Recent Comments

    எலி

    Ratகலாமோகன்

    பல வருடங்களாக நான் “எலி” எனும் சிறுகதையை எழுதவேண்டும் என் நினைத்து வருகின்றேன். ஒவ்வொரு தொடக்கமும் முடிவதில்லை. சில பக்கங்களை காத்து வைத்தாலும் அவைகளைத் தேடி எடுப்பது இமய மலையின் சிகரத்தைத் தொடுவது போலதான். ஒவ்வொரு தொடக்கமும் நிச்சயமாகப் புதிய தொடக்கமே. இந்தத் தொடக்கங்களை வைத்து நிறைய எலிக்கதைகள் எழுதலாம் என என் துணைவி சொன்னது சீரியசாக இருக்குமா என எனக்குத் தெரியாது. சில ஆண்டுகளின் முன்னர் எனது நண்பரும், அரசியல் பழங்களை நிறையச் சாப்பிடுவருமான தம்பியிடம் “நான் எலி எனும் தலைப்பில் ஓர் சிறுகதை” எழுதுவதாகச் சொன்னேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. “இந்தக் கதை புலிகளுக்கு எதிரான கதைதிட்டம்” என்று கத்தியபடி நட்பை முறித்துக் கொண்டார். நிச்சயமாக “எலி” புலிகளுக்கு எதிரானதல்ல. ஆனால் இது எழுதப்படாது இருப்பது எனது மனதை வாட்டுகின்றது. தொடக்கத்தில் எனது “எலி” என் துணைவியாக இருந்தது. அவள் நடத்தும் துளைவுகளாலேயே அவளை நான் எலியாகக் கருதினேன். சில வேளைகளில் நான் அவளை எலி என அழைத்தால் செவ்வந்தி போல சிரிப்பாள். இந்த எலிக் கதை மூன்று பக்கத்துக்கு வந்தபோது எனது மனைவியிடம் காட்டலாம் என ஆசை வந்தது. சில இலக்கிய நண்பர்கள் இருந்ததும், அவர்களிடம் காட்டினால் எனது பேனாவை உடைத்து விடுவார்களோ எனப் பயம். எனது துணைவி மீது எனக்கு நிறைய நம்பிக்கை இல்லாதபோதும், அவளே பாத்திரமானதால் அவளிடம் கேட்டல் இலக்கியப் பொருத்தமாக இருக்கும் எனக் கருதினேன். எனது சில பக்கங்கள் சுத்தமாக இருந்தன. வரிகளில் திருத்தமும் போடப்படவில்லை. எனது கை எழுத்து மோசமானதாக இருந்தாலும், எனது எலியின் வாசிப்புக்காக மிகவும் அழகிலும் அழகானதாக எழுதினேன். எனது கதையில் சில சின்ன எலிகளை எனது எலி காப்பதாகவும் இருந்தது. ஆம்! “நான்! உனக்கு முத்தமிடுகின்றேன்!” என எலிக்குச் சொல்லித்தான் முதல் வரியை எழுதினேன். அவளிடம் எனது பக்கங்கள் கொடுக்கப்பட்டன. சில கணங்களில் அவைகள் தூளாகின. அவளது முகம் திரும்பியது. அவள் என்னை விவாகரத்து எடுத்ததற்கு எலிதான் காரணமாக இருக்கும் என நினைக்கின்றேன். எலியினால் இந்தப் பிரிவு நடந்தது கொடுமைதான். ஆனால் இலக்கிய வெறிக்குள் இருப்பதால் தெரிவிலும் தெரிவின்மையிலும் தான் வாழ்வு. அவளது பிரிவினைக் கடக்க நான் தத்துவ வாசிப்புகளைத் தொடக்கினேன். அது எனக்கு உதவி செய்தது, பிற எலிகளைத் தேடவும் முடிந்தது. நான் வாசித்தது Kafkaவையே. இவரைப் பலர் இலக்கியவாதி என்பர், ஆனால் அவர் எனக்குத் தத்துவ எலியே . சிலர் சொல்லலாம் இவர் கதை எழுதத் தொடங்கி கதை விட்டுக்கொண்டிருக்கின்றார் என்றும். பலர் கட்டாயமாக எலிக்கதையை அறியத் துடித்தாலும், எனக்குள் அதனை எழுதவேண்டும் என்கின்ற பேர் வெறி இருந்தாலும், இந்த சப்ஜெக்ட் பல வருடங்களாக இழுபடுகின்றது. சில ஆண்டுகளின் முன்னர் எலி மீது எழுதுவதைவிட்டு புலி மீது எழுதலாம் என்றுகூட நினைப்பு வந்தது. ஆம்! பயம் வந்ததில் நான் எலியாகிப் போனேன். எலியாக இருந்தால் இன்பம்தான். இந்த சின்னன்கள் தமக்குள் பயத்தைக் காட்டிவிட்டு பறிப்பதில் முன்னணியாக நிற்கின்றன. அன்ரன் செக்கோவ் “எலி” எழுதியிருக்காதது