Recent Comments

    சக்திக் கூத்து: உலகக் கலைவாசிப்புள் பிரசன்னாத்துவம்

    PrasannaRக.கலாமோகன்

    danse indienne

    எது சொல்வது? பிரசன்னாவின் (Prasanna Ramaswamy)  கலை இலக்கிய உலகில் வீழ்ந்தபோது எதைச் சொல்வது? நான் பார்ப்பதற்குச் சென்றேன். விழிகளுக்கு  மிகப் பெரும் விருந்தாக இருந்தது  “சக்திக் கூத்து”. இந்தக் கூத்தின் மீது சுலபமான மொழிகளில் சொல்ல முடியாது. பிரமாதமான கலை வெளிப்பாட்டின் ஆழங்களும், தாளங்களும் விழிகளுக்கும் மனதுக்கும் வாழ்வியல் செய்திகளைச் சொல்கின்றன. ஜூன் மாதம் 24,25,26 ஆம் திகதிகளில் 120, Rue Haxo, பாரிஸ், 2010 இல் நடந்த இந்தக்  கூத்தினை  நிறைய பிரெஞ்சு மக்களும், தமிழ் மக்களும் பார்த்தனர்.  நிச்சயமாக பிரெஞ்சுகாரருக்கு தமிழ் மொழியில் இந்த நாடகம் நடந்ததால் தெளிவான விளக்கம் கிடைத்திருக்க முடியாது. ஆனால், அவர்களது விழிகளுக்கு நிச்சயமான உவப்பு விருந்தாகக்  கிடைத்தது “சக்திக் கூத்து”.

    பாரதியின் கவிதைத்துவம் சக்தியில் தோன்றியது, சக்தியில் நடனமாடியது. ஆம்! சக்தித்துவம் எமது கலைத்துவத்தை அடையாளம் காணவைப்பது, இதனது செய்திகளை மொழி மூலத்தையும் தாண்டி உலகுக்குக் கேட்க வைப்பன “சக்திக் கூத்து”.  பிரசன்னாவின் சக்தித்துவத்துள் பாரதியின் வீச்சும், புகலிடக் கவிஞர்களின் வீச்சும் சங்கமித்து போரை எதிர்க்கின்றது, பெண் விடுதலையை நாடுகின்றது. இவரது இருமொழிப் புலமை ஆடுதலையும் பாடுதலையும் புதிய எழுச்சிக்குள் தள்ளுகின்றது. ஆம்! மனித வாழ்வு ஓர் இலக்கில்தான் உள்ளது… விடுதலையை நிர்மாணிப்பது. விடுதலை நிர்மாணிப்பின் தாகங்களைத் தருவதே  பிரசன்னாவின் படைப்புகள்.

    எது சொல்வது? நாடக உலகுள் கொஞ்சம் புரிந்த என்னால் எப்படிச் சொல்வது? பாரிசில் ஒரு சந்திப்பில் அவருக்கு நண்பரானேன். இந்த சந்திப்பில் கலைதான் அவரைக் காவுகின்றது என்பது என் நினைப்பு. எனது நண்பியின் கலை உலக ரசிப்பினை சுலபமாக வாங்குவது. இந்தக் கலையுள் நிறைய கலாசாரங்களின் இணைப்பு ஜனித்தலைக் காணலாம்.

    பிரசன்னா 23 களுக்கு மேலான படைப்புகளை உலக ரசனைக்குத் தந்துள்ளார். இந்தப் mathivaanan, rokini, revathiபடைப்புகள் இவரது ஆழமான  இயக்கத் தியாநிப்பால்தான் எழுகின்றன. ஆனால் நான் இவைகளில் சிலவற்றையே பார்த்துள்ளேன்.  முதலாவது படைப்பு இவரது இனிய அழைப்பினாலேயே பாரிஸ் தியாஸ்கி நிறுவனத்தில் பார்த்தேன். அது “ஆரார்  ஆசைப்படார்” (Desired Melody). இது இவரது சஞ்சய் சுப்ரமணியம்  மீதான விவரணப் படம். இந்தப் படம் எனக்கு மிகப் பெரிய கலை வாசிப்பாகக் கிடைத்தது. பல தடவைகள் இந்தப் படத்தைப் பார்த்தேன்.

