Recent Comments

    நாவல் எழுதுவதில் எனக்கு விருப்பமே இல்லை….

    க.கலாமோகன்

    தூங்கி முடியமுன் ஓர் கனவு. ஓர் இளம் ஆணின் முகம். வெள்ளைத் தோடுகள் அவனது காதுகளில். அவைகள் இப்போதும்  எனக்குள். அவன் ஓர் சிறிய தொழிலாளி. அழகின் சின்னம். அவனை ஓர் பிஸ்சா கடைக்குள் கண்டேன். இந்த இளையவனின் முகம்  சில வேளைகளில் என் முன் வருகின்றது.

    அலார்ம் சத்தத்தால் விழித்தேன்.  காலை நான்கு முப்பது. 

    மிகவும் காலையில் பாரிஸில் நடப்பது  இனியதே. யாழ்ப்பாணத்தில் நடந்தால் நாய்களின் நினைவுகளோடும் பயத்தோடும் நடக்கவேண்டியிருக்கும். பலவீதிகளில் அங்கு  நான் நடந்தேன், சயிக்கிள்களை வேகமாக ஓட்டினேன். பல நாய்களில் எனக்குப் பரிதாபம் ஏற்பட்டது. வீதியில் உலவும் நாய்களை நாய்பிடிகாரர்கள் பிடித்தார்கள். பிடிக்கப்பட்ட இந்த நாய்களின் கண்ணீர்கள் எனக்குள் எப்போதும். 

    பாரிஸ் வீதிகளில் நான் நடந்த விடியல் தினங்களில்  ஒருபோதுமே நாய்களைக் கண்டதில்லை. இந்த வீதிகள் எப்போதும் அமைதியானவையே. ஆனால் வேறு  வீதிகள் நிச்சயமாகப் பாரிஸ் வீதிகளே இல்லை. லாச்சப்பெல் வீதிகள் நிச்சயமாகத் தமிழ் வீதிகளே. பல புடவைக் கடைகளையும், நகைக் கடைகளையும், வடை மணம் தராத சாப்பாட்டுக் கடைகளையும், சில அமைதியான புத்தகக் கடைகளையும் காணலாம். மாலை வேளைகளில் மது மணத்தைத் தருவன இந்த வீதிகள். கோபவீச்சுகள் சிலரது உருவ அசைவுகளில்  தெரியும். 

    பல ஆண்டுகளின் முன்பு நான் இந்தத்  தேசம் வந்ததால் லாச்சப்பலின் சில bar களை அறிவேன்.  இங்கு வந்தபோது பிரெஞ்சுக் கலாசாரத்தின் பிரதான பொருள் வைன் மது என்பது தெரியவந்தது. சிவப்பும் வெள்ளையும் இதனது நிறங்கள்.   நான் சிவப்பு வைனையே நிறையக் குடித்தேன். இந்த நிறம் எனது அரசியலின் நிறமுமாக இருந்தது. ஆம், எனது இளம் வயதில், யாழ்ப்பாணத்தில், நான் ஓர் கட்சிகளுக்குள்ளும்  செல்லாமல் ஓர் கம்யூனிஸ்டாக இருந்தேன். வெலிங்டன் சினிமா தியேட்டரின் அருகில் ஓர் சீன நூலகம் இருந்தது. அங்கு செல்வதில் மிகவும் விருப்புக் காட்டினேன். 

    தமிழ் நூலகங்களில் நுழைந்தால் பணம் கொடுக்க வேண்டும். 

    தமிழர்கள் நடத்தும் சீன நூலகங்களில்  சீனர்கள் இல்லாதபோதும் நூல்கள் எல்லாம் இலவசம். நான் மா சே துங்கின் நூல்களை வாசித்தபோது, பெரிய தலையைக் கொண்ட இந்தத் தலைவரின் மனைவி எப்படி இருப்பாள் என நினைத்தேன். 

    அவரது தலையைப்போலப்  பெரியதா அல்லது சிறியதா அவளது தலை?

    மீண்டும் ஓர் கனவு. நிச்சயமாக ஓர் சீனக் கனவே. அங்கு நான் ஓர் வயலில். கோவ(ப)ப்பட்டேன். அந்த வயல் நான் தேடிய நிறத்தில் இருக்கவில்லை. அது பச்சை. நான் தேடியது  சிவப்பு. எனது செம் புத்தகங்களில் கண்ட சிவப்புகள் இந்த வயலில் இருக்கவில்லை. கொடிகள் இல்லாத வயலாக இருந்ததால், இதனை எரிக்கவேண்டும் போல இருந்தது. 

    வயலின்  மிகவும் தூரத்தில் நான் ஓர் அசைவக் கண்டேன்.

    அசைவது எது?         

    ஓர் நிலவா? அல்லது ஓர் நட்சத்திரமா? ஓர் கிழவி. ஓர் பெளத்த  முத்திரையைக் கொண்டிருந்தது அவளது முகம். வருகையின் போக்கில் அவள் பெரிதாகினாள். 

