Recent Comments

    திருப்பங்கள்

    பூங்கோதை

    விடியலின் வெளிச்சம் மெதுவாய்க் கண்ணைத் தடவிய போதே, பழகியவர்கள் அனைவருக்குமே பாசத்தைக் கொட்டும் ஒரு தோழியின் வீட்டு நிகழ்வொன்றிற்கு, இன்று மாலை போக வேண்டும் என்ற நினைவு ஓடி வந்து கை காட்டியது.

     தனிப்பட்ட கொண்டாட்டங்கள், நிகழ்வுகளுக்கு அதிகம் போகாத ஒரு நிலைப்பாட்டில் இருப்பதால், இங்கு மாத்திரம் ஏன் போக வேண்டும் என்ற சிந்தனை எழுந்தது. கூடவே அவள் நான் அந்தரித்துப் போன வேளைகளில் என் சுகதுக்கங்களைக் காது கொடுத்துக் கேட்டதும், ஆதரவாக இருந்ததும் மறக்கக் கூடாதது என்பதை மனது அடித்துச் சொன்னது.

    வார விடுமுறையாதலால் காலையில் ஐந்து மணி அலாரத்தில் அலறித் துடிக்காமல், சாகவாசமாய் எழுந்தேன். வீட்டைச் சுத்தப்படுத்தி விட்டு,வீட்டுக்கழிவுகளைக் கொட்டுவதற்காக வெளியே குப்பைத் தொட்டிக்கு வந்த போது, ஒரு வினோதமான விசும்பல் ஒலி கேட்டது. அருகில் பெரியதோர் வைத்தியசாலை இருப்பதால், நோயாளர்கள், வைத்தியர்கள், தாதிமார், ஏனைய வைத்தியத்துறை சார்ந்த பணியாளர்கள் அனைவரும் இதே தெருவில் வாகனங்களை நிறுத்தி விட்டு நடப்பது அல்லது பிரதான வீதிக்கு பஸ்ஸில் வந்து, பின் அங்கிருந்து இங்கு நடந்து வருவது வழமையான விடயம் தான்.

    சத்தம் வந்த திசையில் பார்த்தேன். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண், எந்நேரத்திலும் குழந்தை வெளியே விழுந்து விடலாம் போன்று இருந்த நிறைந்த வயிறை ஒரு கையால் தாங்கியபடி, மறு கையால் அழுததால் சிந்திய மூக்கைத் துடைத்தபடி, புஸ் புஸ்ஸென மூச்சு விட்டபடி, நடப்பதற்கு சிரமத்துடன், என்னைப் பார்த்ததும் புன்னகைக்க முயன்று தோற்றுப் போயிருந்தாள். மேற்கொண்டு நடப்பாள் போலத் தோன்றவில்லை.

    “அழாதை, ஏதாவது உதவி தேவையோ?” மெதுவாய்க் கேட்டேன், பலமாகக் கேட்டால், குழந்தை வெளியே விழுந்து விடலாம் என்ற நிலைமை.

    அனேகமான ஆங்கிலேயர்கள் இலகுவில், புதிதாகக் காண்பவர்களிடத்தில், அவசரமான விடயம் என்றாலும் தம்மனதில் இருப்பதை இலகுவில் வெளியிட மாட்டார்கள்.

    அவளும் அதைக் கடைப்பிடிக்க முயன்றாலும் அவளது உணர்வுகள் அதனை ஏப்பம் விட்டிருந்ததில், “ என்னோட வர வேண்டிய என்ர புருசன்  கடைசி நேரத்தில தான் வர மாட்டன் எண்டிட்டான், எனக்கு இண்டைக்கும் கட்டாயமாகச் செய்ய வேண்டிய  ஒரு பரிசோதனை உண்டு!”

    “சரி, அவை அப்பிடித்தான் இருப்பினம், விளங்குது, கவலை தான், அதுக்காக எல்லாம் அழாதை, இனித்தான் நீ தைரியமாய் இருக்க வேணும், நல்ல பிள்ளை எல்லோ?” சொல்லி முடிக்க முன்னரே அழுகையை நிறுத்தி, கன்னம் குழி விழச் சிரித்தாள்.

    “உனக்கு எப்ப (Due date) குழந்தை பிறக்கப் போகுது?”  மீண்டும் மெல்லிய குரலில்க் கேட்டேன்.

    “ அது போன வெள்ளிக்கிழமையே பிறந்திருக்க வேணும்!” குண்டைத் தூக்கிப் போட்டு விட்டு, மீண்டும் புஸ் புஸ்செண்டு மூச்சை விட்டபடி, என்னைப் பார்க்க, நான் அடுத்த ஐந்து நிமிட நடையில் வைத்தியசாலை வாசல் வர முன் குழந்தை வந்து விழுந்தால்  என்ன செய்வது என்ற பயத்தை மறைத்து, “சரி, வா, நானும் சேர்ந்து நடந்து வாறன்." என அவளுக்கு சமாதானம் கூறினேன்.