    “கூத்து”, மிகவும் அழகிய சொல். நான் சின்னனாக இருந்தபோது  “கூத்து”களைப்  பார்த்துள்ளேன். இது தமிழின் மிகப்பெரிதான நாடகக் கலைகளில் ஒன்று. “கூத்து” வெளியால்தான் நடக்கும். “கூத்து”ள்  நடிப்பையும் பார்க்கலாம், நடிப்பைப் பார்த்து ரசிப்போரையும் பார்க்கலாம். ஏனைய மொழிகளின் கலாசாரங்களில் வெளியே நடிப்பு நடப்பதுண்டு. இந்த நடிப்புள் பார்ப்போரும் நடித்தல் போல எனக்குப் படுகின்றது.

    “கூத்து”, அழகியது, இசைத்துவமானது. ஆனால் பிரசன்னாவின் “கூத்து” உள்ளே நடந்தது.  இந்தக் கூத்துள் இவரது கலைத்துவம் எம்மை, எமது சிந்தனைகளை ஓர் தனியிடத்தில் வைத்து இருக்கின்றது.  இந்த வைப்புள் “உள்ளே” நிச்சயமாக “வெளியாலும்” போகின்றது.

    “பாடினி”  என்ற அமைப்பைத் தோற்றுவித்து மேடைநாடக உலகைத் தமிழ் உலகில் நவீனமாற்றி வருகின்றார். இவருக்கு  கடந்த வருடம் இந்தியாவின்  சங்கீத நாடக அகாதெமி விருது கிடைத்திருக்கிறது.

    “கர்நாடக இசைப் பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் பரத நாட்டியக் கலைஞர் மாளவிகா சருக்கை, மலையாளத் திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பணிகளை டாகுமென்டரி படங்களாகக் கலையழகுடன் உருவாக்கியவர் பிரசன்னா ராமசாமி. பல அகில உலக மாநாடுகளில் இவர் வாசித்த கட்டுரைகள் எல்லாம் திரைப்படம், தியேட்டர், இலக்கியம், எழுத்தாளர் சந்திப்பு என்று பல தளங்களில் இவர் நடந்து வந்த பாதையை வெளிப் படுத்தியிருக்கின்றன.” என்று தினமணி பத்திரிகையின் சாருகேசி  இவர் மீது குறிப்பிடுகின்றது.

    நிச்சயமாக இப்போது என்னால்  எழுதப்பட்டவை கலையுள் உருகியதால் எழுந்த அவதிக் குறிப்புகளே. ஆகவேதான் “எது சொல்வது?” வசனத்தால் எனது குறிப்புத் தொடங்கியது.

    kkrajahஆனால் எதுவும், காத்திரமாகவும் சொல்ல எனது நண்பர் ஒருவர் இருக்கின்றார். கே.கே. ராஜா. 35 வருடங்களாகப் புகலிடத்தில் வாழும் இவரது ஓவியங்கள் நிறையப் புகலிட வெளியீடுகளில் வந்துள்ளன. இவர் காத்திரமான நவீன ஓவியர். இவருக்கு மேடை அனுபவங்கள் இலங்கையில் இருந்தபோதே தெரியும். இவர் மிகவும் சிறந்த நடிகராகவும் உள்ளார். ஓவியர் கிருஷ்ணராஜா இலங்கையின் புகழ்பெற்ற ஓவியரான மாற்குவின் மாணவன்.லண்டனில்  வாழ்கின்றார். நிறைய ஓவியக் கண்காட்சிகளை நடாத்தியுள்ளார். 300 க்கும் அதிகமான நூல் முகப்போவியங்களை வரைந்துள்ளார். லண்டனில் இயங்கும் “விம்பம்" கலை இயக்க அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர். சிறப்பான படப்பிடிப்பாளர்.

    இவரும் “சக்திக் கூத்து” இணை 26 ஆம் திகதி என்னுடன் இருந்து பார்த்தார். பிரசன்னா படைப்பின் ஆழம் எனது நண்பர் கே.கே.ராஜா மொழிகளால் வந்தபோது பதிவு செய்தேன். இந்தப் பதிவுகள் இலங்கை, புகலிட நாடகப் பதிவுகளில் கவனமெடுக்கப் படவேண்டியவை. இவை தமிழ் உலகின் கலைத்துவர்களினது வாசிப்புக்காக.

