Recent Comments

    சோத்துக் கடையும் காதலும் சினிமாவும் – 2

    Thayagamweb-featuredfilm2ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்

    (வழமை போல வெளியீட்டு விழாவில், எழுத்தாளரை புகழ்ந்து தள்ளும் மற்றத் தமிழர்கள் போல இல்லாது, சினிமா விமர்சன நூல் வெளியீட்டு விழாவில் சினிமா உலகப் பிரமுகர்கள் வரும்போது, அவர்களுக்குப் பயன்படக் கூடியதான விடயங்களைச் சொல்வது ஆரோக்கியமானது என்ற நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட உரை இது.

    பின்னால், முகப்புத்தகத்தில் சில Film makers ஐ சந்திக்க நேர்ந்தது. நான் எதற்கோ போட்ட பின்னூட்டத்தைப் பார்த்துக் கோபம் கொண்டு, 'மவனே, உன்னை நேரில கண்டால் செருப்பால் அடிப்பேன்' என்று ஒரு பிலிம் மேக்கர் பணிவன்புடன் தெரிவித்திருந்தார்.

    இது சினிமா ஆர்வலர்களுக்கு மட்டுமன்றி, எந்த தொழில் செய்ய முனைவோருக்கும், ஏன் காதல் செய்ய நினைப்போருக்கும் பயன்படக் கூடிய கட்டுரை. சிரமம் பாராமல் இறுதி வரை வாசியுங்கள்.

    காதலில் வெற்றி பெறவும் இது உதவலாம். இல்லாது போனால், விசயம் தெரியாமல் படம் எடுக்கப் போய், எல்லாவற்றையும் இழந்து, கனடியக் குளிரில் செருப்போடு அலைய வேண்டிய நிலைமையையும் தடுக்க உதவலாம்!)

    நான் இன்று பேசப் போவது சோத்துக் கடையும் காதலும் சினிமாவும். ஒரு வெற்றிகரமான திரைப்படத்தை எடுப்பது எப்படி என்று தான் தலையங்கம் போடலாம் என்று இருந்தேன். என்னுடைய பெயரையும் பார்த்து விட்டு, விசயம் தெரியாமல், யாரோ ஹொலிவூட் இயக்குனர் பேசப் போகிறார் என்று வந்து என்னைக் கண்டு விட்டு... பிறகு எதற்கு வீண் வம்பு, நம்ம ரேஞ்சுக்கு இந்தத் தலையங்கமே போதும் என்று விட்டு விட்டேன்.

    ஒரு சோத்துக்கடை வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கும் ஒரு சினிமா தயாரிப்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை. இவை மட்டுமல்ல, எந்த முயற்சிக்கும், அது வியாபார முயற்சியோ, இலக்கிய முயற்சியோ, கலை முயற்சியோ, ஏன் காதல் பண்ணுவதாக இருந்தால் கூட, இவை எல்லாவற்றுக்கும் அந்த முயற்சிகள் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்கு சில படிமுறைகள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். இவை என்னுடைய அவதானிப்பினாலும், வாசிப்பினாலும், அனுபவத்தினாலும் வந்த என் கருத்துக்கள் மட்டுமே. இந்தப் படிமுறைகளை கைக் கொண்டால், உங்கள் முயற்சி வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். இந்த படிமுறைளைக் கைக்கொண்டால், கட்டாயமாக வெற்றி பெறும் என்றெல்லாம் உறுதி கூற வரவில்லை. சந்தர்ப்பங்கள் அதிகம் என்பதே என் அபிப்பிராயம்.

    இங்கே மூலைக்கு மூலை ரேக் அவுட் ரெஸ்ரோறண்டுகள் தமிழ் மகன்களின் நிர்வாகத்தில் நடைபெறுகின்றன. ஒரு சோத்துக்கடையை நீங்கள் ஆரம்பிப்பதாக இருந்தால் கடையை வாடகைக்கு எடுத்து பெயர்ப் பலகையைப் போட்டு, சமைக்கத் தொடங்குவதற்கு முன்னால்,

    முதலில் உங்கள் நோக்கம் (Objective) என்ன என்பதை நீங்கள் வரையறை செய்ய வேண்டும்.

    defining the goal.

    இங்கே mission statement என்று சொல்வார்கள்.

    அது 'ஸ்காபரோவுக்குள் உள்ள தமிழர்களுக்கு, கடைக்கு வெளியே அடுப்பும் தகரத்தட்டும் வைத்து கொத்து ரொட்டி விற்கும் கடை' என்பதாக இருக்கலாம்.

    அல்லது டவுன்ரவுணில் வேலை செய்கின்ற ஈழத்தமிழர்களுக்கு Bay Street ல் ஒரு மலிவான சாப்பாட்டுக் கடை.

    அல்லது உயர்மட்டப் பிற இனத்தவர்கள் வரும் Royal York ஹோட்டல், அல்லது Trump Tower Hotel ல் உயர்தர தமிழ் உணவகம் ஒன்றை நிறுவி, ரொறன்ரோவில் சிறந்த நூறு உணவகங்களில் ஒன்று என்ற விருது பெற வேண்டும்.

    இப்படி ஏதாவது ஒரு நோக்கம்.

    'பக்கத்துக் கடையில 5 டொலருக்குச் சாப்பாடு. நான் 4.50க்குப் போட்டால் சனம் வந்து குவியும்' என்ற மாதிரி இல்லாமல், தௌpவாக தன்னுடைய நோக்கத்தை வரையறை செய்ய வேண்டும். இதற்குள் நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களை உச்ச பட்சமாகத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதையும் ஐந்து வருடத்திற்குள் நான் மக்டொனால்ட்ஸ் மாதிரி பல சோத்துக்கடைகளை மூலைக்கு மூலை திறப்பேன் என்றெல்லாம் உங்கள் நோக்கத்தில் உள்ளடக்கலாம்.

    சும்மா மொட்டையாக, 'உங்க பெம்பிளையள் எல்லாம் சீரியல் பாக்கினம், வீட்டில சமைக்கிறேலை, சோத்துக்கடை திறந்தால் மணியா பிசினஸ் நடக்கும்' என்று If I build, they will come என்று Kevin Costner இன் Field of Dreams கணக்கில் தொடங்க முடியாது. நோக்கத்தைத் தௌpவாக வைத்திருப்பதன் காரணம், நீங்கள் குழம்பிப் போகாமல், உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்த, focus பண்ண அது உதவும்.

    மற்றவர்களில் இருந்து உங்களை வேறுபடுத்திக் காட்ட உதவுவது இந்த நோக்கம் தான்.

    இரண்டாவது Knowing thyself.

