Recent Comments

    சோத்துக்கடையும் காதலும் சினிமாவும் 1

    (ரொறன்ரோவில் வெளியிடப்பட்ட 'எதிர்சினிமா' விமர்சன நூல் வெளியீட்டின்போது, ஆற்றிய உரை ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இடையில் நிறுத்தப்பட்டது. உரையைக் கேட்டவர்களும், விழாவுக்கு வந்து உரை தொடங்குவதற்கு முன்பாகவே சென்றவர்களும் அந்த உரையைக் கேட்க விரும்பியிருந்தார்கள். இன்னும் சிலர் இந்த உரை கனடிய தமிழ் சினிமா உலகத்தினருக்குப் பயன்படும் என்று அதை தாயகம் இணையத் தளத்தில் பிரசுரிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். எனவே அந்த உரையை இரு பகுதிகளாக வெளியிடுகிறோம்.)

    Thayagamweb-featuredfilm1

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்

    பெருமதிப்பிற்குரிய பெரியோர்களுக்கும், பேரன்புக்குரிய நண்பர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் வணக்கம்.

    நண்பர் ரதன் சில வாரங்களுக்கு முன் தன்னுடைய நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும்படி கேட்டிருந்தார். மேடைப் பேச்சில் அதிகம் பரிச்சயம் இல்லாததாலும், என்னுடைய கூச்ச சுபாவம் காரணமாகவும் வழமை போல மறுத்திருந்தேன். இருந்தும் வற்புறுத்தியதால், 'சரி, பேசுகிறேன். ஆனால் புத்தகம் பற்றிப் பேசப் போவதில்லை' என்று கூறினேன். 'பிரச்சனையில்லை, எதைப் பற்றியும் பேசலாம்' என்று சொன்னார்.

    அவர் சினிமாவைப் பற்றி விமர்சனம் செய்து எழுத, அந்த விமர்சனத்தைப் பற்றி நான் விமர்சனம் செய்யப் போக, அதைப் பார்த்த முகப்புத்தக விமர்சகர்கள் அதைப் பற்றி விமர்சனம் செய்ய... எதற்கு அனாவசியமான மன உளைச்சல் என்ற நோக்கத்தில், அந்தப் புத்தகம் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறேன்.

    ரதனும் பின்னர் போன் அடித்து, புத்தகத்தை வாசித்து விட்டீர்களா என்று கேட்டார். ஏற்கனவே லைபிரரியில் இருந்து வாங்கிய 3 புத்தகங்கள் வாசித்து முடிக்கவில்லை. இதனால் இதை வாசிக்க முடியவில்லை.

    இருந்தாலும், நின்ற நிலையில் புரட்டி தட்டிப் பார்த்தேன். அதில் இரண்டு விடயங்கள் கண்ணில் பட்டன.

    ஒரு விடயம், றிச்சாட் அட்டன்பரோவின் காந்தி படத்தில் காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லி ஒரு வெள்ளையின நடிகர் என்று குறிப்பிட்டிருக்கிறார். படத்தை விற்பதற்காக வேறு இனப் பாத்திரங்களில் வெள்ளையின நடிகர்களை நடிக்க வைக்க வேண்டிய நிலைமையில் ஹொலிவூட் இருப்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

    Lawrence of Arabia வில் அலெக் கின்னஸ், அந்தனி குயின் இரண்டு பேரும் அராபியர்கள் மாதிரி நடித்தார்கள். அதில் Omar Sharif தான் உண்மையான எகிப்திய அராபியர். இதே ஓமார் ஷாரிப் Dr.Zhivago வில் ரஷ்யராக நடிக்கிறார். இரண்டும் David Lean னின் படங்கள். இதே ஷாரிப் மங்கோலிய கெங்கிஸ் கானாவும், ஸ்பானிய சேகுவேராவாகவும் நடித்திருக்கிறார். இவையெல்லாம் நடிகனின் திறமையைக் காட்டுகின்ற விடயங்கள். எனவே, ஒரு இனத்தைப் பற்றிய கதையில் அந்த இனத்தவர்கள் தான் நடிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இனங்களைக் கடந்து நடிப்பது தான் நடிகனின் திறமைக்கு சான்று பகரும். காந்தி போல மொட்டை என்பதற்காக நடிகரான துக்ளக் சோவை காந்தியாக நடிக்க வைக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை.

    பென் கிங்ஸ்லி ஸ்டீவன் ஸ்பீல்பேர்க்கின் Schindler's list ல் யூதராக நடித்திருக்கிறார். அவர் உண்மையில் கிழக்காபிரிக்காவில் பிறந்த இந்திய குஜராத்தித் தந்தைக்கும் பிரிட்டிஷ் தாய்க்கும் இங்கிலாந்தில் பிறந்தவர். பெயர் கிருஷ்ணா பண்டிட் பான்ஜி. ஆகவே அவரை வெள்ளையின நடிகர் என்று முத்திரை குத்திரை குத்தியது பொருத்தமாயிருக்கவில்லை. புத்தகத்தை Edit பண்ணியவர்கள் அதைத் திருத்தியிருக்கலாம்.

