Recent Comments

    இந்தோனேஷிய மரண தண்டனைகள்: சில உறுத்தல்கள்

    mauranஜோர்ஜ் இ. குருஷ்சேவ்

    (இந்தோனோஷியாவில் நடைபெற்ற மரண தண்டனைகள் பற்றி முகப்புத்தகத்தில் கருத்துச் சொல்ல இனி ஒரு தமிழரும் மிச்சமில்லைப் போலிருக்கிறது. அதைப் பற்றி நமது கருத்தையும் சொல்லி, 'உள்ளேன் ஐயா!' என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம். நாம் கருத்துச் சொல்லியாக வேண்டும் என்று இங்கே யாரும் தவம் கிடக்கவில்லை. இருந்தாலும், இனத்துக்காக என நமக்கென கடமைகள் உண்டல்லவா... கொடி பிடித்தல், சுப்பர் சிங்கருக்கு கள்ள வோட்டுப் போடுதல் போன்ற! சொல்ல விரும்பும் எல்லா விடயங்களும் தனித்தனியாக விரிவாகச் சொல்லப்பட வேண்டியன. இருப்பினும் சூடு தணியும் முன்னால் கருத்துச் சொல்லியாக வேண்டுமே! நினைத்த மாத்திரத்தே பதிவு செய்யும் முகப்புத்தகப் பாரம்பரியம் நமக்கு இன்னமும் கைவரப் பெறாததால், வேலையில் எழுதியதை, வீடு போகும் போதும், தோட்டத்தில் வேலை செய்யும் போதும், பின்னால் மகனிடம் இரவல் வாங்கிய பிளேஸ்டேஷனில் வீடியோ கேம் விளையாடிய போதும், மனதில் உருப் போட்டு, அதன் மீது நித்திரை கொண்டு எழுந்து, திருத்தி அவசரமாய்! ஏதோ நம்மாலான வரலாற்றுக் கடமை நிறைவேற்றம். பிழை பொறுத்தருள்க!)   1. எந்தக் குற்றமாயினும் மரண தண்டனை வழங்குவது நிறுத்தப்பட வேண்டும். 'பகைவனுக்கருவள்வாய் நெஞ்சே' மனம் நம்முடையது.  மரண தண்டனை வழங்குவது தனக்கு மட்டுமான பிறப்புரிமை என்று நினைத்த பிரபாகரனுக்கு கூட இவ்வாறான அவல மரணம் வேண்டியதில்லை என்று நினைக்கும் மனது நம்முடையது. எந்தக் குற்றமாக இருந்தாலும், அதற்கு மரண தண்டனை தீர்வல்ல! தனிமனிதர்களைப் பாதிக்கும் கொலை, போதைப் பொருள் கடத்தல் மட்டுமல்ல, மானிடத்திற்கு விரோதமான இன அழிப்பு, யுத்தக் குற்றங்களுக்குக் கூடத்தான். தண்டனைகள் மீதான பயம் பலரை குற்றங்கள் செய்வதை தடுத்தாலும், மரண தண்டனையால் குற்றங்களை அறவே நீக்க முடியாது. ஹிட்லரின் சகாவான அடொல்ப் ஐச்மான் யூதர்களை இன அழிப்புச் செய்து, தப்பியோடி ஆர்ஜென்டீனாவில் மறைந்து வாழ்ந்த போதும், இஸ்ரேலியர்களால் கடத்தி வரப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இவ்வாறு தங்களுக்கும் நடக்கலாம் என்ற பயம் இன்று வரைக்கும் இனப்படுகொலை, யுத்தக் குற்றம் செய்யும் யாருக்கும் இருப்பதில்லை. மிருகங்கள் வதை படுவதை தடுக்க சட்டங்கள் கொண்டு வரும் நாகரீக உலகத்தில் மனிதனின் உயிரை எடுக்க சட்டங்கள் இருப்பது அபத்தமானது. அதையும் விட, மீண்டும் பின்னோக்கிச் செல்லும் நாகரிகத்தின் வெளிப்பாடுகளாக கல்லால் எறிந்து கொல்லும் காட்டுமிராண்டித்தனம் இப்போது மதத்தின் பெயரால் அரங்கேறுகிறது. மரண தண்டனையின் பின்னால், நீதி வழங்குவதையும் குற்றங்களை தடுப்பதையும் விட, அரசியல் அதிகம். அடிமைகளை வைத்து வேலை வாங்கிய அமெரிக்கத் தென்பகுதி