Recent Comments

    எல்லாமானவரே, உமக்கு முன் பக்கத்தாலும் வணக்கம். பின் பக்கத்தாலும் வணக்கம்!

    என்னுடைய மூத்த அண்ணை வாங்கின Time, Newsweek படிச்சதைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

    நான் உயர்தரம் படிக்கேக்கை என் நண்பன் கேதீஸ் வாங்கி வரும் குமுதம், விகடனோடு, வாராந்தம் Time, Newsweek படிக்காவிட்டால் எனக்கு...

    போதைப் பொருள் பாவிக்கிற ஆட்கள் மாதிரி!

    கை, கால் நடுங்கும் எண்ட மாதிரி!

    இதற்காகவே, பாடசாலை முடிந்து, நேரே பஸ்ஸில் கிராமத்து வீட்டுக்கு போகாமல், யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்குப் போய் இதெல்லாம் வாசித்த பின் தான் வீடு நோக்கிப் பயணம் நடக்கும்.

    இதனால், அந்தக் காலத்து அமெரிக்க அரசியல் எனக்கு அத்துபடி.

    மத்திய அமெரிக்காவில் கம்யூனிசம் பரவாமல், சிஐஏ நடத்தின யுத்தங்கள், ஹொலிவூட் படங்கள், அப்பிள் கம்பியூட்டர்கள் என கைக்கெட்டாததும் சம்பந்தம் இல்லாததுமான பல விடயங்கள் பற்றி கனவும் அறிவும் இருந்தன.

    பிறகு வெளிநாடு வந்த போதும், ஐரோப்பாவில் இருந்த கொஞ்சக் காலம் தவிர, கனடா வந்த பின்னால், இந்த இரண்டுடன் Readers Digest க்கும் நான் சந்தாதாரன்.

    நியூஸ்வீக் Washington Post கம்பனியினது. நிக்சனைக் கவிழ்த்த Watergate ஊழலை வெளியில் கொண்டு வந்தது வாஷிங்டன் போஸ்ட் நிருபர்கள் தான். முற்போக்கான சஞ்சிகை.

    Time, Readers Digest இரண்டுமே அமெரிக்க உளவுத் துறையின் அஜண்டாவிற்கு ஏற்ப இயங்கின விசயம் இங்கே வந்த பின்னர் தான் பிடிபட்டது.

    எங்காவது பார்ட்டிகளில் ஒரு பியரை உடைத்து வந்து அன்பளிப்பாகத் தந்து அமெரிக்க உளவுத் துறை இந்தப் பத்திரிகைகளைப் பாவித்த விதங்கள் பற்றியும், சம்பந்தம் இல்லாத பல்வேறு விடயங்கள் பற்றியும் நிர்வாணம் பெறலாம்...

    சாவிம்பி, பாஸ்டோரோ போன்றவர்கள் போல, பிரபாகரனை ஏன் Time சஞ்சிகை பேட்டி கண்டது, சீனாவில் எப்படி ஒரு உளவாளி ரைம் சஞ்சிகை மூலமாகப் பிடிபட்டார், நான் வீட்டுக்கு வெளியில் குடிப்பதில்லை என்ற விடயங்கள் உட்பட!

    இந்தச் சஞ்சிகைகளை எங்களுக்கு இரசாயனம் படிப்பித்த சாம் அல்பிரட் மாஸ்டரும், சமயம் படிப்பித்த யேசுநேசன் குருவானவரும் வகுப்புக்கு கொண்டு வருவார்கள்.

    77ல் நடந்த இனக் கலவரம் எங்கள் சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் நடந்த கார்னிவலில் ஆரம்பித்தது என்று ரைம் சஞ்சிகை எழுதியது சாம் மாஸ்டருக்கு கோபம்.

    அதை எங்களுக்கு வாசித்துக் காட்டி, அதிலுள்ள பிழைகளை விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார். பாடம் இரசாயனம். அவருக்கு கோபம், கார்ணிவலை ஒழுங்கு செய்தது அவர் இருந்த றோட்டரி கிளப்.

    அவருக்கும் பௌதிகம் படிப்பித்த ஞானம் மாஸ்டருக்கும் பெரும் பனிப்போர். அதனால் அவர் போட்டிக்கு லயன்ஸ் கிளப்பில் இருந்தார்.

