Recent Comments

    தேசிக்காய்த் தலையரும் மாபுனிதரும்

    வணங்காமுடி குண்டாயுதபாணி

    ஆங்கிலத்தில் Attention span என்ற ஒரு வார்த்தைப் பிரயோகம் உண்டு. அந்தப் பதத்தின் அர்த்தம் எந்த ஒரு விடயம் பற்றியும் ஒருவர் அவதானம் செலுத்தும் கால அளவைக் குறிப்பது. மகாஜனங்கள் அரசியல்வாதிகளின் கோளாறுகளை விரைவாகவே மறந்து, தொடர்ந்தும் அவர்களின் பின்னால் செல்வதற்கு, இந்தக் கால அளவு குறைவாக இருப்பதே காரணம் என்பதைக் குறிப்பது தான் பொதுவாக இந்தப் பதத்தின் தாற்பரியம்.

    மிருக பக்தகோடிகளுக்கு இந்த அவதானக் கால அளவு கம்மி என்னும் உண்மை நிலக்கீழ்க் கர்ப்பக்கிருகத்தில் வீற்றெழுந்து உலகெங்கும் வாழும் தன் பொய்யடியார்களுக்கு இருள் பாலிக்கும் மிருகப்பெருமான் முதல் ஊடகங்களில் அரசியல் திரிப்பு ஆய்வு செய்யும் திருமிருக திரிபானந்த வாரியார்கள் வரைக்கும் நன்றாகவே தெரியும். ஒப்பாரி வைத்த கூட்டத்திடம் இப்போது பிரிகேடியர் பற்றிக் கேட்டால், சில நேரம் பிரிகேடியரின் சாதியைச் சொல்லித் திட்டவும் கூடும். 'பேச்சுவார்த்தை மேசையில் எதிரிகளைத் திணறடித்தார்', 'சிங்களத்தின் முகத்திரையைக் கிழித்தார்' என்று பாலசிங்கத்திற்கும் பிரிகேடியருக்கும் சொன்னதை தற்போதைய நடேசனுக்கும் சொல்லிக் கொள்வதில் இவர்களுக்குத் தயக்கம் கிடையாது.

    இவர்களுக்குத் தேவை விசிலடிப்பதற்கு ஒரு ஹீரோ மட்டும் தான்.. அது பாகவதராய் இருந்தால் என்ன? வாத்யாராய் இருந்தால் என்ன? சுப்பர்ஸ்டார், இளையதளபதியாய்த் தான் இருந்தால் என்ன? முன்னைய ஹீரோக்களைக் கைகழுவி விட்டு, அந்தந்தக் காலங்களில் வரும் ஹீரோக்களின் வீரசாகசங்களால் மெய் சிலிர்ப்பது தான் இவர்களின் பிறவிப் பெரும்பயன்.

    இப்படியாகத் தானே.. கருணாரத்தினம் அடிகளார் இறந்த கையோடு இலங்கையில் மனிதம் மரணித்து விட்டது என்று வயிற்றிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு, கூலிக்கு மாரடித்த ஒப்பாரி வைப்பதற்குள், காக்கா எச்சம் போடுவது போல குண்டுவீசித் தாக்கும் வான்புலியின் வெலிஓயாச் சாகசமும், முகமாலையில் 'சிங்களத்தின் முதுகெலும்பு ஒடித்து' முகம் நிமிர்ந்த வீரசாகசமும் தந்த ஆர்ப்பரிப்பில், அடிகளாரைக் கூட்டம் நன்றாகவே மறந்து விட்டது. நல்ல காலம், அடிகளாரின் உடலைச் சுமந்து செல்லும்போது, இந்த 'இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் செய்தி' வந்திருந்தால், உடலை வீசி எறிந்து விட்டு இவர்கள் ஆனந்தக் கூத்தாடியிருக்கக் கூடும்.

