Recent Comments

    இரண்டு வெள்ளைக் கிழவர்களும் மொத்தமான கறுப்பியும் ஓர் ரக்ஸி ட்ரைவரும்

    க.கலாமோகன்

    (20 வருடங்களுக்கு முன்பு “ஆபிரிக்கச் சிறுகதைகள்” எனச் சில சிறுகதைகளை எழுதினேன். இவைகள் இந்தக் கண்டத்தின் வாழ்வியலை உள் வாங்கியவையே. இந்தக் கதைகளை அனுப்பும்போது, இவைகள் மொழிபெயர்ப்புக் கதைகள் அல்ல, என்னாலேயே எழுதப்பட்டது என அனுப்பும் பத்திரிகைகளுக்குக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் ஓர் பத்திரிகை “கலாமோகனின் மொழிபெயர்ப்புக் கதை” என அவதியில் குறிப்பிட்டிருந்தது. இது போன்ற விந்தைகள் தமிழ்ப் பத்திரிகை உலகில் அதிகம்தான்.

    எமது எழுத்து உலகில் மீள் பிரசுரங்கள் இன்றும் தேவை எனலாம். வாசிப்பு உலகம் பெரிதாகும்போது பல படைப்புகள் பலருக்குத் தெரியாமல் இருக்கும் நிலை உள்ளது. இதனால்தான் 29 ஆகஸ்ட் 1999 இல் தினக்குரல் வார இதழில் வெளிவந்த “இரண்டு வெள்ளைக் கிழவர்களும் மொத்தமான கறுப்பியும் ஓர் ரக்ஸி ட்ரைவரும்” எனும் சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு. இக்கதைக்கு ஓவியம் செய்தவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. )

    பமாக்கோவில் உள்ள பிரபலமான சீனமதுச்சாலை என்றால் அதுதான். அதற்குப் பெயர் ‘கிறாண்ட்மியூறாய்‘... ‘பெரியசுவர்” எனத் தமிழில் நாங்கள் அதற்குப் பெயரிட்டுக்கொள்ளலாம்.

    அங்கே நான் சீன இசையையோ, சீனத்துக்குமரிகளையோ, கிழவிகளையோ ஒருபோதுமே கண்டதில்லை. முதலாளிக்கு மட்டுமோ சீனமுகம்? அவளது முகம் சின்னனும்கூட. ‘பெரியசுவருக்குள்‘ கறுப்புக் குமரிகள்தாம் அதிகம். இவள்கள் இங்கே நுகர வருகின்றனரா அல்லது நுகரப்பட வருகின்றனரா என்பது மர்மமானதும் மர்மல்லாததுமான ஒரு விஷயம். இவள்கள் எங்களைச் சுற்றிச் சுழண்டு கொண்டுருப்பாள்கள். கண்சிமிட்டுவாள்கள், நாக்கால் உதடுகளை நனைப்பாள்கள்.

    இது எதற்காக என்பதைச் சொல்லவும் வேண்டுமா? பெண்கள் சந்தைகள் இல்லாத பெரிய நகரங்கள் ஏதாவது உண்டா? மாலியின் தலைநகரான பமாக்கோ மட்டும் இதற்கு விதிவிலக்கா? பமாக்கோ பெண்களே இல்லாத தலைநகரமா?

    ‘பெரியசுவரி‘ற்கு நானும் அடிக்கடி போவதுண்டு. குடும்ப உறவின் அன்புத் தொல்லையிலிருந்து தப்பி அமைதியாக இருப்பதற்கும், எதனையாவது எழுதுவதற்குமே. எழுதும் கணங்களிலே கறுப்புமகளிரின் விழிக்கணைகள் சிலவேளைகளிலே என்னைக் குத்துவதுண்டு. இரண்டு மூன்று தடவைகள் எனது மனைவியோடும் ‘பெரியசுவரி‘ற்குப் போனதால் தொல்லை சற்றே ஓய்ந்துவிட்டது.