    அதாவது உன்னையே நீ அறிவாய். சோக்கிரட்டிஸ் சொன்ன இந்தத் தத்துவம் எல்லா மனிதருக்கும் அவசியமானது. எங்களை நாங்களே அறிந்து கொள்ளுதல். அதாவது ஒரு நோக்கத்தை வரையறுத்த பின்னால், அந்த நோக்கத்தை அடையக் கூடிய அறிவும் திறமையும் எனக்கு இருக்கிறதா என்ற கேள்வி எழ வேண்டும். எங்களை அறிந்து கொள்ளாமல் நாங்கள் வெற்றி பெற முடியாது. சும்மா மற்றவர்கள் வைத்திருக்கிறார்களே என்று விசயம் தெரியாமல் தொடங்கப் போய் மாட்டிக் கொள்ளாமல் இருக்க இது உதவும்.

    எனக்குச் சமைக்கத் தெரியுமா? வாங்க வருபவர்களை உபசரிக்கத் தெரியுமா? முழுநேரம் கடையில் நின்றால் குடும்ப வாழ்வை எப்படி சமாளிப்பேன்? என்ற பல கேள்விகளை எங்களை நாங்களே கேட்க வேண்டும்.

    எங்களுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை அறிந்து கொள்ளும்போது, பலத்தை சரியான வழியில் பயன்படுத்தவும், பலவீனத்தை நிவர்த்தி செய்யவும் முடியும். சமைக்கவோ, நிர்வகிக்கவோ தெரியாவிட்டால், தெரிந்தவரை வேலைக்கு அமர்த்தலாம். எங்களுடைய திறமையைப் பற்றி அறிந்து கொள்ளாமல், எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் எல்லாவற்றையும் நாங்களே செய்யப் புறப்படும் போது பெரும் ஆபத்தில் முடியும்.

    தன்னை அறிந்து கொள்ளும்போது, இந்த முயற்சிக்கு எந்த விடயங்களைக் கற்க வேண்டும் என்ற தௌpவு வரும். தன்னை அறிந்து கொள்ளும் படிமுறையை வெற்றிகரமாகச் செய்தால், மற்றப் படிமுறைகள் இலகுவானவையாக இருக்கும்.

    மூன்றாவது Execution. Process.

    அதாவது எப்படிச் செய்யப் போகிறேன்? உங்கள் சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் படிமுறை இது. மனதில் போட்டு வைத்த திட்டத்தைச் செயற்படுத்துவது. இது கடை எங்கே அமையும், வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும், சமையல் எந்த வகையானதாக இருக்க வேண்டும், யார் சமைக்கப் போகிறார்கள், கல்லாவில் நிற்பவர்கள் எப்படி உடுத்தியிருக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கான பதில். உங்களுடைய சமையல் எப்போதுமே ஒரே மாதிரியான ருசியில் இல்லாமல், ஒரு நாளைக்கு உப்புக் கூடி, இன்னொரு நாள் புளி கூடி இருக்க முடியாது. உங்கள் தரம் தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றால், இந்த execution தகுந்த வழியில் முறைப்படுத்தப்பட வேண்டும்.

    பொருளின் தரத்தை நிலைநாட்ட வேண்டும் என்றால் இந்தப் படிமுறை வெற்றிகரமாக இருக்க வேண்டும்.

    நான்காவது, சந்தைப்படுத்தல்.

    நான் சமைத்த சாப்பாட்டை யாருக்கு எப்படி, விற்கப் போகிறேன் என்ற கேள்வி. எப்படி, எங்கே விளம்பரம் செய்யப் போகிறேன், என்னுடைய வாடிக்கையாளர்களை எப்படிச் சென்றடையப் போகிறேன்? இந்தக் கேள்விகளுக்கு முன்னால், என்னுடைய வாடிக்கையாளர்கள் யார் என்ற முக்கியமான கேள்வி வரும். அது வரையறை செய்யப்பட வேண்டும். அதை வரையறை செய்த பின்னால் அவர்களுக்கான சந்தைப்படுத்தல் முறைகள் பற்றி முடிவு செய்யலாம்.

    ஸ்காபரோவில் தமிழர்களுக்கு சாப்பாட்டுக் கடை வைத்திருந்தால், நீங்கள் நிலத்தை mop பண்ணி துப்புரவாக்க வேண்டும் என்றோ, தினசரி பொரித்த எண்ணெயை மாற்ற வேண்டும் என்றோ, சிதறிக் கிடக்கும் பேப்பர்களை குப்பைக்குள் எறிய வேண்டும் என்ற கட்டாயமோ இருக்காது. இங்குள்ள காலநிலைக்கு இலையான் இல்லையே ஒழிய, தமிழர்கள் இலையான் இருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவதில்லை. ஆனால் Royal York Hotel ல் கடையைத் திறந்து விட்டு, Foam Container களுக்குள் சோத்தையும் கறிகளையும் அள்ளி விட்டு விற்பனை செய்ய முடியாது. Trump Tower Hotel விலையில் நீங்கள் மார்க்கத்தில் சோறு விற்க முடியாது. பிறகு விற்பனை நடக்காமல், இலையான் கலைக்க வேண்டி வரும்.

    வாடிக்கையாளர்கள் யார் என்பதை வரையறை செய்வது மிகமிக முக்கியமானது.

    இந்த நான்கு படிமுறைகளையும் எவ்வாறு திட்டமிட்டு, செயலாற்றுகிறீர்கள் என்பதில் தான் உங்கள் வெற்றி தங்கியிருக்கும்.

    ஒரு சினிமாவைத் தயாரிப்பதாக இருந்தாலும், காதல் பண்ணுவதாக இருந்தாலும் இதே படிமுறைகள் தான்.

    முதலாவது நோக்கத்தை வரையறை செய்ய வேண்டும்.

    எனக்கு நாப்பத்தைஞ்சு வயதுக்கு மேலாகுது, ஒரு Single Mother எண்டாலும் அம்பிடாதோ என்று கோயிலுக்கு வெள்ளிக்கிழமை போகிற மாதிரி, சும்மா ஒரு நாள் நித்திரை விட்டு எழும்பி, அட, Boxing Day யில மலிவா வாங்கின வீடியோக் கமெரா கிடக்கு, உங்க எல்லாரும் படம் எடுக்கிறாங்கள், நானும் எடுப்பம் என்று தொடங்கி, நாகேஷ் மாதிரி, 'கதை, வசனம், டைரக்ஷன் எல்லாமே நான் தான், ஆனா கதை மட்டும் தான் கிடைக்கலை, எங்க கிடைக்கும்' என்று வலை போட்டு வீசாமல்...

    வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு வெளிநாட்டு காதல் வாழ்க்கை பற்றி வர்த்தக ரீதியாக வெற்றி பெறக் கூடிய ஒரு படம் எடுக்க வேண்டும்.

    அல்லது ஈழத் தமிழர்களின் அவல வாழ்வைப் பற்றி, திரைப்பட விழாக்களில் பங்குபற்றி விருது பெறக் கூடிய அளவுக்கான கலைப்படம் ஒன்றைத் தயாரித்தல்.

    திரைப்படத் துறையில் வேலைவாய்ப்புப் பெறுவதற்காகவோ, அல்லது நிதியுதவியைப் பெறவோ என்னுடைய திறமையைக் காட்டக் கூடிய குறும்படம் ஒன்றை எடுத்தல்.

