Recent Comments

    வாழ்க்கைத் துணையை விரட்டும் வாயுக்கோளாறு

    thayagam featured-Healthதமிழனுக்குத் தலை போகும் பிரச்சனை, இப்போ வாயுக்கோளாறு ஒரு கேடா? என்று முகப்புத்தக மாவீரர்கள் மல்லுக்கு வரக்கூடும். மறுபுறத்தில் 'தமிழன் தலை போகும் பிரச்சனைகளுக்கு எல்லாம், 'தலை போகும்' என்ற பயத்தில் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருந்ததால் தான், 'தலை' போனது!' என்று மாற்றுக்கருத்து மாமல்லர்கள் முகப்புத்தகத்துக் கிணற்றடிச் சண்டைக்குத் தயாராகக் கூடும். நீதி வழுவா நெறிமுறையில் நடுநிலையாய் நாங்கள் சொல்லக் கூடியது ஒன்றே... 'தமிழனுக்கு வாயுக் கோளாறு வயிற்றுக்குள் மட்டுமல்ல, தலைக்குள்ளும் தான். பிடித்த முயலுக்கும், வாலுக்கும்... வக்காலத்து வாங்க, வரிந்து கட்டிக் கொண்டு வீம்புக்கு விதண்டாவாதம் பண்ணும் வீணர்களுடன் விவாதம் செய்து வெல்ல முடியாது, அது வெறும் வீண்விரயம் என்பதால்... நேரத்தை வீணாக்காமல் விஷயத்துக்கு வருவோம். வயிற்றுக்குள் போகும் பருப்புகளும் பயறுகளும் சமிபாடடைவதன் விளைபயனாய், திருவிழா வெடியோசையாய் பெரும் ஒலியெழுப்பி, நறுமணம் பரப்பி படுக்கையறையில் சில்மிசம் பண்ணும் வாயுக்கோளாறு, வாழ்க்கைத் துணைகளை விரட்டுவது ஒன்றும் புதியதல்ல. 'நாற்றம் என்ற சொல் முன்பு நறுமணத்தைக் குறித்தது' என தமிழ்ப் பேரறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை 'மலரும் மாலையும்' நூலில் குறிப்பிடுவார். அவர் குறிப்பிட்டது மலரையா அல்லது வாயுக் கோளாறையா என்பது இன்றுவரை புரியவில்லை. வாயால் குறட்டை ஒரு புறம், மறுபுறத்தால் வாயுக்கோளாறு என மத்தளமாய் இரு பக்கமாயும் அடி வாங்கும் வாழ்க்கைத் துணைகள் விவாகரத்து வரை போவதில் ஆச்சரியம் என்ன? இரவுகளில் என்ன? பகல் நேரங்களில் வேலை இடங்களிலும் சத்தமில்லாமல் மணம் பரப்பி, மற்றவர்களை நோக்கி குற்றம் சாட்டும் பார்வையை வீசி, மூக்கைச் சுழித்தபடியே அப்பாவி போல அப்பால் நகரும் விண்ணர்களும் உண்டு. ஆக மொத்தத்தில் வாயு பகவானின் திரு விளையாடல்களின் சாட்சி யங்களாக மட்டுமல்ல, குற்றவாளிகளாகவும், சில நேரம் சந்தேக நபர்களாகவும், நாங்கள் உள்ளோம். சாதாரணமாய் ஒருவர் ஒரு நாளைக்கு பத்து முதல் இருபது தடவை வரைக்கும் வாயு பகவானுக்குப் பின்பக்கத்தால் நமஸ்காரம் செய்கிறார். நாங்கள் வழமையில் உண்ணும் பயறு வகைகள் மட்டுமன்றி, தானியங்கள், மரக்கறிகள், பழங்களில் உள்ள மாப்பொருள் சமிபாடடைவதற்குப் போதியளவு நொதியங்களை சமிபாட்டுத் தொகுதி சுரப்பதில்லை. இவற்றை எங்கள் குடலில் உள்ள பக்ரீறியாக்கள் நொதிக்க வைத்தல் மூலம் உண்ணும் போது வெளியிடப்படும் வாயுக்களே