    இந்தக் கூத்துக்களை எல்லாம் கண்டு எரிச்சல் தாளாமல், இந்தப் பக்தகேடிகளுக்கு 'புண்ணில் புளி தடவும்' திருப்பணியைச் செய்து வந்த 'தேசிக்காய்த் தலையர்' (1) பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி, துருவப் பனி உருகட்டும், அலாஸ்காவில் எண்ணெய்க் கிணறு தோண்டலாம் என்று காத்திருக்கும் ஜோர்ஜ் புஷ்ஷின் மதியுரைஞர் கூட்டம் போல, பனி உருகிய கையோடு, பேனாவை வீசி எறிந்து விட்டு மண் வெட்டியைத் தூக்கிக் கொண்டு காடு வெட்டிக் களனியாக்குவதால், அந்த திருக் கைங்கர்யத்தை பயபக்தியோடு செய்வதில் வணங்காமுடி பெருமையுறுகிறான்.

    (1) இடியப்பம் மலிவு விலையில் என்றவுடன் சேர்ந்த கூட்டத்தில் நின்ற ஒரு வயதான பெரியவர் 'ஆரடா தம்பி, உந்த தேசிக்காய்த் தலையன், உந்த ரேடியோவில நெடுகச் சொல்லிக் கொண்டிருக்கிறாங்கள்?' என்று கேட்ட கேள்விக்கு, 'ஐயா, அது தேசிக்காய்த் தலையர் இல்லை, தேசியத் தலைவர்' என்று கியூறியஸ் ஞானப்பழம் கொடுத்து, அப்பெரியவரின் அறிவுக் கண் திறந்தார் என்பது ஐதீகம்)

    தலைவரை மண்டேலாவுடன் ஒப்பிடுவதில் சுய இன்பம் காணும் புலிக் கூட்டம், தங்களை ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் போல நினைத்துக் கொள்வதுண்டு. மண்டேலா சிறையில் வாடிய போது, தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் ஆயர் டெஸ்மன்ட் ரூரூ. மண்டேலா விடுதலை பெறுவதற்கு முன்னால் இவர் கனடா வந்திருந்த போது, கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது கதை ஒன்று சொன்னார்...

    ஒரு தடவை தென்னாபிரிக்க அமைச்சர் ஒருவரும் அந்த நாட்டுக்கு அருகில் உள்ள பொட்ஸ்வானாவின் அமைச்சரும் எங்கோ சந்தித்துக் கொண்டார்களாம். பொட்ஸ்வானா அமைச்சர் தன்னை அறிமுகம் செய்த போது 'கடற்படைக்குப் பொறுப்பான அமைச்சர்' என்று கூறியதற்கு, தென்னாபிரிக்க அமைச்சர் பலமாய் சிரித்தாராம். 'பொட்ஸ்வானா நாலு பக்கமும் தரையால் சூழப்பட்ட நாடு. அதற்கு கடலே இல்லை. பிறகு எப்படி கடற்படைக்கு நீர் அமைச்சராய் இருக்க முடியும்?' என்று கிண்டல் அடித்தாராம். அதற்கு பொட்ஸ்வானா அமைச்சர் 'உங்கள் நாட்டில் நீதி அமைச்சர் இருக்க முடியும் என்றால், எங்கள் நாட்டில் கடற்படைக்கு அமைச்சர் இருப்பதில் என்ன தப்பு?' என்றாராம்.

    புலிகள் மனித உரிமை என்று கூறும் போதெல்லாம் இந்த கிண்டல் தான் ஞாபகம் வரும். சாத்தான் வேதம் ஓதுகிறது என்பது போல, புலிகள் மனித உரிமை பற்றிப் பேசும் போது, 'தலைவிதி, கேட்க வேண்டியிருக்கிறது' என்று தலையில் அடிக்கத் தோன்றும். சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை சர்வதேச அமைப்புகள் கண்டிக்கும்போது, அவற்றை மேற்கோள் காட்டி பிரசாரம் செய்யும் புலிகளின் மனித உரிமை மீறல்களை... அதே அமைப்புகள் பட்டியல் போட்டிருக்கின்றன. ஐ.நா, ஐரோப்பிய சமூகம், சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு என்று சகல சர்வதேச அமைப்புகளும் புலிகளின் மனித உரிமை மீறல்களைப் பட்டியல் போட்டிருக்க...