    அல்லது நானே கதாநாயகனாக நடிச்சால், அடுத்த முறை எலக்சன் கேட்க உதவியாயிருக்கும் என்ற நோக்கமாகவும் இருக்கலாம்.

    அல்லது படம் தயாரித்தால், நடிகைகளாக விருப்பம் கொண்டு நடிக்க வரும் அழகான பெண்களை வழி பண்ணலாம் என்ற எண்ணமாகவும் இருக்கலாம். பணத்தை வைத்துக் கொண்டு, படம் எடுக்க ஆள் தேடித் திரியும் புதுப்பணக்காரர்களைப் பார்க்கும் போது இந்த எண்ணத்தோடு படம் எடுக்க வருவது போலத் தான் எனக்குப் படும்.

    உங்கள் திரைப்படத் தயாரிப்பின் Mission Statement மிகவும் தௌpவாக உங்கள் தயாரிப்பின் நோக்கத்தை வரையறை செய்ய வேண்டும்.

    இதை வரையறை செய்யாவிட்டால் என்ன நடக்கும்? படத்தை எடுக்கத் தொடங்க பயம் வரும், குழப்பம் வரும். தங்களுக்கு விசயம் தெரிந்த மாதிரி, மற்றவர்கள் மண்டையைக் கழுவுவார்கள். அதெல்லாம் வரும் போது, திசை மாறித் தளம்பாமல், இது தான் என்னுடைய நோக்கம், அதன்படி படத்தைத் தயாரித்து முடிக்க வேண்டும் என்ற முடிவோடு இறுதி வரை வைத்திருக்கக் கூடியது இந்த நோக்கம் தான்.

    அடுத்தது Knowing Thyself.

    காதல் பண்ணுவதாக இருந்தாலும் தன்னைப் பற்றி அறியாமல் மன்மதன் என்ற நினைப்பில் காதல் பண்ண முடியாது. நம்ம தகுதிக்கு இது போதும் என்ற நினைப்பில் தேடுவது பின்னுக்கு தலையிடிகளைக் குறைக்கும்.

    சினிமாவிலும் தன்னையறிதல் மிகவும் முக்கியமானது. கறுப்பு விஜயகாந்த் நடிச்சு அரசியலுக்கு வந்திட்டான், நான் எம்.ஜி.ஆரை விடச் சிவப்பு, படத்தில நடிச்சன் எண்டால், அடுத்தது எம்.பி, பிறகு பிரைம் மினிஸ்டர் தான் என்று நினைப்பது.

    அல்லது என்ரை Boy friend சொன்னவர் நீ தான் உலகத்தில அழகான பெண். ஆனபடியால் நீங்கள் என்னைத் தான் கதாநாயகியாகப் போட வேண்டும் என்று சொல்லாமல் தன்னை அறிந்து கொள்ளுதல்.

    ஒரு சினிமாவை வெற்றி பெற வைக்கக் கூடிய தகைமைகள் தன்னிடம் இருக்கிறதா என்ற கேள்வி,

    Do I have what it takes to be a film maker?

    ஆனால் தமிழர்களுக்கு இந்த தன்னையறிந்து கொள்ளுதல் என்பது கொஞ்சம் பிரச்சனையான விசயம்.

    காரணம்,

    முதலாவது எங்களுக்கு எல்லாம் தெரியும்.

    உலகத்தில் எந்த விடயத்தைப் பற்றி தமிழனிடம் கேட்டால், அவருக்கு அதைப் பற்றி ஒரு opinion இருக்கும். அதைப் பற்றிய அடிமுடி தெரியாவிட்டாலும், அவருக்கு அதைப் பற்றி கரைச்சுக் குடிச்ச மாதிரித்தான் கருத்து இருக்கும். அப்படித் தான் ஒன்றும் தெரியாமல் போனாலும், உது அமெரிக்கனின் சதி என்று சொல்லுற அளவுக்காவது அதைப் பற்றிய அறிவு இருக்கும்.

    நாலைந்து பேர் கூடிக் கதைக்கும் போது பார்த்திருப்பீர்கள். புதிதாக வந்து சேருபவர், என்ன பேசப்படுகிறது என்பதைக்கூட சரியாக அறிந்து கொள்வதற்கு முன்பாகவே கருத்துச் சொல்லப் புறப்பட்டு விடுவார்.

    தன்னைப் புத்திசாலி என்று தானே நம்புகிற இந்தப் பழக்கம், நாகரீகத்திலும் கூர்ப்பிலும் நாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் எங்களுக்கு அதிகம். இதனால் தான் எங்கள் இனத்தில் அதிகளவு பத்திரிகை ஆசிரியர்கள் இருக்கிறார்கள். முன்னாள் பத்திரிகை ஆசிரியர்கள், இந்நாள் பத்திரிகை ஆசிரியர்கள் அல்லது எதிர்காலத்தில் பத்திரிகை தொடங்கும் கனவோடு இருப்பவர்கள். கிட்டத்தட்ட கனடாவில் உள்ள தமிழ் ஆண்கள் எல்லாம் இதற்குள் ஏதோ ஒரு வகைக்குள் தான் இருப்பார்கள்.

    எனக்குத் தெரிந்தவரைக்கும் தமிழர்கள் போல, சனத்தொகைக்கு தகாத விகிதத்தில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி வைத்திருப்பவர்கள் சீக்கியர்கள் மட்டும்தான். இதே சீக்கியர்களைப் பற்றி தமிழர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களின் opinion என்னவென்று? எல்லாம் விளங்கும்.

    அடுத்து மற்றவனை மடையன் என்று நினைக்கும் பழக்கம்.

    தன்னைப் புத்திசாலி என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் மற்றவனை மடையன் என்று நினைப்பது. இன்னொருவன் திறமைசாலியிருந்தால், அவனை மட்டம் தட்டுவற்கு எங்களை மிஞ்ச ஆளில்லை. 'உனக்கென்ன கனக்கத் தெரியுமோ? நீ என்ன பெரிய ஆளோ?' என்பதெல்லாம் இரண்டு பேர் கதைவளிப்படும்போது சாதாரணமாகக் கேட்கிற விசயங்கள். அரசியல் என்றால் துரோகி என்ற ஒரே வார்த்தை போதும். ஒருவன் தன்னுடைய திறமை காரணமாகத்தான் ஒரு பெருமைக்குரிய விடயத்தைச் செய்தாலும், அந்த மடையனை விட, தன்னால் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நினைப்பது எங்களுக்கு வழமையான விசயம். அதைச் செய்பவன் அது குறித்த அறிவும் அனுபவமும் பெற்றவன் என்ற உண்மையை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

    மூன்றாவது, கண் பார்க்கக் கை செய்யுது என்ற வசனம் எங்கள் சமூகத்தில் பாவிக்கப்படும் ஒன்று.