    இந்தக் கறுப்பு மகளிரிற்கு நான் மணமானவனா அல்லது மணமாகாதவனா என்பதெல்லாம் தலைகளைக் குடையும் விஷயங்களே இல்லை. மணமானவர்களும் தங்களிடம் வந்து சின்றின்பம் துய்ப்பதற்கு இவள்கள் ஒருபோதுமே தடைபோடுவதில்லை. தடைபோட்டால் இவள்கள் எப்படி வாழ்வதாம்? இவள்களது சந்தை வாழ்க்கை ஒருவகையில் அசுத்தமானதுதான். ஆனால் இவள்களுக்கு வேறு வாழ்க்கையையும் வேறு சந்தோஷத்தையும் தேடிக்கொடுக்காமல் – இவள்களைத் திட்டுவதிலும் அதேவேளையில் சந்தையின் வாடிக்கையாளர்களாகவும் இருப்பதிலே அர்த்தம் உள்ளதா?

    ‘பெரியசுவரி‘ன் முதலாளியினது முகம் சின்னது மட்டுமல்ல, ஒரு சின்னப்பூனையின் முகத்தையும் ஞாபகமூட்டுவது. அவள் எங்கே பிரெஞ்சு கற்றாளோ அது எனக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு தடவையும் அவள் எனக்கு வணக்கம் சொல்லும்போது கட்டாயமாக சீன பாஷையைப் படித்தே விடுவது என்று முடிவெடுத்துவிடுவேன்.

    அன்று ‘பெரிய சுவரி‘ல் நான் காஸ்டல் பியர் குடித்துக்கொண்டிருந்தேன். அத்தோடு, அடுத்தநாள் “காலமும் தோற்றமும்” என்ற தலைப்பிலே பமாக்கோ கல்லூரியொன்றிலே வழங்கவேண்டிய விரிவுரைக் குறிப்புகளைத் தட்டிக் கொண்டிருந்தபோதுதான் இரண்டு வெள்ளைக்கிழவர்களும், ஓர் ராக்ஸி ட்ரைவரும் வந்து எனக்கு முன்னால் உள்ள மேசையைச் சுற்றி அமர்ந்தனர். கிழவர்களில் ஒருவரைத் திட்டவட்டமாகக் கிழவர் என்று சொல்லமுடியாது. ஆனால் முகத்திலோ களையின் வடுக்கள். மற்றவரோ எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பவர் போல பட்டார். ராக்ஸி ட்ரைவரது கறுப்புமுகத்திற்குக் கறுப்புக்கண்ணாடி எடுப்பாகத்தான் இருந்தது.

    முதலாவது நோக்கில் இரண்டு கிழவர்களும் பிரான்ஸியர்களாகத்தான் இருக்கவேண்டும் என நான் நினைத்துக்கொண்டேன். அவர்களில் ஒருவர் பேசியது பிரெஞ்சு போலபட்டதுதான் காரணம். அவர்களுக்குப் பிரெஞ்சும் கொஞ்சம் தெரியும் என்பதை விரைவிலேயே அறிந்துகொண்டேன்.

    மூவரது உரையாடலும் ஒரேகணத்தில் எனது செவிக்குள் வீழ்ந்தபோதுதான், இரண்டு கிழவர்களும் ஆங்கிலத்தைப் பிரெஞ்சுமொழியைக் காட்டிலும் கொ ஞ்சம் தெளிவாகப் பேசத்தெரிந்தவர்கள் என்பது எனக்குப் புரியவந்தது.

    அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எப்படி வந்தார்கள் என்பதெல்லாம் வேறுவிஷயம். ஆனால் அவர்கள் பமாக்கோ வந்துள்ளார்கள். புழுதி நிலத்தின் ஜூலைக் காலக் கொடு வெயிலில் சில வாரங்களைக் கழிப்பதற்காகப் போலும். இங்கே சில வாரங்களைச் செலவழிப்பதில் உள்ள சுகம் வெயில் சார்ந்தது மட்டுமல்ல கறுப்பு நிலத்து எளிமையான வாழ்வோடும், இயல்பான விருந்தோம்பலோடும் சம்பந்தப்பட்டதாகும். அவர்கள் எங்கிருந்தும் வரலாம். எப்போதும் வரலாம். எங்கேயும் செல்லலாம். எவரோடும் கலக்கலாம், எப்படியும் கலக்கலாம்…. உலகப்படத்தில் நாங்கள் கீறிய எல்லைகளை எல்லைகள் எனக் கருதிக்கொள்ளுதல் சரியா?

