Recent Comments

    கண்டிறியாத கெப்பர்… ஓ, பெப்பர்!

    சீனர்களின் கடைகளில் Customer Service என்பது 'கஷ்டம் இவர் சேவை' தான்.

    எதையாவது பொருளைத் தேடிக் காணாவிட்டால், அங்கே வேலை செய்யும் வேலையாட்களிடம் கேட்டால்...

    No என்பது தான் பதிலாக வரும்!

    கடுமையான ஓய்வில்லாத உழைப்பினால் வரும் நோவு ஆக இருக்குமோ என்ற சந்தேகம் வருவதற்கு முன்னால்...

    அப்பாலே போய் சேர்ந்து விடுவார்கள்.

    இவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததை No என்கிறார்களா? இல்லை, அந்தப் பொருள் இல்லை என்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ள...

    தமிழ் அரசியல் புலநாய்வாலர்கள் தேசிக்காய் தலையரின் மூளைக்குள் குடி இருந்து 'அவர் அப்படி சிந்திக்கிறார், இப்படி வியூகம் எடுக்கிறார்' என்று பார்த்த மாதிரி பார்த்தால் தான் உண்டு.

    அவர்களைக் குறை சொல்ல முடியாது. சீனாவிலிருந்து ஆட் கடத்தால் மூலமாகவோ, என்னவோ வந்து சேர்ந்து, ஆட் கடத்தல்காரர்களுக்கு கடனைக் கட்டுவதற்காகவே இவ்வாறான இடங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவதும், அமர்வதும் உண்டு. அயராமல் வேலை செய்து கொண்டே இருப்பார்கள்.

    இப்போது மீனுடன் சேர்த்து நோண்ட செல்போன்களும் உண்டு.

    இறைச்சி வாங்கும் போது, இறைச்சியைக் காட்டி எத்தனை இறாத்தல் என்பது மட்டுமே எனக்கும் இறைச்சி வெட்டுவோருக்குமான உரையாடல். அப்போதும் மறக்காமல் விரல்களைக் காட்டுவேன்.

    மக்டொனால்ட்ஸ், ரிம்ஹோட்டன்ஸ் கோப்பிக் கடைகளில் ஆங்கிலம் பேசும் பணிப் பெண்களிடமே கேட்ட ஓடரை சரியாகப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.

    இவர்களைக் குறை சொல்லி என்ன பயன்?

    நம் தமிழர்கள் போலவே, சகல ஊடாட்டங்களும் சீனர்களுடன் இருப்பதால் ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை.

    இதில் நம் தமிழ் மகன் நிர்வாக பணிப் பெண்கள் கொஞ்சம் பரவாயில்லை.

    Next Customer, Please என்பது மட்டுமே அவர்களுக்கு தெரிந்த ஆங்கிலமாக இருந்தாலும், கண்ணாடி முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அரிசி மூடைகளையும் கடந்து அந்த பங்கருக்குள் நுழையும் அன்னியர்கள் எதைக் கேட்டாலும், தலையைச் சுற்றி தள்ளி விடுவார்கள்.

    ஆனால் சிரிக்க மாட்டார்கள்!

    உவை ஒழுங்காத் தராத சம்பளத்துக்கு சிரிக்கவும் வேணுமோ? என்ற கோபமாகவும் இருக்கலாம்.

    ஆனால் இவர்களைப் போல சமூக உதவிப் பணமும் எடுத்துக் கொண்டு கைக் காசுக்கு வேலை செய்யும் வித்தையை சீனர்கள் இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை போலத் தான் தெரிகிறது.

    தெரிந்திருந்தால், சமூக உதவிப் பணம் கொடுப்போர், ஆங்கில வகுப்புகளுக்கு கலைத்திருப்பார்கள்.

    நான் விளைமீன் கேட்டாலும், Next Customer, Please என்று சொல்லவாவது தெரிந்திருப்பார்கள்.

    இது எல்லாம் நான் சொல்ல வந்த விசயத்திற்கு சம்பந்தமில்லாத விசயங்கள்.

    ***

    எனக்கும் இடைக்கிடை நரி வெருட்டும்.

    நகர் மத்திப் பகுதியில் வேலை செய்த காலை, அருகில் உள்ள சைனா டவுனில் வாங்கிய நெருப்பில் சுட்ட கோழி இறைச்சிச் சோறுடன் தரும் மிளகாய் சம்பல் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன். அதோடு, சிறிய பச்சை வெங்காயத் தண்டை எண்ணெயில் வதக்கிய சம்பலும் சேர்ந்த சோறு நீண்ட காலமாக என் வேலையிட நண்பர்களின் சாப்பாடு. கடைக்கு போகும் ஒருவர் குறைந்த ஐந்தாறு பேருக்காவது உணவைச் சுமக்க வேண்டியிருக்கும்.

    அந்த எண்ணெயில் வதங்கிய குத்திய மிளகாய் ருசி பிடிபட்டு, என்னோடு வேலை செய்த சீனரான வில்லியத்திடம், அதற்கான நெறிமுறைகளையும் கற்று நானே செய்யத் தொடங்கிய பின்னால், வீட்டில் அது பெரும் ஹிட்!

    வில்லியம் சுவாரஷ்யமான பேர்வழி. அவர் பற்றி தனியே எழுத வேண்டும்.

    இந்த மிளகாய் எண்ணெய் பற்றி தற்செயலாக வந்த ஒரு விடயத்தை வாசித்ததைக் கண்டுபிடித்த கூகிள் பகவான் எனக்கு அதில் ஆர்வம் இருக்கிறது என்ற நினைப்பில அடிக்கடி அது சம்பந்தமான கட்டுரைகளையும் வீடியோக்களையும் அடிக்கடி அருளியதில் கண்டுபிடித்த விடயம்...

