Recent Comments

    வா!

    vaaக. கலாமோகன்

    (“வா!” எனும் சிறுகதை தமிழ்நாட்டினது ஆழமான தலித் இலக்கியத்தைச் செழுமையாக்கும் “புதிய கோடாங்கி” இதழில் பிரசுரமானது. இந்த இதழ் புகலிடத்தின் பலரது வாசிப்புக்கும் கிடைக்காது இருப்பதால், இதனது PDF குறிப்பை இத்துடன் இணைக்கின்றேன் (http://www.puthiyakodangi.blogspot.in/). இதனது ஆசிரியராக இருப்பவர் தமிழின் சிறப்புக்குரிய பெண்ணிலைவாதியும், சாதீய எதிர்ப்பாளியும் , சமூக சமத்துவப்படை கட்சி தலைவர், நிறுவனர், காத்திரமான படைப்புகளைத் தமிழுக்குத் தரும் சிவகாமி. தமிழின் வாழ்வு சிறக்குமானால் “சாதீயம்” இருக்கக் கூடாது. எழுத்து உரிமையைப் பாதுகாப்பது “புதிய கோடாங்கி”யின் சிறப்பு . “மீறுதல்” எப்போதும் வாழ்வின் விழிப்புக்கு நல்ல ஓர் பாதையாக இருக்கலாம் என்பது என் கருத்து. போக்கிரித்தனமான கருத்துகளையும், சமூகங்களையும், விதிகளையும் மீறு…………………………”) என்னால் தூங்கமுடியவில்லை. காலை 2 மணி. எனது கால்களை அங்கு போ எனச் சொன்னேன். சில பெண்களும் பல ஆண்களும் நான் கடந்த வீதிகளில். ஒருவன் என்னிடம் முதலில் ஓர் தாள் கேட்டான். தாள் கிடைத்ததும் அவனுக்கு நெருப்புத் தேவைப்பட்டது. நெருப்பையும் கொடுத்தேன். -சுகமா? -நான் பதில்கள் உலகிலிருந்து தூரத்தில். -எனது சிகரெட்டை ஒரு தடவை புகை! ஓர் இழுவை. காலம் எனக்குமுன் காலங்களாகின. -நீ எனது நண்பன். -நானும் உனது நண்பன். -நீ எங்கே போகின்றாய்? -அது எனது கால்களிற்கே தெரியும் என நினைக்கின்றேன். -போ! எனது கையிலோ பையிலோ ஓர் பியர் ரின் இல்லாதபோதும் எனக்குள் ஓர் போதை இருந்தது. போ! நான் எனது கால்களிற்குக் கட்டளையிட்டேன். மார்க்ஸ் டோர்முவாச் சந்தி ஓர் வட்டச் சந்தியல்ல. நான்கு வீதிகளை அது இணைத்துள்ளது. அது தொடுக்கும் வீதியொன்றில் உள்ள பழைய தேவாலயத்திற்குள் நான் உள்ளிட்டது ஒருதடவை மட்டுமே. சந்திக்குத் தொலைவில் சில ஆண்டுகளின் முன் ஓர் கவர்ச்சியான பெண்ணைக் கண்டேன். எனது கால்கள் அவளைத் தொடர்ந்தன. அவளின் செக்ஸியான கோலத்தின்முன் எனது விழிக்குள் போதையேறியது. நான் அவள் பின். திரும்பிய கணங்களில் என்னைத் தனது விழிகளால் அழைத்தாள். நான் அவளைத் தொடர்ந்தேன். அவள் தேவாலத்தின் முன்னே வந்ததும் என்னைத் தனது விழிகளால் அழைத்துவிட்டு உள்ளே நுழைந்தாள். நானும். அவள் வெளியேறும்வரை உள்ளே நிற்பதென முடிவெடுத்துக்கொண்டேன். மெழுகுதிரிப்பக்கம் ஒன்றுமட்டுமே எரிந்துகொண்டிருந்தது. அவள் அந்தப் பக்கம் சென்றாள். தனது