Recent Comments

    வார்முகில் வண்டுகள் 

    பூங்கோதை

    ‘மா’
    இந்த அமிர்தமான வார்த்தையை பல்வேறு விதமாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

    மனதைத் தொட்டுச் செல்லும் அம்மா, ஆங்கில வார்த்தை மடம் - madam - என்பதன் சுருக்கம், ஆங்கிலத்தில் முதுமானிப் பட்டத்தின் சுருக்கம் ( MA is an abbreviation for 'Master of Arts) அல்லது ஆங்கிலத்தில் கூட மம் (mum) என்பதன் சுருக்கம் ‘ மா’ எனப் பல்வேறு உபயோகங்கள் இச்சொல்லிற்குண்டு.

    என்னை ‘மா’ என்று பேரன்போடு சிலர் அழைக்கும் போது, இதில் எதை நான் அர்த்தப்படுத்திக் கொள்வதென்பது அழைப்பவர் யார் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

    ************************************

    “ மம்மா?” “ மா?” கேள்வியைச் சுருக்கமாக எண்னிடம் எறிந்தது அந்த ஐந்து வயதுக் குழந்தை. அவள் கரிய விழிகள் வண்டுகள் போல சுழன்றதில், சற்றே கண்ணீரும் எட்டிப் பார்த்தது. மதிய உணவு பரிமாறப்பட்டிருந்த அந்த, எனது பள்ளி மண்டபத்தில் உணவுத்தட்டை முன்னே வைத்தபடி, அதைச் சாப்பிட முடியாமல், பலத்த யோசனையில் இருந்தாள் அவள். அது அவளுக்கு எமது பள்ளியில் முதல் நாள்!

    பேரிடர் காலத்தில் ஆரம்பப் பள்ளியைத் தொடங்க இருந்த குழந்தைகள், அதை தொடர முடியாமல் போனதில் ஏற்பட்ட பாதிப்புகளில் ஒன்று இக்குழந்தைகளின் சமூகம் சார்ந்த சூழலியல்பு தன்மையின் பின்னடைவே. அதிலும் இவள் போல மொழிப் பிரச்சனையும் சேரும் போது அது இக்குழந்தைகளின் மனத்தில் அச்சம், மற்றவர்களைப் பற்றிய புரிதல் இன்மை, தன்னை மற்றவர்களோடு இணைத்துக் கொள்ளாத்தன்மை போன்றவற்றைத் தோற்றுவித்து, பள்ளி வாழ்வில் சீரற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது. இது ஆசிரியர்களுக்கு பெறும் சவால் தான்.

    ஒரு வகுப்பு குறைவாக இருந்த என் சக ஆங்கில ஆசிரியை ஒருவர் நான் மலையாளம் பறையக்கூடும் என்ற யோசனையில் என்னை அவசர அவசரமாகக் கூப்பிட்டு, தன் வகுப்பில் ஒரு புதிய வரவு என அந்தக் குட்டித் தேவதையை சுட்டிக் காட்டி, என் உதவியைக் கோரியிருந்தார்.

    என்னை இன்னொரு வகுப்பு ஆசிரியை என அறிமுகப்படுத்திய போது, என்னைப் பார்த்த அவள் கண்களில் பளீரென ஒரு மின்னல்.
    நான் தன் தாய் மொழியான மலையாளம் பேசக்கூடும் என அவள் எதிர்பார்த்திருக்கலாம். அவள் குடும்பமும், அவளும் இந்நாட்டுக்கும் எமது பள்ளிக்கும் புதியவர்களாக இருந்தார்கள்.

    அழக்கூடாது என்ற வைராக்கியம் அவள் முகத்தில், கண்ணீரூடே தெரிந்ததில் நான் சற்றே நெகிழ்ந்து போனாலும், கண்டபடி தமிழோ அல்லது அரைகுறையாக மலையாளமோ பேசி, அவளை மேலும் கலவரப்படுத்தக் கூடாது எனத் திடமாக உறுதி கொண்டு, கையையும் முகத்தையும் அபிநயம் செய்து, கவலைப்படாதே, இதோ திரும்பவும் வருகிறேன் எனத் தெரிவித்த போது அவள் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டது, அவள் முகத்தை புன்னகையால் நிரப்பியதில் இருந்து தெரிந்தது.

