Recent Comments

    கொண்டாடப்பட வேண்டியவர்கள்!

    அன்பு நண்பர்களுக்கு,

    முதலே சொன்னால், உந்த கிறுக்கன் 'அதெல்லாம் தேவையில்லை, அப்பிடி நான் ஒண்டும் புடுங்கேலை! பேசாமல் இருங்கோ' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்து விடுவான் என்று தெரிந்து, ஈரச்சாக்குப் போட்டேனும் அமுக்கிப் பிடித்து கௌரவித்தே ஆவது என்று இரகசியமாகவே இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கிறீர்கள்.

    'இரகசியமாகவே' என்பதும் ஒரு relative term தான்.

    கள்ளிக்கு அனுப்ப வேண்டியதை வள்ளிக்கு அனுப்பி அல்லலுறும் மாந்தர் தம் துயர் நீக்க வந்த Undo Button, Gmail போல மற்ற தொடர்பாடல் செயலிகளுக்கும் வராததால், 'ஐயோ, டீச்சருக்கு தெரிஞ்சா கொலை தான் நடக்கும்' என்பதில் முடிந்து விட்டது.

    என்னோடு பழகியவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு இடத்தில் சொல்லப்பட்ட கதையை இன்னொரு இடத்திற்கு நான் காவுவதில்லை.

    இரவுப் பார்ட்டி முடிந்து, விடிந்த கையோடு போன் அடித்து 'ராத்திரி உங்களைப் பற்றி...' நேர்முக வர்ணனை அண்டல் செய்து கொழுவி விட்டு கூத்துப் பார்ப்போர் முதல், சண்டை வந்ததும் முதல் வேலையாக 'உவர் முந்தி உங்களைப் பற்றி...' என்று இட்டுக்கட்டும் கதை சொல்லிகள் வரை கண்டு வந்திருக்கிறேன்.

    என்னை நம்பி சொல்லப்பட்ட எந்த இரகசியமும் எனக்கு அப்பால் போனதில்லை... பகையாக மாறினாலும்!

    மெளனமாகவே விலகிப் போய் விடுவேன்.

    எனவே, கொலைக்கு நான் உடந்தையாகி விட மாட்டேன்! ***

    என்னுடனான தொடர்பை பகிரங்கமாக சொன்னால், புலி வெருட்டும் என்று பயந்தும், புலம் பெயர்ந்த இலக்கியத்தின் ஆதியும் அந்தமும், புலி எதிர்ப்பின் அல்பாவும் ஒமேகாவும் தாங்களே என்று தமிழ்நாட்டில் அவிழ்த்து விட்டு பிலிம் காட்டும் தங்களுடைய திரைக்கதை சொல்லலுக்கு குந்தகமாகி விடும் என்ற நினைப்பிலும்...

    'உவனை நான் அறியேனே!?' என்று, சேவல் கூவ முன், முப்பது வருடங்களாக மறுதலித்து வரும் இலக்கிய மேதகுக்கள், பிரகிருதிகள் மத்தியில்,

    முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்க வந்திருக்கிறீர்கள்...

    என் மீதான பரஸ்பர அன்பையும் மதிப்பையும்!

    எப்போதோ நான் செய்து, கிட்டத்தட்ட மறந்து போயிருக்கும் விடயங்கள் பற்றி பேசி, இப்படி எப்போதுமே என்னை என் நண்பர்கள் நெகிழ வைத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

    ஆனால், புலி அழிந்து,  பல்லியின் வெட்டுண்ட வால்கள் மாதிரி ஆடிக் கொண்டிருக்கும் வால்களுக்குப் பயந்து, இன்றைக்கும் சில பலர் என்னோடான தொடர்பை ஒரு liability யாகப் பார்ப்பதை நம்ப முடியவில்லை.

    தாயகத்தில் எழுதி பிரபலமாகிய பலர் இன்றைக்கு பிரசுரம் காணும் எழுத்தாளர்களாகும் போது, தாயகத்தின் பெயரை கவனமாகவே தவிர்த்து விடுகிறார்கள்.

    என்னுடைய பெயர் எழுத்துக் கூட்டுவதும் உச்சரிப்பதும் சிலநேரம் கஷ்டமாயிருக்கக் கூடும்!