    ஞானம் மாஸ்டருக்கு என்னைக் கண்டால் ஆகாது. காரணம் சாம் மாஸ்டர் என் மீது கொஞ்சம் அன்பு. பழைய மாணவர் சங்கப் பார்ட்டியில் ஞானம் மாஸ்டரை நண்பர்கள் போய் பார்த்து கதைத்தபோதும், நான் கதைக்க வரமாட்டேன் என மறுத்த என் தரப்பு கோபத்தைப் பற்றி ஒரு நாளைக்கு எழுத வேண்டும்.

    இப்படி ஒரு நாள் அவர் சஞ்சிகையைக் கொண்டு வந்து எதையோ சொல்லத் தொடங்க, நான் கையை உயர்த்தி 'நான் உது நேற்றே வாசிச்சிட்டன் சேர்' எண்டு சொல்ல...

    எங்கயடா? லைபிரரில சேர்!

    அவருக்குத் தெரியும், எங்கள் பள்ளிக்கூடத்தில் அந்தச் சஞ்சிகைகள் எல்லாம் வருவதில்லை.

    இதே மாதிரி, பாதர் யேசுநேசனும் ஒரு தடவை, எதைப் பற்றியோ, ஊரில் என்னவென்றே தெரியாத... பனிச்சறுக்கல் விளையாட்டில் நடந்த ஏதோ ஒரு சர்ச்சை என்று நினைக்கிறேன், சொல்லத் தொடங்க...

    நான் நேற்றைக்கு வாசிச்சிட்டன், பாதர்!

    "எனக்கு இது இண்டைக்குத் தானே வந்தது?"

    இப்படியாகத்தான், இந்தச் சஞ்சிகைகளுடனான என் உறவு இருந்தது.

    வாசிப்பு என்பது ஒரு போதை மாதிரித்தான் அப்போது!

    ***

    வகுப்பிலும் அடிக்கடி சிறந்த மாணவன், ஏதாவது பாடங்களுக்காக பரிசளிப்பு விழாக்களில் பரிசுகளும் கிடைக்கும். இப்படியாக, கோவூரின் கோர இரவுகள், டாக்டர் இந்திரகுமார் எழுதிய மண்ணிலிருந்து விண்ணுக்கு (இரசாயனத்திற்கு!) என்ற புத்தகங்கள் கிடைத்தது. தமிழுக்கு தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இரண்டாம் பரிசாக சான்றுப் பத்திரம் கிடைத்து, ஒரு முறை முதல் பரிசாக ராஜாஜியின் வியாசர் விருந்து கிடைத்தது.

    இந்தப் புத்தகங்கள் எல்லாம் என் குடிசை வீட்டு, சன்லைட் பெட்டி புத்தகப் பெட்டிக்குள் இருந்து, மண் திண்ணையிலும் சாக்குக் கட்டிலிலும், சேட் போடாமல் வெறும் முதுகோடு படுத்திருந்து பல தடவைகள் மறுவாசிப்புச் செய்யப்பட்டவை.

    வியாசர் விருந்து என்பது, மகாபாரதத்தின் சுருக்கம்.

    ***

    அப்பா தமிழ் வாத்தியாராக இருந்ததால், மூன்றாம் வகுப்பிலேயே மகாத்மா காந்தியின் சத்தியசோதனை வாசித்து முடித்து விட்டேன். அதுவும் பல தடவைகள் மறுவாசிப்பில்...!

    ***

    பிறகு தாயகம் வெளியிட்ட போது, வருடாந்த சிறப்பிதழுக்கு, துக்ளக்கின் ஒண்ணரைப் பக்க நாளேட்டுப் பாணியில் கற்பனா, சொப்பனா என்று இரண்டு இதழ்கள் வெளியிட்டோம்.

    பகவத் கீதையைப் படித்த... மொன்றியல் மூர்த்தி என்று அப்போதும், மொஸ்கோ மூர்த்தி என்று சிலருக்கும், இப்போது நாராயண மூர்த்தி என்று பேஸ்புக்கிலும், சாரே! என்று எனக்கு பரஸ்பரமாக எப்போதுமாக அறியப்பட்ட மூர்த்தி, 'சாரே!, உதில மணியான விசயம் இருக்கு, தலைவருக்கு ஒரு கட்டுரை போடலாம்' என்று ஆண்டுமலர் செய்ய வந்த போது, பகவத் கீதையையும் வாசித்தேன்.

    சினிமாவில் கெமிஸ்ட்ரி என்றெல்லாம் சொல்வது என்னவென்று உங்களுக்குப் புரியுதோ இல்லையோ, இரசாயன மாணவர்களான எங்களுடைய கெமிஸ்ட்ரி சொல்லிச் சிரிக்கக் கூடியது.

