Recent Comments

    சேலை அணி படலம்

    பூங்கோதை

    “ அக்கா, நான் லட்டுவை பள்ளிக்கூடத்தில விட்டிட்டு ஓடி வாறன். உங்களுக்கு நீங்கள் கேட்ட, உங்களுக்கு நல்ல விருப்பமான உழுத்தம் கஞ்சி, அம்மா செய்திட்டா. சாப்பிடுங்கோ நான் ஓடி வந்திடுவன்!” அப்போது காலை 7:40.

    அதற்கு முன்னதாக, ஏற்கனவே எனக்குத் தேவையானதெல்லாம் எனது அறையில் இருக்கிறதா எனச் சரி பார்த்து, தனது குடும்பத்து தேவைகளையும் முடித்த பின், தானும் குளித்து முடித்து பாடசாலை ஓடுகிறாள் தன் சின்ன மகனுடன்.

    “ சரி, ஓடாமல் ஆறுதலாய் வந்து சேர் பிள்ளை!”

    “ சாறி பிளவுஸ் தைச்சு எடுத்தாச்சு, போட்டுப் பார்த்தனீயோ?” ஓடும் போதே முதல்க் கேள்வி.

    “ இதில என்னத்தைப் போட்டுப் பார்க்கிறது. எல்லாம் சரியாய்த்தான் இருக்கும்.” நான் கொஞ்சம் பெளவ்வியமாய் சொல்லி வைத்தேன்.

    “ லண்டனிலயிருந்து படங்கள் வரேக்க பார்க்கிறனான் தானே? கோணங்கி மாணங்கியாய் ஒண்டு போட்டிருப்பாய், அதால தான் இங்க வடிவாய் அளவு எடுத்து தைச்சு வைச்சிருக்கு. உனக்கு அதைப் போட்டுப் பார்க்க பஞ்சியாயிருக்கோ?” சந்திரமுகியாய் மாறினாலும் மாறுவாள் என உள்மனது அறிவுறுத்தியது.

    “ சரி, சரி நான் போட்டுப்பார்க்கிறன், நீ போட்டு வா பார்ப்பம்.” தடாலடியாய்க் காலில் விழுந்தேன்.

    இருபத்தைந்து நிமிடத்தில் நான் பாசத்தோடு லட்டு என்று அழைக்கும் தன் சின்ன மகனைத் தன் சைக்கிளில் இருத்தி, பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பி வந்திருந்தாள்.

    அதற்கிடையில் தன் மூத்த மகனை நந்தியாவட்டை, எக்சோரா ( தமிழ்ப்பெயர் தெரிந்தவர்கள் தந்து உதவுங்கள்!) பூக்களைப் பறித்து வைக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்தாள்.

    அன்றைய நாள் பிற்பகல் 3 மணிக்கு எனது தாத்தாவின் நூல்களைத் தொகுத்து வெளியிடும் நிகழ்வுக்கு, அவருடைய படத்திற்கு பூமாலை கட்டித்தரும் நடவடிக்கைக்கான உத்தரவு அது.

    அத்தோடு, மேடைக்கு வரும் அறிஞர் பெருமக்களுக்குத் தேவையான சில பொன்னாடைகள், சந்தனமாலையில் சிறிது குழப்பம் ஏற்பட்டிருந்தது, இன்னும் சில வாங்க வேண்டியிருந்தது. அத்தோடு பார்வையாளர்களை உபசரிக்க வேண்டிய சிற்றுண்டிகளைத் தன் கணவரோடு, போய் எடுத்து வர வேண்டிய அவசியமும் இருந்தது.

    நேரம் காலை 9 :30 ஐத் தொட்டிருந்தது.

    “ நான் கடைகளுக்கு போட்டு வாறன், சாறி பிளவுஸ் போட்டுப் பார்க்கேக்க அப்பிடியே கறுப்புப் பாவாடை ஒண்டும் வாங்கி வைச்சனான். அதையும் கட்டிப்பாருங்கோ!” காட்டமாய் சொல்லப்பட்டது.