குறைவான விசயமே. இதனால்தான், சின்னப் பேராசையுடன் நான் எலியைத் தொட்டேன். சுரங்க ரயில் பயணம் மீது எனக்கு நிறைய ஆசை உண்டு. அந்த ரயில் அழகாகத் தொட்டில் போல ஆடத் தூங்கிக் கொண்டிருக்கலாம். நான் இந்த ஆட்டத்தில் தூங்குவதில்லை. அழகிய பெண்களை நிறங்களைக் கடந்து பார்ப்பதுண்டு. நிச்சயமாக என்னைப் பெண்ணினதும், பெண்ணித்துவத்தினதும் எதிரி எனக் கருத வேண்டாம். பெண்ணின் விருப்பு பெண்ணின் எதிர்ப்பு அல்லாது இருக்கலாம் என்பது எனது புதுத் தத்துவம். அட! இவர் கதை சொல்வாரா? கதை சொல்வதற்கு நடிக்கின்றாரா எனச் சில எழுத்தாளர்கள் கேட்கலாம். இந்தக் கதையை வாசித்து அவர்கள் எலி கதையைச் சுலபமாக என்னால் எழுதிவிடமுடியுமா எனக் கேட்டல் சகஜம்தான். நான் முன்பு சில ஆண்களையும் பெண்களையும் பற்றிக் கதை எழுதினேன், அவை ஈஸியாக வந்தன. எலி, ஹ்ம்ம், சுலபமான விசயம்போல இல்லை. இந்த சுரங்க ரயிலில் எனக்கு முன்னால் ஒரு வெள்ளை மனிதர் இருந்தார். அவரது முகம் மெல்லியதாகவும், சிறு தாடி உடையதாகவும் இருந்தது. அந்த மனிதர் கலைத்துவமாக இருந்தார். நான் அவரைப் பார்த்தேன், என்னைப் பார்த்தன அவரது விழிகள். நான் அவரை எனக்குள் எலியாக நினைத்தேன். அவரை எலியின் வடிவத்தில் அல்ல, எலியின் பெயரில். அவருக்கு ஜாக் எனப் பெயரிருக்கலாம். ஆனால் ஜாக்கை நான் எலியாக நினைத்தேன். எனது பெயர் மோகன், ஆனால் இதனை எலியாக்குவது தப்பா? அது யானை ஆனாலும் தப்பு ஏற்படுமா? வெள்ளையருக்கு இருந்த சுத்தமான பெயர் தெரியாது. எனக்குள் அவர் எலிதான். நான் அவரைப் பார்த்தேன். மீண்டும் மீண்டும் அவரது விழிகள் எனது முகத்துள் விழுந்தன. “வணக்கம்! எலி!” என நான் அவரிடம் சொன்னேன். அவர் அழகான சிரிப்பைத் தந்து என்னிடம் “வணக்கம்” சொன்னார். எனது முன் மனைவி தன்னை எலி என அழைத்ததும் கோபித்தாள் . அவளைக் காட்டிலும் அவர் அழகிய எலிபோல இருந்தார். “ஆ! நீங்கள் அழகியவராக இருக்கின்றீர்கள்!” இந்தச் மொழி எனக்கு இனிய மொழியாக இருந்தது. எனது முன் மனைவியை 8 வருடங்களாகச் சுழட்டல் செய்தேன். “I love you !” எனப் பல தடவைகள் சொன்னாலும், எனக்கு வெறுப்பு விழிகளைக் காட்டியவள். பின் என்னை love பண்ணினாள், எனது துணைவியாகவும் வந்தாள் . ஆனால் ஒருபோதுமே “நீ ஓர் அழகுப் பிறவி” என எனக்கு அவள் என்னிடம் சொல்லவில்லை. ஆனால் மெத்ரோவில், என்முன் இருப்பவரோ, நான் அழகு எனச் சொன்னார். அவரது சிரிப்பிலும் அழகு இருந்தது.. ஆம்! இது ஒரு நல்ல எலி. பின், அவர் எழுந்ததும், அவர் வெளியால் போகப்போகின்றார் என நினைத்தேன். அப்படி நடக்கவில்லை. எனக்கு அருகில் வந்து அமர்ந்தார். “என்னை எலியாக்கியதற்கு நன்றி!” அவரது உதடுகள் மிருதுவாகப் பேசின. அதன் பின் அவரது கரங்கள் எனது தொடைகளைத் தடவுவதை உணர்ந்ததும் திடுக்கிட்டேன். “அன்பு எலியே! எனக்கு ஹோமோசெக்ஸ்ஸுவல்களிடம் எதிப்பு இல்லை. அவர்களது தெரிவும் வாழ்வு இயல்பு என்பதை அறிவேன். ஆனால் எனக்கு ஆண்களிடம் செக்ஸ் ஆசை இல்லை!” என மெதுவாகச் சொன்னபோது , அடக்கமாக “நன்றி” எனத் தெரிவித்தார். “உங்களது கருத்துக்கு நன்றி! சிலர் சிலவேளைகளில் என் போக்கினால் எனக்கு வன்முறையாகவும் இருப்பர்! ஆணை ஆண் விரும்புவது சுலபமானது, ஆனால் அதனை