மாநிலங்களில், இன்றும் மரண தண்டனை இருப்பதற்கான காரணம் கறுப்பர்களை மிரட்டி வைப்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? யாழ்ப்பாணம் முதல் ஈராக் வரைக்கும் பகிரங்க மரண தண்டனைகளின் பின்னால், அரசியல் எதிர்ப்பை மெளனமாக்குவது தவிர வேறென்ன நோக்கமிருக்கும்? ஜோர்தானிய விமானியை உயிரோடு எரித்துக் கொன்றதற்காக, உடனடியாக மதவாதச் சந்தேக நபர்களைத் தூக்கில் போட்டதும் சரி, இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் பால் குற்றங்களுக்கு மரண தண்டனைகளை அவசரமாய் நிறைவேற்றுவதும் சரி,  கொதித்தெழுந்த மக்கள் கூட்டத்தை சமாதானப்படுத்துவது தவிர வேறென்ன நோக்கம் இருக்கும்? வந்தேறு குடியொருவர் பால் குற்றத்தில் ஈடுபட்டார் என மண்ணின் மைந்தர்கள் நிர்வாணமாக்கி அடித்தே கொன்ற காட்சி இந்தியாவில் சமீபத்தில் நடந்தது. இதற்குப் பதிலாக அரசே சட்டரீதியாக அந்தக் கொலையைச் செய்து, வெறி கொண்ட கூட்டத்தை அமைதிப்படுத்துகிறது. 'கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல்' என்னும் மதவாதம் அதிகரித்து வரும் இந்நாளில் தீவிரவாதிகளுக்கு 'நான் உங்கள் பக்கம் தான்' என்று ஆட்சியாளர்கள் சொல்வதற்கு இதை விட சிறந்த வழி என்னவாக இருக்கும்? குற்றங்களுக்கான தண்டனையும், குற்றவாளிகளுக்கு மனம் திருந்துவதற்கான வாய்ப்பும் நாகரீக உலகில் வழங்கப்பட வேண்டும். ஒரு மனிதனின் உயிரை எடுக்க இன்னொரு மனிதனுக்கோ (பெண்ணியவாதிகள் மன்னிக்க! பழக்க தோசம்!), இந்த மனிதர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அரசுக்கோ உரிமையில்லை. 2. வாழ்வில் மிகவும் கொடூரமான உணர்வுகளில் ஒன்று... Resignation. எல்லாமே கையை விட்டுப் போய், நம்பிக்கை இழந்த, கையாலாகாத நிலைமையில் இனி வாழ்ந்தென்ன, செத்தென்ன என்ற உணர்வு மிகவும் கொடூரமானது. அந்த உணர்வோடு பத்தாண்டுகள் மரணம் என்றுமே வரலாம் என்ற உணர்வோடு வாழ்வதை விட மேலான தண்டனை எதுவுமில்லை. முன்பும் ஒரு தடவை இவர்களுக்கு மரண தண்டனை நிச்சயம் என்று இழுபறி நடந்தது. இந்தக் கொடுமை யாருக்கும் வரக் கூடாது... கலாமோகனின் கட்டுரைக்கான முதன்மைப்படத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் மயூரனின் முகத்தைப் பார்க்க மனதுக்குள் என்னவோ செய்தது. காண்கின்ற படங்களில் எல்லாம் இவர்கள் எல்லாருமே எந்த வித நம்பிக்கைக் கீற்றுகளும் இன்றி, தங்களின் வாழ்வு முடியப் போவதை எதிர்பார்த்திருக்கும் உணர்வுகளை காண முடிந்தது. குற்றங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இவர்களும் மனிதர்கள்! (வன்னி வதை முகாம்களில் மண்ணின் மைந்தர்களால் சித்திரவதைக்குள்ளாகி வதையுற்ற தமிழர்களுக்கு இது சமர்ப்பணம்!) 3. இந்த மரண தண்டனைகள் இந்தோனேஷியாவில் நடந்தது என்பதற்காக இஸ்லாமை கூண்டில் ஏற்றத் தேவையில்லை. சிங்கப்பூரிலோ, சீனாவிலோ இந்தக் குற்றங்கள் நடைபெற்றிருந்தாலும் இதே தண்டனைகள் தான். சீனாவில் என்றால், கம்யூனிசத்தையா திட்ட முடியும்?  