Recent Comments

    பேய்களுக்குப் பாய் விரிக்கும் பேய்வெட்டிகள்

    என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே!

    பேய்களுக்குப் பாய் விரிக்கும் பேய்வெட்டிகள்

    தேர்தல் கண் நோட்டம்

    சிண்டு முடியப்பன்

    thayagam featured-presidentவழி தவறி அலையும் செம்மறிகள்

    அப்பாடா! ஒருவாறாகத் தேர்தல் திருவிழா ஓய்ந்து முடிந்து விட்டது. அரசியல் வியாபாரிகள் கடைகளை மூடி, லாப நட்டக் கணக்குப் பார்த்தபடியே நடையைக் கட்ட, பல்வேறு பக்கங்களாய் பிரிந்து நின்று போர்க்கொடி தூக்கி, குத்துவெட்டுப் பட்ட தமிழர்கள் தங்கள் தங்கள் வேலை வெட்டிகளைப் பார்க்கப்போய் விட்டார்கள். இனி ஜுன் மாதம் பாராளுமன்றத் தேர்தல் கொடியேற்றத்துடன் மீண்டும் திருவிழா களை கட்டும்.

    சிண்டுவுக்கு என்னவோ, தமிழர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இவ்வளவு நாளும் சிந்திக்கவே தேவையில்லாமல், சிந்திக்க வேண்டியது என்ன, வாயில் உதிர்க்க வேண்டியது என்ன, செய்ய வேண்டியது என்ன, எல்லாவற்றையும் தேசியத் தலைவரே தமிழர்களுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார். யதார்த்தவாதியின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்பது முதல், யாரைத் துரோகி என்பது வரைக்கும் 'தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?' என்பதன் ஏகபோக வியாபாரமுமே அவர் திருக்கரத்தில் தான்.

    பாவம், அவர் எரித்திரியாவில் அஞ்ஞாதவாசமும் மெளனவிரதமும் மேற்கொண்ட நாளில் இருந்து தமிழர்கள் அரசியல் அனாதைகளாகி விட்டார்கள். அதுதான்... யாருக்கு வாக்களிப்பது, யாரைத் துரோகி என்பது என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனார்கள். இருந்திருந்தால், 'இவர் யதார்த்தவாதிதான், ஆனால் அவர் முன்நவீனத்துவவாதி' என்ற மது உரைஞரின் விசிலடிகளுடனான விளக்கத்துடன் பிரச்சனை சுலபமாய் முடிந்திருக்கும். (யதார்த்தவாதி என்றாலே என்ன நாசம் என்று விளங்காத கூட்டத்திற்கு, முன்நவீனத்துவவாதி என்றால் என்ன என்று விளங்கவா போகிறது?)

    தேர்தல் வந்தாலும் வந்தது. மேலே போனாலும் மரணம், கீழே போனாலும் மரணம் என்பது போல திரிசங்கு சொர்க்க நிலையில், தெரிந்த பேய்க்குப் பாயை விரிப்பதா? தெரியாத பேய்க்கு முந்தானையை விரிப்பதா? என்று தமிழர்கள் திணறிப் போய் விட்டார்கள்.

    போகும்போது, போராட்டம் இனிப் புலன் பெயர்ந்தவர்கள் கையில் தான் என்று, தான் திரும்பி வரும் வரைக்கும் பாதுகாக்கும்படி, சொத்துப் பத்துக்களை எல்லாம் எழுதி வைத்து விட்டுப் போனவர், உயிலில் அரசியல் வாரிசுகளை எழுதி வைக்காததால் வந்த வினை இது.
    மந்தைகளுக்கு மேய்ப்பன் இல்லாவிட்டால் இது தான் பிரச்சனையே.