    வெள்ளிப் பல்கள் என் முன் சிரித்தன. சில கணங்களின் பின்பு அவள் அழுதாள்….  முகம் அழுதது. ஓர் துளிக் கண்ணீரும் இல்லை. அவள் என்னைக் கடந்து சென்றாள்.

    நான் அவளின்  பின். 

    எனது கால்கள் அவள் பின்னால் நடந்தன. 

    தடுக்கி விழுந்தேன். 

    ஏன்?

    என்னைத் தடுக்கியது எது? 

    ஓர் புத்தகம்.

    விரித்தவுடன் அது ஓர் நாவல் புத்தகமாகத் தெரிந்தது. 

    கால்களது நோவின் கொடூரத்தால் அதனை எறிந்தேன்.

    இப்போதும் அவள் என் முன்னால். வெள்ளைக் கூந்தல் அவதியாகக் கட்டப்பட்டு இருந்தது. அவளது பாதங்களில் செருப்புகள் இல்லை. மீண்டும் அவளது பல்களைப் பார்க்கும் விருப்பம் எனக்குள் பெருகியபோதும், அவள் திரும்பவே இல்லை. முன்னே போகும் வேகத்தில் நான். நாவலால் எனது கால்கள் நோவுப்பட்டு  இருக்கும்போது ஓடுவது இலகுவானதா? அது ஓர் மொத்தமான நாவல். நான் அதனை நிந்தித்தேன். ஓடத் துடிக்கும் வேளைகளில் எனது கால்கள் மிகவும் பெரிதாக நொந்தன… நான் கிழவன் என நினைத்தேன். 

    கிழவர்கள் பலர் மெதுவாக நடக்கின்றனர், வேறு சிலர் விரைவாக. நான் இளம் வயது கொண்டவன். இந்தக் கணத்தில் கிழவனாக, மெதுவாக நடக்கும் கிழவனாக என்று  எனக்குள் நினைப்பு… ஆம்…. நான் நோவின் கைதியாக. 

    கலைந்தது வெள்ளைக் கூந்தல்… . பின் பார்வையில் ஓர் கவர்ச்சித் தேவதையாக அவள்…. வெண்  கூந்தல் ஓர் கிழட்டு நிறமா?

    “கூந்தல்கள் பல நிறங்களைக் கொண்டுள்ளன  …” என நான் பல ஆண்டுகளின் முன்பு மிருகக் காட்சி சாலையில்  உள்ள ஓர் குதிரையிடம் சொன்னேன். 

    அது கத்தியது. அதனது கூந்தல் ஆடும் வேகத்தை ரசித்தேன். மீண்டும் கத்தியது. நான் பல குதிரைகளைப் பார்த்திருந்தேன். நிறையப் பணத்தைத் தேடும் போட்டிக்காகப்  பலர் தேடி ஓடும் குதிரைகளை நான் உண்மையாகப் பார்த்ததில்லை. தொலைக்காட்சிகளில்தான் அவைகளைக் கண்டுள்ளேன். இந்தக் குதிரைகள் ஓடும் இடம் நான் வசிக்கும் இடத்துக்கு அருகில்தான் இருந்தபோதும் நான் ஒருபோதுமே அங்கு செல்லாதது ஓர் வியப்பைத்தான் எனக்குள் தருகின்றது. 

    பாரிசில் பல குதிரைகளைக் காணலாம். இவைகளில் பொலிசார்கள்  இருப்பர். அந்நியர்களைப் பயமுறுத்தும் நோக்கில்தான் இந்தக் குதிரைகளில் பொலிசார்கள் இருந்தாலும், இந்த நீள் மயிர் மிருகங்கள் கவர்ச்சிகரமானதாகத்தான் இருந்தன. பல அந்நியர்களைப்  பசுமை விழிகளுடன் பார்த்ததைப் பலவேளைகளில் கண்டேன்.

    யாழ்ப்பாணத்தில் நான் ஒருபோதுமே குதிரைகளது  இறைச்சிகளை விற்பனை செய்யும் கடைகளைக் கண்டதில்லை… புலிகளின் இறைச்சிகளையும்… எலிகளின் இறைச்சிகளையும்… குரங்குகளினதையும் …  காணவே முடியாது. கொக்குவிலில், எனது அம்மம்மா வீடு சென்றபோது நான் சில எலிகளைச் சாப்பிட்டுள்ளேன். மரக்கறித் தோட்டங்களில் பிடிக்கப்பட்ட எலிகள். 

    “பாரிசில் அனைத்து இறைச்சிகளையும் சாப்பிடலாம். சிலர் மனித இறைச்சிகளைச் சாப்பிட்டு உள்ளனர்”  என எனது முதலாவது வெள்ளை நண்பி என்னிடம் சொன்னபோது…….

    “நீயும் சாப்பிட்டு உள்ளாயா?” என நான் அவளிடம் கேட்டேன்.

    அவளது வெள்ளை உடல் கறுப்பாகியது. 

    “மனித உடல்களின்   சதைகளினது விரும்பியாக நீ என்னைக்  கருதுகின்றாய்…. நீ மோசமானவன்.” எனக் கத்தினாள்.

