Recent Comments

    யாழ்ப்பாணத்து மனுநீதி

    ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    ஈழத்தமிழர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் யாழ்ப்பாணிகள் வெடி கொளுத்திக் கொண்டாடாத குறை தான். அப்படி ஒரு மகிழ்ச்சி.

    அதுவும் மாவீரர் மாதத்தில்!

    (யாருடையவோ பிறந்த நாள் கூட என்று ஒரு இன்டலெக்சுவல் போட்ட பதிவைக் கண்ட ஞாபகம்.)

    இனியென்ன?

    ஒரு எக்ஸ்ட்ரா கொத்துரொட்டி வெட்டிக் கொண்டாட்டம் தான்!

    வெளியில் வந்த கையோடு அவர்களும் சயனைட்டை அடித்தால் நிச்சயம் மாவீரர் தினக் கொண்டாட்டத்தில் அவர்களது படங்களுக்கும் விளக்கு ஏற்றி பூ வைக்கப்படும்.

    காதில்!

    •••

    புலிகள் இயக்கத்தின் இரகசியக் காப்பு மரண தண்டனைக் குற்றம் வரை போகக் கூடியது. மண்டையில் போடப்படும் பயம் ஒன்றே இரகசியத்தை வெளியில் வர விடாமல் வைத்தது என்பதும், அந்த இரகசியத்தைக் காக்க சயனைட் அடித்து தற்கொலை செய்ய வேண்டும் என்பது இயக்க நடைமுறையாகவும் இருந்த அமைப்பு அது.

    ராஜீவ் போன்ற ஒரு உச்ச இலக்கு ஒன்றைக் கொல்வதாக இருந்தால், அது இயக்கத்தின் உயர் மட்டங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடியது. அதில் பங்கு பெற அனுப்பப்படுகின்றவர்களுக்கும் தேவை கருதிய தகவல்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும்.

    இந்த நிலையில் இந்தியர்களான இவர்கள் இந்தக் கொலையின் சூத்திரதாரிகள் என்பது போன்ற பிரமையை இந்திய புலனாய்வாளர்களும் அரசியல்வாதிகளும் கட்டமைத்தது போலவே, புலிவால்களும் கட்டமைத்திருக்கிறார்கள்.

    கொலையில் பயன்படுத்தப்பட்ட இவர்களுக்கு இந்தக் கொலை பற்றிய எந்த விபரமும் முன்தெரிந்திருக்க நியாயமில்லை. அதிலும் இவர்கள் பிரபாகரன் மீது விசுவாச சத்தியப்பிரமாணம் எடுத்து, சயனைட் கழுத்தில் கொழுவிக் கொண்டு திரிந்தவர்களும் அல்லர். தமிழீழம் என்பது பற்றிய தாற்பரியத்தை ஆழமாகத் தெரிந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் கூட இல்லை. (யாழ்ப்பாணிகளுக்கு மட்டும் தெரிந்திருக்கும் ஆக்கும்!)

    மிஞ்சிப் போனால், யாழ்;ப்பாணிகளுக்கு தமிழக சினிமா ஹீரோக்கள் மீது இருக்கும் ஈர்ப்பு போல, புலிகள் மீதும் இருந்திருக்கக் கூடும். ஆனால், உயிரைக் கொடுக்கும் அளவுக்கு அல்ல.

    ஒன்றும் தெரியாத அப்பாவிகள் இல்லை என்று சொல்ல முடிந்தாலும், கொலைக்கு உடந்தை (guilty by association) என்ற வகையில் கூட குற்றம் சாட்டப்பட முடியாதவர்கள்.

    சாதாரண கொலைக் குற்றங்களுக்கான ஆயுட்தண்டனை கூட அதிகபட்சம் இருபது வருடங்களாக இருக்கும் போது, முப்பதாண்டுகள் இவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் வாழ்வை முழுமையாக இழந்திருக்கிறார்கள்.

    ராஜீவ் கொலையின் பின்னால், வெறும் புலிகள் மட்டும் இல்லாமல், பெரிய சதிவலைப் பின்னல் இருந்தது குறித்து பெரும் குற்றச்சாட்டுக்கள் இருந்தன. இதில் இந்திய அரசியல் உயர்மட்டங்களில் கூட தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    பொதுமக்கள் மத்தியில் இருந்த கொதிப்பு உணர்வைத் தடுக்க, உலகெங்கும் நடக்கும் வழமை போல, யாரையாவது பிடித்து குற்றங்களைச் சோடித்து உள்ளே தள்ளி பிரச்சனையை முடிப்பதற்கான முயற்சியில் ஒன்றாகத் தான் இவர்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள்.

