Recent Comments

    எரிக்கத் தானே வேணும்!

    ஆறாம் வகுப்போடு பட்டணத்திற்குப் படிக்கப் போன இந்த செம்பாட்டு மண் கிராமவாசியின் பாடசாலையில் ஒரு வயதான சுவாமியார் மத்திய பிரிவின் இரண்டாம் மாடியில் வசித்து வந்தார்.

    தாடி வளர்த்து ஒருவரோடும் பேச மாட்டார். குனிந்த தலை, கையில் புத்தகங்கள்.

    தன் பாட்டிலேயே நடந்து போய்க் கொண்டிருப்பார். பாடசாலையிலிருந்து அருகில் இருந்த பிஷப் ஹவுஸ் பக்கமாக!

    தினசரி அவரது தரிசனம் இப்படியாகத் தான் இருக்கும்.

    சுவாமியாரைக் கண்டதும் God bless you, Father! என்று நண்பர்கள் எல்லாரும் சொல்லத் தொடங்கியதும், சிங்கனும் பிடிச்சுக் கொண்டான்.

    பாதரைக் காணும் போதெல்லாம், கடமை தவறாமல் God bless you, Father! தான்.

    அவரும் குனிந்த தலை நிமிராமல் பதிலுக்கு God bless you சொல்லுவார்.

    ஏற்கனவே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு சுவாமியானவருக்கு நாங்கள் ஏன் God bless you சொல்ல வேண்டும் என்ற கேள்வியும் அந்த நாளில் வந்ததில்லை.

    அவர் சொல்கிற God bless youவில் கடவுளே வந்து எங்களை ஆசீர்வதித்தது போல இருக்கும்.

    அவர் தான் டேவிட் அடிகளார்.

    எங்கள் ஊருக்கு கத்தோலிக்க மதம் பரப்பிய ஞானப்பிரகாசம் சுவாமிகள் 72 மொழிகள் தெரிந்தவர் என்பார்கள்.

    இவருக்கு 32 மொழிகள் தெரியும் என்பார்கள்.

    நூலகம் எரிந்த செய்தி கேட்டு மாரடைப்பினால் இறந்தார் என்பார்கள்.

    யாழ் நூலகத்தின் ஆரம்பத்திற்கு எங்கள் கல்லூரியில் அதிபராக இருந்த ஐரிஷ்காரக் குருவானவரான திமோத்தி லோங் முக்கியமானவர். அடுத்தவர் அல்பிரட் துரையப்பா. இப்படிப் பலரின் முயற்சியில் தான் அந்த நூலகம் உருவானது.

    அதிபர் லோங்கிற்கு நூலக வளவில் சிலை இருந்ததாக ஞாபகம்.

    கிராமவாசியாக இருந்தாலும், என் அறிவுப் பசிக்கு தீனி போட்டதில் அந்த நூலகத்திற்கும் எனது ஊரிலும், சைக்கிளில் போகும் வழிகளில் எங்காவதும் இருந்த வாசிகசாலைகளுக்கும் பெரும் பங்குண்டு.

    வாசிகசாலைகள் பெரும்பாலும் சஞ்சிகைகளுக்கும் பத்திரிகைகளுக்குமானவை.

    யாழ் நூலகம் நூல்களுக்குமானது.

    தவறாமல் சகல பத்திரிகைகளும், யுனெஸ்கோ கூரியர் தொடங்கி சோவியத் நாடு வரை, குமுதம் முதல் கணையாழி வரை, எகனமிஸ்ட் முதல் இலஸ்ட்ரேட்டட் வீக்லி வரை சகல சஞ்சிகைகளையும் எங்களுக்குத் தந்த அந்தக் காலத்து கூகிள் அது.

    இவற்றையெல்லாம் பணம் கொடுத்து வாங்கித் தான் படிக்க வேண்டும் என்றிருந்தால், எதை நாங்கள் வாசித்திருக்க முடியும்?

    பள்ளிக்கூடத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு வந்து தான் கிராமத்திற்கு பஸ் எடுக்க வேண்டும் என்றால், வாசிப்பு ஆர்வத்தினால் நடந்தே போய் நூலகத்தில் வாசித்த பின்னால் தான் பஸ் நிலையம் சென்றதுண்டு.

    சிறுவயதில் பின்னால் இருந்த சிறுவர் பகுதிக்குப் போய் எதுவும் சரிப்பட்டு வராததால், பத்திரிகைப் பகுதியிலேயே தஞ்சம்.

    அதுவும் சில சஞ்சிகைகளுக்காக, எழுத்துக் கூட்டி வாசிக்கும் வாசகப் பெருமக்கள் வாசித்து முடியும் வரைக்கும், ஏதாவது சஞ்சிகையை சும்மா புரட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

    மேலே கேட்போர் கூடம், உயர்தர வகுப்பு நாட்களில் நண்பர்களோடு சேர்ந்து படிப்பதற்குப் பயன்பட்டது. கூடவே, அங்கே வரும் பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடவும்!

    அங்கே ஒரு வெள்ளையர் ஒரு தடவை ஒரு புகைப்படக் கண்காட்சி நடத்தியிருந்தார். மிகவும் அழகான படங்கள். இன்றைக்கும் கண்ணுக்குள் நிற்கும்.

    புத்தகங்கள் கடனாகப் பெறுவதாயின், மாநகர எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு மட்டும் தான்.

    என்னைப் போன்ற கிராமவாசிகளுக்கு வாய்ப்பே இல்லை.

