Recent Comments

    நூல் 

    க.கலாமோகன் 

    நூலகங்களின் அழிவுகள்மீது நாம் எப்போதும் பேசலாம். உலகின் போர்க் கொடுமைகள் மனிதர்களை மட்டுமே அழித்ததில்லை, நூலகங்களையும் அழித்துள்ளன. போர் எதனையும் நொருக்கும், எரிக்கும். அதற்கு  மனிதமும் தெரியாது, மனிதக் கலாச்சாரங்களும் தெரியாது. அதற்குத் தெரிந்தது  நிர்மூலம் செய்தல்  மட்டுமே. போரின் முன்னால் முதுகைத் தூக்கும் மனிதர்கள் சாத்தான்களேயெனக் கருதுவது எனது வழக்கம்.

    யாழ்ப்பாண நூலகம் எனது வீடாகவே எப்போதும் இருந்தது. பள்ளியால் வந்ததும் அங்கு செல்வதில்  கிடைத்த  இன்பத்தை வருணித்தல் சுலபமானதல்ல. அதனுள்  சென்றதும் நான் வேறு உருவமாகிவிடுவேன். அது ஓர் தனி உலகம். அதனுள்  நான் நிறையப் பாத்திரங்களைச் சந்தித்துள்ளேன். வீடு திரும்பும்வரை அனைத்துப் பாத்திரங்களும்  எனது அருகிலே வந்துகொண்டேயிருக்கும்.

    நூலகத்திலிருந்து எடுத்துவரும் நூல்களில் சில என்னை விட்டுப் பிரியாது. பாடசாலை சென்றாலும் அங்கு வரும். கணித ஆசிரியர் இலக்கங்களைக் கரும்பலகையில் எழுதும்போதும், ஆங்கில ஆசிரியர் ஓர் கதையை வாசிக்கும்போதும்  நான் ரகசியமாக நூலகத்தில் எடுத்துவந்த நூல்களையே படிப்பேன். எனது சூழலில் பலர் அப்போது நிச்சயமாக இருந்திருப்பார்கள்.  

    நூல் என்பது ஒரு போதை வஸ்துதான். வாசிக்க வாசிக்க மீண்டும் வாசிக்க வேண்டிய இன்பம்தான் வரும். சில வேளைகளில் புகைத்தலை நிறுத்துவதில் சிக்கல் இல்லை. ஆனால், வாசித்தலை நிறுத்தமுடியுமா? இல்லை என்ற நிலையில்தான் நான் இப்போதும். 

    யாழ்ப்பாண நூலகம் எரிந்த வேளையில் நான் கொழும்பில் இருந்தேன். ஓர் செய்தியைக் கேட்டு எனது இதயம் உடைந்தது. “உண்மையா?” எனப் பலரிடம் கேட்டேன். “உண்மை” என்றனர். “அனைத்து நூல்களும் எரிந்துவிட்டனவா?” என்று கலக்கத்துடன்  கேட்டேன். “ஆம், நூலகம் 100 வீதம் எரிந்தே விட்டது.” எனப் பலர் சொல்லினர். அப்போதே எமது கலாசாரத்தின் ஒரு பகுதியை நெருப்புத் தின்றது என அறிந்தேன்.  

    நூலகம் ஓர் பள்ளி,  பல்கலைக்கழகம். அது ஓர்  இனத்தின் சொத்து அல்ல. மனிதத்தின் சொத்து. உலகின் அனைத்து மொழிகளிலும் வெளிவந்த நூல்கள் உலகின் பன்முகத் தன்மைகளைக்  காட்டுவன. எம்மை ஓர் உலகக்  கலாசாரங்களில்  வாழவைப்பன எனவும் சொல்லலாம்.  

    எனது சிறுவயதில் நான் யாழ்ப்பாண நூலகத்தில் பல ஏடுகளையும் கண்டேன். அவைகளைப் பிரிப்பதில், கவனமாகப் பிரிப்பதில் உள்ள இன்பம் இனியது. 

