Recent Comments

    பொய்கள்.. பச்சைப் பொய்கள்… விகடன் கருத்துக் கணிப்பு முடிவுகள்!

    ஜோர்ஜ் இ. குருஷ்சேவ்

    'புள்ளிவிபரங்கள் நீச்சலுடைகள் போன்றவை. அவை வெளியே காட்டும் விடயங்கள் சுவாரஷ்யமாக இருக்கலாம். ஆனால், அவை மறைப்பவை மிகவும் முக்கியமான விடயங்களை!'

    திருவிசைப்பலகை மீது எழுந்தருளிய அநாமதேய இணையத்து ஞானி ஒருவரின் பொன்மொழி இது. பாதி நிரம்பிய கிண்ணத்தை வைத்துக் கொண்டே இதில் பாதி நிரம்பியிருக்கிறது என்றும் பாதி வெறுமையாக இருக்கிறது என்றும் வேறு வேறாய் வியாக்கியானம் செய்யும் போது, தரவுகளை வைத்துக் கொண்டு அவரவர் தங்கள் நலன்களுக்கு ஏற்ப 'எண்ஜாலம'; காட்டுவது ஒன்றும் பெரிய விடயம் அல்ல.

    தேர்தல்கள் நடைபெறும்போது, வாக்களித்து வெளியே வருபவர்களிடம் கருத்துக் கணிப்பு எடுத்து, தேர்தல் ஆணையகத்துக்கு முன்பாகவே பத்திரிகைகள் முண்டியடித்துக் கொண்டு முடிவுகளைச் சொல்வதிலிருந்து, தங்கள் நலன்களுக்காக அரசியல் கட்சிகளே கருத்துக் கணிப்புகள் எடுத்து ஆதரவு இருப்பதாக காட்டுவது வரைக்கும் இந்த புள்ளிவிபரங்கள் பலராலும் தேவையும் வசதியும் கருதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டே வந்திருக்கின்றன. சதாம் 99 வீத வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது போல, தேர்தலில் சகல மோசடிகளையும் செய்து பதவியில் நிலைக்கும் அரசுகள் 'மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்' என்று கதை விடும் போது, வெறும் புள்ளிவிபரங்களில் மோசடி செய்வது ஒன்றும் பெரிய விடயம் இல்லை.

    இதில் துஷ்பிரயோகத்திற்கான உதாரணத்திற்கு நெடுந்தொலைவு செல்லத் தேவையில்லாமல் மாறன் சகோதரர்களே உள்ளனர். தங்கள் அரசியல் கனவுகளுக்காக, சர்வதேசப் புகழ் பெற்ற ஏ.சி.நீல்சன் நிறுவனத்தின் நம்பகத் தன்மையை விலைக்கு வாங்கி, நடத்திய நாடகம் பல தலைகளை உருள வைத்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

    பிரிட்டிஷ் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி கூறியதாகக் கூறப்படும் புள்ளிவிபரங்கள் பற்றிய பெரும் புகழ் பெற்ற சொற்றொடர்... Lies, damned lies, and statistics!

    இன்றும் பலராலும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. பொய்கள் மூன்று வகை..

    பொய்கள், பச்சைப் பொய்கள், புள்ளிவிபரங்கள்!

    விகடன் புலிகள் பற்றி தமிழகத்தில்(?) நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகளும், இந்தக் கணிப்பும் இந்த மகாபொய்களுக்குள் அடங்கியதோ என்ற சந்தேகத்தை இன்று கிளப்பியுள்ளன.

    குமுதம், விகடனுக்கு இடையிலான போட்டி கலை ஆக்கவியல் சம்பந்தப்பட்டது மட்டுமன்றி, வியாபார ரீதியிலானதும் ஆகும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இணையத்தால் சஞ்சிகை விற்பனையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்தியில் போட்டி சூடு பிடிப்பது வாசகர்களுக்கு ஒரு வகையில் நல்ல வேட்டை தான். சுவாரஷ்யமான விடயங்களை 'கவர் ஸ்டோரி' ஆக்கி, பரபரப்பை உண்டுபண்ணுவதும் வியாபார தந்திரங்களில் புதியதும் அல்ல. 'பம்பாய் தாதாக்களின் அடுத்த இலக்கு ரஜனியா?' என்ற விகடனின் (அல்லது குமுதமோ?) பரபரப்பான 'கவர் ஸ்டோரி'க்குப் பின்னால், உண்மையின் அடிப்படையிலான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், உப்புச் சப்பில்லாத வெறும் ஊகங்கள் பக்கத்தை நிரப்பியது இந்தப் போட்டியின் வெளிப்பாடே. வாராவாரம் ஜுனியர் விகடனின் பரபரப்பான கவர் ஸ்டோரிகளை மூன்று வாரம் கழித்து வாசித்தால் திகிலூட்டும் உண்மைகளும் ஆரூடங்களும் எல்லாம் எப்படி சப்பென்று இருக்கும்?

    எனவே, விகடன் ஆசிரியர் குழு 'மூளைப் புயல்' (ஹி..ஹி.. brainstorm  ற்குத் தமிழ்.. சுஜாதாவிற்குப் பின்னால், ஏதோ நம்மாலானது!) அடித்ததில் விளைந்த பயன் இன்று புலிகளுக்கு ஆதரவான ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதில் வியப்பு எதுவும் இல்லை.

    விகடனுக்கு இது வியாபாரப் போட்டியில் எழுந்த வெறும் இன்னொரு கருத்துக் கணிப்பாக இருக்கலாம். ஆனால், புலிகளைப் பொறுத்தவரை, இது அவர்களின் தற்போதைய தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய தரவு! புலிகளின் அரசியல் நலன்கள் எவ்வளவு தூரம் இந்த கணிப்பில் தங்கியிருக்கிறது என்பதை, உடனடியாகவே புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்ததிலிருந்து வெளிப்படையாகத் தெரிந்து கொள்ளலாம்.

    இந்தக் கருத்துக் கணிப்பில் தங்களுக்குச் சாதகமான முடிவுகள் வெளிவர வேண்டும் என்று புலிகள் கருதியதற்குக் காரணங்களும் இல்லாமல் இல்லை.

    இனக்கலவரத்தில் அகதிகளாய் தஞ்சம் தேடியவர்களை அனுதாபம் கொண்ட தமிழகத் தமிழர்கள் இரத்த சொந்தங்களாய் நினைத்ததும் உண்மை. ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் தமிழகத்தில் முகாம் அமைத்துப் பயிற்சி பெற்ற போராளிகளை உபசரித்து, எல்லாரையும் விடுதலைப் புலிகள் என்று அழைத்து, தங்க இடம் கொடுத்ததும் உண்மை. இந்த அனுதாப அலையைச் சாதகமாக்க நினைத்த தமிழக அரசியல்வாதிகள் ஈழப்பிரச்சனையில் போட்டி போட்டு அக்கறை காட்டினார்கள்.