    ஒரு வரியைப் பார்த்தே இவ்வளவு பிரச்சனை. எனவே புத்தகம் பற்றிய என் கருத்துக்களை இத்துடன் நிறுத்துவது நல்லது என நினைக்கிறேன். மற்ற விசயம் பற்றி கடைசியில் சொல்லுவேன்.

    உங்களுக்குத் தெரியும். தமிழர்களிடம் மைக்கையும் பணத்தையும் கொடுத்தால் திரும்ப வாங்க மாட்டீர்கள். அவர்கள் நினைத்த நேரம் தான் திருப்பித் தருவார்கள். கேட்டால் 'பிறகு தாறன்' என்று சொல்வார்களே தவிர, தர மாட்டார்கள்.

    எனவே விசயம் தெரியாமல் என்னிடமும் தந்திருக்கிறார்கள். நிறையத் தயாரிப்போடு வந்திருக்கிறேன். நீண்ட நேரம் பேச வேண்டி வரலாம். என்னுடைய பேச்சு உங்களுக்கு அறுவையாக இருந்தால், எல்லாருமாக எழுந்து நின்று கரகோஷம் செய்தீர்கள் என்றால் எனக்கு விளங்கும். உடனேயே நன்றி, வணக்கம் சொல்லி நிறுத்திக் கொள்வேன்.

    வழமை போல, தமிழர்கள் மாதிரி முதலில் ஒரு சுயபுராணம். நம்மைப் பற்றி நாமே சொல்லா விட்டால் இங்கே யாரும் சொல்ல மாட்டார்கள் போலிருக்கிறது. அதன் பின்னால் நான் பேச விரும்பிய விடயம். அப்புறம் ஒரு பின்குறிப்பு. புத்தகத்தில் நான் கண்ட இன்னொரு விடயம் பற்றியது.

    இங்கே கனடியச் சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருக்கிறார்கள். பணம் போட்டு கோட்டை விட்டவர்களும் இருக்கிறார்கள். இதற்குள் 'சினிமா பற்றிச் சொல்ல உவருக்கு என்ன தகுதியிருக்கு?' என்ற கேள்வி எழலாம். சில நேரம், என்னுடைய தொப்பியையும் கண்ணாடியையும் பார்த்து விட்டு, 'உவருக்கு ஏதோ பெரிய மைக்கல் மூர் என்ற நினைப்பு என்று' புத்திஜீவிகள் நினைக்கக் கூடும். 'தலை வழுக்கை போல, அதை மறைக்கத் தான் தொப்பி போட்டிருக்கிறார்' என்று புத்தியில்லாத ஜீவிகள் நினைக்கக் கூடும். இரண்டும் இல்லை.

    சினிமாவில் எனக்குத் தகுதி என்று எதுவுமில்லை. ஆனால் வட அமெரிக்காவில் மிகப் பெரிய திரைப்படச் சுருள் கழுவும் நிறுவனத்தில் கால் நூற்றாண்டாக வேலை செய்திருக்கிறேன். Color By Deluxe என்று ஹொலிவூட் படங்களின் முடிவில் வரும். அந்த நிறுவனத்தில் திரைப்படச் சுருள் கழுவும் லாப்பில் வேலை செய்திருக்கிறேன். பெரும்பாலான ஹொலிவூட் படங்கள் அங்கே கழுவப்பட்டிருந்தன. ரொறன்ரோவில் படப்பிடிப்பு நடக்கும் திரைப்படங்களின் மூலப்பிரதி தினசரி அங்கே தான் கழுவப்படும். இப்போது டிஜிட்டல் கமெராக்களும், புரொஜக்சனும் வந்த பின்னால், பிலிம் சுருளுக்கும், அதைக் கழுவுவதற்குமான தேவை இல்லாமல் போய், இரண்டாயிரம் டொலரில் செய்த ஆறு றீல் பிரதி, இருநூறு டொலர் Hard Drive ல் வந்ததால், உலகெங்கும் கிளைகளைக் கொண்ட அந்த நிறுவனம் இப்போது மூடப்பட்டு, நியூ யோர்க்கில் மட்டும் ஒரு சிறிய கிளையுடன் இருக்கிறது. நம்முடைய வேலையும் காலி. இப்போது மிஞ்சியிருப்பது இந்த ஜக்கட் மட்டும் தான்.

    நானும் கனடியத் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு ஏதோ நம்மாலான பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறேன்.

