Recent Comments

    மலையக இலக்கிய மாநாட்டில் காத்தாயி காதை

    பூங்கோதை

    கடந்த சனிக்கிழமை, ஆனி மாதம் 11ம் திகதியன்று (11.6.2022), இலண்டன் விம்பம் அமைப்பின் ஆதரவுடன் மலையக இலக்கிய மாநாடு மிகச் சிறப்பாக ஒன்று கூடியது.  இந்நிகழ்வில் பல நாடுகளிலிருந்து இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டதோடு, முழு நாள் நடந்தேறிய நிகழ்வுகளின் போது ஏழு அமர்வுகளில் பல மலையக இலக்கியங்களையம் ஆய்வுக் கட்டுரைகளையும்  இவர்கள் அறிமுகமும் விமர்சனமும் செய்தனர். இம்மாநாட்டைப் பற்றி எழுதுவதாயின் அது ஒரு நீண்ட கட்டுரைக்கு வழி கோலக்கூடியது. 

    அதே வேளையில் இக்கட்டுரை,   இம்மாநாட்டில் அன்று மேடையேறிய மெய்வெளி நாடகக்குழுவின்             'காத்தாயி காதை'  பற்றியது மட்டுமே.

    படங்கள்: எஸ்சாந்தன் , ஐக்கியஇராச்சியம்

    காத்தாயி காதை என்ன சொல்லிப் போகிறது, காத்தாயி யார் என்று பார்ப்பது இந்நாடகத்தின் பின்புலத்தை அறிந்து கொள்ள உதவும். இக்காத்தாயியின் இறுதி நாட்கள் பற்றியும் அவருக்கான நீதி கிடைக்காது போன இழி நிலை குறித்தும் இன்னுமே அறியப்படாத இன்னொரு பக்கம் ஒன்று இருக்கலாம் என்பது எனது எண்ணமாக இருப்பினும், மலையக இலக்கிய மாநாட்டின் முதுகெலும்பாக இருந்து, பல அமர்வுகளில், முதலாவது அமர்வான 'காத்தாயி முத்துசாமி' அமர்வுக்கும் தலைமை தாங்கிய மு நித்தியானந்தனின் பேச்சிலிருந்து நான் அறிந்து கொண்டவற்றை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். 

    பதுளை லுணுகளையில், அடாவத்தைத் தோட்டத்தைச்   சேர்ந்த காத்தாயி முத்துசாமி என்ற தோட்டத் தொழிலாளிப் பெண் தான் இந்த நாடகத்தின் கதாநாயகி. 

    1994ம் ஆண்டுவிடுதலை இயக்கப் போராளி ஒருவர் மட்டக்களப்பிலிருந்து பதுளையூடாகத் தப்பிச் சென்ற போது, அவருக்கு தனது லயத்தில் தங்குமிடம்,

    உணவு வழங்கியிருந்தார் என்ற குற்றச் சாட்டில் இவர்  இலங்கைப் போலீசாரால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வெலிகடைச் சிறையில் அடைக்கப்பட்டார்.  

    சிறையில் இனவாத புறக்கணிப்புகளுடன் தன் வாழ் நாளைக் கழித்த காத்தாயி கடுமையான நோயால் பீடிக்கப்பட்டு, இறுதியில் புற்று நோய்க்கும் ஆளாகி படுக்கைப் புண்களுடன் பல இன்னல்களுக்காளாகி இறுதியில் கொழும்பு மருத்துவமனையொன்றில் இறந்தும் போனார். தனது நாற்பத்தியொன்பது வயதில் சிறையில் அடைக்கப்பட்டு, 19 ஆண்டுகள் சிறையிலேயே துன்பங்களுடன் வாழ்ந்து தனது 68 வயதில் தன்னுயிரைத் துறந்தது வலி நிறைந்த சரித்திரம்.  

