Recent Comments

    மகிந்தவின் முடிவு பற்றிய ஐந்து வருடங்களுக்கு முன்னான தீர்க்கதரிசனம்

    ஊழலும் பொருளாதார நெருக்கடியும் வரும் போது அடிக்கும் அலையில் மகிந்த அடிபட்டுப் போவது நிச்சயமானது. இயற்கை இவ்வாறானது தான். இப்போது மகிந்தவுக்கு எதிரான தலைவர்கள் இல்லாமல் இருக்கலாம். காலத்தின் நியதி யாரையோ எவரையோ கொண்டு வந்து சேர்க்கும்.
    thayagam featured-editorial (எங்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம் யாருமே எதிர்பார்த்திராதபடி 2009ல் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போது, உச்சந்தலைச் சம்மட்டி அடி போல வெலவெலத்து, என்ன செய்வது என்று அறியாது திகைத்து நின்றோம். 2010 கார்த்திகை 20,21ம் திகதிகளில் ரொறன்ரோ, கனடாவில் நிகழ்ந்த பன்முகவெளி 2 நிகழ்வில் வாசித்த 'அழிந்து அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்' என்ற கட்டுரையில்... மகிந்தவின் முடிவு பற்றிக் கூறிய பகுதிகள் தாயகம் வாசகர்களுக்காய்...)