    இன்றைக்கும் என் நட்பு வட்டத்தில், ஏதோ ஒரு நம்பிக்கையில், அழகான படங்களுடன் கூடிய பெண் பெயர் Fake ID களிலும் இருந்து கொண்டு, என்னுடைய மூன்று புத்தகங்கள் அமேசனில் வெளிவந்தது பற்றி, 'எங்களுக்கு ஒண்டும் தெரியாது! நாங்கள் நித்திரை!' என்றபடி கம்மென்று கமுக்கமாக இருக்கும்  உலக இலக்கியச் செம்மல்;களைப் பார்த்து, தனியாக சத்தமாக சிரிக்கவும் பயமாக இருக்கிறது...

    வீட்டுக்காரர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்களே!

    ஏற்கனவே 'ரீச்சருக்கு தெரிஞ்சா..' க்கு சிரித்தே பிரச்சனையாகி விட்டது!

    நான் எதையும் பெரிதாக சாதித்ததாக ஒரு போதுமே நினைத்ததில்லை.

    நான் சாதிக்க வேண்டும் என்று நினைத்த விடயங்களே வேறு.

    நான் செய்ததெல்லாம், ஒரு சமூகத்தில் வாழுகின்ற மனிதன் தன் சமூகக் கடமையாக செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்ற ஒன்றைத் தான்.

    அதிகாரமும் அடக்குமுறையும் சமூக நீதிக்கு எதிராக செயற்படும்போது அதற்கு எதிரான தனது குரலை ஒவ்வொரு மனிதனும் எழுப்ப வேண்டும்.

    ஆனால் அது எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை.

    முடியாதவர்கள் மனம் வெதும்பி மெளனமாக இருக்கலாம்.

    ஆனால், சுயநலத்திற்காக அந்த அதிகாரத்தை புகழ்ந்தேத்தி தங்களை வளம்படுத்தும் ஈனத்தனத்தை அனுமதிக்கக் கூடாது.

    இனத்தில் அழிவில் லாபம் காண நினைக்கும் பிணந்தின்னிப் புழுக்களை பார்த்துக் கொண்டு மெளனமாக இருக்க முடியாது.

    என்னால் அந்தக் குரலை எழுப்ப முடிந்தது. அதைச் செய்தேன்.

    நீதிக்காக போராடவும் முடிந்தது, இன்னொரு தளத்தில்! அதையும் செய்தேன்.

    இது ஒரு தனிமனிதனின் சாதனை இல்லை.

    தாயகம் புலி எதிர்ப்பு என்ற முத்திரையையும் மீறி...

    அதில் துணிச்சலுடன் எழுதி 'தாயகம்காரர்' என்று பெயர் வாங்கிய எழுத்தாளர்கள்...

    என்னோடு தோள் கொடுத்து நின்ற தேடகம் நண்பர்கள்...

    பத்திரிகைத் தடை, கண்ணாடி உடைப்பையும் மீறி விற்ற கடைக்காரர்கள்...

    எந்த இயக்கத் தொடர்பும் இல்லாத என்னுடைய எழுத்தையும் நிலைப்பாட்டையும் மட்டுமே தெரிந்து, இத்தனை உயிர்ப் பயமுறுத்தல்களுக்கு மத்தியிலும் அதைப் பரப்புவதற்காக தாயகத்தை வாங்கி மொன்றியல் மட்டுமன்றி, ஐரோப்பா எங்கும் வினியோகித்த ஆர்வலர்களான நண்பர்கள்...

    ஆர்வத்தோடு காத்திருந்து வாங்கி வாசித்த வாசகர்கள்...

    இவர்கள் எல்லாம் இல்லாமல் தனிமனிதனான என்னால் எதைச் சாதித்திருக்க முடியும்? ***

    எழுத்து என்பது, தற்போது நான் செய்கின்ற பல விடயங்களில் ஒன்று.

    களை பிடுங்குவது முதல் கள்ளிகளோடு பிடுங்குப்படுவது வரைக்கும் (கமெரா சகிதம் தான்!) இது வரைக்கும் இல்லாத ஏதோ ஒன்றை அறிந்து கொண்டோ, கற்றுக் கொண்டோ, செய்து கொண்டோ தான் என் வாழ்க்கை ஓடுகிறது.

    இதில் வெளியில் சொல்லக் கூச்சப்படும், இது வரை உங்களுக்குத் தெரிந்திராத, ஆச்சரியப்படக் கூடிய விடயங்களும் உண்டு. அவை பற்றிய பெரிய திட்டங்களும் உண்டு.