தோள்பையைத் திறந்தாள். பல மெழுகுதிரிகளை எடுத்தாள். அவை எரிந்தன, உருகத்தொடங்கின. என்னால் பொறுமை காக்க முடியவில்லை. அவளின் அருகே சென்றேன். ''போ!'' ''எங்கே?'' ''லாச்சப்பல் சந்திக்கு அருகில் உள்ள சாண்ட்விச் கடைக்கு!'' ''ஏன்?'' ''இவையனைத்தும் எரிந்து முடிந்தபின்னர் நான் உன்னை அங்கு சந்திப்பேன்'' ''நான் போவேன் நீ வருவாயா?'' ''வருவேன், பின்னர் நாம் காதல் செய்வோம்.'' ''நீ கட்டாயம் வருவாயா?'' ''போ!'' சாண்ட்விச் கடை களைகட்டி இருந்தது. முதலாளி பிற்ஸா போடும் வேலையில் பிஸியாக இருந்தார். அவியும் பிற்ஸாவிலிருந்து வந்த மணம் எனக்குள் ஓர் பேய்ப்பசியை ஏற்படுத்தியபோதும் அவள் எப்போது வருவாள் என எனக்குள் கேள்விக்குமேல் கேள்விகள். ''வா!'' நான் கத்தியது எவருக்குமே கேட்கவில்லை. ஆம் நான் எனக்குள் கத்தினேன். எனக்குள் வெடிக்கும் கேள்விகள். ''போ!'' இரண்டு மணித்தியாலங்கள். அவை எனக்கோ இரு நூற்றாண்டுகள்போல. ''சாப்பிட்டவர்கள் அனைவரும் போய்விட்டனர். சிலரைத் துரத்தியும்விட்டேன். கடை மூடும் நேரம். உங்களை எனக்குத்தெரியும் என்பதால் நான் துரத்தவில்லை. உங்களுக்குப் பசியென்றால், உடனடியாக ஓர் பிற்ஸா போட்டுத்தருகின்றேன். அதனை இங்கே சாப்பிடாமல் வெளியே சாப்பிடவும். நான் கட்டாயம் கடையை பத்து நிமிடத்துள் பூட்டவேண்டும்.'' ''எனக்குப் பசியில்லை. அவள் கட்டாயம் வருவாள் என நம்புகின்றேன்.'' ''எனக்கு விளங்குது. காசைக்குடுத்து ஏன் வருத்தத்தை வாங்குவான்.'' ''உன்னிடம் பிற்ஸா வாங்கியவர்கள் அனைவரும் நோயாளிகளா?'' ''போ!'' தேவாலயத்தை நோக்கி எனது கால்கள். அவள் அங்கே நிற்கவேண்டும் என்பது எனது பிரார்த்தனை. அவளது பிருஷ்டம் எனது முகத்தை மூடியது. அது ஓர் செங்கல்நிற மண்குடம். குடங்கள் வரிசையாக. கடலின்முன் குழாய்த்தண்ணீருக்காகக் காத்திருக்கும் சித்திரங்கள். இந்தப் பாரமான குடங்களை எவ்வாறு அந்தச் சின்ன இடைகள் தாங்கின என்பதை என்னால் இன்றும் விளங்கமுடியாமல் உள்ளது. இன்றோ குடங்களும் இல்லை, இடங்களும் இல்லை, இருப்பும் இல்லை. பேய்கள் மட்டுமே குண்டுகளோடு. போ! தேவாலயம் மூடப்பட்டுக்கிடந்தது. Merde! அவள் எங்கே? அனைத்துப் பக்கமும் அலைந்தன எனது விழிகள். அபூர்வமாக அலைந்த அனைத்து நிழல்களும் அவளது உடலின் படைப்புகள்போல. ஆசையும் கோபமும் எனக்குள் போர் செய்தன. நான் மூடப்பட்டுக்கிடந்த தேவாலயத்தின்முன் முழங்காலில் என்னை இருத்தி