    வரலாறு படைத்த தன்மானத் தமிழுணர்வாளன்

    அதுசரி, கனடாவில் ஆங்கிலம் தெரியாமலேயே தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் மானத்தை வாங்கும் தமிழர்களை, தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும் என்னும் தமிழுணர்வாளர்கள் எல்லாம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு தமிழர் போட்டியிட்டு வரலாறு படைத்ததை காணாமலே விட்டு விட்டார்கள். இந்த வரலாற்று நாயகன் யார் எவர் என்று எவருக்குமே தெரியாது. சுந்தரம் மகேந்திரன் என்ற பெயர் கொண்ட இந்த வீரத்தமிழன் சிங்கத்தின் குகைக்குள் சென்ற சாகசம் புரிந்து, 4047 வாக்குகள் பெற்றிருக்கிறார். யாழ் மாவட்டத்தில் 623 வாக்குகள், வன்னியில் 218 வாக்குகள் விழுந்திருக்கின்றன. வாக்களித்தவர்களுக்கே இவர் யார் என்பது தெரிந்திருக்குமோ என்னவோ? தமிழ் ஈழத்திலேயே தமிழன் தமிழனுக்கு வாக்களிக்க வேண்டும் நினைத்தவர்கள் என்ன ஒரு 841 பேர் மட்டும் தானா?

    இங்கேயும் தாங்கள் 'தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அரசியல்வாதிகள்' என்று பிரமுகர்களானவர்களை சிண்டு நிறையக் கண்டதுண்டு. அதைப் போல வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கோ வந்திருக்க வேண்டும். கட்டுப்பணம் போனாலும் பரவாயில்லை, வரலாற்றின் பொன்னேடுகளில் தனது பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று நினைத்த இந்தத் தியாகதீபத்தின் அடிமுடிகளை யாராவது தேடிப்பிடித்தால்... அதில் எங்களுக்கும் கொஞ்சம் அருள்பாலித்தால், பின்னி எடுக்க மாட்டோமா?

    ராஜபக்ஷ குடும்பத்திற்குள் குத்துவெட்டு!

    மகனின் அதிரடி கண்டு மகிந்தர் குலைநடுக்கம்!

    வேட்பாளர் பட்டியலில் இன்னொரு தமாஷும் இருந்தது. நாமல் ராஜபக்ஷவின் பெயர் வேட்பாளர் பட்டியலில். அவருக்கும் 15726 வாக்குகள் வேறு. அதில் யாழ்ப்பாணம் 1150, வன்னி 400 வாக்குகள்.
    வாக்காளர்களைக் குழப்ப, இன்னொரு சிறிசேனவைக் களமிறக்கியதைக் கண்ட எந்த சிங்கள மது உரைஞரின் ஆலோசனையோ?
    இப்போதும் வாத்து, வெற்றிலை என்று படத்தைக் காட்டியே வாக்களிக்கக் கேட்கும் நாட்டில், பெயரைப் போட்டு என்னையா பயன்? அரசம் இலை, அன்னம் என்று படத்தைப் போட்டிருந்தால் சனம் நன்றாகவே குழம்பிப் போயிருக்கும். 'மோட்டுச் சிங்களவனுக்கு வாசிக்கத் தெரியாமல்' வாக்குகள் எக்கச்சக்கமாய் பிரிந்து போக... 'அறப் படிச்ச யாழ்ப்பாணத்தின்' வாக்குகளால் நம்ம தமிழ் மகன் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்று, ஈழப்பிரகடனம் செய்திருக்கக் கூடும்.

    நல்ல காலம், நம்ம அரசியல் புல'நாய்வாலர்'களின் கண்ணில் இது படவில்லை. பட்டிருந்தால், ராஜபக்ஷ குடும்பத்தில் பிளவு, தந்தைக்கு எதிராக மகன் போர்க்கொடி என்றெல்லாம் எழுதித் தள்ளி புழுதி கிளப்பியிருப்பார்கள். இவர்களுடைய அரசியல் ஆய்வு எல்லாம், மரண அறிவித்தல் இணையத் தளத்தில் தமிழில் வரும் அரசியல் செய்திகள் பற்றியது மட்டும் தானோ?

    வாசிக்கும்போது, ஓரளவு உப்புச் சேர்க்கவும்!