    எழுத்தை விட, என் தற்போதைய ஆர்வம் அவற்றில் தான் உள்ளது.

    ஒரு காலத்தில் எழுத்து தவிர்க்க முடியாததாக இருந்தது. இப்போது கடுப்பு ஏற்படும் போதும், குறும்பு பண்ண நினைக்கும் போதும் மட்டுமே எழுத தோன்றுகிறது.

    எனவே, என்னைக் கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை.

    கூட்டங்களுக்குப் போனால் கூட, எனக்கு முன் ஆசனம் தர வேண்டும் என்றோ, விலாசம் காட்டுவதற்கு கையில் ஒலிவாங்கியைத் தர வேண்டும் என்றோ, 'இவர் தான் தாயகம் ஆசிரியர்' என்று அறிமுகப்படுத்த வேண்டும் என்றோ ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை.

    மேடையில் உட்கார்ந்திருக்கும் அறிஞர் பெருமக்களையும், கீழே அமர்ந்திருந்து 'எப்போதடா கேள்வி நேரம் வரும்?' என்று, வாய்க்குள் விடையை வைத்துக் கொண்டு, 'டீச்சர், டீச்சர்!' என்று துடிக்கும் சிறார்கள் போல, கொதித்துக் கொண்டிருக்கும் பேரறிஞர் பெருமக்களையும் ரசிப்பதற்காக பின்னால் தானே எப்போதும் உட்கார்கிறேன்.

    அங்கீகாரங்கள், விருதுகள், பொன்னாடைகளுக்காக பல்லிளிக்கவோ, தலை வணங்கவோ என்றுமே விரும்பியதில்லை.

    இந்த இலக்கிய 'மகாபிரபோ'க்களுக்கு எல்லாம் அங்கீகரிப்பதற்கான தகுதிகள் என்ன என்பது பற்றிய கேள்விகள் எனக்குண்டு.

    விருதை வழங்கி வாயை அடைக்க வைக்கும் முயற்சிகளையும்,  பொன்னாடையைப் போர்த்தி வாழும் போதே கௌரவித்த 'கடமைக்கு செய்தலையும்' நீங்களும் தானே கண்டிருப்பீர்கள்.

    இந்த விருதுகள், அங்கீகாரங்களை விட, எனக்கு கிடைத்த பெறுமதி மிக்கதாய் இன்று வரை நான் பெருமைப்படுவது...

    நீங்கள்!

    எனக்குக் கிடைத்த நண்பர்கள்.

    பத்திரிகையை நடத்தியதைத் தவிர வேறு எந்த வழியிலும் நான் சந்தித்திருக்க முடியாத அற்புதமான மனிதர்களை எல்லாம் சந்தித்திருக்கிறேன்.

    பிறந்த நாள் முதலாய் அன்பு நிறைந்த மனிதர்களாலேயே சூழப்பட்டிருக்கிறேன்.

    குடும்பத்தினர் முதல் நீங்கள் வரைக்கும்!

    இந்த அன்புக்கு எந்த விருது தான் இணையாகும்?

    உண்மையாகவே நான் உங்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் மதிப்பும் போலவே...

    நீங்கள் உண்மையாகவே என் மீது கொண்ட அன்பினாலும், மதிப்பினாலும் என்னுடைய தயக்கத்தையும் மீறி செய்கிறீர்கள்.

    I am humbled!

    உண்மையில் கொண்டாடப்பட வேண்டியது நான் இல்லை.

    நீங்களே!

    என்னைப் பிரமிக்க வைக்கும் திறமைகளோடு உங்களில் பலர் உள்ளீர்கள்.

    அற்புதமான கவிஞர்கள், கதைசொல்லிகள்,கருத்தாளர்கள் என எழுத்து தொடர்பானவர்கள் மட்டுமன்றி, ஓவியர்கள், புகைப்படக்காரர்கள், ஏன் சமையல் திறன் மிக்கோர் எனப் பலரும் எனது நட்பு வட்டத்தில் இருக்கிறீர்கள்.

