இளையராஜாவே தமிழ்மண்ணின் இசை அடையாளம்!

    தமிழ்திரையில் பாடல்களில் மட்டும் அதிக கவனக் குவிப்பு அமைந்த சூழலில் வாத்திய இசை என்பது பாடலின் இடைவெளியை நிரப்புவதாக கருதப்பட்டு  மூல இசைக்கு சற்று நெருக்கமான இசைச்சேர்ப்பாக இருப்பதே போதுமானது என்றிருந்த பின்னணியில், பாடல்வரிகளுக்கு ஏற்ப வழமையான இசை முறையைக் கடைப்பிடிப்பதே வழி என்ற நிலையில் அன்னக்கிளி படம் வெளியாகியது.

    மண்ணின் மணம் வீசுகின்ற நிஜமான, மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வில் கேட்டுப் பழகிய இசையை அதுவரை இல்லாத வகையில் திரையில் மக்கள் கேட்ட போது மிகப் பெரிய அதிர்வலைகளாயின. மக்கள் அந்த இசையைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.    

    ஒரு சினிமா இசையமைப்பாளர் என்ற ரீதியில் இந்த நிலையை மாற்றிக்காட்ட கிராமியம் சாராத   கதைகளுக்கான இசையையும் தன்னால் கொடுக்க முடியும் என்று தொடர்காலங்களில் நிரூபித்தார்.

    மொழியால் விளக்க முடியாத காட்சிப்படிமங்களை தனது கற்பனைகளுக்கு ஏற்ப விரித்து, இசையால் விரித்து காட்டுவதும், ஒப்பரிய மனித மாண்பை உணர வைப்பதும் கட்டுக்களை மீறிய அவரது இசையின் பாடமாகும்.  புத்துணர்ச்சி பொங்க வைக்கும் அவரின்  எண்ணற்ற இசைக்கோலங்கள் பேரின்பத்தில் இதயம் கரைய வைப்பதுமட்டுமல்ல, கண்ணை மூடிக் கேட்டால் பற்பல காட்சிகளை நம் மனங்களில்  தோன்ற வைத்து காற்றிலேற்றி முடிவற்ற எல்லை நோக்கி நாம் பயணிப்பது போன்ற உணர்வைத் தருவதுமாகும்!.

    புத்துணர்ச்சி பொங்க வைக்கும் அவரது இசை,  இசையின் பழமைப்பண்பில் மெருகேறிய இசை வடிவமாகவும் இந்த நூற்றாண்டே பெருமை கொள்ளும் அளவில் தொன்மை இசையில் காலூன்றி நின்றதுடன், புதுமையில் தோய்ந்ததாகவும் இருந்தது. அவருக்கு முன்னிருந்த தமிழ் சினிமா இசை எந்தக்காலமும்ஹிந்தி திரையிசையின் தாக்கத்திலிருந்து  விடுதலை பெற முடியாது என்ற நிலையில், நீண்ட துயில் நீக்கி புதுமையின் எழிலும் கொண்டு எழுந்ததுடன் மேலைநாட்டு மோகத்திற்கு மாறாக தமிழ் அடையாளத்துடன் பிறந்த புதியவகை  இசையாக  வீரிட்டெழுந்தது.    

    இதனால் என்னாயிற்று என்றால் அன்னக்கிளி பட இசையின் தாக்கத்தால் புதிய மாற்றங்கள் தமிழ்த் திரையுலகில் ஏற்படத் தொடங்கின. கிராமியம் சார்ந்த கதைக்களங்களும்   அவற்றை அற்புதமாகப் படம்பிடிக்கும் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்குமான புதிய கதவுகள் திறந்தன. குறிப்பாக 1980களின் ஆரம்பத்தில் இளைஞர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட தமிழ்ச்   சினிமா நல்ல பரீட்சாத்தமான படங்களைக் கொடுத்து நம்பிக்கையூட்டியது. அதனடிப்படையாக இளையராஜாவின் இசையே இருந்தது. 

    குறிப்பாக பாரதிராஜா,மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்களும், ஒளிப்பதிவில் பாலுமகேந்திரா, நிவாஸ், அசோக்குமார் போன்றோர் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ்ந்தனர். இவர்களின் பரீட்சாத்த முயற்சிகளாக புதிய பாணியில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.  16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை ,நெஞ்சத்தைக்கிள்ளாதே, உதிரிப்பூக்கள், மூடுபனி, ஜானி, நண்டு போன்ற படங்களை உதாரணம் கூறலாம்.

    ஆனாலும் தொடர்ந்த காலங்களில் இவை திடீரென கானல் நீர் போல மறைந்தது போனமை துரதிஷ்டமான ஒன்றாகியது.

    ஆனால் இளையராஜாவின் இசையோ நாளுக்கு நாள்புதிய, புதிய பரிமாணங்களைத் தொட்டுச் சென்றது.  தமிழ்சினிமாவின் வரலாறு காணாத வகையில் ஒரு இசையமைப்பாளர் கதாநாயகர்களுக்கு இணையான, அல்லது  அவர்களையும் மீறிய நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றார். தான் நினைத்ததை எல்லாம், இயக்குனர்கள், நடிகர்களின் தலையீடுகள் இல்லாமல் தனது இசைக்கோர்வைவைகளில்  பரீட்சித்துப் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கினார். 

    அவரது வினோதமான இசைக்கலைப்புகளில் தமிழ்நாட்டு மக்களிசையும், ஐரோப்பிய இசைக்கூறுகளையும் கொண்ட குறிப்பாக மேலைத்தேய இசையின் உச்சம் என்று சொல்லப்படுகின்ற செவ்வியல் இசையான சிம்பொனிசார் இசையையும் ஒன்றிணைத்த ஆழமான , நுட்பமான  இசையாக வெளிப்பட்டன. உலகின் பல்வேறு பிராந்தியங்களின் இசைப்போக்குகள் ஒன்றுகலந்த இசை தமிழ்த் திரையிசையின் போக்கை முற்றுமுழுதாக மாற்றியதுடன், மொழிக்குள் அடங்க மறுக்கும் இசையின் தரிசனத்தையும் காண்பித்தது. இவருக்கு முன்னர்  இத்தன்மைகளைக் கொண்ட இசையாக, ஓரளவு வளர்ச்சி பெற்ற சலீல் சௌத்ரியின் இசையையும் தாண்டிய புனைவாற்றலும், புத்தெழுச்சியுமிக்க இசையாகவும்  உத்வேகமுற்றெழுந்தது.    