    “மன்னிக்கவும், நீதான் ‘பாரிசில் அனைத்து இறைச்சிகளையும் சாப்பிடலாம். சிலர் மனித இறைச்சிகளைச் சாப்பிட்டு உள்ளனர்’ என்றதால் இங்கு மனிதர்கள் சாப்பிடப்பட்டார்கள் எனக் கருதுவது தப்பா? 

    “மன்னிக்கவும்,  ஜப்பான்….. எனச் சொல்ல வந்தேன்.”

    “அது  உனது இடமா?”

    “இல்லை, இங்கே ஓர் ஜப்பானியர் சில உடல்களைப் புசித்துள்ளார்…”

    “நிச்சயமாக இவர் ஆயுள் சிறையில் இங்கே இருப்பார்… என நான் நினைக்கின்றேன்…..”

    “இல்லை.”

    “அவர் இறந்து விட்டாரா?”

    “உயிருடன் உள்ளார்.”

    “இங்கேயா?”

    “அங்கே.”

    “அவர் ஜப்பானிய நீதியால் நிச்சயமாக கொல்லப்பட்டு இருப்பார் ….”

    “இல்லை, இல்லை…. அவர் ஓர் நாவலாசியராக இருக்கின்றார்….”

    நான் அவள் முன்  சென்றேன்.

    “நீ மனிதனா?” எனக்  கேட்டபடி ஓர் நாவலை என் முன் தூக்கி எறிந்தாள்…

    மூக்கு உடைந்தது.  நாவலின் மீது சில இரத்தத் துளிகள். விரல்களால் துளிகளை  நீக்கியபடி தலைப்பை வாசித்தேன்.

    “காதல்”.  இது தலைப்பு. 

    இந்த நாவலில் எனக்கு இரக்கம் வந்தது …. அதனில் இருந்த இரத்தத்தால்தான் … அது எனது இரத்தமே. 

    பல தடவைகளில் எனது இரத்தம் பல வழிகளால் வந்தபோதும் அவைகளைத் துடைத்து உள்ளேன். நான் அவைகளை ஒருபோதுமே குடித்ததில்லை.

    இப்போதுதான் நான் எனது இரத்தங்களைக் குடித்து வருகின்றேன். நிச்சயமாக எனக்கு  மனிதச் சதைகளில் விருப்பம் இல்லை. நான் எனது இரத்தம் குடிப்பதற்குக் காரணம் எனது பல் டாக்டரே. 

    பலர் பல்  டாக்டர்களிடம் பயம் கொள்வதுண்டு. நிச்சயமாக எனக்குப் பயமே இல்லை. நான் பலரைச் சந்தித்து உள்ளேன். இவர்கள் அனைவரும் பெண்களே. பலர் அழகிய சிரிப்புகளைக் காட்டுபவர்கள். . காட்டாதோருக்குச் சில பல்கள் இல்லாது இருக்கலாம்.   நான் எனது பல் டாக்டர்கள் மீது எழுதினால் அது நாவல் ஆகும் என்பதனால் எனக்குள் நடுக்கம் வருகின்றது. ஆனால் நிச்சயமாகக் கொஞ்சம் எழுதவேண்டும்.  

    பல தடவைகள்  டாக்டர் டெக்…….  இடம் போய்வந்தேன். ஓர் நடுத்தர வயதுப் பெண். முகத்தில் எப்போதுமே சிரிப்பு இருக்கும். நான் நினைக்கும் பணத்தைக் கேட்காமல் கூட்டியே கேட்பார். கொடுக்கும் பணத்தில் எமது சுகாதார சேவைத்தளம் எவ்வளவைக் கொடுக்கின்றது என எண்ணாமல் டெக்….. இடமே 4 மாதங்களுக்கு ஒரு தடவை செல்வேன். நோவில்லாமல் எனது பல்களைக் கவனிப்பார் என்பதுதான் காரணம்.

    ஓர் தடவை  எனது பல்களை அவர் கழுவியபோது இரத்தம்   சீறியது.

    “வாய் கழுவவேண்டும்”  என்பதை அசைவு மொழியில் சொன்னேன்.

    “இது உனது இரத்தம். இதனால் ஒருபோதும் உனது உடலுக்கு ஆபத்து இல்லை. நீ விழுங்கலாம்” என டெக்…. சொல்லியது எனக்கு விவிலிய மொழியாக விளங்கியது. 

    வயலில் கண்ட வெண்  கூந்தல் உடல் என் நினைவின்  முன். நாம் எமது போலி வாழ்வில் பல உடல்களைக் காண்கின்றோம். சில உடல்கள்தாம் எமது நினைவின் முன் பல தடவைகள் வருவது இல்லையா?  இவைகள் நிச்சயமாக எம்மோடு உரையாடுவன, சிலதுகள் முத்தமிடலாம், வேறு சிலதுகள் சண்டைகள் பிடிக்கலாம். 