    “ ஏன் நான் பிங் பாவாடை ஒண்டு கொண்டு வந்தனான் எல்லோ? இப்ப ஏன் தேவையில்லாமல் கறுப்புப் பாவாடை?” வலும் மிருதுவான குரலில் கேட்டு வைத்தேன்.

    “ கடும் நீலச் சாறிக்கு என்னெண்டு நீ பிங் பாவாடை கட்டுவாய்?
    நேற்றைக்கு வேம்பிராயில நடந்த முன்பள்ளித் திறப்பு விழாவில மெல்லிய நீல சாறிக்கு பிங் பாவாடை கட்டி, என்ர மானத்தை வாங்கினனீயெல்லே?” குற்றவிசாரணை ஆரம்பித்தது.

    “ உனக்கெப்பிடித் தெரியும் நான் பிங் பாவாடை கட்டின விசயம்?” பாவி, எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு தான் கேட்கிறாள் என மனது அடித்துக் கொண்டது.

    “ அங்க சில இடங்களில மழைத்தண்ணி நிக்கேக்க நீ வெட்கம், மானம் இல்லாமல்ச் சீலையை அரை அடிக்கு தூக்கிப் பிடிச்சுக் கொண்டெல்லே நடந்தனீ? எத்தனை பேர் உன்ர காலைப் பார்த்திருப்பினம், உனக்கு அந்த பிங் பாவாடையும் தெரிஞ்சதெண்டு வெட்கமாயில்லையே?” சரளமாய்க் கேள்விக்கணைகள்.

    “ ஏதோ நான் பாவாடை கட்டியிருக்கிறன் எண்டு சனம் சந்தோசப்படவெல்லோ வேணும்? நான் லண்டனில ஜீன்ஸ்சுக்கு மேல தான் சாறியே சுத்திறனான்.”

    என் கொள்கை விளக்கம் அவளுக்குத் திருப்தியாய் இல்லை.

    “ அது சரி, நீ எப்ப ஒழுங்காய் சாறி கட்டினனீ? உன்ர படங்களைப் பார்த்தால் எனக்கு எவ்வளவு கோவம் வாறது தெரியுமே? உனக்கு சாறி அயர்ன் பண்ணத் தெரியாதே?”

    “ சரி, திட்டாதை. இனிமேல் அயர்ன் பண்ணிக்கட்ட முயற்சி செய்யிறன்!” கட்டாயம் செய்வேன் என்று உறுதி கொடுக்கவில்லை. துண்டைக்காணம், துணியைக் காணம் என ஓடும் இலண்டன் மாநகரின் இயந்திர வாழ்வில், ஆசைக்கு நான் சேலை உடுத்துவதற்கே பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்.

    “ சரி, கனக்க யோசிக்காதை, இண்டைக்கு நான் தான் உனக்கு சாறி கட்டி விடுறது. கவனமாய்ப் பார்த்து வைச்சுக் கொள்!” நான் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாலும் என்ற முன் எச்சரிக்கை அவள் வார்த்தைகளில் தெறித்தது.

    அப்பாடி தப்பித்தேன். மூன்று தசாப்தங்களுக்கு முன், ஊரிலிருந்து புறப்பட்ட போது, போறாளே பொன்னுத்தாயி, பொலு பொலுவென்று கண்ணீர் விட்டு… பாடிய எனக்கு பதின்ம வயது தான் ஆகியிருந்தது. இரண்டோ மூன்றோ தடவைகள் தான் தாவணியும் இரண்டு அல்லது மூன்று தடவைகள் சேலையும் கட்ட நேர்ந்திருந்தது. இப்போதும் சேலை கட்டுவதென்றால் கொள்ளை ஆசை எனக்கு. ஆனால் இவள் பாவி எனக்கு சேலை கட்டவே தெரியாதென்கிறாள்.

