Recent Comments

    அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்

    மகிந்த எதிர்ப்பு நிறுத்தப்பட வேண்டும்

    அடுத்தது ஐந்தாவது, மகிந்த என்ற மனிதன் மீது கொண்டிருக்கும் obsession முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். எங்களுடைய சிந்தனையும் செயலும் மகிந்த என்ற மனிதனை அவமானப்படுத்துவதில் தான் இருக்கிறது. முன்பு சொன்னது போல, எங்களுடைய அரசியல் நடவடிக்கைகளை மகிந்த தான் தீர்மானித்துக் கொண்டிருக்கிறார். 

    நாங்கள் எங்களைப் பார்த்துக் கேட்க வேண்டிய ஒரு கேள்வி உண்டு. எதிர்ப்பு அரசியல் நடத்தி நாங்கள் கண்டது என்ன?

    பலருக்கு ரோசம் பொத்துக் கொண்டு வரும். சிங்களவனுக்கு அடிமையாயிருக்கச் சொல்றியோ? அவன் எங்கட பெம்பிளையளைக் கற்பழிக்கிறான். எனக்குத் தெரியும் உங்கள் சிந்தனை கற்பையும் அது எங்கே இருக்கிறது என்பதையும் சுற்றித் தான் இருக்கும் என்பது. 

    ஒரு சமாந்தர அரசையும், பெரிய இராணுவத்தையும் வான்படையையும் வைத்திருந்த புலிகளால் சாதிக்க முடியாத ஒன்றை உங்களால் எப்படி சாதிக்க முடியும்?  

    நாங்கள் இன்று செய்து கொண்டிருப்பது எதிர்ப்பு அரசியல் மகிந்த எதிர்ப்பு அரசியல். எதிர்ப்பு அரசியலை நிறுத்த வேண்டும் என்றால், மகிந்தவின் அரசில் சேர்ந்து எங்களின் தன்மானத்தை விற்று விட வேண்டும் என்பதில்லை. அதே நேரம், மகிந்தவின் இந்தியப் பயணத்துக்கு சந்தித்து வாழ்த்திச் சொல்லி விட்டு புலன் பெயர்ந்த தமிழர்களைக் குஷிப்படுத்தும் அறிக்கை விடும் கூட்டமைப்பின் அரசியலை நம்ப முடியுமா? கூட்டமைப்பு நடத்துவதுதான் பக்கா அரசியல். Targeted message என்பது போல, ஒவ்வொரு கூட்டத்தையும் குஷிப்படுத்தும் அரசியலைச் செய்கிறது கூட்டமைப்பு. அரசு நியமித்த விசாரணைக் குழு முன் சாட்சியமளிக்க மாட்டோம் என்று உடனடி அறிக்கை. புலன் பெயர்ந்த கூட்டம் சுய இன்பத்தில் ஆழ்கிறது. கொஞ்சநாளில் ஆரம்ப ஆர்ப்பாட்டம் அடங்கிய பின்னால் காதும் காதும் வைத்தது போல, வெளியில் பெரிதாக அறிக்கை விடாமல் போய் சாட்சியமளிப்பார்கள். தாங்கள் போய் அகதிகளைப் பார்க்க மாட்டார்கள். வேண்டுமென்றே தங்களைத் தடுக்க வேண்டும் என்பதற்காக அனுமதி பெறாமல் போய், அனுமதி கிடைக்காததை வைத்து புலன் பெயர்ந்தவர்களைக் குஷிப்படுத்துவார்கள். 

    தங்கள் குடும்பங்களை வெளிநாடுகளில் குடியேற்றி விட்டு, அவ்வப்போது பாராளுமன்றத்திற்கு லீவு போட்டு விட்டு சுற்றுலா செல்வார்கள். இவர்கள் செய்வது அரசியல். எங்களுக்குப் பிடித்தமான அரசியல். நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம். காரணம், மகிந்தவை எதிர்த்து அரசியல் செய்கிறார்கள்.

    ஆனால் தங்களுக்கு தேவையானவை பெற்றுக் கொண்டதை தவிர, தமிழ் மக்களுக்கு தங்கள் எதிர்ப்பு அரசியலால் இவர்கள் பெற்றுக் கொடுத்தது என்ன? 

    இங்கே இருக்கிறார்கள். அவன் எங்கட இனத்தை அழிச்சவன். அவனை எப்படி ஆதரிக்கிறது?