செபம் செய்யத்தொடங்கினேன். ''வா!'' வந்தாள். ''நான் உனக்காகக் காத்திருந்தேன்.'' ''எங்கே?'' ''சாண்ட்விச் கடையில்.'' ''மன்னித்துக்கொள். நான் அங்கு வரவில்லை.'' ''ஏன்?'' ''இதனைக் யேசுவிடம் கேள்.'' ''அவர் இறந்துவிட்டார். சிலுவையில். சிலுவை சித்திரவதையின் குறியீடு.'' படி! எனது கையில் ஓர் கிழிந்தும் அழுக்காகியும் கிடந்த ஓர் விவிலிய வேதத்தைத்தந்து இன்னொருவன் பின்னால் ஓடினாள். ஏன்? ''மாலை வணக்கம்!'' என்முன் ஓர் வயோதிபர் தரிசனம் தந்தார். ''மாலை வணக்கம்!'' என நானும் சொன்னேன். ''அவளை எனக்குத் தெரியும்.'' ''என்னைச் சந்திக்க அவள் இன்று ஒப்புக்கொண்டாள். ஆனால் சந்திக்கும் இடத்திற்கோ வரவில்லை.'' ''அவள் அப்படித்தான்.'' ''அப்படித்தான் என்றால்?'' ''அவள் ஒப்புக்கொண்டபோது உனக்குள் ஓர் சந்தோஷம் ஏற்பட்டதல்லவா?'' ''உண்மை, ஆனால் அவள் வரவில்லையே?'' ''அவளது முதலாவது ஒப்புதல்தான் முக்கியம், அவளல்ல. அவள் வராதுவிட்டதற்கு அவள் காரணமல்ல, நானே காரணம்.'' ''என்ன நீ காரணமா?'' ''நீ அவளின் பின்னே நடந்து கொண்டிருந்தபோது நான் உனக்குப் பின்னே நடந்துகொண்டிருந்தேன். நீ என்னைக் காணவில்லை. நீ தேவாலயத்துக்குள் நுழைந்தபோது நானும் நுழைந்தேன். நீ அவளோடு பேசிவிட்டு வெளியே போவதைக்கண்டேன். நானோ அவள் வெளியே போகும்வரை உள்ளே இருந்தேன்.'' ''நிறுத்து! எனக்கு விளங்குகின்றது.'' ''அவளை விடு! அவள்களின் உலகத்திற்கான வழியை என்னால் உனக்குக் காட்டமுடியும்!'' ''காட்டு!'' "18, rue de la Chappelle'' "Bonne nuit à toi!" (உனக்கு நல்ல இரவு!) 19 ஆம் இலக்கம் நான் நின்ற வீதியிலேயே இருந்தது. 10 நிமிடமாவது நடக்கவேண்டும். என்னைக் கட்டியணைக்கத் துடித்த களைப்பு என் கண் முன்னே காணாமல் போனது. உஷார். நான் அவள்களது உலகை நோக்கி நடந்தேன். மார்க்ஸ் டோர்முவாச் சந்தி ஓர் மயானம் போலக்கிடந்தது. நேரத்தைப் பார்த்தேன். பி எம் 2 மணியைத் தாண்டி. கால ஒழுக்கம் எனது மறதிக் கிடங்குள். கிறெடிற் லியோன் வங்கிமுன் பல வெறுமையான பியர் ரின்கள். எனக்குள் தாகம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் என்முன் எந்தக் கடைகளும் தெரியவில்லை. நான் சந்தியைத் தாண்டி இன்னோர் வீதிக்குள் ஓர் நம்பிக்கையோடு நுழைந்தேன். ஓர் கடை எனக்காகக் காத்திருந்தது. ''பியர்?'' ''உன்னிடம் காசு உள்ளதா?'' ''பியரைத் தா! காசு வரும்.'' ''பிடி, 1ஈரோ90.'' ''பிடி, 2ஈரோ, மிஞ்சும் பத்து உனக்காக. '' ''மேர்சி'' ''து றியான் முன் அமி''. 19. 