Recent Comments

    வயதிற்கும் அநுபவத்திற்கும் மதிப்பளித்து
    மரியாதை நிமித்தம் தூரத்தே தள்ளி நிற்கும் போதில்
    ஓர் குழந்தையைப் போல் ஓடி வந்து
    இடைவெளியை அழிக்கும் நம் தோழர்

    சுகன்

    பதினைந்து வருட முன் பின்னிருக்கும் கலைச்செல்வனுடன் குணரத்தினராசாவின் கள்ளப் பாஸ்போட்டில் சிலிப்பரேற்றில் கனவான் போல் படுத்திருந்து ஜேர்மன் இலக்கியச் சந்திப்பிற்கு போனதிலிருந்து இன்றைய 32 வது பாரிஸ் சந்திப்பு வரை தோழர் பரா அவர்களைப் பார்ப்பதன் கணத்தில் எனக்கு ஒரு மானசீகமான ஆன்மபலம் வந்து சேர்வதை விபரிப்பது விடுதலையையும் சுதந்திரத்தையும் மாற்றுக் கருத்தின் மகிமையையும் விரித்துரைப்பதற்கு இணையானது.

    ஆசிரியப் பெருந்தகை என்பதன் அர்த்தபூர்வமான எடுத்துரைப்பு என்பது சிறப்பான முன்னுதாரணமான வாழ்க்கைமுறை அறநெறிவாழ்வு வாய்மை சொல்லவரும் விடயதானங்களில் ஆழமான பரிச்சயம் மனோதிடம் உறுதி தன்முனைப்பின்மை கனிவு பொறுமை எனும் பூட்கை இப்படியாக அச்சொல் அனைத்தையும் அள்ளிக் கொண்டு வரும். கல்விப்பெருந்தகை செல்வப் பெருந்தகை என்பதற்கு வேறு வேறு விபரிப்புக்கள் விகுதிப்படும்.

    ஆசிரியப் பெருந்தகையினை ஈரெழுத்திற் சுருக்கினாற் பரா எனப்பாற்படும். இவ்வகையில் நானும் நாங்களும் தோழர் பரா அவர்களுக்கு கற்றுக் குட்டி மாணவர்களே!
    நிறையுடமை நீங்காமை வேண்டின் பொறையுடமை என்று தமிழ் மறையை மேலும் சுருக்கலாம். திருவள்ளுவர் வள வள என்று எழுதுவார் என்றும் ஓர் கருத்துண்டு. மேலும் சுருக்கின் பரா வாகும்.

    உரைக்கின் ஒருவன் தன்னிடமுள்ள நல்ல குணங்கள் தன்னை விட்டு நீங்காதிருக்க வேண்டுமாயின் பொறுமையாக இருந்து பழக வேண்டும். பொறுமை தான் வாழ்வின் உயர்விற்கு வழிகாட்டி.

    அதே நேரத்தில் ஓர் போராளிக்குரிய போர்க்குணாம்சம் அவருடன் ஜீவத்துடிப்பாய் சுவாசமாய் இயக்கமாய் இருந்து கொண்டிருப்பதே அவரின் முழுமை பெற்ற அடையாளம். இஸ்லாத்தில் கமால் என்னும் பரிபூரணத்தன்மை.

    ஓரு இருபதாண்டுகள் புகலிடம் புதிய சிந்தனைகளுக்கும் மாற்றுக் கருத்துக்களினை மதிக்கும் பக்குவத்திற்கும் ஒரு சிலரையாவது தயார்படுத்தி வைத்திருக்கிறதெனின் அது தோழர் பரா அவர்கள் போட்ட அத்திவாரம். அவரின் நுண்ணறிவு இந்த இலக்கியச் சந்திப்பையாவது காப்பாற்றி விட வேண்டும் என்பதில் பெரு வேட்கை கொண்;டு நிற்கிறது.
    மாற்றுக் கருத்துக்கான வெளிகளைத் தமக்கு மட்டுமே உரிமை கோரி அடையாளப்படுத்துவதற்;;கெதிராக பரா தனிமனிதனாக நின்று குரலுயர்த்தியிருக்கிறார். இந்த ஓரு புள்ளியில் மட்டுமே அவர் அழுங்குப் பிடியராக இருந்து வருகிறார். இந்த ஓங்கியொலிக்கும் ஒரேயொரு குரல் அவரை அதிகாரத்தையும் தலைமையையும் காப்பாற்ற விரும்புவராக சிலரைக் கருத வைத்திருக்கிறது.