    ஒன்றை சிறப்பாகச் செய்வதற்கு அதைப் பற்றிய அறிவை முறைப்படி பெறவேண்டியதன் அவசியம் எங்களுக்குப் புரிவதில்லை. எங்களில் பலர் ரெஸ்ரோறன்டுகளில் வேலை செய்திருக்கிறோம். இதில் அனுபவம் வாய்ந்தவர்கள் வீடுகளில் பார்ட்டிகள் நடக்கும்போது வெங்காயம் வெட்டுவார்கள். பார்ப்பதற்கு ஆசையாக இருக்கும். ஆனால் அவர் அதை இருபது வருசமாய் செய்து தான் வெட்டுகிறார் என்ற நினைப்பு இல்லாமல் கூரான கத்தியோடு நானும் வெட்ட வெளிக்கிட்டால், A gun and a ring இரும்பன் மாதிரி கையை வெட்டிக் கொள்ள வேண்டியது தான்.

    எனது மகன் அரிவரி வகுப்புக்குப் போய், பட்டமளிப்பு விழாவின் போது படம் எடுப்பதற்காக ஒரு கமெராவை வாங்கிப் படம் எடுத்தேன். படங்களைப் பார்த்தபோது, நான் எதிர்பார்த்தது போல தரமில்லாததால், புகைப்படக் கலை பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக நூலகத்தில் பல புத்தகங்களை எடுத்து புகைப்படக் கலை பற்றி அறிந்து கொண்டேன். பிறகு நான் எதிர்பார்த்த விதத்தில் படம் எடுக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொண்டேன். இதைப் பற்றி என்னோடு வேலை செய்த தமிழரிடம் சொன்னேன்... அவர் சொன்னார்...

    உதென்ன பெரிய விசயம்? என்ரை கமெராவில சும்மா சுவிச்சை அமத்தினால் நல்ல படம் எடுக்கும்.

    நல்ல படம் என்று நாங்கள் கருதுவது இரண்டு பேருக்கும் வேறு வேறானது. புகைப்படம் எடுத்தல் என்பது ஒரு கலை என்றோ, அதைப் பற்றிக் கற்றுக் கொண்டால் தரமான படம் எடுக்க முடியும் என்பதோ அவருக்கு விளங்கவில்லை.

    இங்கே திருமண வீடியோ எடுக்கும் பலர் தங்களை பாலு மகேந்திரா போல நினைப்பதற்கான காரணம் இதுதான்!

    எங்களுக்கு சமூக ரீதியாக எங்களை நாங்களே அறிந்து கொள்வதற்கான பழக்கத்தை ஏற்படுத்தாமல், மற்றவர்களின் திறமையை குறைத்து எடை போடும் பழக்கம் ஊட்டி வளர்க்கப்படுகிறது. இதனால், எங்களுக்குச் சம்பந்தமில்லாத விடயங்களையும் மற்றவர்கள் செய்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக நாங்களும் செய்ய புறப்படுகிறோம்.

    இதனால் தான் எந்தத் தொழிலை எடுத்தாலும், எங்கள் சமூகத்தில் சனத்தொகைக்கு அதிகமான விகிதத்தில் ஆட்கள் இருக்கிறார்கள்.

    இது சோத்துக்கடையிலும் இருக்கிறது. சினிமாவிலும் இருக்கிறது.

    சரி, இவற்றையும் மீறி ஒருவன் தன்னை அறிந்து கொள்ள முயற்சித்தாலும், அவனை இழுத்து விழுத்த தமிழர்களுக்குள்ளேயே கோடரிக்காம்புகள் இருக்கின்றன. இந்த ஊடகவியலாளர்கள், விருது கொடுப்போர் என்று இருப்பவர்கள், ஊரில் உள்ள எல்லாருக்கும் கொடுத்து முடிந்து ஆளில்லாமல் யாரையாவது பிடித்துக் கொடுக்கலாமா என்று அலையும்போது, இந்தப் படைப்பாளிகள் அகப்பட்டவுடன் அவர்களுக்கும் விருதைக் கொடுத்தோ, பத்திரிகைகளில் இடத்தை நிரப்ப வானளாவப் புகழந்தோ, நீ தான் உலகத்திலேயே சிறந்த படைப்பாளி என்று புகழ்ந்தவுடன், தனக்கு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில், தன்னையும் அறிந்து கொள்ளாமல், தனது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவையுமில்லாமல் தலைக்கனத்தோடு திரிய வேண்டி வருகிறது.

    எங்கள் சமூக வாழ்வு முறை, கிரேக்கர்களுக்கு சோக்கிரட்டிஸ் சொன்ன உன்னையே நீ அறிவாய் என்பதற்கு பெரும் தடங்கலாக இருக்கிறது.

    இது திறமையோடு கூடிய தன்னம்பிக்கையைத் தராமல், பலருக்கு அசட்டுத்துணிச்சலைத் தருகிறது.

    இதனால் தான் கனடிய அரசியல் பற்றியோ, அடிப்படை ஆங்கிலமோ தெரியாமல் பலர் கனடியத் தேர்தல்களில் நிற்கிறார்கள்.

    ஒரு தனிமனிதனைத் தன்னைக் கடவுளாக நினைக்க வைத்து அல்லல்பட்டவர்கள் நாங்கள். அவருடைய திறமையைப் பார்த்து உலகமே திணறுகிறது என்று நாங்கள் தான் சொன்னோம். மற்ற நாட்டுக்காரர்கள் சொல்லவில்லை.

    ஒரு படைப்பாளி தன்னை, தன்னுடைய திறமையை மட்டுமல்லாமல், பலவீனத்தையும் அறிந்து கொண்டால் மட்டும் தான் தன்னை வளர்த்துக் கொள்ள முடியும். தனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்புடன் இருந்தால் வளர்ச்சி எப்படி வரும்? அந்தப் படைப்பாளி தன்னை அறிந்து கொள்ள விடாமல், ஊடகங்கள் வானளாவப் புகழ்ந்தால் எப்படி வளரமுடியும்?

    சினிமா என்பது வெறுமனே உட்கார்ந்து கதை எழுதுவதைப் போன்றதல்ல. இயக்குனராக விரும்புகின்றவர், கலை வடிவங்கள் பற்றி மட்டுமில்லாமல் தொழில்நுட்பம் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். அல்லது அதில் திறமையுள்ளவர்களின் உழைப்பைப் பயன்படுத்தத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

    தன்னை அறிந்து கொள்ளாமல் இதெல்லாம் சாத்தியமாகாது. இதைத் தெரிந்து கொள்ளாததால் தான் நாங்கள் உச்சங்களைத் தொட முடியாமல் இருக்கிறது என்பது என் அபிப்பிராயம். தன்னை அறிந்து கொள்ள முயன்றால், பலர் சினிமாவிலிருந்து விலகிக் கொள்ளலாம். திறமை உள்ளவர்கள் இன்னமும் விடயங்களைக் கற்றுக் கொண்டு முன்னேறலாம்.

    சினிமாவின் வெற்றிக்கு அடுத்த முக்கியமானது, Execution.

    சரியான திறமையாளர்களை ஒன்று திரட்ட வேண்டும். அவர்களை வைத்து வேலை செய்விக்கத் தெரிய வேண்டும்.