    எரித்தல், தாழ்த்தல்.  இவைகள் எமது வாழ்வின் தூசிப் போக்கைக் காட்டுவது அனைத்து உடல்களுக்கும் தெரியுமா? போர்ப்பாடல்களை நிறைய உடல்கள்   ரசிக்கும் ஓர் விபத்து உலகில் நாம். 

    பூவரச மரம். 

    அருகில் செவ்வந்திப் பூக்கள். 

    மல்லிகைப் பூக்களும் அந்த வீதியில். 

    “வணக்கம், நான் காகம். உங்களோடு பேசலாமா?”

    அது உண்மையிலேயே  ஓர் காகம். 

    நிறம் கருப்பு. 

    கையில் ஓர் அழகிய பார்க்கர் பேனா. நான் நடுங்கினேன். பல வேளைகளில் இந்தப் பேனாவில் எனக்கு விருப்பம் இருந்தாலும், எமது குடும்பத்தின் சேமிப்பான வறுமை இதனை வாங்க விடவில்லை. பென்சிலால்தான் எனது எழுத்துகள் நடந்தன. அதன் முன் கையினால்.  தொடக்கத்தில் மண்ணே எனது தாள். 

    ஏன் என்னோடு காகம் பேச வந்தது என்பது எனக்குத் தெரியாது. 

    காகத்தின் இடது கன்னத்தில் ஓர் சிறிய காயத்தைக் கண்டேன். காய்ந்த இரத்தத் துளி எனக்குத் தெரிந்தது.

    “உங்களை ஒருவர் தாக்கி விட்டாரா?”

    “ஆம், தாக்கியவரையும் நான் தாக்கி விட்டேன்…..” 

    “அவருக்கும் காயம் வந்ததா?”

    காகம் என்னை முறைத்துப் பார்த்தது.

    “உங்கள் தாக்குதல் இலகுவானதாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்……”

    “உங்கள் கணிப்பில் தவறு உள்ளது. பலமானது எனது தாக்குதல். நான் அவரை எனது பார்க்கர் பேனாவால்தான் தாக்கினேன்.”

    “பேனாவின் முனை  அவரை ஈட்டிபோலக் குத்தியிருக்குமே?”

    “குத்தும் கலையில்  வல்லவன் நான்…”

    “நீங்கள் பார்க்கர் பேனாக்களை விற்பதுண்டா?”

    “இது உனது நக்கலா?”

    “இல்லை, இல்லை. இப்போதுதான் நான் உங்களை முதல் தடவையாகப் பார்த்து உள்ளேன்.”

    “நீ என்னை வாசிக்கவில்லையா?”

    “இல்லை, மன்னிக்கவும்….”

    “எனது நாவல்கள் உலகின் அனைத்து மொழிகளிலும் வெளிவந்துள்ளன.”

    எனது உடல்  சிறிது வளைந்து நடுங்கியது.

    “ஆபிரிக்க மொழிகளில் உங்களது நூல்கள் மொழிபெயர்ப்பில் இல்லை என நான் நினைக்கின்றேன்….. இந்தக் கண்டத்தின் அனைத்து மொழிகளுக்கும் எழுத்துவடிவம் இல்லை எனலாம்….”

    “ஆபிரிக்கர்களுக்கு பிரெஞ்சு தெரியாதா? ஆங்கிலம் தெரியாதா? போர்த்துக்கல் மொழி தெரியாதா?”

    காகம் பார்க்கரை ஈட்டியாக்கியது………

    எனது உயிரைக் காக்க நான் ஓடினேன். அந்த வேளையில்  மீண்டும் நரைத்த கூந்தல். வீதிகளில் அவள் எதனையோ தேடிக்கொண்டு  உள்ளாள் என்பதுபோல எனக்குப் பட்டது. மீண்டும் ஏன் எனது விழிகளின்முன் இந்தப் பெண்? என்னை மறைமுகமாகக் கண்காணித்து வருகின்றாளா? சில வேளைகளில் இவளுக்குக் காகத்தைத் தெரியுமோ?  அவள் என் முன் திரும்பவில்லை. ஏன் நான் அவளுக்கு முன்னால் செல்லாமல் உள்ளேன்? மீண்டும் பேசவேண்டும் என எனக்குள் விருப்பு. மீண்டும் அவளுடன் பேசினால், நான் அவளுக்கு இடையூறு செய்வதாக அவள் நினைப்பாளா? 

    அந்த வீதியை எனக்குத் தெரியும். தொடக்கத்தில் அதனை “விபச்சாரிகளின் வீதி” எனப் பலரும் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். நிச்சயமாக அங்கே நிறையப் பெண்கள் ஆண்களைக் கவரும் விதத்தில் நின்றதை எனது விழிகள் கண்டுள்ளன. பல நிறத்துப் பெண்கள். அதிகமானோர் சிகரெட் புகைத்தபடி. அந்த வீதியில் பெண்களை மட்டுமா நான் கண்டேன்? சில பூனைகள் ஓடியாடித் தெரிந்தன. பூனைகளுக்கு தாம் அவதியில் சாப்பிடுவதைப் பங்கு செய்தனர் சில விபச்சாரிகள். 