    ஆதரிக்க வேண்டியதில்லை. காலில் விழ வேண்டியதில்லை. எந்த வித பயனும் இல்லாத எதிர்ப்பு அரசியலை நிறுத்தி விட்டு, எங்கள் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடிந்ததை பெற்று கொடுக்காமல், மகிந்தவுக்கு எதிராக அறிக்கை விடுவது, வேண்டுமானால் இந்த வெளிநாட்டு வெட்டிக்கூட்டத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். அந்த மக்களுக்கு எதைச் செய்யும்?

    இந்த எதிர்ப்பு அரசியல் இன்று அரசு செய்யும் நன்மைகளைக் கூட ஒத்துக் கொள்ள விடுவதில்லை. மகிந்தவுக்கு எந்த பாராட்டும் கிடைக்கக் கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். 

    இன்றைக்கு மகிந்தவை தடுத்து நிறுத்த வேண்டியது எங்கள் கடமை என்று மூர்க்கமாக நிற்கிறீர்கள். சரி, என்ன செய்யப் போகிறீர்கள்? எண்டாலும் நாங்கள் டக்ளஸ், கருணா மாதிரி துரோகம் செய்யேலைத் தானே என்று உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்வதைத் தவிர உங்களால் என்ன தான் செய்ய முடியும்?

    குறைந்த பட்சம் நீங்கள் இன்று துரோகி என்கின்ற கே.பி செய்வதைக் கூட உங்களால் அந்த மக்களுக்குச் செய்ய முடியாது. அறிக்கை விடுவதற்கு நீங்கள் எல்லாம் தேவையில்லை. கம்பியூட்டரும் இன்டர்நெட் தொடர்பு இருக்கும் எல்லாரும் இப்போது அறிக்கை விடலாம். 

    இதை எல்லாம் சொல்லும் போது என்னையும் மகிந்தவின் ஆள் என்று முத்திரை குத்த நீங்கள் அவசரப்படக் கூடும். நான் சொல்வதற்கான காரணங்கள் வேறு.

    இன்று மகிந்தவின் சர்வாதிகாரப் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்று முனைப்பாக நிற்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான்.

    கடந்த நாற்பது வருட கால அரசியலில் இருக்கிறது ஆதாரங்கள்.

    70ல் சிறிமாவோ இலவச இரண்டு கொத்து அரிசியோடு பதவிக்கு வருகிறார். 71 ஜே.வி.பி கிளர்ச்சியில் இளைஞர்கள் கொல்லப்பகிறார்கள். அவசரகாலச் சட்டம் அமுலுக்கு வருகிறது. புதிய அரசியலமைப்புச் சட்டமும் தரப்படுத்தலும் தமிழர்களை  இரண்டாம் தரப்பிரஜைகளாக்குகிறது என்று போர்க்கொடி தூக்குகிறோம். தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அரை றாத்தல் பாணுக்கு அதிகாலை நான்கு மணிக்கே போய் காவல் இருக்கிறோம். இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவே வராதா என்று ஏங்கினோம். வந்தது. அதிகாரத்தை வைத்து ஆட்டம் போட்ட சிறிமாவோ தன் குடியுரிமைகள் பறிக்கப்பட்டு அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டு, அதற்காக அமிர்தலிங்கம் குரல் கொடுக்க வேண்டிய பரிதாப நிலைக்கு வருகிறார்.

    77ல் ஜே.ஆர் ஆட்சிக்கு வருகிறார், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன். தமிழ் மக்களின் கோரிக்கைகள் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்படுகிறது. தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுகிறார்கள். எம்.பிக்களின் ராஜினாமாக் கடிதங்களை வாங்கி வைத்துக் கொண்டு ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு சர்வாதிகாரம் நடக்கிறது. இதற்கு ஒரு முடிவே வராதா என்று எதிர்பார்த்தோம். இதே ஜே.ஆர் ஒப்பந்தத்திற்கு கிடைத்த எதிர்ப்புக் காரணமாக, பிரேமதாசவின் எதிர்ப்புடன், பாராளுமன்றத்தில் வீசப்பட்ட கைக்குண்டுடன் அதிகாரத்தை இழந்து கடைசியில் பல்லில்லாத கிழட்டு நரியாக கவனிப்பாரற்றுப் போகிறார்.