    இசையில் புதுமை மட்டுமல்ல, அந்த இசைக்கான, வழமையாக இருந்த செவ்வியல் சார்ந்த மொழிநடையைத் தாண்ட வைத்ததுடன் உள்ளூர் கிராமியநடைகளையும், பாவனைகளையும் உள்வாங்கியதுடன் தனது மதுரை சார்ந்த கிராமிய வட்டார, பேச்சோசைப் பண்பை தமிழ்  சினிமாவுக்கு கொண்டு சேர்த்தவர் இளையராஜா.   . 

    அவரது இப்புதுவகை இசையின் வலிமை மொழியின் வலிமையை குறைத்ததுடன், புதிய இசைமொழி பிரயோகத்தையும், பாடல்களுக்கு  இடையில் வரும் வாத்திய இடை இசையை [ Interludes ] விநோதங்கள் நிறைந்த, அலங்காரங்கள் நிறைந்த கிளர்ச்சியூட்டும் இசையாக்கி பாடலை இந்த இசையுடனேயே சேர்த்துப்பாட வைப்பதும், சில சமயங்களில் அப்படிப்பாட  முடியாத, ஆனாலும் ஒரு தவிர்க்க முடியாத ஈர்ப்பையும், மேடைக்கச்சேரிக்காரர்கள் மிக எளிதாகப் பிரதிபண்ண முடியாத இசைக்கோலங்களாகவும் அமையக்காரணங்களாயின! அதுவரை தமிழ் சினிமாப்பாடல்களில் காணப்படாத அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட இசையாகவும் அவை இருந்தன.  அற்பத்தனமான தமிழ் சினிமாவுக்கு இப்படிப்பட்ட உயர்ந்த இசை என்பதே அதிகம் என்பதே எனது கருத்தாகும்.

    எந்த ஓர் கலையிலும் அலங்காரவேலைப்பாடுகளை வைப்பதென்பது அக்கலைஞர்களின் கைத்திறனையும், கற்பனையாற்றலையும், கலையாற்றலையும் வெளிப்படுத்துவதாக அமையும். இந்த அலங்காரவேலைப்பாடுகள் என்பது வாத்திய இசைகளின் அணிவகுப்பாக அமைக்கப்பட்டதன் வினையாற்றல் என்பது அவரது இசையை அலையலையான காட்சித்தன்மைகளை வெளிக்காட்டும் பேரிசைகளாக வெளிப்பட்டன.

    அதற்கான உந்துதலை மேலைத்தேய செவ்வியல் இசையிலிருந்து இளையராஜா பெற்றார் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் “பராக்” [ Barok ] காலத்து இசை வடிவத்திலிருந்து  பெற்றார் என்பதே உண்மையாகும்.   

    1600  - 1750 வரையான காலப்பகுதியில் ஐரோப்பிய செவ்வியல் இசையில்  தோன்றிய ஒரு இசையின் போக்கை பராக் இசை என்று அழைப்பர். பராக் என்ற இந்த சொல் [ Barroco ] போத்துக்கீச மொழியிலிருந்து கிடைத்தது. இந்த சொல் "Oddly shaped  pearl "  அதாவது விந்தையான வடிவ முத்து என்ற அர்த்தம் பெறுகிறது. 

    மறுமலர்ச்சிக்கு காலத்தில் தோன்றிய  விஞ்ஞானம், ஓவியம், நாடகம் போன்றவற்றின் விசேஷமான மாற்றங்கள் போல இசையிலும் புதுமை ஏற்பட்டது. அக்காலத்தில் வாழ்ந்த  விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், கலைஞர்கள் பெயரை சொன்னாலே அதன் தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம்.  கோப்பர்னிக்கஸ் நிகழ்த்திய வானியல் ஆய்வுகள், அவர் கண்டுபிடித்த தெலஸ்கோப்.  ஓவியர்களில்  ரூபன்ஸ் , ரெம்பிராண்ட்   நாடகத்துறையில் ஷேக்ஸ்பியர், தத்துவத்துறையில் Hobbes , Descartes போன்றவர்களுடன் இசைத்துறையில் Vivaldi , Bach , Handel  போன்ற மிகப்பெரிய ஆளுமைகளை நாம் காண முடியும்.

    இக்கால கட்டத்தின் வளர்ச்சி  என்பது கடல் பயணங்கள் மூலம் புதியதாகக் கண்டு பிடிக்கப்பட்ட நாடுகளும், அங்கிருந்து கிடைத்த பெருஞ் செல்வம்வமும் ஐரோப்பியர் வாழ்வில் என்றுமில்லாத செழுமையைக் கொடுத்தவையுடன் தொடர்புடையது. மேற் சொன்ன கலைகளைப் போலவே கட்டிடக்கலைலும் , தளபாடக் கலையிலும் மிகச் சிறந்த அழகுமிக்க வேலைப்பாடுகளை வெளிப்படுத்தும்  பாடாந்தரங்களும் வளர்ச்சி பெற்றன. ஐரோப்பிய சமுதாயமே புத்துயிர் பெற்றெழுந்த செம்மைக்காலம் என்று கூறலாம்.

    ஐரோப்பிய மறுமலர்ச்சிற்கு கட்டிங் கூறிய இக்காலப்பகுதியில் தோன்ற இசை வடிவமும் மிக அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்ட இசையாகவும் மலர்ந்தது.

    இக்காலத்தில்  இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் இசைக்கலைஞர்கள் சிறப்பான பங்கை ஆற்றினார். இசைத்துறையில் புதிய புதிய முறைகளும், தங்கள் நாடுகளுக்கான தனித்துவங்களை வெளிப்படுத்தும் இசைகளை அமைப்பதிலும் கலைஞர்கள் அதிக ஆர்வம் காட்டினர். Cantata , Concerto , Sonata ,Oratorio போன்ற இசையம்சங்கள் பராக் இசையின் அடையாளங்களாக அமைந்தன.  இவை மட்டுமல்ல வாத்திய அமைப்புகளில் மாற்றங்களும், தொழில்நுட்ப மாற்றங்களும்,புதிய முறைகளில் அரங்க இசை நிகழ்ச்சிகளும் அமைக்கப்படட்டன. 