    புலிகள் அடிகளாரைப் பிடித்து, இல்லாத மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்த ஒரு அமைப்பை உருவாக்கினர். ஆவணப்படுத்துவதற்கு எதற்கு அடிகளார்? ஏற்கனவே புலிகளின் ஊடகங்கள் எல்லாமே சகல மனித உரிமை மீறல்களையும் ஊதிப் பெருப்பித்துப் பிரசாரம் செய்து கொண்டு தானே இருக்கின்றன. மனித உரிமைகளை மட்டுமா? மாடுகள், பயன்தரு மரங்கள், வயல்கள், நடப்பட்ட காட்டு மரங்கள் என்று இலங்கை அரசினால் மீறப்படும் மிருக, தாவர உரிமை மீறல்களை எல்லாம் புலிகள் ஆவணப்படுத்திக் கொண்டும் திரிபானந்த வாரியார்கள் கதாகாலட்சேபம் செய்து கொண்டும் தானே இருக்கிறார்கள்.

    காரணம் இருக்கிறது. ஆயர் டெஸ்மன்ட் ரூரூ போல, அடிகளார் ஒருவரைப் பினாமியாக நியமித்தால், முழு உலகுமே ஏமாந்து விடும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கை தான். புலி வாடை அடித்தாலே, சர்வதேச சமூகம் அலர்ஜி அடையும் நிலையில், பாவாடை போர்த்த புலியாக அடிகளாரை அடையாளம் காண்பதற்கு நீண்ட காலம் எடுக்கவில்லை. சர்வதேச சமூகத்தினர் என்ன புலன் பெயர்ந்த ஈழத் தமிழர்களா? காதில் பூச்சுடுவதற்கு!

    இயக்கங்கள், இலங்கை அரசு, இந்திய இராணுவம் என நடத்திய உரிமை மீறல்களை ஆவணப்படுத்தி, தங்கள் உறுப்பினரான ராஜினியையும் புலிகளின் கையில் இழந்த பின்பும், துணிச்சலுடன் தங்களின் பணியைத் தொடர்ந்து வரும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு இருந்த நேர்மை கூட அடிகளாருக்கு இருந்ததில்லை. அவர்களுக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரத்தின் ஒரு சிறு பங்கேனும் அடிகளாருக்குக் கிட்டவில்லை.

    காரணம், தன்னை ஒரு மனித உரிமைப் போராளியாக இனம் காட்ட முன்னால், அடிகளார் தன்னைப் புலியாக இனம் காட்டிக் கொண்டது தான். இது போன்று தான், தங்களை மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் என்று குத்தி முறிந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்னமும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை.

    அகோர யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மடு மாதா சுரூபத்தை இடம் மாற்றிய போது, புலிகளின் தொலைக்காட்சியில் தோன்றிய அடிகளார் இறப்பதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன், கூறுகிறார்... போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து புலிகள் விலகக் கூடாது என்று தான் இன்றும் தமிழ் மக்கள் புலிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதனால் தான் புலிகள் விலகாது இருக்கின்றனர்!

    இதைக் கேட்டு அழுவதா? சிரிப்பதா?

    கத்தோலிக்க திருச்சபையின் குரவர்கள் பலர் விடுதலைக்கு ஆதரவானவர்களாக இருக்கிறார்கள். ஆனால், சிலர் ஒருபடி மேல் சென்று புலிகளோடு தங்களை முழுமையாக இணைத்து அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் இவர்களால் யாழ்ப்பாணத்தில் வசிக்க முடியாமல் வன்னிக்கு சென்று வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 'உலகுக்கு ஒளி நானே' என்ற இறைவனின் வழியைக் காட்ட வேண்டிய அடிகளார் சாத்தான் ஓதும் வேதத்திற்கு ஒத்தூத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

    சர்வதேச அமைப்புகள் புலிகள் சிறார்களைக் கடத்திப் படையில் சேர்ப்பது பற்றிக் கண்டிக்கும் போதும், அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் புலிகளைச் சந்திக்க வர முன்பாகவும், இயக்கத்தில் சேர முயன்ற சில சிறார்களைக் குடும்பங்களிடம் கையளிப்பதாக புலிகள் அரங்கேற்றிய நாடகங்களில் அடிகளார் பங்கேற்று நடித்துக் கொண்டிருந்தார். அரசியல்வாதிகள், மாற்றுக் கட்சியினர், அப்பாவிகள் என்றெல்லாம் புலிகள் கொன்று குவிக்கும்போதெல்லாம், அடிகளார் மனித உரிமை மீறல்களை கண்டு கொள்ளவில்லை. மிருகங்கள் மீறுவதால், அவை மனித உரிமை மீறல்கள் அல்ல என்று நினைத்திருக்கக் கூடும்.