    மதுச்சாலைப் பையன் அவர்கள் முன்னே வந்தபோது அவர்கள் இரண்டு ‘கோலா’க்களைக் கேட்டுக்கொண்டார்கள். ட்ரைவர் மட்டும் பியர் கேட்டான்.

    இரவு முழுவதும் மழை பெய்ததாலும், மதியத்தில் பெரிதாக வெயில் எறிக்காததாலும் – மாலைக்காலம் மிகவும் இதமாக இருந்தது. வழமைபோல பெரிதாக இலையான்களது தொல்லையும் இருக்கவில்லை. நான் இன்னொரு சிகரெட்டை எடுத்து மூட்டினேன். கறுப்புக்கண்ணாடியைத் துடைத்து மீண்டும் போட்டுக்கொண்டேன்.

    அவள் மொத்தமான கறுப்பி. போதலும் வருதலுமாக எங்கள் மேசைப்பக்கம் நடந்துகொண்டிருந்தாள். முன்பும் நான் அவளைக் கண்டதுண்டு. அவள் செக்ஸியானவளும்கூட. தனது மொத்தமான கறுப்புத்தொடைகள் தெரியும்படிதான் அணிவாள். கொங்கைகள் சற்றே வெளியால் வந்து எங்களை வெறியுடன் பார்ப்பதுபோல இருக்கும். அவளது கறுத்த வட்டமான முகத்துக்குள் எமது ரசனை உணர்வின் கதவுகளைத் திறக்கும் சாவி தாண்டு கிடக்கின்றதா எனச் சில வேளைகளில் நான் என்னிடம் கேட்டதுண்டு. கறுப்புக்கனவு என அவளைச் சித்திரிக்க எனது பேனா ஒருபோதுமே தயங்காது.

    கிழவர்களில் ஒருவரது விழிகள் அடிக்கடி அவள் பக்கம் சென்றுவருவதை என்னால் அவதானிக்க முடிந்தது.

    அது தாகம் சுமந்த ஓர் அவதானிப்பு. அவளும் அவரை அவதானித்தபடி – வருவதும் போவதுமாகத் தனது கொழுத்த பிருஷ்டங்களை நளினமாக அசைத்து நடந்தாள். அவரது தாகத்தை அவள் உணர்ந்துவிட்டாள் போலும், மற்றக் கிழவரோ அதே களைத்த முகத்துடன். அவரும் சற்றே விழித்துக்கொண்டார்.

    “வருகின்றீர்களா?” எனப் பிரெஞ்சு மொழியிலே அவள் கேட்டபோது அவளது உச்சரிப்பை விளங்காமலோ என்னவோ ட்ரைவரைப் பார்த்தார். ஆங்கில மொழியில் ட்ரைவர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தபோது அவள் இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள். பின்னர் பம்பாரா மொழியிலே ட்ரைவரும் அவளும் சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

    “எவ்வளவு எனக்கேள்” எனக் கிழவர் ட்ரைவரிடம் சொல்கின்றார். கேட்டபின் “5000 FCFA” என்கின்றார் ட்ரைவர்.

    இந்த விலை சற்றே அதிகம்போல எனக்குப்பட்டது. ஓர் மாலி தேசத்தவன் விலை கேட்டிருப்பின் நிச்சயமாக அவள் இதே விலையைச் சொல்லியிருக்கமாட்டாள் எனக்கருதிக்கொண்டேன்.

    கிழவரோ விலையால் அதிர்ந்துபோனவர் போல எனக்குப்படவில்லை. “சில மணித்தியாலங்களிற்கா அல்லது ஓர் இரவிற்கா எனக்கேள்” என்கின்றார். ட்ரைவரும் மொத்தமான கறுப்பியும் பம்பாராவில் இயல்பாகப் பேசத்தொடங்கியபோது இரண்டு கிழவர்களும் தங்களுக்குள் ஆங்கிலமொழியிலே மெதுவாகப் பே சுகின்றனர்.

    “உனக்கு அவளைப் பிடித்துள்ளதா?” அவளில் முதலிலே லயித்துப்போன கிழவர் கேட்கின்றார்.