    வாத்திய ஒலியமைப்புகளில் மிக துல்லியத்தை வெளிக்கொணருவதில் கவனம் அதிகம் காட்டப்பட்டதுடன் ட்ரம்பட் [ Trumpet ] , வயலின் போன்ற இசைக்கருவிகள் பிரபல்யப்படுத்தப்பட்டன. பண்டைய இசையின் சாராம்சங்களை எடுத்துக் கொண்ட அதே நேரத்தில் மெலோடியின் இனிமையிலும், அதற்கிசைவான ஒத்திசைவிலும் [ Harmony  ] அதிக கவனம்செலுத்தப்பட்டது. இவை மட்டுமல்ல ஒப்ரா இசையிலும் கோரஸ் இசையிலும்  மிகப்பெரிய பாய்ச்சல்கள் நிகழ்ந்தன

    ஒருகால [ 1600 ம் நூற்றாண்டு ] கட்டத்தின் இசையாக இருந்தாலும் அதன் ஆழமான  தாக்கம் இருபதாம் நூற்றாண்டின் இசைமேதைகளான  Ralph Vaughan Williams , Igor Stravinsky , Benjamin Britten போன்றோரையும் விட்டுவைக்கவில்லை. அங்கு உருவான இசைவடிவங்களான Oratorio , Concerto போன்றவை இன்றும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றன. 

    அதிக எண்ணிக்கையிலான வாத்தியங்களும் இணைக்கப்பட்டு பரீட்சாத்தமான முயற்சிகள் செய்து பார்க்கப்பட்ட இந்த இசை இயக்கத்தின் நாயகர்களில் முக்கியமானவர்கள் Vivaldi , Johannes Sebastian Bach ஆகியோர். 

    இங்கே குறிப்பிடப்பட்ட  Bach  என்பவரே இளையராஜாவை அதிகம்  கவர்ந்த இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இசையை இளையராஜா எவ்வளவு சுவைத்திருக்கிறார் என்பதை அந்த இசையைத் தனது  இசை ஊற்றுக்களில் ஒன்றாக்கியத்திலிருந்து  நாம் உணரமுடியும். 

    ஜோஹனஸ் பாக் [ Johannes Bach ] இசை பற்றிய தனது பிரமிப்புகளை " சங்கீதக்கனவுகள் " என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளதுடன், அதன் தாக்கத்தை தனது " How To Name It.", " Nothing But  Wind "  போன்ற படைப்புகளிலும் இசைஞானியார் வெளிக்கொணர்த்துள்ளார்.   .   

    ஒன்றுக்கொன்று முரணாக ஒலிக்கும் ஒலிகளை பல குரல்களுடன் இணைத்து விரிவாக்கம் செய்ததுடன் அதில் அலங்கார வேலைகளுக்கும் இடம் கொடுத்து விரிவான இசையை பராக் கால இசையமைப்பாளர்கள் படைத்தார்கள். மிக எளிமையும், இனிமையுமிக்க மெட்டுகளில் விதம் விதமான அசைவுகளை [ Variations ] காண்பிக்கும் முறையின் மூலம்  உள்ளக்கிளர்ச்சிகளை உண்டாக்கும் இசை உருவாக வழியமைத்தனர். இக்கால இசைக்கு முன்பாக இசை என்பது முற்றுமுழுதாக மதம்சார்ந்த ஒன்றாக இருந்த நிலை மாறி மதசார்பற்ற, முற்போக்கான இசையாகவும், இசையமைப்பாளர்களுக்குரிய உரிமம் { Copyrights }  மிக்க இசையாகவும், அரச சபைகளைத் தாண்டி பொதுமக்கள் மத்தியில்  மண்டபங்களில் வாசிக்கும் இசையாகவும்  மாறியதுடன், பொழுது போக்கு இசையின் அடிப்படைகளை அமைத்துக் கொடுத்த  புதிய நிலையையும் எய்தியது. 

    வாத்தியக்குழு [ Orchestra ] என்பது ஒரு நிலையான அமைப்பை பெற்ற இக்காலத்தில் புல்லாங்குழல் , ஓபோஸ் , ரெக்காடர்ஸ் , ட்ரம்பெட் ,கொம்புகள் [ Horns ]  போன்ற இசைக்கருவிகளையும் இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட வாத்தியக்குழுவாக  பெருகியிருந்தது. 

    Bach , Rameau போன்ற இசையமைப்பாளர்கள் அதிகமான இசைப்படைப்புகளை உருவாக்கி சென்றனர். மேலைத்தேய இசை ஓர் புதுநிலை எய்திய இக்காலத்திலேயே, நிலஅமைப்பையும், பருவகால மாற்றங்களையும் இசையில் காண்பிக்க கூடிய  Four Seasons  என்கிற இசைப்படைப்பு Antonio Vivaldi [ 1678 - 1741 ] என்ற இசைக்கலைஞரால் உருவானது. 

    மொத்த இந்திய சினிமாவிலும் அதுவரை பயன்பாட்டிலிருந்த இசைக்கு முற்றிலும் மாறாக இளையராஜா காட்டிய புது இசை என்பது மேற்கூறிய பாரக் கால இசையை அவர் உள்வாங்கியதால் மட்டும் நிகழ்ந்தது அல்ல. 

    தனது கிராமத்தில் தான் அறிந்து வைத்திருந்த நாட்டுப்புற இசை, தமிழ் சினிமா இசை ,      கம்யூனிஸ்ட் கட்சி மேடை இசைநிகழ்ச்சிகள், பின்னர் ஒரு வாத்திய இசைக்கலைஞராக,சி.என்.பாண்டுரங்கன், ஆர்.கோவர்த்தனம்,எம் .எஸ்.விஸ்வநாதன், ஜி.தேவராஜன், வீஜயபாஸ்கர், வி.குமார், வி.தட்க்ஷிணாமூர்த்தி போன்றோரிடமும், இசை  உதவியாளராக சி.என்.பாண்டுரங்கன், ஜி.கே.வெங்கடேஷ் போன்ற  இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய காலத்தில் அவர்களின் இசை தந்த உந்துதல் அல்லது தாக்கம், அவற்றுடன்  தனது கற்பனைகளையும் கலந்து கொடுத்ததே  அதன் சிறப்பியல்பாய் அமைந்தது! 

    பிற்காலத்தில் இசை நிகழ்ச்சிகளில் தனக்கு முன்னோடிகளாக இருந்த இசையமைப்பாளர்கள் பற்றி அவர் வியந்து கூறியதை நாம் அறிவோம். அந்தவகையில் பாரதி தன் முன்னோர்களான வள்ளுவன், இளங்கோ, கம்பன் என வரிப்படுத்தி பெருமைப்படுத்தியது போல தனக்குப் பிடித்த இசைக்கலைஞர்களை இளையராஜாவும் போற்றிவருவது  குறிப்பிடத்தக்கது.அதே வேளையில் மேற்காட்டிய  அவரது  சமகால முன்னோடிகளின் இசையின் தாக்கத்தையும் நாம் காணமுடியும்!  