    ஒருவர் தொடங்கும் வசனத்தை மற்றவர் முடிக்கிற மாதிரி!

    எங்களுடைய நகைச்சுவை உணர்வை கியூறியஸ், முனி வாசித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். நினைச்சு நினைச்சு சிரிக்க வைத்ததை!

    மூர்த்தியின் பாசையில் 'ஜாலியாக' இரண்டு பேரும் கட்டுரை எழுதினோம்.

    பிரபாகரனுக்கும் ஒரு பாலகப் போராளிக்குமான உரையாடல்...

    கீதை காட்டும் பாதை! என்ற பெயரில்.

    முழுக்க முழுக்க கீதையிலுள்ள வசனங்களை ஆங்காங்கே பொறுக்கி, எடிட் பண்ணி... ஒரேயொரு இடத்தில் மட்டும் ஒரு சொல்லை மாற்றிய ஞாபகம்.

    கீதையை எழுதிய அந்த சாட்சாத் நாராயண மூர்த்தி எங்கள் இருவரையும் மன்னிக்காமலா இருப்பார்?

    'எல்லாமானவரே, உமக்கு முன் பக்கத்தாலும் வணக்கம். பின் பக்கத்தாலும் வணக்கம்' 'பாலகன் புல்லரிக்கிறான்'.

    யுத்தத்தின் நியாயத்தைச் சொன்ன கீதையிலிருந்து வசனங்களை, எங்கள் விடுதலைப் போராட்ட யுத்தத்தைக் கிண்டல் பண்ணிய எங்கள் திருவிளையாடல் அது. எங்களுடைய மாஸ்டர்பீஸ்களில் ஒன்று!

    பிரபாகரன் இருந்த காலத்திலேயே, காட்டுன் போட்டவர்கள் நாங்கள். 'உவங்களுக்கு தலைவர் மண்டையிலே போடுறாரில்லையே' என்று திட்டிக் கொண்டே, உலகத் தமிழர் புலி வால்கள் எல்லாம் தாயகத்தை வாங்கிக் கொண்டு போய், மற்றவர்கள் காணாதபடிக்கு, மலகூடத்தில் வைத்து வாசித்த காலம் அது.

    இப்படி, கீதையை எடிட் பண்ணும் அளவுக்கு படித்தவர்கள் நாங்கள்.

    ***

    சரி, என்ன இப்ப கொஞ்ச நாளா சுயபுராணத்தில தொடங்கியிட்டாய் என்று இலக்கியர்கள் கேட்கக் கூடும்.

    நாங்கள் எங்களைப் பற்றிச் சொல்லாவிட்டால், இந்த இலக்கியர்கள் எங்களைப் பற்றி ஒருபோதும் சொல்லப் போவதில்லை என்றது ஒரு பக்கம் இருக்க...

    துவக்கு வைச்சிருந்த ஒரே ஒருத்தனைத் தவிர, யாழ்ப்பாணி யாரை நல்லாச் சொல்லியிருக்கிறான் எண்டதை ஒருக்கா சொல்லுங்கோ பாப்பம்?

    தன்னைத் தவிர, மற்ற எல்லாரையுமே கேவலமாகப் பேசுவது தானே யாழ்ப்பாணியின் தொழில்.

    யூறோப்பில றெஸ்ரோறன்ரில வேலை செய்திட்டு வந்தவர், அடுத்த நாள் காலை எழுந்து வேலைக்கு வேண்டி இருந்தாலும், சுமந்திரனை துரோகி என்று பேஸ்புக்கில எழுதி, தன்னுடைய தேசியக் கடமையை நிறைவேற்றாமல் நித்திரைக்கு போகாத மாதிரி...

    வாசிப்பு என்பது யாழ்ப்பாணிக்கு பிரச்சனை இல்லை. என்ன சொல்ல வேண்டும் என்பதை வானொலி ஊளையிடலாளர்கள் வாய்க்குள் தீத்தி விடுவார்கள்.

    அவர்களுக்கு வாசித்து விடயங்களை அறிய வேண்டிய தேவை இல்லை. எதையாவது அறிய வேண்டும் என்றால், லங்காசிறியைப் படித்தால் போதும் என்று முன்பு எழுதியிருக்கிறேன்.

    ஏன் என்றால் யாழ்ப்பாணிக்கு எல்லாம் தெரியும்.