    ஓர் பெண் தனது கையில் இரண்டு பூனைகளுடன் நின்றாள். 

    நான் அவள் முன்.

    “40 ஈரோ” என்றாள். 

    “மன்னிக்கவும், நான் உங்களுடன் உடல் உறவு செய்ய வரவில்லை.”

    சிரித்தாள். 

    “ஏன் நீங்கள் என் முன்?”

    “உங்களது பூனைகள் மிகவும் அழகானவை…”

    “நிச்சயமாக இவைகள் எனது பூனைகள் அல்ல. இவைகள் வீதிகளிலும், சில கட்டிடங்களிலும் வாழ்வன. என்னுடன் ஒருவன் வரும் வேளையில் இவைகளை இந்த வீதியில் விடுவேன்.”

    அவளை விட்டுப் பிரிவது சிரமமானதாக இருந்தது. ஏன் நான் அவளுடன் உடல் உறவு கொள்ள விரும்பினேன் இல்லை? ஆனால் அவளுடன் நிறையப் பேசும் ஆசை வந்தது. எது இந்த ஆசையின் காரணம்?

    நான் திரும்பினேன். அவள் அங்கு இல்லை. காத்திருந்தேன். அவள் தலை மீண்டும் தெரியவே இல்லை.

    நான் எனது அறைக்குத் திரும்பியபோது, ஏன் இந்தப் பக்கங்களை எழுதினேன் எனக் கேட்டேன். சரி நான் ஓர் கதை எழுதுபவனா?

    இது ஓர் கதையா? எனக்கு இது தெரியாததாக இருக்கலாம். தெரிவு தேவையா? நான் நாவல் பரிசு, மன்னிக்கவும் ...நோபல் பரிசுக்குக்காக இந்தக் கதையை எழுதவில்லை.   இது எழுதப்பட்ட தினமும் எனக்குத் தெரியாது. 

    எழுதப்பட்ட தினத்தில் நான்  முழு மழையுள் ஓர் தெரு வீதி வாங்கில் இருந்தேன். 

    எனது எழுத்துகள் மழையின் நிறம் தெரியாத் துளிகளால் மறைந்தன. 

    எழுத்து எதுவாம்?

    துளிகள் என்னைக் கவர்ச்சித்தன. என்னை எப்போதும் கட்டிப்பிடிப்பன துளிகள். இவைகளை நான் எங்கு வாழ்ந்தேனோ அங்கு ரசித்தேன். பலருக்கு சூரியன்தான் பிடிப்பு. சூரியக் காட்டுக்குள்   முத்தமிடப்பட்ட பின்பு நிறைய ஆண்டுகளாக எனது உடல் இந்தக் குளிர் காட்டுக்குள். 

    எல்சா இந்தக் காட்டின் இளவரசி. சரி, நான்தான் இளவரசி என்கின்றேன். உடல் ரசிப்பின் போதையில் நாம் “அரண்மனைகளுள்”  வாழுகின்றோம் என்பது தவறா? இந்த வாழ்வு ஓர் தினமாக இருக்கலாம், பல தினங்களாகவும்….. சிலவேளைகளில் ஆயுள் வரையும்….. 

    சில தினங்களே எல்சா எனது இளவரசியாக இருந்தாள். எனக்கும் அவளுக்கும் முடிகள் இல்லை. எமது அரண்மனை அவளது கட்டிடத்தில்தான் இருந்தது. அது மிகவும் சிறிய அரண்மனை. அங்கு ஓர் படுக்கை அறை. சமையல் அறையின்   அருகில்தான் ஓர் ஜன்னல்.

    1989.

    அது ஓர் வெயில் தினம். ஜன்னல் திறக்கப்பட்டது.

    “அழகிய தினம்……” என்றாள் எல்சா. 

    “இந்தத் தினம் எனக்குக் கொடியது……” என அவளிடம் சொன்னபோது, அவளது  வெள்ளை முகம் கறுப்பாகியது. 

    “ஏன்?”

    “வெயில் எனக்குத் தலையிடியைத் தருவது…. சரி மூடவேண்டாம்….” என வியர்வை வழிந்த முகத்தைத் தடவியபடி அவளுக்குச் சொன்னேன். 

    நாம் நிர்வாணமாக. எமது கட்டிலை வியர்வைகள் நனைத்தன. அவளது உடலின் வியர்வை எனது உடலைக் குளிப்பாட்டியது. 

    “நான் குளிக்க வேண்டும்.”

    “ஏன்? எனது தாகமும் உனது தாகமும்  பூர்த்தி செய்யப்படாமல் ஏன் குளிப்பு?”

    “எனது உடல் முழுவதும் வியர்வை. கழுவியபின் தொடங்குவேன்.”

    அவளது முகம் மீண்டும் கறுத்தது.

    அங்கு சுத்திகரிப்புக்கான மிகவும் சிறிய இடத்திலேயே குளிக்கவேண்டும். கவனமாக இல்லாதிருப்பின் நீர் வெளியே போய் விடும் என்பதால் மிகவும் மெதுவாகவே குளித்தேன். நீரின் துளிகள் வியர்வைத் துளிகளின் மணத்தைத் தரவில்லை. நீர் சுகமாகவிருந்தது. 

