Recent Comments

    ஒண்ணுமே புரியலை ஈழத்திலே! என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது!

    electionwatchசிண்டு முடியப்பன்

    இந்தத் தேர்தலைப் பார்த்ததும் நமக்கு அந்தக் காலத்து அசைவ ஜோக் நினைவுக்கு வருகிறது. (பெண்ணியவாதிகள், தூய்மைவாதிகள் மன்னிக்க!). தங்களுக்குப் பிரசவ வேதனை வராமல், தந்தைமாருக்கே அந்த வேதனை வர வேண்டும் என மாதர் சங்கம் ஒன்று கடவுளிடம் சண்டைக்குப் போய், வரம் கேட்டு, கடவுளும் தொல்லை தாங்காமல் அனுக்கிரகம் அளிக்கப் போக... அந்த மாதர் சங்கத் தலைவிக்கு பிரசவம் நடக்கும் நேரம், வீட்டுக்காரன் பகிடி விட்டுச் சிரித்துக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டுக்காரன் பிரசவ வலியில் துடித்ததாக! (லண்டன் பாலா அண்ணை, நன்றி! உங்க 'தேசத்தின் குரல்' அல்ல. இது அவர் ரேஞ்ச் கடி தான். இருந்தாலும் இது நம் பெரியம்மா மகன்!) தேர்தல் அங்கே நடக்கிறது. அங்கு வாக்களிக்கத் தகுதியுள்ள மக்கள் 'இந்தப் படை போதுமா?' பேரணி, 'மாபெரும் பொதுக்கூட்டங்கள்' போன்ற ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல், கனடிய புலன் பெயர்ந்த தமிழ் மாக்கள் அள்ளுப்பட்ட மாதிரி, சுப்பர் சிங்கர் பாடகர்களைக் கூட வேடிக்கை பார்க்கக் கூடப் போகாமல், தங்கள் பாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புலன் பெயர்ந்தவர்கள் தாங்கள் ஏதோ வாக்களிக்கப் போவது போலவும், தமிழ் மக்களின் தலைவிதியைத் தாங்கள் தான் நிர்ணயிக்கப் போவதாகவும் முகப்புத்தகத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். போதாக்குறைக்கு லண்டன் கோவில், கனடிய சுப்பர் சிங்கர் நிகழ்வுகளில் எல்லாம் வாக்களிக்கும்படி பிரசுரம் வழங்குகிறார்கள். யாழ்ப்பாணத்தில் கூட இவ்வளவு ஆர்வமாய் பிரசுரம் கொடுக்க முடியாதபடிக்கு பொலிஸ் கெடுபிடியாம்! விட்டாலே இங்கேயே தேர்தல் வைத்து, கள்ள வோட்டுப் போட்டே கஜேந்திரகுமார் கூட்டமைப்பை வெல்ல வைக்கக் கூடிய அளவில் தான் புலன் பெயர்ந்து போய் இருக்கிறது போலத் தெரிகிறது. உங்களுக்கு என்னப்பா பிரச்சனை? தேசியத் தலைவர் உங்கள் கையில் போராட்டத்தை ஒப்படைத்தால், நீங்கள் வணங்காமண் கப்பலோட்டிய தமிழர்களாய், மாவிலாற்றில் போய் இறங்கி ஈரூடகப்படை விளையாட்டுக் காட்டியிருக்க வேண்டும். சும்மா புலியின் மிரட்டலுக்குப் பயந்து காசைக் குடுத்து, யாரோ பெற்ற பிள்ளைகளைப் பலி கொடுத்தது போதாதென்று இப்போது 'மாற்றத்திற்கான குரல்' 'கூட்டமைப்பு' என்று எதற்கப்பா இங்கே நின்று குதியங் குத்துகிறீர்கள்? போன தேர்தலுக்கு முந்தின தேர்தலுக்கு இந்த 'மாற்றச்' செம்மல்களான கஜ, ரத, துரக, பதாதிகளுக்கு வால் பிடித்து, கூட்டமைப்பைத் திட்டித் தீர்த்தவர்கள் இப்போது சம்பந்த-சுமந்திர இணக்க அரசியல் பேசுகிறார்கள். போராட்டத்தின் பேரால் சேர்த்த பணத்தைக் கபளீகரம் பண்ணிய கூட்டம் தலைமறைவாக, கோம்பை