    மலையக அரசியல்த்  தலைவர்களோ,  மனித உரிமை இயங்கங்களோ காத்தாயியைப் பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை என்பது துயரத்தின் உச்சம்.  வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் அரசினால் விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பின்னரும் காத்தாயி மூன்றரை ஆண்டுகள் சிறை வாசம் செய்தார் என்பது இவரை எவருமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், கேட்பார் யாருமற்ற நாதியற்ற பெண்ணாகவே  இவர் வாழ்ந்து மறைந்தார் என்பதற்கு அடையாளம்.   இந்த மாதரசியின் வலிகளை நினைவு கூறும் முகமாக, ஏற்கனவே மேலே குறிப்பிட்டிருந்தபடி  'மெய்வெளி நாடகக் குழு' காத்தாயி காதையை மேடை ஏற்றினர்.

    சாம் பிரதீபனின் அற்புதமான எழுத்துருவிலும்  திறமையான நெறியாள்கையிலும், ரஜித்தா சாம் பிரதீபனின் கச்சிதமான கனதியான காத்தாயி பாத்திரத்திலும் இந்நாடகம் மேடையேறியது.  தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்து ரசித்த, ரசித்துக் கொண்டிருக்கும் அனுபவங்கள் எனக்கும் உண்டு என்பதால் இந்நாடகத்தை ஒரு பார்வையாளராக விமர்சிக்கலாம், விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு அறியப்படாத சரித்திரத்தை, காத்தாயி காதையை  வந்திருந்த அத்தனை மாந்தர்களின் மனதிலும் ஒரு குறுகிய நேரத்தில் பதிய வைத்த திறமை இந்நாடகக் கலைஞர்களுக்கு  உண்டு.

    ஒரு ஆசிரியையாக அன்றாடம் பாடசாலையில், ஒரு புதிய கற்பித்தலை ஆரம்பிக்க முன்னர், மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சில உத்திகளைக் கையாள்வது வழமை. அந்த உத்தி தான் ( hook என்று அழைப்போம்) அந்தக்  கற்றலை மாணவர்கள் எவ்வளவு ஆழமாக தம் மனதில் பதிய வைப்பார்கள் என்பதைத் தீர்மானிப்பது.  அதே போல எவரும் எதிர்பார்க்காத விதத்தில் அத்தனை பார்வையாளர்களையும் சாம் பிரதீபன் தன் பேச்சுத் திறமையால் கட்டிப் போட்டு அல்லது திட்டிப் போட்டு என்றும் அழைக்கலாம்,  ஒரு பயபக்தியோடு நாடகத்தை ரசிக்க வைக்கத் தொடங்கியதில் ஆரம்பித்தது தான் இந்நாடகத்தின் வெற்றி என்பேன்.  அவர் நிஜமாகவே எம்மைத் திட்டுகிறாரா அல்லது நாடகத்தின் ஒரு அங்கமா எனப் புரியாமல் பாதி பார்வையாளர்கள் ஸ்தம்பித்துப்  போய்  மூச்சு விடவே பயந்து போனதில் அரங்கமே ஒரு நொடியில் அமைதியாகியது.

    "என்னத்துக்கு இப்ப எல்லாரும் ஃபோனை நோண்டிக் கொண்டிருக்கிறியள்?, எப்ப பார்த்தாலும் ஃ போனை நோண்டிக்கொண்டு, வைச்சிட்டுப் போட்டு எல்லாரும் போய்க் கதிரைகளில இருங்கோ பார்ப்பம்! , இப்ப டீ குடிக்கிறது முக்கியமோ?" என்று அதிரடியாக, சாம் பிரதீபன், அவர் இவர் எனப் பார்க்காமல் சகட்டு மேனிக்கு கண்டவர்களையும் பார்த்துக் கர்ச்சித்ததில்,  பார்வையாளர்கள் அனைவரும் பறந்து போய் கிடைத்த கதிரையை  இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டனர்.