    இந்தத் தலைமைப் பண்புகளோடு இதை விட மிக முக்கியமானது,

    கதை சொல்லத் தெரிய வேண்டும்.

    பலரும் கதை என்பதை கதை சொல்லுதலுடன் குழப்பிக் கொள்கிறார்கள். திடுக்கிடும் திருப்பங்களுடன் கதை எழுதினால் படம் வெற்றி பெறும் என்று நினைக்கிறார்கள்.

    கதை வேறு, கதை சொல்லுதல் வேறு. கதை என்பது பாட்டி வடை சுட்ட கதை. குழந்தைகளுக்குச் சொல்லுவது. ஆண்டாண்டு காலம் அம்மாமாரும் அரிவரி டீச்சர்மாரும் சொல்லிக் கொடுக்கும் கதை.

    அதே கதையை என்னை எழுதச் சொன்னால்... என்னுடைய தலையங்கம்... சுட்டாள், சுட்டேன், சுட்டான்!

    கதை எப்படியிருக்கும்? அடுத்தவனுடைய உழைப்பைச் சுரண்டுவதில் வெட்கமில்லாமல், சிங்களப் பாட்டியின் வடையைத் திருடி, 'உவவுக்கு மணியா வேலையைக் குடுத்திட்டன்' என்று பெருமிதப்படுகிற யாழ்ப்பாணக் காகத்தை அமெரிக்க நரி ஏமாற்றிய கதை தான் நான் சொல்லுவேன். அது தான் கதை சொல்லல்.

    கதை சொல்லுவதற்கு கதை அவசியமேயில்லை.

    விபத்துக் காரணமாக நெடுஞ்சாலை ஒன்று ஸ்தம்பித்துப் போக, நடக்கும் விடயங்களைப் பற்றிச் சொல்லும் மார்செல்லோ மஸ்ட்ரோயியானியின் இத்தாலியப் படம் ஒன்றை ஜேர்மன் மொழியில் பார்த்திருக்கிறேன். எண்ணெய்க் கிணறு ஒன்று வெடித்து தீப்பற்ற, அதை அணைக்க வெடிமருந்து கொண்டு வரும் Wages of Fear என்ற எக்சோசிஸ்ட் பட இயக்குனர் William Friedkin இயக்கிய படத்தைப் பார்த்து மெய் சிலிர்த்திருக்கிறேன். ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்குப்போகும் ஒரு குடும்பஸ்தனைக் காரணம் தெரியாமல் கொல்லத் துரத்தும் ஒரு ட்ரக் பற்றிய ஸரீவன் ஸ்பீல்பேர்க்கின் Duel என்ற அற்புதமான படம். இறக்கப் போகும் தன்னை புதைக்க ஆள் தேடிச் செல்லும் ஒரு பணக்காரனைப் பற்றிச் சொல்லும் அப்பாஸ் கியாராஸ்டமியின் Cannes படவிழாவில் பரிசு பெற்ற Taste of Cherry படம்.

    திரைப்படத்திற்கு தமிழ்ப்படங்கள் மாதிரி, திருப்பங்களுடன் கூடிய கதை தேவையில்லை.

    கதை சொல்லல் தான் தேவை.

    அந்தக் கதை சொல்லலைச் சொல்ல, இயக்குனருக்கு பலதரப்பட்ட விடயங்கள் பற்றி தௌpவான அறிவு வேண்டும். ஒளிப்பதிவு, இசை, தொகுப்பு என்ற usual suspects ஐ விட, Sound design, Costume design, Art direction என்றெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் அவை பற்றித் தெரிந்த நிபுணர்களை வேலைக்கு வைத்திருந்தாலும் அவை பற்றிய அடிப்படை அறிவு இருந்தால் தான், அந்தத் துறைகள் கதை சொல்லலுக்கு கொடுக்கும் possibilities பற்றி தெரியும். அதற்குத் தகுந்தாற்போல கதை சொல்லலைச் செழுமைப்படுத்தி, அவர்களின் திறமைகளை முழுமையாக வெளிக்கொணர முடியும்.

    பலருக்குத் தெரிந்திருக்குமோ தெரியாது. திரைப்படத்தின் கலரிலேயே கதை சொல்லல் இருக்கிறது. Apocalypse Now படம் ஒரு பச்சை look அடிக்கும். வியட்னாம் வயல்களின் பச்சைத் தன்மையோடு ஒன்றித்துப் போகும் கலர் அது. மைக்கேல் ஒந்தாச்சி எழுதிய The English Patient, Lawrence of Arabia ஒரு மண்ணிற கலர் அடிக்கும். பாலைவனங்களைச் சூழந்தபடியால். Crouching Tiger, Hidden Dragon நீலக் கலர் அடிக்கும். இரவுகளிலும் குளிர்காலங்களிலும் காட்சி அதிகமாக நடப்பதால்.

    இதற்கு எல்லாம் Timer, colorist என்று படம் கழுவும் ஆய்வுகூடங்களில் வேலைக்கு ஆட்கள் இருப்பார்கள். இப்போது Final Cut Pro போன்ற மென்பொருள்களில் அதைச் செய்யலாம். படம் முழுவதும் ஒரே மாதிரியான ஒரு வண்ணத்தை consistent ஆக maintain பண்ணுவார்கள். Crouching Tiger, Hidden Dragon படத்திற்கு Ang Lee க்கு ஒஸ்கார் விருது கொடுத்த போது, எங்கள் ஆய்வுகூடத்தில் வேலை செய்த Timer, கோவாவைச் சேர்ந்த இந்தியரான லெஸ்லிக்கு நன்றி சொன்னார். படம் முழுவதும் தொடர்ச்சியாக ஒரே வண்ணத்தை வைத்திருக்கவும், அதன் மூலமாக ஒரு mood create பண்ணுவதற்காகவும் இந்த வண்ணத் தொடர்ச்சி உதவுகிறது. இதெல்லாம் தெரிந்து கொண்டால் கதை சொல்வதற்கு அது மிகவும் உதவியாக இருக்கும்.

    சினிமா என்பது கதை பற்றியது அல்ல. கதை சொல்லுதல் பற்றியதே. பாட்டி வடை சுட்ட கதையைக் கூட, ஒரு எழுத்தாளன் தன்னுடைய கதை சொல்லும் திறமையால் சுவாரஷ்யமாக்குவது போல!

    காதலும் இப்படித் தான். கண்ணாலும், பின்னால் அலைவதாலும், body language இனாலும் கதை சொல்லலாம். வசனங்களே இல்லாமல்!

    அது தான் கதை சொல்லல்.

    படத்தின் தரத்தையும் அதன் மூலம் வெற்றியையும் அறுதியாக முடிவு செய்வது இந்தக் கதை சொல்லுதல் தான்.

    அடுத்தது சந்தைப்படுத்தல்.