    ஆனால் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தது போல, ராஜீவைப் புலிகள் கொன்ற பின்னால், தமிழகத்தில் புலிகள் மீதான கோபம் மிகுந்ததுடன், ஈழத்தமிழர்கள் மீதான அனுதாபமும் குறைய ஆரம்பித்தது. விசயத்தைப் புரிந்து கொண்ட பிரதான அரசியல்வாதிகள் மெதுவாகக் கழன்று கொள்ள, எஞ்சிய உதிரிகளை உலகச் சுற்றுலா வசதிகள் வழங்கி புலிகள் கைக்குள் போட, அவர்களும் 'இந்தப் படை போதாதா?' என்று முன்னூறு பேரோடு 'மாபெரும் பேரணி' நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நிலைவரப்படி, புலிகளுக்கான ஆதரவு என்பது லாபம் அல்ல, அநாவசிய சுமை என்ற கணிப்பே தமிழக அரசியலில் இருந்து வருகிறது.

    வடக்கும் கிழக்கும் தங்கள் கைக்குள், தாங்கள் ஒரு தனியான அரசை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று புலிகளுக்குப் பித்தம் தலைக்கேறி, இந்தியாவுடனான உறவுகளை சீர்செய்ய கிடைத்த சந்தர்ப்பங்களை உதறித் தள்ளினர். இப்போது, சிங்கள அரசுடன் வலுச்சண்டைக்குப் புறப்பட்டு, நன்றாக வாங்கிக் கட்டுவதற்கு இந்தியாவுடனான உறவுச் சீர்குலைவு முக்கிய காரணம் என்பது புலிகளுக்குப் புரிந்து விட்டது.

    ஒருபுறத்தில், புலிகளுக்கான பொருள் வினியோகப் பாதைகளை மூடியும், புலி முக்கியஸ்தர்களை தமிழகத்தில் கைது செய்தும் கருணாநிதி அரசு புலிகளுக்கு உயிர் வழங்கும் தமிழ்நாட்டுத் 'தொப்புள்கொடி உறவைத்' துண்டித்து வருகிறது. மறுபுறத்தில் மத்திய அரசு, புலிகளின் வினியோகக் கப்பல்களின் நடமாட்டங்கள் பற்றிய செய்திகளைப் பரிமாறியும், இராணுவ உதவிகளை வழங்கியும் புலிகளின் கழுத்தை சிங்கள அரசு நெரிக்க உதவி வருகிறது.

    போதாக்குறைக்கு, பதினைந்து வருடங்களுக்கு முன்னைய ராஜீவ் கொலையில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட பிரபாகரனும் பொட்டம்மானும் கைது செய்யப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதிலும் இந்தியா இன்றுவரை உறுதியாக இருக்கிறது.

    கருணாநிதியும் மத்திய அரசும் பகிரங்கமாகவே புலிகளுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் அளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது தமிழகத்தில் புலிகளுக்கு எந்த அனுதாபமும் இல்லை என்ற உண்மையே. புலி ஆதரவு உதிரிக் கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்கும் மத்தியில் உள்ள சிறுபான்மை அரசு இவ்வளவு தூரம் நடவடிக்கை எடுக்கும் என்றால், அது எல்லாவற்றுக்கும் மேலான தேசிய நலன் தான் என்பது எவருக்கும் புரியும். ஒட்டுமொத்தமாய், ஊடகங்களும் ஆய்வாளர்களும் தமிழகத்தில் புலிகளுக்கு எந்த வித ஆதரவும் இல்லை என்ற முடிவிலேயே நேற்றுவரை இருந்தன.

    இந்தச் சூழலில், விகடன் கருத்துக் கணிப்பில் தங்களுக்கு தமிழகத்தில் பரந்திருக்கும் எதிர்ப்பு நிருபிக்கப்படக் கூடாது என்பதும், ஆதரவு இருப்பதாகக் காட்ட வேண்டிய கட்டாயமும் புலிகளுக்கு இருந்தது. தமிழகத்து செல்லாக்காசு அரசியல்வாதிகளை பணத்தால் வாங்க முடிந்தது போல, பத்திரிகையாளர்களையும் புலிகளால் வாங்க முடிந்தது. அவர்களில் சிலர் வன்னிக்கு அழைக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டு சூரிய பகவான் தரிசனம் கண்டு அருள் பெற்றது நாங்கள் அனைவரும் அறிந்ததே. இதில் விகடன் குழுமத்தின் ஜுனியர் விகடன் பத்திரிகையாளரும் அடக்கம்.

    புலம் பெயர்ந்த நாடுகளில் சகல தமிழ் ஊடகங்களிலும் ஊடுருவி, புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் எதைக் கேட்க வேண்டும், எதைப் படிக்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்பதை தாங்களே முடிவு செய்து, அதை மீறி வெளிவரும் ஊடகங்களை மிரட்டியும், அவதூறுகளைப் பரப்பியும் தமிழ் மக்களை தங்கள் இரும்புப் பிடிக்கும் வைத்திருக்க முயலும் புலிகள் தங்களுக்கு சாதகமான செய்திகளுக்காக எதையும் செய்வார்கள் என்பதற்கு உதாரணம் ஒன்றுண்டு.

    பி.பி.சி நிறுவனம் கடந்த நூற்றாண்டின் சிறந்த தமிழ் பாடல் எது என்ற கருத்துக் கணிப்புக்காய் தமிழ் கூறும் நல்லுலகை, கலந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தது. புலிகளின் சகல வானொலிகளும் ஒன்றாய் திரண்டு, புலிகளின் பாடல் ஒன்றையே தெரிவு செய்யுமாறு பிரசாரம் செய்ய, தமிழ் உணர்வு கொண்டு உற்சாகம் பெற்ற நேயர்கள், அலை போல் திரண்டு ஒன்றுக்கு ஐந்து தடவை வாக்களித்து தங்கள் திறமையை பெருமையாய் வானலையில் வந்து மகிழ்ச்சியுடன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, கடைசியில் புலிகளின் பாடல் ஒன்றே சிறந்த பாடலாய் தெரிவானது. ஆறு கோடி தமிழர்கள் தமிழகத்தில் இருந்தும் புலம் பெயர்ந்த சில லட்சம் தமிழர்களின் நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்திற்கான வசதி செய்த கைங்கர்யம் இது.

    ஆனானப்பட்ட பி.பி.சியையே சுத்திய ஈழத்தமிழர்களுக்கு, விகடனைச் சுத்துவது என்ன பெரிய விடயமா? நிச்சயமாக, தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள், அதிலும் புலி ஆதரவாளர்கள் கலந்து கொண்டால், அதையிட்டு குறை கூற முடியாது. புள்ளிவிபரவியலில், margin of error என்ற பதமே இவ்வாறான குறைபாடுகளையும் ஏற்றுக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. கருத்துக் கணிப்புகளில் 'தவறுகளுக்கான எல்லைக்கோடுகளுக்கு' என சில வீதங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். எனவே முடிவுகள் அந்த வீதங்களின் அளவில் சற்றே மாறுபடும். ஆறு கோடி தமிழர்களில் சில ஆயிரம் தமிழர்களின் எண்ணிக்கை புறக்கணிக்கப்படக் கூடியதே!.