    இந்த இடைவெளியில் சாவகச்சேரி போய் வந்து, சிற்றுண்டிகள் எடுத்து வந்து, எனக்கும் ஒரு தேனீர் போட்டு, “ இந்தா இதைக் குடி, உனக்கும் என்ர மனுசனைப் போல பத்துத்தரம் டீ போட்டுக் குடிக்க வேணும்! உனக்கு யார் அங்க இப்பிடிப் போட்டுத்தரப் போகினம்?” அன்போடு டொய்ங்கெண்ட சத்தத்தோடு தேனீரை மேசையில் வைத்தாள். மணி மதியம் 12 ஐத் தொட வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

    நான் வந்த நேரம் போலும், மழை அடித்து ஓய்ந்த பகற்பொழுதுகள் வெப்பத்தை உள்வாங்கி இதமாகியிருந்தன. மின்விசிறியை ஓடவிட்டு, தேனீரை சுவைக்கத் தொடங்கிய போது, அவள் பூமாலை கட்டத் தொடங்கியிருந்தாள்.

    நான் அவளது கைகளின் நேர்த்தியிலும் வேகத்திலும் பூமாலை ஒன்று ரம்மியமாக உதயமாவதை ரசிக்கத் தொடங்கியிருந்தேன்.

    இடையிடையே எழுந்து போய், லட்டுவுக்கு சாப்பாடு வழங்கியவாறே, தொலைபேசி அழைப்புகளையும் சமாளித்தவாறு, அவள் பூமாலையைக் கட்டி முடித்த போது, நேரம் பிற்பகல் 1 மணி ஆகியிருந்தது.

    “ ஒருக்கால் விழா மண்டபத்தை பார்த்துக் கொண்டு, என்ன தேவை எண்டதையும் பார்த்துக் கொண்டு, வாறவைக்கு குடுக்கிற றோல்ஸ், கேக், வடையை ஒழுங்கு பண்ணீட்டு வருவமோ?”
    அது என் அனுமதி கோரிக் கேட்கப்பட்ட கேள்வியல்ல, கட்டளை என்பது புரிந்து, நானும் சம்மதித்தேன்.

    ஓட்டோ அழைக்கப்பட்டது. துரித கதியில் மண்டபத்தை சுற்றிப் பார்த்ததில், சாவகச்சேரி பிரதேச சபையால் விழாவை நடத்துவதற்குத் தேவையான அனைத்தும் வழங்கப்பட்டிருந்தன. இருந்தாலும் ஒரு சில பொருட்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பதைக் கண்களால் அளந்து கொண்டாள்.

    “ நான் உதில கடைக்கொருக்கால் போட்டு வாறன், அதுவரைக்கும் பயப்பிடாதை, இங்க வேலைக்கு இருக்கிறவை எல்லாரும் எங்களுக்குத் தெரிஞ்சவை தான். சும்மா நிக்காமல் இந்த கேக்கையும் ஒரே சைசில வெட்டி இந்தப் பெட்டிகளுக்க போடு பார்ப்பம்!”
    சொன்னபடியே பெட்டிகளைத் தந்தபடி, கட்டளைத்தளபதி மறைந்தாள்.

    நான் அடுத்து வந்த அந்த 20 நிமிடங்களில் பரபரப்பாக, எனக்குப் போடப்பட்ட கட்டளையை நிறைவேற்றினேன். பிரதேச சபை ஊழியர்கள் சிலரும் தயை கூர்ந்து, நிகழ்விற்குத் தேவையானதை ஒழுங்கு செய்து உதவ, நூல் வெளியீட்டுக்கு இன்னும் 60 நிமிடங்களேயிருந்தன.

    “ சரி, வா, இனி டக்கெண்டு வீட்டுக்குப் போய், சாறியைச் சுத்துவம்!” நான் கூறியதை செவி மடுத்தபடி, ஏற்கனவே நாங்கள் வந்த ஓட்டோ மறுபடி வீடு போவதற்காக காத்திருக்க, என்னையும் தன்னையும் அள்ளி அடைந்து ஓட்டோவில் ஏற்றினாள்.