    பிறகென்ன? சட்டத்தை எப்படி மீறுவது என்பதையே முதல் சிந்தனையாகக் கொண்ட யாழ்ப்பாணத்தில் தானே நானும் பிறந்தேன்.

    கரையூரில் இருந்த என் பாடசாலை நண்பன் வீட்டு சோலைவரி ரசீதோடு, நானும் Card carrying member.

    சைக்கிளில் போய், அந்த வெயிலில் போன களைக்கு, சைக்கிள் கொட்டிலுக்கு பக்கத்தில் இருந்த நகரசபைப் பைப்பில் தண்ணீரைக் குடித்து மரநிழலில் களையாறி, உள்ளே மின்விசிறியின் கீழ் வாசினை.

    அந்த மின்விசிறியின் இதத்தில் மடியில் சஞ்சிகையை வைத்துக் கொண்டு நித்திரை கொண்டவர்கள் பலர். நித்திரையைக் குழப்பாமல் சஞ்சிகையை எடுப்பதா? இல்லை, தட்டி எழுப்பி வாங்குவதா? என்பது, தூங்குபவரின் முகபாவத்தைப் பொறுத்தது.

    முரட்டு முகம் என்றால், பேசாமல் வாலைச் சுருட்டிக் கொண்டு குமுதத்தை நான்காவது தடவையாகப் படிக்க வேண்டியது தான்.

    வீடு போகும் போது, இறுக்கிப் பிடித்திருக்கும் கரியரில் புத்தகங்கள் இருக்கும்.

    நாவல்கள், கதைகளை விட, அறிவியல் புத்தகங்கள் தான் எனக்கு உரித்தானவை.

    எத்தனை புத்தகங்கள்? சினிமா! புகைப்படவியல்! இசை!

    அது 40ம் ஆண்டுப் புத்தகமாயிருந்தாலும், வாசித்தேயாக வேண்டும்.

    அள்ள அள்ளக் குறையாக அறிவுப் பொக்கிஷம் அது!

    எரிக்கப்பட்டது. அதில் இருந்த சுவடிகள், கிடைக்க முடியாத அரிதான பழைய புத்தகங்கள் எல்லாம் சாம்பராகி விட்டது.

    அந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்கு எந்த நியாயங்களும் கிடையாது.

    எங்களுக்கு நூலகம் அறிவுத் தேடலுக்கான மையமாக இல்லாமல், வழமை போல அரசியலுக்கான பகடைக்காயாகி விட்டது.

    மீளக் கட்டி திறப்பு விழா நடத்த முயன்றபோது, மேயரின் சாதியைக் காரணம் காட்டி அதை புனிதப் போராளிகளே தடை செய்தது வரைக்கும்!

    துரையப்பாவின் முயற்சியில் தான் கட்டப்பட்டது என்று அன்று தெரிந்திருந்தால்,

    பகிஷ்கரிப்பே நடந்திருக்கும்! கறுப்புக் கொடியோடு ஆர்ப்பாட்டம் செய்திருப்போம்!

    வாசிக்க மாட்டோம், குளத்தோடு கோபிச்சுக் கொண்டு!

    இன்னும் ஒருபடி மேலே போய்... எரிக்கத் தானே வேணும் என்றிருப்போம்!

    படித்த யாழ்ப்பாணத்தின் சிந்தனையில் விளைந்த எங்களுடைய அரசியலின் இலட்சணம் அது!

    இன்றைக்கும் தமிழ்த் தேசிய ஊளையிடல்கள் தவிர்ந்த எதையுமே வாசித்தறியாதவர்கள் கூட, சர்வதேசம் தலையிட்டு நூலகம் கட்டித் தர வேண்டும் என்ற மாதிரி முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    வாசித்து அறிவைத் தேடுவதற்கான மையம் ஒன்றை இழந்ததை விட, சிங்களவன் எரித்தது என்பது தான் இவர்களைப் பொறுத்தவரைக்கும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

    அழிக்கப்பட்டதிலிருந்து எழுவது தான் எந்த ஒரு முன்னோக்கி நகர விரும்பும் சமூகமும் செய்ய வேண்டியது!

    ஆனால், இன்றைக்கு நூலகம் பயன்படுத்த ஆட்களின்றிக் கிடக்கிறது என்கிறார்கள் சிலர்.

    உலகெங்கும் நூலகங்கள் வெறும் புத்தகங்களை இரவல் கொடுப்பதோடு மட்டும் நின்று விடாமல், ஒரு சமூக சந்திப்பு மையமாக்கிக் கொண்டுள்ளன.

    ஆனால், நாங்கள்...?

    அதை விட, பிரமாண்டமான ஒன்றைக் கட்டியெழுப்பி, எத்தனை தடவை எரித்தாலும் எங்களை அழிக்க முடியாது, எங்களால் எழுந்து நிற்க முடியும் என்று காட்ட வேண்டிய சமூகம்...

    இன்றைக்கும், வழமை போல, எதிரியால் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகுக்கு காட்டி,

    இந்த அநியாயத்தைக் கேட்பார் யாருமே இல்லையா என்று ஒப்பாரி வைத்து

    நியாயம் கேட்பதற்காக, அந்த எரிந்த நூலகப் படம் மறக்காமல் தூக்கிக் காட்டப்படுகிறது,

    நிர்வாணமாக்கப்பட்ட இசைப்பிரியாவின் படம் போல!

    Postad



    You must be logged in to post a comment Login