    உலகத்திற்கு நீதியைச் சொல்லத் தேவையான அளவுக்கு அறிவை வைச்சுக் கொண்டு, ஒரு பத்திரிகையை நடத்தியோ, பேஸ்புக் பதிவைப் போட்டோ தன்னுடைய அறிவைச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறதே ஒழிய, வாசித்து அறிவைத் தேட வேண்டிய அவசியம் யாழ்ப்பாணிக்கு இல்லை.

    ஏற்கனவே கிடக்கிற அறிவை சனத்துக்கு சொல்லி முடிக்கவே யாழ்ப்பாணிக்கு ஒரு பிறவியே போதாது. இதுக்குள்ள வாசிக்க நேரம் இருக்குமா?

    ஆதலால், இந்த பெரிய சுய புராணத்திற்கான காரணம் என்னவெனில்...

    டி.பி.எஸ்.ஜெயராஜ் பிரபாகரனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

    அதில்...

    பிரபாகரனின் அதீதமான வாசிப்புப் பற்றி எழுதியிருக்கிறார்...

    வாசிக்க எனக்கே புல்லரித்தது. என்னைப் போலவே வாசிப்பில் ஆர்வம் உள்ளவரை, "எல்லாமானவரே, உமக்கு முன்பக்கத்தாலும் வணக்கம், பின்பக்கத்தாலும் வணக்கம்" என்று புல்லரிக்க வேண்டும் போலிருந்தது.

    ஆனால், அதன் உண்மைத் தன்மை எங்கோ இடித்த மாதிரி இருந்தது.

    முள்ளிவாய்க்கால் முடிவு நேரத்தில் பிரபாகரன் எல்லா ஆவணங்களையும் அழித்துக் கொண்டு, தற்கொலை செய்ததை டி.பி.எஸ் ஞானதிருஷ்டியால் அறிந்து எழுதியதையும் வாசித்து இருக்கிறேன்.

    "பிரபாகரனின் தந்தை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டதால் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு என வெவ்வேறு பாடசாலைகளில் அவர் கல்வி பயின்றார். அவர் ஒரு முன்னுதாரணமான மாணவர் அல்ல. மேலும் அவர் க.பொ.த சாதாரணதரத்தில் கூட தேர்ச்சி பெறவில்லை. இது அவர் புத்திசாலித்தனம் இல்லாதவர் என்றோ அல்லது அறிவுத்தேடலை கொண்டிருக்கவில்லையென்றோ அர்த்தப்படுத்த வில்லை. முறையான கல்வியைக் காட்டிலும் பிற விட யங்களில் பிரபாகரன் அதிக அக்கறை காட்டியதே இதற்கு காரணம். தெளிவான ஞாபக சக்தியும் ஆர்வமும் கொண்ட வாசகர். வரலாற்றுப் போர்கள் மற்றும் வரலாற்றில் பிரபலமானவர்கள் பற்றியும் – வரலாற்றைப் படிப்பதிலும் அவர் மிகவும் விருப்பம் கொண்டவர் . இந்திய சுதந்திரப் போராட்டம் அவரைக் கவர்ந்தது. அவர் தனது இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் சுயசரிதை நூலான ‘சத்தியசோதனை ’ தமிழ் பதிப்பைப் படித்திருந்தார் . ஆனால் அதிலும் அகிம்சைகொள்கையிலும் அவர் அதிகளவு ஈர்க்கப்படவில்லை."

    "பலருக்கு நம்புவது கடினம், ஆனால் பிரபாகரனிடமும் ஒரு அமைதியான, ஆன்மீக அம்சம் இருந்தது. “இதிஹாசமான ” ‘மகாபாரதம்’ அவரை கவர்ந்தது. அவர் அடையாளம் காட்டிய கதாபாத்திரங்கள் பீமன் மற்றும் கர்ணன் ஆகியோராவர் . ‘குருஷேத்ரா’ போர்க்களத்தில் அலைந்து திரிந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் அறிவுரை வழங்கிய கதையை விவரிக்கும் ‘மகாபாரதம்’ இது. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் (ஒன்றுவிட்ட சகோதரர்கள் ) போர் செய்ய கூடியிருந்தனர். ஆனால், அர்ஜுனன் தனது உறவினர்களுக்கு எதிராகப் போராடத் தயங்கி. தனது வில்லான ‘காண்டீபத்தை ’ நழுவ விடுகிறார். ஒவ்வொரு நபரும் தனது கடமையை நிறைவேற்ற விதிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணர் அவருக்கு அறிவுரை கூறுகிறார். உறவை பொருட்படுத்தாமல் தனது எதிரியைக் கொல்வது போர்வீரனின் கடமையாகும். எதிரியின் “உடலை” கொல்வது வீரத்தின் ஒரு பகுதி என்பது பகவான் கிருஷ்ணரின் கீதோபதேசத்தின் சாராம்சம். பிரபாகரனை ‘கீதையில்’ கூறப்பட்ட கொள்கைகள் பெரிதும் கவர்ந்திருந்தது. "