    இது நாடகத்தின் ஆரம்பம் எனப் புரியாத, தமிழ் மொழி தெரியாத  பெண்ணொருவர், ஆங்கிலத்தில்" இவர் ஆள் கொஞ்சம் கூடச்  சரியில்லை, மரியாதை தெரியாத காட்டுமிராண்டியாய் இருப்பார் போல இருக்கு." என மெல்லப்  புறுபுறுத்தது காதில் விழுந்தது.

    காத்தாயியாகவே மாறிப் போன, ரஜித்தா பிரதீபனின் நடிப்பினால் பார்வையாளர்கள் மத்தியிலும் காத்தாயியின் வலி சிரமமில்லாது ஊடுருவியது. காத்தாயியின் உடலும் மனமும் சிறை வாசத்தினாலும்  சிறைக்காவலர்களின் சித்திரவதையினாலும் துவண்டு போனதையும் அவள் மலையக மாந்தர்களுக்குரிய , ஏழ்மையிலும் சாகாத  சக மனித நேயத்தால், தான் உதவி செய்தது ஒரு போராளி எனத் தனக்கு தெரியாதென்பதை  ஓயாமல் சொல்லி அழுததையும்   எம் கண் முன் கொண்டு வந்த அந்த நடிப்பாற்றல் அலாதியானது.

    ஒரு குறுகிய நேரத்தில் தமக்குத் தேவையான அரங்கை, வெறும் நிலத்தில்  சிறையாக அமைத்துக் கொண்டதும், நாடகத்தில் ஏனைய பாத்திரங்களில் வந்தவர்களின் நடிப்பும்   முக்கியமாக ஒரு போராளியாக வந்தவரின் கச்சிதமான நடிப்பும்  காத்தாயி காதைக்கு வலுச்  சேர்த்தன. பல இளம்  கலைஞர்கள் குறிக்கப்பட்ட நேரக்கணிப்புடன் பின்னணி இசைக்குத் தக்கவாறு தம் அசைவுகளை ஏற்படுத்தியதும், இன்னும் சில மிக இளம் கலைஞர்கள் பின்னணி இசையைத் தகுந்த நேரத்தில் வழங்கியதும்  அவர்களது கடுமையான பயிற்சியைக் காட்டியது.  

    நாடகக் கலை உலகில் பரவலாக அறியப்பட்ட மெய்வெளி நாடகக் கலைஞர்களின் இயக்கத்திலும் நெறியாள்கையிலும் படைக்கப்பட்ட இந்நாடகம் பார்த்தவர்கள் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தது என்றால் மிகையாகாது.  மேடையே இல்லாத ஒரு அரங்கில் இவ்வளவு தத்ரூபமாக பார்வையாளர்களை மெய்மறக்கப் பண்ணியவர்கள், நவீன வசதிகள் உள்ள அரங்குகளில் இன்னும் பல மடங்கு  இந்நாடகத்தை மெருகேற்றுவார்கள்  என்பது சர்வ நிச்சயம்.  

    குறையாகச் சொல்வதற்கு இக்குறு நாடகத்தில் எதுவும் அகப்படாவிட்டாலும், அவர்கள் தமது கதைப் பின்னணிக்காக பார்வையாளர்களின் கைகளில் கொடுத்த ஊதுபத்தியின் புகை வாசனையும் புகையும் இந்த குழைக்காட்டு இளவரசியின் நாசித்துவாரங்களில் ஒவ்வாமையைத் தூண்டி, ஏற்கனவே உள்ள சுவாசக் காற்றுப் பிரச்னையைத் தூண்டப் பார்த்ததை இங்கு பதிவதால் ,என் போன்ற சுவாசச் சிக்கல் உள்ளவர்கள் எதிர்காலத்தில் தப்பிக்கொள்ளுவார்கள் என நம்புவோம்.

    இனி வரும் காலங்களிலும்  'மெய்வெளி' தொடர்ந்தும் இப்படியான விழிப்புணர்வுகளைத் தூண்டும் நாடகங்களை மேடையேற்ற வேண்டும் என விழைவதோடு, நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் அள்ளி வழங்குகிறோம்.    

    Postad



    You must be logged in to post a comment Login