இவ்வாறு வெளியேறுகின்றன. இவ்வாறு ஒருநாளைக்கு உருவாகும் வாயுக்களின் கன அளவு கிட்டத்தட்ட அரை லீட்டர் முதல் ஒன்றரை லீட்டர் வரை இருக்கும். இந்த வெளியேறும் வாயுக்களில் ஐதரசன், காபனீரொட்சைட், மீதேன் ஆகியன இருக்கும். இவை மணமில்லாத வாயுக்கள். இதனால் தான் வெளியேறும் வாயு எப்போதும் மணம் கொண்டதாக இருப்பதில்லை. நறுமணமான நாற்றத்தைக் கொண்டிருப்பது சல்பர் எனப்படும் கந்தகத்தைக் கொண்டிருக்கும் உணவுகளால் ஏற்படும் ஐதரசன் சல்பைட் வாயு தான். பயறு, பருப்பு, அவரை வகைகள், வெங்காயம், புறொக்கோலி, கோலிபிளவர், பால் உணவுகள் என்பன கந்தகத்தைக் கொண்டிருக்கும். கந்தகம் நிறைந்த உள்ளி, இஞ்சி அதிகமாய் உண்டால் வரும் இரவில் வரும் பின்விளைவுகள் உங்களுக்குத் தெரிந்ததே! இதை விட நீங்கள் விழுங்கும் வளி மண்டல வாயுக்களும் எப்படியோ வெளியேற வேண்டுமே! முக்கியமாக இரவில் உறங்கும் போதும், உண்ணும் போதும் உங்களை அறியாமலேயே, வளியை விழுங்க நேரிடலாம். அதை விட, காபனீரொட்சைட் கரைக்கப்பட்ட சோடா, கொக்கோ கோலா வகைகளைக் குடிப்பதாலும், சூயிங் கம் சப்புவதாலும் வளி சமிபாட்டுத் தொகுதிக்குள் நுழையலாம். இதன் நல்ல 'பின்'விளைவு... வெளியேறும் போது நறுமணம் பரப்பி நாறுவதில்லை. இந்த வாயு வெளியேற்றத்தை தகாத ஒன்றாகப் பார்க்கத் தேவை யில்லை. ஆரோக்கியமான உணவுச் சமிபாட்டின் 'பின்...' சே... பக்கவிளைவே இது. பக்ரீறியாக்களால் இந்த மாப்பொருள்கள் உடைக்கப்படும் போது, உடலுக்குத் தேவையான விட்டமின்களும், கொழுப்பமிலங்களும் உருவாக்கப்பட்டு, எங்கள் குடற் சுவர்களை ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவுவதுடன், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் உதவுகின்றன. எங்களுடைய வாயு வெளியேற்றத்தின் மணம் மற்றவர்களுக்குப் பிரச்சனையாகவும், எங்களுக்குப் பிரச்சனையாக இருக்காததற்கும் காரணம் நாங்கள் அந்த மணத்திற்குப் பழக்கப்பட்டிருப்பதே. இன்னொருவர் வீட்டிற்குப் போகும் போது அந்த வீட்டின் மணம் எங்களுக்கு உடனே தெரிவது போல, எங்கள் வீட்டு மணம் எங்களுக்குத் தெரிவதில்லை. வேறு யாராவது நம் வீட்டுக்கு வரும் போது அவர்களுக்கு நமது வீட்டின் மணம் தெரியும். நீங்கள் வெளியேற்றும் வாயு நெருப்புப் பிடிக்கக் கூடியது. குறிப்பாக ஐதரசன், மீதேன் போன்ற வாயுக்கள் சாதாரண வெப்பநிலையிலேயே நெருப்புப் பிடிக்கக் கூடியன. இதனால் தான் சகதிகளில் உருவாகும் மீதேன் வாயு எரிவதைப் பார்த்த முன்னோர்கள் கொள்ளிவால் பிசாசு என்று பயந்து நடுங்கி, 'வாயு நமஸ்காரம்' செய்திருக்கிறார்கள். எனவே, 'ஏவுகணைகளும் இதே தத்துவத்தில் தானே செயற்படுகின்றன, சந்திர மண்டலம் போக