இஸ்லாமிய தீவிரவாதம் பிரச்சனை என்பது இஸ்லாமியர்களும் ஏற்றுக் கொண்ட உண்மை. இஸ்லாமிய தீவிரவாதிகளை திருப்திப்படுத்துவதும் ஒரு நோக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் இந்தத் தண்டனைகளுக்கான ஒட்டுமொத்தமான பழியும் மதத்தின் மீது போட முடியாது. 4. Law of the Land, Due Process என்ற கருத்துக்கள். எதைத் தான் சொன்னாலும், வெளியார் பார்வைக்கு சட்டம் அநீதியாக இருந்தாலும், அந்தச் சட்டமுறையில் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட்டே இருக்கிறது. யூதர்களை அழித்த ஐச்மானை யூதர்கள் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லவில்லை, கடத்தி வந்து, நீதிமன்ற விசாரணை வைத்து, தூக்கிலிட்டார்கள். இது நடந்தது அறுபதுகளில். இன அழிப்பு நடந்த கொதிப்பு அடங்காத காலம். இப்போதாயின் மரண தண்டனை இருந்திருக்குமா என்பது சந்தேகம். மைதானங்களில் மக்களை வரவழைத்து, பகிரங்கமாக கொல்லும் தலிபான்களும் ஈரானிய முல்லாக்களும் வன்னி மாவீரர்களும் எப்போதாவது இந்த Due Process பற்றி கவலை கொண்டிருப்பார்களா? ஆயுதம் கொண்டு பறித்த அதிகாரத்தின் மூலம் உயிர் வாங்க தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொண்ட உரிமை இது. இவ்வாறான அநீதி இல்லாமல் இந்தோனேசியாவில் மேன்முறையீடு செய்ய வழிகள் இருந்தே உள்ளன. 5. இந்தோனேஷியச் சட்டத்தின்படி, இவ்வாறான குற்றங்களுக்கு என்ன தண்டனை என்ன என்பதை இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தெரிந்தே விசப்பரீட்சையில் இறங்கியிருக்கிறார்கள். எனவே தங்கள் தலைவிதியின் சூத்திரதாரிகள் அவர்களே. (வெற்றி என்றால் தலைவரின் வழிநடத்தல். தோல்வி என்றால்? துரோகியின் காட்டிக் கொடுப்பு!) இவர்கள் தமிழ் இணையத்தளங்களும் கவிஞர்களும் தமிழுணர்வாளர்களும் படம் பிடித்துக் காட்டுவது போல தியாகிகளோ, அப்பாவிகளான Victims ஓ , மாவீரர்களோ அல்ல. 6. அவுஸ்திரேலியா இந்த விவகாரத்தில் தன் கைகளில் இரத்தம் இல்லை என்று கழுவ முடியாது. இந்தோனேசியாவில் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்று தெரிந்தும் அவர்களை அங்கே கைது செய்ய வைக்க தகவல் கொடுத்ததன் பின்னணி என்ன? மரண தண்டனையின் பின்னால் தூதுவரை திருப்பி அழைத்த அவுஸ்திரேலியா நினைத்திருந்தால் தனது நேசநாடுகளையும் கொண்டு, தண்டனைக்கு முன்னாலேயே பொருளாதாரத் தடை முதல் ராஜதந்திர திருப்பி அழைப்பு வரை செய்திருக்க முடியும். தங்கள் நாடுகளில் வாழ முடியாமல் அகதிகளாக வரும் அகதிகளை அவுஸ்திரேலியா நடத்தும் விதத்தைப் பார்க்கும் போது, மனித உரிமைகள் பற்றி பேச அதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது. அகதிப் பிரச்சனை போலவே, தனது மண்ணுக்கு வெளியே, அகதிகள் என்ன, தனது நாட்டுப் பிரஜையோ, எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் என்ற சிந்தனை மட்டுமே அதற்கானது. ஆஸியின் கைகளில் ரத்தம் உண்டு! 