    என் வீட்டு வாசற்கதவைப் பூட்டித் திறப்பை எடுத்த படி அவளுடன் திகிலோடு நடக்க ஆரம்பித்தேன். இன்னும் மூன்றே நிமிடங்களில் வைத்தியசாலையின் வாசலை அடைந்து விடுவோம், அதுவரை அவள் குட்டி போடாமல் இருக்க வேண்டும் என்ற கவலையில் அவளை விடப் பலமாய் எனக்கு மூச்சு இரைத்தது. ஏதாவது பேசினால் 

    நல்லாயிருக்கும் போலிருக்க, மெதுவாய்க் கேட்டேன்.

    "உனக்குப் பெயர் என்ன?"

    "ஏமி" , புன்னகைத்தாள்.

    "நீ புன்னகைக்கும் போது வடிவாய் இருக்கிறாய்!" என்றேன்.  நாணத்துடன் நன்றி சொன்னாள்.

    "இது உனக்கு முதலாவது குழந்தையோ?" 

    "இல்லை, இரண்டாவது பிரசவம். முதலாவது குழந்தை எனக்கு அம்புலன்ஸில தான் பிறந்தவன்!" இரண்டாவது குண்டையும் தூக்கிப் போட்டு விட்டு புசு புசுவென மூச்சை விட்டபடி, மிகச் சாதாரண விடயம் ஒன்றைச் சொன்னது போல் நடந்து வந்து கொண்டிருந்தாள். 

    "இண்டைக்கு உனக்கு நல்லாய்த் தான் விடிஞ்சிருக்கு!" மனது பேசிக்கொண்டது. இதோ இந்தத் திருப்பம் வந்து விட்டால் அது வைத்தியசாலை ஒற்றையடிப் பாதை, அதற்கு அருகாமையில்  அநேகமாக அவசரப் பிரிவின் பணியாளர்கள், வாகனச் சாரதிகள் தமது வேலை இடைவேளைகளில்  வந்து நிற்பார்கள்.

    இதோ திருப்பம் வந்து விட்டது , திருப்பத்தில் கைப்பிடிகள் நீளமாகப் பொறுத்தப்பட்டிருக்க ஏமி அதைப் பற்றிப் பிடித்த அதே வினாடி,

     " எனக்கு வோட்டர் பாக் உடைஞ்சிட்டுது போல இருக்கு!"

    என்று  தன் இறுதிக் குண்டைத் தூக்கிப் போட்டு விட்டு, அந்தச் சந்தர்ப்பத்துக்கு சற்றும் பொருத்தமில்லாது " பார், என்ற மனுசன் என்னோட வராமல் வீட்டில நித்திரை கொள்ளுறான்!" என்றாள். 

    வெளியே தமது இடைவேளையில் புகைத்தபடி நின்ற இரு தாதிமார்கள் நிலைமை உணர்ந்து ஓடி வந்து  ஏமியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள்.


    அப்பாடி ஏதோ நல்லபடி பெற்று விடட்டும் என்று யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.

     “ அடி ஆத்தாடி, ஒரு மனசொண்டு இறெக்கை கட்டி பறக்குது சரி தானா…” பாடியபடியே குளியலறையில் தலையில் கொட்டிய நீரில் பரவசமானேன்.

    இருபது வினாடி கூடக் கடந்திருக்காது,
    “அடி அம்மாடி ஒரு அலை வந்து மனசில அடிக்குது சரி தானா..” பாடி முடிக்க முன்பே,
    வென்னீர் கொதிகலன் ( boiler) ஏதோ ஒரு தொழில் நுட்பம் சார்ந்த பிரச்சனையால் பாதி மயக்கத்திற்குப் போய், இறந்து போக முன், என்னைப் பனிக்கட்டிகள் போன்ற குளிர் நீரைத் தலையில்க் கொட்டி ’தலையோடு ஸ்நானம் பண்ணும் இளவரசியாரே’ என்றது.

    நாடி, நரம்பெல்லாம் அதிர்ச்சியோடு விழித்துக் கொள்ள, ஸ்நானத்தை ஒரு வழியாக முடித்து,  சிரித்த படியே வெளியே வந்த என்னை அம்முக்குட்டி கவலையோடு பார்த்து, வாலாட்டியது.