    இதில் வேடிக்கை என்னவென்றால்... மரண அறிவித்தல் இணையத்தளம் உட்பட்ட, தமிழர்கள் அள்ளுப்பட்டுப் போய் வாசிக்கும் செய்தித்தளங்கள் எல்லாம் தேர்தல் காலத்தில் கொழும்பு ஆங்கில ஊடகங்களின் இணையத்தளத்தில் வெளிவரும் செய்திகளையே உண்மைகளாய் வெளியிட்டுக் கொண்டிருந்தன.

    அதில் முக்கியமானது கொழும்பு டெலிகிராப்.  தேர்தல் நேரத்தில் இதில் வெளிவந்த செய்திகளைப் பார்த்தால்... தமிழ் இணையத்தளங்கள் பிச்சை வாங்க வேண்டும். (அட... தூள் கிளப்பிய நம்ம நிதர்சனம் எங்கேப்பா?)

    விமானப்படை விமானத்தில் கோத்தா மாலைதீவுக்குத் தப்பியோட்டம், விமான நிலையத்து முக்கிய பிரமுகர் பகுதியூடாக கே.பி நாட்டை விட்டு ஓட்டம், நாமல் உட்பட்டோர் சீனாவுக்கு ஓட்டம் என்றெல்லாம் மயிர்க்கூச்செறியும் செய்திகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்தது. பிறகென்ன? நம் இணையத் தளங்களும் அதில் கிள்ளி புலன் பெயர்ந்தோருக்குத் தௌpத்துக் கொண்டிருந்தன.

    பின்னால் அந்தச் செய்திகளில் உண்மை இல்லை என்பது அவர்கள் அளித்த பேட்டிகள் மூலமாகத் தான் ஊகித்துத் தெரிய வந்தது.  ஒரு பத்திரிகை அப்படிச் செய்யலாமா என்று தமிழர்களுக்குக் கேள்வி எழாது என்பது சிண்டுவுக்குத் தெரியும். இதை விட அப்பனான செய்திகளை வன்னிசார்பு ஊடகங்களில் பார்த்துப் பழகியவர்கள் ஆச்சே.

    இருந்தாலும் In Journalism, Truth is a process   என்று சுலோகம் போடும் ஊடகம், பின்னால் உண்மை தெரிய வந்த போது, மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். அல்லது தவறைத் திருத்தியிருக்க வேண்டும்.

    இப்படியே போனால், வரும் உண்மைச் செய்திகளைக் கூட, with a grain of salt உடன் தான் நாங்கள் வாசிக்க நேரிடும். (உப்புப் புளி விட்டு!)

    உப்பிட்டவரை உள்ளளவும் நினை

    ஆங்கிலப் பத்திரிகை என்றதும்... கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகளில் இங்கே இருந்து எழுதும் பழுத்த பத்திரிகையாளர் முன்பு தமிழ்த் தேசியத்தை கனடாவில் வீழ்ந்து விடாமல் முண்டு கொடுத்துக் கொண்டிருந்தார். புலன் பெயர்ந்தோர் என்ன சிந்திக்க வேண்டும், உதிர்க்க வேண்டும் என்பன இவர் மூலமாகத் தான் நடுநிலைப் பத்திரிகை ஒன்றின் மூலம் புலன் பெயர்ந்தோருக்கு ஊட்டப்பட்டது.

    பின்னால் ஏதோ கசந்து போய்... கே.பியும் அங்கு போய்ச் சேர்ந்த பின்னால்... தமிழ்த் தேசியத்திற்கு வெளியே நின்று ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டுடன்... மகிந்த, கோத்தா சார்புத் தகவல்கள் ஆய்வுக் கட்டுரைகளாய் வந்தன.

    நீண்ட நாளின் பின்னர் தாயகம் சென்று திரும்பிய கதையும் அடிபட்டது.
    இதே கொழும்பு ரெலிகிராப்பில் அன்னாரின் இலங்கைப் பயணம் இலங்கை அரசின் ஆதரவில் நடைபெற்றது என்றும் கடற்படைப் படகில் இடம் பார்த்ததாகவும் இன்னொரு தமிழர் வாங்கு வாங்கு என்று வாங்கிய கட்டுரை வெளியாகியிருக்கிறது.

