Recent Comments

    கோமகன்: ஓர் “நடு”த்துவனின் இழப்பு.  

    க.கலாமோகன் 

    பிறப்பு ஓர் நிகழ்வு என்பதுபோல மரணமும் ஓர் நிகழ்வுதான். ஆனால் பிறப்பிலே பூக்கும் மலர்கள் மரணத்திலே வாடிவிடும். இன்று காலையில் கோமகனது மரணச் செய்தி என்னைச் சோகக் கிடங்கில் வீழ்த்திவிட்டது. ஆம், புகலிட இலக்கிய இருப்புகளின் தூண்களில் ஒருவராக இவரைச் சொல்லலாம். குறைந்த காலத்தில் இவர் நடத்திய இலக்கியப்பணி வீரமானது. தொழிலும் செய்து ஓர் இதழும் சிறப்பாக நடத்துவது இலகுவானதா? ஆம், எனக் காட்டிய கோமகன் தனது 57 வயதில் கொழும்பிலே மாரடைப்பினால் காலமான செய்தி தமிழ் இலக்கியவாதிகளையும், வாசக வாசகியரையும் ஆழமான வருத்தத்தில் தள்ளியுள்ளது என்பதை முகநூலில் வரும் அனைத்துச் செய்திகளும் காட்டுகின்றன.

    கோமகனை நான் சில வேலைகளில்தான் சந்தித்துள்ளேன். முதலாவது சந்திப்பிலேயே அவரது குழந்தைத்தனமான புன்னகை என்னைக் கவர்ந்தது. அதன் பின் மிகவும் நாகரீகமான சம்பாசிப்பு. தொடக்கத்தில் என்னைக் கண்டபோது “உங்களது பல கதைகளை வாசித்துள்ளேன். நீங்கள் பத்திரிகையில் தொழில் செய்தவர் என்பது எனக்குத் தெரியும். நிச்சயமாக எனது அண்ணனைத் தெரிந்திருக்கும்.” எனச் சொன்னார்.

    “யார் உங்களது அண்ணன்.” எனக் கேட்டேன்.

    “வடகோவை வரதராஜன்” எனச் சொன்னார். 

    “நான் அவரைச் சந்தித்தேனோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஓர் மிகச் சிறந்த எழுத்தாளர்” என்றேன்.

    “நிச்சயமாக நீங்கள் அவரைச் சந்தித்திருப்பீர்கள்”  என்ற கோமகனை அப்போது நான் ஓர் இலக்கிய வாசகனாகவும், ரசிகனாகவும் சந்தித்த வேளையில் இவருக்குள் ஓர் பெரிய இலக்கியத் தீ இருக்கும் என அறியவில்லை. ஆனால் “நடு” இணைய இதழை வாசித்தபோது வியந்தேன், மகிழ்ந்தேன். ஓர் தனியனாக எப்படி இத்தகைய ஓர் இதழை 2016 இல் இருந்து  தரமாக நடத்தலாம் என்பதற்குச் சாட்சியமாக இருந்தவர். புகலிடத்தின் புதிய எழுச்சியின் பல கிளைகளைக் காட்டிய “நடு” எனது வாசிப்பின் புதிய தீனியாகவும்  இருந்தது. 50 இதழ்கள். இவைகள்  இலக்கிய வாசிப்புக்கும், ஆய்வுகளுக்கும் நிச்சயம் பயன்படக்கூடியன. 

    கோமகனைப்  பின்பு எஸ்.பொ மீது நடத்தப்பட்ட பாரிஸ் அஞ்சலிக் கூட்டத்தில் சந்தித்தேன். அப்போதும் அதே புன்னகை. சாந்தமான மதிப்புநிறைந்த  மொழிகள். படைப்பாளிகளை எப்போதுமே ரசிக்கத் தெரிந்தவர்  மட்டுமல்ல தேடத் தெரிந்தவரும் கூட. இதனை “நடு” இதழின் அனைத்துப் பக்கங்களும் காட்டுகின்றன. இது பிரான்சிலிருந்து வெளிவருவதால்  நாம் புகலிட இதழ் எனச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அனைத்து நாடுகளில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகளின் வெளிப்பாடுகளை இது எப்போதுமே காட்டியுள்ளதால் அதனது பரிமாணம் புகலிட எல்லையையும் கடந்ததற்கு   கோமகனின் தீராத உழைப்புத்தான்  காரணம். இது ஓர் தனி உழைப்பே.   

    அனைத்துப் படைப்பாளிகளையும் தொடர்பு கொள்வது, படைப்புகளை வாசிப்பது, பக்கங்கள் அமைப்பது, பிரசுரம் செய்வதெல்லாம் இலகுவான விஷயம் அல்ல. “நடு” வின் சிறப்பான அம்சம் எதுவெனில் புதிய படைப்பாளிகளை ஊக்குவித்தது மட்டுமல்லாமல் , இலங்கையில் தோன்றிய புதிய ஓவியர்களைக் காட்டியதுமெனலாம். அனைத்து இதழ்களின் பக்கங்களும் புதிய பக்கங்களாக இருக்க வேண்டும் என்பதில் இவர் தவம் இருந்தார் எனவும் சொல்ல வேண்டும்.  ஓர் ஊக்கமும், ஈர்ப்பும் கோமகனுக்குக்கு இருந்ததால்தான் மாதா மாதம் “நடு” வெளிவந்தது. ஆம் ஓர் தினமும் பிந்தாமல் இந்த இதழை மாதத் தொடக்கத்தில்  எப்படிக்  கொண்டுவருகின்றார் என்பது எனக்கு எப்போதுமே வியப்பை ஊட்டியது. 

