Recent Comments

    நானும் ஒரு ஊடகப் போராளி தாண்டா!

    சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலத்தில், என்னுடைய வகுப்பு நண்பர்களான... தற்போது அமெரிக்காவில் கத்தோலிக்க குருவாக இருக்கும் றோகானும், அவுஸ்திரேலியாவில் என்ஜினியராக இருக்கும் பிலிப்பும் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார்கள்.

    துணைவன்!

    தேவர் பிலிம்ஸ் படங்கள் பார்த்திருப்பார்களோ என்னவோ?

    மாதா மாதம் தவறாமல் ஒரே ஒரு இதழ் மட்டும் வெளிவரும், உட்சுற்றுக்காக!

    எழுத்தில் வல்லார் என்பதை விட ஆர்வலர்கள் என்பது பொருத்தமானது.

    கண்டதும் கற்கும் நமக்கு கருமசிரத்தையோடு இதை வாசிப்பதில் ஆர்வம் உண்டு. அம்புலிமாமா, நற்கருணை வீரன் எனப்படும் கத்தோலிக்க சிறுவர் இதழ்களுடன் துணைவனும் நமது அறிவுப் பசிக்கு விருந்தானது.

    முதலாவது பிரச்சனை, இந்தப் பத்திரிகை நடத்தியது A வகுப்பினர்.

    B வகுப்பினரான எங்களுக்கு இது ஒரு கௌரவப்பிரச்சனை!

    வழமையான தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் 'நாங்களும் பேனையும் பேப்பரும் வைச்சிருக்கிறோம், நமக்கென்ன குறைச்சல், நாங்களும் ஊடகவியலாளர்களாக வேண்டியது தான்' என்று போட்டிக்கு பத்திரிகை விட வேண்டும் என்று தொடங்கிய நம்ம கூட்டாளிகளும், இந்த விளையும் பயிரை முளையிலே தெரிந்து கொண்டு, அப்போது கண்கள் சிவந்ததால் கஞ்சா என்று அன்போடு அழைக்கப்படும் தமிழ் வாத்தியாரின் பிரம்படிகளையும் தாண்டி தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ள வெண்பாக்கள் எல்லாவற்றையும் மனனம் செய்தவன் என்பதால், என்னை தமிழ்ப் புலவனாக்கியிருந்ததால், என்னையே ஆசிரியராக்க வேண்டும் என்று தீர்மானித்து, பத்திரிகை விடத் திட்டமிட்டாயிற்று.

    என்னைத் தவிர வேறு எந்த இளிச்சவாயனும் தன் படிப்பையும் வீட்டுப் பாடங்களையும் விட்டு பத்திரிகைக்கு ஆக்கங்கள் எழுத மாட்டான் என்பதால், வழமை போல எந்த உதவி ஆசிரியர்களும் இல்லாத Editor-in-Chief ஆக நானே ஆக வேண்டி வந்தது.

    அந்த சலுகையையும் உரிமையையும் வைத்துக் கொண்டு, நான் வைத்த பெயர் 'மாணவன்!'

    ராணி தியேட்டரில் ரிலீஸ் ஆன சிவாஜி படத்திற்கு போட்டியாக ராஜா தியேட்டரில் ரிலீஸ் ஆகும் எம்.ஜி.ஆர் படம் மாதிரி!

    நமக்கு தொழில் நுட்பத்தில் இருந்த ஆர்வம் காரணம் என்பதை விட, பாடக் கொப்பிகளில் உள்ள நமது கையெழுத்து நாட்பட்டால் நமக்கே வாசிக்க முடியாமல் திணறும் போது, இந்த வள்ளலில் நமது கையெழுத்தில் பிரதி விட்டால் எவனுமே வாசிக்க மாட்டான் என்பதால், அப்போதைய Desk Top Publishing ரெக்னோலஜியைப் பயன்படுத்தி பிரசுரிக்க ஐடியா பிறந்தது.