    'சர்வே டீம் நேரடி விசிட்டில் தமிழகம் முழுவதும்' கருத்துக் கணிப்பு நடத்தியது, அந்தக் குழு உண்மையிலேயே தமிழக மக்களின் கருத்தை சரியாக அறிந்திருக்கும். ஆனால், அநாமதேயங்கள் கொட்டமடிக்கும் இணையத்தின் மூலமாகவுமா? விகடன் போன்ற ஒரு நிறுவனம் இந்தளவுக்கு கவனக் குறைவாக இருந்திருக்குமா?

    விகடன் தன்னுடைய கருத்துக் கணிப்பில் சில தவறான முன்கருத்துக்களைக் கொண்டிருந்தது. அதாவது, இணையத் தளம் ஊடாக கருத்துக் கணிப்பில் ஈடுபடுவோர் தமிழகத்திலிருந்து மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று அது கருதியிருக்கிறது. இந்த 'ஓட்டைக்குள்ளால்' புலிகள் புகுந்து விளையாடியிருக்கிறார்கள இணையத்தள தொடர்புகள் எல்லாம் அவை எந்த நாட்டில் எந்தக் கம்பியூட்டரில் இருந்து தொடங்குகின்றன என்பதை அறிந்து கொள்ளும் வகையில் தான் இணைய வலையமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, சீனா உட்பட்ட பல நாடுகள் தங்கள் நாட்டவர்கள் எந்த தளங்களைப் பார்வையிட முடியும் என்பதைக் கட்டுப்படுத்தக் கூடிய வலிமையைப் பெற்றுள்ளன. (Where is Sujatha, when you need him!)

    விகடனும் இவ்வாறாக, வெளிநாடுகளிலிருந்து தங்கள் கருத்துக் கணிப்புக்கான பக்கத்தை பார்வையிடுவதைத் தடுத்திருக்க முடியும். ஆனால், விகடன் அவ்வாறான முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படவில்லை.

    இதையும் விட, விகடனில் இலவசமாகவே எவரும் பொய்யான தகவல்களை வழங்கி அங்கத்தவராக முடியும், கடன் அட்டை (கிறடிட் கார்ட்!) மூலமாகப் பணம் செலுத்தாத வரைக்கும்!

    எனவே, திறந்த வீட்டில் நாய் புகுந்தது போல, புலி புகுந்து நடத்திய free for all விளையாட்டே இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள்!

    முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்ததற்கு முரணாக வந்ததால், வழமை போல ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக எவரும் குறை கூறக் கூடும்.

    புலிகளின் குள்ளநரிப் புத்தியும் பகிரங்கமாகவே இவ்வாறான ஒரு நாடகத்தை ஆடும் அளவிற்கு விட்டிருக்காது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். புலிகளின் வழமையான இணையத்தள ஊடகங்களான தமிழ்நெட், புதினம் என்று பல்வேறு மாறுவேடங்களில் ஒரே செய்திகளை வழங்கும் இணையத் தளங்கள் புலிகள் பற்றி அறிய விரும்பும் அனைத்துத் தரப்பினராலும் வாசிக்கப்படுபவை. எனவே, புலிகள் அவற்றில் இது பற்றிய முயற்சிகளை முன்னெடுத்திருக்க மாட்டார்கள் என்பது தெளிவு.

    ஊரில் எங்கே களவு போனாலும், யாரைப் பிடித்து முட்டிக்கு முட்டி தட்டினால் உண்மை தெரியும் என்பது பொலிசாருக்குத் தெரிந்தது போல, 'வழமையான சந்தேக நபர்கள்' யார் என்ற எங்கள் சந்தேகம் இரண்டு இணையத் தளங்கள் மீதே விழுந்தது.

    முதலாவது, புலிகளின் அதிகாரபூர்வ ஆபாச ஏடான நிதர்சனம். புலிகளுக்கு எதிரான கருத்துத் தெரிவிப்பவர்கள் மீது வசை பாடுவதன் மூலம் புலி ஆதரவாளர்களைக் குஷிப்படுத்துவதை முதன்மையாகக் கொண்ட இந்தத் தளம் இவ்வாறான உசுப்பேத்தல்களுக்குப் பெயர் போனது. ஆனால், இந்தத் தளத்தில் எந்த தடயங்களும் இல்லை. அடுத்த சந்தேக நபர்... புலி ஆதரவாளர்கள் சந்தித்து, ஆளை ஆள் குஷிப்படுத்தும் செய்திகளைப் பரிமாறும் தளம். இதில் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்டு, எந்த வித தர்க்க நியாயமும் இல்லாத விடயங்களைப் புலி ஆதரவாளர்கள் தங்களுக்குள் பகிர்ந்து புல்லரிப்பது உண்டு. புலி ஆதரவு ஆய்வாளர்களும் தங்களை ஆய்வாளர்களாக உருவகித்துக் கொண்டவர்களும் செய்திகளை எழுதி, அந்தச் செய்திகள் பற்றி தர்க்க நியாயமில்லாத வியாக்கியானங்கள் செய்து அரட்டை அடித்து திண்ணைக் கச்சேரி நடத்துவார்கள்.

    இந்தப் பெரிய பானையின் பதமாக ஒரு சோறு இதோ.. புலிகளின் வினியோகத்திற்கு பொறுப்பாக தமிழகத்தில் இருந்து கைதான தம்பியண்ணா பற்றி வெளிவந்த செய்தி பற்றிய உரையாடல் தொடரில்.. பொன்னையா என்று ஒருவர் எழுதுகிறார்.. 'தம்பியண்ணா என்ற மனிதர் அல்லது றோ நடத்தும் நாடகத்தில் பங்கேற்பவர் புலிகளில் முக்கியமானவர் என்று காட்டுவதற்காக இந்தியப் படைகள் அவரின் பாணியில் புகழ்வது போல ஒரு கட்டுரையை வடிவமைத்திருக்கின்றன. இதனால் சிலருக்கு உண்மையில் அவர் புலி தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்த கியூ பிரிவு ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. உண்மை என தோன்றலாம். அது அவர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்' இதிலிருந்து இவர்களின் பகுத்தறிவு வளத்தை அறிந்து கொள்ளமுடியும்.

    அந்த தளம் யாழ்.கொம். அதில் விகடன் என்ற சொல்லுக்கான தேடலில் வந்து வந்தது.. விகடனின் கணிப்பின் முடிவுகள். அத்தோடு வந்து சேர்ந்தது.. நாங்கள் தேடிய விடயம்!

    விடுதலைப் புலிகள் இயக்கம்! விசேட சர்வே! என்ற தலைப்பில் யூலை 25ம் திகதி இரவு 10.08 மணிக்கு, ஈழவன் 85 என்ற முகமூடி நபர் விடுத்த செய்தி.... இந்த இணைப்பில்... http://www.yarl.com/forum3/index.php?showtopic=42158&hl=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D

    'ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன் வாக்களிக்க வேண்டும்' என்ற குறிப்புடன் ஆரம்பிக்கும் அந்த செய்தி விகடனின் கணிப்பின் வினாக்களின் அட்டவணையைத் தந்தது. இறுதியில் 'விகடன் இணையத் தளத்தில் சிறப்புக் கருத்தாய்வு ஒன்று நடக்கிறது. இது இணையத் தளத்தில் மட்டுமா அல்லது புத்தக வாசகர்களுக்குமா என்று தெரியவில்லை. ஆயினும் பாலினம், வயது போக மேற்கண்ட கேள்விகளும், மூன்று பதில்களில் ஒன்றை தெரிவு செய்யக் கேட்டிருக்கிறார்கள்.' என்றதுடன்

    http://www.vikatan.com/jv/2008/jul/27072008/lttesurvey.asp என்ற இணைப்பையும் கொடுத்து, 'விகடனில் ஒரு (இலவச) அக்கவுன்ட் ஒபன் செய்து விட்டு உங்கள் கருத்துக்களை தேர்வு செய்யவும்' என்ற அறிவுறுத்தலோடு அந்த கருத்து முடிகிறது.

