Recent Comments

    இயற்கை – நிலம் – இசை : 16

    T.சௌந்தர்

    ஹிந்தி, வங்காள, மலையாளசினிமாவில்நிலமும்இசையும் :

    ஐரோப்பாவில் சினிமா அறிமுகமாகிய ஒரு  சில வருடங்களிலேயே இந்தியாவிலும் சினிமா தயாரிப்பு ஆரம்பமாகிவிட்டது. ஐரோப்பிய சினிமா யதார்த்தவாதப் போக்கில் வளர, இந்திய சினிமா மிகைப்படுத்தல் மற்றும்  இயற்கைக்குப் பொருந்தாக புராண கற்பனைகளில் மரபு, பண்பாடு என்று சொல்லி அதில் தன்னைக் கரைத்துக் கொள்ள ஆரம்பித்தது.

    ஒரு கதையை சொல்லும் சினிமா, அது சார்ந்த நிலப்பரப்பில் நிகழ்கிறது என்றாலும் அந்த வழி செல்லாமல், மிகையுணர்ச்சிகளைக் காட்டியும், நீண்ட வசனங்களை பேசியும், பழைய மரபாக பேணப்பட்ட நாடகத்தின் மறுபதிப்பே சினிமா என்னும் ஒரு போக்கை இந்திய சினிமா பின்பற்றியது. நாடகத்தில் பாடல்கள் இடம்பெற்றது போலவே சினிமாவிலும் அது வெளிப்பட்டது. இதன் விளைவாக இசை என்பது பாடல் என்றாகியது. இதன் தொடர்ச்சியாக  இந்திய சினிமாக்களில்  இசை என்றால் அது பாடல்கள் என்றே கருதப்பட்டது. 1930 களில் தொடங்கிய இந்திய சினிமா 1950 களின் நடுப்பகுதி வரை பாடல் தவிர்ந்த பின்னணி இசை பற்றிய விழிப்புணர்வு அற்றிருந்தது. கதாநாயகன்- நாயகி அழுதால் அழவும், சிரித்தால் வாத்தியங்களில் அழுவதும், சிரிப்பதுவுமே பின்னணி இசை என கருதப்பட்டது. ஐரோப்பிய, அமெரிக்க சினிமாவைப்போல பின்னணி இசையின் முக்கியத்துவம உணரப்படவில்லை.  

    மதத்தை இலட்சியமாகவும், வாழ்க்கை நெறியாகவும் வைத்துக் கொண்ட இந்திய சமூகம் எந்தவிதமான புதுமைகளையும், மாற்றங்களையும்  உள்ளே புகவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தமையே இதற்கான காரணம் என்று கூறலாம். பழந்தமிழ் இலக்கியங்களில் பல வாத்தியங்கள் ஒன்றிணைந்து இசைப்பதை பல்லியம் [ Orchestra ] என்றழைத்தனர். அந்த மரபு பலநூறு ஆண்டுகளாக மறக்கடிக்கப்பட்டதுடன், மதம்சார்ந்து இசையும் அமுக்கப்பட்டதால் நீண்ட மரபின் தொடர்சி  அறுந்து போயிருந்தது. பல வாத்தியங்கள் சேர்ந்து இசைப்பது என்பது ஐரோப்பியர் வருகையுடன் இந்தியா வந்தடைந்தது. ஆனாலும் அதற்கான பயிற்சசி பெற்ற இசைக்கலைஞர்கள் இந்தியாவில் இல்லாமல் இருந்தது.

    இந்திய - தமிழ் இசை மரபில் வாத்தியங்களுக்கான தனியே இசையோ அல்லது இசைக்குறிப்புகளோ கிடையாது எனபதும் பாடல்களையே வாத்தியங்களில் இசைக்கும் முறையே பின்பற்றப்பட்டு வந்தது இன்றும் தொடர்கிறது. வீணைக்கோ, குழலுக்கோ தனியே இசை அமைப்புகள் இன்றுவரை கிடையாது என்பதே இதற்கு சான்றாகும்.

    பெரும்பாலான ஹிந்தி படங்களில் மட்டுமல்ல பொதுவாக எல்லா மொழிகளிலும் இயற்கை, நிலம் சார் உணர்வுகளை பாடல்வரிகள் மூலமே அதனுடனிணனைந்த இசைப்பாடலாக வெளிப்படுத்தினர்

    நிலமை இவ்விதம் இருந்த போதும், கதைக்கேற்ப  காட்சிகளின் முக்கியத்துவத்தை இந்திய சினிமா உணராமலில்லை என்பதை பல  ஹிந்திப் படங்களில் நாம் காண முடிகிறது.  1940களிலும் 1950களிலும் வெளிவந்த படங்களில் நாட்டார் பாடல்களாகவும், பின் பின்னணி இசையின் வளர்ச்சியை  Aan, Mother India, Madhumathi, Ganga Jamuna  போன்ற படங்களையும், பின்  1960களில் வெளிவந்த படங்களிலும் நாம் காண்கிறோம். 

    இந்திய சினிமா என்று இங்கே நாம் குறிப்பிடும் திரைப்படங்கள்  பெரும்பாலானவை வர்த்தக சினிமாக்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக அந்தவகைத் திரைப்படங்களில் தனியே இயற்கை, நிலம் போன்றவரைக் காண்பிக்க அதிக அவகாசம் இருப்பதில்லை. கதையின், கதாப்பாத்திரங்களின் நடிப்பையே பிரதானமாகக் காண்பிக்கும் இவ்வகைச் சினிமாக்களில் வரும் பாடல் காட்சிகளில் மட்டும் இயற்கையை , நிலத்தை   வெளிப்புறக் காட்சிகளாகக் காண்பிப்பர். பல படங்களில் காட்டப்படும் பாடல் காட்சிகளுக்கும்  கதைக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதுமில்லை. அவை ரசிகர்களைக் கவரும் உத்தியாகவே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவையும் இல்லை என்றால் ரசிகன்  வெளியே போய்விடுவான்.