    “எல்சா!” 

    அவளையும் எனது அருகில் அழைக்கக்  கூப்பிட்டேன். 

    பதில் இல்லை.

    மீண்டும் அவளை அழைத்தேன். 

    பதில் இல்லை. 

    கட்டிலைப் பார்த்தேன். வெறுமையாக இருந்தது. நான் வெளியால் வந்து ஜன்னல் வழியாகப் பார்த்தேன். கட்டிடத்தின் முன் இருந்த பூங்காவின் தரையில் அவளும் பல உடல்களும் அரை நிர்வாணமாகக் கிடந்தன.

    நான் ஜன்னலை மூடினேன். கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கம் வந்தது.  எனது தூக்கத்துள் எல்சா நிர்வாணமாக நிறையக் குளிர் பூக்களுடன் வந்தாள். நான் எழுந்து அவளுக்கல்ல, பூக்களுக்கு முத்தங்கள் கொடுத்தேன். 

    “நீ வெளியே போ.” கத்தினாள் எல்சா. 

    இப்போது அவள் நிர்வாணமாக இல்லை. அவளது கைகளில் குளிர் பூக்கள் இல்லாதிருந்தது.  

    “எங்களது காதல்…..?”

    “நீ சிபெரியாவுக்குப் போ.”

    நான் வெளியே வந்தபோது கதவு பலமாகப் பூட்டப்பட்டது.

    மீண்டும் நான் வெயிலை நிந்தித்தேன்.

    சூடு. 

    எல்சாவினது வதிவிடத்துக்கு மிகவும் தூரத்தில்தான் எனது வதிவிடம். அங்கு போவதற்கு பஸ், மெத்ரோ, tramway, ரயில்கள் தேவை. சூட்டின் கொடூரத்தால் எப்படி நான் விரைவில் அங்கு போவதாம்?

    “உடல் எரிகின்றது.” என முனைந்தபடி ஓர் கறுப்புப் பெண் தனது முகத்தின் வியர்வையைத்  தன் விரல்களால் வழித்து நிலத்தில் விட்டாள்.

    “எனது உடலும் எரிந்து கொண்டுதான் உள்ளது.” என அவளிடம் சொன்னேன்.

    “வெயில் கொடூரமானது.”

    “உங்களுக்கு ஓர் கொக்கா கோலா வாங்கித் தரலாமா?”

    “நான் தேவையா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

    “எனக்கு நீங்கள் தேவையில்லை. சூடு எம்மை இடைஞ்சல் செய்கின்றது…. குளிர்சாதனம் குடிக்க உங்களுக்கு விருப்பமா எனக் கேட்டல் தவறா?”

    “உனது உடலில் சூடு இல்லையா?”

    “அனைத்து உடல்களிலும் சூடுகள்  உள்ளன. இந்த உடல்களது சூடுகளைக் காட்டிலும் வெளிச் சூடு கொதிப்பானது.” 

    “உங்களது கருத்து எனது கருத்து அல்ல. உடல்களது சூடுகள் சூரியச் சூடுகளைக் காட்டிலும் கொடியது.” எனச் சொல்லியபடி “எனது வீட்டில் உள்ள மலர்கள் கருகும் என எனக்குப் பயம்…..” எனக் கலங்கினாள்.

    “ஏன் கருகும்?”

    “அவைகள் பலகணியில்தான் உள்ளன….”

    “கருகாது, நீங்கள் வீடு சென்றதும்  நிறைய நீரை ஊற்றுங்கள்..”

    “மலர்களை விற்பனை செய்தவர், அவைகளது   பாதுகாப்புக்காக நிறையத் தண்ணீர் ஊற்றாது இருங்கள் என எனக்குச் சொன்னார்.”

    அவள் நெற்றியை வழித்தாள். 

    வியர்வை  நீர் கொட்டியது.

    “சரி வீடு வந்துவிட்டது…. “ என அவள் சொல்லிய சில கணங்களில் அவளது முகம் மறைந்தது. 

    நான் அழுதேன். 

    எனது விழிகளின் நீர்களை  தெருவின் சிறிய வெடிப்புகள் அருந்தின. மீண்டும் மீண்டும் நான் நிறைய அழுதேன். நீர்கள் நிலத்தினைப் பசுமையாக்கின. ஓர் துக்கத்தில்தான் நான் அழுதேன். நிலத்தின் மகிழ்வு… எனக்குள் மகிழ்வைத் தந்ததால் நான் மீண்டும் அழுதேன். 

    என் முன் ஓர் வெள்ளை இளைஞன். 

