Recent Comments

    நீங்களும் சட்ட வல்லுனர் ஆகலாம்!

    சட்டம் என்று ஒன்று இருந்தால், அதற்கு எப்படிக் கட்டுப்பட்டு நடப்பது என்பதை விட, அதை எப்படி புத்திசாதுர்யமாக மீறுவது என்ற குறுக்குமூளை எங்கள் பண்பாட்டில் பின்னிப் பிணைந்தது. சட்டம் ஒரு இருட்டறை என்பது தமிழ்ப்(பட) பழமொழி என்பதாலோ என்னவோ, சட்டவிரோதமாய் எதையாவது செய்தால் இருட்டில் இருக்கும் சட்டம் எங்களைக் கண்டு கொள்ளாது என்ற எண்ணம் தமிழர்களுக்கு இருக்கக் கூடும். அதையும் மீறி, தமிழர்களுக்குள் மிகவும் அரிதாக இருக்கக் கூடிய நேர்மையாளராக நீங்கள் இருந்தாலும் சில நேரம் சட்டத்தின் உதவி உங்களுக்குத் தேவைப்படலாம். ஆங்கில மொழியைப் புரிவதில் சிக்கல் இருந்தால், அதற்கு படித்துப் பட்டம் பெற்ற தமிழ்ச் சட்டத்தரணிகளை நாடி உதவி பெறவேண்டும். இருந்தாலும், சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்பதற்கு, வழமையான தமிழ்ப் பாணியில் 'உவருக்கு ஏன் வீணாக் காசைக் குடுப்பான்?' என்று, ஊரில் உலாவும் கேள்விச்செவி மேதாவிகளின் அதிபுத்திசாலித்தன புத்திமதிகளால் குழம்பிப் போயிருப்பீர்கள். சில நேரங்களில் களம் கண்ட வேங்கைகளும் சிறை மீண்ட செம்மல்களும் (அதுதான் மனைவியைத் தாக்கிய, கிறடிட் காட் மோசடிகளுக்காக நீதிமன்றத்திற்கு அலைந்த!) தங்கள் அனுபவங்கள் மூலமும் ஆலோசனை சொல்லக் கூடும். இப்படியெல்லாம் போய் காசையும், நேரத்தையும் வீணாக்கி அல்லல்படாமல் இருக்க, கனடாவில் உள்ள சட்டங்கள் பற்றியும், அதற்குச் செய்ய வேண்டிய நடைமுறைகள் பற்றியும் மேலோட்டமாக அறிந்து கொள்ள தமிழ் இணையத் தளம் ஒன்று உள்ளது. http://www.legalline.ca/ என்ற இணையத்தளத்தில் நீங்கள் சட்ட விபரங்களை இலவசமாய் பெறலாம். 65க்கு மேற்பட்ட உலக மொழிகளில் கனடாவின் சகல மாகாணங்களுக்குமான சட்டங்கள் பற்றிய தகவல்கள் இங்கு உண்டு. இலவசம் என்றால் ஆலாய் பறப்பீர்கள், ஆகா, இனிமேல் லோயரிட்டை அலையத் தேவையில்லை, பிரச்சனையைப் போட்டு கூகிள் அடித்தால், சட்ட ஆலோசனை இலவசமாய் கிடைக்கும் என்று புளகாங்கிதம் அடைவீர்கள் என்பது தெரிந்தது தான். ஆனால் இந்த ஆலோசனை உங்கள் பிரச்சனைக்கான தனித்துவமானது அல்ல, பொதுவானது. இந்த இணையத்தளத்தின் வலது மேற்பக்க மூலையில் மாகாணத்தையும் மொழியையும் தெரிவு செய்தால், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட விபரங்களின் தொகுப்பு உண்டு. கூகிள் மொழிபெயர்ப்பு என்பதால் சில நேரம் விளங்கிக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம். மொழிபெயர்ப்பில் கருத்துக்கள் மாறிப் போகலாம் என்பதையும் நினைவில் வைத்திருங்கள். முடிந்தவரைக்கும் ஆங்கிலத்தில் வாசிக்க முயற்சி செய்யுங்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டப் பிரச்சனைகளுக்கான, தத்தெடுத்தல் முதல் தவறான வேலைநீக்கம் வரை, திருமண ரத்து முதல் போதையில் வாகனம் செலுத்திய குற்றம் வரை, விளக்கங்களும் பரிந்துரைகளும் உள்ளன. ஆனால் இந்தச் சேவையைச் சட்டத்தரணியின் ஆலோசனை என்று கருதி விடாதீர்கள். ஒரு முன்னுரை மட்டுமே. இந்த விபரங்களைத் தெரிந்து கொண்டு உரிய சட்ட ஆலோசனை பெறுங்கள். அதிலும் சட்டத்தரணிகளும் தமிழர்களே என்பதால், அவர்களுக்கும் குறுக்குமூளை வேலை செய்து, உங்களைச் சட்டத்தின் கோரப் பற்களில் இருந்து, (ஒ.பீ.கோ 304, ஒன்ராறியோ பீனல் n;காட், யுவர் ஆனர்?) மீட்கக் கூடும். (நம்மவர்கள் அடிக்கடி காரணம் காட்டும், 'நாய், எருமை எண்டு பேசுறார்', 'வீட்டிலை சமைக்கிறேலை' போன்ற காரணங்களுக்காக விவாகரத்துச் செய்யலாமா என்ற விபரங்களைத் தேடிப் பார்த்தோம். கண்ணுக்குத் தென்படவில்லை. உங்களுக்குத் தென்பட்டால் தெரிவியுங்கள். அந்த விபரங்களை அடுத்த சுவடியில் மற்றவர்களுக்குப் பயன்படுமாறு தருவோம்.)

    Postad



    You must be logged in to post a comment Login