    தொழிநுட்பத் திறமையிலும், புதுமையிலும் முன்னணியில் நின்ற ஹிந்தி சினிமா, மற்றெந்த இந்திய சினிமாக்களையும் விட மெல்லிசைப்  பாங்கான  இசையிலும் 10 வருடங்கள் முன்னணியில் இருந்தனர். என்றே கூற வேண்டும். ஆனாலும் அவர்களில் தலைசிறந்த இசையமைப்பாளர்களான நௌசாத், அனில்பிஸ்வாஸ், வசந்த் தேசாய் போன்றவர்கள் இருந்தாலும் பின்னணி இசையை சிறப்பாக ஒழுங்குபடுத்தக்கூடிய கலைஞர்கள் இல்லாதிருந்த நிலையில், கோவாவை சேர்ந்த கிறிஸ்தவமத கோயில்களில் இசைக்கலைஞர்களாக விளங்கிய இசை வல்லுநர்கள், வாத்திய இசையை ஒழுங்குபடுத்தும் மேலைத்தேய இசை தெரிந்தவர்களாக அமர்த்தப்பட்டதுமே ஹிந்தி திரை இசை மெருகேற பெரிதும் காரணமாகியது. கோவாவைச்  சேர்ந்த பல இசைக்கலைஞர்கள் ஹிந்தி இசையமைப்பாளர்களின் வாத்திய இசையை ஒழுங்குபடுத்தும் உதவியாளர்களாக [ Arrangers – Conductor ] இருந்தனர்.

    மேலை சினிமாவால் பலவகையிலும் உந்துதல் பெற்ற ஹிந்தி சினிமா, 1950களின் இறுதியில் குறைந்தளவிலேனும் ஒருசில படங்களில் தனியே வாத்திய இசை மூலம் நிலம், காட்சிகளை  வெளிக்கொணர  முயன்றதைக் காணமுடிகிறது. அதில் ஒருசிலவற்றை இங்கே தருகிறேன்.

    படம் :1  Kali Ghata [1951]  Music : Shankar Jaikishan 

    இப்பட பின்னணியில் அழகு மிகுந்த இயற்கைக் இயற்கை காட்சிகளில்  வாத்திய இசையாகவும், பாடலாகவும் இசை பயன்படுத்திருப்பதை காண முடியும். குறிப்பாகபடத்தின் இறுதிக்காட்சியில் நீண்ட இயற்கைக் காட்சியுடன் 10 நிமிட வாத்திய இசையை பின்னணியாகக் கேட்கலாம்.

    படம் :2  Mother India [ 1957 ] Music : Nausad Ali

    மண்ணுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்படும் அதீத நேசத்தையும் வாழ்நிலைகளில் அவற்றின் தவிர்க்கமுடியாத அவசியத்தையும், ஏழைகளாகவும், வஞ்சிக்கப்பட்டவர்களுமான உழைப்பாளி மக்களின் பார்வையில் வாழ்க்கையைச் சிறப்பாக வெளிப்படுத்திய ஹிந்திப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் மதர் இந்தியா [ Mother India 1957  ]. 

    ஒரு வயது முதிர்ந்த பெண் ஒருபிடி மண்ணை எடுத்து முகத்தில் ஒற்றிக் கொள்ளும் உணர்ச்சிமிகு ஆரம்பக்காட்சியுடன் படம் தொடங்குகிறது. அப்பெண்ணின் முகம் க்ளோஸுப்பில்  காண்பிக்கும் வேளையில் பின்னணியில் கவிதைவரிகள் பாடலாக ஒலிக்கும் 

    We sing your praise all throughout Life 

    I Hope I can still reincarnate your responsibility 

    இந்த வரிகளைத் தொடர்ந்து படத்தின் முகப்பு இசை [ Title Music ] , பொதுவாக, பரந்து விரிந்த  இந்திய நிலப்பரப்பை, அதன்  ஐக்கியத்தை  விவரிக்கப் பொருத்தமாக, உந்துசக்தி  ராகமான தேஷ் ராகத்தில் வாத்திய இசையாக விரிகிறது.  

    கண்ணீருடன் ஒருபிடி மண்ணை அள்ளி அம்மூதாட்டி முத்தமிடும் அக்காட்சியின் பின்னணியில், நவீன மாற்றங்களின் அடையாளமாக ட்ரக்ட்டர்கள் உழுவதும், கனரக இயந்திரங்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதும், பாலங்கள், அணைகள் கட்டப்படுவதும் தொடர்காட்சித் தொகுப்பாக விரிகிறது. 

    வாழ்நாள்முழுவதும்உங்கள்புகழ்பாடுகிறோம்

    நீங்கள்செய்ததைநாங்களும்தொடர்வோம்.. 

