Recent Comments

    குளிரடிக்குதே! கிட்ட வராதே! கிட்ட வராதே!

    நோய் பீடிக்காமல் ஈரப்பதனை அதிகரியுங்கள்!

    thayagam featured-humidifier குளிர்காலம் சூழ்ந்தபடி இருக்கிறது. காற்றுக் கறுப்பு நுழையாதபடிக்கு கதவுகள், ஜன்னல்களை இறுக மூடி, குளிருக்குப் போர்த்துக் கட்டிக் கொண்டு உறங்குவீர்கள். இதற்குள் ஊருலா வரும் தடிமன், காய்ச்சல் தொற்றிக் கொள்ளும். ஒரு ரவுண்டு வீட்டில் உள்ளோர் எல்லோரையும் வாட்டி எடுத்த பின்னால் தான் வைரஸ் வாபஸ் பெறும்.

    இதென்னடா, குளிருக்குப் போர்த்துக் கட்டிக் கொண்டு படுக்கலாம் என்றால், இப்போது காய்ச்சல் சூட்டுக்கு போர்த்துக் கட்டிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே என்று அனுங்கிக் கொண்டிப்பீர்கள்.

    சொல்லி வைத்தது போல, குளிர்காலத்தில் காய்ச்சல் பரவித் தொற்றுவதற்குக் காரணம் என்ன? காற்றுக் கறுப்பு அண்டாமல் இருக்க நீங்கள் செய்யும் ஸ்டண்டுகள் தான்.

    முழுமையாய் மூடிய வீட்டுக்குள், நீங்கள் வெளியே போகும் தருணங்களில் கதவு திறக்கும்போது தவிர்ந்த, மற்ற நேரங்களில் வெளியில் உள்ள காற்று உள்ளே நுழையாது. குளிர்காற்று நுழைந்தால் குளிருமே என்பீர்கள்.

    உண்மை, மூடிய வீட்டுக்குள் காற்றுச் சூடாக்கியையும் உச்சத்தில் விட, உள்ளே உள்ள வளி சூடாகி சுற்றுவட்டம் போடுமே தவிர, காற்றோட்டம் இருக்காது. சூடாகும் வளியில் ஈரப்பதன் குறைந்ததும், சுவாசத்தின் போது உங்கள் தொண்டையும் காய்ந்தே இருக்கும்.

    காய்ந்த தொண்டை, வைரஸ் பல்கிப் பெருகுவதற்குச் சரியான இடம். தொண்டையில் கிருமித் தொற்றில், தொண்டை எரிந்து சிவக்க... வைரஸ் வேலையைக் காட்டும். தடிமன், காய்ச்சல் என ஆளை வாட்ட, ஒரு போர்வை கேட்க, ராத்திரி நேரமடி என்று அன்புத் துணையை அணைக்க முடியாது.

    வளியில் ஈரப்பதன் குறையும்போது, தடிமன், காய்ச்சல் மட்டுமல்ல, தோல் உலர்ந்து போதல், மூக்கில் இரத்தம் வருதல், மூக்கு அடைத்தல், உலர் இருமல், கண் எரிவு என அசெகரியங்கள் ஏற்படும். இதை விட, சுவர் மற்றும் தளபாடங்களில் பெயின்ட் உரிதல், மின்சாரம் தாக்குவது போன்ற பொறி பறத்தல் என்பனவும் ஏற்படலாம்.

    வளியில் ஈரப்பதன் குறைந்தால் என்ன செய்யலாம்? வெளியில் புல்லுக்கு நீர் இறைக்கும் குழாய்களைக் கொண்டு வந்து வீடு பூராகத் தண்ணீர் விசிறும் யோசனை வரலாம். வேண்டாம் வம்பு.

    நீரை ஆவியாக்கி, வளியை ஈரமாக்கும் Humidifier களைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக குழந்தைகள் இருப்பவர்கள் இவற்றை முக்கியமாகப் பயன்படுத்த வேண்டும்.

    இவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று Warm Mist மற்றது Cool Mist. Warm mist அல்லது Steam Humidifier எனப்படுவன நீரைச் சூடாக்கி, மூடுபனி போன்ற ஆவியை வீட்டுக்குள் பரவுகின்றன. தேங்கி நிற்கும் நீரில் பக்ரீறியாக்கள், பங்கஸ்கள் போன்றன வளருவதால், நீர் சூடாக்கப்படும்போது அவை கொல்லப்படுகின்றன. அத்துடன் அந்த நீராவியின் வெப்பமும் அறையைச் சூடாக்கும். ஆனால் சூடான நீர் என்பதால், குழந்தைகள் அவற்றைக் கையாளும் போது சூடுபடும் அபாயம் உண்டு. நீரைச் சூடாக்குவதற்கு மின்பாவனையும் அதிகமாகி செலவு கூடும்.

    Cool mist வகையின, நீரை அதிரவைப்பதன் மூலமோ, நீரின் மேல் காற்றாடி ஒன்றைச் சுற்றுவதன் மூலமோ நீரை ஆவியாக்குகின்றன. ஆனால் நீர் சூடாகாமல் இருப்பதால், பக்டீரியா, பங்கஸ் வளர்ச்சிகள் இருக்கும் ஆபத்து உண்டு.

    தேங்கிய நீரில் கிருமிகள் வளர்ந்து, அவற்றைச் சுவாசிப்பதால் வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே தினசரி நீரை மாற்ற வேண்டும்.

    அத்துடன் நீண்ட காலம் நீர் நிற்கும்போது, கல்சியம் படிவுகள் ஏற்படலாம். அதை வினாகிரி மூலம் அகற்றலாம். சிலவற்றில் ஒவ்வொரு பருவகாலமும் காற்றை வடிகட்டும் வடிகட்டிகளை மாற்ற வேண்டி வரும். சில நேரம் கருவி மலிவாகவும், காற்று வடிகட்டிகள் அதிக விலையாகவும் இருக்கும். அவற்றைக் கவனியுங்கள்.

    இவை எழுப்பும் ஒலியின் அளவையும் அவதானியுங்கள். நித்திரையைக் குழப்பக் கூடிய ஒலியுள்ளவையும் உண்டு.

    இந்தச் சிரமங்கள் இல்லாமல் முழுவீட்டுக்குள் பயன்படக் கூடியதாக உங்கள் குளிர், சூட்டுக் காற்று வரும் பாதாள அறைப் பாதைகளில் உங்கள் வீட்டு நீரிணைப்பைப் பொருத்தி நிரந்தரமாகவும் பயன்படுத்தலாம். இவற்றுக்கும் மாற்ற வேண்டிய காற்று வடிகட்டிகள் உண்டு. ஆனால் முழுவீட்டின் ஈரப்பதனையும் இவை அளவாக வைத்திருக்கும்.

    இவ்வாறாக, மூடிய வீட்டுக்குள் சூடாகும் காற்றுக்கு ஈரப்பதன் சேர்ப்பதன் மூலம், நோய்க்குள்ளாகாமல் இருப்பதுடன், குளிர் போக்கும் போர்வைக்குள், 'குளிரடிக்குதே, கிட்டவா, கிட்டவா' என்று வாழ்க்கைத் துணையை கதகதப்பாய் அணைத்தபடியும் தூங்கலாம். (இப்படியாக உங்க வயித்தெரிச்சலைக் கிளப்புறதே நம்ம பிழைப்பாப் போச்சு!)

    உங்களைப் போலவே உங்கள் உறவுகளும் நண்பர்களும் குளிர்காலத்தில் கதகதப்பாய் அணைத்தபடி தூங்கட்டும் என்ற பெருமனது உங்களுக்கு இருந்தால், கீழேயுள்ள பட்டன்களை அழுத்துவதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

    Save

    Postad



    You must be logged in to post a comment Login