Recent Comments

    மகாராணியிடம் விருது பெறுங்கள்!

    உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களின் பிறந்த நாள், திருமண நாளுக்கு மகாராணி, பிரதமர், தேசாதிபதி, மாகாண முதல்வர், மாகாண ஆளுனர் போன்றவர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் பெற முடியும். நூறு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எலிசபெத் மகாராணியாரே பிறந்த நாள் வாழ்த்து அனுப்பி வைப்பார். எட்டு வாரங்களுக்கு முன்பாக, பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை அனுப்பி வைக்க வேண்டும். 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசாதிபதி, மாகாண ஆளுனர் நாயகம் வாழ்த்துக்களை அனுப்புவார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிரதமர் வாழ்த்து அனுப்புவார். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒன்ராறியோ மாநில முதல்வர் வாழ்த்துக்கள் அனுப்புவார். திருமண நினைவுதினங்கள் போன்றவற்றிற்கும் இவர்கள் வாழ்த்துக்கள் அனுப்பி வைப்பார்கள். திருமணம் செய்து அறுபது வருடங்களுக்கு மேல் இணைந்து வாழும் தம்பதிகளுக்கு மகாராணியார் வாழ்த்துக்கள் அனுப்புவார். ஐம்பது வருடங்களுக்கு மேல் திருமணமானோருக்கு தேசாதிபதியும், மாகாண ஆளுனரும் வாழ்த்துத் தெரிவிப்பார்கள். 25 வருடம் திருமண வாழ்வை நிறைவு செய்தோருக்கு பிரதமரும் 40 வருடங்கள் இணைந்தோருக்கு ஒன்ராறியோ மாகாண முதல்வரும் வாழ்த்து அனுப்புவார்கள். இவற்றுக்கு மூன்று முதல் எட்டு வாரங்களுக்கு முதல் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். சில நேரங்களில் பிறப்பு மற்றும் திருமண அத்தாட்சிப் பத்திரங்கள் அனுப்ப வேண்டும். இணையத்திலேயே நீங்கள் இதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யலாம். http://www.lgontario.ca/en/contact-and-info/pages/order-greetings.aspx என்ற இணையத் தள முகவரியில் நீங்கள் இது பற்றிய மேலதிக தகவல்களையும் விண்ணப்பப் பத்திரங்களையும் பெறலாம். பலரிடம் இருந்து ஒரே தடவையில் வாழ்த்துக்களைப் பெற, உங்கள் பகுதி மாகாண உறுப்பினரையோ, சமஷ்டிப் பாராளுமன்ற உறுப்பினரையோ நாடுங்கள். அவர்கள் உங்கள் சார்பில் விண்ணப்பித்து வாழ்த்துக்களை ஒரேயடியாகப் பெற வைப்பார்கள். இவை முற்றிலும் இலவசமானவையே. மிச்சமாய் தமிழர் எவருமே இல்லாதபடிக்கு உலகத்தில் உள்ள விளம்பரதாரர்கள், முகவர்கள், இலக்கியப் பிரகிருதிகள் எல்லோருக்கும் கொஞ்சத் தமிழர்கள் அன்னதானம் போல அள்ளி அள்ளி விருது தானம் செய்து தொலைக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் மகாராணிக்கே இவர்கள் விருது கொடுக்கக் கூடும். அதற்கு முன்னால், நீங்கள் உங்களதும் உங்கள் துணையினதும் பெற்றோர்களுக்கு மகாராணியிடமிருந்தே வாழ்த்து வாங்கிக் கொடுங்கள். அவர்கள் அவற்றைப் பிரேம் பண்ணி பெருமை கொள்வார்கள்.

    Postad



    You must be logged in to post a comment Login