    ஆக மொத்தத்தில் ஒரு 'கிளிக்' தொலைவில், செய்ய வேண்டிய சகல விடயங்களுக்குமான அறிவுறுத்தல் புலிகளின் ஆதரவு வெறியர்கள் மட்டுமே பங்குபற்றும் இணையத் திண்ணையில் வெளியிடப்பட்டது. இதைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை.. 1747 பேர். (ஒருவர் ஒரு தடவை மட்டுமே பார்த்திருப்பார் என்ற கணிப்பில்!). இதைப் பார்த்த எத்தனை பேர் தங்கள் நண்பர்களுக்கு இந்த இணைப்பை மின்னோலை அனுப்பியிருப்பார்கள்?

    பெரிய தாக்குதல் நடவடிக்கை போல, தயார் செய்து வழி காட்டி அனுப்பப்பட்ட கூட்டம் புகுந்து விளையாடிய கணிப்பின் தரவுகளும், விகடனின் தந்திரமும் (இது பற்றிப் பின்னால்!) சேர்ந்து கிடைத்த முடிவுகள் புலிகளுக்குச் சாதகமாய் இருந்ததில் வியப்பேது?

    ஆனாலும், புலி ஆதரவு வெறியர்கள் எந்த மாறுவேடத்தில் இருந்தாலும், அவர்களைக் கண்டுபிடிப்பது ஒன்றும் தசாவதாரக் கமல் விடயமல்ல. எம்.ஜி.ஆர் மாறுவேடம் போட்டாலும், அவரது குரல் அவரைக் காட்டிக் கொடுப்பது போல, இந்த பசுத்தோல் போர்த்த புலிகளைக் கண்டுபிடிப்பது பெரிய சிரமமும் அல்ல.

    புலி ஆதரவு வெறியர்கள் எங்கிருந்தாலும், அவர்களின் அடிப்படைக் கொள்கைகள் இரண்டே!

    முதலாவது அவர்களின் தலைவர் கடவுள் போன்றவர். தவறே விடமாட்டார். 'தலைவர் தவறுகள் விட்டது உண்மை தான். ஆனால்...' என்று கூட இழுக்க மாட்டார்கள். அவர்களுக்கு தலைவர் தவறே விடாதவர்! (infallible)

    இரண்டாவது மற்ற இயக்கத்தினர் துரோகிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டும். புலிகள் தவிர்ந்த வேறு எந்த ஈழத்தமிழ் இயக்கங்களும் அவர்களின் ஆதரவாளர்களும் மற்ற அனைத்து இயக்கங்களையும் துரோகிகளாகக் கருதி, கொல்ல வேண்டும் என்று கருதியதில்லை. கருத்து வேறுபாடுகளுக்காக மோதிக் கொண்டார்களே தவிர, ஒட்டுமொத்தமாக துரோகிகள் என்று எந்த இயக்கத்தையும் அவர்கள் முத்திரை குத்தியதில்லை. ஆனால், புலி வெறியர்களைப் பொறுத்தவரை, மற்ற இயக்கத்தினர் துரோகிகள், துரோகிகளுக்குப் பரிசு மரணம்!

    இந்த இரு கருத்துக்களிலும் இவர்களுக்கு எந்த தளம்பலும் கிடையாது. எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம் போல, இவர்களின் 'தம்பியிசத்தின்' அடிப்படையே இந்தக் கொள்கை தான்.

    சரி, நேரடியாகப் பதில் அளித்தவர்கள் 2065 பேர், இணையத் தளம் மூலமாகப் பதில் அளித்தவர்கள் 2130 பேர் என மொத்தம் 4195 பேரில் இவர்களை எப்படி அடையாளம் காண்பது?;

    விகடனின் முதலாவது கேள்வி... விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிப்பது பற்றியது. அதில் எப்போதும் எதிர்க்கிறேன், ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்பு ஆதரித்தேன் (தற்போது எதிர்க்கிறேன்) என்ற இரண்டு பதில்களையும் அளித்தவர்களின் மொத்த தொகை 1919 பேர். எப்போதும் ஆதரிப்பவர்களின் தொகையான 2276 பேருக்குள் தான் இந்த பசுத்தோல் போர்த்த புலிகள் பதுங்கியிருக்கிறார்கள்.

    இன்னொரு கேள்வி.. கொள்கை மாறுபட்ட இலங்கைத் தமிழ் பிரமுகர்களை புலிகள் கொலை செய்வது பற்றியது. தமிழ்நாட்டு அரசியலில் தொண்டர்கள் மோதிக் கொள்வார்களே தவிர, மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்களைக் கொல்வது என்பது தமிழகத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. எந்தத் தொண்டனும் தன் தலைவனுக்காக தீக்குளித்து உயிரைக் கொடுப்பானே தவிர, மாற்றுக் கட்சித் தலைவரை குண்டைக் கட்டிக் கொண்டு போய் வெடித்துச் சிதறிப் படுகொலை செய்வதில்லை. அவ்வாறு நிலைமை இருந்திருந்தால், இன்று 'தொல்'லை தரும் சிறுத்தை மட்டுமே தனிக்காட்டு ராஜாவாக காட்டுத் தர்பார் நடத்திக் கொண்டிருக்கும்.. பிரபாகரனைப் போல!

    தமிழக அரசியல் தலைவர்கள் நாய், பூனையாய் ஜென்மப் பகையாய் இருந்தாலும், பொதுமேடைகளில் சந்திக்கும் போதெல்லாம் இங்கிதம் கருதி குசலம் விசாரிப்பதும் அரசியல் பேசுவதைத் தவிர்ப்பதும் வழமை. சிறை வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு கோபம் கொண்டாலும், பழி தீர்க்க சட்ட சபையில் சேலையை இழுப்பார்கள், அல்லது படுக்கையறையில் வைத்து ஐயோ என்று குளறக் குளற வேட்டியை உருவுவார்கள். ஆனால் கொலை செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை.

    சிறிய கட்சிகள் கூட, தேர்தல் கூட்டின் போது, கேட்கும் ஆசனங்கள் கிடைக்கவில்லை என்று தலைவர்களைக் கொல்ல நினைப்பதில்லை. தமிழினத் துரோகி என்று திட்டிய பின்னால், ஓ குரூப் ரத்தம் போல எந்தக் கட்சியுடனும் சேர்வதும், எச்சில் சோறு என்று வீரம் பேசிய பின்னால், இதயத்தில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் வாலை ஆட்டுவதும் என தழைத்தோங்கும் தமிழக அரசியல் ஜனநாயகப் பாரம்பரியங்களுக்கும் நெறிமுறைகளுக்கும் வரைமுறைகளுக்கும் உட்பட்டது.