19 19 றூயூ து ல சப்பெல். (வீதியின் பெயர்) அந்த இரவில் நான் சாறி கட்டிய எந்தப் பெண்களையும் சப்பெல் வீதியில் காணவில்லை. சில பெண்களைக் கண்டேன், சாறி இல்லாமல். ''சகோதரனே! வீடு செல்! தூங்கு!'' ஓர் பெண் என்னிடம் சொன்னாள். ''நான் 19 ஆம் இலக்கத்துக்குப் போகவேண்டும்.'' ''அங்கு போகாதே!'' ''ஏன்?'' ''அங்கு. . .'' ''என்ன?'' ''வா!'' ''எங்கு!'' ''எனது வீட்டிற்கு!'' ''ஏன்?'' ''உனக்கு எது தேவையோ அதனைத் தருவதற்கு!'' ''வேண்டாம்!'' ''வா!'' ''போ!'' அவள் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு முதுகைக்காட்டி நடந்தாள். 19 ஆம் இலக்கத்திற்குச் சிறு தூரத்தில் நான். அந்த இரவில் அதற்குள் உடல்கள் சில போவதும் வெளியேறுவதுமாக. எனது கால்களில் ஓர் இனம்புரியாத வலு. கதவைத் தள்ளித்திறந்து உள்ளிட்டேன். ''வா!'' தனது முலைகளைக் கைகளில் தாங்கியபடி அவள் அழைத்தாள். அவளைக் கடந்து நடக்கையில் இன்னோர் அழைப்பு! ''வா! வா! திறந்து கிடந்த கதவின் முன் அவள். மொழிக்கிடங்காக அவளது விழிகள். கட்டில் தெரிந்தது. சமையல் புகை எனது நாசியைத் தொட்டதால் எனக்குள் ஓர் பசி. ''வா!'' நான் நானாக இல்லாமல். தலைக்குள் ஓர் குளிர்மழை. ''இங்கே 5 மாடிகள். ஏறு! நிறைய இளம் பெண்கள்! ஏறு!'' ஏறிக்கொண்டிருந்த ஒருவன் எனக்குக் கேட்கும்படி சொன்னான். அது ஓர் சுத்தமான கட்டிடமல்ல. சிறுநீரகமணம் வீசியது. படிகள் தேய்ந்துகிடந்தன. அரசால் கழித்ததுவிடப்பட்ட கட்டிடமாக இருக்கலாம் என நினைக்கத்தோன்றியது. ''வா! உள்ளே வா!'' முதலாவது மாடியில் அழைப்புவிட்டவளின் உடல் என்னை அவள்முன் ஓடவிட்டது. ''20 ஈரோ'' என்றபடி தனது நாக்கைத் தன் உதடுகள்மீது லாவகமா உருளவிட்டாள். ''நீ எனது மனைவியாகுவியா?'' ''நான் மனைவியாகிவிட்டேன். வா!'' என்னைத் துக்கம் தொட்டது. ''வா!'' பதில் எதுவும் சொல்லாமல் 2 ஆவது மாடிக்குத் தாவினேன். 3 பெண்கள் ஒரே தடவையில். . . . . ''வா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!'' மூன்று அறைகளும் திறந்துகிடந்தன. மூன்று கட்டில்கள். மெத்தைகள் அழகாக இரவுப் பசியைத்தூண்டும் விதத்தில் விரிக்கப்பட்டிருந்தன. ''என்னோடு வா!'' என ஒருத்தி கேட்டபோது ஏனைய இருவரும் பொறுமை விழிகளால் என்னைப் பார்த்தபடி. இந்தப் பொறுமையின் அர்த்தம். . . நான் மூன்றாவது மாடிக்குத் தாவினேன். ''வணக்கம் அம்மா?'' ''வணக்கம் பெபே! வா!'' எனது கண்கள் முன் எனது அம்மா. ''அம்மா!'' ''வா!'' அவள் எனது அம்மாவைப் போலவேயிருந்தாள். ''நீங்கள் எனது