Recent Comments

    நன்றாக குப்பை கொட்டுங்கள்

    சூரியனைக் கண்ட பனியாக, பனிக்கட்டிகள் உருகி, வசந்தகாலக் கோலங்கள் ஆரம்பித்து விட்டன. இத்தனை நாளாய் பூப்பறிக்கக் காவல் கிடக்கும் பூந்தோட்டக் காவல்காரர்கள் மரக்கறித் தோட்டத்தைக் கொத்த ஆரம்பிக்கலாம். வெறுமனே மண்ணை வெட்டிப் புரட்டாமல், பசளையிடுவது நன்று. அதற்காக, இந்த 'பெரும்பெட்டிக்' கடைகளில் பைகளில் விற்பனையாகும் பசளைகள், மண்ணை அநியாயமாய் விலை கொடுத்து வாங்காமல், இலவசமாய் கிடைக்கும் உக்கிய குப்பையை தோட்டத்தில் கொட்டலாம். ஒரு சில சதங்கள் சேமிக்க பல மைல் கார் ஓடுவோர், பல டொலர்கள் சேமிக்க வழி இதோ... ரொறன்ரோ மாநகராட்சி வாராந்தம் சேகரிக்கும் இலை குழைகளை உக்க விட்டு, எருவாக்கி, வரி செலுத்தும் பிரஜைகளுக்கு இலவசமாய் வழங்குகிறது. ஆயிரக்கணக்கில் வரி செலுத்துகிறோமே, ஓசியில் கிடைப்பதைச் சும்மா விடுவானேன் என்று வண்டி வண்டியாய் அள்ளி வந்து கொட்டுங்கள். (வரைமுறைகளின்படி ஒரு கனமீட்டர் அளவு ஒரு தடவை மட்டுமே! பல வாரங்கள் போயும் அள்ளலாம்) சித்திரை முதல் வாரத்திலிருந்து ஐப்பசி முதல் வாரம் வரைக்கும் சனிக்கிழமைகளில் காலை ஏழு மணி முதல் மதியம் 12 வரைக்கும் பின்வரும் நான்கு இடங்களிலும் நீங்கள் உங்கள் வாகனம் நிறைய உக்கிய குப்பை அள்ளலாம். எற்றோபிக்கோவில் 120 Disco Road at Carlingview Drive ஸ்காபரோவில் 3350 Victoria Park Avenue between Finch Ave. and McNicoll Ave. 1 Transfer Place Markham Rd, north of Sheppard East மசூதிக்குப் பின்புறமாய்... கார்டினர் எக்பிரஸ்வேயின் கிழக்கு முடிவிடத்தில் 400 Commissioner Street south of Lake Shore Boulevard East, இராணுவ நடவடிக்கை போல தகுந்த ஆயத்தங்களுடன் செல்லுங்கள். அள்ளுவதற்கு கனரக ஆயுதம்... Shovel. கையுறைகள்... முடிந்தால் சகதிக்கான சப்பாத்துக்கள்... காரில் தூசி படலாம் மட்டுமல்ல... இந்தக் குப்பைகளின் வெப்பநிலை அதிகமாய் இருக்கும். வெறுங்கை வெந்து விடலாம்! தூக்கி வைக்கும்போது நாரி முறியாமல், உதவிக்கு ஆள். கொள்கலங்கள். வெறும் கறுப்புக் குப்பைப் பைகள் பாரம் தாங்கா. கிழிந்து விடும். எனவே, முன்பு குப்பை வைத்த நீலப் பெட்டிகள், பச்சைப் பெட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள்.கடதாசிப் பெட்டிகளாயின் உள்ளே பிளாஸ்டிக் பைகளை வையுங்கள். வெயில் ஏறி வெப்பநிலை கூட, இந்தக் குப்பைகள் பெரும் நாற்றமடிக்கக் கூடும். எனவே, குளிர் விடுபட முன்னால் வேகமாய் சென்று அள்ளுங்கள். அல்லது கொள்கலங்களை நன்றாக மூடிக் காரில் ஏற்றுங்கள். இல்லையேல் காரில் பயணம் செய்யும் மற்ற வீட்டுக்கார உறுப்பினர்களிடம் திட்டு வாங்க நேரிடலாம். நாற்றம் சில வாரங்களுக்குப் போகாது. வாங்கிய புதிய காரில் நாறிய குப்பை ஏற்றப் போய், இப்போது நாலைந்து வருடங்களின் பின்னும் அடியேன் பெருமை இலங்கை வரைக்கும் போய் சிரிப்புக்கு இடமாகியது உண்டு. பரவிய குப்பையின் நாற்றத்தால் அயல்வீட்டுக்காரர் மூக்கைச் சுழிக்கலாம். அவருக்கும் ஓசியில் கிடைக்கும் இரகசியத்தைக் காதில் போட்டு வையுங்கள். நாற, நாற அவரும் அள்ளிக் கொண்டு வந்து கொட்டுவார். விக்டோரியா தின வார இறுதிக்கு நெருக்கமான நாட்களில் அடித்து விலத்த முடியாத திருவிழாச் சனக் கூட்டம், மண்வெட்டியும் கையுமாய், ஆயிரம் கார் பவனி மாதிரி, வரிசையாக காத்து நிற்கும். அதைத் தவிருங்கள். மக்கள் வெள்ளம் மற்ற நாட்களில் வடிந்து போயிருக்கும். ஆள் அரவம் இல்லாமல் அமைதியாக அள்ளலாம். அவ்வளவு தூரம் போக முடியாவிட்டால், உங்கள் வீட்டுக்கு அருகே நகரசபை உறுப்பினர்கள் நடாத்தும் சுற்றாடல் நாளிலும் அள்ளலாம். ஆனால் ஓசிக்குப்பை அள்ள அலையும் (நம்மைப் போலவே!) பல்லின மலையூர் மம்பட்டியான்களுடன் முண்டியடிக்க வேண்டி வரலாம். அள்ளிக் கொட்டிய பசளை நிறைந்த மண்ணில், பயிர் நாட்டுங்கள். குஷ்வு சைஸில் பூசணிக்காய் என்ன, நமிதா சைஸில் குண்டுக் கத்தரிக்காயே கிடைக்கும்!

    Postad



    You must be logged in to post a comment Login