    இதையும் விட, ஈழத்தவர்கள் தமிழக அரசியலின் நுணுக்கமான வேறுபாடுகளை விகடன் போன்ற பத்திரிகைகள் மூலம் அறிவதற்கான வசதி இருப்பது போல, ஈழப் போராட்ட அரசியல் பற்றி சாதாரண தமிழகத்தவர்கள் அறிவதற்கு எந்த வசதியும் இல்லை. இதனால் 'அங்குள்ள சூழ்நிலை பலருக்குப் புரிவதில்லை.'

    எனவே தமிழகத்தவர்கள் கொள்கை மாறுபட்ட பிரமுகர்களைக் கொல்வதை 'ஏற்றுக் கொள்ள முடியாது' (1810 பேர்) என்றோ, 'அங்குள்ள சூழ்நிலை புரியவில்லை' என்றோ (1296 பேர்) கூறியிருப்பார்களே தவிர, 'தவிர்க்க முடியாத அணுகுமுறை' என்று கூறியிருக்க மாட்டார்கள் என்பதை அடித்துச் சொல்ல முடியும். அப்படி கொலைகளை நியாயப்படுத்திய 1089 பேரும் தான் எங்கள் முதன்மையான சந்தேக நபர்கள்.

    அடுத்தொரு கேள்வி.. ராஜீவ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரன் பற்றிய கேள்வி. இந்தக் கொலைக்கான விசாரணைகளும், பத்திரிகை செய்திகளும் முழுக்க முழுக்க ஆதாரங்களுடன் புலிகளைத் தொடர்பு படுத்தி, நீதிமன்றம் பிரபாகரன், பொட்டம்மானுக்கு தண்டனை வழங்கிய பின்னாலும், 'குற்றமற்றவர்' என்று தமிழகத்தில் யாராவது சொல்வார்களா? சொன்னவர்கள் 709 பேர். (புலிகள் செய்யும் அரசியல் கொலைகளை நியாயப்படுத்திய 1089 பேரில் மீதிப் பேர் 'குற்றமற்றவர்' என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள் எனக் கருதி 'குற்றத்தை மன்னித்து விடலாம்' என்று பதிலளித்திருக்கக் கூடும்)

    எனவே, இணையத் தளம் மூலமாக கணிப்பில் கலந்து கொண்ட ஈழத்தமிழ் புலி வெறியர்களின் எண்ணிக்கை 709 முதல் 1089 வரையிலானது. எனவே சுமாராக ஆயிரம் பேர் வரை இருக்கலாம் என நாங்கள் சரியாகவே ஊகிக்கலாம். யாழ்.தளத்தில் விகடன் கணிப்பிற்கான அறிவுறுத்தல் பக்கங்களைப் பார்த்தவர்கள் 1747 பேர். இதில் ஆயிரம் பேர் களத்தில் இறங்கியிருப்பார்கள் என்பது சாத்தியமான கணிப்பு.

    இந்த ஆயிரம் பேரின் கருத்துக்களும் கணிப்பில் இருந்து அகற்றப்பட்டால், புலிகளுக்கு ஆதரவான கணிப்புகளின் வீதம் எப்படி இருக்கும்?

    கலந்து கொண்டவர்களின் தொகை 3195 ஆகிறது. இதில் புலிகளை எப்போதும் ஆதரிக்கிறேன் என்பவர்களின் தொகை 1276 பேராகக் குறைகிறது. இது புலிகளை ஆதரிப்போரின் எண்ணிக்கையை 54 வீதத்திலிருந்து 40 வீதமாகக் குறைக்கிறது. எனவே தமிழகத்தில் புலிகளை எதிர்ப்போர் 60 வீதம்.

    புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும் என்றவர்களின் எண்ணிக்கை 999 ஆகிறது. அதன் வீதம் 47 வீதத்திலிருந்து 31 வீதமாகிறது. தடை நீடிக்க வேண்டும் என்போரின் தொகை 69 வீதமாக அதிகரிக்கிறது.

    ராஜீவ் கொலைக்கு பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை 43 வீதத்திலிருந்து 56 வீதமாய் அதிகரிக்கிறது.

    மாற்றியக்க பிரமுகர்களைக் கொல்வது ஏற்றுக் கொள்ளவே முடியாதது என்பவர்களின் தொகை 43 வீதத்திலிருந்து 56 வீதமாகிறது. (பிரபாகரன் கைது, மாற்றியக்க பிரமுகர் கொலை இரண்டிலும் புலிகளுக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஆச்சரியப்பட முடியாதபடி சமனாக இருக்கிறது. 1805, 1810. இந்தத் தொகையினர் முழுமையாக புலிகளை எதிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமே 56 வீதம்)

    எனவே 'பிரமிப்பூட்டும் சர்வே ஈழத் தமிழர் விவகாரத்தில் இங்கே நிலவும் மனநிலை இதுதான் என்று அடித்துச் சொல்வது' என்ன? புலிகளுக்கு எதிரான கருத்து தொடர்ந்தும் தமிழகத்தில் நீடிக்கிறது என்பது தான்.

    இதற்குள் இந்தக் கருத்துக் கணிப்பில் எண்ஜாலம் காட்டும் விகடனின் சித்துவிளையாட்டு கண்கட்டு ஜாலமா? கண்ணாமூச்சி விளையாட்டா? என்பதையும் பார்ப்போமோ?

    சகல தமிழக வார இதழ்களுக்குள்ளேயும் புலி ஆதரவு பத்திரிகையாளர்கள் இருந்த போதிலும், விகடன் போன்ற தேசிய நலன் பற்றி அதிகம் அக்கறை காட்டும் ஒரு நிறுவனம் அவ்வளவு சுலபமாக விலை போகக் கூடிய ஒன்றும் அல்ல. ஆனாலும் கேள்விகள் அமைக்கப்பட்ட விதம் விகடனுக்குள்ளும் புலி ஊடுருவியிருக்கிறதோ அல்லது விகடனும் புலிகளுக்கு விலை போயிருக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

    முதலாவது, ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று பதில் தெரிவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பெரும்பான்மை என்ற பதம் பாதி பாதியாக சமனாக இருப்பதற்கு பதிலாக ஒரு தரப்பு அதிகமாயிருப்பதைக் குறிப்பது. அதற்கு ஐம்பது வீதத்திற்கும் அதிகமான அளவு இருக்க வேண்டும். ஆனால், மூன்று குழுக்களாகப் பிரிக்கப்படும் போது, மும்முனைப் போட்டியில் 33.33 வீதத்தை விட மேற்பட்டவையே பெரும்பான்மை என்று குறிப்பிடப்படும், மீதி 66.67 வீதமானவர்கள் அந்த தெரிவோடு முரண்பட்டாலும்!