    மேலே குறிப்பிட்ட  வரிகளுக்கேற்ப, கடின உழைப்பாளியாக வாழ்ந்த அந்த மூதாட்டியை, [ கதாநாயகியை ]  வாழ்த்திப் பாராட்டி , கௌரவிக்கும் வகையில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பாலத்தை திறந்து வைக்க அவளை அழைக்கும் போது அதை ஏற்க மறுக் கிறாள். ஆனாலும் அரச உத்தியோகத்தர்கள், ஊர் பிரமுகர்கள் அவளை வற்புறுத்தி இணங்க வைக்கின்றனர். அவளும் சம்மதிக்க அவள் கழுத்தில் மலை அணிவிக்கப்பட்டு பாலத்தை திறந்து வைக்கிறாள். போடப்பட்ட அந்த மாலையில் உள்ள ஒரு பூவை பிடித்து அதன் வாசனையை முகர்கிறாள். அந்த மலரின் வாசம், அவள் மணப்பெண்ணாக அணிந்திருந்த மாலையை நினைவூட்ட, பழைய நினைவுகளை அது  கிளறுகிறது. கதை பின்னோக்கி நகர்கிறது.

    திருமணமாகி கணவனுடன் பயணிப்பதும், அவனுடன் சேர்ந்து நிலத்தில் கடுமையாக உழைப்பதும், அதனோடிணைந்த குடும்ப, சமூக, கலாச்சார வாழ்க்கையை நிலத்துடன் இணைத்து காட்டும் நிலம்சார் காட்சிகளின் அற்புதத்தையும், அதனுடன் இரண்டறக்கலந்த நவுசாத்தின் இசை, உயிராதாரமான நாட்டுப்புறப் பாடலாகவும், பின்னனணி இசையாகவும், அதனோடு சேர்ந்த இயற்கை ஒலிகளும், இவை எல்லாம் ஒன்றுகலந்த கலவையாக , காட்சிகளில் இயற்கையின் அழகையும், மேகமாக, பயிர்களாக, அதில் கூட்டாக வேலை செய்யும் உழைப்பாளிகளின் முகபாவங்களை நெருக்கமாகவும் [ Close up ] பின்னி,  ஒன்றைவிட்டு ஒன்று பிரியாவண்ணம் பிணைத்துக் காட்டி ஒரு காவியம் படைத்திருக்கிறார்கள்.

    ஓர் தாயின் நில உரிமைக்கான போராட்டத்தை விவரிக்கும் இப்படம் முழுவதும் முக்கியமான இடங்களிலெல்லாம் நிலப்பரப்பின் இயற்கை அழகுகளை காண்பித்து நம்மையும் அக்கிராமத்தின் ஓர் அங்கமாக்கி விடுகின்றனர்.  படத்தின் ஒளிப்பதிவு உத்திகள் சோவியத் திரைப்படங்களில் வரும் காட்சியமைப்புகளை ஒத்ததாக அமைத்து பிரமிக்க வைத்திருக்கின்றார்கள்.

    தமிழில் இத்திரைப்படம் " புண்ணியபூமி " [ 1978 ] என்ற பெயரில் வந்த போது ஹிந்திப்  படம் ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.   

    படம் :3  Madhumadhi [ 1959 ] Music : Salil Chowdry

    ஹிந்தித்திரைப்பட வரலாற்றில் பின்னணி இசையில் தலைசிறந்த படமாக இன்றும் விமர்சகர்களாலும், இசை ரசிகர்களாலும் பாராட்டப்படுகின்ற திரைப்படம் மதுமதி!

    இப்படத்தின் காட்சிகளை முற்றுமுழுதாக மலையும், மலைசார்ந்த இயற்கையில் நீர்வீழ்ச்சி, ஆறுகள் என மிக அழகிய சூழலில் படமாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பாடலிலும் இசையும் அதன் மேற்கத்திய வாத்திய இசைசேர்ப்பும் ,ஒலிநுட்பமும் கேட்போரை அற்புத வியப்புணர்ச்சிக்குள்ளாகும். 

    இரவு நேரத்தில் இரண்டு நண்பர்கள் காட்டில் காரில் பயணம் செய்யும் வேளையில் காலநிலைக் கோளாறால் அருகில் இருக்கும் கிராமம் ஒன்றின் பங்களாவில் தங்க நேர்கிறது. பங்களா சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஓவியம் ஒன்று கதாநாயகனுக்கு  பரீட்சயம் போல  தோன்றுவதைக் காண்கிறான். கூடவே ஒரு இளம்பெண்ணின் அழுகுரல் அவன் காதுக்கு கேட்கிறது. ஓவியத்தின் அருகே சென்று பார்க்கும் போது அந்த ஓவியம் அவன்  வரைந்தது என்ற நினைவு வருகிறது. அவனது நினைவுகளை போலவே கதையும் பின்னோக்கி நகர்கிறது. இந்தக்காட்சியில் மலைவாழ்மக்களின் ஒலிகளும், இயற்கை ஒலிகளும், வாத்திய ஒலிகளும் ஒன்று கலந்து ஒரு தொகுப்பாக காண்பிக்கப்படுகிறது.  கதை பின்னோக்கி நகர்கிறது. 

    மலையில் உள்ள எஸ்டேட் ஒன்றின் மானேஜர் ஆக மலைப்பகுதிக்கு நாயகன் வருகிறான். வரும் வழியில் காணும் மலைகள், நீர்வீழ்ச்சி, ஆறுகளின் ஓட்டம், மரங்களின் அழகு , மலைவாழ் மக்களின் குரவை, இடையர்களின் ஒலிகள்  போன்ற இயற்கையை  இடையூறு செய்யாத காட்சியில் மனதை பறி கொடுக்கிறான். இயற்கை தரும் உற்சாகத்தில் நாயகன் பாடுவதாக  முதல் பாடல் காட்டப்படுகிறது.அப்பாடலில் இயற்கை சூழலையும், எழிலையும் ஒலிகளையும் இசையமைப்பாளர் அற்புதமாக வெளிப்படுத்துகிறார். 