    வெள்ளை என்பதால் என்னைப் பலர் நிற வெறியனாகக் காணுவர்.  இந்தக் காணுதல் நியாயமா? நான் நிறங்களின் ரசிகன். நான் பிறந்த வேளையில் கறுப்பு. பின்பு எனது நிறம் நீல நிறமாகவும் பட்டது. நிச்சயமாக நான் ராமரின் வாரிசு அல்ல. பிரான்சுக்கு வந்ததும் நான் வெள்ளையாகினேன்.  வெள்ளை … எனது கைகள் மட்டுமே. ஜாக்கெட் போட்டு பல ஆண்டுகள் வாழ்ந்ததால் முகத்தின் நிறம் மாறுமா? எனது முகம் இப்போதும் கறுப்பே. எனக்குச் சில குழந்தைகள் உள்ளன. அவர்களது நிறங்கள் வேறே. ஆம்! நான் நிறங்களின் ரசிகன்.

    “ஏன்  நீங்கள் அழுகின்றீர்கள்?”  

    “நான் மலர்களுக்காக அழுகின்றேன்.” என்று வெள்ளை  இளைஞனிடம் சொன்னேன்.

    அவனது விழிகளில் சிறிய விசித்திரம் தெரிந்தது.

    “உங்களிடம் இருந்த மலர்கள் காய்ந்து விட்டனவா?” கேட்டான்.

    “இல்லை, எனது வீட்டில் மலர்களே இல்லை.”

    “ஏன் இந்த அழுகை?”

    “அது அவளது மலர்களுக்காக.”

    “அவள்?...... உங்களது மனைவியா? காதலியா? சிநேகிதியா?”

    “அவளை நான் இன்றுதான் சந்தித்தேன். அவளது நிறம் கறுப்பு….”

    அவனது விழிகள் ஆச்சரியம் அடைந்தன.

    “எனது மனைவியும் கறுப்புப் பெண்ணே.”

    “அவளது பலகணியில் இருக்கும் மலர்கள் செத்துக்கொண்டு உள்ளன என்று சொன்னாள் ”

    “எனது மனைவியும் மலர்களில் விருப்பம்  கொண்டவள்.” என்றான். 

    “உங்களது மலர்கள் உயிருடன் உள்ளனவா?”

    “இல்லை செத்துக்கொண்டுதான் உள்ளன. சரி அந்தப் பெண் எங்கு வாழ்கின்றாள் என உங்களுக்குத் தெரியுமா?”

    “தெரியும்.”

    “உங்களுக்கு  அவளில் விருப்பம் உள்ளதா?”

    “இல்லை, அவளது மலர்களைப் பார்க்காதபோதும் அவைகளில் விருப்பம் உள்ளன.  அவள் தனது மலர்கள் பலகணியில் கருகிக்கொண்டு உள்ளதாகச் சொன்னாள்….”

    “அவள் வசிக்குமிடம் தொலைவில் உள்ளதா?”

    நான் கட்டிடத்தைக் காட்டினேன்.

    “அவள் மொத்தமா? அல்லது மெல்லியவளா?”

    “மெல்லியவள்….”

    “அவளது மூக்கில் மூக்குத்தி இருந்ததா?”

    “இருந்தது.”

    “ஆம்! அவள் எனது முதலாவது  மனைவி.” என்றபடி அழத்தொடங்கினான்.

    எனக்குள்  நடுக்கம்.

    “ஏன் அழுகின்றீர்கள்?” கேட்டேன்.

    “மலர்களுக்காக….”

    “நீங்கள் அந்த மலர்களை நிறைய ரசித்து இருப்பீர்கள்…..”

    “உண்மை. பிரிவின் பின்பு, நான் அவளது வீடு போகாமல் தடுக்கப்பட்டேன்.”

    “பிரிவு…. ஓர் தடைதானே ….”

    “உண்மை… நான் அவளைப் பார்க்கவல்ல, மலர்களைப் பார்க்க விரும்பிப்  பல தடவைகள் அவளிடம் கெஞ்சிப் பார்த்தேன்… ஒவ்வொரு தடவையும் தடைதான்.”

    நான் அழுதேன். அவனது விழிகளும் நீர்களைக் கொட்டின. எம்மைப் சிலர் புது விதமாகப் பார்த்தனர். வேறு சிலர் தூரத்தில். ஓர் கிழவி ஓர் மலர்க்கொத்தோடு   எம் அருகில் நடந்தாள். 

    “இது பிளாஸ்ட்டிக் மலர்க்கொத்து” என வெள்ளை நிறத்தவன்  சொன்னான்.

    சில கணங்களில் எனது கன்னத்தில் ஓர் அடி.

    வெள்ளை நிறம் ஓடியது.

    நான் அவனைத் துரத்தவில்லை.

    அடி.

    இதனை வாங்கினால் மீண்டும்  கொடுக்கவேண்டுமா?

    எனது கன்னத்தைத் தடவினேன். ஏன் எனக்கு அடித்தான் என்பதையும் நான் தேடவில்லை. நிம்மதி. ஆம், அவன் என்னைச் சுடவில்லை என்பதற்காக.  கன்னத்தைத் தடவியபடி மிகவும் மெதுவாக நடந்தேன். 

