Recent Comments

    உரு கல்

    ஜோர்ஜ் இ.

    தூக்கத்தில் உதடுகளால்
    தாயின் மார்புகளைத் 
    தேடும் குழந்தையைப் போல

    என்னை அறியாமலேயே
    அரைகுறைத் தூக்கங்களில்
    கையை நீட்டி
    உன்னைத் தேடும் அளவுக்கு...

    கிணுங்கல் அழைப்புகள் 
    உன்னுடையதாகவும்

    சிணுங்கல் தெரிவிப்புகள் 
    உன் காதல் தோய்ந்த வரிகளாகவும் 
    இருக்காதா என்று
    இதயம் துடிக்கும் அளவுக்கு...

    எங்கள் இருவருக்கு மட்டுமே
    விளங்கிச் சிரிக்கக் கூடியதான 
    ஒரு சங்கேத மொழியை 
    உருவாக்கும் அளவுக்கு...

    அழைக்காத கணங்களிலே
    அதீதமான கற்பனைகளால்
    மனம் வெறுமையாகி
    கழிவிரக்கம் கொண்டு
    கண்ணீர் விட்டு அழும் அளவுக்கு...

    நீ எதேச்சையாகச் 
    சொல்லிப் போகின்றவற்றை நினைத்து
    அனாவசியமாய்க் கவலை கொண்டு
    தூக்கத்தைத் தொலைக்கும் அளவுக்கு...

    இரகசியங்களைப் பயம் இல்லாமலும் 
    அந்தரங்கங்களை தயக்கம் இல்லாமலும்
    ஆபாசங்களை கூச்சம் இல்லாமலும்
    பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு...

    உறங்குவதற்கு முன்னால்
    உன் குரலை ஒரு தடவையாவது
    கேட்டு விட வேண்டும் என்று
    இரவுகளில் தூங்காமல் 
    காத்திருக்கும் அளவுக்கு...

    என் கனவுகளில் கூட
    என்னை நீ தனிமையில் 
    விட்டு விடக் கூடாது என்று 
    வேண்டிக் கொள்ளும் அளவுக்கு...

    உன்னை பங்கு போட விரும்பாமல்
    எனக்கே உரிமையாக்கிக் கொள்ள 
    துடிக்கும் அளவுக்கு...

    உயிர் போனாலும் 
    உன் மடியில் தான் என்று
    என் உலகமே நீயாகும் அளவுக்கு...

    நான் கற்பனை செய்து 
    காலம் காலமாய் தவம் இருந்து
    காத்திருந்த கனவுகளின்
    மொத்த வடிவமாக...

    எனக்கு எல்லாமாக நீ இருந்தாய்!

    எனக்குள் எல்லாமாக நீ இருந்தாய்!

    ***

    நீயே

    உருக்கிய இதயத்தை...

    உன்னால் எப்படி
    உடைக்க முடிந்தது?


    பொறுப்பு துறப்புரை

    1. அமைதி. அமைதி. யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம். விபரீதம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை.

    நொந்து போன இதயத்திற்கு ஒத்தடம் கொடுப்பதற்கான டெண்டர்கள் எதுவும் கோரப்படவில்லை. ஏற்கனவே உள்வீடுகளிலேயே நெளிவு எடுப்பதற்கு உருட்டுக் கட்டைகளுடன் ஆட்கள் உள்ளதால் உட்பெட்டிக்குள் அதற்கான தேவைகள் இல்லை. 

    2. ஒரு காதல் கவிதை எழுதினால் காதல் வயப்பட்டவன் என்று கற்பனை வந்தால்.... கண்ணதாசனும் வைரமுத்துவும் எத்தனை தடவை... 

    ஓ! தவறான உதாரணங்கள்!

    3. ஆண்கள் காதல் பற்றி எழுதினால் அது ஆண்கள் பற்றியதாகத் தான் இருக்க வேண்டும் என்பதுமில்லை. அடிக்கடி உட்கார்ந்து அழ வைக்கும் ஒரு அயோக்கிய ராஸ்கல் ஒருவனிடம் மனதைப் பறி கொடுத்து புலம்பும் ஒரு பரிதாபத்திற்குரிய ஜீவன் குறித்து எழுதியது.

    4. கைவிட்ட இடத்தில் கடலை போடலாம் என்ற கனவுடன் எவராவது, 'உட்பெட்டி உம்..மா!' கவிஞர்கள் ஆதல் கருதி, உட்பெட்டி விலாசம் கேட்டு உட்பெட்டிக்குள் முற்றுகையிட வேண்டாம். 

    (இந்த 'உட்பெட்டி உம்...மா!' என்ற பதம், என்னுடைய உட்பெட்டிக்குள் வந்த அம்பு.. ஓ.. அன்பு ஒன்றிடம் கடன் வாங்கியது!)

    5. இவ்வாறான அயோக்கிய ராஸ்கல்களிடம் மனதைப் பறி கொடுத்து, இதயம் நொருங்கியவர்கள் பதிப்புரிமை பற்றிய கவலை இன்றி தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

    6. ஆனால் 'அவர் மனம் திருந்தி வருவார்', 'மற்றவேயை விட்டிட்டு என்னோட மட்டும் அன்போடு இருப்பார்' என்ற கனவுகளில் இருப்போர், இவ்வாறான அயோக்கிய மன்மத ராசாக்களைக் கை கழுவி விட்டு, தன்னம்பிக்கையோடு, தங்களைப் புரிந்து கொள்ளுகிறவர்களைத் தேடிக் கொள்வது நல்லது. 

    தாங்கள் குடியிருக்கும் கோயில்களை உடைப்போர் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!

    Postad



    You must be logged in to post a comment Login