    யாழ் நகரில் பழைய நூல்களை விற்கும் ஓர் முதியவர் கடையில் கிலோ விலையில் நிறைய நூல்களை வாங்கினேன், ஆம், சில ஏடுகளையும்தான். எனது வீட்டில் இருந்த சிறிய அறையும் அப்போது ஒரு நூலகமாக மாறியது.  சில நண்பர்கள் அங்குவந்து எனது நூல்களைத் தமது படிப்பிற்காகப் பயன்படுத்தினர். எனக்குப் பட்டம் எதுவுமே இல்லை. எனது அறையின் நூல்களைப் பயன்படுத்திய ஓர் நண்பர் பட்டம் எடுத்தார் என்பதும் நூல்கள் நடத்திய அதிசயமே. 

    யாழ் நூலக எரிப்பினால் பல மொழிகள் தெரிந்த  ஓர் தமிழ் அறிஞரையும் இழந்தேன். அவர் தாவீது அடிகள். நூலகம் எரிந்ததால் அவரது உள்ளமும் எரிந்தது. அந்த எரிவினைத் தாங்காமல்தான் அவர் இறந்தாரெனச் சொல்லப்படுகின்றது. 

    அவரை  நான் சில தடவைகள் சந்தித்து உள்ளேன். நூல் மீது எழுதும்போது தாவீது அடிகள் மீதும் சில வரிகள் எழுதுவது உவப்பே. இவர் அடிக்கடி யாழ் நூலகத்துக்கு அருகில் உள்ள ஓர் கிளப்பில் டெனிஸ் விளையாடியதாகக் கூறப்படுகின்றது. சில வேளைகளில் நான் அப்போதும்  அவரைக் கண்டிருக்கலாம். ஆனால் அவர் மிகவும் வயோதிபராகப் புனித பத்திரிசியார் கல்லூரியின் மாடி ஒன்றில்  வாழ்ந்தபோது ஓர் நேர்காணலுக்காகச்  சந்திக்கச் சென்றேன். மாடி துப்பரவு அல்லாததாக இருந்தது. அவரது வயதில் துப்பரவு செய்வதும் சிரமம்தான். களைப்பான முகத்தைக் காட்டினாலும்   ஓர் சிந்தனைப்  பீடமாகவே அவர் எனக்குத் தெரிந்தார். 

    “வணக்கம், உங்கள்மீது நான் நிறைய அறிந்துள்ளேன். ஓர் நேர்காணலிற்குச் சம்மதம் தருவீர்களா? “ என நான் அவரிடம் கேட்டேன்.

    “நிச்சயமாக… ஆனால் நீங்கள் உங்களது கேள்விகளை எனக்கு எழுதித் தரவேண்டும். நான் அவைகளுக்குப் பதிலை எழுதித்  தருவேன்.” என்றார்.

    யாழ் பண்ணையின் அருகில் உள்ள மீனாட்சி அம்மன் வீதியில் அப்போது வாழ்ந்த புகைப்படக் கலைஞரை எனக்குத் தெரியும். பெயரை மறந்துவிட்டேன். நான் அவரோடு புனித பத்திரிசியார் கல்லூரிக்குச் சென்று தாவீது அடிகளுடன் பல படங்கள் எடுத்தேன். மிகவும் கவனமாகப் பாதுகாத்த அந்தப் படங்களையும், வணக்கத்துக்குரிய அடிகளாரின் கையால் எழுதிய முதல் பதிலையும்  போர்தான் தின்றுவிட்டது.

    போரின் வெறியால் நடந்த நூலக அழிப்பு என்பது இலங்கையின் கலாச்சாரச் சொத்துகளில் ஒன்றின் அழிப்பே. அனைத்து இனங்களுக்கும் பயன்படக்கூடிய நூல்கள் ஓர் எரிவினால் அழிந்தது மிகப்பெரிய கொடுமையே. இந்தத் தீவில் வாழும் அனைத்து இனப் பிரஜைகளும் நூலக அழிவைக் கண்டித்துள்ளனர். 

    நூல்களை எரிப்போர் மனிதத்தின் உயிரையும் எரிப்போர் என நாம் அச்சம் இல்லாமல் எப்போதும் சொல்லலாம். 

    Postad



    You must be logged in to post a comment Login