விஞ்ஞானப் பரிசோதனை செய்கிறேன் பேர்வழி' என்று நெருப்புக் குச்சியோடு தீ மூட்டும் 'வாண வேடிக்கை' முயற்சியில் ஈடுபடாதீர்கள். வானம் ஏறி வைகுண்டம் போக முடியாவிட்டாலும், படக்கூடாத இடங்களில் நெருப்புப் பட்டு கருகி, failure to launch என்பதன் அர்த்தம் மாறி, மணவாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படும் அபாயம் உண்டு. யூடியூப்பில் இவ்வாறான விஞ்ஞான முயற்சிகளின் வீடியோக்கள் நிறைய உண்டு. பார்த்து மகிழுங்கள். வீட்டில் முயற்சித்து ஆபத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! வைத்தியசாலையில் அவசர சிகிச்சை நிலையத்தில் விளங்கப்படுவது சங்கடமாயிருக்கும் என்பது மட்டுமல்ல, கதை பரவி, சம்பந்தமில்லாத தாதிகள் உங்கள் எரிகாயங்களைப் பார்வையிட, கூட்டமாய் வர நேரிடலாம். யாருக்குத் தெரியும்? தொலைக்காட்சி, பத்திரிகை, இணையத் தள நிருபர்கள் மூலமாய் பதினைந்து நிமிடப் புகழ் பெறவும் வாய்ப்புண்டு. (நீங்கள் அல்ல, உங்கள் அந்தரங்கம்!) பொது இடங்களில் அவசரமாய் வாயு வெளியேற்ற நேரிட்டால் தம் பிடித்து சமாளிக்கலாம் என்று நினைக்காதீர்கள். இரவு கட்டி வைத்த பலூன்கள் காலையில் வாடி வதங்கி இருப்பது போல, நிறைந்த வாயு மெதுவாகவே வெளியேறும். வாயுக் கோளாறுகளால் அவதிப்படுவோர், Beano எனப்படும் குளிகையைப் பயன்படுத்தி அதைத் தவிர்க்கலாம். அந்தக் குளிகையில் உள்ள நொதியம் சிக்கலான மாப்பொருளை உடைத்து சமிபாடடையக் கூடிய அளவுக்கு மாற்றுவதால் சிறுகுடலிலேயே அவை உடலினால் உறுஞ்சப்பட்டு விடும். இதனால் மாப்பொருள் பெருங்குடலை அடைந்து மணம் பரப்ப முடியாது. ஆனால், பெருங்குடலில் உள்ள இந்த பக்ரீறியாக்கள் எங்கள் உடல் நலத்துக்கு முக்கியமானவை. எனவே வாயுக் கோளாறைத் தடுக்கிறோம் என்று போய், இந்தக் குளிகையைப் பயன்படுத்தியோ, சத்தான உணவுகளை உண்பதைத் தவிர்த்தோ, உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும், அளவுக்கு அதிகமான வாயு வெளியேற்றம், அல்லது வயிற்றில் வாயு நிறைந்து, வயிறு கொழுவி, பொருமி வீங்குவது போன்ற நோ இருப்பின் அது மலச்சிக்கலால் வாயு வெளியேற முடியாமை, அல்லது பால் பொருட்கள் ஒத்துக் கொள்ளாமை காரணமாக இருக்கலாம். அவ்வாறான நிலையில் வைத்தியரை நாடுங்கள். ஆதலினால், வாயுக் கோளாறால் விவாகரத்து, மறு'மணம்' என்றெல்லாம் போகாமல், மலர் தூவி நறுமணம் பரப்பும் மஞ்சத்தில், வாழ்க்கைத் துணைக்குச் சுவடியை வாசித்துக் காட்டி, 'குசுகுசு' தலையணை மந்திரக் காதல் மொழி பேசி, ஈருடல், ஓருயிராய் கூடி இன்புற்று, 'திரு' 'மண' வாழ்க்கையை இனிதே தொடருங்கள்!

    Postad



    You must be logged in to post a comment Login