    இந்திய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இவர்களைப் பயங்கரவாதிகள் என்று வடிவமைத்தது போலத் தான், புலி ஆதரவாளர்களும் இவர்களைப் புலிகளாக வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள்.

    ஒருபோதுமே, எவருமே, மிகப் பெரிய சதி வலையமைப்புக்குள் இவர்கள் விசயம் தெரியாமல் மாட்டிக் கொண்டவர்கள் என்பதைப் பற்றி பேசவேயில்லை.

    இவர்களுக்கு வழக்குப் பேசுவதாகக் கூறி, புலன் பெயர் நாடுகளில் எவ்வளவு பணம் சேர்க்கப்பட்டு சுருட்டப்பட்டிருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    அவர்களை தங்களது ஈழ அரிப்புக்கு சொறிவதற்காக பலரும் பயன்படுத்திக் கொண்டார்களே ஒழிய, அவர்களின் விடுதலைக்காக முழுமுயற்சி எடுத்துக் கொண்டதாகவோ, அவர்கள் இதில் சம்பந்தமேயில்லாமல் மாட்டிக் கொண்டவர்கள், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவோ இல்லை.

    இதைச் சாட்டி நெடுமாறன், வை.கோ போன்றோரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டிருக்கவும் கூடும். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற அவர்களின் கோசங்களும் அரசியல், புலன் பெயர் பணவரவு லாபங்களும் கருதியதே.

    தற்போது இவர்களுக்கு எல்லாம் இந்த கைதிகள் வெறும் சிறை மீண்ட செம்மல்கள் தான்.

    இவர்களைப் புலிகள் தான் என்று காட்டிக் கொள்வதில் இவர்களுக்குப் பெருமையும் இருக்கிறது.

    இதை விட, சீமானும் 'ஆமாண்டா, நாங்க தான் கொலை பண்ணினோம். என்னடா பண்ணுவீங்க?' என்று கெக்கே பிக்கே சிரிப்பு சிரித்ததெல்லாம் இவர்களை இன்னும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்குமே தவிர, எந்த வழியிலும் இவர்களின் விடுதலைக்கு வழி விட்டிருக்காது.

    யாழ்ப்பாணிகளின் இந்த செயற்பாடுகளுக்குப் பின்னால் இருப்பது இரண்டு விடயங்கள்.

    ஒன்று, இலங்கையில் இந்தியப் படையினரின் அட்¬ழியங்களுக்கு பதிலடியாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது. இது புலன் பெயர்ந்த பலரின் மனதில் இன்றைக்கும் பதிந்து போய் இருக்கும் எண்ணம். முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாகக் காட்டும் பலரின் மனதிலும் வெளிப்படையாக இருப்பது.

    மற்றது, மாவீரர்களுக்கு விளக்கு கொளுத்துவதன் மூலம் தங்களைப் புனிதப் போராட்டத்தை ஆதரிக்கும் புனிதப் போராளிகளாகப் படம் காட்டுவதைப் போல, இவர்களை விடுவித்தது தங்களுக்கு மகிழ்ச்சி என்பதன் மூலம் இவர்களும் போராளிகளே, அதனால் நாங்களும் புனிதப் போராட்டத்தை ஆதரித்த புனிதப் போராளிகள் தான் என்ற பிரமையை ஏற்படுத்துவது.

    இந்த முப்பதாண்டு காலத்தில் இவர்களை விடுவிக்க முழுமையான முயற்சிகள் எதுவும் புலன் பெயர் சமூகத்தால் எடுக்கப்பட்டதில்லை. தீக்குளித்த தியாகி முத்துக்குமாரின் குடும்பத்துக்கு எதையும் செய்யாமல், பேஸ்புக்கில் அஞ்சலி செலுத்திப் பெருமைப்பட்டு அப்பால் போவதைப் போல, அவ்வப்போது அவர்கள் விடுவிக்கப்படாதது பற்றி சொல்லிக் கொள்வது தான் இவர்கள் இது வரை செய்தது.

    இன்றைக்கு இவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, இவர்களின் நன்னடத்தையைக் காட்டி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தமையே.

    ஜெயலலிதா இவர்களின் விடுதலையை மறுத்தாலும், பிந்திய அ.தி.மு.க அரசு இருந்த காலத்தில் பரிந்துரை செய்யப்பட்ட போதும், மத்திய அரசின் ஆளுனரும், மத்திய அரசும் மறுப்புத் தெரிவித்ததால் தான் இவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருந்தார்கள்.