    மேற்கு நாடுகளில் சிலவற்றில் ஜனாதிபதி தேர்தல்களில் பலர் போட்டியிடும்போது, ஒருவரும் ஐம்பது வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகள்; பெறாத போது, அதிகளவில் வாக்குகள் பெற்ற இரண்டு பேருக்குமாக, ஐம்பது வீதத்தை விட அதிகமான பெரும்பான்மை பெறக் கூடியதாக, Runoff தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதன் நோக்கமே, முத்தரப்புப் போட்டி மூலமாக 33.3 வீதத்திற்கு மேல் மட்டுமே பெற்றவர், சிறுபான்மையாக இருந்தும் பெரும்பான்மையினரை ஆளும் தகுதி பெறக் கூடாது என்பதற்காக!

    இரண்டாவதாக, கேள்விகள் கேட்கப்படும் விதம் மூலமாகவே நாங்கள் பெற்றுக் கொள்ள விரும்பும் பதில்களைப் பெற முடியும்.

    அறுவை ஜோக் ஒன்று.. உபயம்.. தமிழக வார இதழ் ஒன்று! வழக்கறிஞர்.. அதுதான் லாயர்... திருடனைப் பார்த்து... கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதிலளிக்க வேண்டும் என்று மிரட்டிய பின்னர் கேட்டாராம்.. உன் திருட்டுப் பழக்கத்தை விட்டு விட்டாயா?

    இவ்வாறான கேள்விகள் தான் விகடன் கணிப்பில் கேட்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கேள்வியும், ஒரு கேள்வி தவிர, மிகவும் தந்திரமான பதில்கள் மூலமாக புலிகளுக்குச் சார்பான பதில் வருமாறு வடிவமைக்கப்பட்டிருந்தன.

    முதலாவது கேள்வியான விடுதலைப் புலிகளை ஆதரிப்பது பற்றியது... புலிகளுக்குச் சார்பான 'எப்போதும் ஆதரிக்கிறேன்' என்ற பதில் கொடுக்கப்பட்ட அதே நேரம், எதிர்ப்பவர்களின் வாக்குகளை இரண்டாகப் பிரித்து வலுவிழக்கச் செய்வதற்காக 'எப்போதும் எதிர்க்கிறேன்', 'ராஜீவ் கொலைக்கு முன்பு ஆதரித்தேன்' என்று இரண்டு பதில்கள். ராஜீவ் கொலைக்கு முன்பு ஆதரித்தேன் என்றால், இப்போது எதிர்க்கிறேன் என்பது தானே அர்த்தம். 'இப்போது எதிர்க்கிறேன்' 'எப்போதும் எதிர்க்கிறேன்' என்று இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டிய காரணம் என்ன? இண்டுமே எதிர்ப்பவர்களுக்கான பதில்கள் தானே.

    தமிழீழம் அமைப்பது 'சரியான தீர்வு' என்று புலிகளுக்கு சார்பான பதிலுடன், 'தேவை இல்லை' 'சுயாட்சி அதிகாரம் கொடுத்தால் போதும்' என்ற ஒரே வரியில் வரவேண்டிய பதிலை இரண்டாகப் பிரித்தது எதற்காக?

    தடை பற்றிய கேள்விக்கு 'தடை நீக்கப்பட வேண்டும்' என்ற பதில் புலிகளுக்குச் சார்பானது. 'தொடர வேண்டும்' '(தற்போதைய தடையை) பொறுத்திருந்து பார்க்கலாம்' என்ற இரண்டுமே ஒரே கருத்துள்ளவை தானே. நெடுமாறன் போன்றவர்கள் ஆதரிப்பது பற்றிய கேள்வியில் புலிகளுக்குச் சார்பான பதில் 'சரியான நிலைப்பாடு'. 'ஆபத்தான கொள்கை' 'வேறு லாப நோக்கத்துக்காக' என்ற மற்ற இரண்டுக்குள்ளும் என்ன வேறுபாடு இருக்கிறது?

    புலிகளை தி.மு.க ஆதரிப்பது பற்றிய கேள்விக்கு, 'ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் ஆதரிக்க வேண்டும்' என்ற பதில் புலிகளுக்குச் சார்பான நிலைப்பாடு. 'இன்னும் கடுமையாக எதிர்க்க வேண்டும்' 'இப்போது போலவே பட்டும் படாமலும் இருக்கலாம்' என்று வாக்குகளைப் பிரிக்க நினைத்ததன் காரணம் என்ன?

    ஆனால், எங்களை அடித்துப் போட்ட மர்மம் ஒன்றுள்ளது. ராஜீவ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனை என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி? இதில் 'குற்றமற்றவர்' 16.9 வீதம், 'குற்றத்தை மன்னித்து விடலாம்' 40.07 வீதம் என பிரபாகரன் கைது செய்யப்படுவதற்கு எதிராக பெரும்பான்மையான 56.97 வீதத்தினர் கருத்துத் தெரிவித்த நிலையில், வெறும் 43.02 வீதம் மட்டுமே சொன்ன 'கைது செய்யப்பட வேண்டும்' என்ற கருத்தை, தமிழக மக்களின் பெரும்பான்மைக் கருத்தாக முன்பக்கத்தில் சொன்ன காரணம் என்பது தான் புரியவில்லை. இதுதான் எங்களுக்குப் பிரமிப்பூட்டும் கேள்வி.

    ஒன்றில், தேசிய நலன்களுக்கு முரணாகச் செயற்படக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். அல்லது, இந்திய அதிகாரிகள் சமீபத்தில் 'பொட்டம்மானையாவது' ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்க் கட்சியினருக்கு கூறியதற்காக, பொட்டம்மானைத் தப்ப வைத்து பிரபாகரனை மாட்டி விட, பொட்டம்மானின் புலனாய்வுப் பிரிவு செய்த வேலையாக இருக்கலாம்.

    மொத்தத்தில், புலிகளுக்குச் சார்பாகப் பதில் வரவேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டே கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இந்தக் கருத்துக் கணிப்பில் உள்நோக்கங்கள் நிறைய இருப்பதாகவே கருத முடிகிறது.

    விகடனின் இந்தக் கணிப்பின் தவறுகள் பற்றிய கேள்விகள் எழுவது ஒருபுறமிருக்கட்டும். வரலாற்றுத் தரவுகள் எவ்வாறு விகடனில் வெளிவருகின்றன என்பதையும் பார்த்து விடுவோமே!

    பெட்ரோலின் கதை என்ற தொடர் வருகிறது. இஸ்ரேல் சுதந்திர நாடாக 1948ல் தன்னை அறிவித்த மறுநாளே, அரபு நாடுகள் அதன் மீது இராணுவத் தாக்குதல் நடத்திய கதை வருகிறது. இந்த யுத்தத்தை ஆறுநாள் போர் என்றும், சினாய் மற்றும் கோல்டன் ஹைட்ஸ் பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது என்றும் கதை போகிறது. எங்களுக்குத் தெரிந்தவரைக்கும், இஸ்ரேல் நாடு உருவான போது, சுற்றியிருந்த நாடுகள் தாக்குதலை நடத்தி 'அவர்களைக் கடலுக்குள் தள்ள' முயற்சித்தது உண்மை. ஆனால், இவர்கள் சொல்லும் 'ஆறு நாள் போர்' 1967ல் நடைபெற்றது மட்டுமன்றி, அப்போது தான் கோலான் ஹைட்ஸ் (கோல்டன் ஹைட்ஸ் அல்ல) கைப்பற்றப்பட்டது. வரலாற்றுத் தரவுகளைத் தரும்போதே விகடன் கவனம் செலுத்தவில்லை என்றால்... கருத்துக் கணிப்பில் கோட்டை விட்டதில் என்ன சந்தேகம்?