    ஆனால் இவருக்கு முன்னைய இசையமைப்பாளர்கள் போல ஹிந்தி இசையை மட்டும் பின்பற்றாமல் அல்லது இத்தனை இசையமைப்பாளர்களில் ஒருவரின் இசைப்பாணியை தெரிவு செய்து அதில் தனது கவனத்தை குவிக்காமல், அத்தனை இசைவகைகளின் எல்லைகளை அழித்து அல்லது இராமலிங்க அடிகளார்

    வான்கலந்தமாணிக்கவாசக! நின்வாசகத்தை

    நான்கலந்துபாடுங்கால், நற்கருப்பஞ்சாற்றினிலே

    தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித்தீஞ்ச்சுவைகலந்துஎன்

    ஊன்கலந்து, உயிர்கலந்து, துவட்டாமல்இனிப்பதுவே !  

    என்று பாடியதற்கொப்ப எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, அல்லது அந்தந்த  இசைவகைகளின் எல்லைகளையெல்லாம்  நீக்கி, அவற்றின் உயிராற்றல்களையெல்லாம் தனது கற்பனைகளுடன் கலந்து  காட்டாற்று வெள்ளமென ஒன்றாகப் பாயவிட்டது தான் ராஜா காட்டிய  புதுநெறி !

    இளையராஜாவின் இசையில் எம்.எஸ்.விஸ்வநாதன், ஜி.தேவராஜன்,சலீல் சௌத்ரி, எஸ்.டி.பர்மன், மதன் மோகன், ரோஷன், கல்யாண்ஜி ஆனந்த்ஜி, விஜயபாஸ்கர், வி.தட்க்ஷிணாமூர்த்தி போன்ற 1970களில் உச்சத்திலிருந்த பலரின் இசையம்சங்களின் சாயைகளை,பாதிப்பை நாம் காண முடியும்! ஏன் அதற்கு முற்பட்ட 1950,1960களின் இசையின் தாக்கத்ததையும் காண முடியும்.

    தன்னைவிட வயதில்  மூத்தவர்களின் அல்லது முன்னோடிகளின் இசைக்கூறுகளை  எங்கனம் கையாண்டார் என்பதும் அதன் விளைவாய் உணடான புதுமையும் கவனம் பெறுகிறது. இதனால் தான் அவர் தனது சமகாலத்தது இசையமைப்பாளர்களை விடவும், ஏன் தனது முன்னோடிகளை விட ஈடிணைற்றவராகவும் விளங்க முடிந்துள்ளது.

    மேற்கூறியவர்களின் இசைகளின் இசை இழைகளைக் கொண்டு தனது பாடல்களில் இயற்கை, காட்சித்தன்மைமிக்கவையாக வெளிப்படும் வகையில் அமைத்ததோடு , யாரும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாத வண்ணம்  பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக, அவற்றைச்  சரியான விகிதங்களில் பயன்படுத்தி  வெற்றி பெற்றார். 

    தொடக்ககாலத்தில் அவரது இசை, தமிழ் நிலம் சார்ந்த, கிராமியக் காட்சித்தன்மைகளை பாடல்களில் வெளிக் கொண்டு வந்தாலும் நாளடைவில் பொதுவாக எல்லாப் பாடல்களிலும் காட்சித்தன்மை விரியும்படியான இசை விரிவாக்கம் பெற்றதையும் நாம் காண்கிறோம். அவை திரைப்படங்களின் எவ்வகையான சூழ்நிலைகளுக்கு இசையமைக்கப்பட்டாலும் அவற்றில் கூட காட்சித்தன்மை நிறைந்தவையாகவே இருந்தன. 

    எந்தவகை இசைசார்ந்த [  நாட்டுப்புறம் - நகர்சார் ] இசையானாலும், எந்தவகை வாத்திய [ இந்திய - மேலைத்தேய ] கருவிகளின் வாத்திய இசையானாலும், அல்லது அவற்றின் கலைவைகளானாலும்  அவற்றில் கூட காட்சி த்தனமையை இளையராஜாவால் கொடுத்துவிட முடிகிறது!   

    இது எங்ஙனம் சாத்தியம் என்ற வியப்பு  அவரது படைப்பாற்றலின் மிகப்பெரிய ஆச்சர்யமான ரகசியம் என்றே எண்ணத் தோன்றுகிறது. இசையில் காட்சித்தன்மையை வெகு இயல்பாக, தெளிந்த நீரோட்டமாக எவ்வாறு அவரால் கொடுக்க முடிந்தது  என்பதும்  திரை இசையின் எல்லைகளை விஞ்சியவை என்பதும் இதுவரை யாராலும் கற்பனையே செய்து பார்க்க முடியாதவையாகவுமே உள்ளன என்பதால் இது மனித மூளையின் விசித்திரங்களில் ஒன்று என்றே சமாதானம் கூற முடிகிறது!

    அநேகமாக எல்லாப்பாடல்களிலும் காட்சித்தன்மை வெளிப்படும் வண்ணம் இசையைத் தந்தார் என்பதை விளக்குவது எளிதான காரியமன்று.மேலைத்தேய செவ்வியல் இசையில், அதன் வாத்திய அமைப்பில் அக்கூறுகள் [ காட்சித்தன்மை ] இயல்பாக இருப்பதை கொஞ்சம் வலியுறுத்திக் கூற முனைந்தாலும் ஏனைய இசைவகைகளுக்கு மேலைச் செவ்வியலிசையை தலைமைதாங்க வைத்ததன் மூலமே காட்சித் தன்மையை கொண்டுவர ராஜாவால் முடிந்தது எனலாம்.  

    அவரது பாடல்களில் ஒலித்தன்மை என்பது உள்ளத்தில் எளிதாக எதையும் பதிகிற தன்மையைக் கொண்டதுடன், காட்சித்தன்மைகளையும் இணைத்துத் தருவதுடன் , அவற்றுக்குள் நம்மையும் அழைத்துச் செல்வதற்கும், ஆழமான அர்த்தங்களையும் தேடத்  தூண்டுவதற்குகான காரணம் ஒலியின் கவிதை [ Tone - Poem ] என்று அழைக்கப்படுகின்ற சிம்பொனி [ Symphony ] இசையின் பொறியியலை அவர் கையாண்டதன் வெற்றியே ஆகும்.