    உலக இலக்கியம் மட்டும் தான் படிப்பேன் என்று விரதம் பூண்டு, புத்தகத்தோடு போஸ் கொடுக்கும் படத்தை பேஸ்புக்கில் போடாமல், எல்லாவற்றையும் வாசிக்கும் எனக்கு, உங்களின் திறமை எப்போதுமே பிரமிப்பு ஊட்டுகிறது.

    எனது Timeline ல் புனித மார்க்கு அருளிச் செய்த சுவிசேச வசனங்கள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன்.

    உங்கள் பதிவுகளுக்கு சம்பந்தமில்லாத கொசுறுகளையும் பின்னூட்டமிட்டு குறும்பு பண்ணித்தானே இருக்கிறேன்.

    தங்கள் வாழ்வின் துயரங்களையும் மற்றவர்கள் சொன்ன எதற்கோவாகவும் சஞ்சலப்பட்டு எழுதுவோர்களுக்கு எல்லாம் ஏதோ ஒரு குறிப்போடு தானே கடந்திருக்கிறேன்.

    'இந்தப் பாட்டை முன்பு ஒருபோதும் கேட்டதில்லை', 'நானும் சமைத்துப் பார்த்தேன், கருகிப் போச்சு!' என்ற வரலாற்றுப் பெருமைகளை எல்லாம் பின்னூட்டங்களில் பொன்னெழுத்துக்களால் பொறித்திருக்கிறேன்.

    லைக் போடுவது எல்லாம் கௌரவக் குறைச்சல் என்ற 'பெரிய்ய' நினைப்பு இல்லாமல்!

    தலை முகில்களுக்குள் கிடந்து மயக்கம் பெறாமல் என் கால்கள் எப்போதுமே நிலத்தில் தானே இருக்கின்றன!?

    நான் இன்றைக்கும் பத்திரிகை நடத்துவதாக இருந்தால், உங்கள் எல்லாரையும் துரத்திக் கலைத்துப் பிடித்து எழுத வைத்திருப்பேன். உங்கள் திறமைகளை பெருமையோடு வெளியிட்டிருப்பேன்.

    தாயகம்காரர் என்ற பெயரோடு புலன் பெயர் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு குழு அரசியல், கலை, இலக்கியம் என்று எத்தனையோ விடயங்களை வெளிக்கொணர்ந்திருக்கிறது.

    அதைப் போல, இன்றைய படைப்பாளிகளை ஒன்று திரட்டி ஒரு இலக்கிய இயக்கமாக்கி பொதுவெளியில் பரவலாக்க என்னால் ஆனது எல்லாவற்றையும் செய்தே இருப்பேன்.

    இப்போது அதைச் செய்ய வேண்டியவர்கள் எல்லாரும்   'எல்லாப் புகழும் என் ஒருவனுக்கே!' கிடைக்க வேண்டும் என்ற நினைப்பில் வடக்கு நோக்கி தவம் இருக்கிறார்கள்!

    தங்கள் பிரசுரங்களின் தமிழ்நாட்டு பதிப்பில் இலவச இணைப்பாக விஸ்கி வழங்குவோரும் இதைச் செய்வதில்லை.

    கள்ளக்கடத்தல் விருது யாவாரம் செய்வோரும் அதைச் செய்வதில்லை.

    தாயகத்தில் எழுதிய எத்தனை எழுத்தாளர்கள் ஒதுங்கிப்போய் விட்டார்கள்?

    ஐரோப்பிய சிறுசஞ்சிகைகளில் உற்சாகமாக எழுதியவர்களில் எத்தனை பேர் இப்போதும் அதே உற்சாகத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?

    பேசப்படவும், கொண்டாடப்படவும் வேண்டியவர்கள் எல்லாரும் ஒதுங்கியும் ஒதுக்கப்பட்டும் போய் விட்டார்கள்.

    அவர்களைப் பற்றிய வரலாறுகள் மறைக்கப்பட்டிருக்கின்றன,

    இந்த சுயவரலாற்று நாயகர்களால்!

    கொண்டாடப்பட வேண்டியவர்கள் நீங்கள் எல்லாருமே!

    அதைப் போல...

    நான் என் சொந்தச் சகோதரர்கள் போல 'அண்ணை' என்று மதித்து அழைக்கும் இடதுசாரிகள்...

    யாழ்ப்பாணத்தில் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் கொலைக்கலாசாரம் தலையெடுக்க முன்னால்...