    மீண்டும் கிழவியின் வெள்ளைக் கூந்தல். அது கட்டப்பட்டு இருந்தது. ஓர் வெள்ளைக் கொண்டை. அதனைக் கண்டதும் நான் வாழ்ந்த தீவின் பல பெண்கள் எனது நினைவின் முன் வந்தனர். இவள்களது மொழிகள் சுவையானவை.

    மொழிகள்…. 

    ஒரு வருடம் ஓர் சிங்கள மொழிபேசும் குடும்பத்தின் வீட்டில் வாடகைக்கு இருந்தேன். கணவனும் மனைவியும் இனியவர்கள். மனைவியின் முகம் ஓர் தேவதைக் காட்டில் பிறந்த முகமாக இருக்கலாம் என இப்போதும் நான் நினைத்துக்கொண்டு உள்ளேன். 

    மொழி.

    ஒருபோதும் நான் சிங்கள மொழியைப் பேசவில்லை. மொழியில் என்ன உள்ளதாம்? கணவனையும் மனைவியையும் நான் எனது விழிகளால் விளங்கினேன். இவர்கள் ஒருபோதுமே என்மீது தமது மொழியைக் கொட்டியது இல்லை. எனது மொழியும் அவர்களது இதய ஈரத்தால் செத்தது.

    மொழி. 

    நிலங்கள் சுவையானவை. இவைகளில் மொழிகள். இவைகளால்தான்  இரத்தத் துளிகள் நிலங்களில்.

    “அட! மொழியைக் கொலை செய்….  மதங்களைக் கொலை செய் …. இவைகளால்தாம் எமது நிலங்களில் நிறைய இரத்தங்கள்….”  என ஒருவன் கூறிச் சொல்வது எனக்குக் கேட்டது.

    “உங்கள் சேதி நல்லது…” என நான் அவரைப் பின் தொடர்ந்தேன்.

    “வா! நீயும் பைத்தியம் ஆகுவாய் … “ எனச் சொன்னார்.

    “நீங்களுமா?”

    “நாம் ….”

    “நான் பைத்தியமா?”   என்னிடம் கேட்டேன்.

    நிறையத் தினங்களில் நான் பைத்தியமாக இருந்திருப்பேனா? நான் பலரைப் பைத்தியங்கள் என நினைத்துள்ளேன்.  இந்தப் பலரால் பைத்தியமாக நான் நினைக்கப்படாது இருக்கலாமா? பல வேளைகளில் நான் என்னைப் பைத்தியமாகக் கருதியதுண்டு. ஆம், எழுதும் வேளைகளில்.

    கடிதங்கள் எழுதும் போது.

    நான் எழுதிய சில காதல் கடிதங்களை நினைக்கும் போதும், பதில் கடிதங்களை வாசித்தபோதும் என்னைப் பைத்தியமாக நினைத்ததுண்டு. இந்த எழுத்துகளில் காதல் பூக்கள் இருந்தன. இவைகள் விரைவில் வாடிவிடும் பூக்கள் என்பது எனக்குப் பிந்தியே தெரிந்தது. 

    “நான் உன்னில் பைத்தியமாக உள்ளேன்” எனும் வரியை எனது காதல் கடிதங்களுள் கண்டபோது எனக்கு வியப்பு வரவில்லை. 

    கடிதங்களில் மட்டுமா எழுத்து உள்ளது? 

    பின் பல பத்திரிகைகளுக்காகவும், இதழ்களுக்காகவும் எழுதிய வேளைகளில் என்னை விசரனாகவும் நினைத்தேன்.

    “வாழ்வு நினைவுகளின்  அடிமை” ஓர் பள்ளிச் சிறுமி தன்னிடம் (என்னிடம் அல்ல )  பஸ்ஸில் சொல்லியது இப்போதும் எனது நினைவுக்கு வருகின்றது. 

    “நான் ஓர் பைத்தியம்!”  என் முன் ஓர் பெரிய குரல் கேட்டது.

    வெண் கூந்தல் பெண் என் முன். 

    “முகத்தைக் காட்டமுடியுமா?”

    முதல் தடவையாக அவள் முகத்தைத் திருப்பினாள்.

    ஓர் தேவதை. கைகளில் ஓர் மிகப் பெரிய புத்தகம்.

    நான் அவளை நெருங்கினேன். 

    “இது ஓர் நாவல். இது எனது நூல். இதனை நீ வாசி.”

    நிலத்தில் நூலை வைத்துவிட்டு ஓடினாள். 

    அது ஓர் பெரியதும் பாரமானதுமான புத்தகம். தூக்கினேன். அட்டைப் படம் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது. விரித்தேன். முதல் பக்கம் வெறுமையாக. மீண்டும் விரித்தேன். அனைத்துப் பக்கங்களும் வெறுமையாக. 

    எழுத்துகளே இல்லாத பக்கங்கள். 

    வெண் கூந்தல் ஓடிய வீதியைப் பார்த்தேன். அந்த வீதியில் எழுத்துகள் இல்லாதிருந்தன.

    பாரிஸ் 22.15 18-05-19 ((நன்றி காலச்சுவடு , 2020) 

    Postad



    You must be logged in to post a comment Login