    மற்றவர்கள் எல்லாம் எழுதவே தெரியாத ஊடகப் போராளிகளாக இருந்ததால் பதிப்பாளர்களாகவும் வெளியீட்டாளர்களாகவும் இருக்க, நானே விடயங்களைத் தொகுத்து, ஏடு இட்டோர் இயலும் எழுதி...

    கண்டி வீதியில் உள்ள ஆசீர்வாதம் அச்சகத்தில், என் அன்புக்குரிய நண்பன் ரவிராஜின் அம்மா வேலை செய்ததால், தமிழ் தட்டச்சு யந்திரத்தில் தட்டச்சிட்டு, ஒற்றை இதழோடு வெளியீடானது.

    ரவியின் அம்மாவை நான் நேரில் கண்டதில்லையாயினும், அழகாக கவர் போட்டு, கிளிப் அடித்து தந்திருந்தார்... என்னுடைய அரைவேக்காட்டு எழுத்துகளையும் எடிட் செய்து! அவ தான் உண்மையான எடிட்டர்! நான் வெறும் in-Chief தான்!

    போட்டோக்கொப்பி இயந்திரம் சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்திருந்தால், மேலதிக பிரதிகளோடு வெளியீட்டு விழா நடத்தி, முதற்பிரதி விற்றே, கண்டி வீதி, மெயின் றோட் சந்தியில் உள்ள கூல் பாரில் ஐஸ் சர்பத் வாங்கிக் குடித்திருக்கலாம்.

    பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்களும் வழமை போல முதற் பிரதியான ஒரே பிரதியை வாங்கி 'நாங்களும் ஊடகவியலாளர்கள்டா!' என்று கெத்தாக பீற்றிக் கொண்டார்களே தவிர, எல்லா முதல் பிரதி வாங்கியோரையும் போல வாசிக்கவோ, புத்திஜீவிகள் மாதிரி விமர்சனக் கூட்டம் ஒழுங்கு செய்யவோ இல்லை.

    கத்தோலிக்க பாடசாலை. தமிழ் என்பதை விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம். அதையும் விட, இன ஒற்றுமைக்காக சிங்களம் வேறு பாடமாக இருந்தது. இதற்குள் நாங்கள் பத்திரிகை நடத்தி தமிழ் தேசியம் காட்டினால், பாடங்களில் குறைவாக புள்ளிகள் எடுக்கும்போது, பிரம்படிகளில் போனஸ் அடிகள் வேறு கிடைக்கும்.

    எனவே கிட்டத்தட்ட போராளிகள் நடத்திய அண்டர்கிரவுண்ட் பத்திரிகை தான். இரண்டு பிரதிகள் தான் வெளிவந்தது.

    யாழ்ப்பாணிகளில் பாதிப்பேர் முன்னாள் பத்திரிகை ஆசிரியர்கள், மீதிப் பேர் விளம்பரமும் எழுத ஆட்கள் கிடைத்ததும் பத்திரிகை ஆரம்பிக்கும் ஆசையுரியர்கள் என்று நான் சொல்வது போல, யாழ்ப்பாணி பத்திரிகை ஆசிரிய ஊடகவியலாளர் சங்கத்தில் நானும் ஒரு Card Carrying Member ஆகி விட்டேன்.

    அடுத்த பிரச்சனை என்னவென்றால்...

    கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்றால்...

    யாழ்ப்பாணி கீரைக்கடைக்கு எதிராக சந்தையே திறப்பான்!

    இயக்கங்கள் ஈழம், புரட்சி, விடுதலை என்ற பெயரில் எல்லாம் குட்டி போட்டது போல, ஊடகவியலாளர்கள் ஆகும் ஆசை வந்தது C வகுப்பாருக்கு!

    அங்கேயும் தமிழில் பேச்சுப்போட்டிகளில் அசத்துகிற எட்வேட் எடிட்டர் இன் சீப் ஆக அவர்களும் ஒரு பத்திரிகை வெளியிட்டார்கள். பெயர் ஞாபகமில்லை. இருந்தாலும் ரெக்னோலஜி விசயத்தில் சிங்கனை மிஞ்ச முடியவில்லை.