    வடக்குக் கிழக்குக்கான மனித உரிமைகள் அமைப்பு என்று பெயரை வைத்துக் கொண்டு வன்னியில் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்ததால், அவரால் புலிகள் தவிர்ந்த வேறெவரதும் அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை. வடக்கில் இருந்து கொண்டு, கொலைப் பயமுறுத்தல்களுக்கும் மத்தியில், இராணுவத்தினால் கைது செய்யப்படுவோர், கொல்லப்படுவோர் ஆகியோரின் மனித உரிமைகளுக்காகப் போராடியிருந்தால், இன்று அவர் சர்வதேச சமூகத்தின் பெருமதிப்புக்குள்ளாகியிருப்பார். அங்கு வைத்துக் கொல்லப்பட்டிருந்தாலும், இலங்கை அரசு கடும் சர்வதேச கண்டனங்களுக்குள்ளாகியிருக்கக் கூடும்.

    எந்த ஒரு தமிழர் போலவும் தனக்கு என ஒரு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை அவருக்கும் உண்டு. ஆனால், இவர் ஒருபடி மேலே போய், அப்பட்டமான மனித உரிமை மீறல்களை மறைத்து புலிகளை நியாயப்படுத்த முயற்சித்ததால், பாவாடைக்குக் கிடைக்க வேண்டிய கௌரவம் புலித் தோல் போர்த்தியதால் இன்று கவனிப்பாரற்றுப் போய் விட்டது.

    அவர் ஒரு புலி ஆதரவாளர் என்பதால், அவரது உண்மையான சேவைகளை மறந்து விடவும் முடியாது. யுத்தத்தினாலும், வேறு காரணங்களினாலும் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகியவர்களுக்கு இவர் ஆலோசனைச் சேவைகள் வழங்கியிருந்தார். இவர் அந்தச் சேவைகளுடன் மட்டும் நிறுத்தியிருந்தால் கூட, பெருமதிப்புப் பெற்றிருக்கக் கூடும். அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டதுதான் இவர் விட்ட பெரும் தவறு.

    இந்த நிலையில் கண்ணிவெடித் தாக்குதலில் அடிகளார் கொல்லப்பட்ட விடயம் வெளிவந்தது. பழுதடைந்த தன் வாகனத்தை இன்னொரு வாகனம் மூலம் கட்டி இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்த போது, தன் வாகனத்தினுள் வைத்தே இவர் கொல்லப்பட்டிருந்தார்.

    உடனடியாகவே புலிகள், அரசு, மாற்றுத்தரப்பினர் என வழமையான குற்றச்சாட்டுக்களையும், உரிமை மறுப்புகளையும் செய்து கொண்டனர். புலிகள் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று அறிக்கை விட்டனர். முன்பு புலிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தும் போதெல்லாம் நித்திய புன்னகை அழகன் 'அது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடந்தது. அது பற்றி எங்களுக்குத் தெரியாது' என்று சிரித்துக் கொண்டே சொல்லும்போது, அந்த ஜோக்கைக் கேட்டு, சாமத்தியச் சடங்குகளில் அரசியல் பேசும் அவதானிகள் பிரிகேடியரின் சாமர்த்தியத்தை மெச்சிச் சிரிப்பதுண்டு. எனவே வழமை போல, இராணுவமும் 'இது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடந்தது' என்று கையை விரித்து விட்டது.

    மறுபுறத்தில், மாற்றுத் தரப்பினரும் 'இது புலிகளின் கைங்கர்யம்' என்று குற்றம் சாட்டினர். தங்கள் மீதான முற்றுகையை நீக்க சர்வதேச சமூகம் அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்பதற்காக, இந்தக் கொலையைத் தாங்களே செய்து விட்டு இராணுவத்தின் மீது பழியைப் போடுகிறார்கள் என்பதே இந்தக் குற்றச்சாட்டின் தாற்பரியம்.