    அவர் தனக்கு உப்பிடுவோரை, உப்பிடும் வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறார். இதில் கோபிப்பதற்கு என்ன இருக்கிறது?

    வாசீ... வாசீ... அடச் சீ!

    தேர்தலில் தமிழர் என்றவுடன் நம்ம வாசீ.. வாசீ... லிங்கத்தாரின் ஞாபகம் வராமல் போகுமா? 2010ல் நடந்த தேர்தலில் 9662 வாக்குகள் பெற்று வரலாற்றின் பொன்னேடுகளின் பெயர் பொறித்த மாவீரன் அன்றோ!

    இந்த மாவீரன் ஏன் இம்முறை களத்தில் குதிக்காமல் விட்டார் என்பது பெரும் மர்மம். ஒருவேளை கிடைக்க வேண்டிய இடங்களிலிருந்து கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போயிருக்கலாம். அல்லது கிடைக்கக் கூடாத இடங்களில் இருந்து ஏதாவது கிடைத்து வாங்கிக் கட்ட வேண்டும் என்ற பயமாகவும் இருக்கக் கூடும்.

    அவரும் பாவம். தேசியத் தலைவரின் தாயார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டிருக்கும் மகனிடம் போய்ச் சேர்ந்த பின்னால், வாசீயாருக்கு அரசியல் செய்யச் சரக்கே இல்லை. இல்லாவிட்டால் தலைவரின் தாயாரின் உடல் நிலை பற்றி தினசரி பத்திரிகை அறிக்கை விடலாம்.

    மட்டக்களப்பு இராசதுரையை தூஷணத்தால் திட்டித் தீர்த்து தமிழ் மானம் காத்த இம்மாவீரன், இப்போது வீரம் செறிந்த மண்ணில் மேயர் பதவி கூட இல்லாமல் நொந்து போயிருக்கிறார்.

    யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் திணறிய தமிழர்கள் இந்தத் தமிழ் மகனை தேர்தலில் நிறுத்தி, ஒட்டுமொத்தமாய் வாக்குப் போட்டு முழு உலகத்திற்கும் காட்டியும் இருக்கலாம்... கனடாவில் 99.99999 வீத வாக்குகளால் தமிழீழத்திற்கு அங்கீகாரம் கிடைத்த மாதிரி!

    கட்டினால் 'குதிரை'யின் மேல் தான் பணத்தைக் கட்டுவோம், இந்தக் கழுதையின் மேல் கட்ட மாட்டோம் என்று புலன் பெயர்ந்த தமிழுணர்வாளர்கள் முடிவு எடுத்திருக்கக் கூடும்.

    ரத, கஜ, துரக பதாதிகள் எங்கே?

    அட, இப்ப தான் ஞாபகம் வருகிறது. கொஞ்ச நாள் முன்னால் குதிரை, யானை (கஜேன்) மீதெல்லாம் பணம் கட்டிச் சூதாடினார்கள். தேர் தல் ரதம் வரும் போதெல்லாம் யானை 'கஜ', 'குதிரை' துரக, காலாட் படைகள் என நால் வகைப் படைகளுடன் போருக்குப் போய் ஈழம் காணப் பலரும் முயன்று கொண்டிருந்தார்கள்.

    இவர்களின் வெற்றுவேட்டுச் சவடால்களில் மெய்சிலிர்த்து, கூட்டமைப்பை விட, இந்த வாள்(ய்)வீரர்கள் விளாசித் தள்ளுவார்கள் என்று புலன் பெயர்ந்த பேய்வெட்டிகள் புல்லரித்துப் போய் இருந்தார்கள்.