    ரொறன்ரோ பல்கலைக்கழக மண்டபத்தில் இலக்கியச் சந்திப்பு நடந்த நேரம், முக்கியமான அமர்வு ஒன்றைக் கட் பண்ணி நானும் நண்பர் மூர்த்தியும் கனடாவின் முதல் முழுநீளத் தமிழ்த் திரைப்படமான அன்பூற்று முதல் ஷோ பார்த்தோம். முதல் ஷோ என்ன, ஒரே ஷோ!

    சமீபத்தில் சிவதாசன் அண்ணன், நண்பர் மூர்த்தி, கணன் ஆகியோர் A Gun and a ring முதல் நாள் ஷோ பார்த்து முடிந்து அதிகாலை இரண்டு மணி வரைக்கும் பிரேத பரிசோதனை நடத்தினோம்.

    பின்னர் அந்தப் படத்திற்கு நடைபெற்ற விமர்சனக் கூட்டத்திலும் பங்குபற்றியிருந்தேன். ரதன் என்னைக் கருத்துக் கூறும்படி கேட்டார். 'நீங்கள் விசயம் தெரிஞ்ச ஆக்கள் கதைக்கிறியள். இதுக்குள்ள நான் என்னத்தைக் கதைக்கிறது' என்று சொல்லி தவிர்த்துக் கொண்டேன்.

    இதைவிட சினிமாவுக்கும் எனக்குமான தொடர்பைப் பற்றிச் சொல்லப் பெரிதாக ஒன்றுமில்லை.

    தாயகம் வார இதழை 89 ம் ஆண்டு வெளியிட்ட போது, அதில் நான் ஆர்வத்தோடு பார்த்த ஆங்கிலப் படங்கள் பற்றி எழுதுவதுண்டு.

    என்னுடைய சினிமா ஆர்வம் மட்டுமில்லாமல், நான் வேலை செய்த டீலக்ஸ் ஒரு காலத்தில் Cineplex Odeon நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்தது. முதல் இரண்டு வருடமும் எங்களுக்கு இலவச சினிமா டிக்கட். ஒரு வாரத்திற்கு ஒரு படம் பார்க்கலாம். பின்னால் யூனிவேர்சல் ஸ்டுடியோவுக்கு விற்று விட்டார்கள். அத்துடன் இலவச டிக்கட் முடிவுக்கு வந்தது.

    யாங் ஷிமுவின் Raise the Red Lantern, அக்கிரா குறோசோவாவின் Rhapsody in august, மாக்ஸ் வொன் சிடோ நடித்த Pelle The Conqueror, மீரா நாயரின் சலாம் பொம்பே, அல்மோ டோவாரின் Tie Me Up, Tie Me Down, ஸ்பைக் லீயின் Do the right thing, பிரான்சிஸ் போர்ட் கொப்போலாவின் Apocalypse now, டெனிஸ் ஆர்கண்ட்டின் Jesus of Montreal, பாலஸ்தீனப் பிரச்சனை பற்றிய Deadly Currents என்ற விவரணத் திரைப்படம் என்று பலவேறு நாட்டு, மொழிப் படங்களைப் பார்த்து, அவை பற்றி எழுதியிருந்தேன். ஒரு புத்தகம் விடக் கூடிய அளவு இருக்கும்.

    இதெல்லாம் என்னை ஒரு புத்திஜீவியாகக் காட்ட வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. நான் ரசித்தவற்றை மற்றவர்களும் பார்க்க வேண்டும், இந்திய சினிமாவுக்கும் அப்பால் ரசிப்பதற்காக ஒரு உலகம் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கான முயற்சி தான். இப்போது கூட, அந்த விமர்சனங்களைப் பார்த்துத் தான் தங்களுக்கு பிறமொழிப் படங்களைப் பார்க்கும் ஆசை வந்தது என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறேன்.

    அப்போது தாயகத்தில் மூன்று கவிஞர்கள் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார்கள். கந்தசாமி மாஸ்டர், உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம், மற்றது ரதன். இந்த முக்கூட்டணி பின்னால் தங்கள் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாகக் கூட வெளியிட்டிருந்தார்கள். அதை நான் தான் தட்டச்சிட்டு வடிவமைப்புச் செய்து கொடுத்திருந்தேன்.

    என்னுடைய சினிமா விமர்சனங்களை வாசித்து விட்டு, கந்தசாமி மாஸ்டரும் ரதனும் தங்களையும் நான் பார்க்கின்ற படங்களுக்குக் கூட்டிச் செல்லும்படி கேட்டிருந்தார்கள். அப்போது Cannes படவிழாவில் விருது பெற்ற Nicholas Cage நடித்து, David Lynch இயக்கிய Wild At Heart நாங்கள் வெலஸ்லி வீட்டிலிருந்து நடந்து போய் கார்ல்ட்டன் சினிமாவில் பார்த்தோம்.