    அரசாங்க தரப்பு செய்வதற்கான காரணங்கள் பல கூறப்படுகின்றன. அதிலும் ஜெயராஜ் பெர்னாண்டோப்புள்ளேயின் தாக்குதலுக்குப் பதிலடியாக, இது நடத்தப்பட்டதாகவும், முன்பு அமைச்சர் திசநாயக்கவின் தாக்குதலுக்கு பதிலடியாக சிவனேசன் கொல்லப்பட்டதாகவும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இவ்வளவு சுலபமாக ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க இராணுவத்தினரால் முடியும் என்றால் புலிகளின் தலைவர்கள் பலர் எப்போதோ கொல்லப்பட்டிருக்க வேண்டும்.

    அதையும் விட, ஒரு கத்தோலிக்க குருவைக் கொல்வதால் அதனால் சர்வதேச அளவில் எழக் கூடிய கண்டனங்களை இலங்கை அரசு உணராமலும் இருக்காது. அத்துடன், அடிகளாரைக் கொல்வதால் புலிகளை இராணுவ ரீதியான பாதிப்புக்குள்ளாக்கவும் முடியாது. புலனாய்வுப் பிரிவின் சாள்ஸ் மீதான தாக்குதல் போன்று முக்கியஸ்தர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதால் புலிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியும். ஆனால், அடிகளாரைக் கொல்வதால் இராணுவம் என்ன பயன் பெற முடியும்?

    ஆனாலும் சிலவேளைகளில், புலிகளின் முக்கியஸ்தர்கள் யார் மீதாவது நடத்த முயற்சிக்கப்பட்ட தாக்குதலில் அடிகளார் அகப்பட்டிருக்கவும் கூடும். ஏனெனில், அடிகளாரின் வாகனத்தை இழுத்துச் சென்ற வாகனம் புலிகளுடையது என்று கூறப்படுகிறது. அதையும் விட அடிகளாருடன் வேறு புலி முக்கியஸ்தர்களும் பயணம் செய்து மரணித்திருக்கக் கூடும். புலிகள் அந்தச் செய்தியை மறைத்து, அடிகளாரின் மரணத்தை மட்டுமே வெளியே தெரிவித்திருக்கவும் கூடும்.

    யார் இந்தக் கொலையைச் செய்தார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காவிட்டாலும், இந்தக் கொலை குறித்துச் சில கேள்விகள் உள்ளன.

    1. இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி செய்ததாகக் கூறப்பட்டாலும் இந்த தாக்குதல் நடந்த பிரதேசம் புலிகளின் இதயப் பகுதிக்குள் நடந்தது. பாக்கியரஞ்சித் அடிகளார் கொல்லப்பட்டது எல்லைப் பகுதியில். எனவே, இராணுவத்தின் மீதான சந்தேகம் வலுப்பட்டது. ஆனால், கருணாரத்தினம் அடிகளாரின் கொலை எல்லைப்புறத்திலிருந்து மிகவும் உட்புறமாக நடத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால், புலிகளின் பாதுகாப்புக் கவசத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது என்பது தானே அர்த்தம். அவ்வளவு தூரம் ஊடுருவிய இராணுவத்தினர் எவ்வாறு தப்பிச் செல்ல முடிந்தது? அடிகளார் கொல்லப்பட்ட மறுதினம் இன்னொரு கிளோமோர் தாக்குதல் பார ஊர்தி மீது நடத்தப்பட்டு பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வெளியிட்டது அடிகளார் மீது தாக்குதல் நடத்திய குழு தொடர்ந்தும் தாக்குகிறது என நம்ப வைப்பதற்கான முயற்சியா?