    இப்போதும் மத்திய அரசின் ஆட்சேபனையையும் மீறி இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

    இந்த இரண்டு விடயங்கள் பற்றியும் புலி ஆதரவாளர்கள் பேசப் போவதில்லை.

    புலிகள் முள்ளிவாய்க்காலில் மண் கவ்வியதற்கு கருணாநிதி தான் காரணம் என்ற கதை புனைவில் தி.மு.க புலி ஆதரவாளர்களுக்கு பரம வைரியாக இருக்கிறது.

    யாழ்ப்பாணத்தில் இந்துத்துவாவை எப்படியாவது திணிப்பது என்று பா.ஜ.க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு, அதை வைத்து ஈழம் எடுக்கலாம் என்;ற நினைப்பில் இருக்கும் யாழ்ப்பாணிகள் மனதார ஆதரவு அளித்தபடியே இருக்கிறார்கள்.

    இதன் அடிப்படையில் தான் இந்திய அனுசரணையுடன் பல நாடகங்கள் இலங்கைத் தமிழ் அரசியலில் அரங்கேறி வருகின்றன.

    தங்களுடைய தலைவரைக் கொன்றதால் காங்கிரஸ்காரர்கள் ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள். அதில் நியாயம் இருக்கலாம்.

    ஆனாலும், ராஜீவின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இல்லை. பிரியங்கா கூட முன்பு ஒரு தடவை நளினியைச் சந்தித்திருந்தார்.

    இந்த விடுதலையில் தி.மு.கவைப் பாராட்டக் கூடாது என்ற நினைப்பில் இருக்கும் யாழ்ப்பாணிகள், விடுதலையைத் தடுத்த பா.ஜ.க அரசை கண்டிக்கவோ, திட்டவோ தயாராக இல்லை.

    தங்கள் ஈழ அரிப்பை சொறிந்து கொள்ள வசதியாக இந்த விடுதலை யாழ்ப்பாணிகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

    'ராஜீவைப் போடத் தானே வேணும்' என்று தீர்ப்பளிக்கிறவர்களுக்கு அதே நியாயம் தங்கள் எதிரிகளுக்கும் இருக்கும் உண்மையைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

    யாழ்ப்பாண மனுநீதி அப்படி!

    இவற்றுக்கு மேலாக, ஒரு நாட்டின் பிரதமரைக் கொல்வதன் மூலம் தங்கள் இனத்தின் அரசியல் எதிர்காலம் எப்படிச் சூனியமாக்கப்பட்டது என்பதை இன்னமும் யாழ்ப்பாணிகள் விளங்கிக் கொள்ளவோ, விளங்கினாலும் ஏற்றுக் கொள்ளவோ தயாராக இல்லை.

    அன்றைய அந்தக் கொலை தான் ஒரு நாடே புலிகள் தலைமையிலான எந்தத் தீர்வுக்கும் தயாராக இல்லாத நிலைமையை உருவாக்கியது. அதனால் தான் காங்கிரஸ் போய் அதன் பரம எதிரியான பா.ஜ.க வந்தாலும், அதே கடும் போக்கை கடைப்பிடிக்கிறது.

    அவர்கள் கொண்டு வந்த ஒப்பந்தத்தைக் கூடக் குழப்பியடித்து, இன்றைக்கு அதையாவது பெற்றுத் தாங்கோ என்று கெஞ்சும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.

    'ஆளைப் போட்டால் சரி!' என்ற மகத்தான தம்பியிச தத்துவம் தான் இலங்கை ஜனாதிபதிகளையும் அமைச்சர்களையும் போட்டுத் தள்ளும் போது, யாழ்ப்பாணிகளை ஆனந்தக் கூத்தாட வைத்தது.

    எதிரிகளைப் போடலாம் என்ற உங்கள் நியாயம் உங்கள் எதிரிகளுக்கும் இல்லாமலா போகும்? ராஜீவைக் கொல்ல வேண்டும் என்று நீங்கள் தீர்ப்பளித்தால், பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்ட போது வந்து காப்பாற்ற வேண்டிய தேவை அவர்களுக்கு என்ன இருக்கிறது?

    நான்காவது பெரிய இராணுவத்தை விரட்டினோம் என்று பீற்றிக் கொண்ட உங்களுக்கு இந்த தம்மாத்துண்டு இலங்கை இராணுவத்திடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று கதறும் போது எந்த வெட்கம், மானம், ரோசம், சூடு, சுரணை எதுவும் இருக்கவில்லை. ஆனால் கோபம் மட்டும் மூக்கில் வந்து விடுகிறது.