    அந்த வென்னீர் கொதிகலனை திருத்தும் இடத்திற்கு அது குறித்து அறிவித்து, இதோ வந்து கொண்டிருக்கிறோம் என்ற ரீதியில் பேசியவரை நம்பித்தான் ஆக வேண்டியிருந்தது. அதைப் பரிசோதித்து ஆவன செய்வார் என்று ஆறு மணி நேரம் காலையிலிருந்து எங்கும் போகாமல், பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க, நம்பியிருந்த பொறியிலாளர் தொலைபேசினார், “நான் ஏற்கனெவே செய்து கொண்டிருக்கிற  வேலை எதிர்பாராவிதமாக, பெரிய பூதமாகிப் போச்சு, இங்க இருந்து அங்க வந்து சேரவே இரவாகிப் போகும், காலையில, விடிவிடியென விடிய முதல், ஓடோடி வந்து பார்க்கப் போறது உங்கட வீட்டு வேலை தான்!”

    “ சரி!” கடுப்பானேன் அமைதியாய்ப் போவது தவிர வேறு வழியில்லை. மாலை நான்கு மணியாகியிருந்தது.

    தோழி வீட்டு,  நிகழ்விற்குப் போக வேண்டியிருந்தது ஞாபகம் வர, அதற்காவது போகலாம் என யோசனை வந்தது. ஆயத்தமாகி, வெளியே வந்தால், என்னுடைய சின்ன லக்‌ஷிமின் ஒரு சக்கரம் காற்றுப் போயிருந்தது. 

    கடந்த வாரமும் அவள் இதே போல ஒன்றும் நடக்காதது போல் தலை குனிந்து நின்றதால், புதிதாய் அவளுக்கு டயர் மாற்றியிருந்தேன். சரி, இன்று எனக்கு அமோகமான நாள் போலும் என்று மீண்டும்  நினைத்தபடியே, அவளது சக்கரத்திற்குக் காற்றைத் தந்து, தற்காலிகமாக உயிர் கொடுத்து, அதற்கிடையில் தொலைபேசி, நேரம் ஒழுங்கு பண்ணி வாகனங்களை உயிர்ப்பிக்கும் நிலையம் நோக்கி என்னுடைய லக்‌ஷ்மியை ஓட்டிப் போனேன். இதோ இந்தத் திருப்பம் வரையில் அவள் சக்கரம்  காற்றுப் போகாமல் இருந்து விட்டால்ப் போதும் என்று மனது அடித்துக் கொண்டது.

    லக்‌ஷிமின் இந்தப் பிரச்சனையைத் தான் கடந்த வாரம் கண்டு பிடிக்கவில்லை என்பதாய் மெக்கானிக் தன் தலையைப் பலமாக சொறிந்தபடி, லக்‌ஷ்மியின் சக்கரத்தைப் பக்குவமாய்க் கழற்றித் தண்ணீரில் எறிந்தார். ஊரில் நாங்கள் அடிக்கடி போய் நிற்கும் சைக்கிள் கடை ஞாபகம் வந்தது.

    சக்கரத்தின் ரிம்மிற்கும் டயருக்கும் இடையே மிக மிருதுவாக சுவாசக் காற்று வெளியேறிக் கொண்டிருந்ததை, ஒரு குழந்தைக்கு நான் பாடசாலையில்க் கற்பிப்பதைப் போல் காண்பித்து, “ நல்லாய் உத்துப் பார், இது இப்பிடி வாறதுக்கு, இந்த ரிம்மை உரஞ்சித் தேய்த்து, நேராக்கிச் சீராக்கித் தான் திரும்பக் காத்துப் போட்டு நிரப்ப வேணும். இதை ஸ்லோ பங்சர் (slow puncture) எண்டு சொல்லுவம். அதுக்கும் சரி வராட்டி, புதுசாய் நாலு ரிம்மும் மாத்த வேணும், எதுக்கும் பயப்பிடாதை, இந்த வேலையோட ரிம் சரி வந்திடும்!” உறுதியளித்தார்.

    எனக்கு ஏதாவது புரிந்ததா என்று, தனது ரொமேனிய மொழி வாடையடித்த ஆங்கிலத்தில்க் கேட்டார். நான் பலமாய்த் தலையை ஆட்டி நன்றி தெரிவித்த போது, மிக உற்சாகமாய், “ நல்ல பிள்ளை, எனக்கு இந்த முறை காசும் வேண்டாம், இப்பிடியே காரை எடுத்துக் கொண்டு போ பார்க்கலாம்,” என்று வழியனுப்பிய போது பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று சொன்னது போலத் தோன்றியது.

    லக்‌ஷ்மி என்னை நடு வீதியில் கை விடாமல் இப்பிடி பாடசாலை வாசலிலும் வீட்டு வாசலிலும் மட்டும் கை விடுவதையிட்டு அவளுக்கும் நன்றி சொல்லி விட்டு தோழி வீடு நோக்கி சவாரியைத் தொடர்ந்தேன்!