    ஜோர்ஜ் இ. குருஷ்சேவ்

    ... இன்று மகிந்தவின் சர்வாதிகாரப் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்று முனைப்பாக நிற்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான். கடந்த நாற்பது வருட கால அரசியலில் இருக்கிறது ஆதாரங்கள். 70ல் சிறிமாவோ இலவச இரண்டு கொத்து அரிசியோடு பதவிக்கு வருகிறார். 71 ஜே.வி.பி கிளர்ச்சியில் இளைஞர்கள் கொல்லப்பகிறார்கள். அவசரகாலச் சட்டம் அமுலுக்கு வருகிறது. புதிய அரசியலமைப்புச் சட்டமும் தரப்படுத்தலும் தமிழர்களை இரண்டாம் தரப்பிரஜைகளாக்குகிறது என்று போர்க்கொடி தூக்குகிறோம். தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அரை றாத்தல் பாணுக்கு அதிகாலை நான்கு மணிக்கே போய் காவல் இருக்கிறோம். இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவே வராதா என்று ஏங்கினோம். வந்தது. அதிகாரத்தை வைத்து ஆட்டம் போட்ட சிறிமாவோ தன் குடியுரிமைகள் பறிக்கப்பட்டு அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டு, அதற்காக அமிர்தலிங்கம் குரல் கொடுக்க வேண்டிய பரிதாப நிலைக்கு வருகிறார். 77ல் ஜே.ஆர் ஆட்சிக்கு வருகிறார், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன். தமிழ் மக்களின் கோரிக்கைகள் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்படுகிறது. தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுகிறார்கள். எம்.பிக்களின் ராஜினாமாக் கடிதங்களை வாங்கி வைத்துக் கொண்டு ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு சர்வாதிகாரம் நடக்கிறது. இதற்கு ஒரு முடிவே வராதா என்று எதிர்பார்த்தோம். இதே ஜே.ஆர் ஒப்பந்தத்திற்கு கிடைத்த எதிர்ப்புக் காரணமாக, பிரேமதாசவின் எதிர்ப்புடன், பாராளுமன்றத்தில் வீசப்பட்ட கைக்குண்டுடன் அதிகாரத்தை இழந்து கடைசியில் பல்லில்லாத கிழட்டு நரியாக கவனிப்பாரற்றுப் போகிறார். பிரேமதாசா வருகிறார். ஜே.வி.பி பயங்கரவாதம் தலைதூக்குகிறது. அரசியல் காட்டுமிராண்டித்தனமாக மாறுகிறது. அரசியல் எதிரிகள் வன்மையான முறையில் ஒழிக்கப்படுகிறார்கள். அவருடைய சர்வாதிகாரமும் புலிகளால் முடிவுக்கு வருகிறது. சந்திரிகா வருகிறார்... 94ல். இரும்புப் பெண்மணி. கட்சிக்குள் யாருமே வாய் திறக்க முடியாத எதேச்சாதிகாரம். கடைசியில் என்ன நடந்தது? மகிந்தவினால் அவமானப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறார். ஏன்? பிரபாகரனுக்கு நடந்தது என்ன? பிரபாகரனின் அக்கிரமமும் அட்டுழியமும் இவ்வளவு வேகமாக முடியும் என்று யார் கனவு கண்டார்கள்? முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. இப்படி முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. புலிகளின் அநியாயத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் ஒரு நண்பர் கேட்டார்... கடவுள் கூட இதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். நான் சொன்னேன்... அண்ணை, மாற்றம் வரும். ஆனால் நாங்கள் எதிர்பார்க்காத விதத்தில் வரும் என்று. எல்லாச் சர்வாதிகாரிகளின் முடிவும் இதுதான். மகிந்த இரண்டு தரத்திற்கு மேல் பதவிக்கு வரக் கூடியதாக அரசியலமைப்பை மாற்றி விட்டார், மகனை முன்னுக்கு கொண்டு வருகிறார். உலகம் முடியப் போகிறது என்று எல்லாரும் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்தில் நீண்ட காலம் இருப்பவர்களுக்கு அகந்தை வரும், அந்த அகந்தை அவர்களின் அழிவுக்கு வழி வகுக்கும் என்பது தான் உலகம் முழுவதும் இருந்த சர்வாதிகாரிகளின் கதை. உயிரைக் காத்துக் கொள்ள தப்பியோடியவர்களும் உயிரை இழந்தவர்களும் எனத் தான் சர்வாதிகாரிகளின் முடிவுகள் காலம் காலமாய் நடந்து வருகின்றன. மகிந்தவின் முடிவும் அவ்வாறானது தான். புலிகளின் வெற்றியைக் காட்டி காலாகாலம் பிழைப்பு நடத்த முடியாது. ஊழலும் பொருளாதார நெருக்கடியும் வரும் போது அடிக்கும் அலையில் மகிந்த அடிபட்டுப் போவது நிச்சயமானது. இயற்கை இவ்வாறானது தான். இப்போது மகிந்தவுக்கு எதிரான தலைவர்கள் இல்லாமல் இருக்கலாம். காலத்தின் நியதி யாரையோ எவரையோ கொண்டு வந்து சேர்க்கும். தேசியத் தலைவரை சூரியதேவனாக வைத்து கட்டிய மனக்கோட்டை உதிர்ந்து கொட்டுண்ட போது, எப்படி செய்வதறியாது திகைத்து நின்றோமோ, அதே போல மகிந்தவின் சாம்ராஜ்யம் தகர்ந்து போகும் போதும் செய்வது தெரியாமல் திணறிக் கொண்டிருக்கப் போகிறோம். இதனால் தான் சொல்கிறேன், மகிந்த மீதான obsession காரணமாக, எங்கள் உண்மையான நோக்கத்தை மறந்து விடாதீர்கள் என்று. எங்களுடைய இலக்கு நாளையது அல்ல. அடுத்த நாற்பதாண்டுகளுக்கானதாக இருக்கட்டும். எங்களுடைய செயற்பாடுகள் அந்த இலக்கை நோக்கியதாக இருக்கட்டும். எமது இனத்தின் அந்த விடுதலை உணர்வு சிதைந்து போகாமல், இருப்பதற்கான திட்டத்தை, அது நாற்பதாண்டுகளாக இருந்தால் என்ன, இன்றே திட்டமிட ஆரம்பிக்க வேண்டும். (அந்தக் கட்டுரையை இந்த இணைப்பில் முழுமையாக வாசிக்கலாம்.) கீழுள்ள பட்டன்களில் அழுத்துவதன் மூலம் இக்கட்டுரையை நீங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    Postad



    You must be logged in to post a comment Login