    நயமான, நுண்ணிதான பின்னணி இசையில் வெளிப்படும் காட்சித்தன்மை கேட்பவர்களின் மனநிலைகளுக்கேற்றவைகளாக, அவர்களும் தாமே கற்பனை செய்யும் வண்ணம்  அமைந்து விடுவதால்  கேட்கக் கேட்க ஆழ்ந்த ரசனைமிக்க  நுண்ணனுபவ எல்லையற்ற விரிவுகளாய் அவரது பாடல்கள்  அமைகின்றன. 

    குளிர் நிலவு, நீரில் மிதக்கும் நிலவு, மாலையில் மறையும் சூரியன், இரவில் ஒளிரும் விண்மீன்கள், தெளிந்த நீலவானம், பனிப்புகை, அடர்ந்த காடுகள், மலைகள், பச்சைப்புல்வெளிகள், காற்றில் அலையும் நெற்கதிகளின் அழகு, குளிர்காற்று,  மழை மெல்லப்பொழியும் ஓசை. நீரலைகளில் தெறிக்கும் ஒளி, நீரோடையின் சலசலசலப்பு, அடர்மழையின் சுகம், காற்றில் அலையும் மழை நீர் , மலையில் மிதக்கும் கருமேகங்கள்,தேனீக்களின் ரீங்காரம், விந்தையான காட்சிவெளிகள், தூசுமணம், புழுதிக்காற்று,, நீரலைகளில் மிதக்கும்  ஒளிநெளிவு, கடல், கரை வந்து போகும் அலைகள், தண்ணீரில் ஊறிய கடற்கரையின் கண்ணாடித்தன்மை, அதில் சூரியனின் தெறிப்பு, அவை மட்டுமா பாடல்களில் திருவிழா, கோயில் சுற்றாடல், நகர்சார் காட்சிகள் என இன்னும் இங்கே எழுத்தில் சொல்ல முடியாத எண்ணற்ற பல காட்சிகளின் கூறுகளை நாம் கூறிச் செல்லலாம். 

    இளையராஜாவின் இப்படியான படைப்பாற்றலுக்கு நாம் தேவைற்ற அநேக வியாக்கியானங்கள் கொடுப்பதைவிட “ இயற்கை “ [ Nature ] என்ற புகழ் பெற்ற கட்டுரையை எழுதிய  எமர்சனின் கருத்துடன் இணைத்துப் பார்ப்பது  பொருத்தமாகும். அவர் கூறுவார் ,   

    The lover of nature is he whose inward and

    outward senses are still truly adjusted to each other - Ralph Waldo Emerson

    இயற்கை ரசனையில்  யார் ஒருவனின்  உள்புலனும் , வெளிப்புலனும் சமாக ஒத்து போகிறதோ அவனே இயற்கையின் காதலன் ஆகிறான், என்றார் இயற்கை [ Nature } என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய Ralph Waldo Emerson. 

    இக்கருத்து இயற்கையை உள்ளார்ந்து ரசிப்பவர்களுக்கு பொருந்துகிறதோ இல்லையோ இளையராஜாவின் இசையைக் கேட்பவர்கள் மிக எளிதாக, மிக இயல்பாகவே உணர்ந்து கொள்வர். அதிலும் சிறப்பாக இளையராஜா இசையுடன் பயணம் செய்யும் போது இக்கருத்து  மிக இயல்பாகப் பொருந்துகிறது.

    நினைவுகளை மீட்டி தருவதற்கு இசையைவிட சிறந்த சாதனம் எதுவும் இருக்க முடியாது. அது போலவே பயணம் செய்பவர்களுக்கும் உற்ற தோழனை இருப்பதும் இசையே. ஊர் விட்டு ஊர் செல்லும் நாடோடி மக்கள் இசையுடன் இயைபுடையவர்களாகவும் , ஒத்திசைந்தவர்களாகவும், பெரும்பாலும் அவர்களே இசைக்கலைஞர்களாக இருப்பதையும்  உலகெங்கும் நாம் காண்கிறோம். பிற மக்களுடன் எளிதாக பழகுவதற்கு இசை உதவக்கூடிய சாதனமாக விளங்குவதால் ஒரு வாத்தியம் வாசித்துப் பாடுவதன் மூலம் அந்நியமானவர்களிடம் கூட ஓரளவு இணக்கத்தை எளிதில் ஏற்படுத்த முடிகிறது.தமிழ் சூழலில் பல்வேறு நிலங்களில் பயணம் செய்த நாடோடி மக்களான பாணர்கள் இசைவல்லனுராக இருந்ததும் பண்பாட்டு  ஒருங்கிணைப்பாளர்களாகவும்  விளங்கினர் என்பதையும் நமது பழைய இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

    காட்சிகளைக் காண வைக்கும் பயணம் என்பது மனதுக்கு இதமானது. அதை இசையுடன் இணைத்து  செய்வதால்  இன்னும் அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது. அதனாலேயே ,இயல்பாகவே பலவிதமான காட்சிகளை மனதில் எழவைக்கும் இளையராஜாவின் இசை பயணத்திற்கு  மிகச் சிறப்பாகப் பொருந்துகிறது! திரைப்பட இயக்குனர் மனோபாலா ஒருமுறை இளையராஜா இசை பற்றிக் கூறியதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகும். அவர் கூறுவார்,

    " நாங்க சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை காரில் பயணம் செய்வதாக இருந்தால் ராஜாவின் இசையைக் கேட்டுக்கொண்டே மிக இலகுவாக, எவ்வித களையுமில்லாமல் திரும்பி விடுவோம். அவர் பாட்டைக்  கேட்பதற்காகவே பயணம் செய்யலாம். காருக்கு பெட்ரோல் இருக்கிறதை விட இளையராஜாவின் பாடல்கள் இருக்கிறதா என்று தான் பார்ப்போம்.”.