    இவ்விடயத்தில் தோழர் பரா அவர்களின் விடாக்கண்டத்தனம் மட்டுமெ இவ்விலக்கியச் சந்திப்பைக் காப்பாற்றி வந்துள்ளது.
    அவரின் காரியார்த்தமான உழைப்பும் மதிநுட்பமும் இந்த நிலைக்கு காரணமாக இருந்திருக்கிறது. மாற்றுக் கருத்து என்றால் இலக்கியச் சந்திப்பு என்று நாம் எல்லோரும் கருதுகின்ற நிலைக்கு பலருடைய உழைப்போடு பரா அவர்களின் கடுழியம் முதன்மையானது.
    எழுதப் பேச இருக்கின்ற உரிமைக்கு முதல் எழுதவும் பேசவும் ஊக்கப்படுத்தவும் பத்திரிகையாளர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். படைப்பாளர்கள் எழுதியலாளர்கள் தங்கள் சுதந்திரத்தைப் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலுமே இனங்காண்கிறார்கள்.

    படைப்பாளர்களின் புதியன முயற்சிக்கும் முனைப்பு ஆழுமை பத்திரிகை ஆசிரியர்களினாலேயே காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றது. இவ்வழியில் தாயகம் ஜோர்ஜ் குருசேவ் சிந்தனை பரா இவர்கள் இன்று வரை தனித்துவமானவர்கள். தாயகத்திற்கும் சிந்தனைக்கும் திருப்பி ஏங்கும் நிலைக்கு இதுவே காரணமாகும்.

    எனது படைப்பின் முழுச் சுதந்திரமான மனநிலையை தாயகத்திலும் சிந்தனையிலுமே நான் அநுபவித்திருக்கிறேன்.

    இடதுசாரிச் சிந்தனைகளைப் புகலிடத்தில் பலர் பரப்புரை செய்தனர். ஆனால் கருத்தளவிலும் நடைமுறையிலும் பராவின் வாழ்வியல் அபூர்வமானது. தமிழ்த் தேசிய இனவாத பிரதேச சாதிய அடையாளங்கள் அவரில் கனவிலும் கவிந்ததில்லை.
    சர்வதேசியம் கம்யூனிசம் பேசிய யாழ் உயர் வேளாளர்கள் சாதியம் தலித்தியம் என்று வரும்போது தமது சாதிப் புத்தியை மறைக்க முடியாமல் திணறுவதையும் உளறுவதையும் நாம் பார்த்து வருகிறோம். புகலிடத்தில் தலித் மாற்று விளிம்புநிலை அரசியல் அறிமுகமான காலத்திலிருந்து இன்றுவரை இவற்றின் தனித்துவத்தை அங்கிகரிப்பதிலும் தமிழ்ச்சமூகத்தில் தலித்தின் முதன்மையைப் பேணுவதிலும் ரொஸ்கிய சர்வதேசிய முகாமிலிருந்து வந்த தோழர் பரா காட்டிவரும் கரிசனம் நெகிழ்ச்சியையும் மெய்சிலிர்ப்பையும் கொண்டு வருவது. இதில் ஒரேயொரு தனிமனிதர் அவர். வேட்டை நாய்களுக்கும் உள்ளான் குஞ்சுகளிற்கும் உள்ள இடைவெளி அது. கம்யூனிஸ்டாக இருப்பதற்கான கடைசித் தருணமிது.

    யயாதி தன் மகனிடம் கேட்கிறான் 
    மகனே இவ்வுலகின் சந்தோசங்கள் அனைத்தும் அநுபவித்துத் தீர என்னால் முடியவில்லை.
    உனது இளமையை எனக்குத் தா.

    தோழர் பராவின் எழுபதாவது அகவை பூர்த்தியாகும் இவ்வேளை பரா எனும் என்றும் இளைஞனை நாம் கேட்போம்
    மகனே உனது கௌரவம் பேரன்பு மனிதநேயம் சமத்துவம் இவை எல்லாவற்றையும் எமக்குத்
    தா.
                                                          
     

    Postad



    You must be logged in to post a comment Login