    “அவள்அழகி, செக்ஸியானவளும்கூட. ஆனால் மொத்தமானவள்”

    “மொத்தமான பெண்கள்மீது உனக்கு விருப்பம் இல்லையா?”

    “நான் மெல்லிய பெண்களையே விரும்புகிறேன்”

    “உனது மனைவி மொத்தமானவள் அல்லவா!”

    “நான் அவளைக் காதலித்த போதும், திருமணம் செய்தபோதும் அவள் மொத்தமானவளாக இருக்கவில்லை. நூல்போல மெல்லியவளாக இருந்தாள். இப்போதோ மொத்தமாகிவிட்டாள். இதனால்தான் நான் இப்போது இரண்டு வைப்பாட்டிகளை வைத்திருக்கின்றேன். உனது மனைவியும் மொத்தமானவள்தானே….”

    “நீ சொல்வதுசரி. அவள் மொத்தமாகவுள்ளாள் என்பது எனக்குப் பிரச்சினைக்குரிய விஷயம் இல்லை. ஆனால், அவளுக்கோ வயது போய்விட்டது. எனது தேவைகளைப் புரிந்துகொள்ளாமல் அடிக்கடி சினந்து ம்கொள்கின்றாள்” என்றபின் “நீ விரும்பினால் இன்றைய இரவை இவளுடன் கழிக்கலாம்!” என்கின்றார்.

    “எனக்கு மொத்தமான பெண்களைப் பிடிக்காது என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்தானே!”

    “சரி. ட்ரைவரிடம் கேள். அவன் உனக்காக ஒரு மெல்லிய பெண்ணைத் தேடித்தருவான். கேள்.”

    “400 கிலோ மீற்றர்களைப் பயணம்செய்து இப்போதுதான் இந்த மதுச்சாலையில் சற்றே களைப்பாறி இருக்கின்றோம். இன்றைய இரவைத் தனியாகக் கழிக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம். நீ விரும்பினால் மொத்தமான கறுப்பியுடன் சென்று உனது இரவைக்கழி….”

    “நீ கறுப்பிகளுடன் ஒருபோதுமே இரவைக் கழித்ததில்லையா?”

    “டென்ஹாக் (ஹோலண்ட்) இல் எனக்குச் சில அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு. உனக்கு ஏற்பட்டதுண்டா?”

    “ஆம்! எனது பல்கலைக்கழக இறுதியாண்டின்போது ஓர் எதியோப்பியப் பெண்ணால் வசீகரிக்கப்பட்டேன். சிலமாதங்கள் அவளுடன் வாழ்ந்தேன். எனது பேராசிரியரும் அவளும் நெருக்கமாகத் தொடங்கியதைக்கண்டு தொடர்பை முறித்துவிட்டேன்”

    “அவள் மொத்தமான கறுப்பியாக இருந்தாளா?”

    “நிச்சயமாக….?”

    “அவளுடனான தொடர்பை முறித்தபின்னர்….?”

    “ஓர் சூரினாம் பெண்ணுடன் பல மாதங்கள் வாழ்ந்தேன். பின்னர் எனக்கு அவள்மீது விருப்பம் இல்லாதுபோனதால் அந்தத்தொடர்பும் முறிந்துபோயிற்று.”

    “ஹோலண்ட் விபச்சாரிகளை எனக்குத்துண்டாகவே பிடிப்பதில்லை” எனச் சம்பாஷணையின் திசையைத் திருப்புகின்றார் களைத்த முகம் கொண்டிருந்த கிழவன்.

    “ஏன்?”

    “ஹில்டன்களை (ஹோலண்ட் நாணயம்) அவள்கள் உயர்த்தியே கேட்பாள்கள்”

    “பாரிஸ் விபச்சாரிகளை….”

    “அவள்கள் எதனையுமே காட்டாமல் காசைப் பறித்துவிடுவாள்கள்.”

    “உனது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பாரிஸில் நல்ல விபச்சாரிகளும் உள்ளனர்.”

    “என்னைக்காட்டிலும் உனக்குப் பாரிஸ் அனுபவம் அதிகம் என நினைக்கின்றேன்.”

    இருவரது சம்பாஷணைக்குள்ளும் ட்ரைவர் தலையிடுகின்றார்.