    இளையராஜா இசையின் உந்துதலுக்கு முன்மாதிரியாக பராக் இசையின் ஜீவசத்துக்களை தனது வசமாக்கிக் கொண்டதுடன் தமிழ் நாட்டுப்புற , செவ்வியல் ராகங்களின் கட்டமைதிகளைப் புத்தாக்கம் செய்தது மட்டுமல்ல நவீன நாகரீகத்தின் விளைவாக உருவான தன் காலத்து நவீன இசைக்கருவியான சிந்தசைஸர் போன்ற கருவிகளின் அளவான பயன்பாட்டையும், மரபுரீதியான தமிழசினிமாக்களில் பயன்படுத்தப்பட்டு வந்த அதேவாத்தியங்களையும் இணைத்து இனியதும், நல்லதுமான இசைக்கோர்வைகளை தந்து பாரதியின் கூற்றுக்கொப்ப தனது இசைத்திறத்தாலே தமிழ் சினிமா இசையைப் பாலித்திடச் செய்தார். 

    இளையராஜாவின் இத்தகைய  காட்சித்தன்மை மிகுந்த பாடல்களை படமாக்குவதில் பெரும்பான்மையான திரைப்பட இயக்குனர்கள் தோல்வி அடைந்தார்கள் என்பதையே நாம் காண்கிறோம். வண்ணப்பப்படங்களுக்கே வண்ணம் பூசுவது போலவும் அமைந்த அவரது இசை, பல வண்ணவிரிவுகள் கலந்த  வைரத் தெறிப்புகளாக மனதில் தோன்றுவதால், அதற்கீடாக  திரையில் ஒளிரும்  காட்சிகள் நம்மை சோர்வடையச் செய்து விடுகின்றன. இதன் காரணமாகவே  ஒலிவடிவில் அதிமான மக்கள் மனதில் அவரது பாடல்கள் மிக இலகுவாக உறைகின்றன. 

    மனதை அள்ளும்  இந்த வகை இசையின் படைப்பாற்றலுக்கு நாம் பொதுவான விளக்கத்தைக் கூறினாலும் அவரும்  இவை பற்றி அதிகம் பேசியதில்லை. ஆனால் தனது பாடல்கள் எப்படிக் காட்சிப்படுத்தப்பட உள்ளது  என்பதை பாடல்களைக் கேட்டு வாங்கும் பட இயக்குனர்கள் எவ்விதமெல்லாம் விளக்குவார்கள் என்பதை பற்றி ஓரளவு பேசியிருக்கிறார்!

    தங்கள் திரைபடங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டியங்கும் தமிழ் திரைத்துறையினரின் காட்சி அமைப்பு பற்றிய அக்கறை குறித்து   ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தனது அனுபவத்தை பின்வருமாறு கூறுகிறார்.

    " தனது படத்தின் [ ஹேய் ராம் ] பின்னணி இசைக்காக Symphony Orchestra விற்க்குகாகத் 

    திரு.கமலஹாசன் அவர்கள் எந்தெந்த நாட்டிலோ தொடர்பு கொண்டு தகவல் சேகரித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னததை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில், நான் வேலை செய்த ஆரம்பப் படங்களிலிருந்து - ஒரு பாடல் காட்சிக்கு டைரெக்ட்ர் Situations சொல்லும் போது இதை காஷ்மீர் Valley யில் இமயத்தின் பின்னணியில் படமாக்கப்போகிறோம் Beautiful and wonderful location ..Different costumes - என்றெல்லாம் சொல்லி டியூனைப் பிரமாதமாக கம்போஸ் செய்ய வைத்து Record செய்து விடுவார்கள். Dance ரிகசல் முடித்து சூட்டிங் நெருங்கும் போது லொகேஷன் ஊட்டியாக மாறிவிடும். அப்புறம் - ஊட்டி - விஜயா கார்டானாகவோ - VGP ஆகவோ மாறிவிடும். படங்களில் இதை பார்த்துப் பார்த்து பழகிப் போய்விட்டதால் கமலவர்கள் Symphony Orchestra விற்கு முயற்சி செய்த போது நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

     "அன்னக்கிளி உன்னைத் தேடுதே "  என்ற பாடலின் சிட்டுவேஷன் சொன்ன போது, பாடல் காட்சியில் ஆற்றில் அலை வருவதாக சொல்லப்பட்டது, நான் மிகவும் கஷ்டப்பட்டு அலையை வெளிப்படுத்தும் வகையில் பின்னணி இசையை அமைத்தேன் ; படத்தில் ஆறு தான் வந்தது அலை இல்லை " என முதல் படமான அன்னக்கிளி  படத்தில் நிகழ்ந்த சம்பவத்தை ஒருமுறை ராஜா கூறியிருந்தார்.

    இளையராஜாவின் காட்சித்தன்மைமிக்க இசை  பற்றி பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்  ஒரு இசைநிகழ்ச்சியின் மத்தியில் பின்வருமாறு விளக்கினார். 

    “ இளையராஜா ஏன் ஒரு படத்தை டைரக்ட் பண்ண மாட்டேங்கிறாரு என்பது புரியவில்லை!

    பாட்டும் ஆகஸ்டரைசேஷனும் வேறு வேறாக இருக்காது.அந்த ஆகஸ்ட்ரேஷனை கேட்க்கும் பொது அவர் நினைத்த ஒரு  Scene நம்ம கண் முன்னாலே தெரியும். நிறையப்பேர் அழகாக எடுத்திருப்பாங்க. ஆனா, நிறையப்பேர் அதை அழகாகவே எடுக்கல, நிச்சயமாகச்  சொல்லலாம்!

    I Could feel  அவர் கண்மூடிக்கிட்டு தான் notes எழுதுறார் என்று நினைக்கிறேன். He is imagining a

    situation such a beautiful  Nature . இந்தமாதிரி ஒரு totalலா ஒரு Instrumentation - Orchestration , இந்த இரண்டிக்கும் என்ன வித்தியாசம் என்று நீங்க கேட்கலாம்.  Orchestration என்பது harmony எல்லாம் சேர்த்து எழுதுவார். Instrumentation என்பது எந்த Instrument  என்ன ரேஞ் என்பது நிறையப்பேருக்குத்  தெரியாது.இப்போ எந்தமாதிரி, நானும் மியூசிக் கம்போஸ் பண்ணறேன், நான் Background கம்போஸ் பண்ணும் போது நான் பாடிக்காட்டுறேன், ஒரு Assistant எழுதுறாரு, அதை Harmonize பண்ணுவாரு, பாடும் போது செனாய்  வாத்தியம் என்றால் அதுக்கு ஒரு bit பாட்டு பாடுவேன், ஒரு சுருதியிலே particular notes வரும் அதுக்கு அப்பாலே அவங்களால்  வாசிக்க முடியாது! 