    தொடர்ந்து நாயகன்- நாயகி சந்திப்பு, காதல் வயப்படல் ,  கதையோட்டத்துடனும் இயற்கையில்  விரிந்து கிடக்கும் ஓவியமாக இன்னபிற காட்சிகள் காட்டப்படுகின்றன. கிட்டத்தட்ட தொடர்ச்சியாக ஒருமணி நேரம் கதையின் பின்னணியில் இயற்கை ஒலிகளும், பின்னணி இசையும் ஒன்றை ஒன்று பிரியாத நுணுக்க விவரணையாக, எங்கே இசை வருகிறது; எங்கே இயற்கை ஒலிகள் வருகிறது என்ற பேதத்தை உணராத வண்ணம் பார்ப்பவர்களை மயக்குகிறது இசை !

    மலைவாழ் கதாநாயகியையும், மறுபிறப்பு என்ற கருத்தையும் மையமாகக் கொண்ட இக்கதைக்கு மிகச்சிறந்த பின்னனணி இசையை வழங்கியவர் சலீல் சௌத்ரி. கதையின் களம் மலையும், காடுகளும் சார்ந்த பகுதியில் அமைந்ததால்  அதற்கிசைந்த இயற்கை ஒலிகளும், பின்னணி இசையும், மலைவாழ் மக்களான நேபாளம், அசாம் மக்களின் நாட்டுப்புற இசைவகைகளும், கிழக்கு ஐரோப்பிய மக்களிசையும், அதோடு மேலைத்தேய செவ்வியல் இசை போன்றவற்றைப்  பிரக்ஞை பூர்வமாக கையாண்டு உயிரோட்டமிக்க இசையாக வடித்து தந்தவர் சலீல் சௌத்ரி! படம் முழுவதும் பாடல்களிலும் பின்னணி இசையிலும் மேலைத்தேய செவ்வியலிசையின் ஹார்மோனி நுட் பம்  மிக, மிக அருமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.  

    பார்க்க, பார்க்க தெவிட்டாத காட்சிகளும், இசையும் நெஞ்சை அள்ளும் வண்ணம் அமைந்தபடம்!

    Sujatha [ 1959 ] Music: S.D.Burman

    இப்படத்தில் காதல் வயப்பட்ட நாயகி தோட்டத்திலிருக்கும் மரம்,பூ,  செடி கொடிகளின் அழகை ரசிப்பது போன்றதொரு காட்சியில் வரும் பின்னணி இசையில் எஸ்.டி.பர்மன் அமைத்த வாத்திய இசை பாத்திர உணர்வையும் இடத்தின் சூழ்நிலையையும் குயில் கூவும் ஓசையையும் இணைத்தமை  முக்கியமாக கவனிக்க வைக்க வைக்கிறது. 

    High Noon [1952 ] படத்தில் என்ற Oh My Darling பாடலின் பின்னணியில் அழகு மிகுந்த இயற்கைக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.

     மேலை சினிமாவைப் போலல்லாமல் கதை நிகழும் களத்தை அதன் பின்னணியை வெகு சில படங்களே சிறப்பாக காண்பித்துள்ளன. இந்திய வணிக சினிமாக்களை தாண்டி சத்யஜித்ராய் படங்கள் நிலம்சார் காட்சிகளையும் இசையையும் மிக நுட்பமாக வெளிப்படுத்தின. இத்தகைய பின்னணியில் அவரது முயற்சியைப் பற்றிய சில குறிப்புகளை தருவது பொருத்தமாக இருக்கும்.

    இதனை சத்யஜித் ராய் தனது முதல் படத்திலேயே சாத்தியப்படுத்தியதென்பது பிரமிக்க வைக்கிறது.

    பாதர்பாஞ்சாலி [ 1955 ] - Music : Ravi Shankar

    ஒரு வங்காள பிராமண குடும்பத்தின் வறுமையையும், வாழக்கைப்போராட்டத்தையும் விவரிக்கும் இத்திரைப்படத்தின் நாயகன் சிறுவன் அப்பு. அவன் வளர்ந்து பெரியவனாகும்  கதையை சொல்லும் திரைப்படம். 

    மூன்று பகுதிகளாக வெளிவந்த இத்திரைப்படங்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கும்  , நிலக்காட்சியமைப்புகளுக்கும் இயற்கை ஒலிகளும் , பின்னணி இசையும் மிக அற்புதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    கதை என்பது ஒரு நிலப்பரப்பில் நிகழ்கிறது என்ற ஆழ்ந்த புரிதலுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் பாதர் பாஞ்சாலி. அந்த நிலப்பரப்பும், கதாபாத்திரங்களும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்கவொண்ணாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளது. மனித உணர்வுகளை மிகவும் நுண்ணிய நோக்கில் தொட்டு செல்லும் இத் திரைப்படம், நிகழும் காலத்தையும் ஒவ்வொரு துளித்துளியாக இசையுடனும், இயற்கை ஒலிகளுடனும் இணைந்து உணர்வுநிலையுடன் இயைந்து தருகிறது

    பருவமழைக்காலமும், அதன் முதல் அறிகுறியாக வீட்டு ஜன்னல் கதவுகள் காற்றில் அடிபடுவதும், அப்பு வயல் வெளியில் நடக்கும் காட்சியில் சூழ்ந்து வரும் கறுத்த முகில்களும் , காற்றில் அலையும் தாமரை இலைகளும், குளத்தில் வீழும் நீர்த்துளிகள் எழுப்பும் வளையங்களும், தும்பிப் பூச்சிகளும் என தொடங்கும் கோர்வையான காட்சிகள் கனத்த மழை பொழிவில் நிறைவு பெற்று சிறுமி துர்க்கவும், அவள் தம்பியும் [ அப்பு ] நனையும் காட்சியில் இயற்கையின் அழகையும், வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் எடுத்துக்காட்டுகின்றன. அந்தக்காட்சியில் துர்கா தலை குனிந்து மழையில் நனைந்து  அனுபவிக்கும் காட்சி ஓர் ஓவியம் எனலாம்.