    தேர்தலின் போது அவர்களின் சத்தத்தையே காணோம். கடந்த பொதுத்தேர்தலில் தமிழீழ மக்களே அவர்களைக் கை கழுவி விட்ட பின்னால், இங்கே அவர்களை நம்பியவர்கள் குத்துக் கரணம் அடித்து கூட்டமைப்புப் பேய்க்குப் பாய் விரித்ததால்... அவர்கள் மேல் பணத்தைக் க(கொ)ட்ட யாரும் இல்லாமல் போனதும் காரணமாயிருக்கலாம்.

    இரண்டுமே தெரிந்த பேய்களாக இருந்தால் இது வேற பிரச்சனை! ஏங்க ரெண்டு பேரை(யை)யுமே வைச்சுக்கும் எண்ணம் இல்லையா?

    சனல் 4ல் சுந்தராம்பாள்

    தேர்தல் முடிந்தாலும், எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என்றொருவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். ராஜபக்ஷ கவிழ்ந்ததால், தவணைக் கட்டணத்தில் வெளியிட வைத்திருந்த வீடியோக்களை என்ன செய்வது என்று திணறிக் கொண்டிருந்த சனல் 4, மியா அம்மையாரைப் பேட்டி கண்டிருக்கிறது. அம்மையார் அரசியல் புல'நாய்வாலரான' விடயம் இன்னமும் சிண்டுவுக்குத் தெரியாது. அவர் ஏதோ சுந்தராம்பாள் மாதிரிப் பாட்டுப் பாடிக் கொண்டிருப்பதாகத் தான் கேள்விப்பட்டதுண்டு.

    முகப்புத்தகத்து மாவீரர்கள் போலவே, அன்னாருக்கும் வாய் வீசுவதற்கு உரிமை இருக்கிறது. தமிழர் பிரச்சனை குறித்து கருத்துச் சொல்ல தமிழர்களுக்கு உரிமை இல்லாவிட்டால்?
    மடோன்னாவும் இப்படித் தான். தன்னுடைய புதிய அல்பம் வெளியாகிறது என்றால்... ஆபிரிக்காவில் பிள்ளையைத் தத்து எடுப்பார், பாடசாலை திறப்பார். பின்னால் ஆளைக் காணக் கிடைக்காது. ஆகவே, இதெல்லாம் வியாபார விளம்பரத்துக்கா? என்றெல்லாம் சிண்டு முடியாதீர்கள். அது பற்றி நமக்குத் தெரியாது.
    இருந்தாலும் சிண்டுவுக்கு ஒரு ஐடியா பிறந்திருக்கிறது. தமிழ்த் தலைமை துரோகம் இழைத்து விட்டது என்று புலம்பிக் கொண்டிருக்கிற தம்பியின் தம்பிமார்கள், கூட்டு அமைப்பிலிருந்து, சுதந்திரப் பறவையாய் வெளியே பறந்து வந்திருக்கும் அனந்தி சசிதரன், அரசியல் அநாதையாய் அஞ்ஞாதவாசம் செய்யும் பத்மினி சிதம்பரநாதன் இருவரோடும் சுந்தராம்பாளையும் சேர்த்து, சார்ளீஸ் ஏன்ஜல்ஸ் மாதிரி, ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தலாமே. அதில் சார்லி முகம் காட்டாமல் குரலை மட்டும் காட்டும் மர்ம மனிதராக இருந்தது போல, எரித்திரியாவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் தேசியத் தலைவரை சார்ளியின் பாத்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று விசாரித்தும் பார்க்கலாம்.
    (தலைவர் முகத்தைக் காட்டாவிட்டாலும், அம்மையார் உங்களுக்கு விரலைக் காட்டக் கூடும். ஜாக்கிரதை!)

    வீதிக்கு வருவாரா தேசியத் தலைவி?

    அட, அப்படீன்னா நம்ம கனடாத் தேசியத் தலைவியை ஏண்ணே உட்டுட்டீங்க என்று கனடியத் தமிழுணர்வாளர்கள் கேட்கக் கூடும். அன்னாரை One Term Wonder என்று நம்ம தீர்க்கதரிசியார் சொல்லியிருக்கிறார். அந்தத் தீர்க்கதரிசனத்தைப் பொய்யாக்கவோ என்னவோ, அன்னார் குத்துக்கரணம் அடித்து, கட்சி மாறப் போவதாக யாரோ கதையைக் கிளப்பியிருந்தார்கள். ('இக்'குருவிச் சாத்திரம்?)