    மேல்நாடுகளில் எந்தப் பொருளைச் சந்தைப்படுத்தினாலும் அதற்கான முதல் கேள்வி... Demographics... இந்தப் பொருள் யாரை நோக்கிச் சந்தைப்படுத்தப்படுகிறது என்பது. எப்படிச் சந்தைப்படுத்தப் போகிறோம் என்பதற்கு முன்னால் யாருக்கு என்ற கேள்வி. இதைப்பற்றி பெரிய Market Research எல்லாம் செய்து தான் பொருள் சந்தைக்கு வரும்.அதை முடிவு செய்த பின்னால் தான் சந்தைப்படுத்தல் ஆரம்பமாகும்.

    என்னைக் கேட்டால், படத்தை தயாரிக்க முன்பே எங்களுடைய படத்தின் ரசிகர்கள் யார் என்ற கேள்வியைத் தான் கேட்க வேண்டும் என்று சொல்வேன். அதன் பின்பு தான் நோக்கமும், கதை சொல்லல், சந்தைப்படுத்தல் எல்லாமே.

    காதல் கூட அப்படித் தானே. சும்மா கிடைக்கிற வரைக்கும் லாபம் என்று காதல் பண்ண முடியுமா? யாரைக் காதலிக்கப் போகிறோம் என்பதில் தௌpவாக இருக்க வேண்டும் இல்லையா?

    இது தான் இன்றைக்கு நான் முக்கியமாகச் சொல்ல வந்த விடயம். இதற்குத் தான் இவ்வளவு ஆலாபனையும்.

    இப்போது தான் என்னுடைய உரை உண்மையில் ஆரம்பமாகிறது.

    இதைக் கூடச் சொல்ல வேண்டும் என்று தூண்டிய ஒரு கணம் ஒன்று இருக்கிறது. A gun and a ring படத்தில் தகப்பனாக வருபவர் சொல்லுவார் 'நான் பூசாவில இருந்தனான்'. நான் பக்கத்தில் இருந்த மூர்த்திக்குச் சொன்னேன்... 'ஒரு படம் எடுப்பது என்றால் பின்பக்கத்தில் இருந்து வர வேண்டும், எங்கள் ரசிகர்கள் யார் என்பதை வரையறை செய்வதில் இருந்து'.

    பூசா முகாம் என்பது எங்களைப் பொறுத்தவரையில் ஒரு முகாம் இல்லை. ஒரு symbol. அதைச் சொன்னதும் போராட்டத்தில் ஈடுபட்டதாகப் பிடிபட்டு சித்திரை வதை செய்யப்பட்டவர்களின் நினைவு வரும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அது எங்களுக்கு மட்டும் தான் வரும். மற்றவர்களுக்கு வராது. எங்களுடைய பிரச்சனை தான் உலகத்தின் பிரச்சனை என்று நினைப்பது எங்கள் பழக்கம். ஆனால் யூதர்களை இன அழிப்புக்கு கொண்டு போய் வைத்திருந்த Auschwitz முகாம் பற்றி வெறும் குறிப்புடனேயே அந்த உணர்வைக் கொண்டு வர முடியும். காரணம் அந்த முகாமின் கொடூரம் எல்லாருக்கும் தெரியும். பூசா முகாமைப் பற்றி எங்களை விட யாருக்குத் தெரியும்?

    எனவே, இந்தப் படம் எந்த ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது என்ற கேள்வி எனக்கு வந்தது. பிற இனத்தவர்களுக்காகவோ, திரைப்பட விழாக்களுக்கோ எடுப்பதாக இருந்தால், அதன் கொடூரத்தைக் காட்ட வேண்டும். வெறும் வசனம் அதன் தாற்பரியத்தை வெளிக் கொண்டு வர முடியாது.

    ஆகவே படம் முழுவதும் எனக்கு இருந்த இருந்த பிரச்சனை இது யாருக்குரிய படம் என்ற கேள்வி தான்.

    இதனால் தான் எங்களுடைய ரசிகர்கள் யார் என்பதை வரையறை செய்வதில் இருந்து தான் படத் தயாரிப்பு ஆரம்பிக்க வேண்டும்.

    எங்களுடைய புலன் பெயர்ந்த ஈழத்தமிழருக்கானதா? தமிழகத் தமிழருக்கானதா? சம்பந்தமேயில்லாத அன்னியருக்கானதா? திரைப்பட விழா நடுவர்களுக்கானதா? இவற்றை வரையறை செய்யாமல் படம் எடுக்கத் தொடங்கினால் தோல்வியில் முடியும்.

    எல்லாரையும் திருப்திப்படுத்தி படம் எடுக்க முடியாது.

    படம் எடுக்கிற எல்லாருக்குமே தங்கள் படம் திரைப்பட விழாக்களில் பரிசு பெற்று, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வசூலில் சாதனை படைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கலாம். ஆனால் அது பெரும்பாலும் சாத்தியமாவதில்லை. Critically acclaimed box office hit என்பது சிறிய முதலீட்டுப் படங்களுக்கு சாத்தியமில்லை. ஒஸ்கார் விருது கூட, பெருமளவு பணச்செலவில் ஸ்டூடியோக்கள் அக்கடமி உறுப்பினர்களுக்குப் படப் பிரதிகளை அனுப்பி சந்தைப்படுத்தித் தான் சாத்தியமாகிறது. காரணம், விருது கிடைத்ததும் அதை வைத்து படத்தை ஓட்டிப் பணத்தைப் பெற முடியும் என்பதால்.

    சில நேரங்களில் நாங்கள் எதிர்பார்க்காமல் சில படங்கள் வசூலை அள்ளிக் கொண்டு போகலாம். அவற்றை Sleeper Hits என்பார்கள்.. நீண்ட நாட்களுக்கு முன் வந்த Gods must be crazy, Blair Witch Project, My Big Fat Greek Wedding போன்ற படங்கள் பெரும் வசூல் பெற்றன. அவையெல்லாம் பெரிய ஸ்டூடியோக்களில் கண்ணில் பட்டதால் வெற்றி பெற்றவை. அவை அதிஷ்டம் எனச் சொல்லக் கூடிய அபூர்வமானவை.

    ஹொலிவூட் படங்கள் எல்லாமே தங்கள் ரசிகர்கள் யார் என்பதைத் தீர்மானித்து தயாரித்துச் சந்தைப்படுத்தப்படுபவை. டிஸ்னியின் படங்கள் குழந்தைகளுக்கு என்றால், Fast and Furious தமிழ்ப் பட ரசிகர்களைப் போல பௌதீக விதிகள் பற்றிக் கவலைப்படாத வேறு ஒரு கூட்டத்திற்கு. வூடி அலனின் படங்கள் வேறு ரசிகர்களுக்கு.

    ஆகவே படம் விமர்சகளாலும் பாராட்டப்பட வேண்டும், பரிசுகள் பெற வேண்டும், வசூலை அள்ளிக் கொட்ட வேண்டும் என்று ஒரே கல்லில் பல மாங்காய் விழுத்தும் யோசனையோடு படத்தை ஆரம்பிப்பது படம் தோல்வியடைவதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்கும்.