    குறைந்த பட்சம் தரவுகளைச் சரிபார்க்க, அதிக தூரம் செல்லத் n;தவையில்லாமல் விகடனே தமிழில் மொழி பெயர்த்து விற்பனை செய்து வரும் 'என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்காவை' மேற்படி எழுத்தாளரைப் புரட்டிப் பார்க்க வைத்திருக்கலாம். (பழைய விகடன் ஜோக் ஒன்று... என்சைக்கிளோபீடியோ என்றால் என்னடா? Hold my bicycle! அதென்னடா? என் சைக்கிளோ பிடியா!)

    நலன் கருதிய உள்நோக்கங்களுடன், தவறான அணுகுமுறைகளுடன் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பற்றி விகடனுக்கு நாங்கள் சொல்லித்தரத் தேவையில்லை. சந்தேகங்கள் இருந்தால் அழகிரியிடமே கேட்டும் பார்க்கலாம். (கேட்பதற்கு 'அழகிரியின் மகன் நண்பர்களுடன் வெளிநாடுகளுக்குப் பறக்கிறார்' என்ற முக்கிய செய்தியைத் தேடிய நிருபரை, ஆயுட் காப்புறுதி.. அதுதாங்க லைப் இன்சூரன்சு.. அனுப்பி வைக்கலாம். விகடன் அலுவலகத்திற்கு கறுப்புப்பூனைகள் பாதுகாப்பும் தேவைப்படலாம்)

    புலிகளும் புலி ஆதரவாளர்களும் விகடனில் வந்த கருத்துக் கணிப்புகளை நம்பி, (புலிகளே அந்த மோசடியின் பின்னணியில் இருப்பது தெரியாமல்) இன்று தமிழகத்தில் தங்களுக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் அந்த ஆதரவு மீதான பயத்தினால் தங்கள் மீதான தடை நீங்கும் என்றும், மத்திய அரசும் மாநில அரசும் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கும் என்றும், இந்தியா தலையிட்டு இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் என்றும் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    கணக்குகள் போட்டு கனவுகள் கண்டுகொண்டு இருக்கும் இவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்வதில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை விடயத்தில் தீர்மானமாக சில விடயங்களைக் கொண்டிருக்கிறது. ஐக்கிய இலங்கைக்குள் மட்டுமான தீர்வு, (தமிழீழம் பிரிக்கப்படாது!) தமிழ் பிரதேசங்களில் புலிகளுடன் மற்ற இயக்கங்களும் ஜனநாயக ரீதியில் செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும், (ஏகபிரதிநிதிகள் கிடையாது!), ஜனநாயக சூழலில் புலிகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், ராஜீவ் கொலைக்கான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற விடயங்களில் இந்தியா உறுதியாகவே உள்ளது. இவை அனைத்துமே புலிகளின் இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயங்கள்.

    இந்தியா வந்து தலையிட வேண்டும் என்று எதிர்பார்ப்போர் இந்த விடயங்களையும் கணக்கிலும், கனவிலும் எடுத்துக் கொள்வது நல்லது. இவர்கள் நினைப்பது போல, இவர்களுக்குச் சார்பான நடவடிக்கைகளை மட்டும் இந்தியா மேற்கொள்ள வேண்டும், பாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றால் புலிகள் இந்தியாவின் செல்லப் பிள்ளையாக இருந்திருக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் உணர்வுகள் எப்படித் தான் கொந்தளித்தாலும், தேசிய நலன் மட்டுமே மத்திய அரசுக்கு முதன்மையானது. எதிர்க்கட்சியில் இருந்த காலங்களில் புலிகளின் மேடையில் முழங்கிய ஜோர்ஜ் பெர்னான்டஸ் பாரதீய ஜனதா ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போதும், புலிகளின் கடலோர நடமாட்டங்களை இந்தியக் கடற்படை கட்டுப்படுத்தும் முயற்சிகளிலேயே ஈடுபட்டதை நினைவில் கொள்வது நல்லது.

    இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த நீண்ட காலமாகவே புலிகள் முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்திய மீனவர்களைத் தாங்களே சுட்டுவிட்டு இலங்கை இராணுவம் சுட்டது என்று பழி போட்டதையோ, இந்திய மீனவர்களைக் கடத்திக் கொண்டு போய் வன்னியில் சிறை வைத்ததையோ, மீனவர்களின் படகைக் கடத்திக் கொண்டு போய் ஆயுதம் கடத்திய போது மாலைதீவில் வைத்துப் பிடிபட்டதையோ தமிழகத்தினர் மறந்திருக்க நியாயமில்லை. இதனால், சிங்கள இராணுவம் தமிழக மீனவரை வரவேற்று உபசரிக்கிறது என்று யாரும் சொல்ல வரவில்லை. மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் படகுகள் மீது சந்தேகப்பட்டு நெருங்கி வந்த கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தி விட்டு, மீனவர்களை அம்போ என்று விட்டு தப்பியோடியவர்கள் புலிகள். தற்போது இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகும் மீனவர்களில் பலர் புலிகளோடு வர்த்தகத் தொடர்புகளுக்காக இலங்கைக் கடற்பிராந்தியத்திற்குள் நுழையும் போது மாட்டிக் கொண்டவர்கள். இவர்களின் செயலால், பல அப்பாவி மீனவர்களும் சந்தேகத்திற்குள்ளாகி உயிரிழக்க நேர்கிறது. மற்றும்படி, இந்தியக் கடல் எல்லைக்குள் வைத்து இலங்கைக் கடற்படை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், இலங்கைக் கடற்படையை நிர்மூலமாக்கக் கூடிய சர்வதேச விதிமுறைகளின் கீழான உரிமையும் வல்லமையும் இந்தியக் கடற்படைக்கு உண்டு.

    தற்போது இந்தியாவின் உதவியை புலிகள் நாடி நிற்பது சுயநலத்திற்காகவே. இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பதற்காக இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்து, வடக்கையும் கிழக்கையும் இணைத்து மாகாண அரசை நிறுவிய போது, முழு அதிகாரமும் தங்களுக்குத் தரப்படவில்லை என்பதற்காக, மற்றவர்களுடன் அதிகாரத்தைப் பகிர மறுத்து இந்தியாவுடன் யுத்தத்தை ஆரம்பித்த புலிகள், எந்த சிங்கள அரசுக்கு எதிராகப் போராடினார்களோ, அதே அரசுடன் கை கோர்த்து ஆயுத உதவி பெற்று இந்தியாவுக்கு எதிராக யுத்தம் செய்து, 'நான்காவது இராணுவத்தை விரட்டியடித்தோம்' என்று பிரசாரம் செய்தார்கள். பின்னர், பின்விளைவுகள் பற்றிய தீர்க்கதரிசனம் இன்றி, ராஜீவைக் கொலை செய்து விட்டு 'துன்பியல் சம்பவம்' என்று வர்ணித்தார்கள்.