    இந்தக்காட்சியின்  ஆரம்பத்தில் காற்றின் படபடப்புடன் ஆரம்பமாகி, மழை இரைச்சல் மெதுவாக ஆரம்பித்து, அதனுடன் இசை அற்புதமாகக் கலந்திசைக்கும் இசையில் முற்றுமுழுதாக  மனம் பறிகொடுக்க நேர்கிறது. இசையா, காட்சியா என்ற என்ற கேள்வியில் இரண்டும் சரிசமமான அலகுகளை பெறுகின்றன. 

    மிகப்பொருத்தமான ராகத் தெரிவும் காட்சிக்கு கனம் கூட்டுகிறது. குழல் இசையுடன் ஆரம்பிக்கும் தேஷ் ராகத்தின் சாயல் கொண்ட திலக் காமோத் ராகத்தின் நீட்சி, சித்தார் மீட்டலும் பெருகி மழை இரைச்சலுடன் சங்கமித்து அற்புதம் நிகழ்த்துகிறது !  

    அந்தக் காட்சி மட்டுமல்ல, படத்தின் ஒவ்வொரு பிரேமும் மிக நேர்த்தியான முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தை எடுத்த போது சத்யஜித்ரேய் பொருளாதார நெருக்கடிக்குள் இருந்த நிலையிலும் ஆர்வ மிகுதியால் எடுத்து முடித்தார். இதற்குப்பின் படம் எடுப்பதே சாத்தியல்லை என்ற எண்ணத்தில் ஒவ்வொரு பிரேமையும் கவனமாக எடுத்தார் என்பர்.

    ஆனால்  இந்தப் படம் வெளிவந்து உலக அளவில் அவருக்கு பேரையும்   புகழையும் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக மிகுதி இரண்டு பகுதிகளையும் படமாக்கினார்.

    முதல் படமே  [ Pather Panchali ]  கதைக்கேற்ப இயற்கை சூழலில்  படமாக்கப்பட்டது. மிட்டாய் வியாபாரி வரும் காட்சியை  தண்ணீரில் விம்பமாய்க் காட்டுவதிலும், துர்காவும் , அபுவும் ரயில் பார்க்க செல்லும் அழகிய காட்சியும், இருவரும் மழையில் நனையும் காட்சியும் நிலம், காலநிலை, இசை எல்லாமே இணைந்து உயிர்த்துடிப்பை வழங்குகின்றன. அதே போல மாலை மயங்கும் காட்சியும், பின் இரவு வருவது, இரவின் அமைதியில் எங்கோ ரயில் ஓடும் சத்தத்தை அப்பு உற்றுக் கேட்பது போன்ற மிக நுண் கரிசனங்களுடன் படமாக்கப்பட்டும், அது போல  இசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  

    படத்தின்  இரண்டாம் மூன்றாம் பாகங்களிலும் ரயிலுக்கும் அபுவுக்கும் இடையேயான தொடர்பு  ஒன்று தொடர்வதை ரே தவிர்க்க இயலாதபடி உணர்த்தியே செல்கிறார்.

    படத்தின் இரண்டாம் பாகத்தில், துர்காவின் மரணத்திற்கு பின்  அப்புவின் குடும்பம் காசிக்கு செல்கின்றது.  காசியில் தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் தாயின் உறவினர் ஒருவரின் ஊருக்கு அப்புவும் தாயாரும் செல்ல நேரிடுகிறது. இக்காலகட்டத்தில் அப்பு சிறுவனாக இருந்த நிலைமாறி டீனேஜ் பருவநிலையை சித்தரிக்கும் பகுதியாக இது காண்பிக்கப்படுகிறது.

    வளரும் இளைஞனான அப்பு, தாயை விட்டு பிரிந்து கல்கத்தாவிற்கு கல்வி கற்க செல்வதும், அதன் மூலம் தாயின் தனிமையும், மகனுக்கும் தாய்க்குமான இடைவெளி அதிகரிப்பும் என தொடரும் காட்சிகளின் பின்னணிகளில் ரயிலின் ஓசையும் , வெறுமையான காட்சிகளும் பார்ப்பவர்களின் மனநிலையில் தாக்கம் ஏற்படும் வண்ணம் பின்னிப்பிணைத்து காட்டப்படுகின்றது.

    இக்காட்சிகளில் படத்தின் பிரதான இசையின் [ Theme Music   ] பன்முகத்தன்மை அல்லது மாறுபாடுகளுடைய [ Variations ] விதத்தில் இசைக்கப்படுவது பார்ப்பவர் மனதை துளைப்பதாகவே  உள்ளது. இது போன்ற சிறப்பு மிக்க படைப்பாக்கம்  இசையமைப்பாளரும், இயக்குனரும் அணுக்கமான நண்பர்களாக செயல்படும் சந்தர்ப்பங்களிலேயே வாய்க்கபெறும். இயக்குனர் , இசையமைப்பாளர் இருவரின்  உறவின்  பிணைப்பை  இசை கவிதையாக பொழிகிறது. 