7. போதைப் பொருள் கடத்தல் ஒரு வெறும் குற்றம் அல்ல. திருட்டு, கொலை போல சில தனி மனிதர்களை பாதிப்பதல்ல. இது ஒரு சமூகத்தை, அதுவும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இளம் தலைமுறையை பாதிப்பது. இதற்கான தண்டனை மிகவும் பாரியதாகவே இருக்க வேண்டும். எங்களுடைய பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமையாக நேரிட்டால் என்ன நிகழும் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. ஆனால் குறுகிய காலத்தில் அதிகளவு பணம் சம்பாதிக்கக் கூடிய வழியாக அது இருப்பதால் பலரும் அதன் கவர்ச்சிக்குள்ளாக நேர்கிறது... விளைவுகள் பற்றிய சிந்தனையில்லாமல்! விளைவுகள் எவ்வளவு பாரதூரமானது என்பதை அறிந்தால், சில நேரம் சிலர் இதனுள் நுழையாமல் இருக்கக் கூடும். 8. போதைக்கடத்தல் பெரிய அளவில் பெரும் கடத்தல் புள்ளிகளால் தான் நடத்தப்படுகின்றன. பல தடவைகளில் கீழ் மட்டங்களில் உள்ள 'கோம்பை சூப்புகின்றவர்களே' மாட்டுப்படுகிறார்கள். கடத்தல் புள்ளிகளும் அரசியல்வாதிகளின் உதவிகளுடன் தான் இவற்றைச் செய்கிறார்கள். இலங்கையில் வடக்கிலும் தெற்கிலும் இதற்கான உதாரணங்கள் நிறைய உண்டு. இந்தோனேசிய இராணுவம் ஊழல் நிறைந்த ஒன்று. ஆயுதப் பேரங்கள் முதல் முதல் பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் அதில் உண்டு. போதைப் பொருள் கடத்தலும் அதில் ஒன்றாக இருக்கலாம். ஆனால்... பலருக்குப் பாடம் படிப்பிக்கவும், சிலரின் ஊழல்களை மூடி மறைக்கவும், அப்பாவிகளுக்கோ, அல்லது சில்லறை வியாபாரிகளுக்கோ தண்டனைகள் வழங்கப்படலாம். அதற்காக பெரும் முதலைகளுக்குத் தண்டனை இல்லையா என்று கூக்குரலிடுவது எங்களைத் திருப்திப்படுத்த மட்டுமே உதவலாம். 9. இது தமிழர் சம்பந்தப்பட்டதால் தமிழுணர்வாளர்கள் வழமை போல கிளர்ந்தெழுந்தனர். விஜய் டிவி சுப்பர் சிங்கர் ரேஞ்சில்! விட்டிருந்தால் கம்பியூட்டரில் கள்ள வோட்டுப் போட்டே, மயூரனை மீட்டிருப்பார்கள்! இன உணர்வு எதற்கு வர வேண்டும் என்ற விவஸ்தை இல்லாமல், தமிழர் என்ற ஒரே தகுதிக்காக எதையும் நியாயப்படுத்துவதை நமது இனம் எப்போது தான் நிறுத்தப் போகிறதோ? கனடாவில் ஒரே தொகுதியில் மூன்று தமிழர்கள் போட்டியிடும்போது, இந்த தமிழுணர்வு என்ன பாடுபடப் போகிறதோ? 10. தமிழுணர்வாளர்களுக்கு ஒரு நாளுமில்லாதவாறு ஏற்பட்ட மனித நேயமும், மனித உரிமைகள் மீதான திடீர் காதலும், இது கனவா, நினைவா என்று கையைக் கிள்ள வைக்கிறது. நேற்றை வரைக்கும் துரோகி என்று யாரையும் போட்டுத் தள்ளலாம் என்றும், அரசியல் படுகொலைகளின் போது இனிப்புக் கொடுத்து மகிழ்வோம் என்றும் ஆனந்தப் பள்ளுப் பாடியவர்கள் திடீரென்று, மரண தண்டனைக்கு எதிராக திரண்டெழுந்ததைப் பார்க்க... இதென்னப்பா, பட்ட மரத்தில