வெளிக்காட்டுவது இப்போது நடந்தாலும் சிக்கலானவையே. நீங்கள் என்னை எலி என அழைத்தது எனக்குப் பிடித்துள்ளது. இந்த அழைப்பினால் மகிழ்ந்துள்ளது எனது இதயம்.” “உங்கள் செய்தி எனக்குச் சந்தோசத்தைத் தருகின்றது. எலி என்பது எப்படி உங்களுக்குள் பெரிய மகிழ்வைத் தந்ததின் காரணத்தை நான் அறியலாமா?” “எனக்கு நிறையைக் காதலர்கள் கிடைத்தனர். அவர்களைப் பிற காதலர்களுக்காக பிரியும் போக்கு தொடக்கத்தில் எனக்குள் இருந்தது. எனது கடைசிக் காதலன் போலந்து நாட்டைச் சேர்ந்தவன், அங்கு இராணுவத்தில் இருந்தவன். அவனது உடல் நேர்த்தி மிகவும் வசீகரமானது. நிறைய பிரெஞ்சு பேசமாட்டான். காதலுக்கு மொழி தேவையா? அவனை நான் ஒரு மது விடுதியில் சந்தித்து அவனது முகத்தை எனது விழிகளால் கடித்துக்கொண்டிருந்தபோது ‘ஆ! எனது அழகிய எலியே!’ என்று சொன்னபடி என்முன் வந்தான். நான் அவனது அழகிய எலியாக இருந்தேன் சில ஆண்டுகள். ஒவ்வொரு தடவையும் அவன் என்னை எலி என அழைத்தபோது எனக்குள் தீவிர செக்ஸ் வெறி வந்தது.” “உங்கள் இராணுவன் ஏன் உங்களை எலி என அழைத்தான்?” “காதல் போக்கு நிச்சயமாகக் குருட்டுப் போக்குத்தான். நான் ஒரு போதுமே அவன் எப்படி என்னை எலி என அழைத்தான் என்பதை கேட்க நினைக்கவில்லை. அவனது எலியாக இருத்தலில் காதல் சுகத்தை சிறப்பாக ரசித்தேன். உங்களிடம் ஓர் கேள்வி கேட்கலாமா?” “கேள்!” “நீங்கள் எதற்காக என்னை எலி என்று அழைத்தீர்கள்?” “நான் ஓர் சின்னப் படைப்பாளி! கற்பனைகள் வரும்போதும் எழுதுவேன், வராது விட்டால் கற்பனைகளையும் தேடுவேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் ‘எலி’ எனும் தலைப்பில் ஒரு கதையை எழுத வெளிக்கிட்டேன். ஆனால் இந்தக் கதை இன்னமும் முடியவில்லை.” “சிக்கலான விசயமா எலி எனும் தலைப்பில் எழுதுவது?” “அது சிக்கலானதா என்பது எனக்குத்தெரியாது. ஆனால் எனது திட்டம் முடியவில்லை. முதலில் நான் உண்மையான எலிகளைப் பார்த்தேன், அவைகளது அசைவுகளைப் பார்த்தேன், அவைகளின் மொழியையும் கேட்க விரும்பினேன். நான் வேலை செய்வது உணவகத்தில். அங்கு எலிகள் அதிகம். அந்த எலிகள் இறைச்சிகள், பழங்கள், மரக்கறிகள் ஆகியவற்றைக் கடித்தாலும், நாங்கள் சேப் பண்ணி வாடிக்கையாளர்களுக்கு அவைகளைக் கொடுத்துவிடுவோம். எனது வேலைதான், எலி எனும் பொருளில் என்னை எழுதத் தூண்டியது.” “ஆ! உங்கள் கலைத்துவம் அழகியது!” என அவர் சொன்னார், அவரது கைகள் எனது தொடைகளைத் தொடவில்லை. தனது இடம் வந்ததும் என்னுடனான உரையாடலுக்கு நன்றி சொல்லி அவர் இறங்கிவிட்டார். அவர் போனதும் நான் அவரைப்பற்றி நினைத்தேன். அவரது இராணுவக் காதலன் அவரை எப்படி எலி என அழைக்க முடிந்தது? அந்த போலந்து இராணுவன் ஒருவேளையில் என்னைப்போல எழுத்தாளனாக இருந்தானா? மெத்ரோவை விட்டு இரங்கி நடந்தபோது என்னை இந்தக் கேள்விகள் கடித்துக்கொண்டிருந்தன. மிகவும் பிந்திய இரவு வேளையில் நான் என் அறையின் முன் வந்தேன். கதவின் கீழ் துழைவால் ஓர் எலியின் சின்னத் தலை ஆடுவது தெரிந்தது. நடுங்கினேன். ஆம்! அது எலி! அது உயிர் எலி. எனது ரூமுக்குள். நான் உடனடியாக தீயணைப்புப் படையை போனில் அழைத்தேன். பாரிஸ் 22.11 26/05/2015

    Postad



    You must be logged in to post a comment Login