    “பொதுவாக ஓர் நாடக ஆர்வம், நவீன நாடக ஆர்வம் எனக்குள் எப்போதும் இருக்கின்றன. 70 களின் பின் மஹாகவியின் “புதியதொரு வீடு", சரத் சந்ராவின் “மனமே" என்கின்ற நாடகங்கள் பார்த்தபோது ஓர் பிரமிப்பு,லயிப்பு,தாக்கம் இதுவரை காலமும் எனக்குள் இருக்கின்றது. 26 ஆம் தேதி பிரசன்னா ராமசாமி அளித்த நாடகம் பார்க்க பாரிஸ் வந்தேன்.90 நிமிடங்கள் கொண்டது “சக்திக் கூத்து”. ஒரு வினாடி கூட என்னுடைய புலன்களை வேறு எங்கும் திருப்பாத விதம் என்னை இந்த நாடகம் கட்டிப்போட்டு இருந்தது.இப்படியும் ஒரு நாடகப் பிரதி இருக்குமா என்ற 1008 கேள்விகள் எனக்குள் எழுந்தன,

    “எனக்கு 30 வருடங்களுக்கு மேலாக நாடகம் நாடகம் என்று நடித்திருக்கின்றேன்.ப்ரன்சன்னாவின் நாடகம் பார்த்தபோது இதுவரை காலமும் நான் நடித்தவைகள் நாடகங்கள்தானா  எனும் கேள்வி எனக்குள் எழுந்தது.” எனும் கே. கே. ராஜா  தனது கலை வெளிப்பாடுகள் மீது கூறுகின்றார் மீண்டும் “சக்திக் கூத்து” மீது வருவதற்காக.

    “பலரும் என்னை ஓவியராக அறிந்துள்ளனர். எனது ஓவியப் படைப்புகளின் மீது நான் என்றும் திருப்தி கொண்டவன் அல்ல. எப்போதும் இந்தத் துறையில் புதிது உள்ளதா என்று ஆராய விழைபவன், முயல்வுகளில் இருப்பவன்,

    நாடக வெளிப்பாட்டிலும் கூட எனக்குப் புதிய தேடல்கள் இருந்தன. அதற்கான வெளி எனக்கு சாத்தியப்படவில்லை.பிரசன்னாவின் இந்த நாடகம், இதட்குள்ளால்  வந்த அனுபவம் என்னுடைய நாடகத் தேடலை என்கில்லாமலோ கொண்டு அலைக்களிக்கின்றது,

    காலம் காலமாக நாம் கேட்டு வந்த, பார்த்து வந்த மஹாபாரதத்தின் திரோபதை துகிலுரி காட்சிப் படிமங்கள் பிரசன்னாவின் நாடகத்திலும் வந்தது.ஆனால் அதனுடைய வடிவம் புதிய ஒரு கோணத்தில், புதிய ஒரு அனுபவத்தை சலிப்புத் தராத முறையில் மிகவும் சிறப்பாக எனக்குக் காட்டியது,

    “சமகால அரசியல் நிகழ்வுகளை பாரதி, அவ்வை,திருமாவளவன்,சேரன்  ஆகியோரது கவிதைகளில் தெரிந்தெடுத்து,அவைகளை நாடகப் பிரதிக்குள் கோர்த்து எமக்கு வழங்கிய இந்த அளிக்கை தந்த அனுபவம் அலாதியானது,

    “சாஸ்திரீய கலைகளான கருநாடக சங்கீதம், பரத நாட்டியம்,அதனுடனான கூத்து அளிக்கையும் இந்த நாடகத்தில் புதியதொரு வடிவைக் கொண்ட பிரசன்னமாகின்றது” என்று சொல்லும் கே.கே.ராஜா “எந்த ஒரு கலையும் கால மாற்றத்துக்கு ஏற்ப மாறுபடாமல் இருக்குமாயின் அந்தக் கலை எந்த விதமான புதிய வாசிப்புகளையும் எமக்குத் தரமுடியாது என்பது எனது கருத்து.” என்ற பின்னர் நடிகை ரோகினி மீது கூற வருகின்றார்.