    ஒரு எழுத்தாளனாக , கவிஞராக அப்புவை  வெளிப்படுத்தும் முன்றாவது பாகத்தில் எதிர்பாராமல் நெருங்கிய நண்பனின் உறவு பெண் திருமணத்திற்கு நண்பனது கிராமத்திற்கு செல்வதும், அங்கு படகில் பயணிக்கும் போதும் , ஓய்வாக ஆற்றங்கரையில்  உறங்கும் போதும் ஆற்றில் படகோட்டிகள் பாடும் பாடல்களும், இயற்கை சார்ந்த பின்னணியில் ஒலிப்பதாக காண்பிப்பதும் விதந்துரைக்கத் தக்கதாக உள்ளது..  

    அதுமட்டுமல்ல, நடக்க இருந்த திருமணம் குழம்பி, குழப்பமானதோர் சூழ்நிலையில் அப்புவே மணமகனாவதும் நடக்கிறது. முதலிரவுக்காட்சியில், முன்பின் தெரியாத தனது மனைவியிடம்  தனது நிலையை [ தனது வறுமையை, குடும்பத்தில் யாருமில்லாத நிலையை ]  விளக்கும் போது  பின்னணி இசையற்று நிசப்தம் நிலவும் அக்காடசியின் பின்னணியில்,  படகோட்டியின் பாடல் நீண்ட நேரம் ஒலிப்பது  காட்சியின் மிக தீவிரமான அமைதியையும், அதன் பின்னணி முழுமையையும்  நமக்கு உணர்த்துகிறது.

    மணம் மடித்து  கல்கத்தா வருவதும்,  பின் பிள்ளைப்பேறுக்காக தனது  ஊருக்கு சென்ற மனைவியின் மரணச்  செய்திகேட்டு நிலைகுலைந்து போகும் அப்பு, விரக்தியின் உச்சத்திற்கு சென்று , தேசாந்திரியாக அலையும் காட்சியில், இயற்கையின் பலநிலைகள் காட்சிகளாக விரிகின்றன. குறிப்பாக வசந்தகாலத்தைப் பிரதிபலிக்கும் காட்சியில், எழுத்தாளனான , நாயகன் அப்பு, வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களால், விரக்தியின் உச்சநிலையில், தனது  எழுத்துக்களில் அர்த்தமில்லை என்பதை வெளிப்படுத்த, எழுதிய குறிப்புக்களை மலையிலிருந்து வீசியெறியும் காட்சியில்  வரும் புல்லாங்குழல் இசை அவனது சோகத்தையும் , விரக்தியையும் அருமையாக வெளிப்படுத்துகிறது. அது மட்டுமல்ல நீரோடையின் இயற்கை ஒலியும் கனகச்சிதமாகப் பயன்படுத்தப்பட்ட விதம்  சத்யஜித் ரேயின் கலைநுட்பத்திறனையும் அவரது மேதைமையையும்  வெளிப்படுத்துவதுடன் பார்ப்பவர்களை மனம் பறி கொடுக்கவும் வைக்கின்றன. 

    தாகூரின் பாடலையும், ஆங்காங்கே, மிகப்பொருத்தமாக  பின்னணி இசையில் பயன்படுத்தி மிக அருமையான , உணர்ச்சிமயமான இசையை ஒரு சில இயற்கை வாத்தியங்களை வைத்து ரவிஷங்கர் வழங்கியிருப்பது மனத்தைக் கவ்விப்பிணிக்கின்றன.

    இந்திய திரைப்படங்களில் "பாடல் என்றால் பரவசம் " என்றிருந்த நிலையை ஓரளவு மீறி இயற்பண்பியல் சார்ந்த திரைப்படங்களை எடுக்க முனைப்புக் காட்டியவர்கள் வங்காள , மலையாள திரைத்துறையினர் என்றால் மிகையல்ல. இயற்கையைத் "தொடக்கூடிய பொருளாக்கியதில்"  இவ்விரு ப்குதியினரும் முன்னணியில் இருந்தனர்.   இவர்களை பின்பற்றி கன்னட சினிமாவும் முன்னேறி இருந்தது. 

    பாடல்களைத் தாண்டியும் இயல்பாக எடுக்கப்பட்ட திரைப்படங்களை ரசிப்பதற்கு மக்களை பழக்கப்படுத்துவது என்பது மிகக் கடினமான காரியமாக இருந்த நிலையில் மலையாள இடதுசாரி இயக்கத்தினரின் படைப்புகளும், முன்னெடுப்புகளும் பாடல்களிலிருந்து படங்களைச் சற்றே விலக்கி வைத்து பயனுள்ள புதிய ரசனையை  வளர்த்தெடுக்க புதுவழி காட்டினர்.

    மலையாளத்திரைப்படங்கள்:

    கேரளத்தின்  இயற்கை வளம் நிறைந்த  நிலஅமைப்புகள், நீர்வளம், காடுகள், மலைகள், ஆறுகள் என அனைத்தும் கதைகளின் பின்னணியாக காண்பிப்பதற்கேற்ற அழகுப் பெட்டகமாக விளங்கியது. நவீன தொழிநுட்ப சாதனமான சினிமாவுக்கும், கமராவுக்கும் அவை பெரு விருந்தளிப்பனவாக இருந்தன. இயற்கையிலிருந்து பெருமளவு விலகி நின்ற, ஸ்டுடியோக்களின் செயற்கையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த திரைப்படங்கள் போலல்லாமல் வர்த்தக திரைப்படங்களில் கூட கணிசமான அளவு  நிஜமான இயற்கையை மலையாள திரைப்படங்கள் காண்பிக்க முனைந்தன.  