    2. அடிகளார் சிவநேசனின் நினைவுதினக் கூட்டத்திற்கு சென்று திரும்பும் போது கொல்லப்பட்டார் என்று வானொலிகள் செய்தி வெளியிட, இளந்திரையன் சர்வதேச ஊடகங்களுக்கான தன் வழமையான மின்னஞ்சல் தகவலில் 'ஞாயிறு பூசையை முடித்துக் கொண்டு திரும்பும் போது' என்று கூறியது, அரசியல் தொடர்பை மறைத்து, மதக் கடமைகளில் ஈடுபட்ட அடிகளார் கொல்லப்பட்டார் என்ற பிரமையை ஏற்படுத்தி அனுதாபம் தேடும் முயற்சியா?

    3. புலிகள் மனித உரிமைப் பேச்சாளராக செல்வியை நியமித்தது முதல், அவர் சர்வதேச அமைப்புகளுக்கு கடிதமும் பத்திரிகை அறிக்கையுமாக எழுதித் தள்ளி, புலன் பெயர்ந்த பக்த கோடிகளை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார். மனித உரிமைகளுக்குப் பொறுப்பாக அடிகளார் இருக்கும் போது, புதிதாக பேச்சாளர் ஒருவர் நியமித்ததன் காரணம் என்ன? அடிகளாரை ஓரம் கட்டும் முயற்சிகளின் ஆரம்பமா?

    4. கத்தோலிக்க குரவர், அதுவும் மனித உரிமைகளுக்காகப் போராடியவர் கொல்லப்பட்டார் என்ற உண்மையை கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் மேற்குலக நாடுகளில் வெளிப்படுத்துவதன் மூலம் அனுதாபம் தேடியிருக்க முடியும். பேரணி, கவனயீர்ப்புப் போராட்டம் என்றெல்லாம் வெளிநாட்டுத் தலைநகரங்களில் எல்லாம் மந்தைகளை மேய்த்து நீர்ச்சுனைகளுக்கும் பசும்புற்றரைகளுக்கும் அழைத்து வரும் புலிகள் இம்முறை அடிகளாரின் மரணம் குறித்து சர்வதேச அளவில் போராட்டங்கள் நடத்தாதன் காரணம் என்ன? கனடாவில் 'விண்ணை முட்ட அதிர்ந்த தமிழீழம் வேண்டும் என்ற கோஷம்' என்று முயக்கம் முழங்கித் தள்ளிய 'பேரணி' ரொறன்ரோவின் ஒதுக்குப் புறமாய் உள்ள இலங்கைப் பிரதிநிதியின் அலுவலகம் முன்பாக கூடிய போது ஐம்பது பேர், அதுவும் கத்தோலிக்கர்கள் மட்டும் கூடியதன் காரணம் என்ன?

    5. மடு மாதா சிலை இடம் பெயர்ந்தது குறித்து என்ன தான் சொன்னாலும், புலிகளின் அழுத்தத்தின் பங்கு எவரும் ஊகிக்கக் கூடியது. மடு மாதா சிலை கொண்டு செல்லப்பட்ட போது புலிகள் பாதுகாப்பு வழங்கினர் என்ற செய்தி கூட வெளிவந்தது. தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகள் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமும் இல்லை. எறிகுண்டு தாக்குதல் நடந்திருந்தால், புலிகளின் பாதுகாப்பால் பயனும் இல்லை. இந்தச் சூழலில் மடுமாதா சிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று மன்னாரில் பெரும் ஆர்ப்பாட்டமும் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. அத்துடன் மடுவிற்குப் பொறுப்பான சூசை அடிகளார் புலிகளிடம் இது குறித்துப் பேச்சு நடந்தவும் சென்றார். மதத் தலைமை தாங்களே சிலையை இடம் பெயர்த்திருந்தால், அதை மீண்டும் கொண்டு வர புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இவையெல்லாம் சிலை வெளியேற்றத்தில் புலிகளின் பங்கையும் அதற்கு கத்தோலிக்க மக்கள் காட்டிய எதிர்ப்பையும் காட்டி நிற்கின்றன. எனவே, அடிகளாரின் கொலை, இந்த கத்தோலிக்க மக்களுக்கும் மத பீடத்தினருக்கும் எச்சரிக்கையாக நடத்தப்பட்ட ஒன்றா?

