Recent Comments

    வீட்டை அதிக விலைக்கு விற்று இந்திர லோகம் காணுங்கள்.

    thayagam featured-diamondஉற்றார், உறவினர்கள், நண்பர்கள் தங்கள் புதுவீடுகளுக்கு அழைக்கும்போது, அவர்களின் வீட்டைப் பார்த்து விட்டு, 'உவையை விட, பெரிய வீடு வாங்கிக் காட்டுறன்' என்றோ, வீட்டில் பிள்ளைகள் வெளியேறிய பின்னால், 'இந்தப் பெரிய வீட்டைப் பராமரிப்பதே பெரிய வேலை' என்றோ, தற்போதைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் எண்ணம் தோன்றலாம். முகவரைப் பிடித்து, வீட்டை விற்பனைக்காய் பட்டியலிட்டதும், உங்கள் வீட்டை நிபந்தனைகளுடன் (Conditional offer) வாங்கப் போவதாக யாராவது சம்மதிக்கக் கூடும். அவர்களுடைய offer ஐ வாங்கிக் கொண்டதும் விற்பனை முடிவதில்லை. அந்த நிபந்தனைகள் (வீடு inspection, மற்றும் வீட்டுக் கடன் பெறுதல், தங்கள் பழைய வீட்டை விற்றல் போன்றன) பூர்த்தி செய்ய நாள் எடுக்கும். அதற்குள் வேறு யாராவது அதை விடக் கூட விலை தந்து வாங்கப் போகிறோம் என்றால்... வாய் ஊறத் தொடங்கும். அட, அந்தக் காசில, நாச்சியாருக்கு ஒரு வைர அட்டியல் வாங்கி அழகு பார்க்கலாமே என்ற எண்ணமெல்லாம் தோன்றும். ஆனால் ஒருவருக்கு வீடு விற்பதாக ஒப்புதல் அளித்த பின்னால், நினைத்த மாதிரியெல்லாம் மனதை மாற்றிக் கொள்ள முடியாது. அதற்கு வசதியாக அவர்களின் ஒப்புதலைப் பெறும்போது, நீங்களும் சில நிபந்தனைகளைச் சேர்க்கலாம். முதலில் உங்கள் வீட்டை வாங்க முன்வந்து தனது ஒப்புதலைத் தருபவருடன் செய்யும் Agreement of Purchase and Sale ஒப்பந்தத்தில், இவ்வாறாக வேறு யாராது அதிக விலைக்கு வாங்க முன்வந்தால், முதலில் ஒப்புதல் தந்தவருக்கு, இவ்வாறு இன்னொருவர் முன்வந்தததையும், அந்த ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை விட்டு விடவோ, அல்லது பூர்த்தி செய்யவோ (Waive or fulfil the conditions) குறிப்பிட்ட கால அவகாசம் கொடுப்பதாகவும் குறிப்பிடலாம். இந்தக் கால அவகாசத்துக்குள் முதலில் வீட்டை வாங்க ஒப்புதல் தந்தவர், நிபந்தனைகளை விட்டாலோ, பூர்த்தி செய்தாலோ, (Waive or fulfil the conditions), அவர்களுக்கே நீங்கள் அந்த வீட்டை வீட்டை விற்க வேண்டும். அதை விட்டு விடவும், பூர்த்தி செய்யவும் அவர்கள் தவறினால், அதை எழுத்து மூலமாகத் தரும்போது, அவர்களுடன் செய்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டு, புதியவருக்கு அதிக விலைக்கு விற்கலாம். ஆனால் புதியவருடன் ஒப்புதல் ஒப்பந்தம் செய்யும்போது, முதல் செய்தவருடனான ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டால் தான் தற்போதைய ஒப்பந்தம் செல்லுபடியாகும் என்ற நிபந்தனையை நீங்கள் சேர்த்துக் கொள்ளாவிட்டால், ஒரே வீட்டை இரண்டு பேருக்கு விற்ற இரண்டு தலைக் கொள்ளி எறும்பாகும் நிலை ஏற்படும். இதற்குள் அட்டியல் சிந்தனைக்கே நேரமிருக்காது. எனவே ஒருவருக்கு வீட்டை விற்கச் சம்மதித்த பின்னாலும், வேறு யாருக்காவது அதிக விலைக்கு விற்கும் எண்ணம் இருந்தால், செய்யும் ஒப்பந்தத்தில் தப்பித்துக் கொள்வதற்கான நிபந்தனைகளைச் (Escape clauses) சேர்க்க வேண்டும். அதே நேரம் வீடு வாங்குவோரும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, வேறு யாராவது அதிக விலை கொடுக்கச் சம்மதித்தாலும், தங்களிடம் அனுமதி பெற்றுத் தான் விற்க வேண்டும் என்ற நிபந்தனையை (Right of first refusal) ஒப்பந்தத்தில் சேர்த்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். வைர அட்டியலுக்கு ஆசைப்படப் போய் ஆபத்தில் மாட்டிக் கொள்ளாமல், உங்கள் வீடு விற்பனை முகவருடனும், சட்டத்தரணியுடனும் இது குறித்து ஆலோசனை கேட்டு, ஒப்பந்தங்களில் சரியான நிபந்தனைகளைச் சேர்த்தால்... உங்களின் வைர அட்டியலால் காதல் வயப்பட்ட பிராணசகி உங்கள் புது மாளிகையின் மஞ்சத்திற்கு, 'வாரே வா ராஜா வா, இது இந்திரலோகம்' என்று உங்களை ஆவலோடு அழைக்கவும் கூடும். (உங்களைப் போலவே உங்கள் நண்பர்களும் இந்திரலோகம் காண வேண்டும் என நீங்கள் விரும்பினால், கீழே உள்ள பட்டன்களை அழுத்தி அவர்களுடன் இந்த வைரமான.. சே.. பொன்னான செய்தியைப் பகிர்ந்து கொள்ளலாமே? விசயந் தெரிந்த நாலு நண்பர்களை விட, இவ்வாறு பயனுள்ள விடயங்களைத் தெரிந்த நாலும் தெரிந்தவர்களுடன் நண்பர்களானால் பின்னால் எதற்கும் உதவும் என்று நினைத்து, முகப்புத்தகத்தில் நீங்கள் நண்பராக விருப்புத் தெரிவித்தால் நாங்கள் என்ன மறுக்கவா போகிறோம்?)

    Postad



    You must be logged in to post a comment Login