    இயற்கையும் இசையையும் ஒன்றிணைத்து காட்ட தனியே வாத்திய இசையைப் பயன்படுத்தா விட்டாலும், பெரும்பாலும் மற்ற மொழி திரைப்படங்கள் போலவே புல்லாங்குழல் இசையை பெருமளவு மலையாள திரைப்படங்களும் பயன்படுத்திக் கொண்டதுடன் நாட்டுப்பாங்கான இசையையும் [ நாடன்பாட்டுக்கள் ] பயன்படுத்தியது. 

    நாட்டார் பாடல்களில் காணப்பட்ட இயற்கை, நிலம் பற்றிய சொல்லுருவங்களை, அதற்கேற்ற  இசையுருவங்களாக   தமது சக்திக் கேற்ப பழைய திரை இசையமைப்பாளர்களை தாராளமாகக் கையாண்டனர்.

    அழகான இயற்கைக்  காட்சிகளைக் கொண்ட கேரள மண்ணின் பலதரப்பட்ட நிலைகளை அழகியல் நோக்குடன், அவற்றிற்கு கால அவகாசம் கொடுத்து, மெதுவாக  நகரும் காட்சியமைப்புகளாக படமாக்கி காட்சியழகியலை  மலையாள திரைப்படங்கள் வெளிப்படுத்தின.   கதைகளின் தன்மைக்கேற்ப இயற்கைசார் காட்சிகளுக்கு இனிய இசைகளை மக்கள் புரியும் வண்ணம் பொருத்தமான நாட்டுப்புற இசையையும், ராகங்களின் அடிப்படையாக அமைக்கப்பட்ட இனிய மெல்லிசைப்பாடல்களையும்  எல்லோரும் இன்புறத்தக்க வகையில் பாடல்களாக அமைத்துக் காட்டினார்கள். இதற்கு உதாரணமாக கீழே உள்ள இரண்டு பாடல்களைக் கூறலாம். 

    01 மாமலைகளுக்கப்புறத்து - நினமணிஞ்ச கால்பாடு [ 1963 ]  - பி.பி.ஸ்ரீனிவாஸ் - இசை பாபு ராஜ் 02 பவிளக்  குன்னில் பளிங்கு மலையில் - மாயாவி 1965  - ஜானகி  - இசை:பாபுராஜ்  

    அதுபோலவே , நாட்டுப்பற்று, தேசப்பற்று போன்ற தாம் பிறந்த மண்ணின் பெருமைகளைக் குறித்துப் பாடும்பாடல்களை திரைப்படங்களில் வெளிப்படுத்தும் போது பல சமயங்களில் காட்சிப்பண்பு குறைத்துக் காண்பிப்பதும், உணர்ச்சிமேலிட நாயகர் பாடுவது போன்ற பாவனைக்கு  அதிக அழுத்தம்   கொடுப்பதையும் நாம் காணலாம். இதற்கு உதாரணமாக கீழே உள்ள பாடல்களைக் கூறலாம். 

    01 நாழி கேரத்திண்டே - திறக்காத வாதில் 1966 - ஜேசுதாஸ் - இசை: ராகவன் 

    02 சித்திர தோணியில் - காயலும் கயிறும் 1979 - ஜேசுதாஸ் - இசை : கே.வி.மகாதேவன் 

    நில அமைப்பைப் பின்னணியாக வைத்து, அதற்குப் பொருத்தமான இசையையும் இணைத்து மிக இயல்பாக, மனதை வசீகரிக்கும் வண்ணம் அமைக்கப்பட்ட காட்சிக்கு உதாரணமாக பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம். 

    கண்ணாடம்கட்டிமுடிச்சு - முறைப்பொண்ணு [ 1966 ] - குழுவினர் - இசைசிதம்பரநாதன்

    இந்தப்பாடல்  படத்தின்  டைட்டிலில் முழுக்காட்சியாகவும், படத்தின் நாயகன்மார் படகில் வருவதும், அவர்களை வரவேற்க குடும்பத்தவர்கள் கரையில் வந்து நிற்பதுமான அந்த அழகிய நதி சார்ந்த இயற்கைக் காட்சி மிகவும் அமைதியான முறையில் படமாக்கப்பட்டிருப்பது பாடலின் தரத்தையும் காடசியின் சிறப்பையும் போற்றுவதாக வகையிலும் அமைத்திருப்பது எடுத்துக்காட்டான திரை இலக்கணம் எனலாம்.

    இதைப்போலவே செம்மீன் [ 1965 ] படத்திலும் கடல்சார் மக்களின் நாளாந்த வாழ்வை மாறுபடாவண்ணம் மிக இயல்பாகக் காண்பிப்பதற்கு, பின்னணி இசையை குறைத்து மக்களின் அன்றாட பேசசுவழக்கின் மொழியை, அதன் சூழல் சார்ந்த  ஒலிகளை பின்னணியாக  மிகத் திட்டமிடட வகையில் பயன்படுத்தியுள்ளனர் எனலாம். அதுமட்டுமல்ல, கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கேற்ப கடலின் அசைவுகளையும், அதற்கேற்ற இசையைக் குறுகிய,  10 செக்கன்களுக்குள்ளே அமையக்கூடிய  ஒலிக்கீற்றுக்களாகவும் பயன்படுத்தியிருப்பர். 

