Recent Comments

    சென் பிளைஸ் வீதி…

    st-plies

    க.கலாமோகன்

    சென் பிளைஸ் வீதி நான் அதனது ஒரு குப்பைத் தொட்டியின் அருகில்… இலங்கையில் பிறந்தபோதும் இன்றும் எனக்கு என்னை ஓர் இலங்கையனாகத் தெரியவில்லை எவன் நான்? நிறைய நிறங்கள் எனக்குள் நானோ பிரான்சில் பிரென்சுக்காரனா நான்? அதுவும் எனக்குத் தெரியாது. சென் பிளைஸ் வீதியில் குட்டித் தொப்பிகளுடன் யூதர்கள் நடக்கின்றனர். இவர்களைப் பாதுகாக்க பிரான்சுப் பொலிசுகளும் மக்களைப் பாதுகாக்க இந்த வோல்டயர் நாட்டில் பொலிசுகள் இல்லையா? குட்டித் தொப்பிகளுடன் நடக்கும் யூதர்கள் தம்மை யூதர்கள் என நினைக்கின்றார்களா? குட்டித் தொப்பிகள் என்முன் சிரித்தன. சென் பிளைஸ் வீதியில் சில கறுப்பிகள் பொரித்த இறைச்சிகளைத் தட்டுகளில் மூடியபடி… எனது நாக்கில் ஈரம் கசிக்கின்றது அவள்கள் தம்மைக் கறுப்பிகள் எனச் சொல்வார்களா? ஏன் இந்தக் கேள்விகள் எனக்குள்? நான் கருவாக இருந்தபோது எனது அம்மாவின் வயிறு கேள்விகளால் ஊதியதா? சிறிய வீதிகளிலும் பெரிய வீதிகளிலும் ஊதப்பட்ட பந்தாக வாழ்வு… ஆம்! நான் ஓர் பந்தின் புத்திரன் எங்கும் கேள்விகள் என் முன் சென் பிளைஸ் வீதியின் பார்மஸிக்கு முன்னால் ஓர் வெள்ளை மனிதன்... அவன் அருகில் வெறுமையான மதுப் போத்தல்கள் அவனது வாயைப் பிடித்திருப்பது இன்னொரு போத்தல் அவன் தன்னை வெள்ளை என்பானா? சென் பிளைஸ் சதுக்கத்தில் ஓர் கறுப்புக் கிழவி அமைதியுடன் என்னை அவதானித்தபடி சிரிப்பு அவளது முகத்தில் இல்லை நிறையச் சிந்தனை முத்திரைகள் அவளை அன்புடன் முத்தமிட விருப்பம் அவள் போல் நானும் அமைதியாகுகின்றேன் சென் பிளைஸ் வீதிகளில் நான் வெள்ளைக் குழந்தைகளை அதிகம் கண்டதில்லை நிறையச் சிறிதான கறுப்புக் குழந்தைகள் அவர்களுக்குப் பெற்றோர்கள் உள்ளனரா? நான் எப்போதும் கேட்பதுண்டு சென் பிளைஸ் வீதியின் பெரிய கட்டிடம் முன் கறுப்புச் சிறுவர்களும் வெள்ளையான அராபியச் சிறுவர்களும் போதையின் உச்சிகளுக்குள் இவர்களுக்குப் பள்ளிக்கூடங்கள் தெரியுமா? இந்தச் சிறுவர்களும் குழந்தைகளும் தம்மைக் கறுப்பர் என்றும் அராபியர் என்றும் சொல்வார்களா? சென் பிளைஸ் வீதியில் பச்சை நிறத்தைக் கக்கும் மரங்கள் உள்ளன பூக்கள் இல்லாத பூ மரங்கள் சில முட்டாக்குப் போட்ட சில பெண்கள் மௌனமான உரைகளுடன் வாங்குகளில் இந்தப் பெண்களை நான் விரும்புகின்றேன் இவர்கள் எனது சகோதரிகள் என்பது இவர்களுக்குத் தெரியுமா? மௌனமாக நான் இவர்களைக் கவனிப்பேன் என்னை இவர்கள் கவனிக்கின்றார்களா? சென் பிளைஸ் வீதியில் ஓர் துருக்கிய bar உள்ளது கடையின் முதலாளி துருக்கியரா கூர்டியரா என்பது எனக்குத் தெரியாது முதலாளியின் மனைவி மிகவும் கவர்ச்சியானவள் நான் அவளைப் பார்ப்பதுண்டு அவள் என்னைப் பார்ப்பதில்லை அவள் தரும் கோப்பியின் கசப்பு எனக்குள் சுவையைத் தருவதில்லை அந்த bar இல் ஓர் அராபியன் சேவகனாக... அவனும் அவளைப் பார்ப்பதுண்டு ஆம்! பல வருடங்களாக... தனக்குத் திருமணம் என்று அவன் சொன்ன பின் இப்போது அவளைப் பார்ப்பதில்லை அவள் எனக்குள் வெறியைத் தந்தாள் இதனைச் சொல்வது தவறா? சென் பிளைஸ் வீதியில் நிறைய மாடிக் கட்டிடங்கள் பல கதவுகள் திறபட்டபடி… முகங்கள் தெரிவது அரிது ஓர் வெள்ளைப் பெண்ணின் முகத்தை ஒருதடவை கண்டேன் பின் மூடப்பட்டிருப்பது ஜன்னல் ஒவ்வொரு வீதிகளுக்குள்ளும் நிறைய உலகங்கள் நிறையக் கதைகள் சென் பிளைஸ் வீதியில் இப்போது மாலை நேரம் சில அராபியப் பெண்கள் இப்போதும் வாங்குகளில் கறுப்புப் பெண்கள் நடந்தபடி சில சிறுவர்கள் சயிக்கிள்களுடன் ஓர் மோட்டாரின் சத்தம் ஓர் அராபியக் கிழவி என் அருகில் வந்து இருக்கின்றாள் “உங்களிடம் தீ உள்ளதா?” அவளது உதட்டில் சிகரெட் “நான் புகைப்பதை நிறுத்திவிட்டேன்” “நன்றி" எனும் சொல்லுடன் போகின்றாள் நான் அவளைப் பார்க்கின்றேன் அவளது நடை எனது அம்மாவின் நடையா? (நன்றி: புதிய கோடாங்கி மாத இதழ்-தமிழ்நாடு) p1230535_paris_xx_rue_saint-blaise_rwk Save Save Save

    Postad



    You must be logged in to post a comment Login