Recent Comments

    கயல்விழி அறிவொளி முன்பள்ளி 

    பூங்கோதை

    தாயகப் பயணத்தின் அனுபவத்திலிருந்து.

    17.04.2022

    முக நூல் வாயிலாக அறிந்த ஒரு சிறந்த  நட்பாக விளங்கும் சகோதரர் ஸ்ரீபதி, அன்று ஒரு நாள்  தனது பதிவொன்றில் தான் உருவாக்கும் கயல்விழி அறிவொளி முன் பள்ளி பற்றிப்  பதிவிட்டிருந்தார்.  அதை அறிந்ததில் பெரும் ஆச்சர்யமும், ஓர் ஆசிரியையாக மிகுந்த ஆர்வமும் கொண்டு அவரைத் தொடர்பு கொண்ட போது  அவர் கூறிய  பல விடயங்கள்  என்னை இன்னும் அதீத ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.

    தான் அந்த முன் பள்ளியைத் தன் மறைந்த அன்பு மனைவியின் நினைவாகக் கட்டியெழுப்புவதாய்க் கூறியது மட்டுமல்ல, மிகுந்த தன்னடக்கத்துடன் தான் எந்தவிதமான பண உதவியையும் எவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ள மாட்டேன் என்பதையும் அழுத்தம் திருத்தமாக  அறிவித்திருந்தார்.

    சகோதரர் அதைக் கூறிய போது அவரது மறைந்த துணைவியாரை நான் இன்னார் என அறிந்திருக்கவில்லையாயினும், தற்போது அவர் யாரெனத் தெரிந்ததில் மனதில் இருந்த வலி இன்னும் அதிகரித்தது. புன்னகை எப்போதும் ததும்பும் முகத்துடன்,  மிகுந்த துடியாட்டத்துடன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து வந்த ஒரு குறும்பும் நட்பும் நிறைந்த பள்ளி மாணவி தான் கயல்விழி என்பதும் அவர்,  எனது அண்ணாவுடைய வகுப்பில் படித்தவர் என்பதும் நினைவில் வந்து போனது.  

    சேமித்த பணத்தை இன்னும் பல மடங்காக்குவதற்காக பல துறைகளில் முதலீடு செய்வது தான் பலருடைய வழக்கமாக இருக்கும் பட்சத்தில் இப்படியாக எந்த வித இலாப நோக்கும் இல்லாது தன் சேமிப்பை சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்த நினைத்த  இவருடைய உயரிய பண்பு எம்மத்தியில்  அருகியே இருந்து வருகிறது.

    இப்பள்ளியின் திறப்பு விழா குறித்த விபரங்களை அறியத் தந்த போது, எதேச்சையாக நானும் தாயகத்தில் இருக்கக்கூடும் என்பது அறிந்து. அங்கு அந்த சிறப்பான நிகழ்வில்  கலந்து கொள்ள வேண்டும் என்கின்ற  ஆவல் மிகுந்தது.  

    முன் பள்ளி திறப்பு விழாவிற்கு மறுநாள் எமது வீட்டிலும் ஒரு மங்கள நிகழ்வு - நூல் வெளியீடு ஒன்று-  ஏற்பாடு செய்ய வேண்டியிருந்ததில் நேரச்சிக்கல் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகரித்திருந்தது.  இருந்த போதிலும் தங்கையின் ஆதரவு இருந்ததில் எப்படியாவது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்காயினும் நாங்கள் இருவரும் இந்த சிறப்பான நிகழ்வில் கலந்து கொள்வது என முடிவாயிற்று.  

    சரியான நேரத்திற்குள் நாம் போய் இறங்கியிருந்தது மகிழ்ச்சியளித்தது என்பதோடு, என்னை நேரில் ஒரு போதும் பார்த்தறியாத சகோதரர் ஸ்ரீபதி, அவ்வளவு முக்கியமான நிகழ்வில், எம்மை ஓடி வந்து வரவேற்றது நெகிழ்ச்சியளித்தது.