சூப்பிய கூட்டம் 'அங்க ஆமிக்காரனுக்கு பனங்கொட்டை எறிஞ்சால் தான் இங்க விடுதலையை வைச்சு பிழைப்பு நடக்கும்' என்று கஜேந்திரக் குதிரைகளுக்கு பணம் கட்டுகிறது. கூட்டமைப்புகள் எல்லாமே புலியை வைத்துப் பிழைப்பு நடத்தும் கூட்டம். ஒரிஜினல் புலி அனந்தி, காகிதப் புலி வித்தியாதரன், அந்த காகிதப் புலியின் வாலில் தொங்கிக் கொண்டிருக்கும் 'முன்னாள் (? ஏன் இன்னாள் இல்லையோ?) போராளிகள்' போன்றவர்களை யாரும் கணக்கெடுப்பதாய் தெரியவில்லை. அட, வெங்காயங்களே! தேசியத் தலைவருக்கு காசைக் குடுத்தால் சரி, மிச்சத்தை அவர் கவனிச்சுக் கொள்ளுவார் என்று கொட்டி ஏமாந்தது போதாதென்று, இவர்களுக்கு காசைக் கொடுக்கிறீர்களே! இவர்கள் தாயகம், சமஷ்டி, தேசம் என்றெல்லாம் வார்த்தை ஜாலம் காட்டுவதைத் தவிர, என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று சொன்னதுண்டா? அல்லது குறைந்த பட்சம், அந்த வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் என்ன என்றாவது சொன்னதுண்டா? (சரி, சொன்னாலும் உங்களுக்கு என்ன விளங்கவா போகிறது?) * * * போராட்டத்தை ஏதோ தங்கட காணி வளவு எண்ட நினைப்பில சில புலன் பெயர்ந்ததுகள் திரியுதுகள். புலன் பெயர்ந்த ஒரு கலாநிதி அறிக்கை விட்டிருக்கிறார்... தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்டு, தேசியத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தன் சேனாதி தலைமையிலான த.தே.கூட்டமைப்பு என்னும் தமிழரசுக் கட்சியிடம் அரசியல் போரை ஒப்படைத்த நிலையில்.... ஏதோ தங்கட காணி வளவை உறுதி எழுதிக் குடுக்கிற மாதிரி, போராட்டத்தை அவர் இவருக்கு குடுக்க, இவர் அவருக்கு குடுக்க, அவர் இவயிட்ட கையளிக்க... இதென்ன, அரசாங்கக் காணிக்கு கள்ள உறுதி முடிக்கிற விளையாட்டே! தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் மூலம் ஈழம் காண்பார் என்ற அமிர்தலிங்கத்தை மக்கள் தேர்தலில் நிராகரிக்கவில்லை, மண்டையில் போட்டுத் தான் தேசியத் தலைவர் கைப்பற்றினார்... காணியை அடாத்தாக பிடித்த மாதிரி! பிறகு போகேக்கை, புலன் பெயர்ந்தவரிட்டை கையளித்தவராம்! அதுதான் இவை இங்க சொத்துக்காக குடுமிப்பிடிச் சண்டை நடத்துகினம். மக்கள் பேசாமல் பகிடி விட்டுச் சிரிச்சுக் கொண்டிருக்கினம். இந்தப் பக்கத்து வீட்டுக்காரருக்குத் தான் தீராத வயித்து வலி! * * * தமிழ் அரசியலே எதிரிகளை விட, துரோகிகளை மையப்படுத்தித் தான் நடக்கிறது. முகப்புத்தகச் செம்மல்கள் இப்போதும் 'எதிரிகளை மன்னிக்கலாம், துரோகிகளை மன்னிக்க முடியாது' என்று நித்திரையில் புலம்புகிறார்கள். இவர்கள் துரோகிகள் என்பது சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்காத சுமந்திரனும், கோத்தாவோடு டீல் போட்ட குதிரை கஜேந்திரனும் என்பதில் தான் இந்த துரோகி அரசியல் இலட்சணம் இருக்கிறது. அதிலும் சுமந்திரன் மீது, தமிழினத்தையே இன அழிப்புச் செய்த கோபம்! யார் யாரை துரோகி என்று குற்றம் சாட்டுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. இராமநாதன் காலத்தில் தொடங்கினாலும், தமிழ்த் தேசியம், ஈழ விடுதலைக் கோஷம் போடத் தொடங்கியதில் தான் 'துரோகி அரசியல்' முழுமூச்சாய் வீச்சம் பிடித்தது. துரையப்பா முதல் சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள், புலேந்திரன் முதல் ஐ.