அம்மாவைப் போல!'' ''வா!'' என்னை அறைக்குள் இழுத்தாள். எனது உதடுகளில் அவளது உதடுகள். ''வேண்டாம்!'' நான் பலவந்தமாக அறையைவிட்டு வெளியேறி 4 ஆவது மாடிக்குத் தாவினேன். ''பெடே(அலி)'' என அவள் ஆத்திரத்தில் கத்துவது எனக்குக் கேட்டது. ஒலியைத் துரத்தி அவளது முகத்தைமட்டும் எனக்குள் படம்பிடித்துக் கொண்டேன். நான்காவது மாடியில் நான் கதவுகளும் மூடப்பட்டுக்கிடந்தன. காம முனகல்கள் எனது காதுவரை. எனக்குள் சூடு. ஒவ்வொரு கதவையும் தட்ட எனது கரங்கள் துடித்தபோதும், துணிச்சல் ஏற்படவில்லை. இந்த ஒலிகள். இந்த ஈரமான கவிதைகள். இந்த வாசிப்புகள். இந்த இடங்கள். இந்தக் கதவுகள். இந்த உடல்கள். இந்த இரவுகள். கதவு ஒன்று திறபட்டது. ஒருவன் வெளியேற ஒருத்தியின் தலை. குலைந்து கிடந்தது. ''வா!'' களைப்புள் கரைந்து வந்தது அழைப்பு. அதனைத் தொடர்ந்து ஓர் குழந்தையின் அழுகை. அவளது முகம் மறைந்தது. 5 ஆவது மாடியில் நிறைய ஆண்கள். ''எங்களது முறைக்காகக் காத்திருக்கின்றோம்.'' சொன்னவன் முகம் வர்ணம் எதுவுமற்ற கதவொன்றை வெறியோடு பார்த்தபடி. எனது பாதங்கள் இறங்கத் தொடங்கின. 4 வா! 3 வா!!! 2 வா!! 1 வா!!!!!!!!!!!!!! கீழ் தளத்தில் நான். சமையல் புகை வந்த அறையின்முன் அவள் நிர்வாண முலைகளோடு. சிரித்தாள். ''எனக்குப் பசிக்கின்றது!'' ''வா!'' உள்ளே நான். ஓர் கோப்பையில் சோறும் சின்ன மீன்துண்டும் குழம்பும். என்னிடம் தந்தாள். நான் அனைத்தையும் விரைவில் சாப்பிட்டதால், ''உனக்கு நல்ல பசிதான்!'' என்றபடி மீண்டும் எனக்குப் பரிமாறினாள். நன்றி சொல்லியபடி அதனையும் சாப்பிட்டு முடித்தேன். '' இப்படியொரு உபசாரம் கிடைக்குமென நான் எதிர்பார்க்கவேயில்லை. உனது உணவின் ருஷி எப்போதும் எனது நாக்கிலிருக்கும்.'' 20 ஈரோவை அவள் முன் நீட்டினேன். அதிர்ச்சியோடு அவள் முகம் '' ஏன்?'' எனும் விதத்தில் என்னைப் பார்த்தது. ''உனக்கு!'' ''ஏன் எனக்கு?'' ''உனது உபசாரத்திற்கு!'' ''நான் வா என்றபோது வந்திருந்தால் இதனை வாங்கியிருப்பேன். வா! என்னோடு காதல் செய்! என்னைச் சுவை! வாங்குவேன்.'' ''என்னிடம் இந்தக் கணத்தில் எந்த செக்ஸ் விருப்பமும் இல்லை. பிடி!'' நீட்டினேன். ''எனக்கு எனது உடலை மட்டுமே விற்கத்தெரியும், எனது உபசாரத்தையல்ல.'' வெளியேறி நான் நடக்கத் தொடங்கிய வீதிகள் அனைத்திலும் அவளது முகத்தின் நிழல்களே. பாரிஸ் 28-07-2004, நன்றி புதியகோடாங்கி, தமிழ்நாடு, அக்டோபர் 2004.

    Postad



    You must be logged in to post a comment Login