    பிரபாகரன் தமிழ் நாவல்களைப் படிக்க குறிப்பாக வரலாற்று பின்னணி கொண்டவற்றை படிக்க விரும்பினார் . அவருக்குப் பிடித்த வரலாற்று நாவல் ‘பொன்னியின் செல்வன்’, ‘கல்கி’ (ஆர். கிருஷ்ணமூர்த்தி) இன் மகத்தான படைப்பு. அகிலன் மற்றும் சாண்டில்யன் ஆகியோரின் வரலாற்று நாவல்களும் அவருக்குப் பிடித்திருந்தன . விடுதலைப்புலிகள் தமது முதல் கப்பலை வாங்கியபோது, சாண்டில்யன் எழுதிய நாவலுக்குப் பிறகு அதற்கு கடல்புறா என்று பெயரிடப்பட்டது. ஆனால் ர . சு. நல்லபெருமாள் எழுதிய ‘கல்லுக்குள் ஈரம் ‘ நாவல் பிரபாகரனால் திரும்ப திரும்ப பலமுறை வாசிக்கப்பட்டிருந்தது. இது ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியை கொண்டதாகும். பிரதான கதாநாயகன் ரங்கமணி காந்தியின் “அஹிம்சை ” போராட்ட முறையை நம்பாதவர். மற்றும் இந்தியாவை விடுவிப்பதற்கான பொருத்தமான முறையாக வன்முறையை ஆதரிக்கிறார். பிரபாகரன் இந்த நாவலை நேசித்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், இறுதியில் மன மாற்றம் உள்ளது, ஆனால், நிஜ வாழ்க்கை கதாநாயகனுக்கு கல்லில் ஈரப்பதன் இல்லை. சமகால விவகாரங்கள் மற்றும் சர்வதேச அரசியலில் பிரபாகரன் மிகவும் ஆர்வமாக இருந்தார். பிரபாகரனின் படைக்கல முன்னாள் தோழர் தளையசிங்கம் சிவகுமார் அல்லது அன்டன் மாஸ்டர் அந்த நாட்களில் விடுதலைப்புலிகள் எவ்வாறு ‘டைம்’ மற்றும் ‘நியூஸ் வீக்’ சஞ்சிகைகளுக்கு சந்தா செலுத்தினர் என்பது பற்றி என்னிடம் கூறினார். கட்டுரைகளை மொழிபெயர்க்கவும் விளக்கவும் பிரபா ஆங்கிலத்தில் அறிவுள்ள நண்பர்களைக் கேட்பார். விடுதலைப்புலிகள் முழுமையான அமைப்பாக வளர்ச்சியடைந்திருந்த பிற்காலங்களில் பிரபாகரனுக்காக பத்திரிகைகள் மற்றும் முக்கியமான கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இராணுவ விவகாரங்கள் மற்றும் போர் பற்றிய பல புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன."

    கட்டுரையில் சம்பந்தப்பட்ட பகுதிகள் இவை!

    இவ்வளவு நேரமாக நான் சொன்ன கதையின் நீதி...

    ஒரே நல்வழி நீதிப் புத்தகங்களை இரண்டு மாங்காய் மடையர்கள் படித்திருக்கலாம்.

    அவற்றைப் படிப்பதால் அந்த இரண்டு முட்டாள்களும் ஈடேற்றம் அடைவார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

    ஒருவனுடைய அறிவைத் தீர்மானிப்பது அவன் வாசிக்கும் புத்தகங்கள் இல்லை.

    அந்தப் புத்தகங்களில் இருப்பவை குறித்து அவன் எதைச் சிந்திக்கிறான் என்பதே அவன் செல்லும் பாதையைத் தீர்மானிக்கிறது.

    அவனவனுடைய குண இயல்புகளே (Character) அவனவன் எப்படி வளர்கிறான் என்பதைத் தீர்மானிக்கிறது.

    அதில் ஒருவன் புகழ் பெற்ற கொலைகாரனாகவும், இன்னொருவன் புகழே பெறாத கிறுக்கனாகவும் ஆகவும் கூடும்.

    Postad



    You must be logged in to post a comment Login