    தங்கள் ரசிகர்கள் யார் என்பதில் தௌpவாக இருந்தால் எல்லாமே இலகுவாக இருக்கும்.

    முதலாவது, உங்கள் ரசிகர்களின் எண்ணிக்கை உங்கள் முதலீட்டுக்கான லாபத்தைத் தரக் கூடிய அளவுக்கு, அதிகமான தொகையா என்பதை அறிந்து கொள்வதன் மூலம், ROI எனப்படும் Return On Investment கேள்விக்கான பதில் மூலம், இந்தப் படத்தை எடுக்க முடியுமா? அல்லது வேண்டுமா? என்ற கேள்விக்கான பதில் கிடைக்கும். ரசிகர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து முதலீடு செய்யும் பணத்தை நிர்ணயிக்கலாம்.

    சரி, நீங்களும் தமிழர்கள். நானும் தமிழன். இவ்வளவு நேரமும் என்னுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த உங்களுக்கு தானாகவே ஒரு கேள்வி வந்திருக்கும்...

    உவ்வளவு கனக்கத் தெரிஞ்ச மாதிரிக் கதைக்கிறீர். நீர் ஏன் இன்னமும் ஒரு படம் எடுக்கேலை?

    நான் படம் எடுக்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு காரணத்தைத் தான் சொல்ல வேண்டும் என்றால், இந்தக் காரணத்தைத் தான் சொல்வேன். நான் செலவிடும் பணத்தைத் திருப்பி எடுப்பது எப்படி? என்ற கேள்விக்கு எனக்கு இன்னமும் நியாயமான பதில் கிடைக்கவில்லை.

    தொகையான பணத்தைச் செலவிட்டு படம் எடுக்கிறார்கள் என்று நண்பர் மூர்த்தி சொல்லும்போது, நான் கேட்கும் கேள்வி... இந்தப் பணத்தை எப்படித் திருப்பி எடுக்கப் போகிறார்கள்?

    அது பிறிமியருக்கு நூறு டொலருக்கு ஆயிரம் டிக்கட் வித்தால், ஒரு லட்சம் டொலர் வருகுது என்ற கணக்கு என்பார் மூர்த்தி. ஆனால், கனடியத் திரையுலகு பற்றித் தெரிந்த கிருஷ்ணா அண்ணனிடம் கேட்டால், அவர் சொல்லும் கதைகள் வேறாக இருக்கும்.

    மற்றும்படி மற்றவர்கள் என்னை மதிக்க வேண்டும் என்றோ, என்னுடைய திறமையை நிருபிக்க வேண்டும் என்றோ படம் எடுக்க வேண்டிய தேவை எனக்கில்லை. பெரும் முதலீட்டுடன் செய்யப்படும் தொழிலுக்கு, அந்தத் தொழிலில் போடப்படும் முதலைத் திருப்பி எடுப்பதற்கான சரியான வழிகள் இல்லாமல் ஆசைக்குப் படம் எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

    இரண்டாவது, நோக்கத்தை வரையறை செய்வது சுலபம்.

    படம் திரைப்பட விழாவில் பரிசு பெற்று, விமர்சகர்களின் அங்கீகாரத்தைப் பெறுவது தான் நோக்கம் என்றால், மற்ற விசிலடி ரசிகர்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. கவுண்டமணி செந்தில் ரக நகைச்சுவை என்றால், விமர்சகர்கள் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. எல்லாத் திரைப்பட விழாக்களும் ஒரே அளவுகோல் கொண்டவை அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கான், பேர்ளின், வெனிஸ் திரைப்பட விழாக்கள், ஐரோப்பிய திரைப்பட விழாக்கள் கலையம்சம் கூடிய படங்களைத் தெரிவு செய்வன. Sundance திரைப்பட விழா Independent திரைப்படங்களைக் கௌரவிப்பது. ஒஸ்கார் விருது வர்த்தக ரீதியாக வெற்றி பெற்ற படங்களைக் கௌரவிப்பது என வேறுவேறு அளவு கோல்களைக் கொண்டிருக்கின்றன.

    இன்ன திரைப்பட விழாவில் இவ்வாறான ஒரு படத்தை எடுத்து பரிசு பெற வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருக்கலாம். அல்லது இன்ன ரசிகர்களுக்கு இன்ன வடிவத்தில் அவர்களுக்கு வழமையில் பிடிக்கும் படத்தை எடுத்து அதிகம் பேரைப் பார்க்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருக்கலாம்.

    இதன் மூலம் திரைப்பட விழாவுக்குப் படத்தை எடுத்து விட்டு, தமிழர்கள் தமிழர்களை ஆதரிக்கிறார்கள் இல்லை என்றோ, சாதாரண ரசிகர்களுக்கு படத்தை எடுத்து விட்டு, விமர்சகர்கள் ஆதரிக்கிறார்கள் இல்லை என்றோ புலம்புவதை தவிர்க்கலாம்.

    மூன்றாவது, எங்களை நாங்களே அறிந்து கொள்ளுதல் சுலபமாக இருக்கும்.

    திரைப்பட விழாப் பரிசு நோக்கம் என்றால் அந்தத் திரைப்பட விழாவுக்கு தெரிவு செய்யப்படும் படங்கள், அதில் பரிசு பெறும் படங்களை பார்த்து அந்த வட்டங்களில் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை கற்றுக் கொள்ளலாம். வர்த்தக ரீதியான வெற்றி தான் நோக்கம் என்றால், வர்த்தக ரீதியில் வெற்றியடையும் படங்கள் கொண்டிருக்கும் பொதுமைகள் என்ன என்பதை கற்றுக் கொள்ளலாம். தோல்வியடையும் படங்களில் இருக்கின்ற அம்சங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    உங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கக் கூடிய படத்தைக் கொடுப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்வது இலகுவானதாக இருக்கும்.

    நான்காவது, ரசிகர்களை முழுமையாக வரையறுத்தால் அவர்களுக்கு கதை சொல்வது மிகவும் இலகுவானது.

    அந்த ரசிகர்களுக்கான மொழியை தெரிவு செய்ய அது வழிவகுக்கும். விமர்சகர்களுக்கும் புரியும் சினிமா மொழியும், விசிலடி ரசிகர்களுக்குப் புரியும் சினிமா மொழியும் வேறுவேறானவை. மொழி என்பது literally and figuratively எல்லா அர்த்தங்களிலும் தான். யாழ்ப்பாணத் தமிழில் படம் எடுத்து விட்டு தமிழ்நாட்டில் திரையிட முடியாது. தமிழ்ப் படத்திற்கு தமிழில் சப் டைட்டில் வைக்க வேண்டி வரும். எம்.ஜி.ஆர் படம் முதல் கதாநாயகர்களை முன்னிறுத்தும் படங்கள் எல்லாமே அவற்றுக்கான ரசிகர்களை வரையறுத்தவை.