    இப்படி, ஒன்றிரண்டு ஆசிய நாட்டுக் குழந்தைகள், ஐரோப்பிய நாட்டுக் குழந்தைகள் புதிதாக பிரித்தானிய அரச பள்ளிகளில் வந்து சேர்வதுண்டு. இவர்களுக்காக பிரத்தியேக தனிப்பட்ட ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகள், பெற்றோர்களுக்கான பயிற்சிக்கூடங்கள், தனிப்பட்ட முறையில் வகுப்பாசிரியருடனான சந்திப்புகள் என பல்வேறு சலுகைகள் பிரித்தானிய அரசால் தமது பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

    ************************************

    எனது மதிய இடைவேளையில் மலையாளம் பறையும் நட்புகளோடு தொடர்பு கொண்டதிலும், கூகிள் மூலமும் ஏதோ என்னால் முடிந்த தகவல்களைச் சேகரித்துக் கொண்டேன்.
    “ சுகமானோ?”
    “எந்தோ இஷ்டம்?” என்பதில் தொடங்கி, ஒரு சில வசனங்களால் அவளை வசப்படுத்த முடிந்தது.

    இப்படியாக நாம் இருவரும் அடிக்கடி அந்நாளில் சம்சாரித்ததில் குழந்தை என்னை , “ஞான் உன்னை பிரேமிக்கும்!” என்பதில் முடித்துக் கொண்டாள்.

    அவள் இருப்பது என் வகுப்பல்ல, எனது வகுப்பு ஆறு வயதுக் குழந்தைகளுக்கானது. அவளுடைய வகுப்பறை வெளிக்கதவும் என்னுடைய வகுப்பறை வெளிக்கதவும் ஒரே மைதானத்தை நோக்கியே திறந்திருப்பதால், அவள் பெற்றோர், பள்ளி முடிந்து அவளைக் கூட்டிச் சென்ற போது, அவள் அவசரம் அவசரமாக என்னைக் காட்டி, ஏதோ குறிப்பிட்டு, தன் பெற்றோருக்கு சொல்வது எனக்குத் தெரிந்தது.

    சிறிது நிமிடங்களில் சரளமாக ஆங்கிலம் பேசும் அவள் தந்தையும் தாயும் என் வகுப்பறை வாசலுக்கு வந்து, தாமும் என்னைப் பிரேமிப்பதாக அறிவித்த போது, சின்னவள் வெட்கத்துடன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தது என் இதயத்தை ஊடுறுவிச் சென்றது.

    “ எங்கள் குழந்தை அடுத்த வகுப்புக்கு வரும் போது, அடுத்த வருடம் நீ தான் அவளுக்கு ஆசிரியையாக வர வேண்டும் என விரும்புகிறோம்!” என ஆங்கிலத்தில் அவர்கள் அறிவித்த போது, அது என் கையில் இல்லை எனச் சொல்லத் தோன்றியதை, சொல்லாமல் விடுவது சுபம் எனத் தோன்றியது. மெளனமாகப் புன்னகைத்தேன்.


    ************************************

    தற்போது, இரண்டு வார ஈஸ்டர் விடுமுறையாதலால், பள்ளியில் ஆங்கிலம் மட்டும் பேசும் அத்தனை என் வகுப்புக் குழந்தைகளும் என்னைக் கட்டியணைத்து, “I love you loads!” “ I love you to the moon and back” “ We will miss you!” “ Can I come to your home?” என்பதாகக் கூறிய தருணமொன்றில், பேரன்பால் நனைந்த இதயம், என் கண்களையும் வியர்க்க வைத்தது.

    “வண்டே வண்டே வார்முகில் வண்டே,
    பலவட்டம் பாடியதெல்லே
    மனமெல்லாம் மதுரக் கனவாய் மாறிப்போயி…” பாட்டொன்று மனதில் வந்து போயிற்று!

    **********************************
    விமானத்தில் பறந்து கொண்டிருந்த போதும், என் இதயம் என்னவோ என்னிடம் இல்லாத நிலையில், பள்ளியில் காதலும், கண்ணீரும், பேரன்பும், குறும்புத்தனங்களும், சேட்டைத்தனங்களும் நிறைந்த சுட்டிகளோடு பேசிய பலதும் என் நினைவோடு சேர்ந்தே பறந்தன. என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பிரித்தானிய நாட்டு ராஜகுமாரன் என் நிலை அறிந்தவன் போல், என் இருக்கையைப் பின் தள்ளி வசதியாக துயிலும்படி பணித்தான்!

    கற்றலும், கற்பித்தலும், காதலும், பேரன்பும் இனிதே இனிது. 

    Postad



    You must be logged in to post a comment Login