    ஆனா இளையராஜா கம்போஸ் பண்ணும் போது என்னென்ன Instrument க்கு என்னென்ன ரேஞ் இருக்குன்னு perfect ஆ அவருக்குத் தெரியும்! வயலின் section  எந்த note எப்படி bow பண்ணனும்  என்று கூட சொல்லுவாரு. அவருடை ரெக்கோர்டிங்க்ல போய் பார்த்த யூனிபோர்மா இருக்கும். அதைக் கூட எழுதுவார். ஒரு நோட் அதில்  எப்படி Bow பண்ணனும் என்றும் எப்படி சவுண்ட் வரும் என்றும்  சொல்லுவாரு... அந்தமாதிரி ஒரு Full Fledged Composer .அந்தமாதிரி கிடைப்பது ரொம்பக்கஷ்டம்.! “

    இளையராஜாவின் எண்ணற்ற இசை பேரின்பத்தில் இதயம் கரைந்து போவது மட்டுமல்ல மொழியால் உருக்கொள்ளவே முடியாத பற்பல காட்சிகள் பரந்து விரிந்து காற்றிலேறி முடிவின்றி மேற்சென்று முடிவற்ற / நித்திய  எல்லை நோக்கி போய்க்கொண்டேயிருக்கும்.

    திரைக்கதைக்கு தேவையான சொற்களை போர்த்திய உணர்ச்சி மிகு கவிதைகளுக்கு அல்லது பாடல்வரிகளுக்கு  அதன் உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான  இசை வழங்கியதுடன், அவற்றையும் தாண்டி , அவ்வுணர்ச்சிகளுடன்,  சொல்லுக்குள் அடங்காத மனக்காட்சி வெளிப்பாடுகளைத் தோற்றுவிக்கும் இசையையும் வழங்கியமையே வியப்புக்குரியது.

    இவ்விதமாக பாடல்களில் காட்சி வெளிப்படும் வகையில் அமைந்த பாடல்களை அவர் இசையமைத்த ஒவ்வொரு படங்களிலும் நாம் காணக்கக்கூடியதாக இருந்தாலும் அவற்றில் ஒரு சில பாடல்களை [ அதுவே நீண்ட பட்டியலாக  இருந்தாலும் ]  இங்கே தருவது பொருத்தமாகும். வேறு பல பாடல்கள் இங்கே விடுபட்டு இருக்கலாம்.

    01  அன்னக்கிளி உன்னை தேடுதே - அன்னக்கிளி 1976  - எஸ்.ஜானகி - இசை :இளையராஜா. 

    02  கண்டேன் எங்கும்- காற்றினிலே வரும் கீதம்  - எஸ்.ஜானகி - இசை :இளையராஜா. 

    03  ஒருவானவில் போலெ - காற்றினிலே வரும் கீதம் - ஜெயசந்திரன் + எஸ்.ஜானகி 

    04  தாலாட்டுதே வானம் - கடலமீன்கள்  - ஜெயசந்திரன்  + ஜானகி   - இசை :இளையராஜா. 

    05  குயிலே கவிக்குயிலே - கவிக்குயில்- எஸ்.ஜானகி - இசை :இளையராஜா. 

    06  எங்கும் நிறைந்த   - இது எப்படி இருக்கு - ஜேசுதாஸ் + ஜானகி   - இசை :இளையராஜா. 

    07  சின்ன கண்ணன் அழைக்கிறான் - கவிக்குயில்   - பாலமுரளி   - இசை :இளையராஜா.

    08  செந்தாழம் பூவில்    - முள்ளும் மலரும்   - ஜேசுதாஸ்   - இசை :இளையராஜா

    09  சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் - இளையராஜா + எஸ்.ஜானகி :இளையராஜா. 

    10  செவ்வரளி  தோட்டத்திலே - பகவதிபுரம் ரயில்வே கேட் - இளையராஜா + உமாராமணன் 

    11  விழியில் விழுந்து - அலைகள் ஓய்வதில்லை - இளையராஜா + சசிரேகா 

    12  புத்தம் புதுக்காலை - அலைகள் ஓய்வதில்லை - எஸ்.ஜானகி - இசை :இளையராஜா. 

    13  ஆயிரம் தாமரை - அலைகள் ஓய்வதில்லை  - எஸ்.பி.பி + எஸ்.ஜானகி -இசை :இளையராஜா. 

    14  பருவமே புதிய பாடல் - நெஞ்சத்தைக் கிள்ளாதே  - எஸ்.பி.பி + எஸ்.ஜானகி - இளையராஜா.

    15  என் வானிலே  - ஜானி   - ஜென்சி  - இசை :இளையராஜா. 

    16  காற்றில் எந்தன் கீதம் - ஜானி   - ஜென்சி  - இசை :இளையராஜா.

    17  வான் மேகங்களே   - புதிய வார்ப்புகள்  - ஜென்சி  - இசை :இளையராஜா.

    18  பொன்மலை பொழுது - நிழல்கள் - எஸ்.பி.பி  -  இசை :இளையராஜா.

    19  பூங்கதவே  - நிழல்கள் - தீபன் சக்கரவர்த்தி + உமா ரமணன் -  இசை :இளையராஜா. 

    20  ஹேய் ஓராயிரம் - மீண்டும் கோகோலா - எஸ்பிபி - இசை இளையராஜா 

    21  பொன் வானம் பன்னீர்  - இன்று நீ நாளை நான்  - எஸ்.ஜானகி  -  இசை :இளையராஜா.

    22  இரு பறவைகள்  - நிறம் மாறாத பூக்கள்   - ஜென்சி    - இசை :இளையராஜா. 

    23  அடி பெண்ணே   - முள்ளும் மலரும்   - ஜென்சி     - இசை :இளையராஜா. 

    24  சோலைக்குயிலே  - பொண்ணு ஊருக்கு புதுசு - சைலஜா  - இசை :இளையராஜா.

    25  மலர்களில் ஆடும் இளமை  - கல்யாணராமன் - சைலஜா  - இசை :இளையராஜா.

    26  தெய்வீக ராகம்  - உல்லாசப்பறவைகள்  - ஜென்சி   -  இசை :இளையராஜா.

    27  மேகம் கருக்கையிலே  - வைதேகி காத்திருந்தாள் - இளையராஜா + உமா- இசை 

    28  ராதா ராதா - மீண்டும் கோகிலா  - எஸ்.பி.பி + ஜானகி   - இசை :இளையராஜா. 

    29  இளமை எனும் பூங்காற்று - பக்லில் ஒருஇரவு   - எஸ்.பி.பி  - இசை :இளையராஜா. 