    “5000 FCFA அரை மணித்தியாலயங்களைக் கழிப்பதற்காகவே என்கின்றாள். 50,000 FCFA ஒரு இரவைக் கழிப்பதற்காம். சம்மதமா?”

    “குறை” என அவர் கேட்கவில்லை. “எனக்குப்பசியாக உள்ளது. உங்களுக்கும் பசியாகஇருக்கும் எனநினைக்கின்றேன். முதலில் சாப்பிடுவோம்” என்றவுடன் மொத்தமான கறுப்பி இடத்தைவிட்டுத் தனது பிருஷ்டங்களைக் காட்டிவிட்டு மறைந்துகொள்கின்றாள்.

    அவர்கள் இரண்டு கோழிக்கறிக்கு ஓடர் பண்ணுகின்றனர். ட்ரைவரோ தனக்குப் பசியில்லை, தாகம் என்று ஒரு பெரிய காஸ்டல் பியரை எடுத்துக்கொள்கின்றான்.

    நான் எனக்காக ஒரு சின்ன காஸ்டல் பியரை எடுக்கின்றேன்.

    அவர்கள் சாப்பிட்டும் குடித்தும் கொண்டிருந்தபோது மொத்தமான கறுப்பியின் தலைக்கறுப்பைக் காணவேயில்லை. கசெட்டுகள் விற்கும் பையன் ஒருவன் எனக்கு முன்னே வந்து “என்னிடம் நல்ல பாடல் கசெட்டுகள் உள்ளன, வேண்டுமா?” எனக்கேட்டான்.

    “சாடே ஆடுவின் கடைசி அல்பம் உள்ளதா?”

    அவனிடம் அது இருக்கவில்லை.

    “செலின் டியோன் உள்ளது வேண்டுமா?”

    “வேண்டாம்”

    அவன் போய்விட்டான்.

    அவன் போனபின்னர் ஒரு மெல்லிய கறுப்பி எனக்கு முன்னே வந்து எனது அனுமதியையும் கேட்காமல் அமர்ந்தாள்.

    “எனக்கு 1000 FCFA தருவாயா?” இது அவள்.

    “மன்னிக்கவும் என்னிடம் இல்லை” என்றதும் அவள் போய்விட்டாள்.

    “காலமும்தோற்றமும்” மீதான விரிவுரைக் குறிப்புகளை பைலுக்குள் வைத்துவிட்டு விழிகளைச் சற்றே மூடினேன். தூங்குவதற்காக அல்ல. அளவுகள் மீது சற்றே அசைபோடுவதற்காக….

    கறுப்பர்களில் பலருக்கு மொத்தமான பெண்களில்தான் ஓர் அதீத ஈர்ப்பு உள்ளது எனும் விஷயம் பாரிஸிற்கு வந்தபின்னர் எனக்குத்தெரிந்தது. இந்த ஈர்ப்பின் மூலங்களைப் பெரிதாகத் தேட நான் ஒருபோதுமே வெளிக்கிட்டதில்லை.

    ஆனால் முதலாவது தடவையாகப் பாரிஸில் உள்ள செனகல் மதுச்சாலை ஒன்றிற்குள் அகஸ்மாத்தாக உள்ளிட்டபோது அங்கே கோலா ரின்களின்முன் (பின்னர் தான் தெரியவந்தது கோலா ரின்களை நிறைத்திருப்பது பியர் என்று.) அமர்ந்திருந்த விபச்சாரிகளைக் கண்டு நடுங்கிவிட்டேன். அவர்களது கொங்கைகள் அவள்களைக் காட்டிலும் மொத்தமானவையாக இருந்தன. ஆனால் மதுச்சாலையில் மப்பில் இருந்த கறுவல்கள் அவர்களைப் பார்த்துக் கண்ணடிக்கும் விதத்தைக் கண்டதும் எனது நடுக்கம் சற்றே றிவேர்ஸ் கியர் போட்டது.

