Recent Comments

    க்ரியா ராமகிருஷ்ணன் :ஓர் அகராதியின் மரணம்

    க.கலாமோகன்

    சொல்லின் அர்த்தங்களை விளங்குவது இனிமையானது. ஆனால் இதனது அர்த்தங்களை அறிந்தா நாம் வாழ்கின்றோம்? அறியாமல் வாழ்வது சாத்தியமே. அறிந்தால் மொழிகள் தமக்குள் வைத்திருக்கும் மூலங்களை ரசிக்கலாம். பல படைப்பாளிகளின் வாழ்வு அகராதிகளுடன் தொடர்புபட்டது. சில சொல்கள் விளங்கும், வேறு சொல்கள் விளங்கியபோதும் விளங்காததாக இருக்கும். இந்த வேளையில்தான் தேவைப்படும் அகராதிகள். உலகின் அனைத்து மொழிகளிலும் உள்ள அகராதிகள் உலக இலக்கியத்தைச் செம்மைப் படுத்தியுள்ளன. தமிழில் பல அகராதிகள் இருந்தாலும், ஓர் புதிய அகராதியை பல வருட உழைப்புகளின் பின் எமக்கு வழங்கியவர் க்ரியா ராமகிருஷ்ணன். இவரது தவத்தினாலும், தியானத்தினாலும் எமக்குக் கிடைத்ததே “க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி”. விரிவாக்கிய திருத்திய பதிப்பைத் தமிழ் உலகுக்குத் தந்தபின்னர் கோரனா வைரஸ் தொற்றி 16 ஆம் திகதி காலையில் காலமானார். தமிழ் இலக்கியத்துக்கு இவரது இழப்பு ஓர் பேரிழப்பே.

    அகராதித் துறையில் அதீத கரிசனமெடுத்த இவர் தமிழின் மிகவும் கவனத்துக்குரிய பதிப்பாளராவார். வெளியீட்டு வேலைகளில் எப்போதுமே புதியதையும், புதுமையையும் காட்டியவர். வெளிநாட்டு இலக்கியங்களைத் தமிழ் வாசிப்புக்குத் தந்தவர்களில் மேலானவர் எனலாம். இவரது தமிழ் இலக்கிய வெளியீடுகள் ஓர் கவனமான தெரிவைக் கொண்டன. நவீன வெளியீட்டு முறைகளை இவர் தனது வெளியீடுகளில் காட்டியுள்ளார்.

    எனக்கு இவரது வெளியீடுகளைத் தெரியும். இவரைக் காணாது விட்டாலும் இவர் மீது நிறைய மதிப்பு இருந்தது. 2014 இல் தமிழ்நாடு சென்றபோது எனது நண்பரும், சிறப்பான திறனாய்வாளருமான மு.நித்தியானந்தன் “நீங்கள் க்ரியா ராமகிருஷ்ணனை நிச்சயம் சந்திக்கவேண்டும்” எனக் கேட்டு அவருக்கும் அறிவித்து இருந்தார்.

    ஆம், அவரை நாம் குடும்பமாகச் சந்தித்தோம். புன்னகை தழும்பும் முகத்துடன் எம்மை வரவேற்றார். இந்தக் கணங்கள் மறக்க முடியாதன. “க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி”யை நான் விலைக்கு வாங்க விரும்பியபோது “பணமே தேவையில்லை” எனப் பல தடவைகள் சொல்லி பணத்தை அவரது மேசையில் வைக்கவேண்டிய நிலை வந்தது. அவரது உழைப்புக்குச் சிரமம் தருவதில் விருப்பம் இல்லாமல் 20 நிமிடங்களே அவரோடு உரையாடினேன். இந்தக் கணங்கள் சந்தோசமானவை.

    அவரது தமிழ் அகராதியின் சிறப்பு மீது பேசியபோது, “யாழ்ப்பாணத் தமிழின் அகராதி தயாரிப்பது என்னுள் ஆர்வமாக இருக்கின்றது. ஆனால் நிறைய உதவிகள் தேவை. பலர் உள்ளனர், ஆனால் அவர்களது தொழில் வேலைகளுக்குள்ளும் அவர்களுடைய உதவியை அபூர்வமாகத்தான் பெறமுடியும்.” எனச் சொன்னார். தமிழ் இலக்கியத்துக்கு வந்த பேரிழப்பே இவரது இழப்பு. இவரது அனைத்து வெளியீடுகளிலும், எப்போதும் நிச்சயமாக இவர் வாழுவார்.

    Save

    Postad



    You must be logged in to post a comment Login