    பிறமொழி சினிமா மீதான ஆர்வம் காரணமாக, எத்தனையோ படங்களைத் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன். ரொறன்ரோ ஸ்டார், Now சஞ்சிகை போன்றவற்றில் வரும் விமர்சனங்களை வாசித்து ஆர்வம் மிகுதியால் இந்தப் படங்களைத் தேடிப் பார்த்தேன். பின்னர் றிவியூ வீடியோ, புளொக்பஸ்டர், ரொறன்ரோ லைபிரரியில் எல்லாம் பல்வேறு படங்களைத் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

    இன்று கனடியத் தமிழ்ச் சினிமா உலகின் சிம்ம சொப்பனம் அல்லது Pain in the neck  என்று சொல்லக் கூடிய கிருஷ்ணா சிவப்பிரகாசம், சினிமாத் துறை வளர வேண்டும் என்பதில் அக்கறையுள்ள அருண் எல்லாருமே தாயகத்தில் எழுதியவர்கள். ஜமுனா ராஜேந்திரன் கூட தாயகத்தில் தொடர்ச்சியாக சினிமா பற்றி எழுதி வந்திருந்தார். தாயகத்தில் எழுதிய சுமதி ரூபன், மூர்த்தி ஆகியோர் படம் எடுத்தார்கள்.

    இதை விட, நிறையச் சொல்லலாம். ஆனால் சுயபுராணத்தை இதோடு நிறுத்திக் கொள்கிறேன். காரணம், 'உவர், தான் தான் உங்க எல்லாருக்கும் படம் காட்டினவர்' எண்டு கதை விடுறார் என்று சொல்லித் திரிவதற்கு இங்கே ஆட்கள் இருக்கிறார்கள். எனவே விசயத்துக்கு வருகிறேன்.

    * * * * * * * *

    கடைசியாக என்னுடைய பின்குறிப்புக்கு வருகிறேன். விழாக்களிற்கு அழைக்கப்படுவோர் எல்லாரும் அழைத்தவரை முகத்துக்கு முன்னால் புகழ்ந்து தள்ளுவதுண்டு. நீங்கள் அவதானித்திருப்பீர்கள். ரதனுடைய வெளியீட்டு விழாவில் நான் ரதனைப் பற்றிச் சொல்லாமல் என்னைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அது உண்மையில் பண்பானதும் அல்ல என்று எனக்குத் தெரியும். என்னுடைய சுயபுராணத்தில் தாயகம் பத்திரிகை பற்றி, தாயகத்தில் எழுதியவர்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். நான் வழமையில் இந்த சுயபுராண வேலைகளுக்கு எல்லாம் போவதில்லை. அது எனக்குப் பழக்கமும் இல்லை. ஆனால் காரணத்தோடு தான் அதையெல்லாம் சொல்ல வேண்டி வந்தது. அதற்கு மன்னிக்க வேண்டும்.

    25 வருடங்களுக்கு முன்னால், அரசியலில் மட்டுமல்லாமல், கலை, இலக்கியத்திலும் பெரும் பங்களிப்புச் செலுத்திய தாயகத்தை புலன் பெயர்ந்த இலக்கியத்தைக் குறிப்பிடுவோர்கள் யாரும் குறிப்பிடுவதில்லை. சொல்வதாக இருந்தால் நண்பர் வ.ந.கிரிதரன் மறக்காமல் குறிப்பிடுவார். எங்களோடு சர்ச்சையில் ஈடுபட்ட சகோதரர் சிறிஸ்கந்தன் குறிப்பிடுவார். ஆனால் தாயகத்தில் எழுதியவர்கள் பலர் அதை பகிரங்கமாகக் குறிப்பிடுவதில்லை.

    இந்தப் புத்தகத்திலும் திறந்தவுடனேயே ரதனின் ஆக்கங்கள் இடம் பெற்ற பிரசுரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. தாயகத்தின் பெயர் இல்லை. சில நேரம் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் வெளிவந்த வெளியீடுகளா என்று பார்த்தால் அப்படியும் இல்லை.

    அப்படி இல்லாமலிருந்திருந்தால், என் சுயபுராணத்தை தவிர்த்து விட்டு, வாசிக்க வேண்டிய கட்டுரையை மட்டும் வாசித்திருப்பேன்.

    கவிஞராக தாயகத்தில் நீண்ட நாள் எழுதி, புத்தகம் வெளியிட்ட ரதன் அதைக் குறிப்பிடாமல் இருக்கக் காரணம் இல்லை. இந்த தவிர்ப்பு தற்செயலானதாகவோ அல்லது ரதனுக்கும் காலச்சுவட்டுக்கும் இடையிலான நந்திகளினதும் பெருச்சாளிகளினதும் திருக்கூத்தாகவோ இருக்கலாம் என்று நம்ப விரும்புகிறேன்.

    நன்றி

    Save

    Postad



    You must be logged in to post a comment Login