    மிகத் திறமையாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்ட முன்பள்ளியாக இது காணப்பட்டதோடு, குழந்தைகள் விளையாடுவதற்கும் பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதற்குமாக  பலவிதமான வசதிகள் இதே பள்ளியுடன் இணைத்துக் கட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடப்பட வேண்டியது.. நிழல் கொடுப்பதற்கும் மைதானத்தை குளிர்மைப் படுத்துவதற்குமாக  மரங்களும் தாவரங்களும் நடப்பட்டு, ஒவ்வொரு பகுதியும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    முன்பள்ளி வளவெங்கும் நலன் விரும்பிகளும்,  நட்புகளும், உறவுகளும், முன்பள்ளிக் குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களுமாக நிறைந்திருந்தது இப்பள்ளியின் வளர்ச்சியில் அத்தனை பேருக்குமிருந்த அக்கறையயைப் பறை சாற்றியிருக்க, கலை நிகழ்ச்சிகளும் ஆசி உரைகளும் அழகாய் அரங்கேறின.   

    வருடத்தில் ஓர் நாள் ஒரேயொரு அன்னதானம் வழங்கியதை வருடம் முழுவதும் பறை சாற்றும் பலர் இருக்க, இந்த சகோதரர் தான் செய்து வரும் நூற்றுக்கணக்கான தர்மங்களையும் சேவைகளையும், வலது கை கொடுப்பதை இடது கை அறியாத வண்ணம் செய்து வருவதை அங்கு மேடையில் பேசிய பல சான்றோர் ஆதாரங்களோடு பகிர்ந்தனர். முக்கியமாக அவரது சேவைகள் வடக்கில் மட்டுமல்லாமல் அம்பாறை உள்ளிட்ட கிழக்கிலும் விஸ்தரிக்கப்பட்டிருப்பதை அறியக்கூடியதாய் இருந்தது.  

    "கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு 

    மாடல்ல மற்றை யவை"  என்ற வள்ளுவனின் வாக்குக்கு அமைய ,  அனைத்து ச் செல்வங்களும் அழிந்து போனாலும் கல்வி மட்டும் காலத்தால் அழியாது என்பது திண்ணம்.  

    கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழையதாய்ப் போனதில், தற்போதைய சமூக நிலை சார்ந்த,  தவிர்க்க முடியாத ஒரு தேவை எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியே.  கல்வி அறிவில்லாத குடிமக்கள் வேறு எந்த செல்வம் சேர்ந்தாலும் அதை தக்க வைத்துக் கொள்ளும் திறனறியாது திணறிப் போவது நாம் அறிந்ததே. பின் தங்கிய கிராமங்களில் அதன் முன்னேற்றம் கருதி இப்படியான தேவை கருதிய சேவையை வழங்கியிருக்கும் சகோதரர் ஸ்ரீபதி, எம் எல்லோருக்கும் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது.

    கயல்விழி அறிவொளி முன்பள்ளி ஸ்தாபகரான, சகோதரர்  ஸ்ரீபதியின் சமூகப்பணி குறித்து மிகப்பெருமையுடனும் நெகிழ்வுடனும் இருந்த என்னை, தங்கை  மெதுவாகத்  தட்டி தன் சிறு விரல் நகத்தைக் காட்டி, " ஸ்ரீபதி அண்ணாவின் சேவைகளோடு பார்க்கும் போது, நானும் நீயும் மற்றவர்களுக்கு செய்வது  இவ்வளவு தான் இருக்கும் போல கிடக்கு!" என்றாள்.

    அவளுக்கு பதில் சொல்ல முடியாததால், அந்த நேரம் பார்த்து எமக்கு வழங்கப்பட்ட பெட்டி  நிறைந்த சிற்றுண்டிகளையும் குளிர்பானத்தையும், மதிய உணவை சாப்பிடாமல் வந்திருந்ததில் ஏங்கியிருந்த  எமது வயிறுகள்  உள்வாங்கிக் கொண்டன.  

    மறைந்த எமது அன்புத்தோழி கயல்விழியின் நினைவாலயத்தில் கல்வி கற்கவிருக்கும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி நல்லபடியாக விருத்தியடைய வேண்டும், அவர்கள் தாம் வாழுகின்ற சமூகத்தை மனித நேயத்தோடு வளர்க்க வேண்டும் , சக மனிதர்களோடு இன, மத, மொழி வேறுபாடின்றி அன்பு செலுத்த வேண்டும்  என்ற வேண்டுதல்களோடு, நிறைந்த மனதுடன்   நாம் இருவரும் விடை பெற்றோம்.

    கயல்விழி அறிவொளி முன்பள்ளிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

    Postad



    You must be logged in to post a comment Login