    கையெழுத்து பிரதிதான்!

    புலிகளின் பத்திரிகைகளை புலிவால்களை விட நான் அதிகம் வாசிப்பது போல, அந்த முதல் பிரதியையும் நான் வாசித்தேன்.

    அதில் ஒரு சிறுகதை!

    அதை எழுதியது எட்வேட் என்று பெயர் இருந்தது.

    ஆனால், கதை எங்கோ வாசித்த மாதிரி இருந்தது.

    இந்த கண்டதும் கற்கும் பண்டிதனுக்கு எங்கோ உதைத்தது.

    வீட்டில் அண்ணன்மார்கள் இடது பக்கம் சரிந்தவர்கள் என்பதால் நிறைய சிவப்பு புத்தகங்கள் வீட்டில் உலவின, பைபிளோடு சேர்ந்து!

    இதையும் விட, பல சிறுகதை, நாவல் புத்தகங்களையும் அண்ணன்மார்கள் வைத்திருந்தார்கள்.

    அதில் நாஞ்சில் பி.டி.சாமியும் அடக்கம். 'திறந்து காட்டினாள்' என்ற நாவலின் அட்டைப் படத்தைப் பார்த்து மயங்கி, அதன் மர்மத்தை துலக்க அண்ணன்மாருக்கு தெரியாமல், களவாக வேலை மினக்கெட்டு வாசிச்சு, கடைசியில் நாயகி ஏதோ ஒரு பெட்டியைத் திறந்து காட்டியது எல்லாம் பற்றி புத்தகமே எழுதலாம்.

    இப்படியாக இருந்த புத்தகங்கள் பல, நான் பொழுது போகாமல் மறுவாசிப்புகள் செய்தவை.

    அப்படியான ஒரு இடதுசாரியின் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதையை இலக்கியத் திருட்டு செய்து எட்வேட் தன்னுடைய பெயரைப் போட்டு வெளியிட்டது, இந்த சிங்கனுக்கு இலக்கிய அறத்திற்கு நடத்தப்பட்ட அப்பட்டமான மீறல் என்ற கோபம் வந்தது.

    ஆதாரம் இல்லாமல் மோதக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்து, எப்பவடா, பள்ளிக்கூடம் முடியும், பலாலி பஸ் வரும் என்று காத்திருந்து, வீட்டே வந்திறங்கி, உடனடியாக சாப்பிட்டு, அண்ணன்மார் இருந்த வீட்டுக்குப்போய், சன்லைட் சவர்க்காரப் பெட்டிக்குள் இருந்த, நமக்கெல்லாம் புக்ஷெல்ப் வசதி அப்போ கிடையாது, புத்தகங்களைக் கிளறி, கண்டுபிடித்து...

    எப்பவடா, விடியும்? ஆதாரங்களோடு நிருபிக்க வேண்டும் என்று காத்திருந்து...

    கொண்டு போய் காட்டி வீரம் காட்டி...

    வழமையான போட்டி ஊடகங்கள் மீதான யாழ்ப்பாணியின் பொறாமை என்று நீங்கள் சொல்லக் கூடாது.

    இது எங்கள் இலக்கியவாதிகள் இன்றைக்கும் தங்களுக்கு இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் இலக்கிய அறம் சம்பந்தமான விசயம்!

    அந்தச் சிறுகதை வெளிவந்த நூல்...

    தற்போது காலம் சென்ற நீர்வை பொன்னையனின் உதயம் சிறுகதைத் தொகுதி!

    தமிழன் ஆள வேண்டும் என்று அழிவுக்கு வழி வகுக்காமல், சமூக நீதிக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த அந்த இலக்கியவாதி மீது நடத்தப்பட்ட இலக்கியத் திருட்டை தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் அம்பலப்படுத்தியவன் என்ற பெருமை எனக்கு உண்டு தானே!

    அது கூட அவரைக் கௌரவப்படுத்தும் ஒரு அஞ்சலி தானே!

    Postad



    You must be logged in to post a comment Login