Recent Comments

    கொல்லைப்புறக் கமத்தொழில் விளக்கம்

    கொஞ்சமாய் வெயில் எறித்து, குளிர் சாடையாய் விட்டுப் போனவுடன் தோட்டத்தைக் கொத்த ஆரம்பித்திருப்பீர்கள். கடந்த சுவடியில் நன்றாகக் குப்பை கொட்டச் சொல்லி வழி காட்டியதால், நாற நாற உக்கிய குப்பையைக் கொண்டு வந்து கொட்டியிருப்பீர்கள். பிறகென்ன! குளிர் விட்டு விட்டதே, கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினால், கோடை முழுவதும் மரக்கறி விளையும் என்று கைகள் குறுகுறுத்தால்... சற்றே பொறுங்காள்! கனடிய காலநிலை நம் ஊர்க் காலநிலை போன்றதல்ல. எங்கள் மார்கழிப் பனியிலும் பயிர்கள் வீறு கொண்டு எழுந்து நிற்கும். ஆனால் இங்கே... நம்ம ஊர்க் கத்தரி, மிளகாய், தக்காளி, பாகல், வெண்டி, கியூக்கம்பர் போன்ற கோடைகாலப் பயிர்கள் சற்றே குளிர் வந்தாலும், நடுங்கி பிராணனை விடக் கூடும். குளிர் என்றால் பனி கொட்டும் குளிர் மட்டும் அல்ல. பத்து தசம பாகை வெப்பநிலை இருக்கும்போது, காற்று வீசினால் இன்னும் குளிராகும். இந்தக் குளிரில் மிளகாய், கத்தரி போன்றன குளிர் அதிர்ச்சிக்குள்ளாகினால் பூக்க அதிக நாட்கள் எடுக்கும். சில நேரம் பூக்கவே மாட்டா. கத்தரி, மிளகாய் வைத்தோம், பூக்கவே இல்லை என்று பலர் சொல்லக் கேட்டோம். காரணம் இது தான். வெப்பநிலை நான்கு சதம பாகைக்குக் கீழ் சென்றால், அதிலும் நல்ல காற்று வீசியிருந்தால், அல்லது மெதுவான உறைபனி வந்தால், கன்றுகள் இறந்தே விடும்.  நெருப்பினால் சுட்டது போல வெந்து போயிருக்கும். ஆனால், கோவா இனத்தைச் சேர்ந்த கோவா, கொலார்ட், கேல், வெண்காயம், பீட்ரூட், சுவிஸ் சார்ட் போன்றன குளிருக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியன. அவற்றை நடலாம். ஆனாலும் குளிரும் வெயிலும் மாறிமாறி வர அவையும் வேகமாக வளர மாட்டா. பயிர்களை நட்ட பின்னால், காலநிலை மாறி குளிர் வரும் என்று தெரிந்தால், தண்ணீர்  தௌpத்து, கன்றுகளை ஒளி உட்புகக் கூடிய பிளாஸ்டிக் பைகளால், போத்தல்களால் மூடி விடுங்கள். மறக்காமல் பகல் நேரம் அவற்றை எடுத்து விடுங்கள். இல்லாவிடில் வெயில் அவற்றைச் சுட்டெரித்து விடும். கொக்கோ கோலா பிளாஸ்டிக் போத்தல்களை பாதியாய் வெட்டி காற்று போக துளையிட்டு மூடி விடலாம். சில நேரம் கன்றுகளைப் பகல் வெயில் சுட்டெரிக்கும். இலைகளால் மூடி விடுங்கள். மாறி வரும் உலகக் காலநிலை காரணமாக எப்போது குளிர் தாக்கும் என்று கூற முடியாது. ரொறன்ரோ பகுதியில் விக்டோரியா தினமான மே மாதக் கடைசிக்குப் பின்னால் தான் வெப்பநிலை சீராக, மரக்கறிகளுக்கு ஏற்ற விதத்தில் இருக்கும். அதன் பின்னால் நடும் பயிர்களுக்கு ஆபத்து இல்லை. எனவே, அவசரம் வேண்டாம்.

    Postad



    You must be logged in to post a comment Login