Recent Comments

    பூங்கோதையின் நிறமில்லாத மனிதர்கள்

    பூர்ணிமா கருணாகரன்

    நேற்றைய தினம் 12/04/2022 செவ்வாய்க்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் லண்டனில் இருந்து வருகை தந்திருந்த கோதை என்கிற கலா சிறீரஞ்சனின் நிறமில்லா மனிதர்கள் நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. குறுகிய காலத்தில் மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைவு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பல இலக்கியப் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். முன்னாள் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் திடீரென வருகை தந்ததோடு சிறப்புரையையும் நிகழ்திச் சென்றது விழாவில் முக்கிய அம்சம். அத்துடன் அவர் கோதையின் நிறமில்லாத மனிதர்கள் எனும் தலைப்பை நிகழ்கால அரசியலோடு ஒப்பிட்டுப் பேசியது பலரின் முகங்களில் புன்னகையை வரவைத்தது எனலாம்.

    அத்துடன் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய தலைவர் மற்றும் செயலாளர் நூல் பற்றியும் கலா சிறீரஞ்சனின் ஊர் மற்றும் அவரது பாட்டனார் பற்றியும் சிலாகித்து பேசினார்கள். சமூக செயற்பாட்டாளர் திருமதி நளினி ரட்ணராஜா வரவேற்புரையை நிகழ்த்தினார். திருமதி அன்னலட்சுமி ராஜதுரை அவர்கள் நூலின் நயவுரையை மிகவும் சிறப்பாக வழங்கியது சிறப்பம்சம் எனலாம். 

    கலா சிறீரஞ்சன் எனும் கோதையை நான் முகநூலில் நல்ல நண்பியாக அறிவேன். அவரது அழைப்பின் பேரில் விழாவுக்கு சென்றதில் மகிழ்ச்சியாக உணர்வதோடு, லண்டனில் இருந்து வருகை தந்தவர் என்ற பந்தாவும் இல்லாமல் சகஜமாக நெருங்கிய தோழி போல பேசிக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் மிகவும் எளிமையான பெண்ணாக நான் கோதையைக் கண்டு கொண்டேன்.

    அவரது சிறுகதைகள் பலவற்றை முகநூலில் வாசித்திருக்கிறேன். சமகால பெண் தலைமைத்துவ குடும்பங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பல சவால்களை மிகவும் எளிமையான நடையில் தந்திருக்கிறார். அதனை வாசிக்கும் போது நாமும் அந்தக் கதையில் வரும் ஒரு பாத்திரமாக உணர முடிந்தது. நிறமில்வா மனிதர்கள் நூலிலும் அவ்வாறான சிறுகதைகள் மற்றும் கடந்த முப்பது வருட காலத்தில் ஏற்பட்ட சமகால நிகழ்வுகளையும் கொண்டதாக சிறுகதைகள் அமைந்திருப்பதாக இலக்கியப் பேச்சாளர்கள் குறிப்பிட்டனர். நான் அவரது சிறுகதைகளை முழுமையாக படித்து விட்டு விமர்சனங்களை வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

    கோதையின் நிறமில்லாத மனிதர்கள் நிகழ்வு தென்றலாய் வருடிச் சென்றது என்றால் மிகையாகாது. கோதைக்கு வாழ்த்துக்கள் கூறிக் கொள்வதோடு மேலும் பல சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுத வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

    புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழ் வளர்க்கும் வகையில் பலர் தங்கள் ஆக்கங்களை தந்து வருகின்றனர். அந்த வகையில் கலா சிறீரஞ்சனையும் அவ்வாறான ஒரு எழுத்தாளராக நோக்க முடிகிறது.

    வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

    Postad



    You must be logged in to post a comment Login