    பின்னால் அந்தக் கதையில் உண்மை இல்லை என்பது தெரிய வந்தது.

    தமிழர் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்னாரை அரங்கேற்றிய தமிழுணர்வாளர்கள் இப்போது ஒன்று திரண்டு அவரை மண் கவ்வச் செய்ய வேண்டும் என்பதற்காக... வழமை போல, வேறு பேய்களுக்கு முந்தானை விரிக்கத் தொடங்கி விட்டார்கள்.

    இதன் பயன்...
    மற்றக் கட்சியில் தமிழரை நிறுத்தி எதிர்வேட்பாளராக்க முயற்சி நடந்தது. வேறென்ன... தமிழர் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோஷத்துடன் தான்.

    ஏற்கனவே வாக்களித்து அரங்கே(ற்)றியவர் தமிழர். அதை விட இன்னொரு தமிழ்மகன் தான் தான் வேட்பாளர் என்று விளம்பரமும் போட்டிருந்தார். அதற்குள் ஏற்கனவே ஓரமாய் நின்று விரலை தண்ணீருக்குள் விட்டுப் பார்த்து விட்டு, ஜகா வாங்கியவரைக் களமிறக்கி... கடைசியில் தமிழர்களின் வாக்குப் பிரிந்து போக... பிற இனத்தவர் வேட்பாளராகி விட்டார்.

    இதில் வேடிக்கை என்னவென்றால்... இன்னொரு தொகுதியில் ஏற்கனவே வேட்பாளரான தமிழருக்கு எதிராக வேலை செய்து இன்னொரு சீக்கியரை ஆதரித்த தமிழ் இன உணர்வாளர்களும், இப்போது தமிழரைக் கவிழ்க்க இன்னொரு தமிழரைக் கொண்டு வர முயற்சித்ததுதான்.

    இன்னொரு தமிழனுக்கு வித்தியாசமான கருத்து இருக்கிறது என்றாலேயே, துரோகி என்று மரண தண்டனை வழங்குவோர், நாங்கள் தமிழர்கள், ஒற்றுமையாக இருக்க வேண்டும், தமிழர்கள் தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று, ஏற்கனவே தாங்கள் தெரிவு செய்த தமிழரைக் கவிழ்க்க முயற்சிப்பது உங்களுக்கும் சிண்டுவுக்கும் குழப்பமாக இருக்கலாம்.

    ஆனால் இவர்கள் தௌpவாகத் தான் இருக்கிறார்கள்... எப்போதும் போல!
    சில நேரம், எரித்திரியாவிலிருந்து அறிவுறுத்தல்களுடன் ஈமெயில் வந்திருக்கலாம்.

    (தெரிந்த பேயோ, தெரியாத பேயோ, எந்தப் பேய்க்கு பாயோ, முந்தானையோ விரித்தாலும், கொஞ்ச நாளில் இவர்கள் 'அவர்கள் துரோகம் இழைத்து விட்டார்கள்' என்று புலம்புவார்கள் என்பது சிண்டுவின் தீர்க்கதரிசனம்!
    எந்த ஒரு தர்மமும், நேர்மையும் இல்லாமல் எந்தப் பேய்க்கும் பாய் விரிக்கும் இந்தப் பேய்வெட்டிகளுக்கு வேறு என்ன தான் தெரியும்!?)

     

    இவ்வளவு தூரம் அக்கறையாக வாசித்து முடித்திருக்கிறீர்கள். இந்தப் பேய்வெட்டிகளின் பெருமையை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால்... கீழே உள்ள பட்டன்களில் அழுத்துங்கள்.
    தமிழர் தமிழருக்கு ஆதரவு வழங்க வேண்டும் அல்லவா!

    Postad



    You must be logged in to post a comment Login