    எனக்கு அருகிலே நின்று கார்ல்ஸ்பேர்க் பியர் குடித்துக்கொண்டிருந்த மெல்லிய கறுவல் அவள்களில் ஒருத்தியைக்காட்டி “உனக்கு அவளைப் பிடித்துள்ளதா?” எனக்கேட்டுவிட்டுச் சிகரெட் ஒன்றை எனது உதட்டில் வைத்து மூட்டியும் விட்டபின் இவன் ஒருவேளை “மாமா”வாக இருக்கலாமோ என்று யோசித்தபடி முதலாவது புகையை வெளியேவிட்டேன்.

    “அவளை உனக்குப் பிடித்துள்ளதா? சொல்! அவள் எனது சகோதரிபோல. நான் தலையிட்டால் ரேட்டைக் குறைப்பாள். அவள் உன்னைப் பார்க்கின்றாள். அவளைப்பார். லைட்டாகக் கண்ணடி.”

    “நான் இங்கே வந்தது குடிப்பதற்காகவே. பெண் தேடியல்ல. ஆனால் அவள் அதிக மொத்தமாகவுள்ளாள்” என்றேன்.

    “மொத்தமான பெண்களில் உனக்கு வெறுப்பா? உனக்கு அவர்களைப் பிடிப்பதில்லையா? உனக்குத் தெரியுமா நாங்கள் மொத்தமான பெண்களின் சம்மதத்திற்காகத் தவம் இருக்கும் விஷயங்களை? உனக்குத் தெரியுமா எங்களது பெண்கள் தாங்கள் மொத்தமாவதற்கு எடுக்கும் கரிசனையை? உனக்குத் தெரியுமா, எமது தேசத்தில் மணமான ஒரு பெண் மெலிந்தால் இதற்கு அர்த்தம் இவளது புருஷன் இவளை முறைப்படி பராமரிக்கவில்லையென்பது? எங்களது பெண்கள் எங்களை வசீகரிக்க மொத்தமானவள்களாக இருப்பதற்காகத் தங்களைக் கொழுக்கவைக்கும் உணவுவகைகளை உண்ணும் விஷயம் உனக்குத் தெரியுமா?

    “சகோதரரே! மன்னிக்கவும். நான் உங்கள் முன் மொத்தமான பெண்களுக்கு எதிரான எந்தப் பிரகடனத்தையும் வைத்தேனா? ஏன் இந்த ஆவேசம்?”

    “நீ எதனையும் என்முன் விமர்சி. ஆனால், மொத்தமான பெண்களை மட்டும் விமர்சிக்காதே.”

    “நான் விமர்சிக்கவில்லையே….” “ஆனால் மொத்தம் உன்னை விமர்சிக்கின்றது என நினைக்கின்றேன்”

    “நீ சொல்வதில் உள்ள அர்த்தங்கள் இருப்பின் தனிப்பட்ட தெரிவுகளோடு சம்பந்தப்பட்ட விஷயம்.”

    “உனக்கு நான் காட்டிய அந்தப் பெண் எனது முதலாவது காதலியாக இருந்தாள். இவளைக் காட்டிலும் மொத்தமான ஒருத்தியின்மீது எனக்கு மையல் வந்ததால் இவள் என்னைக் காதலிப்பதை நிறுத்திக் கொண்டாள்.”

    என்னோடு பேசிக்கொண்டிருந்த ஆபிரிக்கனை நான் இப்போது நிமிர்ந்து பார்த்தேன். அவன் மிகவும் ஒல்லியாக இருந்தான்.

    “நீங்களும் உங்களது காதலிகள் போல மொத்தமாக இல்லாதிருப்பது ஏனோ?” இது எனது கேள்வி. பதில் எதுவும் சொல்லாமல் அவளை நோக்கிச் சென்று ஏதோ பேசுகின்றான். அவளோ சினந்து விழுவது போல எனக்குப்படுகின்றது. அவர்கள் எதுவும் பேசலாம், எப்படியும் சினக்கலாமென எனக்குள் சொல்லியபடி பியரைக் குடிக்கின்றேன்.

    அவன் மீண்டும் என் பக்கம் வருகின்றான்.

    “நான் அவளை இன்றைய இரவுக்காகக் கேட்டேன். அவள் கேட்பதைத் தருவதாகவும் சொன்னேன். மறுத்துவிட்டாள். ஆனால் உன்னைப் பிடித்துள்ளதாம். அவளுடன் போகின்றாயா? உன்னை அவளுக்குப் பிடித்துள்ளதால், நிச்சயமாக அதிகம் கேட்கமாட்டாள். அவள் சுவையானவள். பார்! அவளைப் பார்! அவள் உன்னையே பார்க்கின்றாள்….” என்கின்றான் அவன்.

