Recent Comments

    பண்டிதராக்கும் நூலகம்

    சென்ற இதழில் நூலக அடையாள அட்டையை பெற்று, கண்டதும் கற்றுப் பண்டிதராவது எப்படி என விளக்கியிருந்தோம். இந்த அட்டையின் உதவியுடன் புத்தகங்கள், ஒலிவட்டுகள், ஒளிவட்டுகள் என பலவற்றையும் நூலகத்தில் இரவல் பெறலாம். அது மட்டுமன்றி, உங்கள் வீட்டில் இணையத் தொடர்பு இல்லாவிட்டால், நூலகத்தில் இலவசமாக கணனி மூலம் இணையத்தைப் பயன்படுத்த முடியும். பலரும் இந்தச் சேவையைப் பயன்படுத்துவதால், சில நேரங்களில் உங்களுக்கு கணனிகள் கிடைக்காமல் போகலாம். உங்கள் அட்டையின் உதவியுடன், உங்களுக்கு வசதியான நேரத்தில் இணையத்தைப் பயன்படுத்த கணனி நேரம் ஒதுக்கித் தரும்படி பதிவு செய்யலாம். அல்லது உங்கள் மடிக்கணனியைக் கொண்டு சென்று அங்கு கம்பியில்லா இணைய இணைப்பை இலவசமாய் பெறவும் முடியும். இதற்கு அட்டை தேவையில்லை. பல நூலகம் சம்பந்தமான விடயங்களை வீட்டில் இருந்தபடியே இணையத்தின் உதவியுடன் நீங்கள் செய்யலாம். www.torontopubliclibrary.ca என்ற தளத்திற்கு சென்று, உங்கள் அடையாள அட்டை இலக்கத்தையும், அட்டை பெறும்போது பதிவு செய்த உங்கள் தொலைபேசி இலக்கத்தின் கடைசி நான்கு இலக்கங்களையும் பயன்படுத்தி, உள்நுழைந்தால், புதிய உலகமே அங்கு கிடக்கிறது. உங்கள் இணைய உலாவியில் உரிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஒவ்வொரு தடவையும் உங்கள் அடையாள அட்டை இலக்கத்தைத் திரும்பத் திரும்ப நிரப்பத் தேவையில்லாமல், உலாவி உங்கள் விபரங்களை ஞாபகத்தில் வைக்கச் செய்யலாம். இதற்கான விபரங்கள் நீங்கள் உள்நுழையும்  பக்கத்திலேயே கிடக்கிறது. உள்ளே நுழைந்தால், அங்கு நீங்கள் நூலகத்தில் வாங்கிய பொருட்கள் எவை, எப்போது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற சகல விபரங்களும் உண்டு. பக்கத்து வீட்டுக்காரரிடம் அம்மிக் குழவி கடன் வாங்கி விட்டு, மறந்த மாதிரி நடிப்பது போலில்லாமல், நூலக இரவல்களை உரிய நாளில் திருப்பிக் கொடுக்க வேண்டும். காலக்கெடுவிற்குள் கொடுக்காவிட்டால், தினசரி அபராதமும் உண்டு. அபராதத்தைத் தவிர்க்க, உங்கள் பொருட்களை இன்னும் ஒரு தடவை இணையம் மூலமாகவே புதுப்பிக்கலாம். அந்தப் பொருளுக்கு வேறு யாராவது ஏற்கனவே பதிவு செய்திருக்காவிடில், நீங்கள் தொடர்ந்தும் வைத்திருக்கலாம். அல்லது அபராதத்துடன் பொருளைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும். இது மட்டுமல்ல, இந்த அடையாள அட்டையின் மகத்துவமே வேறு. உங்களுக்கு அருகில் உள்ள நூல்நிலையங்களில் மட்டுமல்ல, ரொறன்ரோ முழுவதும் உள்ள நூலகங்களில் உள்ள பொருட்களை நீங்கள் பெற இது வழி வகுக்கிறது. நூலக இணையத் தளத்தில் தமிழ் என்ற வார்த்தையைத் தேடினால் சுமார் 7500 பொருட்கள் ரொறன்ரோ எங்கும் உள்ள நூலகங்களில் உள்ளன. ஆயிரத்திற்கு மேற்பட்ட ஒளிவட்டுகளில், தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமன்றி, குழந்தைகள் தமிழ் கற்க வசதியான பாடல்கள், பாடங்கள் என்பனவும் உண்டு. ஒலிவட்டுகளில் சினிமாப் பாடல்கள் மட்டுமன்றி, சங்கீதங்கள், இலங்கைப் பொப் பாடல்கள் எல்லாமே உண்டு. புத்தகங்கள், சஞ்சிகைகள் என உள்ள இந்தக் களஞ்சியத்தில் நீங்கள் பெற விரும்பியவற்றை அந்த இணையத்தளத்திலேயே hold என்ற பச்சை பட்டனை அழுத்தி உங்களுக்கு அருகில் உள்ள நூலகத்தில் கிடைக்குமாறு பதிவு செய்து, பெற்றுக் கொள்ளலாம். வந்ததும் உங்களுக்கு மின்னோலை வரும். அல்லது நீங்களே உங்கள் புத்தகம் புறப்பட்டு, உங்களிடம் வந்து சேரும்வரை அதன் பயணத்தை கண்காணிக்கலாம். சில நேரங்களில் அதே புத்தகத்திற்கு வேறு யாராவது பதிவு செய்திருந்தால் வரிசைக் கிரமப்படி உங்களுடைய முறை வரும்போது உங்களுக்குக் கிடைக்கும். அடுத்த தடவை இந்த அடையாள அட்டையைக் கொண்டு செய்யக் கூடிய மாயாஜாலங்களைச் சொல்லித் தருகிறோம். அதுவரைக்கும், கண்டதும் கற்றுப் பண்டிதராகுங்கள்... ஞாபகம் இருக்கட்டும், வாசித்து மனிதர்கள் பூரணம் அடைவது உண்மைகளையும், சிந்திக்க வைப்பவற்றை வாசிப்பதால் மட்டுமே!

    Postad



    You must be logged in to post a comment Login