    எம்.ஜி.ஆர் படம் என்று நினைக்கிறேன். ஒரு காட்சி இந்திய பாகிஸ்தான் எல்லையில் நடைபெறுகிறது. பின்னுக்கு தமிழில் 'இந்திய பாகிஸ்தான் எல்லை' என்று போர்ட் போட்டிருக்கும். காரணம், எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு புரியக் கூடிய கதை சொல்லும் மொழி அதுதான். நாங்கள் இதற்குப் போய் கிண்டல் பண்ண முடியாது.

    புலன் பெயர்ந்த ரசிகர்களின் தரத்துக்கு கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை தான் சிரிப்பூட்டக் கூடியது. புத்திசாலித்தனமான நகைச்சுவை அவர்களுக்கு விளங்காமல் போகக் கூடும்.

    ஐந்தாவது, ரசிகர்களை வரையறுக்கும்போது அவர்களுக்கு சந்தைப்படுத்துவது இலகுவானது.

    எங்கே விளம்பரம் செய்ய வேண்டும் என்பது கூட அதனால் தீர்மானிக்கப்படும். கனடிய ரசிகர்களுக்கு ஆங்கிலப் படத்தை எடுத்து விட்டு தமிழ்ப் பேப்பரில் விளம்பரம் போட்டு பயனில்லை.

    மெய்யப்பச் செட்டியார் ஒருதடவை ஒரு படம் ஏதோ ஒரு பகுதியில் ஓடவில்லை என்றதும் ஹெலிகொப்டரில் பட நோட்டீஸ்களை வீச வைத்து வெற்றி பெறச் செய்தாராம். அதை இங்கே செய்ய முயற்சிக்க வேண்டாம். பொலிஸ் வழக்கு வைக்கும். நோட்டீஸ் பட்டுப் பெருங்காய் என்று ஆளுக்காள் நட்டஈடு கோரி வழக்குத் தொடர்வார்கள்.

    எல்லாவற்றுக்கும் மேலாக மன உளைச்சலை இது குறைக்கும்.

    ஊரில் நாடக பாணிக் கதையை வீடியோவில் எடுத்து விட்டு, பத்திரிகையில் நாங்கள் விமர்சனம் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. புத்திஜீவிகள் எங்களைப் புகழ வேண்டும் என்று படம் எடுத்து விட்டு சாதாரண ரசிகர்கள் படம் பார்க்க வரவில்லை என்று மனம் புழுங்குவதும் தவறு.

    இந்தியாவில் வர்த்தக சினிமா வளர்ந்த அதே இடத்தில் தான் சத்தியஜித் ரே, ஷியாம் பெனகல், மிருணாள் சென் போன்றோர் படம் எடுத்து உலகப் புகழ் பெற்றார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆட்சி புரிந்த காலத்தில் தான் பாலச்சந்தர் படம் எடுத்தார். இரண்டினதும் ரசிகர்கள் வேறு. அதைப் போட்டுக் குழப்பப் புறப்பட்டால் தோல்வி தான் மிஞ்சும்.

    'கலைப்படத்தை கமர்ஷியலாக எடுத்திருக்கிறேன்' என்று பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த இயக்குனர்கள் தங்கள் முதல் படத்தைச் சொல்கிற மாதிரி படம் எடுத்து வெற்றி பெற முடியாது.

    எழுத்தாளர் சுஜாதா சங்கரின் படங்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார். சங்கருக்குச் சில விடயங்களைச் சொல்லிப் புரிய முடியவைக்க முடியவில்லை என்று நாசூக்காக நோகாமல் எழுதியிருந்தார். அப்போது சங்கர் சொல்வாராம்... நீங்களெல்லாம் என் ஓடியன்ஸ் இல்லை சார் என்று.

    ஆனால் சுஜாதாவைக் குறை சொல்லிப் பயனில்லை. தர்க்கரீதியான குழப்பங்கள் வரும்போது, புத்திசாலிக்கு அது முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் சங்கர் படம் எடுப்பது சாதாரண ரசிகர்களுக்கு, சுஜாதாவின் பாராட்டுப் பெறுவதற்காக இல்லை.

    A gun and a ring படத்தில் பழைய இயக்கத்தில் இருந்த ஒருவர் பற்றிய பாத்திரம் வருகிறது. விமர்சனங்களில் எல்லாம், எல்லா இயக்கங்களும் தமிழர்களைச் சித்திரவதை செய்திருக்கின்றன, இந்தப் பாத்திரம் புலிகள் அல்லாத ஒரு இயக்கத்தைக் குற்றம் சாட்டுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதை இயக்குனரின் Creative Licence என்று விடலாம். புலிகளைக் குற்றம் சாட்டுவதன் மூலம் புலன் பெயர்ந்த தமிழர்களின் கோபத்திற்கு ஆளாகி, சனங்கள் படம் பார்க்க வராமல் போகலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் 'துரோகக் கும்பல் விடுதலைக்கு எதிராக நடத்திய கொடுமையைக் காட்டியிருக்கிறார்கள்' என்று கொடி தூக்கிய ஒரு லட்சம் பேரும் திரண்டு வந்து படம் பார்க்கவில்லை. மாற்றுக்கருத்தாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் தான் இந்தப் படத்தைப் பார்த்து கருத்து எழுதியிருந்தார்கள்.

    எனவே உங்கள் ரசிகர்கள் யார் என்பதை வரையறை செய்யும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. விமர்சகர்களையும் ரசிகர்களையும் திருப்திப்படுத்தப் போய் இரண்டும் கெட்டான் நிலைக்குப் போகக் கூடாது.

    எனவே, காதல் மாதிரி, எங்கள் ரசிகர் யார் என்பதைத் துல்லியமாக வரையறுப்பதன் மூலம் தான் அவர்களை வெற்றி கொள்வதற்கான உபாயங்களையும் வியூகங்களையும் வகுக்க முடியும்.

    ஆகவே, வெற்றிப்படம் என்பது என்ன?

    என்னுடைய பதில்... தான் தேர்ந்தெடுத்த ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் படம் வெற்றிப்படம். அது வசூலைக் குவிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.

    அந்த தேர்ந்தெடுத்த ரசிகர்களைத் திருப்திப்படுத்த முடியாமல் போகும்போது, அது தோல்விப்படம். எம்.ஜி.ஆருக்கு நவரத்தினம் தோல்விப்படம். ரஜனிக்கு சமீபத்திய படங்கள் தோல்விப்படங்கள்.

    திரைப்பட விழாக்களில் பரிசு பெறும் படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் அவை வெற்றிப்படங்கள் தான். காரணம், தாங்கள் தேர்ந்தெடுத்த ரசிகர்களை வெற்றி கொண்டிருக்கின்றன.

    ஆகவே, இந்தப் படிமுறைகளைக் கைக் கொண்டால், நீங்கள் சினிமாவில் மட்டுமல்ல, காதலிலும் வெற்றி பெறலாம்.

    ஆனால், இன்னொரு சோத்துக்கடை ஸ்காபரோவில் தேவை இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

    சரி, கடைசியாக என்னுடைய பின்குறிப்புக்கு வருகிறேன்...

    Save

    Postad



    You must be logged in to post a comment Login