    எந்த வித அரசியல் முன்நோக்கும், சாதுரியமும் இல்லாமல் தனக்கு தடையாக இருப்போரைப் போட்டுத் தள்ளினால் சரி என்ற சிந்தனையோடு இருந்த தலையரும், எவருடைய உதவியும் இல்லாமல் அடித்துப் பறிப்பார் என்ற கனவில் இருந்த அவருடைய பக்தர்களுக்கும், தங்களுக்கு அப்பால் அரசியல் இயங்கும் முறை பற்றி இன்றைக்கும் தெரியவில்லை.

    நான்காவது பெரிய இராணுவத்தை விரட்டினோம் என்று புலிகள் புழுகியபோது விசில் அடித்த அதே கூட்டம் தான், 'இந்தியா காப்பாற்று' என்று கூக்குரல் இட்டது.

    தலைவரைக் காப்பாற்றவில்லை என்று கருணாநிதி முதல் சோனியா வரை இன்றும் திட்டிக் கொண்டிருக்கிறது.

    காட்டுக்குள் நீண்ட நாளாகக் காணாமல் போயிருந்த பிரபாகரன் பேட்டி கொடுக்கும் போது, வந்திருந்த இந்தியப் பத்திரிகையாளர்கள், ராஜீவ் கொலை பற்றிக் கேட்ட போது, பாலசிங்கம் கூட, 'ஏன் இப்போது அதையெல்லாம் கிளறுகிறீர்கள்?' என்று சடையப் பார்க்கிறார்.

    'இந்திய இராணுவம் உங்களை வந்து கைது செய்தால்?' என்ற கேள்விக்கு, 'அவையை வந்து பிடிச்சுக் கொண்டு போகச் சொல்லுங்கோ!' என்று கொடுப்புக்குள் சிரிப்போடு சொன்ன பிரபாகரன் கூட, 'துன்பியல் சம்பவம்' என்று சொல்லிக் கடந்து போக விரும்புகிறார்.

    புலிகள் கூட அதனால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டு, தங்கள் தவறை உணர்ந்து போக விரும்பினார்கள்.

    சாவகச்சேரியைப் பிடிக்க முயற்சித்த போது, இந்தியாவின் எச்சரிக்கையை அடுத்து வாலைச் சுருட்டிக் கொண்டிருந்ததை புலிவால்கள் மறந்து விட்டிருப்பார்கள்.

    ஆனால், போராட்டத்திற்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத, 'அண்ணைக்கு காசைக் குடுத்தாச் சரி' புலன் பெயர் புலிவால்கள் இன்றைக்கும் அதே கொலைவெறிச் சிந்தனையோடு தான் உலாவிக் கொண்டிருக்கின்றன.

    அந்தச் சிந்தனை தான் இன்றைக்கு விடுதலையானவர்களை புலிகளாகக் கட்டமைத்து, கொண்டாடுகிறது.

    இன்றைக்கு கூட, இவர்களுக்கும் அந்தக் கொலைக்கும் சம்பந்தம் இல்லை, இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ற கதை கூட இல்லை. தாங்கள் ஆனந்தக் கூத்தாடிய கொலைக்கு காரணமானவர்கள் என்பதில் பெருமை கொண்டதால் தான் இன்றைக்கு இந்த விடுதலையையும் ஆனந்தமாகக் கூத்தாட முடிகிறது.

    பேரறிவாளனையும் இப்படித் தான் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல புலியாக்கிப் பார்த்தார்கள். தமிழக அரசியல் வாதிகள் செல்பி எடுத்தார்கள்.

    இப்போது ஆளையே காணோம்.

    இந்தக் கொலையால் ஒரு இனம் செலுத்திய விலையை உணர்ந்து கொள்ளாமல், பிரபாகரன் கொண்டிருந்த அதே கொலை வெறிச் சிந்தனையோடு, சர்வதேசம் காப்பாற்று(ம்) என்று ஜெனிவாவுக்கு அலைகின்ற இந்தக் கூட்டத்தை வைத்து ஒரு தலைமுறைக்கு ஒரு அயோக்கியக் கும்பல் 'தீர்வு வரும், ஆனால் வராது' என்றும், 'தலைவர் எரித்திரியாவில் இருக்கிறார்' என்றும் ஏய்த்துப் பிழைப்பு நடத்திக் கொண்டு தான் இருக்கும்.

    Postad



    You must be logged in to post a comment Login