    இன்று இந்தியா அன்று வாங்கிக் கொடுத்த வடக்குக் கிழக்கு இணைப்பையும் காவு கொடுத்து, வெறும் வன்னிக்குள் முடங்கிக் கொண்டு, இந்தியாவிடம் உயிர்ப்பிச்சை கேட்பதற்காக, தங்களுக்கு தமிழகத்தில் ஆதரவு இருக்கிறது என்று காட்டப் பயன்படுத்தியது தான் இந்த கருத்துக் கணிப்புகள். இது புலிகள் எவ்வளவு தூரம் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

    சேற்றில் அகப்பட்ட புலி உயிர் தப்புவதற்காக, பிராமணனைப் பசப்பு வார்த்தைகளால் ஏமாற்றியது போல, இன்றும் புலிகள் தமிழகத்தினரையும் இந்தியாவையும் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். இதெல்லாம் உயிர் தப்பும் வரைக்கும் தான்! இன்று வரைக்கும் புலிகளின் முக்கியஸ்தர்கள் அடிக்கடி தமிழக அரசியல் தலைவர்களை முதுகெலும்பில்லாதவர்கள் என்றும், புலிகளின் ஆய்வாளர்கள் தமிழக மக்களைப் பாமரர்கள் என்றும் வர்ணித்துக் கொண்டிருப்பது தமிழக மக்கள் அறிந்திருக்க நியாயமில்லை.

    ஈழத்தமிழர்கள் எல்லோருமே புலிகள் போன்ற மனபாவம் கொண்டவர்கள் அல்ல. மொழியாலும் கலாசாரத்துடன் தமிழகத்துடன் கொண்டிருக்கும் உறவின் மகிமை அவர்களுக்குப் புரியும். இதனால் தான், சிங்கள இராணுவத்தின் தாக்குதலின் போது, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பிப் போகாமல், இந்தியாவிடம் தஞ்சம் கோரி வருகிறார்கள். இலங்கைப் பிரச்சனைக்கான தீர்வும் இந்தியாவின் அனுசரணை இல்லாமல் சாத்தியமில்லை என்பதை ஈழத்தமிழர்கள் முற்றுமுழுதாக நம்புகிறார்கள்.

    இன்று புலிகளின் இந்தக் குள்ளநரி விளையாட்டில் விகடன் அகப்பட்டுக் கொண்டுள்ளது. தங்கள் கருத்துக் கணிப்பை புலிகள் திசை திருப்பி... ஹைஜாக் பண்ணி... தமிழகத்தின் கருத்துக்களை தங்கள் நலன்களுக்காக ஜோடனை செய்ய, தன்னைப் புலிகள் பயன்படுத்திக் கொள்வதை விகடன் அனுமதிக்குமா?

    விகடனிடம் நாங்கள் கேட்க விரும்புவது மூன்றே மூன்று கேள்விகள்தான். முதலாவது, நேரடி விசிட், இணையத் தள ரூரிஸ்டுகளின் விசிட்டுகள் என இரு குழுக்களின் முடிவுகளையும் தனித்தனியாக பிரசுரிக்க முடியுமா? இரண்டாவது, கேள்விகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டதும், புலிகளுக்கு எதிரான பதில்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டதுமான சூட்சுமத்தின் சூத்திரதாரி யார்? மூன்றாவது, கணிப்பின்படி பெரும்பாலானவர்கள் பிரபாகரன் குற்றமற்றர், மன்னித்து விடலாம் என்ற நிலையில், பெரும்பான்மையினர் கைது செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது எதற்காக?

    அத்தோடு, சூப்பர் அதிரடி சிறப்பு போனஸ் கேள்வி... 'விடுதலைப் புலிகளுக்கு இழப்புகள் புதிதல்ல... அவர்கள் இழப்புகளில் தான் எழுந்து முளைத்திருக்கிறார்கள். அவர்களை எதுவும் தடுக்க முடியாது' என்று கூறும் 'சர்வதேசப் பார்வையாளர்களில்' உதாரணத்திற்கு மூவரின் பெயர்களைத் தர முடியுமா? இன்று விகடனின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகியதுடன், விகடன் கணிப்பை நடத்திய விதமும் கேலிக்குரியதாகி விட்டது. தன் மீது படிந்த களங்கத்தை நீக்கி, புடம் போட விகடனுக்கு இது ஒரு அக்னிப் பரீட்சை! ஜெயிக்குமா விகடன்?

    ***

    'பெண்ணுங்களை முதன் முதலாக கலர்னு கூப்பிட்ட அந்த மச்சான் யாரு? என்ற நமீக் குட்டியின் சந்தேகத்தையும் தீர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை எங்கள் மீதும் சுமத்தப்பட்டிருக்கிறது. இதோ... நகைச்சுவை நடிகர் கைவைப் பூசல் வெடிவாலு... 'அதுதாண்டி நம்ம மருதகாசி' 'ஆரு அந்த ஹேண்ட்ஸம் விக்ரம் காசியா? 'அடி போடி, வௌரங் கெட்டவளே. கவிஞர் மருதகாசி' 'யாரு அந்த.. காசிக்கு போன சன்யாசி?' 'பெயத்துப் புடுவன், பெயத்து.. சினிமாவுக்கு பாட்டெழுதின மருதகாசி.. அவரு தான் 'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்'னு அழகாத் தமிழில பாட்டெழுதினாரு. இந்த நாசமாய் போன டி.விக்காரங்களும் குறுக்காலை போன பேப்பர்காரங்களுமாய் சேர்ந்து, முக்கால் இங்கிலிசு, மூணு வார்த்தை தமிழ்னு தமிழைக் கொலை பண்ணி, தமிழ் எல்லாத்தையும் இங்கிலிஸ் ஆக்கிப்புட்டானுங்கோ. எளந்தலைமுறை யெல்லாம், அது தான் ஸ்டைலுன்னுட்டு, அதைக் கலருன்னு மாத்திப் புட்டு தெருத்தெருவா நாயாய் அலையுதுக.. இப்ப என்னடான்னா, எளந்தலைமுறைக்கு பிடிக்கும் என்னு சொல்லிப்புட்டு, இந்த சினிமாப் பாட்டுக்காரங்க எல்லாம் 'அழகான கலரு நான், அதுக்கேத்த பிகரு தான், என்கிட்ட இருப்பதெல்லாம் தம்மாத்துண்டு கவரு தான்னு' தமிழ்ல பாட்டெழுத ஆரம்பிச்சுட்டாங்கடி.. ஐயோ.. இந்த அநியாயத்தை நான் எங்க போய்ச் சொல்லுவேனடி?

    'ஆரம்பிச்சுட்டான்யா, ஆரம்பிச்சுட்டான்யா. ஐயோ.. பிளீஸ்.. யாராவது என்னைக் காப்பாத்துங்க..!'

    Postad



    You must be logged in to post a comment Login