    ஆம்! அவள் என்னைப் பார்க்கின்றாள். என்னை அழைக்கின்றாள். காமத் திரவியங்களைச் சுமந்த சின்ன விழிகள்.

    “சகோதரரே! மன்னிக்கவும். நான் இங்கே வந்தது பெண் தேடியல்ல….”

    “ஏன் மொத்தமான பெண் ஒருத்தியோடு ஓர் அனுபவத்தைப் பெற மறுக்கின்றாய்?”

    “அது எனது செக்ஸ் விருப்போடு சம்பந்தப்பட்டது”

    அவன் மெளனமாக – நான் கிளாஸில் இருந்த கடைசித் துளியையும் உறிஞ்சிவிட்டு வெளியேறுகின்றேன். ****** இரண்டு வெள்ளைக் கிழவர்களும் மிகவும் ரசனையோடு கோழிக்கறியைச் சாப்பிடுவது போல எனக்குப்பட்டது. அவர்கள் உண்மையிலேயே வெயிலாலும் பயணத்தாலும் களைத்துப் போய் இருந்தனர். மொத்தமான கறுப்பி ட்ரைவர் பக்கம் வந்து பம்பாராவில் ஏதோ கிசுகிசுத்து விட்டு மறைகின்றாள்.

    “அவளுடன் இரவைக் கழிக்கச் சம்மதமா?” ட்ரைவர் இரண்டு கிழவர்களையும் பார்த்துக் கேட்கின்றான்.

    “நாங்கள் மிகவும் களைத்துப் போய் உள்ளோம். அவளுடனான சந்திப்பை இன்னொரு தினத்தில் வைத்துக் கொள்ளுதல் நல்லது” என்கின்றார் ஒரு கிழவர்.

    “என்னால் இன்னமும் விலையைக் குறைத்துக் கேட்க முடியும்” என்கின்றான் ட்ரைவர். “விலை தொடர்பாக எங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால்….” என ஒரு கிழவர் ஏதோ சொல்ல வெளிக்கிடும் வேளையில் மொத்தமான கறுப்பி தன்னை இன்னமும் செக்ஸியாகக் காட்டிக்கொண்டு மேசைக்கு முன்னாள் வருகின்றாள்.

    “அவளிடம் சொல்! நாங்கள் இன்னும் மூன்று தினங்களில் இங்கே வருவோமென்று….” என்றபடி ட்ரைவரைப் பார்க்கின்றார் கிழவர். ட்ரைவர் அதனைப் பம்பாராவில் அவளுக்கு மொழிபெயர்க்கின்றான்.

    “இன்னும் மூன்று தினங்களில் நான் பமாக்கோவில் இருக்கமாட்டேன்” என்கின்றாள் அவள்.

    “எப்போது திரும்பி வருவாய்?”

    “ஒரு மாதம் செல்லும்.”

    “நீ திரும்பி வரும்போது நாங்கள் ஹோலண்டில் இருப்போம்” என்ற கிழவர்கள் சற்றே குழம்பிக்கொண்டதைப் போல எனக்குப்பட்டது.

    “தலையைப் போட்டு உடைக்க வேண்டாம். எனது சகோதரி என்னைக் காட்டிலும் இளமையானவள். மூன்று தினங்களில் நீங்கள் இங்கே வந்தால் அவளைச் சந்திக்கலாம். உங்களது தேவைகளுக்குத் தோதானவளாக இருப்பாள் என்பதைத் திட்டவட்டமாக என்னால் சொல்ல முடியும்” என்றபடி அவள் தனது பிருஷ்டங்களைக் காட்டி மறைய, அவர்களும் பில்லைக் கட்டிவிட்டு வெளியேறுகின்றனர்.

    நான் மீண்டும் ஒரு காஸ்டல் பியருக்கு ஓடர் செய்கின்றேன்.

    (தினக்குரல், இலங்கை, 29 ஓகஸ்ட் 1999)

    Postad



    You must be logged in to post a comment Login