Recent Comments

    கள்ள வோட்டுப் பா.உ

    வீட்டுக்காரி சிகிச்சைக்குச் செல்லும் மருத்துவரின் மருத்துவ நிலையம் ஒன்றில், தமிழ் மருத்துவர் நிர்வாகத்தில் உள்ள physiotherapy நிலையம் ஒன்றுண்டு.

    மருத்துவ நிலையங்களில் சிகிச்சை நாட்களில் காத்திருக்கும் போது, முன்பென்றால் பதினைந்து வருடங்களுக்கு முந்திய சஞ்சிகைகள் இருக்கும். வாசித்துக் கொண்டிருப்பேன்.

    றீடர்ஸ் டைஜஸ்ட், Laughter the best medicine தான் நான் முதலில் வாசிப்பது. மருத்துவ நிலையத்திற்கு வந்து அதை வாசித்தாலே மருந்து தானே.

    இப்போது செல்பேசியை நோண்டிக் கொண்டிருப்பேன். பொழுது போகும்.

    ஒரு நாள் ஒரு இளம் தமிழ்த்தாய் தன் பிள்ளையுடன் வந்திருந்தார். பிள்ளைகள் என்றால் எனக்கு ஒரே குறும்பு. தாய்மார் பார்க்காத நேரங்களில் முழிசிப் பார்ப்பேன். கண்களைக் குறுக்காக வைத்து மிரட்டுவேன். பிள்ளைகள் மிரண்டு போய் தாய்மாருக்கு பின்னால் ஒளிந்திருந்து எட்டிப் பார்ப்பார்கள். சில விசயம் தெரிந்ததுகள் தாய்மாரிடம் சொல்லிக் கொடுக்க சுரண்டும் போது, எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி, வாசித்துக் கொண்டிருப்பேன்.

    இது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.

    என்னவோ அந்த தாயைப் பார்த்ததும், குழந்தையோடு குறும்பு விடத் தோன்றவில்லை.

    வழமையில் குழந்தைகள் தான் பொது இடங்களில் மற்றவர்கள் பற்றிய கவலை இல்லாமல் விளையாடுவார்கள். அதை இதை தள்ளுவார்கள். தாய்மார்கள் அடக்கிக் கொண்டிருப்பார்கள்.

    அன்றைக்கு தாய் தான் கூத்துக் காட்டிக் கொண்டிருந்தார். சத்தமாகப் பேசிக் கொண்டே!

    எனக்கோ, பொது இடங்களில் நின்றால், யாரோடும் உரையாடுவதாயின் அடுத்தவருக்கு கேட்காத மாதிரி மெதுவாகத் தான் கதைக்கத் தோன்றும்.

    இந்த அம்மாவோ சத்தமாக பேசிக் கொண்டே, குழந்தையையும் அதட்டிக் கொண்டு, அந்தச் சிறிய அறைக்குள் எனக்கு ஓரிரு அடிகள் தள்ளி, அங்குள்ள பந்து ஒன்றில் ஏறியிருந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். சிகிச்சையும் உடல் மூட்டு நோவாக இருக்கக் கூடும்.

    தெரிந்த முகமாக இருக்கிறதே என்ற நினைப்பு மட்டும் போகவில்லை... செல்பேசிக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்த போதும்! * * * கனடாவில் பாராளுமன்றத்திற்கு தமிழரை அனுப்ப புலன் பெயர்ந்த தமிழர்கள் முக்கியது தெரிந்திருக்கும்.

    முள்ளிவாய்க்காலில் பரிநிர்வாணம் அடைந்தவர் புலன் பெயர்ந்தவர்களிடம் ஒப்படைத்துச் சென்ற விடுதலைப் போராட்டம் தங்கள் கையில் இருக்கிறது என்ற நினைப்பில், கனடிய பாராளுமன்றத்திற்கு தமிழரை அனுப்பி ஈழம் பிடிக்க என ஒரு கோஷ்டி கிளம்பி நடத்திய கூத்துக்கள் தெரிந்திருக்கும்.

    தமிழர்களுக்கு எப்போதுமே End justifies the means என்றால்...

    அந்த வழிகள் பற்றி அறிந்திருந்தால் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்.

    முன்பின் அறிந்திராக ஒரு பெண்ணைத் தேடிப் பிடித்து, தமிழர்களுக்குத் தலைவியாக்கி, சுத்த தமிழ் இரத்தம் இருந்தால் வோட்டு போடு என்று உசுப்பேத்தி இந்த கேனயர் கூட்டத்திற்கு ஈழக் கனவைத் தொடர்ந்த கதையை விட, அந்த வெற்றியை உறுதி செய்ய, எங்கள் நாட்டில் கிடைக்காத உரிமைகளை தந்த ஒரு ஜனநாயக நாட்டில் எங்கள் புத்தியைக் காட்டிய கதையை பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள்.

    இந்த மோசடிக்கு வசதியாக, சகல கட்சிகளிலும் தமிழர்களை தேர்தல் அதிகாரிகளாக்கி உட்கார வைத்திருந்தார்கள்.

