Recent Comments

    மன்னா! ஓலை வந்திருக்கிறது!

    (அச்சக நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதால், அதற்கு விளம்பரமாக துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டால், அவை கவனிப்பாரற்று கடைகளில் குப்பைக்கூடைக்குள் செல்லலாம் என்பதால், ஒரு தாளில் தமிழர்களுக்குப் பயன்படக் கூடிய தகவல்களுடன் மாத இதழ் ஒன்றை வெளியிடும் எண்ணம் தோன்றியது. பழக்கதோசத்தில் அரசியல் என்றெல்லாம் போய் சண்டை பிடித்துக் கொண்டிருக்காமல், கனடாவில் வாழ்ந்தாலும் 'தமிழீழத்தின்' மூலைமுடுக்குச் செய்திகளை அறிந்து கொண்டிருக்கும் அளவுக்கு, கனடிய வாழ்வுக்குத் தேவையான விடயங்களை அறியாமல் இருக்கும் தமிழ் மகாசனங்களுக்குப் பயன்படக்கூடிய விடயங்களை மட்டும் வெளியிட்டால், பயன்பாடு மட்டுமன்றி, விளம்பரமாகவும் பயன்படும் என்ற நோக்கத்தில் இந்த இதழ் தயாரானது. இருந்தாலும், வெறும் தகவல்கள் சுவாரஷ்யமாக இருக்காது என்பதால் அதில் பிரசுரிப்பதற்காக எழுதப்பட்ட ஆக்கங்களில் இதுவும் ஒன்று. ஏன் அது பிரசுரிக்கப்படவில்லை என்பது 'நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை' என்ற பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலாகத் தான் 'சுமை' கதை பிரசுரமானது. (அதற்கும் பின்னால் இன்னொரு கதை உண்டு. அதுவும் பின்னால்...) அந்த இதழுக்குக் கிடைத்த வரவேற்பும் வெற்றியும் பெருமை கொள்ள வைப்பன. வெறும் தகவல்களைக் கூட, வாசிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சுவாரஷ்யமான முறையில் எழுத முடியும் என்ற நம்பிக்கை நிறைய உண்டு. அதில் வந்த குறும்புகளை வாசித்தவர்கள் காணும்போதெல்லாம் நினைவு கூரும் போது பெருமையாகத் தான் இருக்கிறது. அந்த இதழ், நான் தோற்றுவிடக்கூடாது என்பதில் அக்கறை கொண்ட அன்பு நண்பர்களின் உதவியுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது. எங்களாலேயே தணிக்கை செய்யப்பட்ட அந்த ஆக்கங்களில் ஒன்று தாயகம் வாசகர்களுக்காக...) thayagam featured-Olai

    மன்னா! ஓலை வந்திருக்கிறது!

