Recent Comments

    மூன்று கவிதைகள் 

    .கலாமோகன் 

    (1)

    எமது தொட்டில்களில் 
    வெறுமைகளின் தூக்கம்
    எங்கே எமது குழந்தைகள்?

    ஓர் நிலவின் 
    நிழலிலிருந்து 
    எழும் எனது கேள்வியில் 
    சந்தேகங்கள்…

    எங்கே எமது குழந்தைகள்?

    நான் ஓர் தொட்டிலை எடுத்தேன்
    அதனை ஓர் வீதியின் 
    தாழ்வாரத்தில் வைத்தேன் 

    நான் மீண்டும் 
    ஓர் தொட்டிலை எடுத்தேன் 
    கிணறின் அருகில் அதனை வைத்தேன் 

    பின்பும் ஓர் தொட்டிலை எடுத்தேன் 
    கடலின் கரையில் உள்ள 
    ஓடத்தின் அருகில் வைத்தேன் 

    ஒவ்வொரு தொட்டிலையும் 
    ஒவ்வொரு இடத்தில் வைத்தேன் 

    கடைசித் தொட்டிலை 
    நான் எடுக்கச் சென்றபோது 
    அது ஆடியது…
    அதனுள் ஓர் குழந்தை இருந்தது 
    அது இப்படிக் கேட்டது :

    “யுத்தம் முடிந்து விட்டதா?”

    எனது விழிகள் 
    கண்ணீர்த் துளிகளோடு 
    தொட்டிலில் வீழ்ந்தன…

    2

    நினைப்புகள் 
    அவாதைகளைத் தந்த 
    ஓர் பகலில் 
    ஓர் வீதியில் 
    நான் ஓர் குருடனைக் கண்டேன் 

    அவனது நடை தெளிவாக இருந்தது 
    நான் அவன்பின் 
    அவன் பல வேளைகளில் திரும்பினான் 
    அவனது அசைவுகள் 
    நேர்த்தியான அசைவுகளே 
    நான் அவன்பின் 

    எனது வாழ்வில்  
    நான் இப்போதுதான் 
    நடக்கத் தொடங்கினேன்.

    “நீங்கள் எங்கு போகவேண்டும்?”

    “நிலவு வீதிக்கு.”

    நான் அங்கு சென்றேன்.

    நிலவு வீதியில் நான் நின்றபோது 
    அவனும் அங்கே நின்றான் 
    நான் வீதியை விட்டுத் திரும்பியபோது…
    “நீங்கள்  எங்கு போகவேண்டும்?
    எனப் புன்னகையுடன்  மீண்டும் கேட்டான்.

    நான் அவனுக்குப் 
    பல வீதிகளைச் சொன்னேன் 
    அவைகளை எனக்குக் காட்டினான்.

    சில கணங்களில் நான் அழுதேன்.

    “ஏன்?” அவனது உதடுகள் திறந்தன.

    “எனது மனைவி 
    என்னை விட்டுப் பிரிந்துவிட்டாள்,
    அவளைப் பார்க்க விரும்புகின்றேன்.”

    “வா!” எனச் சொன்னான்.
    நான் அவனின் பின்
    எனது நடப்பில் கால்கள் களைத்தன

    இப்போது ஓர் சிறுவீட்டைக் காட்டினான்.
    நான் கதவைத் திறந்தேன்.
    ஆம், ஓர் கட்டிலில் எனது மனைவியை 
    இன்னொருவனுடன் கண்டேன்.

    (3)

    நான் மீன்களைப் பிடிக்கவல்ல 
    கடலுக்குச் சென்றேன் 
    அலைகளைப் பிடிப்பதற்காகவே

    கரையில் அலைகள் வந்து 
    காதல் செய்வதைக் கண்டதும் 
    எனது விழிகளை மூடினேன் 
    சில அலைகள் வந்து 
    எனது விழிகளுக்கு முத்தங்கள் தந்தன

    ஒவ்வொரு தடவை  விழிகளைத் 
    திறக்கும்போதும் 
    அலைகள் கரைகளுடன் 
    காதல் செய்வதில் 

    எனது விழிகளை மீண்டும் மூடி 
    ஓர் ஓடத்துள் கிடந்தேன் 
    அதிக அலைகள் அமைதியாக 
    வருகை செய்து 
    ஓடத்தை நிரப்பின 

    சில கணங்களில் அனைத்து அலைகளையும் 
    எனது முதுகிலே சுமந்து 
    ஓர் தோட்டத்துக்கு நான் சென்றேன்

    Postad



    You must be logged in to post a comment Login