    எங்கள் நாடுகள் போல, வாக்களிப்பவர்களின் விரல்களுக்கு மை பூசுவதில்லை. அத்துடன் வாக்காளர் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ முக்கியப்படுத்தப்படுவதில்லை. நீங்கள் இன்னொருவரைக் கூட்டிக் கொண்டு போய் அவருடைய அடையாளத்தை உறுதி செய்தாலே போதும். வாக்களிக்க அனுமதிப்பார்கள்.

    இப்படியாக, மார்க்கத்தில் உள்ளவர்களைக் கூட்டி வந்து ஸ்காபரோவில் இறக்கி, இந்தப் புலிக் கூட்டம் கள்ள வோட்டுப் போட்டுத் தான், இந்த வெற்றி உறுதி செய்யப்பட்டது.

    அப்போது வீசிய தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஜாக் லேட்டன் பிரதமராகப் போகிறார் என்று வீசிய அலையும் சேர்ந்து, குப்பைக் காகிதம் ஒன்றை ஆடிக் காற்றில் சுழற்றி, கனடியப் பாராளுமன்றக் கோபுரத்தில் ஒட்ட வைத்து விட்டது.

    எல்லாம் எதற்காக? கனடியப் பாராளுமன்றத்தில் ஈழம் எடுப்பதற்காக!

    அதுவும் எப்படி? தாங்கள் சொல்கிற மாதிரி, அவர் அரசியல் செய்வார் என்ற எதிர்பார்ப்பில்!

    கனடியப் பாராளுமன்றத்தில் தமிழ் பேசப் பட்டது என்று துள்ளிக் குதிக்காத தமிழன் யார்?

    கொஞ்ச நாளில், தன்னைக் காவித் திரிந்தவர்களைக் கழற்றி விட...

    வழமை போல, யாழ்ப்பாணிகள் யாரைத் தலையில் தூக்கி கொண்டாடினார்களோ, அவர்களையே துரோகி ஆக்கும் பாரம்பரியத்தில், அவரது தோல்விக்காக உழைக்கத் தொடங்கினார்கள்.

    இவர்களது ஆதரவு தனக்குத் தேவையில்லை என்று மற்றவர்களின் ஆதரவை வேண்டி ஆடிய ஆட்டமென்ன? கூடிய கூட்டமென்ன?

    கறுப்பினத்தவர்களின் கரிபானா நிகழ்வில் அரைகுறை உடை ஆட்டம், கோயில் திருவிழாவில் குத்தாட்டம், மேடை நிகழ்ச்சியில் பரதம் என்று ஒரே ஆட்டம் ஆடி...

    கடைசியில் கட்சி தாவிப் பார்த்தும்....

    எல்லோருடைய கனவும் உதிர்ந்து கொட்டுண்டது!

    * * *

    அந்த முன்னாள் பா.உ தான் எனக்கு இரண்டடி முன்னால் இருந்து ஒரு பெரிய பந்தை வைத்து உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

    நானும் கண்களைக் காணும் போதெல்லாம், எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன்.

    தன்னை அடையாளம் காணவில்லை, வழமையான தமிழர்களின் பிரமிப்பு என்னிடம் இருக்கவில்லை என்ற நினைப்பு கண்களில் தெரிந்தது போல இருந்தது.

    அல்லது பிரமையோ?

    வீட்டுக்காரி வந்ததும் கிசுகிசுத்தேன்.

    ஆளைப் பார்.

    காரில் 'அது அவவல்லோ?' என்றேன்.

    'அவவே தான், நீ கூட்டிக் கொண்டு போன டான்ஸ் புரோகிராமில ஆடினா!'

    ஆடிய ஆட்டங்கள் பிசியோதெரபியில் முடிந்தது பற்றி அனுதாபப்படுவது தவிர வேறு எதுவும் எனக்கு தோன்றவில்லை.

    எய்தவர்கள் இருக்க அம்பை நொந்து என்ன பயன்?

    ***

    நண்பர் ஒருவர் சொல்வார்!

    அவவின் வெற்றிக்கு தான் தான் காரணம் என்று சொன்ன ஒரு முப்பது பேரை தான் இதுவரையில் கண்டிருப்பதாக!

    தமிழினம் தனக்கான தலைமையைத் தேடுவது இருக்கட்டும்.

    புலியை வைத்து அரசியல் செய்ய நினைத்த ஆண்ட பரம்பரை யாழ்ப்பாணி கூழ்ப்பானைக்குள் விழுந்து போய் கிடக்கிறான்.

    தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான தகுதி தங்களுக்கு இருப்பதாகவும், அந்த தலைமை தாங்கள் சொன்னபடியே அரசியல் செய்ய வேண்டும் என்ற நினைப்புடனும் திரியும்

    புலன் பெயர்ந்த அயோக்கியர்களை அகற்றினால் தான் தமிழினம் உருப்பட வாய்ப்புகள் உண்டு.

    Postad



    You must be logged in to post a comment Login