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

    'மன்னா! ஓலை வந்திருக்கிறது!' சரித்திர நாடகங்களில் தப்பாமல் வரும் வசனம். நிலக்கீழ் மாளிகையின் அந்தப்புரத்தில், ஊருலகத்தில் என்ன நடக்கிறது என்ற கவலையில்லாமல், ஆசைநாயகிகள் சூழ சதா இன்பம் துய்க்கும் பாதாள பைரவி மன்னனைத் தூக்கம் கலைக்கும், பாவாடையும் தலைப்பாகையும் கட்டிய மந்திரிகள். (சமூக நாடகம் என்றால், 'அத்தான், வந்து விட்டீர்களா?'. அத்தான் என்ன புலி வேட்டைக்கா போனான்? போயிருந்தால் அடுக்குமொழி வசனம்... புலியே பேசும்! 'அத்தான்!? ஹா... ஹா... அவன் இன்றோடு செத்தான்!') 'மன்னா, அந்நிய நாட்டுப் படைகள் எங்கள் அந்தப்புரத்தை முற்றுகையிட்டு விட்டன'. சுற்றி வளைத்த மரகதநாட்டு மன்னன் மகேந்திரபூபதி, ஓலை அனுப்பியிருப்பான். 'வெள்ளைக் கொடியோடு வெளியில் வா' 'விடை கொடு ஜக்கம்மா' என்று ஜக்கம்மாவைத் தேடினால், 'பொல்லாத சொப்பனம்' கண்ட ஜக்கம்மாள் எப்போதோ இளவரசிகளுடன் போய் சரணடைந்திருப்பாள். பிறகென்ன, வெளியில் சொல்ல முடியாத வெட்கக் கேடு அரங்கேறும். வழமை போல், வரலாற்றாசிரியர்கள் சுரங்கப் பாதைக்குள்ளால் தப்பியதாய் சரித்திரம் எழுதித் தொலைப்பார்கள். அல்லது சாண்டில்யன் கடல்புறா றீல் விடுவார்... கடலில் நீர்மூழ்கி யவனத்திற்குப் பறந்து சென்றதாக! சரியான புறாப்'பொறுக்கி'! ஓலைகளும் சுவடிகளும் சரித்திரகாலம் முதல் சரித்திர நாடக காலம் வரைக்கும் நம்மைப் போட்டு உலைக்கின்றன. வள்ளுவரின் புத்தக வெளியீட்டு விழாவில் படம் எடுத்த மாதிரி, 'இக்குருவி' யாரோ பத்மாசன வள்ளுவர் கையில் சுவடி வைத்த படத்தை ஏற்றித் தொலைத்து விட்டார்கள்... அந்தப் படத்தைப் போட்டு, பாம் பிரிண்டும் தன் அறிமுக அட்டையில் 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்' என்று விளம்பியிருக்கிறது. அதாவது திறமை வாய்ந்த தங்களிடமே அச்சுவேலைகளைக் கையளிக்கும்படி! பனையோலையில் எழுத்தாணியால் எழுதி, தவறு விடும்போது தங்கள் தலையில் குத்தி சீழ் வடிந்த மனச்சாட்சி மிகு சீத்தலைச் சாத்தனார்களின் காலம் போய், சொல்லும் பொய்களின் துன்பம் தாங்காமல் நாங்களே, மண்டையில் போட முடியுமா என்று எண்ண வைக்கும் சீழ்த்தலைச் 'சுத்தனார்கள்' இங்கே அதிகம். ஓலைகள் இங்கே மலிவானதால் வந்த வினை இது! லெமூரியாக் கண்டம் கடல் கொண்டதாய் கயிறு திரிக்கும் தமிழன் சங்கச் சுவடிகளைக் கடல் கொண்ட காதையை இன்றும் சொல்லி மூக்கால் அழுவான். ஓலைச் சுவடியைச் செல்லரித்த கதை சொல்லி முடிவதற்குள், செல்லடித்த கதைகளால், சுவடே இல்லாமல், தமிழினத்தையே (நந்திக்)'கடல் கொண்டது'. சுவடிகளில் கடைசியில் மிஞ்சியது கிளி ஜோஸ்யனின் ஏடுகளும், 'எதிர்காலத்தை துல்லியமாய் கூறும்' காண்ட ஜோதிடர்களின் சுவடிகளும் தான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன்பே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் காண்டம் எழுதப்பட்டதாகச் சொல்லி, கியூறியஸிடமே எழுத்தெழுத்தாய் பெயர் கேட்கப் போய் திணறி, அரை குறையாய் உள்ளே கேட்டிருந்த மற்றவர் எழுதிய ஓலையைக் காட்டி, காண்டம் வாசித்தார்கள் ரொறன்ரோவில். சுவடுதல் என்பதற்கு திருடுதல் என்றும் பொருள் என்றால், இவர்கள் வைத்திருந்தவையும் சுவடிகளே. பனையோலை சுவடிக்குப் பயன்பட்ட காலம் போய், வேலி அடைக்கவும், காவோலையாய் எரிக்கவும், வடலிக்குள் வைத்து அறுக்கப்படும் ஆட்டிறைச்சிப் பங்குகளைக் கொண்டு செல்லவும், கள்ளுக் குடிக்கும் பிழாவாகவும் பயன்பட்டு, கடைசியில் பங்கரோடு, பனையும் பாழ்! திமிர்த் தனமாய் நிமிர்ந்து நின்ற யாழ்ப்பாணப் பனை மரமும் முதுகு முறிந்து... வேண்டாம்! முத்திரை குத்தியே ஈனப் பிழைப்பு நடத்தும் அயோக்கியக் கூட்டம் கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக் காத்திருக்கிறது. ஏடு தொடக்க வந்திருக்கிறது சுவடி! இது வரை காலமும் 'அண்ணை, பேப்பர் வந்திட்டுதோ?' என கடைக்காரர்களின் உயிரை வாங்கியவர்கள் இனிமேலாவது, பாதாள பைரவிகள் மாதிரி, வீரவசனம் பேசலாம்! 'அண்ணா, ஓலை வந்திருக்கிறதோ?' king6 நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை யை இந்த இணைப்பில் வாசிக்கலாம். அதற்கு முன்னால் கீழுள்ள பட்டன்களை அழுத்தி இந்த ஓலையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே!

    Postad



    You must be logged in to post a comment Login