    30  என்னுள்ளிலெங்கோ  - ரோசாப்பூ ரவிக்கைக்காரி   - வாணி    - இசை :இளையராஜா. 

    31  நதியோரம்  - அன்னை ஓர் ஆலயம்   - எஸ்.பி.பி + சுசீலா   - இசை :இளையராஜா. 

    32  கோயில் மணி ஓசைதனை  - கிழக்கே போகும் ரயில்   - வாசு  + ஜானகி   - இசை 

    33  ராசாத்தி உன்னை  - வைதேகி காத்திருந்தாள் - ஜெயசந்திரன் - இசை :இளையராஜா. 

    34  இதயம்  போகுதே   - புதிய வரப்புகள்  - ஜென்சி  -  இசை :இளையராஜா. 

    35  தேவனின் கோவில்  - அறுவடை நாள்  - சித்ரா    - இசை :இளையராஜா. 

    36  பிள்ளை நிலா   - நீங்கள் கேட்டவை  - எஸ்.ஜானகி  -  இசை :இளையராஜா.

    37  ஒரு ஜீவன் அழைத்தது  - கீதாஞ்சலி  - இளையராஜா + சித்ரா  -  இசை :இளையராஜா.

    38  சீர் கொண்டுவா   - நான் பாடும் பாடல்  - எஸ்.பி.பி. + ஜானகி  - இசை :இளையராஜா. 

    39  பாடும் வானம்பாடி    - நான் பாடும் பாடல்  - எஸ்.பி.பி.   - இசை :இளையராஜா.

    40  நிலவொன்று கண்டேன்   - கைராசிக்காரன்  - எஸ்.பி.பி. + ஜானகி    - இசை :இளையராஜா.

    41  பாடு நிலாவே   - உதய கீதம்  - எஸ்.பி.பி. + ஜானகி  - இசை :இளையராஜா.

    42  உன்னை காணும் நேரம் - உன்னை நான் சந்தித்தேன் - ஜேசுதாஸ் + வாணி -  இசை 

    43  ஏதோ நினைவுகள் - நான் பாடும் பாடல்  - ஜேசுதாஸ் + சைலஜா   - இசை :இளையராஜா. 

    44  உன்னை காணும் நேரம் - உன்னை நான் சந்தித்தேன் - ஜேசுதாஸ் + வாணி -  இசை :

    45  தென்றல் வந்து    - தென்றலே என்னைத் தொடு- ஜேசுதாஸ் + ஜானகி  -  இசை :இளையராஜா. 

    46  தென்றல் வரும் தெரு    - சிறையில் சில ராகங்கள் - ஜேசுதாஸ் + சித்ரா   -  இசை 

    47  சின்னக்குயில் பாடும்  - பூவே பூ சூடவா  - சித்ரா    - இசை :இளையராஜா. 

    48  பூங்காற்று திரும்புமா  - முதல் மரியாதை - வாசு + ஜானகி  - இசை :இளையராஜா.

    49  ராசாவே உன்னை நம்பி  - முதல் மரியாதை -  ஜானகி  - இசை :இளையராஜா.

    50  குயிலே குயிலே  - ஆண்பாவம்  -  வாசு + சித்ரா   - இசை :இளையராஜா.

    51  ஆனந்த தென் சிந்தும்   - ஆண்பாவம்  -  வாசு + சித்ரா   - இசை :இளையராஜா.

    52  காதல் மயக்கம்  - புதுமைப்பெண்   -  ஜெயசந்திரன்  + சுனந்தா   - இசை :இளையராஜா.

    53  போவோமா  - சின்னத்தம்பி   - எஸ்.பி.பி + சுவர்ணலதா   - இசை :இளையராஜா. 

    54  மலையில் யாரோ   - சத்ரியன்  - சுவர்ணலதா  - இசை :இளையராஜா.

    55  மணியே மணிக்குயிலே   - நாடோடி தென்றல் -  மனோ  +ஜானகி  - இசை :இளையராஜா.

    56  யாரும் விளையாடும்   - நாடோடி தென்றல் -  மனோ + சித்ரா   - இசை :இளையராஜா.

    57  இள  நெஞ்சே வா  - வண்ண விண்ணப் பூக்கள்  -  ஜேசுதாஸ்    - இசை :இளையராஜா.

    58  என்னை தொட்டு - உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்  -  எஸ்பிபி   + சுவர்ணலதா  - 

    59  வெள்ளிக் கொலுசுமணி - பொங்கிவரும் காவேரி  -  அருண்மொழி   + சித்ரா  - 

    60  பச்சை மலை பூவு - கிழக்கு வாசல்  -  எஸ்பிபி   - இசை :இளையராஜா.

    61  மலையாள கரையோரம்  - ராஜாதி ராஜா  -  மனோ  - இசை :இளையராஜா.

    62  உன்னை காணாமல் நானேது  - கவிதை பாடும் அலைகள் - அருண்மொழி + சித்ரா  - இசை :இளையராஜா.

    ஒவ்வொரு பாடல்களிலும் உள்ள சிறப்பை பற்றி எழுத இங்கே இடமில்லை.

    ஹிந்தி, தமிழ் திரையிசையின் நீண்ட மெல்லிசைப்பரம்பரையின் தொடர்ச்சியாக இளையராஜா வந்த போதிலும் அவர்களை விஞ்சிய இசை நுட்பமும், கலையுணர்வுமிக்க புதிய இசைவடிவம் ஒன்றை கண்டடைய  அவரால்  முடிந்தது. அத்தனையுமே அவரது  முன்னோடிகள் பயன்படுத்திய அதே பழைய வாத்தியங்களையே பயன்படுத்திக் கொண்டதுமான ஆச்சர்யத்தையும் வியப்புடன் பார்க்கிறோம். 

    அதைக்கேட்டாலே, அது “யாருடைய இசை” என எளிதில் அடையாளம் காணக்கூடிய தனித்தன்மைமிக்க இனிய இசையாக விளங்கியதும், வேறு யாரவது பிரதி பண்ண முடியாத செய் நேர்த்தியும், கலாமேதைமையுமிக்க இசையாகவும் இருக்கிறது.  

    இயற்கை- நிலம் - இசை என்ற இம்மூன்றும் ஒன்று கலந்த வடிவம் தான் இளையராஜா ! 

    [ தொடரும்.]

    [அடுத்தபாகத்துடன் இத்தொடர் நிறைவு பெறும் .]

    Postad



    You must be logged in to post a comment Login