    6. பாராளுமன்றத்தினதும் பஜேரோவினதும் ஆசனங்களைச் சூடாக்குவது தவிர வேறொன்றும் இல்லாது, இவ்வாறான ஒரு பெயரில் பாராளுமன்ற உறுப்பினர் இருப்பதே தெரியாமல் அரசியல் நடத்திய சிவனேசன் கொல்லப்பட்ட போது, விழுந்தடித்துக் கொண்டு மாமனிதர் பட்டம் வழங்கிய தேசியத் தலைவர், தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையிலும் தன் பரிவாரங்கள் சகலருடனும் வந்து சிவநேசனுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். ஆனால், புலிகளின் மனித உரிமைகள் அமைப்புக்குப் பொறுப்பான அடிகளாருக்கு 'மாபுனிதர்' பட்டம் வழங்காததுடன், நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தாதன் காரணம் என்ன? ஒரு வணக்கத்துக்குரியவருக்கு அஞ்சலி செலுத்த முடியாதபடி மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லையா?

    7. இராணுவத்தின் எந்தத் தாக்குதல் குறித்தும் அச்சமில்லாமல் அறிக்கை வெளியிடும் மன்னார் ஆயரோ, அடிகளாரின் சேவைகளுக்குப் பொறுப்பான யாழ்.ஆயரோ அறிக்கைகள் எதுவுமே வெளியிடவில்லை. Papal Nuncio எனப்படும் பாப்பரசரின் பிரதிநிதியோ அல்லது வத்திக்கானோ இது குறித்து மெளனம் சாதித்து விட்டன. வெறுமனே யாழ்.ஆயர் இல்லம் மட்டும் 'இந்தக் கொலையை யார் செய்தாலும் கண்டிக்கப்பட வேண்டியதே' என்ற அறிக்கை வெளியிட்டதன் காரணம் என்ன?

    8. ஆயர் இல்லம் வெளியிட்ட அறிக்கை பற்றி புலிகளின் ஊடகங்கள் மெளனம் சாதித்ததன் காரணம் என்ன? குற்றம் சாட்டும் சுட்டு விரல்கள் தங்கள் மீதும் நீண்டதை மறைப்பதற்கான முயற்சியா?

    9. அடிகளார் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் தனக்கு எதுவும் நடக்கலாம் என்று தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. அவர் உள்ளுணர்வால் உந்தப்பட்டுக் கூறினாரா? அல்லது 'உள்ளுக்குள்' நடப்பதை அறிந்த உணர்வால் கூறினாரா? புலிகள் தற்போதைய யுத்தத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்புக் குறித்து அடிகளார் மனமுடைந்திருந்தார் என்று செய்தி ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

    10. தற்போதைய இராணுவ முற்றுகையில் இருந்து மீளமுடியாதபடி ஆப்பிழுத்த நிலையில் தவிக்கும் புலிகள் தப்புவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்போது நோர்வே தங்களைச் சந்திக்க அரசு அனுமதிக்க மறுக்கிறது என்று குமுறியுள்ளனர். தங்கள் உயிரையும் இருப்பையும் காப்பாற்ற புலிகள், முக்கியமாக தேசியத் தலைவர், யாரையும் பலி கொடுக்கவோ, பலி எடுக்கவோ தயங்குவதில்லை என்ற உண்மை அரசியல் கற்றுக்குட்டிகளுக்கும் கல்லாத குட்டிகளுக்கும் தெரியும். எனவே, அடிகளாரைத் தாங்களே கொன்று அதன் மூலம் அனுதாபத்தை தேடி முற்றுகையை நீக்கியும், மடு மாதா சிலை இடம் பெயர்வால் முரண்பட்டுள்ள மத பீடத்தை எச்சரித்தும் என பல மாங்காய்களை ஒரே கல்லில் அடிக்க புலிகள் முயன்றனரா?

    உண்மைகள் எங்கள் எவருக்குமே தெரியாமல் போகலாம். ஆனால் மிருகப் பெருமானுக்கும் மிருகப் பெருமான் திருவருளால் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் புரிய முடியாமல் இடம் பெயர்ந்திருக்கும் மருதமடு அன்னைக்கும் இந்த உண்மை தெரியும்.

    Postad



    You must be logged in to post a comment Login