Recent Comments

    நீந்தும் போது ஏற்படும் மரணத்தின் அபாயத்தை தடுங்கள்

    swim சமீபத்தில் தமிழருக்குச் சொந்தமான வீட்டின் பின்புறம் உள்ள நீச்சல் தடாகத்தில் அயல் வீட்டுப் பிள்ளை ஒன்று தவறி வீழ்ந்து இறந்த சம்பவம் ஒன்று ஸ்காபரோ, கனடாவில் இடம் பெற்றிருந்தது. வீட்டின் பின்புறமான நீச்சல் தடாகங்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு உகந்ததாயினும், பெற்றோர் சற்றே கவனக்குறைவாக இருந்தால், விளைவுகள் விபரீதமாகி விடும். இவ்வாறான ஆபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க சில முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் இவ்வாறான நிகழ்வுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். இந்தக் குழந்தைகளை ஒருபோதுமே தனியே நீரில் விளையாட அனுமதிக்கக் கூடாது. எப்போதுமே ஒரு வயதானவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எப்போதும் கைக்கெட்டிய தூரத்தில் இருக்க வேண்டும். கண்காணித்துக் கொண்டிருக்கும் வயதானவர்கள் வேறு விடயங்களில் கவனம் செலுத்தக் கூடாது. வாசிப்பதோ, குடிப்பதோ, அல்லது மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். ஒரு குழந்தை நீரில் மூழ்கி இறக்க சில செக்கன்களே போதும். வயதானவர்கள் முதலுதவிப் பயிற்சியில் பயிற்சி பெறுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். அம்புலன்ஸ் வருவதற்கு முன்னால் பயிற்சி பெற்ற வயதானவர்கள் முதலுவதவி வழங்க இது உதவும். நீச்சல் தடாகங்கள் எப்போதுமே நான்கு புறங்களும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். அடைத்த வேலிகளில் பாதுகாப்புப் பூட்டுக்கள் குழந்தைகள் தாங்களாகவே திறந்து செல்ல முடியாதபடிக்கு பொருத்தப்பட வேண்டும். வேலிகள் குறைந்த நான்கு அடி உயரமாக இருக்க வேண்டும். ஏரிகள், பொது நீச்சல் தடாகங்கள் போன்ற இடங்களில் குழந்தைகள் மிதக்கும் ஜக்கட்டுகள் அணிந்திருக்க வேண்டும். வள்ளங்கள் போன்றவற்றில் சென்று விளையாடும் போது இந்த ஜக்கட்டுகள் அணிந்திருக்க வேண்டும். வயது வந்தவர்களுக்கும் இது பொருந்தும். கனடாவில் நீரில் மூழ்கி இறப்போரில் பத்தில் ஒன்பது பேர் இந்த ஜக்கட்டுகளை அணியாமல் இருப்பவர்களே. நீர் மூலமாக கிருமிகள் பரவுவதைத் தடுக்க வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளும் பெரியவர்களும், நீரில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும். நீந்தி விளையாடுவோர் அந்த நீரைக் குடிப்பதைத் தவிர்க்கப் பழக்க வேண்டும். பல்வேறு நோய்கள் குழந்தைகளுக்கு தாங்கள் நீந்தும் நீரைத் தற்செயலாகக் குடிப்பதால் ஏற்படுகின்றன. கோடை காலத்தில் வெப்பத்தைத் தணிக்க, நீரில் விளையாட விரும்புவோர் இந்த விதிமுறைகளை கைக் கொண்டால், நோய்களை மட்டுமன்றி, மரணத்தையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

    Postad



    You must be logged in to post a comment Login