தே.க அமைப்பாளர்கள் என்றெல்லாம் போட்டுத் தள்ளி முடிந்த 'துரோகி அரசியலில்' இப்போது சுதந்திரக் கட்சி அங்கஜன் இராமநாதனும் ஐ.தே.கட்சி திருமதி மண்ணெண்ணெயும்... சிரித்துக் கொண்டிருக்க... தமிழ்த் தேசியம் பேசும் சுமந்திரனும் குதிரை கஜேந்திரனுக்கும் தான் வயிற்று வலி! (இந்த பரஸ்பர துரோகி ஒழிப்பில், கிட்டத்தட்ட டக்ளஸ் துரோகியிலிருந்து எதிரியாக அப்கிரேட் பண்ணப்பட்டிருக்கிறார். அவ்வளவுதான்!) * * * இந்தத் துரோகி அரசியலின் தொடர்ச்சி ஒரு சுவாரஷ்யத்தைத் தந்திருக்கிறது. தந்தை செல்வாவையும் குமார் பொன்னம்பலத்தையும் போட்டு வாக்குக் கேட்கும் கஜேந்திரகுமார், தனது பேரன் பொன்னரின் படத்தை தனது பிரசாரப் பிரசுரங்களில் போடாமலேயே வாக்குக் கேட்கிறார். காரணம், அமிரின் ட்ரயல் அட் பார் வழக்கில் ஆஜராகி, கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான பொன்னர், பின்னால் சீரியஸாக கூட்டணி அரசியலில் ஈடுபடாமலேயே மறைந்து போனார். இதெல்லாம் பழங்கதையாகி, தமிழ்த் தேசியத்தின் மனதில் பதிக்கப்பட்ட பொன்னரின் பிம்பம் துரோகிக்குரியதே. பின்னாளில் குமார் புலிச் சார்பு அரசியல் செய்யப் போய், புலன் பெயர்ந்தவர்களின் கனவுக் காதலன் ஆகிய பின்னால், குமாரை வைத்து பிழைத்தால் பயன் கிட்டும் என்ற கணிப்பீடு. பின்னால் வந்த கொம்பு, முன்னால் இருந்த காதை மறைந்த கதை தான் இது! கொம்புக்கு கட்டிய குஞ்சம் எல்லாத்தையுமே ம(றை)றக்குது! (குமாரிடம் சத்தியம் செய்து சேலை வாங்கிய பின் காலை வாரிய கூட்டம் இது என்பது மகனுக்குத் தெரியாமல் இருக்கக் கூடும். ) * * * பொன்னரைப் பேரன் மறந்தாலும், அவரை மறக்காத ஒரு கூட்டம் இல்லாமலும் இல்லை. அது தான் சங்கரியரின் உத்தியோகபூர்வ தமிழர் கூட்டணி! பொன்னர் மட்டுமல்லாமல், தொண்டாவின் படமும் சேர்த்துத் தான்... சங்கரியர் கொழும்பில் நிற்கிறார் அல்லே! இத்தனை முகப்புத்தக விண்ணர்களும், இணையத் தள ஊடகவியலாளர்களும் அப்படி ஒரு கட்சி தேர்தலில் நிற்பதாகவே அலட்டிக் கொள்ளவில்லை. ஏதாவது சுயேச்சைக் குழுவுக்கு அவர்களை விட அதிகம் விளம்பரம் கிடைக்கும் போலிருக்கிறது. தமிழ் மக்களின் மனதில் பதிந்து, புலிகள் கடைசி வரை பிடுங்க முயன்ற உதயசூரியன் சின்னத்தோடு தேர்தலில் நிற்கிறார்கள். யாரும் கணக்கெடுப்பதாகத் தெரியவில்லை. முப்பது வருடங்கள் ஒரு அரசியலில் எத்தனை தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. (இந்த ஆய்வாளர்களும், ஊடகவியலாளர்களும், முகப்புத்தகச் செம்மல்களும் கூட்டணி