    சமூக நீதிக்கான போராட்டங்களில் நேரடியாக கலந்து கொண்டவர்கள் இருக்கிறீர்கள்.

    அவர்களைப்போல...

    என் வயதில் இருந்து கொண்டு, விடுதலை என்ற ஒன்றை நம்பி தங்கள் வாழ்வைத் தொலைத்த மாற்றியக்கப் போராளிகள் இருக்கிறீர்கள்.

    தூசி படாமல் தேசியச் செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் தேசிக்காய் யாவாரிகள் எல்லாம் கோடீஸ்வரர்கள் ஆன சமூகத்தில்...

    மந்தைகள் போல கொடி பிடிப்பது தான் இன உணர்வு என்று நினைக்கின்ற ஒரு சமூகத்தில்...

    உண்மையான சமூக மாற்றத்திற்கான போராளிகள் சமூக விரோதிகளாகவும், விடுதலைக்கான போராளிகள் துரோகிகளாகவும் கட்டமைக்கப்படுவது இந்த யாழ்ப்பாணச் சமூகத்தை விட வேறெங்கு நடக்கும்?

    இந்த சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டியவர்கள் நீங்கள்.

    உங்களுடைய அனுபவங்கள் எல்லாம் ஏதோ வகையில் ஆவணப்படுத்தப்பட வேண்டும், இந்தக் கேவலமான தலைமுறைக்காக இல்லை, அடுத்த தலைமுறைகளுக்காக!

    உங்களுடைய பெருமைகளை அந்த தலைமுறைகளாக அறிந்து கொண்டு கொண்டாட வேண்டும்.

    என்னுடைய நண்பர்களான நீங்கள் கொண்டாடப்படுவதையே எனக்கு கிடைக்கும் பெருமையாக நான் கருதுவேன்.

    நீங்கள் இதை என்னைக் கௌரவிக்கும்  Tribute  ஆகவோ, அமெரிக்க தொலைக்காட்சி Comedy Central ன் வறுத்து எடுக்கும் Roast ஆகவோ செய்யக் கூடும்.

    ஆனால், நான் கலந்து கொள்ள விரும்பவில்லை.

    என்னை நேரில் யாராவது புகழும் போது மிகவும் கூச்சப்படுவேன். அசௌகரியமாக உணர்வேன்.

    உண்மையான நண்பர்கள் 'நல்லாச் சொன்னால்', சில நேரம் என்னை அறியாமலே பேச முடியாமல் தொண்டைக்குள் ஏதோ செய்யவும் கூடும்.

    இந்த அன்புக்கும் மதிப்புக்கும் நான் பொருத்தமானவனா என்ற கேள்விகளோடு, அந்த மதிப்பை நான் காப்பாற்ற வேண்டுமே என்று எண்ணம் வரும்.

    மறுபுறத்தில், விமர்சனங்களாக இருந்தாலும், நான் அதில் இருப்பது பொருத்தமானது இல்லை என்றே உணர்கிறேன்.

    ஒருவர் இருக்கும்போது சொல்லப்படுகின்றவற்றை விட, இல்லாமல் இருக்கும் போது சொல்லப்படுகின்றவை தானே உண்மையானவை.

    ஒருவர் பற்றி மேடையில் கையில் உள்ள ஒலிவாங்கியோடு சொல்லப்படுவதற்கும், தண்ணீர்ப் பாட்டிகளில் கையில் உள்ள விஸ்கி கிளாசோடு சொல்லப்படுவதற்குமான வித்தியாசங்களை நீங்களும் கண்டிருக்காமலா விட்டிருப்பீர்கள்?

    இதையும் விட, விமர்சனங்களுக்கான பதிலை நான் சொல்ல வேண்டி நேரிடலாம். அது நிகழ்வைத் திசை திருப்பக் கூடும்.

    எனவே, என்னுடைய பிரசன்னம் அங்கு அவசியமானதில்லை.

    நீங்கள் தாராளமாகவே விமர்சிக்கலாம்.

    நான் அடிக்கடி சொல்வது...

    'எனக்கு மரணத்திற்கு பயமில்லை.

    மரணத்தின் பின்னால் பேஸ்புக்கில் வரும் அஞ்சலிகளுக்குத் தான் பயம்!'

    எனவே, நான் மண்டையைப் போட்ட பின்னர் என்னைப் பற்றி வரும், நான் பதில் சொல்ல முடியாத விமர்சனங்களை விட, இருக்கும்போதே அவற்றை தெரிந்து கொள்வது நல்லதில்லையா?