    நேரம் ஆறு மணியைத் தாண்டியிருந்தது, இது ஒரு நீண்ட நெடுஞ்சாலைப் பயணம். குறைந்தது ஒரு மணி நேரமாவது தேவைப்படும்.  தோழி எப்படியும் ஆறு மணிக்கு முன்னதாக வந்துவிடு என்று அன்புக்கு கட்டளை வேறு போட்டிருந்தாள்.  பதட்டப்பட்டு ஆகப்போவது எதுவுமில்லை,  காலையில்ப் பாட முடியாத ' அடி ஆத்தாடி...' பாட்டைத் தட்டிக் கேட்டபடி அமைதியாய்  லக்‌ஷிமியை ஓட்டிப் போனேன். 

    சில பொழுதுகளில் எதிர்பாரா விதமாகப்  பல விடயங்கள் ஒரே நேரத்தில் சம்பவித்து, எம்மைத்  துயரத்தில் தோய்த்தெடுக்கும்.  அந்நேரங்களில் பல்லைக் கடித்துக் கொண்டே. அதைக் கடந்து விட்டோமேயானால் அதன் பின் இன்னுமொருமுறை அத்துயரம் வரும் வரை சிரித்துக் கொண்டிருக்கலாம் என்பது புரிந்து தான் இருந்தது.  

    இதோ லக்‌ஷிமியை இந்த வீதியின்  திருப்பத்தில் ஓட விட்டால் தோழி வீடு வந்து விடும்.

    நேர காலத்தோடு வரவில்லை எனத் தோழி திட்டப் போகிறாளே என உதறலோடு உள்ளே போன எனக்கு, அங்கு வந்திருந்த ஒரு புளுகுத் தம்பதியினரைக் கண்டதும் சிரிப்புத் தாங்கவில்லை. தோழியை தமது அதி மேதாவித் தனத்தால் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்கள், அவள் சப்த நாடியும் ஒடுங்கிப் போய், வீட்டின் மூலையில்ப் பரிதாபமாய் நின்றிருந்தாள்.  .

    அவள் அவர்களிடமிருந்து தப்பியோடும் நிலைப்பாட்டில் என்னைப் பார்த்து, " வா, வா, நீ அவ்வளவு தூரத்திலயிருந்து வந்ததே பெரிய விசயம்!" என்றபடி எனக்கருகாமையில் வரவும்,  அந்தப்  புளுகுப் பெண்மணி தன் பணயக் கைதியை தப்பியோட விட்ட ஏமாற்றத்துடன், தன் கணவர் எடுத்து வந்து தந்த தேனீருடன் வசதியாகக் கதிரையில் சாய்ந்து உட் கார்ந்து கொண்டார். 

    என்னைக் கண்டதும், " நீங்கள் எந்தப் பக்கத்தால இண்டைக்குக்  கார் ஓடி வந்தனீங்கள்?"     வினாவினார்.  வந்த பாதையை சொல்வதற்கு முன்பாகவே, "அந்த மக்டொனாடல்சுக்குப் (McDonalds) பக்கத்தில வாற திருப்பத்தில திருப்பினால் நேர இங்க கொண்டு வந்து விட்டிருக்கும், அப்பா அப்பிடி தான் ஓடி வந்தவர்!" தன்னை ஏற்றி இறக்கிக் கொண்டிருக்கும் அந்த அப்பாவியாயிருக்கும் கணவரை - அப்பாவைப் பெருமிதமாகப் பார்த்துக் கொண்டார். 

    நாடு முழுக்க மக்டொனல்ட்ஸ் இருக்க, இவவுக்குத் தெரிந்த அந்தத் திருப்பம் எந்தத்  திருப்பமாக இருக்கும் என்ற நோக்குடன் அந்த அப்பாவைப் பார்த்தேன். 

    அவரோ அது எதுவும் தனது  காதில் விழாதது போல் தன் அடுத்த அரசியல் கருத்துக் கணிப்பை தன்னைச் சுற்றி உள்ள அப்பாவிப் பொது மக்களுக்கு உரத்துச் சொல்லத் தொடங்கியிருந்தார்.

    "ஸ்ரீலங்காவைப் பற்றி இனி ஒருத்தரும் கவலைப்படத் தேவையில்லை, நாடு கடந்த தமிழீழத்தின்ர பாராளுமன்றத்தில எங்களுக்கு 400 பில்லியன் டொலர்ஸ் இருக்கு, நாங்கள் தான் ஸ்ரீலங்காவை வாங்கப் போறம், வாங்கினாப் பிறகு பாருங்கோ, நாங்கள் அந்த மாதிரி ஒரு திருப்பதைக் கொண்டு வருவம்!" மிகத் திடமாகக் கூறத் தொடங்கியிருந்தார்.

    இன்று ஒரே நாளில் எனக்குத்தான் எத்தனை திருப்பங்கள், நல்லதும் கெட்டதுமாய்  என்று மிகக் குதூகலமாக உணர்ந்தேன்.   

    Postad



    You must be logged in to post a comment Login