Recent Comments

    பழையன கழித்து புதியன புகுத்துக!

    போர்த்துக் கட்டி மூடி உறங்கிய காலம் போய், ஜன்னல்களைத் திறந்து காற்று வர ஆரம்பித்திருக்கிறது. வீட்டைத் துப்புரவு செய்து, எறியாமல் வைத்திருக்கும் பொருட்களை என்ன செய்வது என்று யோசிப்பீர்கள். கட்டிலுக்கு அடியிலும் கராஜினுள்ளும் தள்ளிய பொருட்களை வெளியே எடுத்து என்ன செய்வது? பல வீடுகளில் கராஜிற்குள் காரைத் தவிர, மற்றப் பொருட்களே நிறைந்திருக்கும். கராஜிற்குள் நடக்கவே இடமில்லாமல் கார் வெளியில் குளிரில் நடுங்கி, வெயிலில் காய்ந்து... பழைய உடைகள், கணனிகள், நைந்து போன படுக்கைகள், உடைந்த வீட்டுப் பொருட்கள் எல்லாம் எறிய மனமில்லாமல், பிறகு உதவும், திருத்திப் பாவிக்கலாம்,  ஆருக்காவது கொடுக்கலாம் என்று கராஜினுள் தஞ்சம் புகுந்திருக்கும். பல்லைக் கடித்துக் கொண்டு எறிய வேண்டியவற்றை எறியுங்கள். உடைந்த பல பொருட்களைத் திருத்துவதற்கான பணத்திற்கு புதியன வாங்கலாம். பழைய கணனிகள், மின்கருவிகள் போன்ற மின்னியல், இலத்திரனியல் பொருட்களை குப்பை வைக்கும் நாளில் வெளியே வையுங்கள். அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றிற்கு தொலைபேசியில் 311 இலக்கத்தில் நகரசயை அழைத்து விலாசத்தைக் கொடுத்தால், வெளியே வைக்க வேண்டிய நாளைக் கூறுவார்கள். அவர்கள் அதை எடுத்து மீள்பயன்படுத்துவார்கள். ஆனால், பழைய இரும்பு பொறுக்குவோர் இரவோடிரவாக அவற்றை கவர்ந்து செல்லவும் கூடும். பழைய ஆடைகளில் கிழிந்தவற்றை வீசி எறியுங்கள். அதையெல்லாம் தர்மம் செய்து புண்ணியம் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். (ஊருக்கு அனுப்பக் கேட்க, எறியாமல் வைத்த நைந்து போன உள்ளாடைகளைத் தந்தவர்களும் உண்டு!) வாகனங்களிலும் இயந்திரங்களிலும் மாற்றிய எண்ணெய், டியூப் லைட்டுகள், மின்கலங்கள் போன்றவற்றை அருகில் நடைபெறும் சுற்றாடல் நாளில் கொண்டு போய் கொடுங்கள். இவற்றைக் குப்பைக்குள் போடாதீர்கள். பின்னால் பயன்படும் என்று வைத்த பொருட்களை கடந்த இரண்டு வருடங்களுக்குள் பாவித்திருக்கா விட்டால், அவை இடத்தை நிரப்புகின்றன என்றே அர்த்தம். பயன்படுத்தக் கூடியவற்றை இரட்சணிய சேனை, குட்வில் போன்ற தர்மஸ்தாபனங்களுக்கு அன்பளிப்புச் செய்யுங்கள். புண்ணியம் கட்டாயமாய் கிடைக்கும். ஊருக்கு கஷ்டப்பட்ட சனத்திற்கு அனுப்புவோம் என்று குளிர்கால ஜக்கட்டுகளை வைத்திருக்காதீர்கள். கால நிலை மாற்றத்தால் நம்ம ஊரில் பனி பெய்ய ஆயிரம் வருடங்கள் ஆவது எடுக்கும். பயன்படுத்த முடியாத இதையெல்லாம் ஊருக்கு கட்டி அனுப்பி கனடா வாழ் தமிழினத்தின் மானத்தை வாங்காதீர்கள்.

    Postad



    You must be logged in to post a comment Login