    தர்க்கரீதியாக என்னால் நியாயப்படுத்த முடியாத எதையும் நான் எழுதியதில்லை.

    எவ்வளவோ எழுதியிருக்கிறேன்.

    பெயர் வாங்க அலையும் புலவர்கள் அதில் பிழை கண்டுபிடிப்பது எதுவும் பெரிய வேலையில்லை!

    சில நேரங்களில் 'ஓ! அப்ப நான் அதை யோசிக்கேலை!' என்றோ, 'நான் சொன்ன Context வேற!' என்றோ, 'அன்றைய என் நம்பிக்கை அப்படி இருந்தது. இப்போது நான் அப்படி நம்பவில்லை!' என்றோ எனக்கான ஒரு நியாயம் இருக்கும்.

    அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் மற்றவர்கள் பிரச்சனை!

    சொல்லி விட்டேனே என்பதற்காக, வீம்புக்காக மூன்று கால் நியாயம் பேசாமல், சிலநேரம், 'உண்மைதான், Mea culpa! சொதப்பியிட்டேன்' என்று தவறை ஏற்றுக் கொள்ளும் தில்லும் இருக்கிறது.

    'உம்மட தீர்வு என்ன?' என்ற புத்திஜீவிகளின் விமர்சனம் தொடங்கி, 'சிங்களவனிட்ட காசு வாங்கிறான்' என்ற புத்தியில்லாத ஜீவிகளின் விமர்சனங்கள் வரை நான் காணாததா?

    மறுபுறத்தில் அவதூறுகளையும் சந்தித்துத் தானே இருக்கிறேன்.

    அரசாங்கத்திட்ட காசு வாங்கிறாங்கள் என்று சொன்ன அதே கூட்டம் தான், போராட்டத்திற்கு தாங்கள் கொடுத்த காசை சுருட்டியவர்களைக் கேட்க வக்கில்லாமல், 'தமிழ் தேசிய செயற்பாட்டாளர்'களிடம் கொத்துரொட்டிக்கு கூட போராட்டத்திற்கு கொடுத்த காசைக் கழிக்க முடியாமல் இருக்கிறார்கள்.

    இலக்கியக் கூட்ட அவதூறு அதை விடக் குறைந்ததுமில்லையே!?

    முன்பு என்றால், அவதூறு செய்தவர்கள் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாதபடிக்கு, கிண்டலும் கேலியுமாக, வெட்கப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு சப்பித் துப்பியதுண்டு.

    இப்போது அதற்கெல்லாம் விரயம் செய்ய நேரம் கிடைப்பதில்லை.

    அவதூறுகளுக்கான எனது பதில், என் வாழ்வும் நிலைப்பாடும் தான்.

    இருந்தாலும், ஒரு அவதூறை எதிர்கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயம் ஒன்றுண்டு என்பதை நண்பர்கள் நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ***

    'உவர் பயத்தில தான் நேரலையில வரேலை!' என்று சில Spin doctors உருட்டக் கூடும்.

    கம்மாரிசு அடிக்க துரும்பு வைத்திருந்தவர்கள் மாதிரி, கூட்டங்களில் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் நான் பார்த்து ரசித்து வந்தவர்கள் தானே.

    அறிந்து கொள்வதை விட, தங்கள் பேரறிவை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தொக்கி நிற்கும் கேள்விகள் நாங்கள் காணாததா?

    எனவே, தங்களின் கேள்விக் கணைகளுக்குப் பயந்து நான் பங்கருக்குள் பதுங்குவதாக இவர்கள் கதை சொல்லக் கூடும்.

    தற்போது அதைவிடப் பெரிய சிக்கல் உண்டு.

    யாராவது விருது வாங்க வந்தவருக்கு நடக்கும் தண்ணிப் பார்ட்டியில், 'உவர் எனக்குப் பயந்து தான் நேரில வரேலை' என்று ஒரு இலக்கியப் பிரகிருதி சொல்லப் போக, அதைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழக ஆசாடபூதி அதை வரலாறாக்க...