    பிரேமதாசா வருகிறார். ஜே.வி.பி பயங்கரவாதம் தலைதூக்குகிறது. அரசியல் காட்டுமிராண்டித்தனமாக மாறுகிறது. அரசியல் எதிரிகள் வன்மையான முறையில் ஒழிக்கப்படுகிறார்கள். அவருடைய சர்வாதிகாரமும் புலிகளால் முடிவுக்கு வருகிறது.

    சந்திரிகா வருகிறார்... 94ல். இரும்புப் பெண்மணி. கட்சிக்குள் யாருமே வாய் திறக்க முடியாத எதேச்சாதிகாரம். கடைசியில் என்ன நடந்தது? மகிந்தவினால் அவமானப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறார்.

    ஏன்? பிரபாகரனுக்கு நடந்தது என்ன? பிரபாகரனின் அக்கிரமமும் அட்டுழியமும் இவ்வளவு வேகமாக முடியும் என்று யார் கனவு கண்டார்கள்? முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. இப்படி முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.

    புலிகளின் அநியாயத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் ஒரு நண்பர் கேட்டார்... கடவுள் கூட இதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். நான் சொன்னேன்... அண்ணை, மாற்றம் வரும். ஆனால் நாங்கள் எதிர்பார்க்காத விதத்தில் வரும் என்று.

    எல்லாச் சர்வாதிகாரிகளின் முடிவும் இதுதான். மகிந்த இரண்டு தரத்திற்கு மேல் பதவிக்கு வரக் கூடியதாக அரசியலமைப்பை மாற்றி விட்டார், மகனை முன்னுக்கு கொண்டு வருகிறார். உலகம் முடியப் போகிறது என்று எல்லாரும் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார். அதிகாரத்தில் நீண்ட காலம் இருப்பவர்களுக்கு அகந்தை வரும், அந்த அகந்தை அவர்களின் அழிவுக்கு வழி வகுக்கும் என்பது தான் உலகம் முழுவதும் இருந்த சர்வாதிகாரிகளின் கதை. உயிரைக் காத்துக் கொள்ள தப்பியோடியவர்களும் உயிரை இழந்தவர்களும் எனத் தான் சர்வாதிகாரிகளின் முடிவுகள் காலம் காலமாய் நடந்து வருகின்றன. மகிந்தவின் முடிவும் அவ்வாறானது தான். புலிகளின் வெற்றியைக் காட்டி காலாகாலம் பிழைப்பு நடத்த முடியாது. ஊழலும் பொருளாதார நெருக்கடியும் வரும் போது அடிக்கும் அலையில் மகிந்த அடிபட்டுப் போவது நிச்சயமானது. இயற்கை இவ்வாறானது தான். இப்போது மகிந்தவுக்கு எதிரான தலைவர்கள் இல்லாமல் இருக்கலாம். காலத்தின் நியதி யாரையோ எவரையோ கொண்டு வந்து சேர்க்கும்.

    தேசியத் தலைவரை சூரியதேவனாக வைத்து கட்டிய மனக்கோட்டை உதிர்ந்து கொட்டுண்ட போது, எப்படி செய்வதறியாது திகைத்து நின்றோமோ, அதே போல மகிந்தவின் சாம்ராஜ்யம் தகர்ந்து போகும் போதும் செய்வது தெரியாமல் திணறிக் கொண்டிருக்கப் போகிறோம். 

    இதனால் தான் சொல்கிறேன், மகிந்த மீதான obsession காரணமாக, எங்கள் உண்மையான நோக்கத்தை மறந்து விடாதீர்கள் என்று. எங்களுடைய இலக்கு நாளையது அல்ல. அடுத்த நாற்பதாண்டுகளுக்கானதாக இருக்கட்டும். எங்களுடைய செயற்பாடுகளை அந்த இலக்கை நோக்கியதாக இருக்கட்டும்.

    எமது இனத்தின் அந்த விடுதலை உணர்வு சிதைந்து போகாமல், இருப்பதற்கான திட்டத்தை, அது நாற்பதாண்டுகளாக இருந்தால் என்ன, இன்றே திட்டமிட ஆரமபிக்க வேண்டும். எங்களுடைய இலக்கிலிருந்து இந்த மகிந்த எதிர்ப்பு எங்களை திசை திருப்பாமல் இருக்க வேண்டும். இதற்காகத் சொல்கிறேன் இந்த மகிந்த எதிர்ப்பு நிறுத்தப்பட வேண்டும் என்று. 

    Postad



    You must be logged in to post a comment Login