பால் வடியுது என்று நமக்கு ஒரே அதிர்ச்சி. இவர்கள் திருந்தி விட்டார்கள் என்று யாரும் வியாக்கியானம் செய்யத் தேவையில்லை. இன்றைக்குக் கேட்டாலும், இவர்கள் 'துரோகி எண்டால் போடத் தானே வேணும்' என்பார்கள். சமாதானக் காலத்தில் யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் பகிரங்கமாக நிர்வாணமாக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட படத்தை இணையத்தில் போட்டு, துள்ளிக் குதித்த சமூகம் இது. பல நண்பர்கள் இந்த 'முன்னேற்றம்' குறித்து பெருமிதம் கொண்டுள்ளார்கள். அது உங்களின் பண்பும் பெருந்தன்மையும், நாகரீகமும்! ஆனால் இதன் பாசாங்கில் மயங்கி விடாதீர்கள்! இது வெறும் பசுத்தோல் மட்டும் தான்! பசுத்தோல் போர்த்தாலும், புலி பசித்தாலும் தின்னாது புல்! மரண தண்டனை கொடுக்க யாருக்கும் உரிமை இல்லை... தேசியத் தலைவரைத் தவிர! உயிரைக் கொல்வது பாவம்... துரோகிகளைத் தவிர! அவ்வளவு தான். மாவீரர்கள் தமிழர்களைத் துரோகிகள் என்று போட்டுத் தள்ளிக் கொண்டிருந்த போது, இன்று போல அன்று கொதித்தெழுந்திருந்தால், பல தமிழர்கள், தலைவர்கள் உயிர் வாழ்ந்திருப்பார்கள் என்பது மட்டுமல்ல, எமது போராட்டமும், எமது இனமும் இன்றைய இழிநிலைக்குப் போயிருக்காது. 11. இந்தோனேசியாவில் பிடிபட்டது ஒரு சிங்களவராக, அல்லது தமிழ் பேசும் இஸ்லாமியராக இருந்திருந்தால் இந்த மனித நேயம் பிறந்திருக்குமா? இதெல்லாம் வெறும் இன மான உணர்வு மட்டும் தான். சில நேரம், போதைப் பொருள் கடத்தியது 'மண் மீட்பு நிதிக்காக' என்ற எண்ணமாகவும் இருக்கலாம். இதற்குப் பின்னால் எந்தப் பகுத்தறிவு நியாயங்களும் இல்லை. தினசரி  சட்டரீதியாகவும் காட்டுமிராண்டித் தனமாகவும் மரண தண்டனைகள் உலகெங்கும் கணனித் திரைகளில் காட்சியாகின்றன. கத்தியோடு வெட்டித் தொலைக்கும் தமிழ்ப்பட நாயகனுக்கு விசிலடித்தது போலத் தான் இவை கண்டுகளிக்கப்பட்டன. அப்போது இந்த மனித நேயங்கள் எங்கே போயின? 12. இந்த கல்வெட்டுக்கவிராயர்களின் தொல்லை. இந்த தமிழ்க் கவிஞர்களுக்கு எதற்கு எடுத்தாலும் கவிதை எழுதித் தொலைக்க வேண்டும் என்ற நினைப்பு. சனல் 4க்கு கவிதை, பிரபாகரன் மகனுக்கு கவிதை, சுப்பர் சிங்கருக்கு கவிதை! நீங்களெல்லாம் சிந்தனை வறுமைக் குசேலர்களாக இருப்பதற்குக் காரணம், இப்படி கவிதை எழுதுவதால் தான். தயவு செய்து கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டு, அந்தப் பையன் விட்டுச் சென்ற ஓவியக் கலையில் ஆரம்பியுங்கள். நமக்குத் தலையிடி குறையும். சும்மா, கூலிக்கு மாரடிப்போர் போல, குய்யோ முறையோ என்று புலம்பாதீர்கள். இல்லாவிட்டால் உங்களைக் கழுவில் ஏற்ற வேண்டும் என்று நாமே கோஷம் போட வேண்டியிருக்கும்! 