    இந்த மிளகாய் எண்ணெய்க்கு செச்சுவான் மிளகு போட்டால் நன்றாக இருக்கும் என்பது தான்.

    அதைச் சீனக் கடைகளில் தேடப் போனதில் வந்த பிரச்சனை தான் இவ்வளவு புராணமும்.

    சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் மாகாணத்தில் சமையல் முறைகளில் பயன்படும் உறைப்புப் பொருள் இது. szechuan peppercorn. சிறிய செடி ஒன்றின் பழங்களின் விதைகளின் கோது உறைப்பதானதாகவும் நாக்கில் ஒரு வித விறைப்புத்தன்மையை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். இதனால் இது சிச்சுவான் மாகாண சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

    ஆனால் உறைப்பு என்பதைத் தவிர, இதற்கும் மிளகாய், மிளகு என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    பிரச்சனையின் ஆரம்பமே இங்கு தான் ஆரம்பிக்கிறது.

    ஆங்கிலத்தின் மொழி வறுமை தான் இந்த தலையிடிக்கே காரணம்.

    ஆங்கிலத்தில் மிளகாய்க்கும் Pepper தான். மிளகுக்கும்Pepper தான். கறுப்பு மிளகு என்பதை விட வெள்ளை மிளகு என்று வேறு ஏதோ இருக்கிறது.

    போதாக்குறைக்கு இந்த விதைக் கோதும்Pepper எனப்படுவதால்... சும்மா சமையலில் Pepper போட வேண்டும் என்றால், எதைப் போடுவது என்பதே தலையிடியாகி விடும்.

    இந்த லட்சணத்தில் சீனர்களிடம் போய்szechuan pepper என்று கேட்டால்...

    என்னை 'நோ'காமல் என்ன செய்ய முடியும்?

    போய் பலசரக்குகள் உள்ள பகுதியில் தேடினால்... எல்லாமே pepper என்ற பெயரில் தான் உண்டு. போதாக்குறைக்கு மிளகை குத்தி அதற்கும் pepper என்றே பெயர் போட்டிருந்தார்கள்.

    தேடிக் களைத்து, என்னுடைய ஆங்கில அறிவும் Next Customer, Please என்பதுடன் நின்றிருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றியது.

    கடை எல்லாம் ஏறி இறங்கியதாக சொல்வோமே...

    அது போல...

    சீனக் கடைகளில் ஏறி இறங்கி ஒருவாறாகக் கண்டுபிடித்து, வாங்கி வந்து, என் அபிமான மிளகாய் எண்ணெயில் போட்டு, அதுவும் வெள்ளிவிழா கண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

    பிரச்சனை இத்தோடு முடிந்த பாடாயும் இல்லை.

    ஐரோப்பாவில் இருக்கும் எனது அக்கா ராசாவுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல போன் அடித்தா.

    ராசாவின் சுகநலன்களை விசாரித்து, குடும்பத்தினருடனும் கதைத்து முடிந்து, சிங்கனின் சமையல் குறிப்புகளை வாசிப்பதாகவும் கூறி பெருமைப்படுத்தினா.

    எங்கள் வீட்டிலேயே நன்றாகச் சமைக்கத் தெரிந்தவர் அவர்.

    எனது மகன் அவரிடம் போன போது, 'வட்டமாக சுத்தி சுத்தி இருக்கும், நடுவில் துளை இருக்கும், அது செய்து தாங்கோ' என்று கேட்ட போது, அக்காவும் மருமகன் ஆசையோடு கேட்கிறானே என்று வடை சுட்டுக் கொடுக்க...

    இல்லை, அத்தை, பொறு, அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று எனக்கு போன் அடித்துக் கேட்டு...

    ஓ, அது முறுக்கு என்று சொல்ல...

    அதையும் செய்து கொடுத்தவ என் அக்கா.

    நான் பெருமை கொள்வது, எனது சகோதரிகள் சமையலில் சிறந்தவர்கள் என்பதை விட, விருந்தோம்பலில் சிறந்தவர்கள் என்பது தான். எத்தனையோ பொருளாதார இடர்களுக்குள் இருந்த போதும், அவர்களுடைய சிரித்த முகத்துடனான விருந்தோம்பல் பிரபலம்.

    அப்படிக்கொத்த அக்கா, என்னிடம் இந்த மிளகாய் எண்ணெய் செய்யும் வழிமுறையைக் கேட்டா.

    ராசாவும் தன்னுடைய தொழில் இரகசியங்களை பரம்பரை பரம்பரையாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக சொல்லிக் கொடுக்க...

    வீட்டுக்காரிக்கு ஒரே சிரிப்பு!

    மகனோடு அக்கா வீட்டுக்கு உல்லாசப் பயணம் போய் வந்தவ அவ. மச்சாளின் சமையல் பற்றி ஏகமாக புகழ்வா.

    அப்படியான அக்கா என்னிடம் recipe கேட்பது பற்றி சிரிப்பு தாங்க முடியாமல்...

    என்னுடைய சின்னம்மாவின் தங்கச்சிக்கு போன் பண்ணி...

    இந்த அநியாயத்தை ஆரிட்ட சொல்றது? இவர் பெரிய சமையல் காரன் மாதிரி மச்சாள் இவரிட்ட recipe கேக்கிறா என்று இரண்டு பேருமாக ஒரே சிரிப்பு!

    இப்படியாகத் தான்...

    எந்த தீர்க்கதரிசியும் தன் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

    எந்த நல்ல வீட்டுக்காரனும் தன் சொந்த வீட்டில் மதிக்கப்படுவதில்லை!

    Postad



    You must be logged in to post a comment Login