    “ சாறியைச் சுத்திறேல்ல, வடிவாய்க் கட்டிறது!” சிறிது நேரம் கழித்து, அவள் சொன்னது கேட்காததைப் போல், கச்சாய் வீதியில்ப் புதிதாகத் தோன்றியிருக்கும் வீடுகள், கட்டடங்களை பராக்குப் பார்க்கக் தொடங்கியிருந்தேன்.

    ஐந்தே நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்த கையோடு “சாறி அயர்ன் பண்ணிக் கட்டி விடுறன், ஆடாமல் வந்து நில்லு பார்ப்பம்! “

    குளித்து முடித்து, கறுப்புப் பாவாடையும் அழகான மேற்சட்டையும் உடுத்தி, நான் அவசரம் அவசரமாக அவள் முன் சோளக் கொல்லை பொம்மை போல வந்து நின்றேன். நிகழ்வுக்கான நேரம் நெருங்குவதையிட்டு சற்றே பதட்டம் ஏற்படுவதை உணர்ந்ததால், சேலையை ஏதோ சுற்றினாற் போதும் என்ற நிலை எனக்கு.

    “ இப்ப கட்டாயம் அயர்ன் பண்ணத்தான் வேணுமோ?” மெதுவாய் திருவாய் மலர்ந்தேன்.

    அவளிடமிருந்து பதில் ஏதும் இல்லை, ஒரு பார்வை மட்டும் வீசினாள், அது என்னை மேற்கொண்டு பேசினால் விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதை எச்சரித்தது.

    “ சரி, சரி நீ சாறியை உடுத்தி விடு பிள்ளை..” சமாதானம் ஆனேன்.

    Photo:Kichcha, Kachchai.

    அவள் முந்தானைக்கான மடிப்புகளை மிக நேர்த்தியாக, நான் வழமையாக மடிக்கும் அளவை விட சிறிதாக எடுத்து, ஊசியைச் செருகி, அதை ஒரு பக்கம் வைத்த போது, இன்னொரு கட்டளை பிறந்தது.

    “ இப்பிடிச் சின்ன மடிப்புத் தான் உனக்கு வடிவாய் இருக்கும், கவனமாய்ப் பார்த்தனீயோ?”
    தலையைப் பலமாக ஆட்டி வைத்தேன்.

    அதன் பின் முன் பக்கத்தில் சொருகுவதற்கான மடிப்புகள், நான் வலப்பக்கத்தில் இருந்து தொடங்குவது போல் அல்லாமல், இடப்பக்கத்திலிருந்து சிறிது சிறிதாக மடிக்கப்பட்டது. நான் நேரத்தைப் பார்த்தேன், மூன்று மணிக்கு இன்னும் 35 நிமிடங்கள் இருந்தன.

    எனக்கு மேல் சுற்றியிருந்த சேலையை, மடிப்புகளோடு கழற்றி, அதைத் துரித கதியில் அயர்ன் பண்ணி, மீண்டும் சோளக் கொல்லை பொம்மைக்குச் சுற்றி, ஊசிகள் குத்தப்பட்டு அந்த ‘சேலை அணி படலத்தை’ மிக நிதானமாக, ஆனால் துரித கதியில், கை தேர்ந்த ஒரு ஒப்பனையாளரின் திறமையோடு முடித்திருந்தாள். நிகழ்விற்கு இன்னும் 25 நிமிடங்கள், தாராளமாய் மிஞ்சியிருந்தன.

    “ இனிமேல் இப்பிடித்தான் சாறி உடுத்த வேணும், விளங்குதோ?” அவள் கேட்ட போது, எனக்கு ஏனோ அது அகாலமாக மறைந்த என் அம்மாவின் குரலில் ஒலித்ததாகப் பட்டது. 

    Postad



    You must be logged in to post a comment Login