    மலையாள திரைப்படங்களில் ஒளிப்பதிவில் இயற்கையை மிகவும் சிறப்பாகவும், புதுமையாகவும் காண்பித்த " நெல்லு " [ 1974 ] என்ற திரைப்படம் மிக முக்கியமானது. மலையாளத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான பாலுமகேந்திரா அத்துறையில் சிறப்பாகப் பேசப்பட்டார். பின் ஒளிப்பதிவும் நாயக அந்தஸ்தும் பெற்றது. 

    நெல்லு [ 1974 ] படம் இயற்கையை மிக இயல்பாக அதன் உண்மைத்தன்மை கெடாமல், அன்றிருந்த சினிமாக்களில் காட்டப்படும் குறுகிய நேர, வெகு அவசரமாக அசைவுகளைக்காட்டிய சூழ்நிலையில் அந்நிலையை மாற்றி மெதுவாக நகரும் காட்சிகளாக, குளோசப், மாற்று நீண்ட பரப்பில் நிலங்களைக் காட்டும் உத்திகளையும் நெல்லு [ 1974 ] படம் கையாண்டது. அப்படிப்பட்ட அற்புதமான ஒளிப்பதிவு செய்யப்பட்ட படத்தில் பின்னணி இசை அதிகம் இல்லாமலும், இயற்கை ஒலிகள் அதிகமாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது. படத்தின் இசையமைப்பாளர் ஹிந்திபடமான " மதுமதி " யில் அற்புதமான பின்னணி இசை வழங்கியவரான சலீல் சௌத்திரி யாக இருந்த போதிலும் நெல்லு படத்தில் ஒரு சில பாடல்களில் கதை நிகழும் கதைச்சார்ந்த காட்டு பகுதி மக்களின் தாள அமைப்பையும், இசையையும், இயற்கை ஒலிகளையும் இணைத்த ஓர்  இனிய கலவையாக வழங்கியிருப்பர். அவை ஓரளவு பாடல்களிலும் வெளிப்பட்டன. உதாரணமாக பின்வரும் பாடல்களை கூறமுடியும்.

    நீல பொன்மானே - ஜேசுதாஸ் + மாதுரி 

    காடு குளிரான - ஜெயச்சந்திரன் + மன்னாடே  குழுவினர் 

    காடு குளிரென - பி.சுசீலா 

    பொதுவாக இந்தியத் திரைப்படங்களில் நாயகன் அறிமுகமாகும் காட்சிகளில் தேசம், நாட்டுக்குப்பற்று பற்றிய ஆனந்தக்களிப்பு, வியப்பு, பெருமை பற்றிய பாடல்களும் இடம்பெறுவதை நாம் காணமுடியும். பெரும்பாலான பாடல்கள் வேகமும், விறுவிறுப்பும் இருந்தாலும் அவை காட்சிகளை மனக்கண் முன் நிறுத்தும் வகையில் அமைந்திருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும் அரிதாக ஒரு சில பாடல்களில் நிலம், இயற்கை வனப்பு பற்றிய உணர்வுகளை மனத்திரையில் நிறுத்தும்  வகையில் அமைந்த பாடல்களையும்  காண முடியும். இதற்கு உதாரணமாக கீழ் கண்ட இரண்டு பாடல்களைக் கூறலாம். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் குழலிசையின் அழகு நம்மை காட்சிகளை காண வைக்கும். 

    01 நீலகிரியுடே சகிகளே - பணி தீராத வீடு [ 1973 ]  - ஜெயச்சந்திரன் - இசை விஸ்வநாதன்.

    புதிய கலைவடிவமான சினிமாவில் பல புதுமையும், புத்தாக்கமும் ஏற்பட்ட போதும்,  அதன்  வரம்புக்குள்ளே இயற்கையையும், இசையையும் , மிக மிகக் குறைந்த அளவு வாத்திய இசையிலும் வெளிப்படுத்த முனைந்தாலும், வாத்திய இசையைவிட  பாடல்களே உகந்தது என்ற எண்ணம்  இந்திய திரைப்படங்களில் பொதுவான  போக்காக இருந்தது.

    இயற்கை, நிலம் போன்றவை கவிதைக்குரியனவை என்பது ஒரு  மரபாக வளர்ந்திருந்த நிலையில் , அதற்கு பின் தோன்றிய தன்னுணர்ச்சிப் பாடல்கள் போன்றவற்றையும் திரைப்பட நாயக, நாயகிகளின் உணர்வுகளாக வெளிப்படுத்த எந்தவிதமான கவிதை வரிகளையும் இசைக்குரியதாக மாற்றலாம் என்பதைத்  தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்   நிரூபித்தனர். 

    வாத்திய இசையில் இயற்கையை வெளிப்படுத்துவதை விட பாடல்கள் மூலமாகவே வெளிப்படுத்துவது இலகுவாக இருந்ததென்பதை  1940 கள் தொடக்கம் 1970 கள் வரையில் வெளிவந்த தமிழ் திரைப்படப் பாடல்களும்  நினைவூட்டுகின்றன.  

    அவை எவ்வாறு தமிழ் திரைப்படங்களில் வெளிப்பட்டன  என்பதை பார்ப்போம்.

    [ தொடரும் ]

    Postad



    You must be logged in to post a comment Login