    ஒரு ஐம்பது வருடங்களுக்குப் பின்னால், 'அவர் மீதிருந்த அச்சத்தினால்  தான் கலந்து கொள்ளவில்லை' என்று யாராவது சொல்லப் போக, உலகைக் குலுக்கும் அந்த இலக்கிய சர்ச்சையினால் வரும் கோஷ்டி மோதலில் சிந்தப்படும் இரத்தம் என் மீதும் என் வழித் தோன்றல்கள் மீதும் இல்லாமல் போவதாக! என்ற நோக்கில் இப்போதே அதற்கான நியாயங்களை சொல்வது நல்லது.

    சமூக நீதிக்கான எனது போராட்டம் வெறும் குரல் எழுப்புவதுடன் மட்டும் முடிந்த ஒன்றில்லை.

    எனது இந்தப் பக்கம் பலரும் அறியாதது. தாயகம் நின்று போவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

    ஹொலிவூட்டின் பில்லியன் டொலர் கம்பனி ஒன்றில், தொழிற்சங்கம் அமைக்கும் போராட்டத்திற்கு தலைமை தாங்கி, தங்களுக்குள் வெறுப்புகளை சுமந்து கொண்டிருந்த எதியோப்பிய, எரித்திரிய, பிலிப்பைன், சோமாலியர்களை ஒன்று திரட்டி, மூன்று தடவைகள் மூன்று வேறுவேறு தொழிற்சங்கங்களை கொண்டு வருவதற்கு நான் நடத்திய போராட்டங்கள் பலரும் அறியாதது.

    அந்த நிறுவனத்தில் CEO  தலைமையிலான பெரும் executive கள் நடத்திய தொழிலாளர் கூட்டங்களில், காலுக்கு மேல் கால் போட்டபடி, ஒன்ராறியோவின் தொழிற்சட்டங்கள் பற்றிய அறிவை விரல் நுனியில் வைத்துக் கொண்டு, எந்தக் கோபமும் முகத்தில் தெரியாமல், தர்க்கரீதியாக, நண்பர்களை சிரிக்க வைத்தபடியே, எங்கள் போராட்டத்தை நியாயப்படுத்திய விடயங்கள் பற்றி நான் யாருக்கும் சொல்ல வேண்டிய தேவை எனக்கு இதுவரை இருந்ததில்லை.

    தங்களுக்குள்ளே பிளவுபட்டிருப்போரை எப்படி அணைத்து போராட்டத்திற்கு கொண்டு செல்லலாம் என்பது முதல் எதிரிகளும் எங்களை மதிக்கும் அளவுக்கு எப்படி ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும், எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தை எப்படி மறுதரப்பிற்கு உணர வைப்பது, இறுதி இலக்குக்கு முன்னால் எப்படி படிப்படியான வெற்றிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் வகுப்பே எடுக்கலாம்.

    மூன்று தடவை போராட்டம் நடத்தியும் என்னை வேலையில் இருந்து நிறுத்த முடியாத அளவுக்கு அந்த பெரும்புள்ளிகள் என்னில் மதிப்பு வைத்திருந்தார்கள்.

    என்னுடைய அந்த தன்னம்பிக்கை தான் இன்று வரைக்கும் என்னை கிறுக்கனாக வைத்திருக்கிறது.

    இதெல்லாம் என்னைப் பற்றி மற்றவர்கள் பெரிதாக நினைப்பதற்காக சொல்லவில்லை.

    இந்த பிரகிருதிகள் 'அச்சத்தில்!' என்று சொல்ல வருவார்கள் என்பதற்காக மட்டும்!

    துப்பாக்கி வைத்திருந்த தலைவர்களோடு தகராறு பண்ணியவன் நான், இந்த தடியெடுத்த தண்டல்காரர் எம்மாத்திரம்?

    'ஊருக்கு வா! கவனிக்கிறம்!' என்ற மிரட்டல்களைக் கடந்து வந்தவன் நான்.

    நீங்கள் எல்லாருமே 'வீட்ட வா! அந்த மாதிரிக் கவனிக்கிறம்!' என்று சொல்லக் கூடியவர்கள் தானே!

    நான் எதற்குப் பயப்பட வேண்டும்?

    'அந்த கறுப்பு ஆடு யார் என்று ரீச்சருக்கு சொல்லாவிட்டால், கொலை தான் நடக்கும்' என்ற அந்த ஒரே ஒரு பயத்தைத் தவிர!?

    Postad



    You must be logged in to post a comment Login