13. சரி. இப்போது பிடிபட்டதால் தண்டனைக்குள்ளானார்கள். பிடிபடாதிருந்தால்...? இன்னும் பேராசையில் மீண்டும் மீண்டும் செய்திருப்பார்கள். சொகுசான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள். இன்றைக்கு போல மனம் திருந்தியோ, கலைஞனாகவோ உருவெடுத்திருப்பார்களா? அல்லது தங்கள் புத்திசாதுரியத்தை மெச்சி, புத்தகம் எழுதப் போக, தமிழர்கள் எல்லாம், மாற்றான் கண்ணில் மண்ணைத் தூவிய சாகசங்கள் பற்றி புல்லரித்திருப்பார்களோ?  இவர்கள் கடத்தி வினியோகித்த போதைப் பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் கதி? 14. இந்த மரணத்தை வியாபாரமாக்கும் தமிழ் இணையத் தளங்கள். நேரடி வர்ணனையைப் பார்த்தால், வன்னிச் சமர் பற்றி எழுதிய எங்கள் சஞ்சய அரசியல் நோக்கர்கள் தோற்றுப் போய் விடுவார்கள். செய்திக்கு முரணான தலையங்கங்கள்! இறுதிக் கணங்களை கலரியில் இருந்து பார்த்த நேரடி வர்ணனைகள். தூ! இப்படியெல்லாம் பிழைக்க வேண்டியிருக்கிறதோ? அன்று தொடக்கம் இன்று வரைக்கும் உங்களுக்கெல்லாம் தமிழன் பிணத்தை வைத்துப் பிழைப்பு நடத்துவதில் வெட்கம் இருந்ததில்லை. 15. மயூரன் தன் குடும்பத்தை நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கூட, இந்தச் செயலில் இறங்கியிருக்கலாம். பெண்பிள்ளைகள் உள்ள வீட்டில் உள்ள ஆண் பிள்ளைகள் மீது சுமத்தப்படும் சுமை எங்கள் இனத்திற்கே சிறப்பானது. இப்படிச் சம்பாதித்து, குமர்களைக் கரை சேர்த்த கதைகளைக் கேள்விப்பட்டதுண்டு. உண்மை பொய் தெரியாது. இதை வைத்துக் கொண்டு இந்தக் குற்றத்தை நியாயப்படுத்த முடியாது. 16. இந்த மரண தண்டனைகளில் பிரேசிலியர், நைஜீரியர் எனப் பலரும். எனினும் தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு. சட்டத்தை மீறுவதும், சட்டவிரோதமான முறையில் பணம் சேர்ப்பதும், (செப்பரேட் அடித்து சமூக உதவிப் பணம் எடுப்பது வரை) பெருமைக்குரியதாகவும், மற்ற முட்டாள்களை சுத்திய புத்திசாலித்தனமாகவும் கருதப்படுவது எங்கள் இனத்தில் மட்டும் தான். அதன் அடிப்படையில் தான் இன்று நம்ம இளம் தலைமுறை போதைப் பொருள், கள்ள மட்டை என கொடி கட்டிப் பறக்கிறது! 17 தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் தங்களுக்குத் தெரியாதென்று பெற்றோர், அதுவும் கண்ணுக்குள் எண்ணெய் விட்டு, பந்தயக் குதிரை வளர்க்கும் தமிழ்ப் பெற்றோர் சொல்ல முடியாது. தங்கள் பிள்ளைகளிடம் புழங்கும் பணம், ஓடுகின்ற விலையுயர்ந்த கார்கள் எப்படிக் கிடைக்கின்றன என்று கேட்காமல், பிள்ளைகள் கொண்டு வரும் போது, மகிழ்ச்சியோடு அனுபவித்தவர்களும் உண்டு. அவ்வாறான ஒரு பையன் அவலமான முறையில் ரொறன்ரோவில் உயிரிழந்த வரலாறும் தெரியும்.(சேர்ந்து குற்றச் செயலிலில் ஈடுபட்ட மற்ற தமிழ் இளம் தலைமுறை 'துரோகத்திற்கு' கொடுத்த மரண தண்டனை) எனவே, தமிழ்ப் பெற்றோரே! (இயேசு சொன்னது போல) மயூரனுக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும், எங்கள் இனத்திற்காகவும், அழுங்கள்!

    Postad



    You must be logged in to post a comment Login