    “இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரமொன்றில் நடித்த ரோகினியை (Rohini Molletti)  நான் தமிழ்நாட்டில் இருந்து வந்த பல திரைப் படங்களில் பார்த்து உள்ளேன். அவர் நடித்த “மகளிர் மட்டும்”, “விருமாண்டி” ஆகிய படங்களைக்  க்ருஇப்பிடலாம். அவர் ஏற்றுக் கொள்ளும் பாத்திரங்கள் யாவுமே பெண்ணிலைவாதக் கருத்துகளை முன் வைப்பதாகவும், சமூக நலன் நோக்கிய கருத்துகளைக் கொண்டதாகவும்,இடதுசாரிக் கலாசாரத்தை வலிமைப்படுத்துவதாகவும் அறிந்தேன்,

    “அப்படிப்பட்ட ஓர் திரைப்பட நடிகையை இந்த “சக்திக் கூத்து” நாடகத்தில் கண்டேன். அவரது அளிக்கையைப் பார்த்த்தபோது அவர்தானா இவர் என்பதை நம்ப முடியாமல் இருந்தது. வசன உச்சரிப்பிலும் சரி, நடன வேகத்திலும் சரி முகத்தில் தெளித்த பாவங்களில் அவரிடம் உள்ள மேடை நாடக ஆற்றல் திரைப்பட நடிகையைவிட மேலோங்கி நின்றது. ஆண்களால் கூட இப்படி ஓர் பாத்திரத்தில் நிறைவாக நடித்திருக்க முடியாது.இதற்கான சக்தி எங்கிருந்து இவரிடம் வந்தது?,

    “இவருக்கு எந்த வகையிலும் சளைக்காமல் நடித்த ரேவதி (Revathi Kumar) கர்னாடக இசைத்துறையில் தேர்ச்சி பெற்றவர் என்பதை பார்வையாளர்கள் யாவரும் எளிதாக உணர்ந்திருப்பர். நாடகம் முழுவதும் பரவிக் கிடந்த இசை பின்னணி இவரது ராக ஆலாபனையை நிறைவு செய்துகொண்டிருந்தது. அது மட்டுமின்றி, நீண்ட சுர வரசைகளை ஆடிக் கொண்டே அளித்தார்,

    “எந்த வித பிசுறுமின்றி ஆடிக் கொண்டு பாடுதல் என்பது எந்த ஓர் கலைத்துவரிற்கும் இலகுவில் சாத்தியமாகி விடாது. பறை,உருமி வாத்தியங்களை இசைத்துக்கொண்டிருந்த தாள வாத்திய இசைக்கலைஞர் மணிகண்டனின் அவப்போதைய மேடைப் பிரசன்னம் இந்த நாடகத்தின் தேவைக்கேற்ப லாபமாகக் கையாளப்பட்டுள்ளது. ரேவதியின் ஆட்டத்தின் வேகத்தோடு மணிகண்டனின் (Nellai Manikanthan) வாத்தியத்தினது தாளக் கட்டும் இசைந்து போய் இருந்ததால் எமது உணர்வுகளை உறைய வைத்துவிட்டது,

    “மேடை, அமைப்பு, ஒளி , அமைப்பு செய்திருந்த ஓவியர் வாசுகனது  (Poopalasingham Vasuhan)  திறமையை என்னால் மெச்சாமல் இருக்க முடியாது.அவருடைய செயல்பாடுகள் நாடகத்தின் தன்மைக்கு பக்க பலமாக அமைந்ததென்பது குறிப்பிடத்தக்கது”

    “சக்திக் கூத்து” மீதான தெளிவான, காத்திரமான தகவல்களைத் தந்த கே.கே.ராஜா, prasanna 26062015 paris (2)“பிரசன்னா ராமசாமியின் பிற அளிக்கைகள் மீது அவ்வப்போது இணையத் தளங்களிலும், முகப்புத்தகங்களிலும் பிரசுரமான விமர்சனங்களாலும், குறிப்புகளாலும் அறிந்துள்ளேன். மேற்கத்திய நாடக அனுபவமும், கீழைத்தேய கலைகளின் பரீட்சயமும் இவருடைய இந்த நாடக மேல்வெளிப்பாட்டிற்கு பெரிதும் கை கொடுத்துள்ளது.புதிதான படைப்புகளை தனது அனுபவத்தின் மூலமும், கற்பனைவளத்தின் செழுமையுடனும் தமிழ் வாசிப்புக்கு மட்டுமல்ல உலக வாசிப்புக்கும் விருந்தாகக் கொடுத்துள்ளார்.”

    பிரசன்னாத்துவம் நிச்சயமாக ஓர்  கலைத்துவப் புரட்சியின் சிறப்பான அலகு.

    பிரசன்னாவின் ஓர் நாடக நிகழ்வு:  Lit for Life 2015: Lotus Leaves, Water Words

    Postad



    You must be logged in to post a comment Login