பற்றி வாய் திறக்காததால், சங்கரியர் இன்னமும் துரோகியா? அல்லது எதிரியாக அப்கிரேட் பண்ணப்பட்டாரா? என்ற விடயத்தை அச்சுக்குப் போகும் வரை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை.) * * * இங்கே எல்லாம் நடப்பது போல, எல்லாக் கட்சித் தலைவர்களையும் கூப்பிட்டு, பகிரங்க விவாதம் ஏன் நடத்துவதில்லை என்ற கேள்வி நமக்கு மண்டையைக் குடைகிறது. ஒருவேளை நமக்கு அந்தப் பாரம்பரியத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அல்லது தலைவர்கள் எல்லாம் சேர்ந்த கூட்டமைப்புகளில் தலைவர்களுக்குத் தலைவரை விவாதத்திற்கு அனுப்புவதில் அடிபிடிகள், கால் வாரல்கள், கழுத்தறுப்புகள், முதுகுக் குத்தல்கள் நடக்கலாம். அல்லது இந்த விவாதத்தை பார்க்க வரும் சில பொதுஜனங்களை விட, மேடையில் இருப்போர் பிரமாண்டமான பேரணியாக இருக்கலாம்! பலே!  தமிழ்த் தேசியம் உங்களை எங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது என்பதில்... பெருமை கொள் ரமிலா! (யாழ்ப்பாணத்தாரை சாப்றா பினான்ஸ் வைத்துச் சுத்திய 'ஊடகப் போராளியும்', மண்ணெண்ணெய் வித்துச் சுத்திய திருமதி மண்ணெண்ணெயும் இன்றைக்கு உங்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் செல்லப் போகின்றார்கள் என்பதற்கும் சேர்த்து!) * * * 77ல் கூட்டணி தங்களை ஏகபிரதிநிதிகளாக்குங்கோ, ஈழம் எடுத்துத் தாறம் என்றார்கள். வாக்குப் போட்டீர்கள். பிறகு ஒருவர் துப்பாக்கியோடு வந்து கேட்டுக் கேள்வி இல்லாமல் ஏகபிரதிநிதியானார். ஈழம் கிடைக்கும் எண்டு மெய்மெய்யாத் தான் நம்பினியள். இப்ப வந்து, சம்பந்தரும், கஜேந்திரனும் தேசம், சமஷ்டி எடுத்துத் தாறம், ஏகபிரதிநிதியாக்குங்கோ எண்டினம். அதை நம்பிறியள். அதுவும் சிங்களவன் தராட்டியும் சர்வதேசத்தையும் இந்தியாவையும் கையுக்கை போட்டு எடுத்துத் தரப் போகினமாம். ஒரு தலைநகரம் தவற விடாமல், லட்சக்கணக்கில நீங்கள் கொடி பிடிச்சு ஒப்பாரி வைச்சும் கேட்காத சர்வதேசம் இவே போய் கேட்டவுடன வாங்கிக் குடுத்திடுமோ? ஈழப்பிரச்சனையிலோ, தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனையிலோ, இவர்களால் ஒரு துரும்பைக் கூட நகர்த்த முடியாது என்பதை இன்னம் விளங்கிக் கொள்ளாத மாங்காய் மடையர்களே! உதை 'பழம் பழுத்தால் வெளவால் வரும்' எண்டு அமிர்தலிங்கம் சொல்லேக்கை வோட்டையும் போட்டு, அவருக்கு உங்கட தேசியத் தலைவர் மண்டையில போட துள்ளியும் குதிச்சு... அதை விட புதிசா உவை என்ன சொல்லுகினம் எண்டு ஒருக்காச் சொல்லுவீங்களோ? அதுசரி, நீங்கள் நினைச்ச நேரம் தூக்கி எறியவும், ஒப்பாரி வைக்கேக்கை ஓடி வரவும், இப்ப சம்பந்தனும் கஜேந்திரனும் கேட்கேக்கை உங்களுக்கு சமஷ்டி, தேசம் வாங்கித் தரவும்... சர்வதேசம் உங்களுக்கு என்ன, மாமனா, மச்சானா? மானம் கெட்டவர்களே!

    Postad



    You must be logged in to post a comment Login