    இதழ்களை  ரசித்து அதற்கு எழுதாமல் இருந்த வேளையில் கோமகனிடமிருந்து எனக்கு வாட்ஸப்பில் ஒரு செய்தி வந்தது: 19/11/2020 à 14:10 - Komagan: அன்பின் கலாமோகன் அண்ணருக்கு,

    தை மாத இதழுக்கு ஒரு சிறுகதை  அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றேன். ஆண்டின் தொடக்கத்தை நம்பிக்கையுடனும் சிறப்பாகவும் வரவேற்போம். நன்றி.”

    எனது பதில்: 19/11/2020 à 19:50 - Kala: கோமகனுக்கு அன்புடன், 

    “நடு” இதழுக்கு ஓர் சிறுகதையைத் தருவேன். இதழ்கள்  சிறப்பாக உள்ளன. மாதா  மாதம் ஓர் இதழைச் செய்வதற்கு நிறையத் துணிச்சல் தேவை. பாராட்டுகள்.

    க.கலாமோகன்

    19/11/2020 à 19:56 - Komagan: மிக்க நன்றி அண்ணர் எனக்கு மார்கழி இறுதியில் தந்தால் பெரிய உதவியாக இருக்கும். பின்னர் நான் அதை ஓவியம் வரைவதற்கு அனுப்ப வேண்டும் . உங்கள் வார்த்தைகளும் நடு மீதான உங்கள் கண்காணிப்பும் மிக்க மகிழ்ச்சியை கொடுக்கின்றது.”

    “லொறி” எனும் ஓர் கதையை அனுப்பினேன். அதனை மிகவும் ரசித்துவிட்டு மகிழ்வுடன் பிரசுரித்தார்.

    கோமகன் பல படைப்பாளிகளைத்  தமிழ் வாசிப்பிற்குக்  கொண்டுவந்தாலும் இவர் எழுதும் சிறுகதைகள் கவனத்துக்கு உரியன.“கோமகனின் தனிக்கதை” , “முரண்”, “தனிக்கதை” எனும் சிறுகதைத் தொகுப்புகளை இவர் தந்துள்ளார்.   புகலிட வாழ்வின் இடறுபாடுகள் பலவற்றைக் காட்டியுள்ளன இவரது பல  சிறுகதைகள். சுருக்கர் எனும் புனைபெயரில் எழுதிய குறிப்புகள் பலரையும் கவர்ந்த குறும்பான குறிப்புகள்.   ஆனால், பேட்டிகள் எடுப்பதில் வல்லமையானவர்களில் இவரையும் ஒருவராகக் கொள்ளலாம். “குரலற்றவரின் குரல்” இவரது பேட்டிகளின் தொகுப்பு நூல்.  இவரது தமிழ் இலக்கிய வாசிப்பின் ஆழத்தைக் காட்டுவன அனைத்துப்  பேட்டிகளிலும் இவர் கேட்கின்ற கேள்விகள். அனைத்துக் கேள்விகளும் பலமானவையே. பல வருடங்களின் முன் என்னிடமும் ஓர் நேர்காணலைக் கேட்டிருந்தார். “நீங்கள் கேட்பதற்கு நன்றி. ஆனால் இப்போதும் இலக்கிய மாணவனாகத்தான் இருக்கின்றேன்.” எனச் சொன்னதும் ஓர் புன்சிரிப்புடன் “முடிந்தால் பின்பு ஓர் நேர்காணலைத் தாருங்கள்.” எனச் சொன்னார்.

    கோமகனின் இலக்கிய வேகம் மிகவும் பெரியது. இணைய இதழை அச்சு இதழாக்கத் தொடங்கினார். பல படைப்பாளிகளின் நூல்களை வெளியிடும் வேகம் அவருக்கு இருந்ததால் அலெக்ஸ் பரந்தாமனின் “ஒரு பிடி அரிசி”, கருணாகரனின் “இரவின் தூரம்”   கோ.நாதனின் “அரவம் புணர்ந்த அடவி”, தமிழ்க்கவியின்  “நரையன்” (வேறு நூல்கள் வந்தனவா என்பது எனக்குத் தெரியாது.) போன்ற நூல்கள்  மிகவும் அழகாகக் கொண்டுவரப்பட்டன. 

    எமது புகலிடத்தில் எழுத்து இயக்கம் பல பார்வைகளைக் கொண்டது. இந்த அனைத்துப் பார்வைகளும் புதிய சிந்தனைகளுக்கு உதவும் என்பதே எனது கருத்து. தனித்து நின்று, பல இலக்கியவாதிகளை அரவணைத்து ஓர் காத்திரமான எழுத்துப்பணியைச் செய்த கோமகனின் திடீர் மரணம் எனக்கும், இவரை அறிந்தோருக்கும் அதிர்ச்சியைத்தான் தந்தது. ஆனால், இவரது எழுத்துப்பணி எப்போதுமே உயிர்த்து இருக்கும். கோமகனுக்கு எமது அஞ்சலிகள்.   

    Postad



    You must be logged in to post a comment Login